மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இறையுதிர் காடு - 67

இறையுதிர் காடு
பிரீமியம் ஸ்டோரி
News
இறையுதிர் காடு

“பிரானே… என்னை மன்னியுங்கள் தவறு நடந்துவிட்டது...” என்று நடுங்கும் குரலில் கூறினான்.

அன்று கிழார்கள் மூவரின் ஆட்டமும் விடைதாங்கியை வெலவெலக்கச் செய்துவிட்டது. முதல் காரியமாக அந்த லிங்கத்தை எடுத்து வந்திருந்த மரப்பெட்டிக்குள் கொண்டு போய் வைத்தவன் திரும்பி வந்தபோது பெரிதும் அதிர்ந்தான்.

கிழார்கள் மூவரும் தங்களை மறந்து சித்தம் கலங்கியவர்களாய் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளத் தொடங்கியிருந்தனர்!

‘இது என்ன விபரீதம்? வாழ்வில் விடியல் வேண்டும் என்று விடியும்பொழுது வந்தவர்கள் இப்படியா தங்களுக்குள் அடித்துக் கொள்வார்கள்… இதற்குப் பெயர்தான் விதியா? இப்போது என்ன செய்வது? போகர் பிரான் வந்து கேட்டால் என்ன சொல்வது?’

விடைதாங்கியின் மனம் பதைக்கத் தொடங்கி விட்டது. அவன் பயந்ததுபோலவே போகர் பிரானும் வந்தபடியிருந்தார். அருகிலிருந்த குளத்தில் நீராடி முடித்துவிட்டு அவர் வந்திருப்பதை அவிழ்ந்து காற்றிலாடும் முடிகள் சொல்லாமல் சொல்லின.

நெற்றியில் ஓர் ஒழுங்கின்றி விபூதி பூசியிருப்பார். குளித்த தருணத்தில் மட்டும் அவரது நெற்றி விபூதிப்பிரகாசமின்றிக் காட்சி தரும். விபூதி இல்லாத தலைமுடியை அள்ளிக் கட்டியிராத நிலையில் அவரைக் காண்போருக்கு அவர்தானா என்று சந்தேகமாகக்கூட இருக்கும். ஆனால் விடைதாங்கிக்கு அந்த முகம் பரிச்சயமான ஒன்று!

அப்படி ஒரு விபூதி இல்லாத பாழ் நெற்றியோடு தலைமுடிகள் காற்றிலாட வந்து நின்றவர் தங்களுக்குள் கட்டிப்புரளத் தொடங்கிவிட்ட கிழார்களைப் பார்த்தார்.

விழிகளில் ஆச்சர்ய மின்னல் - கன்னக்கதுப்புகளில் விசித்திர வரிகள். விடைதாங்கி பொத்தென்று அவர்காலில் விழுந்துவிட்டான்.

“பிரானே… என்னை மன்னியுங்கள் தவறு நடந்துவிட்டது...” என்று நடுங்கும் குரலில் கூறினான்.

“விரிவாகச் சொல்… கூட்டாமல் குறைக்காமல் நடந்ததை நடந்த வண்ணம் சொல்…" என்று பதிலுக்கு அவர் கூறியதில் நல்ல தினவு. அவனும் கூறி முடித்தான்.

“இனி உனக்கு இந்தக் கொட்டாரத்தில் இடமில்லை. நான் உன்னைக் கடுமையாக சபிக்கும் முன் ஓடிவிடு!” என்றார்.

“பிரானே!”

“பேசாதே - இடத்தை விட்டுப் புறப்படு. நீ லிங்கத்தையும் மாசுபடுத்தி, இவர்களையும் பிராந்தர்களாக்கிவிட்டாய். பதிலுக்கு நான் உன்னைப் பிராந்தனாகும்படி சபிக்கும் முன் ஓடி விடு.”

- போகரின் கோபக்குரல் விடைதாங்கியை அழுதுகொண்டே அங்கிருந்து செல்லும்படி செய்தது. அதற்குள் பொழுதும் புலர்ந்து புள்ளினப் புலம்பல்களும் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டன.

சூரிய உதய சமயம் போகர் அருந்தவென்று நவமூலி ரசம் செய்து அதை மண்குவளையில் வைத்து எடுத்து வரும் அடுமனைச் சீடனும் குவளையுடன் வந்தவனாக கிழார்கள் அடித்துக்கொள்வதைப் பார்த்து அதிர்ந்தான்.

“ரசத்தை அப்படி வைத்துவிட்டு வேகமாய்ப் போய் சிலரை அழைத்து வந்து இவர்கள் மூவரையும் பிரித்துத் தனித்தனியே ஒரு மரத்தில் கட்டிப்போடுங்கள்...” என்றார். அவனும் ஓடிப்போய் மூன்று பேருடன் வந்து அவர்களைக் கட்டிப் போட விழைந்தான்.

போகரின் முகம் பெரிதும் வாடிவிட்டது.

உள் சென்று பெட்டியைத் திறந்து அந்த லிங்க சொரூபத்தை எடுத்துப் பார்க்கலானார். பின் அதைப் பெட்டியின் மேல் வைத்தவர் கட்டிப் போடப்பட்ட கிழார்களருகே சென்றார். அவர்கள் போகர்பிரானை யாரையோ பார்ப்பது போல் பார்த்துப் பழிப்பு காட்டினார்கள்.

“பெருமக்களே! உங்களுக்கு எதற்கு சந்தேகமும், பரிசோதனையும்? ஆயினும் இறைவன் உங்களைக் கவலையற்ற மனிதர்களாகத்தான் ஆக்கியுள்ளான்.

சித்தம் கலைந்த பற்றற்ற நிலையையே பைத்திய நிலை என்பர். சித்தம் இணைந்த பற்றற்ற நிலையைத்தான் சித்த நிலை என்பர்.

சித்தம் கலைந்த பைத்தியங்களாய் மாறி கற்றவித்தை அவ்வளவையும் இழந்து நிற்கிறீர்களே… எவ்வளவு உபதேசங்களைச் செய்திருப்பேன். எல்லாமே ஏட்டில் யாருக்கோ எழுதுவதற்கு மட்டுமே என்று எண்ணிவிட்டீர்கள் போலும்.

உங்களைக் கொண்டு நான் ஒன்றை உறுதிப்பட உணர்கிறேன். விதி ஒருவரை ஆட்டத் தொடங்கிவிட்டால் அதற்கு இடம் பொருள் காலம் ஏதுமில்லை என்பதே அது...”

- போகர் பிரான் வாய்விட்டு முணுமுணுத்திட்ட நிலையில் ஒரு மாட்டு வண்டியின் மிசை வைக்கோல் போரால் மூடப்பட்ட நிலையில் தண்டபாணித் திருவுருவச்சிலையும், சிலையைத் தொடர்ந்து நவமருடன் ஆழிமுத்துவும் செங்கானும் வந்து சேர்ந்தனர்.

அவர்கள் முகங்களில் தூக்கக்கலக்கம் நன்கு தெரிந்தது. அவர்கள் அத்தனை பேருமே கட்டிப் போடப்பட்டிருக்கும் கிழார்களைப் பார்த்து அதிர்வை எதிரொலித்தனர்.

புலிப்பாணியிடம் அது வேதனையாகவும் எதிரொலித்தது.

அதைக் கவனித்த போகர், புலிப்பாணியை அருகில் அழைத்து "என்ன புலி… விடிய விடிய நடந்தே வந்துவிட்டீர்களோ - இடையில் ஓய்வெடுக்கவில்லையோ?’’

இறையுதிர் காடு
இறையுதிர் காடு

``இல்லை பிரானே... எங்கும் நில்லாமல் ஒரே மூச்சாய் வந்துசேர வேண்டும் என்று தாங்கள் கூறியதுபோலவே நடந்துகொண்டோம். இடையில் பொதுமக்கள் எவரும் கண்டு திருஷ்டி ஏற்படக் கூடாது என்கிற தங்கள் கருத்தைச் செயல்படுத்திவிட்டோம்…"

“மிக்க மகிழ்ச்சி… சிலையை என் பிரார்த்தனை மண்டபத்தில் படுக்கை வாக்கில் பத்திரமாய் வைத்து மேலே வைக்கோல் புரிகளைக் கொண்டு மூடி வையுங்கள்.”

“உத்தரவு பிரானே!”

“புலி… நீ இந்தக் கிழார்களை இப்படிக் கற்பனைகூடச் செய்துபார்த்திருக்க மாட்டாய் தானே?”

“என்னைத்தவிர என்று சொல்லுங்கள் பிரானே! நான் இதை எதிர்பார்த்திருந்தேன்...”

“ஓ… நீ இவர்களின் ஜாதகத்தைக் கணித்தவன் அல்லவா?”

“ஆம்…! மூவரின் ஜனன ஜாதகத்திலும் சந்திரன் நீசம்! குருவும் எட்டில் மறைவு. புதனும் பாவி சம்பந்தம் கொண்டு கிடக்கிறான். பூர்வ ஜென்ம புண்ணிய ஸ்தானத்திலும் பெரியதாய் சேமிப்பில்லை. நிகழ்கால தசையும் பகைத்தசை! அதில் புக்தி அந்தரம் என்று எல்லாமே எதிர்ப்பதமாகவே இருந்ததைக் கண்டேன். ஆட்சிபெற்ற சுக்கிரன் மட்டுமே சற்று பலம். அசுரகுருவான அவன் இவர்கள் மனதைக் கட்டுப்படுத்தத் துணைபுரியாமல், ஆசையில் மூழ்கிடவே துணை செய்துள்ளான். அப்படித்தான் அவன் செய்யவும் செய்வான்.

ஆயினும் குருவானவர் வக்ர நிவர்த்தி பெற்று சுப பார்வையை விரைவில் பார்க்க இருப்பதால் தங்களால் இவர்கள் குணப்பாடு அடையப் போவது உறுதி...”

- புலிப்பாணி அவர்களின் பலாபலனைச் சுருக்கமாய்க் கூறிமுடிக்க ஏன் தாங்கள் கேட்ட போது புலிப்பாணி எதையும் சொல்லவில்லை என்பதை நவமரில் சங்கனும் அஞ்சுகனும் அப்போதுதான் புரிந்துகொண்டனர்.

“நன்று சொன்னாய்… இவர்களை இப்படியே விட முடியாது. பாஷாண லிங்கத்தை நெருங்கத் தெரியாமல் நெருங்கி அதன் சக்தியையும் எனக்கு உணர்த்திவிட்டனர்.

இவர்கள் குணப்பட வேண்டுமென்றால் சந்திரகாந்தக் கல்லின் நீருடன், பித்தச் சுரப்பைக் கட்டுப்படுத்திடும் குல்லிகம் என்கிற மூலிகை மணியும், சிவனார் பாகல் எனப்படும் கொடியின் காய் இலை கிழங்கு எனும் மூன்றும் வேண்டும். கூடுதலாய் பிண்ட ரோபணம் எனும் நாரத்தையும் தேவை. இவற்றை உங்களில் யார் எடுத்து வரப்போகிறீர்கள்" என்று நவமரைப் பார்த்துக் கேட்டார்.

அஞ்சுகன் வேகமாய் முன்வந்தான்.

“பிரானே… முன்பு உதகநீர் எடுத்து வரச் சென்றதுபோல நானே இலைகளைக் கொண்டு வருகிறேன்" என்றான்.

“உனக்கு உறக்கக் கலக்கமில்லையா?”

“சற்று உள்ளது. ஆயினும் தங்களின் மெய்க்கரத்தால் தாங்கள் என் சோர்வை அகற்றிப் புத்துணர்வைத் தர இயலுமே?”

‘``நன்கு சொன்னாய்… ஆவினன் குடிப்பக்கம் போய் குளத்தில் நீராடிவிட்டு வா. நான் என் ஆத்ம சக்தியை உனக்குள் புகட்டிவிடுகிறேன். மூலிகைகளுடன் வந்து சேர். மற்றவர் களுக்கெல்லாமும் பணிகள் உள்ளன… என்னவென்று அறிவீர்களா?”

- போகர் பிரான் எல்லோரையும் பார்த்துக் கேட்டார்.

“பொதினி மலைக்குன்றின் மேல் தளத்தைச் சீர்ப்படுத்தும் பணியைத்தானே சொல்கீறீர்கள்?” என்று சரியாகக் கேட்டான் நாரண பாண்டி.

“ஆம்… முதலில் எல்லோரும் சென்று நீராடி வாருங்கள். பின் காலை உணவை உண்டு களியுங்கள். செயற்கரிய ஒரு செயலைச் செய்தமையால் பால் பாயசத்துடன் கனி அமிர்தமும் இன்று உங்களுக்கு வழங்கப்படும்.”

“கனி அமிர்தமா?”

“ஆம் மலைவாழை, கூழைப்பலா, மாவிளந்துண்டு, பாலைவனத்து ஈச்சை, மாதுளங்கண்ணிகள், ஊறல் நெல்லி, இளநீர் வழுக்கை, கருநாவல், வெள்ளரிப்பழம் என்கிற ஒன்பதின் கலப்புதான் கனி அமிர்தமாகும். இத்துடன் பாலும் கரும்புச்சாறும் சேர்ந்திட அதை உண்போர் நாவிருப்பதன் அருமையை உணர்பவராவர்."

- போகர் பிரான் அவர்களைப் பெரிதும் உற்சாகப்படுத்தினார். எல்லோரும் சென்று விட்ட நிலையில் செங்கானும் ஆழிமுத்துவும் மீதமிருந்து போகரிடம் தங்களுக்கு என்ன பணி என்பதுபோல் பார்த்தனர்.

“அருமைக் கருமார்களே! உங்களுக்கு நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். நீங்கள் நல்ல விதிப்பாடு உடையவர்களும்கூட… அதனாலேயே எங்கோ பிறந்திருந்தும் என் கவனத்தில் விழுந்தீர்கள்… சென்ற இடத்திலும் உங்களுக்கு குருவருள் சித்தித்தது. அம்மலைமேல் ஜீவ சமாதி கொண்ட சங்கர திகம்பரனை விட்டு விடாதீர்கள். உங்கள் வசம் சங்கரன் தந்த ரசவாதத் தங்கத்தைத் தாங்கள் ஐம்பது குன்றிமணி எடைக்கு ஒரு காசு என்று அவ்வளவையும் காசாக்கிடுங்கள்…!

தண்டபாணித் தெய்வத்தின் திருவுருவச்சிலை நீர்மிசை, நெல் மிசை, பொன்மிசை, நவதானியமிசை, மலர்மிசை என்று ஐவகை நிலைப்பாட்டில் கிடந்த பின்பே நிமிர்ந்து பீடத்தில் நிற்க விழையும். இவ்வாறு செய்வதன் மூலம் அவற்றுக்கு அருட்சேர்க்கை ஏற்படும். அதன் காரணமாக, குறைவுபடாத மழையும், நெல்விசைகளும், செல்வச்செழிப்பும், தானியங்களின் சேர்க்கையுடன் மணம் மிகுந்த மலர்களுக் கொப்பான வாழ்வை இம்மண்ணில் எல்லோரும் வாழ்ந்திடுவர். அதன் பொருட்டு உங்கள் பொன் காசாகிப் பயன்பெறட்டும். இவ்வாறெல்லாம் செய்யத் தவறினால் உலகம் அழிந்துபடுமா என்று கேட்டுவிடாதே… பூமி சுழன்றுகொண்டே இருக்கும் ஒன்று… அதற்கு ஒரு பக்கம்தான் சுழற்சி. ஆனால் அந்தப் பூமியில் வாழ்ந்திடும் நம் சுழற்சி இடவலம் எனும் இரு தன்மையும் கொண்டது. இதில் இடதென்பதும் வலதென்பதும் ஒன்றுக்கொன்று எதிரானதாகும். இரண்டும் சமநிலையில் இருந்தாலே மனித வாழ்வில் அமைதி நிலவும். அந்தச் சமநிலைக்கான செயல்பாடுதான் ஆலய வழிபாடும், அதன் ஆராதிப்புகளும்… பூமியில் பிறந்துவிட்ட அத்தனை பேரும் ஞானம் பெற்று ஆராதிக்கப் போவதில்லை. அது இயலாக் காரியமும்கூட. ஆகவே அவர்களுக்கும் சேர்த்தே ஓர் ஆலயத்தில் நித்ய பூசைகள் நிகழ்த்தப்படுகின்றன. நாம் செய்யும் எந்த ஒரு நற்காரியமும் அதன் விளைவை அனைவருக்குமே தான் தந்திடும். இந்தப் பொதினியம் பதியும் பழனியம்பதி என்றாகி அனைவருக்கும் நலன்களைத் தந்தவண்ணமிருக்கப் போகிறது பாருங்கள்...” என்றவராய், கிழார்களை நெருங்கினார். அவர்களை ஊன்றிப் பார்த்தார். அப்படியே அவர்களின் கரங்களைப் பிடித்து மனதுக்குள் எதையோ ஜெபித்தார். அவர்களிடமும் முகச்சுளிப்பும் சேட்டைகளுமில்லாத ஒரு மாற்றம். அவர்கள் கட்டுகளை அவிழ்த்து விட்டவர். “அப்படிப்போய் அமருங்கள். குறும்புகள் கூடாது” என்றார். அவர்களும் மௌனமாகப் போய் அமர்ந்துகொண்டு வெறித்துப் பார்த்தனர்.

ஆழிமுத்துவும் செங்கானும் பெருமூச்செறிந்தனர்.

“இவர்களைப் பார்த்தும் இவர்கள் ஏடுகளில் எழுதிடும் வேகத்தைப் பார்த்தும் நான் கல்லாதுபோனதற்காகப் பெரிதும் வருந்தியவன்… ஆனாலும் இவர்கள் கல்வி இவர்களைக் காப்பாற்றவில்லையே பிரானே...” என்றான் ஆழிமுத்து.

அவர்களை அருகழைத்து வலக்கரம் பற்றி கங்கண பாகத்தின் நாடியைத் தன் நடுவிரலால் தொட்டுணர்ந்து அதன்வழியே தன் ஆத்ம சக்தியை மின்விசைபோல உடல் காந்த மண்டலம் எங்கும் பரவச் செய்தார் போகர்.

“அற்புதமாய்ச் சிந்திக்கிறாய் ஆழி… அற்புதம்! ஏட்டுக் கல்வி கூட்டுக்காகாது. கூடு என்று நான் இங்கே உடம்பைக் குறிப்பிடுவதைப் புரிந்துகொள்ளுங்கள். பெரும் ஏட்டுக்கல்வி செருக்கையே முதலில் தரும் - அதனால் நான் எனும் அகம்பாவம் மிகும். அடுத்து சகலத்தையும் சந்தேகிக்க வைக்கும். இந்த போகன்கூட அகம்பாவம், சந்தேகம் இவற்றில் சஞ்சரித்து, பிறகே அதிலிருந்து விடுபட்டேன். இவர்களும் விடுபட்டு விடுவார்கள்… இது ஒரு அனுபவம்! கல்விகேள்விகளில் அனுபவக் கல்விக்கு இணை எதுவுமே கிடையாது. நீங்கள் போய் ஓய்வெடுங்கள். விரைந்து பொற்காசுகளையும் செய்து முடியுங்கள். அதில் ஒரு காசுகூட இந்த போகனுக்கு வேண்டாம். அது உங்கள் சொத்து - அதைக் கொண்டு உங்களுக்கான ஆன்மிகத் திருப் பணியைச் செய்யத் தொடங்குங்கள்… சென்று வாருங்கள்" அவர்கள் இருவருக்கும் விடை கொடுத்தார் போகர்.

இறையுதிர் காடு
இறையுதிர் காடு

சற்று நேரத்தில் அஞ்சுகன் குளத்தில் நீராடியவனாய் நெற்றிகொள்ளாத விபூதிப்பூச்சுடன் அவர் எதிரில் வந்தான் - உடன் சங்கரனும்.

இருவரும் வணங்கி நின்றனர். அவர்களை அருகழைத்து வலக்கரம் பற்றி கங்கண பாகத்தின் நாடியைத் தன் நடுவிரலால் தொட்டுணர்ந்து அதன்வழியே தன் ஆத்ம சக்தியை மின்விசைபோல உடல் காந்த மண்டலம் எங்கும் பரவச் செய்தார் போகர்.

இதனால் நாடி நரம்புகளில் உற்சாகமும், ஒரு புதிய தெம்பும் ஏற்பட்டதை இருவரும் உணர்ந்தார்கள்.

“அஞ்சுகா… சங்கா! மண்மிசை கிடைத்திடும் மூலிகைகளை நீங்கள் கொணர்ந்திடுவீர்கள் என்பதில் சந்தேகமில்லை. சந்திர காந்தக் கல்லின் நீருக்கு எங்கே செல்வீர்கள்?” என்று கேட்டார்.

“தாங்கள்தான் வழிகாட்ட வேண்டும் குருவே...” என்றான் அஞ்சகன்.

“நானறிய சந்திர காந்தக் கல்லால் தான் சில ஆலயங்களில் கருவறைக்குள் கூரை அமைப்பர். கருவறை வெப்பம் உச்சியில் பட்டு அக்கல்லானது உடல் வியர்ப்பதுபோல் வியர்க்கத் தொடங்கிடும். பின்னர் கல்லின் மையத்தில் கூடி கீழே சொட்டுச் சொட்டாய்ச் சிந்திடும்! சிந்தும் அந்த நீரே சந்திரகாந்தக் கல் நீர்! இந்நீருக்குள் சமமான அளவு காந்த விசைப்பாடு, குறிப்பாக சந்திரக் கதிர்களை ஈடுசெய்கிற விசைப்பாடு உண்டு. இதை மனநிலை பிறழ்ந்தவர் அருந்திட, அக்குறைபாடு சமனாகி அவர்களின் பிறழ்ச்சி சீராகும். மனச்சலனமும் நீங்கும். ஆனால் இது நம் கைக்குழி அளவு கிடைத்திட ஒரு மண்டல காலமாகும்.

அவ்வளவு நாள்கள் காத்திருந்து இதைப் பெற்று வருவதும் அசாத்தியம். எனவே இதை மட்டும் நான் சதுரகிரி சென்று பெற்றுவருகிறேன். நீங்கள் மற்றவற்றோடு வாருங்கள்" - என்றிட அஞ்சுகனும் சங்கனை அழைத்துக்கொண்டு புறப்பட்டான்.

காலைப் பொழுதிடம் வேகமான மாற்றங்கள்! அடுத்தடுத்து வர வேண்டியவர்கள் வரத் தொடங்கினர். நவமரில் மீதமிருந்த ஏழுபேரையும் பொதினி உச்சிக்குச் சென்று நிலத்தைச் சமன் செய்து, தென்மேற்கு பாகத்தில் காற்று மழையால் பாதிப்பு ஏற்படாதபடி ஒரு தற்காலிகக் குடிலொன்றை வேயச் சொன்னார். அவர்களும் அதற்கான ஆயத்தங்களுடன் புறப்பட்டுச் சென்றனர். புலிப்பாணிதான் அதற்குத் தலைமையேற்றான்.

முன்னதாக "பிரானே… தங்களின் பாஷாண லிங்கம் வேண்டி, தங்கள் பெயரினைக் கீறலுடன் தந்தவர்களின் ஏடுகள் இவை…" என்று ஒரு ஏட்டுக்கட்டினைத் தந்திருந்தான். அக்கட்டில் ஒவ்வொருவர் பெயருடன் அவர்களின் கையெழுத்து ஓரெழுத்தாய் நேராயும் சாய்ந்தும் சரிந்தும் சில குறியீடுகளுடனும் இருந்தது. பின்புறத்தில் அவர்களின் குறிப்பு வடிவம்.

‘தென்பாண்டி மண்டலத்து மாமள்ளர்த் தொகுப்பின் அரசங்குலத்து ஆண்டருள் மாணிக்க பூபதி என்பார் பேரன் வடுகபூபதி என்பார் புத்திரன் பாண்டிய பூபதி என்பான்!’ என்று மூன்றுவரிகளில் அவர்களுக்கான முகவரிபோலக் காட்சியளித்தது. அவற்றை அப்படியே பெட்டி மேல் உள்ள லிங்கம் முன் வைத்தவர்ஆழ்ந்து ஒரு பெருமூச்சு விட்டவராய் `ஐயனே! உன்னை என்னுள்ளிருந்து படைத்துக் கொண்ட நீயே இனியும் என்னைச் செலுத்தி உன்னைச் செலுத்திக்கொள். இவர்களில் எவரிடம் நீ சென்று சேரப் போகிறாயோ? ஒன்றைமட்டும் நன்கு அறிந்தேன். உன் முப்பத்திரண்டு லட்சணங்கள் ஆபத்து - அதை முப்பத்தொன்றாக்குகிறேன்’ என்று எண்ணியவர் ஓர் உளியைத் தேடி எடுத்து வந்து லிங்கத்தின் நெற்றிப்பரப்பின் மையத்தில் குங்கும பாகத்தில் ஒரு குழியை ஒரு வெட்டில் உருவாக்கினார்!

இன்று நீலகண்ட தீட்சிதரும் பானுவும் காரை விட்டு இறங்கிய நொடி மழையும் வரத் தொடங்கியது. குற்றாலத்துக்கே உரித்தான சாரல் மழையாக இல்லாமல் நல்ல பெருமழை! இருவரும் இறங்கிய வேகத்தில் காருக்குள் திரும்ப ஏறி அமர்ந்து கொண்டனர்.

“இந்த கெஸ்ட் ஹவுஸ்லதான் அவங்க தங்கியிருக்காங்க. நான் மேனேஜருக்கு போன் பண்ணி இந்த கெஸ்ட்ஹவுஸை புக் பண்ற சாக்குல அவங்க தங்கியிருக்கறதைத் தெரிஞ்சி கிட்டேன்” என்று மழைநீரை முகத்திலிருந்து வழித்தபடியே கூறினாள் பானு.

சர்ப்ப வஸ்யத்தை ஏன் கத்துண்டேன்னு நான் வருத்தப்படாத நாளே கிடையாது… நல்ல வேளை எந்த சர்ப்பத்தையும் கொன்னு அதோட சாபத்துக்கு நான் ஆளாகலை.

தீட்சிதர் இடது கையில் ஒரு கட்டு போடப்பட்டிருந்தது. அந்தக் கையை மடிமேல் படுக்க வைத்தபடியே கேட்டுக்கொண்ட தீட்சிதர் "பானு… அந்த லிங்கத்தை நான் ஒரே ஒரு தடவை எண் கண்ணால பாத்துட்டாலும் போதும். அப்படிப் பாக்கும்போது நாலே நாலு வில்வத்தை லிங்கம் தலைமேல போட்டு என் பாவங்களை எல்லாம் மன்னிச்சு எனக்குக் கைலாசத்துல ஒரு இடம் கொடுன்னு கேட்ருவேன்" என்றார் பக்தியோடு.

“நான்தான் சொல்லிட்டேனே… லிங்கம் உங்களுக்கே உங்களுக்கு. மற்றதெல்லாம் எனக்குன்னு...” என்ற பானுமுகத்தில் ஒரு அசாத்திய வில்லத்தனம்!

“பானு… மத்ததுன்னு நீ சொல்ற ஏடும் அதுக்குள்ள இருக்கற ரகசியங்களும் அத்தன சுலபத்துல புரிஞ்சிடாது. அவ்வளவும் சர்ப்பக் காவல்ல இருந்த சமாசாரங்கள்... நீ அதை சாதாரணமா நினைச்சுடாதே...”

“நான் நினைக்கறேன் நினைக்கல… என் பாஸ் நினைக்கறாரு… அந்த ஜோசியர் நினைக்கிறாரு. இரண்டு பேருமே என்னை கிட்டத்தட்ட ஒரு கொத்தடிமை மாதிரிதான் நடத்தினாங்க. அவங்களுக்கு நான் பாடம் கற்பிக்கணும் தீட்சிதரே!”

“உனக்கு அவர்மேல கோபம் - எனக்கு என் வாழ்க்கை மேலயே கோபம். சர்ப்ப வஸ்யத்தை ஏன் கத்துண்டேன்னு நான் வருத்தப்படாத நாளே கிடையாது… நல்ல வேளை எந்த சர்ப்பத்தையும் கொன்னு அதோட சாபத்துக்கு நான் ஆளாகலை. ஆனா கோபத்துக்கு நிறையவே ஆளாயிட்டேன்...”

“சாபம் கோபம்னு நீங்க பேசறதெல்லாமே எனக்கு ரொம்ப ஆச்சர்யமான விஷயங்கள் தான். நான் மட்டும் அந்தப் பெட்டியையும் சர்ப்பத்தையும் பார்க்காமப்போயிருந்தா உங்கள மாதிரி நபர்களை முட்டாள்களாதான் நினைச்சிருப்பேன். இந்த உலகத்துல நமக்குத் தெரியாத புரியாத விஷயங்களும் நிறைவே இருக்கத்தான் இருக்கு...”

“கற்றது கைமண்ணளவுதான்னு பெரியவங்க சும்மாவா சொல்லியிருக்காங்க?”

“இந்த மழை விடாது மாதிரி தெரியுதே… வர்ற வழியெல்லாமும் மழை. உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? இந்தத் தடவை சென்னைல வெள்ளம் நிச்சயமாம். ஆனா பெரிய பாதிப்பு இருக்காதாம். அதே போல தமிழ்நாடு முழுக்கவே நிலத்தடிநீர் மட்டமும் பெரிய அளவுல உயர்ந்திருக்காம்.

எங்க ஃப்ளாட்ல சுத்தமா தண்ணி இல்லை. மாசம் ஐயாயிரம் நாங்க தண்ணிக்கு மட்டுமே செலவழிக்கிறோம். அதையெல்லாம் வெச்சுதான் நான் லிங்கத்துகிட்ட நல்ல மழை பெய்யணும்னு வேண்டிக்கிட்டேன். அது கொஞ்சம்கூடப் பொய்யாகலை - பார்த்தீங்களா?”

“அம்மாடி… அந்த லிங்க பிரதாபம் பத்தி நீ எதுவுமே சொல்ல வேண்டாம். நான் மூலிகை வைத்தியனும்கூட… இதே மலைக்காட்டுக்கு பல தடவை மூலிகைகள் தேடி வந்திருக்கேன். அப்பல்லாம் இந்த லிங்கம் பத்தி நான் கேள்விப்பட்டதுண்டு. ஆனா யார்கிட்ட இருக்குன்னுதான் தெரியாம இருந்தது. உன்மூலமா இது தெரியவந்ததுதான் என் அதிர்ஷ்டம்” - அவர்கள் பேச்சின் இடையில் ஓரளவு மழை தணியத் தொடங்கியது.

“தீட்சிதரே, மழை குறைய ஆரம்பிச்சிடுச்சு. இப்ப என்ன செய்யப் போறோம்?”

“உன்னை அவா பார்த்திருக்காளா?”

“தாராளமா… ஏன் கேக்கறீங்க?”

“அப்ப நீ கார்லயே இரு. நான் போறேன் - பெட்டிய அவங்க எங்க எப்படி வெச்சிருக்காங்கன்னும் பாக்கறேன். கூட வேற யாரெல்லாம் இருக்காங்கன்னும் தெரியணும்ல?”

“அவங்க ரெண்டே பேர்தான். அது எனக்கு நல்லாத் தெரியும்! அந்த வாட்மேன் தாத்தா கிட்ட வாயக் கொடுத்தப்ப அவர் தெளிவா சொல்லிட்டாரு. அவர் மூலமாதான் இந்தக் குற்றாலம் பக்கம் வந்த விவரத்தையும் தெரிஞ்சிகிட்டேன். அதைக்கூட அவர் நேராச் சொல்லலை. நடுவுல அவர் போன்ல இந்த ஜோடிகள் வந்து எப்படிப் போறதுன்னு வழிய கேட்டப்ப அவர் சொன்னாரு. அப்படி அவங்களுக்குச் சொன்னதை வெச்சுதான் கண்டு பிடிச்சேன்.”

“நீ பேசாம போலீஸ்ல சேர்ந்திருக்கலாம். சரி இரு வரேன்" என்று, காரிலிருந்து இறங்கினார். நனைந்தபடியே நடந்தார், கெஸ்ட் ஹவுஸ் வாசலில் ரீப்பர் வுட் கதவு லேசாய்த் திறந்திருக்க, கடந்து சென்று உள் நுழைந்தார். முன் வாசல் பல்பு விளக்கு அணைந்திருக்க, கதவும் தாழிடப் பட்டிருந்தது. தன் குடுமி தெரியாதபடி துண்டால் தலைப்பாகைபோல் கட்டிக்கொண்டு "டொக்… டொக்...” கதவைத் தட்டினார். மனதுக்குள் சூரிய காயத்ரியைச் சொல்லிக்கொண்டார்.

சூரிய காயத்ரி, பதற்றமான குழப்பமான தருணங்களில் மனதைத் தெளிவாகச் செயல்பட வைக்கும்; சரியாக முடிவெடுக்கவும் வைக்கும்.

கதவும் திறந்தது!

கொட்டாவிபிரிய சாந்தப்ரகாஷ் எதிரில்…

“யாரது?”

“சார் நான் கெஸ்ட் ஹவுஸ் சூப்ரவைசர்...”

“சூப்ரவைசரா… சரி என்ன விஷயம்?”

“உள்ள மழையுல ஒழுகுதான்னு பாக்க வந்தேன்,”

“அப்படியெல்லாம் இல்லையே...”

“ஒழுகக்கூடாது. ஏன்னா ரிப்பேர் பண்ணியிருக்கோம். ஒரு பார்வை பாத்துடறேன்?”

இறையுதிர் காடு - 67

“ஏன், அதைக் காலைல பாக்கக் கூடாதா… தூங்கும்போது தட்டி எழுப்பிதான் பாக்கணுமாக்கும்?”

- திரும்பவும் கொட்டாவியுடன் சாந்தப்ரகாஷ் உள்ளே திரும்பி அவரையும் அனுமதித்தான். அவரும் ஆர்வமாக மேலே கூரையைப் பார்ப்பதுபோல எல்லா பாகங்களையும் பார்த்தபடியே சுற்றி வரலானார். எங்கே அந்தப் பெட்டி?

பெட் ரூமில் சாரு போர்த்திக் கொண்டு படுத்திருந்தாள். பெட்டி இன்னொரு அறையில் இருந்தது. அதன்மேல் ஒரு ஷால் போர்த்தப்பட்டி ருந்தது.

“அடேயப்பா, எவ்வளவு பெரிய பெட்டி?” என்றபடி சாந்தப்ரகாஷைப் பார்த்தார். பதிலுக்கு வெறித்தான்.

“நார்மலா எல்லாரும் சூட்கே ஸோடுதான் வருவாங்க. நீங்க என்ன இப்படி ஒரு பெட்டியோடு வந்திருக்கீங்க?” - போட்டு வாங்கப் பார்த்தார்.

“அது… அது… இந்தப் பக்கமா நிறைய நாட்டு மருந்து கிடைக்குமாமே... அதையெல்லாம் பாதுகாப்பா எடுத்துப் போகத்தான்...” சாந்தப்ரகாஷ் சமாளித்தான்.

“எத்தனை நாள் தங்கப் போறீங்க?”

“சித்ராபௌர்ணமி வரை...”

“ஓ… அப்ப வன யாத்திரை பண்ற திட்டமுண்டா?”

“வனயாத்திரையா... புரியலியே?”

“இல்ல. சித்ராபெளர்ணமிக்குச் சில குரூப் மலைமேல் ட்ரிப் அடிப்பாங்க. சித்த தரிசனத்துகாக அலையோ அலைன்னும் அலைவாங்க. ஆனா பாவம், பாருங்க, ஒரே ஒரு சித்தர்கூடக் கண்ணுல பட மாட்டாங்க...”

“அப்படியா?”

“தெரியாதா உங்களுக்கு?”

“இல்ல தெரியாது - ஆனா எங்களுக்கு மலைக்குமேல கொஞ்சம் வேலை இருக்கு...”

“என்ன மருந்து தேடியா?”

“ஆ… அதேதான்!” - சாந்தப்ரகாஷ் ஒரு பொய்யைச் சொல்லி அழகாய் சமாளித்தான். தீட்சிதரோ நாலாபுறமும் பார்த்தபடியேதான் பேசினார்.

அப்போதுதான் அந்தக் காட்சியும் கண்ணில்பட்டது. பெட்டி உள்ள அறைக்கு மேலே உள்ள ஓட்டுக் கூரைச் சரிவில் ஓர் இடைவெளியில் தன் ஓர் அடி நீளப் படம் விரித்த பார்வையுடன் அந்த நாகம்!

“நீங்க பாட்டும் எனக்கென்னன்னு என்ன விட்டுட்டுப் போயிட்டீங்க. இங்க எனகொரு ஆக்ஸிடென்ட். கால்ல சின்ன ஃப்ராக்சர்! அதனால என்னால எங்கேயும் போக முடியல.

தீட்சிதருக்கு திக்கென்றானது, முகத்தில் பலமான மாற்றங்கள். உடனே சாந்தப்ரகாஷும் அவர் பார்த்தது போலவே மேலே பார்த்தான்… ஆனால் அவன் பார்த்தபோது நாகம் தலையை இழுத்துக்கொண்டது. அவனுக்கு எதுவும் தெரியவில்லை.

“சரி… நீங்க கதவைச் சாத்திக்குங்க… நான் வரேன்...” என்று வேகமாக நகரவும் தொடங்கினார்.

சாந்தப்ரகாஷ் முகத்தில் லேசாய் சலனம். பெட்டியுள்ள அறைக்கதவை நன்கு தாழிட்ட வனாக, வாயிற்கதவையும் தாழிட்டுவிட்டு வந்து படுத்தான்.

சாருவிடம் நல்ல ஆழ்ந்த உறக்கம். முகத்திலும் நிர்மலம். அவளை அந்த உறக்க கோலத்தில் பார்த்த சாந்தப்ரகாஷிடம் ஒரு நெகிழ்வு… மெல்லக் குனிந்து நெற்றியில் முத்தமிட்டான். அருகில் செல்போன். கச்சிதமாய் அப்போது அதில் அழைப்பொலி… திரையில் ஆகாஷ் பெயர்! சாந்தப்ரகாஷை அந்தப் பெயரும் அழைப்பும் என்னவோ செய்தது. சற்றே நடுங்க கையில் எடுத்துக் காதில் வைத்தான்.

“மாம்...”

“ஹாய் ஆகாஷ்… ஐ ஆம் டாட்...”

“டாட்… ஹவ் ஆர் யூ?”

“ஐ ஆம் ஃபைன்… ஹவ் ஆர் யூ மேன்?” அவர்களின் ஆங்கில உரையாடல் இனி தமிழில்…

“நீங்க பாட்டும் எனக்கென்னன்னு என்ன விட்டுட்டுப் போயிட்டீங்க. இங்க எனகொரு ஆக்ஸிடென்ட். கால்ல சின்ன ஃப்ராக்சர்! அதனால என்னால எங்கேயும் போக முடியல. என் நண்பர்களும் ரெஸ்ட் எடுன்னு எட்டிக்கூடப் பாக்க மாட்டேங்கறாங்க...”

“அப்ப நீ நம்ப வீட்லதான் இருக்கியா?”

“ஆமாம்… நானே குக் பண்றேன். இப்பகூட எக்பிரெட் டோஸ்ட் பண்ணினேன். சிக்கன் கிரேவிய ஆர்டர் பண்ணி வரவெச்சேன். என்னமோ தெரியல… அம்மா செய்யற சாதம் குழம்பை சாப்பிடணும்னு தோணிகிட்டே இருக்கு. நீ அம்மாகிட்ட போனைக் கொடு...”

“நோ… அவ நல்ல தூக்கத்துல இருக்கா. எழுந்ததும் பேசச் சொல்றேன்.”

இறையுதிர் காடு - 67

“டாட்… நம்ப ஆபீஸ்ல உன் ஃபிரெண்ட் கிட்ட சொல்லு. எனக்கு இங்க ஒரே போர். நான் அங்க போய் ஏதாவது பண்றேன்...”

- ஆகாஷின் பேச்சு சாந்தப்ரகாஷை நெகிழ வைத்துவிட்டது. அவன் திடீரென்று மிகப் பொறுப்புள்ளவனாக மாறிப் பேசுவதுபோல்கூட இருந்தது. பேச்சிலும் இழுவைகள் இல்லை. இதெல்லாமே இங்கு வந்ததன் எதிரொலியோ?

“டாட்… எப்ப நீங்க திரும்பி வரப்போறீங்க?”

“அதிக பட்சம் ஒரு பத்து பதினைஞ்சு நாள்ள வந்துடுவோம் ஆகாஷ்...”

“அதுக்கு மேல போயிடாமப் பார்த்துக்குங்க. நான் உங்களை ரொம்பவே மிஸ் பண்றேன் டாட்...”

“வீ டூ ஆகாஷ்... வீ டூ...” சாந்தப்ரகாஷ் குரல் உருகியது. அவனும் கட் செய்துகொண்டான். நிர்மலமான உறக்கத்தில் சாருபாலா… வயிற்றுப்பக்கமாய் கர்ப்ப வயிற்றின் மெல்லிய புடைப்பு. பலப்பல நாள்களுக்குப் பிறகு சற்றே லேசான மனதோடு அந்த வயிற்றின் மேல் முத்தமிட்டான் சாந்தப்ரகாஷ்!

காரில் திரும்ப வந்து ஏறிக்கொண்ட தீட்சிதர் உக்கிரமான சிந்தனையில் இருந்தார். பேசவேயில்லை…

“என்ன சாமி, வந்ததுல இருந்து எதுவுமே பேசாம யோசனைலேயே இருங்கீங்க… பெட்டிய பார்த்தீங்களா?” - பானு கிளறத் தொடங்கினாள்.

“பார்த்தேன் பானு… பெட்டிய மட்டுமல்ல – அந்த சர்ப்பத்தையும்...”

“மை காட்…. அது இங்கேயும் வந்துடிச்சா?”

“காவல் நாகம்னா சும்மா இல்ல…. அதுலயும் இது ஜென்மமெடுத்த நாகம்...”

“உங்க வசியத்தால அதைப் பிடிக்க முடியும்னு சொன்னீங்களே?”

“முடியும்… அதே சமயம் சித்த சக்தியுடைய நாகம்கறதால எதிர்விளைவை என்னால கற்பனை செய்ய முடியல...”

“அப்ப என்னதான் செய்யப்போறோம்?”

“அதான் யோசிக்கறேன்...” - தீட்சிதர் சொன்னபடியே யோசித்திட, பானு தன் அருகில் இருக்கும் அட்டைப் பெட்டியை மெல்லத் திறந்து உள்ளே பார்த்தாள். அந்த பாஷாண லிங்கத்தைப் போலவே வடிவம் கொண்ட போலி லிங்கம் ஒன்று அந்தப் பெட்டிக்குள்… கூடவே பல ஏட்டுக் கட்டுகள். எல்லாமே போலி.

இடமாற்றம் செய்வதுதான் அவர்களின் முதல் கட்டம்.

அது முடியுமா?

- தொடரும்.