
பலமுறை பல தருணங்களில் இதுபோல் கூறவும் செய்திருக்கிறேன்.
அன்று ஆழிமுத்துவும் செங்கானும் அவர் சொன்னதைக் கேட்டு, முகமிசை மாற்றங்கள் புரிய விழைந்தனர். கன்னக்கதுப்புகளின் மேல், செங்கான் ஒரு கோழிச்சிறகளவு எடைக்கு மெழுகைக் குறைத்தும் சற்றே அதுக்கியும், போகர் பிரான் சொன்னபடி செய்திட, அவர் எதிர்பார்த்த அந்தச் சிந்திக்கும் தோரணை முகமிசை தென்படத் தொடங்கியது. அதன்பின், அந்த மெழுகுச்சிலையைச் சுற்றிவந்து சுற்றிவந்து, பல கோணங்களில் நோக்கத் தொடங்கினார் போகர் பிரான். அவ்வாறு நோக்குகையில் புலனான எண்ணத்துக்கேற்ப உடம்பிலும் மாற்றங்களைச் செய்தார்.
அவ்வேளை தொப்புள் புள்ளியைக் கவனித்துச் சிரித்தவர், அதை நீக்கச் சொன்னார். செங்கானும் ஆழிமுத்துவும் காரணத்தைக் கண்களில் ஏந்திப் பார்த்தனர்.
“தாய் தந்தையர் காமத்தால் பிறக்கும் யோனிவழிப் பிறப்பாளர்களே நாமெல்லாம். நமக்கே தொப்புள்கொடி வழியாகத் தாயிடமிருந்து உணவு தேவை. அதனால், அப்புள்ளியும் வாய்க்கிறது. இந்த முருகன் ஒரு அயோனி. நம்போன்ற சுக்ல சுரோணிதக் கலப்பால் உருவானவனல்லன். இவன் ஈசனின் மானசத்தால், மூன்றாம் கண்வழி அக்னிமூலமாய்த் தோன்றியவன். சுருக்கமாய்க் கூறினால் அயோனிஜன்!

அசுர சாதுர்யத்தை அழித்து, தேவபவித்திரத்தை நிலைநாட்ட வந்தவன். இவனை இரண்டாம் ஈசன் என்றும் கூறலாம். ஈசனினும் மேலான பரிமாணங்கள் கொண்டவன். மொத்தத்தில் இவனொரு சகலன் என்பேன்” என்றார்.
சகலன் என்று அவர் கூறிய வார்த்தை, நவமரை, கூர்ந்து கவனிக்கச் செய்தது. போகரும் அவர்களைத் தனித்தனியே பார்க்கலானார். தொப்புளைத் தொட்டுத் தொடங்கிய அவர் பேச்சில், அதுவரை அவர்கள் கேட்டிராத பல செய்திகள். அவர் எவ்வளவு பேசினாலும் கேட்டிராத செய்திகளும் புதிய சிந்தனைகளும் இருப்பதே அவர் சிறப்பு.
“பிரானே... சகலன் என்றால் எல்லாமுமானவன் என்றல்லவா பொருள்?” அஞ்சுகன் கேட்டான்.
“ஆம்… எல்லாமுமானவன்! இவனை எல்லாமுமானவள் என்று பெண்பாலாயும் சிந்திக்கலாம். எல்லாமுமானது என்று அஃறிணையாகவும் சிந்திக்கலாம். எனவே, மூலன், மூலம், மூலி என்றும் அழைக்கலாம். ஆயினும், தோற்றத்தால் ஆண்பாலாய் நின்றதனால், இவனை மூலன் என்றிடலாம். ஆதிசக்தி தன் அவ்வளவு சக்தியையும் வேல் வடிவில் இவனுக்குத் தந்தாள். மேலும், பிரம்மன் அறிந்திடாததை அறிந்து, அதை தந்தையான ஈசனுக்கே உபதேசித்து, தன் பிரம்ம ஞானத்தை சம்பவம் ஒன்றால் பறைசாற்றியவன். இந்திரன் மகளை மணம்புரிந்ததால் தேவர்களுக்கு மாப்பிள்ளை. வள்ளிக்குறத்தியை இந்த மண்மிசை அடைந்ததால், நம்போன்ற யோனிவழி பிறந்தோர்க்கும் இவன் உறவாகிறான். இவனை இப்படி விதம்விதமாய் அனுபவிக்கலாம்.
உயிர்களில் ஆறறிவான இனம் மானுடம். அது ஒன்றாலேயே தன்னையறிந்து மற்றதையுமறிய இயலும். மேலாய் புலன்களை அடக்கிச் சகலமும் அறியவரும். அவ்வாறு அறிந்திடத் தேவை, எண்ணும் எழுத்தும். அதில் ஒன்று முதல் ஒன்பது என்கிற எண்களும் சரி, உயிரெழுத்து மெய்யெழுத்து உயிர்மெய்யெழுத்து எனச் சகலமும் இவனிடம் பொருந்திடக் காணலாம். பன்னிரு கரங்களே உயிரெழுத்து, பன்னிருகரங்களுடன் ஆறுமுகம் சேர்ந்திட்ட பதினெட்டே மெய்யெழுத்து!
இங்கே ஆண்டிக்கோலத்தில் வேலுக்கு பதிலாய் தண்டம் பிடித்து நிற்பது ஞானக் கோலம்! சக்திவேல்தான் இங்கே கோலாய்த் திகழ்கிறது. இவனை இப்படி வியந்து கொண்டும் விரித்துக்கொண்டும் நாம் போய்க்கொண்டேயிருக்கலாம்.
எல்லாம் இவனிடம் அடக்கம். எதுவும் இவனிடம் அடங்கும். உயிர்த்துளியின் மூலவடிவான அரவம், இவன் காலடியில் இவனே உயிர்களின் மூலம் என்று சொல்லாமல் சொல்வதுபோலக் கிடந்திட, அந்த உயிரின் விரித்தெழுந்த வண்ணமிகு வாழ்வே நம் வாழ்வு என்பதையே, தோகை விரித்த மயில் உரைக்கிறது. ஒரு சித்தனாய் யோகநிலையில் நான் உணர்ந்ததை எல்லாம் சுருங்கச் சொல்லிவிட்டேன். இக்கோல தத்துவத்தையும் கூறிவிட்டேன்.
பலமுறை பல தருணங்களில் இதுபோல் கூறவும் செய்திருக்கிறேன். இறுதியாக ஒரு கூற்று. ஒன்றான பூமி, இரவென்றும் பகலென்றும் இருவாறு இருப்பதுபோல, ஒன்றான சுவை இனிப்பென்றும் கசப்பென்றும் இருப்பதுபோல, ஒன்றான பரம்பொருள் அக்னிப் பிறப்பெடுத்து முருகன் என்றானது.
அம்முருகே இங்கே ஞானக்கோலம் பூண்டுள்ளது.
இக்கோல ரூபத்தின் உள்ளடக்கம் ஒன்பது சக்திக் கலப்பான பாஷாணங்கள். இதன் வெளிப்பாடு அமிர்தத் திவலைகளுக்கு ஒப்பான பேரருள். அவ்வளவே… இனி விரித்துக்கூற ஏதுமில்லை. ஆயினும், எனைப் பின்தொடரும் சித்தர் பெருமக்கள் இவனைப் பலவாறு வியப்பர். மற்ற பெருமக்களும் இவனருளில் திளைப்பர். இவனது மெழுகுப் பூரணம், பாஷாணப் பூரணமாய் மாறிடட்டும்” என்று சொல்லிமுடித்தவர், தானே பாஷாணக் கலவையைக் குழம்பாக்கி, குழம்பினை வார்த்து மெழுகு உருகி வெளியேறவும், உள்ளடக்கமாய் ஓர் உருவம் உருவாகத் தொடங்கியது. அதேசமயம், கலவையில் சற்று மீதமும் ஏற்பட்டது.
இதை என்ன செய்வது என்கிற கேள்வி எழுந்த நிலையில், ``இது பாதுகாப்பாய் அப்படியே இருக்கட்டும். இதை என்ன செய்வது என்பது குறித்துப் பிறகு நான் ஒரு முடிவுக்கு வருவேன். இப்போதைக்கு வார்ப்பிலுள்ள பாஷாண உடலின் உஷ்ணம் ஆறட்டும். மண்பூச்சை உடைத்து, சிலையைக் காணப்போகும் தருணமும் சரி, அதன் கண் திறப்பும் சரி, ஒரு முகூர்த்த காலமாய் இருக்கட்டும். புலி… அடுத்து வரப்போகும் முகூர்த்த காலம் எப்போது?” என்று புலிப்பாணியைப் பார்த்தார் போகர்.
இருகரங்களையும் தன்முன் நீட்டி, அதன் விரல் கண்ணிகளைப் பார்த்து, கட்டைவிரல் நுனியாலே அக்கண்ணி களுக்குள் தாவிச் சென்று கணக்கிட்டு, அப்படியே குகைக்கு வெளியே சென்று நின்று, தன் நிழல் கீழே விழுந்த விதத்தையும் அதன் நீளத்தையும் கண்டு முடித்துத் திரும்பிவந்தவன்,
“பிரானே… பஞ்சாங்க ஏடுகள் இல்லாததால் மானசமாய்க் கணக்கிட்டுள்ளேன். கால்வீசம் பிழை வர வாய்ப்புண்டு. அதன் அடிப்படையில் சிறப்பான முகூர்த்த காலம் இன்னமும் ஒரு வார காலத்துக்கு இல்லை” என்றான்.
அப்போது நவமரில் ஒருவனான சிவமணி என்பவன், ஏதோ கேட்க விழைவதுபோல ஏறிட்டான்.
“என்னப்பா?”
“தெய்வச்சிலைக்குக்கூடவா காலநேரம் தேவைப்படுகிறது? அப்படியே இருப்பினும் தங்களுக்குத் தெரியாத காலநேரத்தையா புலிப்பாணி கூறிவிடப்போகிறான்? இதை நான் அகந்தையில் கேட்பதாகக் கருதிட வேண்டாம். விளங்கிக்கொள்ளவே கேட்கிறேன்” என்றான்.
போகர் பிரானுக்கு லேசாய் சிரிப்புதான் வந்தது. அவனை அருகில் அழைத்து, அவன் இரு கரங்களையும் நீட்டச் சொல்லிப் பற்றினார். அப்படி அவர் பற்றியபோது, மிகவே சில்லென்றிருந்தது போகர் பிரானின் கரங்கள்.
அந்தச் சிலுசிலுப்பை அவனால் சாகும் வரை மறக்கமுடியாது. இது ஒருவகை உணர்த்தல்!
“அப்பனே... புலிப்பாணி ஒரு காலஞானி! இறைவன் அவனைக் கால ஞானியாக்கவே படைத்துள்ளான். அவனிடம் நான் கேட்பதன் மூலம், அவனுக்கொரு முக்கியத்துவம் தருகிறேன். இது ஒரு வழிமுறையப்பா. நாளை நீங்களும் இதைப் பின்பற்ற வேண்டும். என்வசம் உள்ள யோக சக்தியால், இக்கால கதியை மட்டுமல்ல, எதையும் அறிதல் சாத்தியமே! அதேசமயம், அச்சக்தியைச் செலவு செய்தே அறிந்திட வேண்டும். யோகசக்தியைத் திரட்டப் பெரும்பாடுபடும் ஒருவனுக்கு, அதைச் சுலபமாகச் செலவு செய்திட மனம் வராது.

ஆற்றைக் கடக்க ஓடமிருக்கும்போது எதற்கு நீர்மேல் உடம்பை யோகசக்தியால் லேசாக்கி மிதந்து செல்ல வேண்டும்? ஜடமான ஓடம் சுலபமாய் இவ்வுடலைக் கடத்திச் சேர்த்துவிடுமே? இப்போது உனக்குப் புரிந்திருக்கும் என்று கருதுகிறேன்.
அடுத்து தெய்வச்சிலைக்குக்கூடவா காலநேரம் என்று கேட்டாயல்லவா? நல்ல கேள்வி… இந்தப் பூமி பஞ்சபூதங்களின் சேர்க்கையால் ஆன ஒன்று. இரவு பகலுக்குக்கூட இங்கே ஒரு கணக்கு உள்ளது. சொல்லப்போனால், இங்கே எல்லாமே கணக்குதான். பூமியின் சுற்றளவு அதன் சுழற்சி வேகம், சூரிய சந்திரர்களுக்கான தொலைவு, இதர கோள்களின் வட்டச் சுழற்சி என்று எல்லாமே கணக்காய் உள்ளவையே!
நம் உடலில்கூட இக்கணக்கின் கூறுகள் உள்ளன. விரல் நகங்கள் ஏன் விரல்நுனியில் இப்போது இருக்கும் அளவில் இருக்க வேண்டும்... மொத்த விரலும் நகம் கொண்டிருக்கலாமே? வாயிலே பற்களிடம் எதற்காக முப்பத்திரண்டு என்கிற கணக்கு... பெரும்பல்லாய் இடைவெளியேயின்றி மேலே ஒன்று கீழே ஒன்று என்று இருக்கலாமல்லவா? ஆனால், எதனால் முப்பத்திரண்டு பற்கள்? அதில் சிங்கப் பல், கோரைப்பல், கடவாய் என்று எதற்கு வடிவுகள்?
எல்லாமே ஒரு கணக்குதான்! இப்படி இருந்தாலே அது முழு இயக்க கதிக்குப் பயன்படமுடியும். ஒரு பொருளைத் தொட்டுத் தூக்கும்போதுகூட அதன் வடிவத்துக்கேற்ப நம் கைகள் சரியான இடத்தைத் தொட்டுப் பிடித்தே தூக்க முயல்கிறது. இப்படி ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும் ஒரு சரியான காலநேரம் என்பது கணக்காய் உள்ளது. இந்தக் கணக்கெல்லாம் நமக்குத்தான்; அவனுக்கில்லை.
இதற்கே அறிவானது அருளப்பட்டுள்ளது. பகுத்துணர்வதால் இதைப் பகுத்தறிவு என்கிறோம். நாமெல்லாம் ஜீவாத்மாக்கள். பரமாத்மாவை அடைவதே நம் இலக்கு. பரமாத்மாவுக்கு மட்டுமே காலநேரமில்லை. இரவு பகலில்லை, மேல் கீழில்லை. இடது வலது இல்லை. ஆனால், நமக்கு அவ்வாறு கிடையாது.”
இப்படி ஒரு நெடிய பதிலைக் கூறியவர், செங்கானையும் ஆழிமுத்துவையும் பார்த்து, ``இந்த உருவை அப்படியே தூக்கி ஒரு மாட்டுவண்டியில் வைத்து, பெரும் அசைவுகள் இன்றி, பொதினிக் கொட்டாரத்துக்குக் கொண்டு வந்துவிடுங்கள். புலிப்பாணி கூறியதுபோல ஒரு வார காலம் செல்லட்டும். முகூர்த்த காலவேளை சித்திக்கட்டும். அதற்குள், பொதினிமலைச் சமநிலத்தில் சுத்தக்கிரியை செய்து, வாஸ்து பூசையை முடித்துவிடுவோம்’’ என்றும் கூறிட, இனி அந்தக் குகைத்தளத்தில் பெரியதாய் எவரும் இருக்கத் தேவையில்லை என்பதும் எல்லோருக்கும் புரிந்துவிட்டது.
“அப்படியானால் நாங்கள் எல்லோரும் கொட்டாரத்துக்குத் திரும்பிவிடவா?” என்று கேட்டான் அஞ்சுகன்.
“நீங்கள் செங்கானுக்கும் ஆழிமுத்துவுக்கும் உதவியாக இருந்து ஒன்றாக வந்துசேருங்கள். இந்த மண்காப்புச் சிலையை வைக்கோல் புரிகொண்டு மூடி, எவரும் காணாதபடி எடுத்துவர வேண்டும். கருப்பைக்குள் பனிக்குட நீருக்குள் இருக்கும் ஒரு குழந்தையின் இடுப்பு போன்றது இதன் இடுப்பு. எனவே, கவனம் மிக முக்கியம். கவனமுடன் கொட்டாரம் சேருங்கள். இடைப்பட்ட காலத்தில், நான் கங்கை முதல் காவிரி வரையுள்ள நீரினையும், இமயம் முதல் திருக்குற்றாலம் வரையுள்ள குளத்து நீரையும் கொணர்ந்து, அவற்றை அபிஷேகநிமித்தம் சேமித்துவிடுவேன். சுருக்கமாய்க் கூறுவதானால், ஒரு பெரும்பணி நம் எல்லோருக்குமே உள்ளது.”
“தண்ணீர் என்பதும் அதன் மூலக்கூறுகளும் எல்லா இடத்திலும் ஒன்றுதானே. அப்படி இருக்க, எதற்காக கங்கை நோக்கியும் இமயம் நோக்கியும் செல்லவேண்டும்?” என்று கங்கன் இடையிட்டான்.
“மூலக்கூறுகள் ஒன்றுதான். ஆனால், குணப்பாடு என்பது வேறு. மனிதனைப் போலவே நீருக்கும் குணப்பாடுண்டு அப்பனே! கங்கைநீரில் இமயத்தில் தவம் செய்யும் யோகியர்களின் மேனி வருடிச் சேமித்த அருட்கதிர்கள் பல உண்டு. இது அப்படியே காவிரிக்கும், ஏனைய நதிப்புனல்களுக்கும் பொருந்தும். குளத்து நீரிலும் அதில் குளித்தெழுந்தவர்கள் காரணமாக குணப்பாடுண்டு. நீரைச் சாதாரணமாகக் கருதிவிடாதே. ஒரு குவளை நீரை, கையில் வைத்துக்கொண்டு நீ பேசிடும் பேச்சை, அந்த நீர் கேட்டு எதிரொலிக்கும். நம் நல்லெண்ணம் மற்றும் அருள் உணர்வுகளை ஒரு குவளை நீரைப் பிறருக்குக் குடிக்கத் தருவதன் மூலம், வேகமாகக் கடத்தலாம். இதனாலேயே அத்வைத ஞானிகள், சீடர்களுக்குத் தங்கள் அருட்பிரசாதமாய் நீரைத் தருகின்றனர். நீருக்கு மந்திர ஒலி அலைகளை கிரகித்துக்கொள்ளும் ஆற்றலும் உண்டு. ஆகையினால்தான், வேள்விகளில் கலசங்களில் புனித நீர் இடம்பெற்று, உச்சபட்சமாய் கோபுரக் கலசங்களுக்கு அபிஷேகமும் நிகழ்கிறது.
அதன் ஒருதுளிகூட நம் உடலின் கர்மவினைப் பதிவுகளில் பெரும் மாற்றங்களைச் செய்திடும். இதன்பொருட்டே, கலச நீர் தெளிக்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாய் நீரின் சக்தியை உணர்த்துமுகமாகவே, `தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே’ என்றனர். அதேபோல, எதை இல்லை என்று சொன்னாலும், தண்ணீரை இல்லை என்று சொல்லக்கூடாது என்றனர். இருந்தும் இல்லை என்பானுக்கு அது ஒரு நாள் நிஜமாய் இல்லாதுபோய்விடும்.
அதைப் பெரிதும் மதித்துப் போற்ற வேண்டும் என்பதற்காகவே, நதிகளை இறை அம்சமுள்ள தேவியர்களாக்கி, அவர்கள் வசம் அருட்சக்தியையும் அந்தப் பரம்பொருள் அளித்தது. முனிகளும் ரிஷிகளும் தங்கள் கமண்டலங்களில் நீர்ச் சக்தியை வைத்து, அதன்மூலம் வரங்களையும் சாபங்களையும் அளிக்கவும் செய்தனர்.
உலகின் பெரும் பூதமும் நீரே! பெரும் சக்தியும் நீரே! நீர்மிசை இதனாலேயே அந்தத் திருமாலும் கிடப்பதாகப் பொருள். நீருக்கு நாரம் என்றொரு பெயருண்டு. அந்த நாரமாகிய நீரை அணைந்தவன் என்பதன் பொருட்டே, நாரணன் என்றொரு பெயர் அவனுக்கு ஏற்பட்டது. ஈசனோ, கங்கையாய் தன் சடைக்குள்ளேயே வைத்துக்கொண்டு விட்டான். எனவே, நீர் குறித்த உங்கள் பார்வையும் கருத்தும் விசாலமாகிட வேண்டும். வானம் வாரி இறைப்பதால், மழையாகக் கொட்டுவதால், நீரை சாதாரணமாய்க் கருதிவிடாதீர்கள். நான் சொன்னதை அடிப்படையாக வைத்து நீங்களும் சிந்தியுங்கள். உங்களின் முதல் காலை வணக்கமும் இந்த நதிகளுக்கானதாகவே இருக்கட்டும். அதுபோல, நீரை நின்ற இடத்திலேயே குடித்திடும் விருட்சங்களையும் வணங்கிடுங்கள். உத்தம மனநிலை வாய்த்திடும்.”
விரைவாக வந்த வேலையைப் பாருங்கள். போகர் பிரான் எப்போது வேண்டுமானால் வந்துவிடலாம். கன்னிவாடி மலைக்குகையில் சிலை வார்ப்புப் பணி முடிந்துவிட்டது.
- நெடிய விளக்கமளித்துவிட்டு போகர் புறப்பட்டார். சிறிது தூரம் சென்றவர் திரும்பிவந்து, செங்கான் நெற்றியிலும் ஆழிமுத்து நெற்றியிலும் விபூதி பூசி, அதன் ஒரு துளியை அவர்கள் சிரத்தில் தெளித்து, ``தடைகளேதுமின்றி உங்கள் காரியங்கள் நடந்து முடியட்டும்’’ என்று கூறிவிட்டுப் புறப்பட்டார்.
அதிகாலை நேரம்!
புகைமூட்டம் போன்றதொரு பனிப்பொழிவு… கையில் ஒரு தீப்பந்தத்துடன் கிழார்கள் மூவரும் கொட்டாரம் வந்து, போகரின் பிரதான குடில் முன் நின்றனர். மூவருமே தங்கள் பருத்தி ஆடையைத் தோள்வரை போர்த்தி மூடியிருந்தனர். குளிருக்கு அடக்கமாய் பாகையும் தரித்திருந்தனர். பணியாளன் விடைதாங்கி, அவர்களுக்காகக் காத்திருந்தான். குடிலுக்கு வெளியே கணப்புமூட்டி அதில் குளிர் காய்ந்தவாறுமிருந்தான்.
“விடைதாங்கி… நல்லவேளையாக இருக்கிறாய். எங்கே விழித்திராமல் உறங்கிவிட்டிருப்பாயோ என்று எண்ணியபடி வந்தோம்.”
“சரி சரி… வந்த வேலையை விரைவாகப் பாருங்கள். போகர் பிரான் எப்போது வேண்டுமானாலும் வந்துவிடலாம். கன்னிவாடி மலைக்குகையில் சிலை வார்ப்புப் பணி முடிந்துவிட்டது. இனி அதை நிறுவும் பணிதான். அதன்பின் இங்கே வருவோர் எண்ணிக்கையும் பல மடங்காகிவிடும்” பேசிக்கொண்டே உள்சென்று ஒருமரப் பெட்டிக்குள் இருந்த லிங்கத்தை, ஒரு குழவிக்கல்லைத் தூக்குவது போலத் தூக்கிவந்து அவர்கள் முன் நின்றான். தீப்பந்த ஒளியில் பளிச்சிட்டது அந்த லிங்கம். அதை, முதலில் வேல்மணிக்கிழார் வாங்கிப் பிடித்துப் பார்த்தார்.
“நல்ல கனம்… எப்படியும் ஐந்து மரக்காலளவு நெல்லின் எடை இருக்கும்” என்றபடியே உச்சி பாகத்தை மோந்து பார்த்து, ``ஆஹா… என்ன ஒரு வாசம்’’ என்று கண்கள் செருகிப்போனார். அடுத்து, அருணசலக்கிழார் வாங்கி அதேபோல உணர்ந்தார். அவரும் மோந்துபார்த்துத் தலையைச் சிலுப்பிக்கொண்டார். பின், ``நெஞ்சைக் காந்துகிறது. காரம் மிக்கதுபோலத் தெரிகிறது’’ என்றார்.
“தயவுசெய்து மோந்து மட்டும் பார்க்காதீர்கள். அதன் உறுதிப்பாடு இன்னமும் முழுமை அடையவில்லை. சற்று இளக்கம் உள்ளது. எனவே, மோசமான விளைவுகள் உண்டாகலாம்” என்று, அருணாசலக் கிழார் மோந்துபார்க்கவும், கூறினான் விடைதாங்கி.
“இப்படி போகர் பிரான் கூறினாரா?”
“ஆம். நான் அவருக்கு ஒத்தாசையாக இருக்கும்போது சற்று வாசம் வரவே, மோந்துபார்க்க விழைந்தேன். அப்போது கூறினார்.”
“சில நேரங்களில் மிகைப்பட உரைப்பது போகர் பிரான் வழக்கம். அதைப் பெரிதாகக் கருதிட வேண்டாம். அப்படிப் பார்த்தால், பாஷாணங்களால் ஓர் உடலைச் செய்வதேகூட ஆபத்துதான்!”
- இப்படி அருணாசலக்கிழார் சொல்லி முடிக்கும் முன், கார்மேகக்கிழாரும் அந்த லிங்கத்தை வாங்கிப் பிடித்து, அணைத்து மகிழ்ந்து மோந்தும் பார்த்துவிட்டார்.
இதனிடையே, முதலில் மோந்துபார்த்த வேல்மணிக்கிழார் முகத்தில் ஒரு சுணக்கம். தலையில் ஒரு பெரும் சிலிர்ப்பு. அள்ளிமுடிந்திருந்த தலைக்கட்டு அவிழ்ந்து, முடிக்கற்றைகள் தோளில் புரண்டன. மெலிதாய் மூக்கில் குடைவு ஏற்பட்டு, விசுக்கென்று ஒரு தும்மலும் தும்மி முடித்த மறுகணமே அடுத்த தும்மலும் என்று அடுக்கடுக்காகத் தும்மத் தொடங்கினார்.
அதைக் கவனித்த அருணாசலக்கிழார், ``மூச்சைச் சற்று அமுக்கிப் பிடியுமய்யா நின்றுவிடும்” என்று சொல்லிக்கொண்டே அவரும் தும்மலானார். இவரிடமும் தொடர்ச்சியாகத் தும்மல்!
விடைதாங்கி அதைப் பார்த்துக் கிறுகிறுத்துப் போய் கார்மேகக்கிழாரிடம் இருந்த லிங்கத்தை வாங்கி அதைத் தன் மார்போடு அணைத்துக்கொள்ள, கார்மேகக் கிழாரிடமும் தொடர் தும்மல்!
போகரின் கொட்டாரக் குடிலே நடுங்கும் அளவு மூவரும் மாறி மாறித் தும்மவும், விடைதாங்கிக்குப் புரிந்துவிட்டது. ஏதோ நடக்கக்கூடாத ஒன்று நடக்கப்போகிறது என்று. அது நடக்கவும் தொடங்கியது. மூவரும் பைத்தியம்போல, தும்மிக்கொண்டே குதித்து ஆடத் தொடங்கினர்.
இன்று அந்தப் பிரகாசம் குறையாமல் நந்தாவைப் பார்த்த ராஜா மகேந்திரன், ``இந்தத் தடவை எந்தத் தப்பும் நடந்திடாதே?” என்றுதான் அடுத்து கேட்டார்.
“நடக்காது… நடக்கவும் விடமாட்டேன். இனி எனக்கு இங்கே வேலையில்லை. நானும் குற்றாலம் போகணும். அங்கிருந்து விஷயங்களை ஆபரேட் பண்ணப்போறேன்.”
“ஆமா... பானு எங்கே?”
“தெரியல ஜி... நான் கொஞ்சம் சத்தம் போட்டேன். அவளும் கொஞ்சம் ரஃப்பா பேசிட்டுப் போயிட்டா. அவ பயப்பட ஆரம்பிச்சுட்டா ஜி! நமக்கு இனி அவ பயன்பட மாட்டா.”
“அது சரி, அந்த ஜமீன்காரங்க என்ன பைத்தியக் காரங்களா? எதுக்காக இப்படிப் பெட்டியைத் தூக்கிட்டு, திருப்பிக் கொடுக்கப் போயிருக்காங்க?”
“எல்லாத்துக்கும் காரணம் பயம்தான்!”
“அந்தப் பாம்பு பயமா?”
“அதுவும்தான். அதைப் பிடிக்கக்கூட ஒரு ஏற்பாடு செய்தேன். பானு கோட்டை விட்டுட்டா.”

“நீங்க விட்றாதீங்க. எனக்கு எது இல்லாட்டியும் அந்தக் காலச்சக்கர பலகணி கட்டாயம் வேணும். அடுத்த கவர்மென்ட்டை யார் அமைப்பா? யார் அடுத்த பிரதமர்? இங்கேயும் யார் அடுத்த சி.எம்? இப்படி எல்லாக் கேள்விக்கும் விடை தெரியணும்.”
“தெரியும்… கட்டாயம் தெரியும் ஜி!” என்று மிக நம்பிக்கையாகப் பேசிய நந்தா, “குற்றாலம் பக்கத்து ஃபாரெஸ்ட் டிபார்ட்மென்ட்ல யார் இருந்தாலும் சரி, கொஞ்சம் கோவாப்ரேட் பண்ணச் சொல்லுங்க ஜி!’’ என்று முடித்தார்.
போலீஸ் கமிஷனர் அலுவலகம்.
மிகவும் வாட்டமாகத் தெரிந்தாள் பாரதி. எதிரில் கலைவாணன். ஒரு மாதுளம்பழ ஜூஸை வரவழைத்துத் தந்ததில், பாதி குடித்து மீதம் இருந்தது. கச்சிதமாய் அரவிந்தன், ஜெயராமன், திவ்யப்ரகாஷ்ஜி மூவரும் அறைக்குள் நுழைந்தனர். கலைவாணன் எழுந்துசென்று கைகுலுக்கி, திவ்யப்ரகாஷ்ஜியைக் கட்டிக்கொண்டு பாராட்டினார்.
``ரியலி, உங்க மதியூகரணி வெரி வெரி கிரேட்! உங்க அனுமானத்துல கொஞ்சம்கூடத் தப்பே இல்லை. பாரதி அங்கேதான் இருந்தாங்க. நாலு பேர் சீட்டாடிக்கிட்டும் இருந்தாங்க. பெரிய ஸ்குவாட் வந்து, சுத்தி வளைச்சுப் பிடிக்கத் தேவையே இல்லாமப் பிடிச்சுட்டோம். ஓடப் பார்த்த ரெண்டு பேரைக் காலில் சுட்டதுல அவங்களுக்கு மட்டும் காயம். அதைப் பார்த்து மத்தவங்க சைலன்டா கைய தூக்கிட்டாங்க. அந்தச் சுருட்டுக்காரன் மட்டும் தப்பிச்சு ஓடிட்டான். அவனையும் எப்படியும் பிடிச்சுடுவோம்.”
“அங்கேயே இருந்த எங்களுக்கே நீங்க பிடிச்சது தெரியல. அவ்வளவு அமுக்கமா பிடிச்சிருக்கீங்க. மீடியாவுக்குத் தெரிவிக்கப் போறீங்களா... இல்ல...?”
- ஜெயராமன் கேட்க வருவதன் பொருள் கலைவாணனுக்கும் புரிந்தது.
“இது மீடியாவுல வரணும். எங்கப்பா செய்த தப்பு வெளிய வந்துடும்னு, அவர் இது மீடியாவுல வரக்கூடாதுன்னு சொல்வார். ஆனா, வரணும். வெளிய தெரியணும். இட்ஸ் மஸ்ட்!” - பாரதி சீற்றமாய் ஆரம்பித்தாள்.
“பாரதி, கொஞ்சம் அமைதியா இரு. சார் என்ன சொல்றார்னு பார்ப்போம்” - ஜெயராமன் அவளைத் தணிக்கப் பார்த்தார்.
“இல்ல சார்… இது வரணும் சார்! இல்லேன்னா, அவங்களை வெளியே விடச்சொல்லுங்க. அவங்க என்கிட்ட ரொம்பவே கண்ணியமா நடந்துகிட்டாங்க. அங்கே நான் பார்த்த ஒவ்வொருத்தருக்கும் இந்த அரசாங்கத்தால ஒவ்வொரு விதத்துல பாதிப்பு.
அவங்க ஒண்ணும் சினிமாவுல வர்ற மாதிரி ஜீன்ஸ் பேன்ட்டும் டிஷர்ட்டும் போட்டுக்கிட்டு, முகத்துல ஒரு பருவோட மதுபாட்டில் மூடியைக் கடிச்சுத் துப்பிட்டு, கர்ணகடூரமா சிரிக்கிற மிகையான வில்லன்கள் இல்லை. ஒருத்தருக்கு நிலமிழப்பு, ஒருத்தருக்கு ஜி.ஹெச்ல காட்டின அலட்சியத்தால் மனைவியோட உயிரிழப்பு. இப்படி ஒவ்வொருத்தருக்கும் ஒரு காரணம். அதிகார மட்டத்துல இருக்கிறவங்களை அடக்கவும் ஒடுக்கவும் அவங்க தேர்ந்தெடுத்த வழிதான், தீவிரவாதப் போக்கு. அது தப்புதான், நான் மறுக்கல. ஆனா, அவங்க அப்படியாகக் காரணமானவங்க ஜாலியா கார்ல போய்ட்டிருக்காங்க. அங்கேதான் எனக்குக் கேள்வியே” - முன்விழும் கூந்தலை ஒதுக்கியபடியே பாரதி ஆவேசப்பட்டாள்.
“மேடம்… உங்க துடிப்பு எனக்குப் புரியுது. இனி இந்தக் கேஸை மூடி மறைக்க முடியாது. நடந்ததுல எதை எப்படி மீடியாவுக்குச் சொல்லப்போறோம் கறதுலதான் எல்லாம் இருக்கு. நிருபர்கள் உங்ககிட்ட கேள்வி கேட்டா, என் அப்பா ஒருத்தரை ஏமாத்தினார். அவரை வழிக்குக் கொண்டுவர என்னைக் கடத்தினாங்கன்னு நீங்க பேட்டி கொடுப்பீங்களா?”
“நிச்சயமா கொடுப்பேன். இதனால பல உயிர்கள் போயிருக்கு. இனி ஒரு உயிர்கூடப் போகக் கூடாது. ஏமாற்றப்பட்ட அந்தக் குமாரசாமி குடும்பத்துக்கும் நியாயம் கிடைக்கணும்.”
“இதனால உங்கப்பாவோட இமேஜ் பாதிக்கப்பட்டு, அவர் பதவியே பறிபோகலாம். யோசிச்சுப் பார்த்தீங்களா?”
“போகட்டும்… நல்லா போகட்டும்… தப்புப் பண்ணுனா யாரா இருந்தாலும் தண்டனை அனுபவிச்சுதான் தீரணும்?” - பாரதியின் தீர்க்கமும் கோபமும் கலைவாணனுக்கு பிரமிப்பைத்தான் அளித்தது.
அரவிந்தனுக்கும் ஜெயராமனுக்கும் அது ஒன்றும் புதிதில்லை. ஆனால், கலைவாணனுக்கு ரொம்பவே புதிது.
“நீங்க ரொம்ப வித்தியாசமான பெண்ணா இருக்கீங்க பாரதி. நிஜ வாழ்க்கையில உங்களைப் போல ஒரு கேரக்டரை நான் இப்போதான் பாக்கறேன்.”
“சார், பாரதி இப்போ மீடியாவுக்குப் பேட்டியெல்லாம் கொடுக்க வேண்டாம். எங்களுக்கு இப்போ ஒரு பெக்கூலியர் அசைன்மென்ட் இருக்கு. நாங்க கிளம்பறோமே...” என்று எழுந்தார் ஜெயராமன்.
``சார், இதைவிட வேற எது சார் பெருசு?’’- ஜெயராமனிடமே திமிறினாள் பாரதி.
“இருக்கு பாரதி… கொஞ்சம் தனியா வா சொல்றேன்’’ என்ற திவ்யபிரகாஷ்ஜியை முகச்சுளிப்புடன் பார்த்தவள்...
“நீங்க எப்படி சார் இதுக்குள்ள வந்தீங்க?” என்றாள் வேண்டா வெறுப்பாக.
ஓடப் பார்த்த ரெண்டு பேரைக் காலில் சுட்டதுல அவங்களுக்கு மட்டும் காயம். அதைப் பார்த்து மத்தவங்க சைலன்டா கைய தூக்கிட்டாங்க. அந்தச் சுருட்டுக்காரன் மட்டும் தப்பிச்சு ஓடிட்டான்.
“சாராலதான் பாரதி உங்களைப் பிடிக்க முடிஞ்சது. சார் இனிமே டிபார்ட்மென்ட்டோட ஒரு மென்ட்டர். நீங்க முதல் நன்றியை சாருக்குத்தான் சொல்லணும்’’ என்றார் கலைவாணன்.
“இவர் உங்களையும் வளைச்சுட்டாரா?” என்று கிண்டலாகக் கேட்டாள்.
“பாரதி… இப்போ என் பேச்சைக் கேட்டு வரப்போறியா இல்லையா?” - சட்டென்று ஜெயராமனிடம் ஓர் ஆவேசம்.
பாரதியால் அதற்கு மேல் எதுவும் பேச முடியவில்லை. அவர்களோடு புறப்பட்டாள்.
காரில் ஏறி அமர்ந்த நொடி, கணேச பாண்டியன் பாரதி லைனில் வந்தார்.
“பாப்பா...”
“உம்...”
“நல்லபடியா மீட்டுட்டாங்களா? வந்துட்டீங்களா?”
“விஷயத்துக்கு வாங்கண்ணே!”
“என்ன பாப்பா… இன்னும் கோவம் தணியலியாக்கும்? ஐயா அவங்களுக்கு தகுந்த நஷ்டஈடு தரச் சம்மதிச்சிட்டாரு பாப்பா. அவசரப்பட்டு மீடியாவுல பேட்டி கீட்டி கொடுத்துடாதீங்க.”
“இதுகூட ஒரு விதத்துல லஞ்சம்தாண்ணே. உங்க சார் தன் மகளுக்கே லஞ்சம் கொடுக்கப் பாக்கறாரே… சபாஷ்!”
“பாப்பா… இப்படியெல்லாம் பேச வேண்டாம். காரியம் பெருசா வீரியம் பெருசான்னா, காரியம்தான் பாப்பா பெருசு! அப்புறம், உங்க எம்.டியும் அந்த எழுத்தாளரும் கூடதானே இருக்காங்க?”
“ஆமா… அதுக்கென்ன?”
“அவங்க முயற்சியாலதான் உங்களைக் கண்டுபிடிக்க முடிஞ்சுச்சாமே?”
“சுத்தி வளைக்காம விஷயத்துக்கு வாங்கண்ணே!”
“அப்பா அநேகமா நாளைக்கு டிஸ்சார்ஜ் ஆகிடுவாரு. அவங்க ரெண்டு பேருக்கும் நம்ப வீட்ல ஒரு விருந்து கொடுக்கணும்னு ஆசைப்பட்றாரு பாப்பா.”
“என்ன, அப்பாவுக்கு எங்க மேல திடீர்னு இவ்வளவு கரிசனம்?”
“இப்படிக் கேட்டா நான் என்னத்த பாப்பா சொல்ல? இனி நம்ம ஐயா நீங்க விரும்பற மாதிரியே நடந்துக்குவாரு பாப்பா. அவங்களோடு உங்கள ஆஸ்பத்திரிக்கு வரச்சொன்னாரு.”
“அவர்கிட்ட ஒரு விஷயத்த அழுத்தமா சொல்லுங்க. எங்களுக்கு விருந்து கொடுக்கறதுக்கு முந்தி, அந்தக் குமாரசாமி குடும்பத்தைக் கூப்பிட்டு விருந்து கொடுத்து நஷ்டஈட்டையும் தரச் சொல்லுங்க. அதுக்குப் பிறகுதான் நான் அவர் முகத்துலயே முழிப்பேன்.’’

“பாப்பா...”
ஊஹூம்... கணேசபாண்டியனை பாரதி பேசவிடவில்லை. கட் செய்தவள், போனை ஸ்விட்ச் ஆஃப்பும் செய்தாள்.
வெறித்தபடியே இருந்தனர் ஜெயராமனும் அரவிந்தனும். ஆனால், திவ்யப்ரகாஷ்ஜியிடம் கண்களை மூடிய நிலையில் தியானம். அவரை அந்த நிலையில் பார்த்தவள், ஜெயராமன் பக்கம் திரும்பி, “சார் சொல்லுங்க. என்ன அந்த முக்கிய அசைன்மென்ட்?”
“உங்கப்பா என்னை வீட்டுக்குக் கூப்பிடறாரா?”
“ஆமாம். உங்களுக்கு விருந்து தரணுமாம்.”
“அதெல்லாம் சும்மா… உங்கப்பா கவனம் இப்போ நம்ம மேலே… குறிப்பாக, அரவிந்தன் மேலே!”
“…………”
“என்ன பார்க்கறே…. பெட்டியை மறந்துட்ட போல இருக்கே?”
“பெட்டி… பெட்டி… யா! அதுக்கென்ன சார்?”
“அது இப்போ இந்தச் சென்னையில இல்லை. அந்த அமெரிக்கன் கப்புள்ஸ், பெட்டியோடு இப்போ குற்றாலத்துல இருக்காங்க.”
“ஓ… அவங்க என்னமோ செய்துட்டுப் போறாங்க. நமக்கு என்ன சார்?”
“உங்கப்பாக்கு அந்தப் பெட்டி அப்படியே வேணும். அந்த ஏடுகளோட போட்டோஸ் அரவிந்தன்கிட்ட இருக்கறதால அரவிந்தனும் வேணும்.”
“ஆமாம் பாரதி… அந்த டெல்லி ஜோசியன் உங்கப்பாவை ஆட்டிப் படைக்கறான். அவனுக்கு உதவிசெய்ய உங்கப்பாவோட பவர் சென்ட்டரும் தயாரா இருக்கு.”
“அதனால...”
“என்ன அதனால… அந்த ஜோசியன், அந்த அமெரிக்க ஜோடிகளைத் தடுத்துப் பெட்டியை அபகரிக்கத் திட்டம் போட்டு, இங்கிருந்து கிளம்பியும் போய்ட்டான் தெரியுமா?”
“அதுக்கு நாம என்ன சார் செய்யணும்?”
“அதை நாம தடுத்து நிறுத்துவோம். அப்புறம், அங்கே என்ன நடக்குதுன்னுதான் பாத்துடுவோமே.”
“என்ன நடக்குதுன்னா?”
“இன்னும் ஒரு வாரத்துல சித்ரா பௌர்ணமி வரப்போகுது. பெட்டியில இருந்த டைரில எழுதப்பட்ட தகவல்படி, போகர் சித்தர் தன் ஜீவசமாதியிலிருந்து உயிர்த்தெழுந்து வரப்போற நாள், அந்த நாள்!”
“சாரி… இந்த ஜீவசமாதி, உயிர்த்தெழுதல் இதெல்லாம் எனக்கு சம்பந்தமே இல்லாத விஷயங்கள். நீங்க போங்க. என்னவோ செய்துக்குங்க… என்னை விட்றுங்க.”
“இல்லே பாரதி… நீ வரணும். உன்னால மட்டும்தான் அந்த கப்புள்ஸுக்கு உதவிசெய்ய முடியும்” - அதுவரை பேசாத திவ்யப்ரகாஷ்ஜி திருவாய் மலர்ந்தார்.
“வேண்டாம் ஜி… நீங்க எதுவும் பேசாதீங்க. நீங்க என்னை காப்பாத்த உதவிசெய்ததுக்கு நன்றி. என்னை விட்டுருங்க.’’
“உன் வீம்பை தயவுசெய்து மூட்டை கட்டும்மா. பழநிக்கு நீ போவேன்னு சொன்னப்போ, நீ எப்படி ரியாக்ட் பண்ணினேன்னு தெரியும்ல…”
“சோ வாட்?”
“வாம்மா… வந்து பார். அந்தப் பெட்டி அதல பாதாளத்துலகூட விழலாம். ஆனா, ஜோசியன் கையில கிடைச்சிடக் கூடாது. அப்புறம், வேற மாதிரி விபரீத விளைவுகள் ஏற்படும்.’’
“நீங்க போங்க… என்னை ஏன் வற்புறுத்தறீங்க?”
“உன்னால மட்டும்தான் அந்தப் பெட்டியை போகர்கிட்ட சேர்க்க முடியும். அப்படிச் சேர்க்கும் போது, நான் அதிலிருந்து எடுத்த ஒரு ஏட்டுக் கட்டான மதியூகரணி என்கிட்டதான் இப்போ இருக்கு. இதை அதுல வெச்சு ஒப்படைக்கணும்.”
``நான் போகர்ங்கற ஒரு பாத்திரத்தையே கற்பனைன்னு நினைக்கறவ… என்னாலதான் முடியும்னா வாட் டு யூ மீன்?”
“பாரதி… நீ பெட்டி தொடர்பா எவ்வளவோ பார்த்துட்டே. ஆனாலும் மாறாமல், நீ பேசறதே பேச்சுன்னு பேசறே. இப்போ சொல்றேன். ஒரு சப் எடிட்டரா இந்த விஷயத்துல இறங்கி இந்த அனுபவங்களை வெச்சு ஒரு தொடர் எழுதணும் நீ. அதுக்காக நீ இப்பவே எங்ககூட வர்றே...” - ஜெயராமன் கட்டளை பிறப்பித்ததுபோலப் பேசினார்.
பாரதியால் அதற்குமேல் மறுக்க முடியவில்லை.
குற்றாலம் கெஸ்ட் ஹவுஸ்!
இரவு நேரம்... சற்றுத் தொலைவில் நின்ற காரிலிருந்து இறங்கினாள் பானு. கூடவே, பாம்புகளை வசியப்படுத்திப் பிடிப்பதில் ஜித்தரான அந்த நீலகண்ட தீட்சதர்!
- தொடரும்.