
விழிப்புலனால் சாமான்ய ஒளி அளவுக்கே பார்வைத் திறன் கொள்ளவியலும்.
அன்று அந்த பாஷாணலிங்கத்தின் நெற்றியில் உளிகொண்டு ஒரு குழியை உருவாக்கவும், பட்டாணி அளவிற்கான பாஷாணம் உதிர்ந்து விழுந்தது.
அதை எடுத்தவர் ஓர் உருண்டையாக உருட்டி தன் இடுப்பிலுள்ள விபூதிச் சம்புடத்தினுள் போட்டுக்கொண்டார். பின்னர் பாஷாணலிங்கத்தின் நெற்றிக்குழியில் துளி சந்தனத்தைத் தேடி எடுத்து வந்து வைக்கவும், குழிப்பாகத்தைச் சந்தனம் நிரப்பி மூடிக்கொண்டது. அப்படியே லிங்கத்தை வைத்தவர், சற்றுத் தொலைவில் அதைப் பார்த்தபடி அமர்ந்து பத்மாசனமிட்டுக் கொண்டார். பின் சிலமுறை பிராணாயாமத்தை நியமத்துடன் செய்துவிட்டு, முதுகுத்தண்டை நிமிர்த்தி நேராக அமர்ந்தார்.
குண்டலினி யோகத்தின் தொடக்கமாய் அது இருந்தது. சில பல நொடிகளிலேயே குதத்துக்குக் கீழாக அமுங்கிக் கிடந்த விந்து ரசம் ஒரு சீடை உருண்டை கணக்கிற்கு உருத்திரண்டு முதுகுத் தண்டுவடத்தைத் தன் வழித்தடம் போலாக்கிக் கொண்டு மேலேறிடத் தொடங்கியது. இறுதியாக அது சிரசின் கபால உச்சிக்கு வந்து புடைத்துக் கொண்டு நின்றபோது போகரின் முகத்தில் அது வரை இல்லாத ஒரு பிரகாசம்... கண்ணிரண்டும்கூட துலக்கியதுபோல் ஒளிர்ந்தன. அவர் உடலிலிருந்தும் ஒரு நறுமணம் கமழ்வதுபோல் தோன்றியது. அதுவரை இருந்த அவர் உடலும், குண்டலினி யோக கால உடம்பும் பெரும் சக்தி மாறுபாடு கொண்டுவிட்டதுபோல் திகழ்ந்திட, எதிரில் சற்று முன்வரை காட்சி தந்த அந்த பாஷாண சிவலிங்கம் பலவிதமான ஒளிக் கூறுகளுடன் காட்சி அளிக்கத் தொடங்கியது. குறிப்பாய், சப்த வர்ணங்கள் சமமான அளவில் ஒரு வானவில்போல அந்த லிங்கத்தின் மேல் அரைவட்ட அளவுக்குக் காட்சி தந்திட, அதில் பொன்னொளி மிகுதியாக இருந்தது. லிங்கத்தின் உச்சி பாகத்திலிருந்து ஓர் ஒளிக்கீற்று ஆகாயம் நோக்கி எங்கே சென்று அது முடிகிறது என்பதே தெரியாததுபோல் நீண்டிருந்தது. அநேகமாய் அது கைலாச கிரிக்குள் புகுந்து ஈசனின் சிரசோடு தொடர்பு கொண்டு முடிந்திடக் கூடும்.
கூடுதலாய் லிங்க உடம்பிலிருந்து பலவித ஒளிக்கற்றைகள், ஒரு பட்டத்தின் வால் பகுதியானது நெளிந்துகொண்டே விழுவது போல நாலாபுறமும் சென்று மறைந்துபோய்க் கொண்டிருந்தது.
அந்த ஒளிக்கற்றைகளில்தான் இருக்கிறது இந்தப் பூவுலகைச் சமப்படுத்தும் பேராற்றல். வறண்ட பகுதியில் ஈரம் சேர்த்தும், மிகுந்த ஈரப்பகுதியில் வெப்பம் சேர்த்தும் எங்கு எது குறைவுபட்டுள்ளதோ அதை நிறைவுபடுத்தும் விதமாய் அது செயலாற்றுவதை போகர் பிரான் தன் ஊனக் கண்வழி யோக சாதனையின்போது உணர்ந்தார். இந்த யோக சாதனை ஒரு முடிவுக்கு வந்தாலோ இந்தக் காட்சிகளும் மறைந்துவிடும்.
விழிப்புலனால் சாமான்ய ஒளி அளவுக்கே பார்வைத் திறன் கொள்ளவியலும்.
போகர் பிரான் தொடர்ந்து அந்த ஜெகவல பாஷாண லிங்கத்தைப் பார்த்த படியே இருக்க, அதன் வினைப்பாடும் தொடர்ந்துகொண்டேதான் இருந்தது. அருகில் ஒரு கூடைக்குள் இருந்த பூக்களை அள்ளி லிங்கம் மேல் அர்ச்சிப்பது போல் போட்டபோது அவ்வளவு பூக்களுமே தங்கள் வண்ணத்தையும் மணத்தையும் மீறிக்கொண்டு ஓர் ஒளியைப் புகைபோல உமிழ்ந்து காட்டின.
ஜெகவல லிங்கத்தின் ரசாயனம் பஞ்ச பூதச் சேர்கையோடு கூடி தன்மேல்படும் பொருளின் அணுத்தன்மைக்கேற்ப வினைபுரிந்து அந்தப் பொருளையும் அருள் ஒளிக்கு ஆட்பட்டதாய்க் காட்டியது.

சந்தனம் குழியை மூடியிராத நிலையில் ஜெகவல லிங்கம் அருள்தன்மை கொண்டது தான். ஆனால் மூடிவிட்டு வணங்கினாலோ பன் மடங்கு சக்தி பெருகுவதைத் தன் இரு கண்களால் காட்சியாகவே கண்டார். சந்தனம் வைத்த இடத்தில் மஞ்சளை வைத்தபோதும், மஞ்சளை எடுத்துவிட்டுக் குங்குமத்தை வைத்தபோதும், பின் புனுகு, விபூதி, மை என்று மாற்றி மாற்றிப் பார்த்ததில் சக்தி அம்சம் ஒளிப்புலத்தில் மாறியபடியேதான் இருந்தது. ஒவ்வொன் றுக்கும் ஒரு குணம் - ஒவ்வொன்றுக்கும் ஒரு வித வாசம் என்று வேதிமாற்றம் நிகழ்வதை உற்று நோக்கி அறிந்தவர். தன் குண்டலினி யோக கோலத்தில் இருந்து விலகி, சாமான்ய நிலையை அடைந்து பின் தானே ஒரு ஏட்டுக்கட்டினை எடுத்து, தான் கண்ட காட்சிப்புலனைப் பாட்டாகவே எழுதிடலானார்.
அப்படியே தன் விருப்பமாய் ஒரு பாடலை எழுதினார்.
‘வேதிவினை வித்தகமாய் மேதினியை வலம் வந்தே
நாதியற்றோர்க்கும் நல்லருள் புரிந்திடும்
ஆதியாம் ஜோதியே அம்பலவாணனே! நின்
சோதியால் தண்ணருள் பரவிடும் நன்னோக்கு
வேள்வியை, தான் செய்யும் வேளையில்
திலகமதும் களபமெனில் திவ்வியமே!
திலகமதும் அரவமையெனில் வசியமே!
திலகமதும் மஞ்சளெனில் மங்கலமே!
திலகமதும் குங்குமமானால் கார்ய சித்தியே!
திலகமதும் புனுகெனில் வைத்ய சித்தியே!
என்று எழுதி அதை ஒரு கட்டாகக் கட்டினார். அதை அப்படியே லிங்கத் திருமேனி முன் வைத்தவர், சற்று யோசனைக்குப் பின் பிரத்யேகமாக ஓர் ஏட்டினை எடுத்து, பூஜை விதிகளுடன் வணங்குவது எப்படி என்று எழுதி அதையும் முன் வைத்தார்.
பின் தன் தனித்த விருப்பத்தின் பேரில் 'தண்டபாணித் தெய்வப்பிரதிஷ்டை சிவமாய் நடந்து மலையதும் தலமாகி யுகம் யுகம் அருள வேண்டும். நலமெலாம் திகழ வேண்டும்' என்றும் உருக்கமாய் தன்பங்குக்கு வேண்டிக்கொண்டார்.
அந்த ஏட்டினையும் லிங்கத்திருமேனி முன் வைத்தார். குண்டலினி யோகத்தின் அப்போதைய பரவச நிலை வியப்பானது. பஞ்சுபோலாகி வான் வெளியில் மிதப்பதுபோல இருந்தது. பேரின்பத்துக்கு முழு முதல் உதாரணமே அப்போதைய நிலைதான் என்று மனதும் உறுதியாகக் கருதியது.
ஆயினும், அந்த நிலையிலேயே நீடித்திட அப்போது அவருக்கு மனம் வரவில்லை. பொதினி மலைமேல் தன் சீடர்கள் கூடாரம் அமைத்து பீடபாகத்தையும் சுத்தம் செய்திருப்பார்கள். போகர் அதைச் சென்று காண வேண்டும் என்று எண்ணியவர் மெல்ல குண்டலினி விந்தைக் கீழ் இறக்கி தன் இயல்நிலைக்கு வந்தார். இயல்நிலையில் மீண்டும் அந்த ஜெகவல பாஷாண லிங்கத்தை வணங்கியவர் எழுந்து குடிலை விட்டு வெளியே வந்தார்.
பூமி சுழல்வதில், சூரியன் உதிப்பதில், சந்திரன் வளர்ந்து தேய்வதில், பருவ நிலை மாற்றங்களில் யாதொரு மாற்றமும் இல்லை. கால அடையாளமாய் நாள் கிழமைகளை உருவாக்கியிராத பட்சத்தில், ஒரே பகல்தான் ஒரே இரவுதான்.
மூன்று கிழார்களும் சிறு குழந்தைகள் போலாகி அவர் கண்களில் பட்டனர். பரிதாபம் துளிர்த்தது. இவர்களுக்கான மூலிகைகளைத் தேடி சீடர்கள் சிலர் சென்றாயிற்று. சந்திரகாந்தக் கல்லின் நீர் நிமித்தம் சதுரகிரிக்குச் சென்று வர வேண்டும்.
அதற்கு மட்டுமா?
தண்டபாணித் தெய்வ பிரதிஷ்டை நிமித்தமும் அவர்களை அழைக்க வேண்டும். எல்லோரும் ஒன்றுபட்டு மலர்வாரித் தூவிட தண்டபாணி பீடம் கண்டு நின்றிட வேண்டும்.
முதலில் வானம் பார்க்க, கூரையில்லா தெய்வமாகவே அவன் நிற்கட்டும். சூரிய சந்திர ஒளிப்பொழிவுகளை அவன் திருமேனி காணட்டும். ஒரு மண்டல காலம் இரு நட்சத்திரச் சுற்றுகளுக்குக் காற்று, மழை, வெளி, ஒளி என எல்லாம் கண்டு பாஷாணக்கட்டு மேலும் பக்குவம் கொள்ளட்டும்.
பிறகு கட்டடம், கூரை, கோபுரம், ஆகமம் என அவன் சாந்நித்யம் விரியட்டும் என்று திடமாய்த் தெளிவாய் முடிவுகளுக்கு ஆட்பட்டவர், தன் பயணச்சித்தம் பயன்படுத்தும் மேகமணிக் குளிகையை எடுத்து வாயில் போட்டுக்கொண்டார். அடுத்த சில நொடிகளில் ஈர்ப்பு விசைக்கு ஆட்பட்டிருந்த அவரது பூத உடல் விசைக்கு இசைவாக மாறி ஒரு பறவை போலாயிற்று.
இப்பறவை உடல்கொண்டு சாவகம், சிங்களம், சிந்து, சீனம், சோனகம், திரவிடம், துளுவம், பப்பரம், மகதம் என்று சென்றுவராத இடங்களில்லை; காணாத மக்களுமில்லை. ‘பூலோகம், புவலோகம், சுவர்க்கம், சனலோகம், தபோலோகம், சத்தியலோகம், மகாலோகம், அதல, விதல, சுதல, தராதல, இரசாதல, மகாதல, பாதாளம்' வரை பார்த்துமாகிவிட்டது.
அமரர், சித்தர், அசுரர், தைத்தியர், கருடர், கின்னரர், நிருதர், கிம்புருடர், இயக்கர், பூதர், கந்தருவர், விஞ்சையர், அந்தரர், பசாசர், முனி, நாகர், விண்ணோர், மண்ணோர் என்று பூமிக்கு அப்பாலுள்ளவர் களையும் அறிந்து கொண்டாயிற்று.
மட்டுமா?
அல்லியம், கொட்டி, குடை, குடம், பாண்டரங்கம், மல், துடி, கடையம், பேடு, விருட்சக்கால், பாவை என்னும் பதினொரு வகை கூத்துகளையும் கண்டாயிற்று.
இனி என்ன?
தண்டபாணியை ஸ்தாபித்த பின் அருகிலேயே சமாதி நிலை கொண்டுவிட வேண்டியதுதான். சொல்ல வேண்டிய அவ்வளவையும் சொல்லியாகி விட்டது. பார்க்க வேண்டியதையும் பார்த்தாகி விட்டது.
பஞ்ச பூதங்களிடம் ஒரு மாற்றமும் இல்லை.
பூமி சுழல்வதில், சூரியன் உதிப்பதில், சந்திரன் வளர்ந்து தேய்வதில், பருவ நிலை மாற்றங்களில் யாதொரு மாற்றமும் இல்லை. கால அடையாளமாய் நாள் கிழமைகளை உருவாக்கியிராத பட்சத்தில், ஒரே பகல்தான் ஒரே இரவுதான்.
காலம் என்கிற ஒன்றே ஒரு மனிதன் தன் மனதால் நினைக்கப்போய் உருவாகும் ஒரு மாயமே.

நிஜத்தில் அப்படி ஒன்றே இல்லை!
எல்லாம் அலுத்துப் புளித்துச் சலித்துப் போவதே மானுட வாழ்வு. எதையும் அறியாத வரைதான் ருசி. அறிந்துவிட்டாலோ நிசி!”
- போகர் பிரான் விசார எண்ணங்களுடன் பொதினியின் மேல் தளத்தில் தன் பஞ்சு போன்ற உடலை நிலைப்படுத்தினார். சீடர்கள் சுறுசுறுவென்று களப்பணியாற்றிக் கொண்டிருந்தனர். புதர்கள் நீங்கி, சிறு செடி கொடிகள் அகற்றப்பட்டு சமனாய் மேல்தளம் காட்சி தந்திட, தென்மேற்கில் கூடாரம் உருவானபடி இருந்தது.
மையத்தில் நடப்பட்டிருந்த வேலின் ஒருபுறம் மயிலும் மறுபுறம் சேவலும் மந்திரத்திற்குக் கட்டுப்பட்டாற்போல் அமர்ந்திருக்க, வேலை அரவம் சுற்றி வளைத்துப் படம் எடுத்து வேலின் கூரிய நுனிக்குத் தன் படத்தால் ஆன நிழலை அளித்திருந்தது. அரிய காட்சி!
முகத்தில் ஒரு சாந்தம் கமழ்ந்திட அவற்றைக் கண்டவரை நோக்கிப் புலிப்பாணி நெருங்கி வந்தான்.
“பிரானே… எல்லாம் இனிதே சென்றபடி உள்ளது. மேலே பாருங்கள், மேகங்கள்கூடக் கட்டுப்பட்டாற்போல் பந்தலிட்டு எங்களுக்கு நிழல் தருவதை…" என்றான்.
“இது பாலாவின் கருணை. அந்த வாலைக்குமரியின் பேரருள்...” எனும்போதே `போகா...’ என்று இளம் பெண் குரல். ஒரு சரிவில் இருந்து குரலோடு மேலேறி வந்துகொண்டிருந்தாள் பாலா என்கிற அந்த சக்திக் கன்னி - பட்டுப்பாவாடை சட்டை, நெற்றிச்சுட்டி, ஒற்றைச்சடை அதில் தாழம்பூவுடன்.
“ ஆயி… மாயி… தாயி...” - சிலிர்த்தார் போகர்.
“சாதித்துவிட்டாயே… சாகசச் சித்தன் நீ…!” என்றாள் அவளும் பாராட்டுக்குரலில்… முகத்தில் குழிவிழுந்த புன்னகை!
“எங்கே தாயி… இப்போதுதானே தொடங்கியுள்ளது. இன்னமும் அநேக பணிகள் உள்ளதே…?”
“என் கிழப்பிள்ளைகள் வந்து இங்கு சித்து விளையாடினால் நாளைய உதயத்தில் இங்கே கோபுரக் கோட்டமே உருவாகிடாதா போகா...”
“அப்படி ஆக்கிடு என்கிறாயா…? அடுத்து சதுரகிரிக்கே பயணிக்க உள்ளேன். இடையில் கொல்லியில் குதம்பையாரைக் கண்டு அறப்பளீசன் அருளையும் முடிந்துகொள்வேன்...”
“காலக்கணக்கில் இப்பங்குனியில் உத்திரநாளன்று நிமிர்ந்து நிற்கட்டும் உன் ஆண்டி.”
“ஆஹா… புலிப்பாணிக்கு வேலையில்லாத படி செய்து நீயே நாளைக்கூட அடையாளம் காட்டிவிட்டாயே... நன்றியம்மா...”
“அவனுக்கும் அந்நாளே அகப்படும் - அதில் நல் முகூர்த்த நேரத்தை அவனே கண்டறிவானாக...”
“நன்றி தாயே… நன்றி… நீ என் ஜெகவலலிங்கத்தையும் கண்டருள வேண்டும்.”
“அறிவேன்… அறிவேன்… அதை நீ உன்னை உற்றவர்க்கு அளித்து அவர்களையும் மறைவாக வழிநடத்தப்போகிறாய், அப்படித்தானே?”
“பானு அதிகபட்சம் பத்து நிமிஷம் - நாம கிளம்பிடணும். நீ போய் அந்தப் போலி லிங்கம், அப்புறம் ஏடுகளை எடுத்து வா” என்றிட, பானு பின்வழியே வெளியேறினாள்.
“ஆம் கன்னி… இந்த உடம்பை சமாதியில் கிடத்திவிட்டு சூட்சும சரீரத்தால் ஒரு பெரு வாழ்வு வாழ விரும்புகிறேன்.”
“நன்றாக வாழ்ந்திடு… உன்னாலும் உன்னையொத்த என் சித்தப் பிள்ளைகளாலுமன்றி வேறு யாரால் அதுபோல் ஒரு வாழ்வு வாழ முடியும்? வாழ்ந்திடு… வாழ்ந்திடு…!”
“நீ இப்படி வாழ்த்தும்போது எதுதான் நடவாது போகும்? ஆயி… தாயி… மாயி… தேவி… கன்னி… செல்வி… உன்னை இப்படியெல்லாம் விளிக்க விளிக்க தித்திக்கிறது என் நாக்கு...”
“அதே தித்திப்போடு புறப்படு… அடுத்தடுத்த பணிகளைப் பார்...” - பாலா சொல்லிக் கொண்டே தன் கரம் பற்றியிருந்த ஒரு மொட்டுத் தாமரையை நிலைபெற்று நிற்கும் வேலினை நோக்கி எறிந்தவளாய் பக்கவாட்டில் இறங்கி மறைந்தாள்.
அவள் எறிந்த அந்தத் தாமரையும் அவிழ்ந்து உதிர்ந்து இதழ்களை நாலாபுறமும் கொட்டிற்று… ஆயிரமாயிரம் இதழ்கள்! ஆயிரமாயிரம் இதழ்கள்…!
சீடர்களுக்கெல்லாமும் அது ஒரு சாகசக் காட்சி.
போகர் பிரானும் புறப்பட்டார்.
இன்று பானு தன் வசமுள்ள போலி லிங்கத்தைப் பார்த்தபடி இருக்க தீட்சிதரும் செருமினார். பானுவின் வசம் பெட்டியிலிருந்து எடுக்கப்பட்டிருந்த ரசமணியும் இருந்தது. அதைத்தான் அவளும் மலைபோல் நம்பிக் கொண்டிருந்தாள்!
“என்ன சாமி? என்ன செய்யப் போறோம்?”
“மழை நிக்கட்டும்… உள்ள போறோம் - அந்த சர்ப்பத்தை முதல்ல நான் வசப்படுத்தறேன்… அப்புறமா பெட்டியைத் திறந்து லிங்கத்தை மாத்தறோம்.”
“லிங்கம் மட்டுமில்ல… எல்லா ஏடுகளையும்… சொல்லப்போனா அதுதான் எனக்கு முக்கியம்...”
“அப்படியே செய்வோம். கவலைப்படாதே! இப்போதைக்கு காரியம் ஜெயமாதான் முடியப் போறது...”
“எப்படி? அவங்க இருக்கற இடத்துக்கே போய் அவங்களை வெச்சுக்கிட்டே எப்படி இதை யெல்லாம் செய்ய முடியும்?”
“அதுக்குத்தானே நான் சித்த மயக்கி வேரைக் கொண்டு வந்திருக்கேன்...” - சொன்னபடியே தன் தோல்பைக்குள்ளிருந்து கொத்தாக ஒரு வேர்க்கட்டைக் காட்டினார்.
“இந்த சித்த மயக்கி எப்படி வேலை செய்யும்?”

“இதோட புகையை எக்காரணம் கொண்டும் நாம் சுவாசிச்சிடக் கூடாது. முகத்தை நல்லா மூடிக்கற தோடு, அளவா சுவாசிக்கணும். அப்படியே நான் தரப் போற ஒரு விதையை வாய்ல போட்டா உமிழ் நீர் அதிகமா சுரக்கும். அதை விழுங்கிட்டே இருந்தாலே போதும். நமக்கு பெருசா மயக்கம் வராது...”
“சூப்பர்… ஆமா உங்களுக்கு இதெல்லாம் எப்படித் தெரியும்?”
“சர்ப்ப வஸ்யம்கறது, மந்திராகர்ஷணம், ஔஷதாகர்ஷணம்னு இரண்டு விதத்தால செய்யற விஷயம். சில நாகங்கள் மந்திராகர்ஷணத்துக்குக் கட்டுப்படும் - சில ஔஷதாகர்ஷணம். அதாவது, இந்த மாதிரி மருந்துகளுக்கு, வேர் பட்டை போன்றவற்றுக்குக் கட்டுப்படும்.
மந்தராகர்ஷணம்கறது ஒலி அலையா மாறி, ஊசிபோல அதோட உடம்பைக் குத்தி, தான் பதுங்கியிருக்கற இடத்துல இருந்து வரச் செய்யும். அப்படி வந்து நான் வைக்கற பானைக்குள்ள நுழைஞ்சு சுருண்டு படுக்கும். மந்தராகர்ஷணம் பாம்புகளையே மயக்கச் செய்துடும்.”
“ஆனா இதெல்லாம் நடைமுறைல பெருசா இல்லையே ஏன்?”
“உனக்கு இதுக்கு முந்தியே பதில் சொல்லிட்டேன். இதெல்லாம் பரம்பரை ஞான சம்பந்தத்தால வருவது. சகஜ வித்தை கிடையாது. அபூர்வ வித்தைன்னு பேர். எங்க பரம்பரையில இப்ப நான் மிச்சமிருக்கேன். என் பிள்ளை `எனக்கு இதெல்லாம் வேண்டாம், இந்த மந்திரிக்கறது தந்திரிக்கறது உன்னோடு போகட்டும்’னு சொல்லிட்டு அமெரிக்கா போய் அங்க உத்யோகம் பார்க்கறான்.”
“அப்ப உங்களோடு இந்தக் கலை முடிஞ்சி போயிடுமா?”
“அப்படித்தான் சொல்லணும். இப்ப நான் உனக்கு ஒரு விஷயத்தைச் சொல்றேன். இதுதான் நான் பிடிக்கப் போற கடைசி நாகம். சொல்லப் போனா இந்த மாதிரி நாகங்களைப் பிடிக்க நாங்க யோசிப்போம். மகா சக்தி வாய்ந்தவை இவையெல்லாம்… மனுஷப் பிறப்பெடுத்து அடுத்து மோட்சகதிக்குப் போகாம திரும்ப பாம்பா ஜனிக்கறது ஒரு சாபம். சபிக்கப்பட்ட நாகம்கறதாலதான் நான் பிடிக்கச் சம்மதிச்சேன். அதுக்காக மட்டுமல்ல… அந்த லிங்கம், அதை பூஜிக்க கொடுத்துவெச்சிருக்கணும். அதுக்காக என்ன வேணா செய்யலாம்!
ராம நாமத்தை உபதேசமா பெறுவதற்காக கபீர்தாசர் குருவான ராமானந்தரையே ஏமாத்தின மாதிரி பெருமாள் கோயிலைக் கட்டுறதுக்காக தன்னையே திருடனாக்கிக்கொண்ட திருமங்கை மன்னன் மாதிரி நானும் துணிஞ்சிருக்கேன். இத்தன வருஷத்துல பணத்துக்காக நான் என் வித்தையைக் காட்டினதில்லை. சிரத்தையான மனுசனா வாழ்ந்ததுக்குப் பரிசாதான் பகவான் உன் ரூபத்துல லிங்கத்தைக் காட்டி என்னை இழுத்துண்டு வந்திருக்கான்” - பேச்சோடு பேச்சாக காரிலிருந்து இறங்கினார் தீட்சிதர். மழை விட்டிருந்தது. ஆங்காங்கே விளக்குக் கம்பங்களின் மின்னொளி… அந்த ஒளிப்புலத்தில் தெரியும் சின்னஞ்சிறிய மழைக்கோடுகள். தரையெல்லாம் சொதசொதப்பு. தீட்சிதர் டயர் செருப்பணிந்திருந்தார். மணிக்கட்டில், புஜக் கட்டில், கழுத்தில், இடுப்பில் எல்லாம் தாயத்துகள். வலக்கரத்தில் மணிக்கட்டுக்கு மேல் முழங்கை வரை காயத்துக்குப் போடப்பட்ட மருந்துக்கட்டு.
மெல்லத்தான் தீப்பிடித்தது. ஆனால் தடிமனாய் புகை கிளம்பியது. அப்படியே உள்ளே மையப் பகுதியில் வீசி எறிந்தார். புகை நாலாபுறமும் பரவியது. சாந்தப்ரகாஷும், சாருபாலாவும் உறங்கும் அறைக்குள்ளும் புகுந்தது.
கறுப்பு ஷால் தலைப்பாகையாகியிருக்க மார்பை பத்தாறு வேட்டித்துண்டு கொண்டு மூடியிருந்தார். இடுப்புக்குக் கீழே முழங்காலுக்குச் சற்று கீழ்வரை தொங்கும் கச்ச வேட்டி கட்டி, தன் தோல் பையைத் தோளுக்கு ஏற்றிக்கொண்டு கார் டிக்கியைத் திறந்து சர்ப்ப மண்டி எனப்படும் கறுப்புத்துணி கொண்டு கட்டப்பட்டிருந்த கடம் போன்ற பானையை வெளியே எடுத்தார். அதைத் தோளுக்கு ஏற்றிப் பிடித்தவராய் அவர் நடக்க அவரை ஒரு டார்ச் லைட் ஒளியோடு தொடர்ந்தாள் பானு.
பிசிறடிக்கும் மழை காரணமாய் மனித நடமாட்டமே இல்லை. ரேடியம் கடிகாரத்தில் மணி மூன்று என்பதன் முள் அமைப்பு.
கெஸ்ட் ஹவுஸ் வாசல் விளக்கில் மஞ்சள் தூளை ஊதிவிட்டாற்போல் ஒரு சிணுப்பல். முன் கதவு சாத்தப்பட்டு உட்புறம் தாழிடப்பட்டிருந்தது. சாந்தப்ரகாஷ் தாளிட்டுக் கொண்டிருந்தான். அவன் அப்படிச் செய்வான் என்று தெரிந்தே பின்பக்கத் தாழ்ப்பாளை எடுத்து விட்டிருந்தது சௌகர்யமாகப்போயிற்று. பக்கவாட்டில் நடந்து, தேங்கிய நீரில் சலசலப்பை உண்டாக்கியபடியே சென்று பின்கதவைத் தொடவும் திறந்து கொண்டது.

பானு பல அடி பின்னால் இருந்தாள். பெண்ணுக்கே உண்டான அச்சம் கொஞ்சம் அவளிடம் மிச்சமிருந்தது. டார்ச் லைட் ஒளி அவருக்கு உதவியதில் தோல்பையிலிருந்து சித்த மயக்கியை எடுத்துப் பிடித்தார். தன் முகத்தைத் தோள் துண்டால் முகமூடித்திருடன் போல் மூடிகொண்டு பானுவுக்கும் சைகை காட்டிட, அவளும் ஈரத் துப்பட்டாவால் இறுக்க மூடிக் கொண்டாள். வேரில் தீக்குச்சியை உரசிப் பிடித்தார்.
மெல்லத்தான் தீப்பிடித்தது. ஆனால் தடிமனாய் புகை கிளம்பியது. அப்படியே உள்ளே மையப் பகுதியில் வீசி எறிந்தார். புகை நாலாபுறமும் பரவியது. சாந்தப்ரகாஷும், சாருபாலாவும் உறங்கும் அறைக்குள்ளும் புகுந்தது. அவ்வளவுதான், மூன்று மணி நேரத்துக்கு அவர்கள் வாழ்நாளில் தூங்கியிராத தூக்கத்தைத் தூங்குவார்கள். எல்லாம் சில நிமிட நேரம்தான். புகை அடங்கவும் அதன்பின் பானையோடு உள்நுழைந்து பானையை மையத்தில் வைத்து அதன் முன் சப்பணமிட்டு அமர்ந்தவர், நாகவஸ்ய மந்திர உபாசனையைத் தொடங்கினார். பத்து நிமிடங்கள் வரை எந்த சப்தமும் இல்லை. வெளியே இடி மின்னலின் உரசல். துணிவாய் மின் விளக்கைப் போட்டு ஜன்னல் கர்ட்டன்களை இழுத்து விட்டிருந்தாள் பானு.
பயத்தில் தீட்சிதரை ஒட்டியே நின்றுகொண்டிருந்தாள். தீட்சிதரிடம் அவ்வப்போது வஸ்ய… வஸ்ய என்கிற உக்ரமான குரல். பின் அது தணிந்து காற்றுக் குரல். உலைத்துருத்திபோல் நிமிர்வதும் அடங்குவதுமாய் உடம்பில் ஓர் அசைவு.
பானு இடையில் சாந்தப்ரகாஷ் அறையை எட்டிப்பார்த்தாள், இருவரிடமும் நல்ல ஆழ்ந்த உறக்கம், இல்லையில்லை மயக்கம். மேஜைமேல் மாத்திரை ஸ்ட்ரிப்கள். மருந்து பாட்டில், ஆரஞ்சு ஆப்பிள் பழங்கள் மேஜையை ஒட்டி அவர்களின் சூட்கேஸ், லெதர் பேக்குகள்.
மேஜைமேல் ஒரு புகைப்படம். சாரு அமெரிக்காவிலிருந்து எடுத்து வந்திருந்த பிரம்மாண்ட ஜமீனின் சமாதிப்படம். அதைக் காணவும் திடுக்கென்றது. முன்னெச்சரிக்கையாக முழங்கால் வரை மூடிடும் லெதர் ஜிப் ஷூவை அணிந்து வந்திருந்தாள். இரவின் மழைக் குளிரையும் மீறிக்கொண்டு வியர்வை மட்டும் கன்னத்தில் சுரந்து வளைந்து ஓடியது. அதை வழித்தபடியே பெட்டி இருக்கும் அறைப்பக்கம் பார்வையை விட்டு டார்ச்சின் வட்ட வெளிச்சத்தை விழச் செய்யவும் குபீர் என்றாகி டார்ச் லைட் கை நழுவிக் கீழே விழுந்து சப்தத்தோடு உருண்டது. பெட்டி மேல் கம்பீரமாய் அந்த நாகம்.
மந்திரத்தை உபாசித்தபடி இருந்த தீட்சிதரும் பார்த்துவிட்டார். பார்த்த நொடியே கைகளை வளைத்து, சில முத்திரைகளைப் போடத் தொடங்கினார். அதற்குள் பானு குனிந்து டார்ச்சை எடுத்துக் கையில் பிடித்துக் கொண்டாள். ஒரு கட்டம் வரைதான் அது பெட்டி மேல் நின்றபடி இருந்தது. பின் தழைந்து இறங்கி வளைந்து வளைந்து வரத் தொடங்கியது. பானை முன் நிமிர்ந்து சீற்றமாய்ப் பார்த்தது.
தீட்சிதர் அசரவில்லை. இடுப்பிலிருந்து ஒரு முழநீளக் கோல் ஒன்றை எடுத்து, பானை விளிம்பைத் தொட்டு உள்போகும்படி சமிக்ஞை செய்தார். அந்த சர்ப்பம் மறுத்து விரித்த படத்தைப் பின்னுக்கு இழுத்தது. அதே சமயம் துணிவாய் தீட்சிதர் கரம் அந்த சர்ப்பம் முன் அதைப் பிடிப்பதற்காக நீண்டது. அந்தக் கரத்தின் மேல் விசையோடு கொத்த முயல, கையை இழுத்துக்கொண்ட தீட்சிதர் வலக் கைவிரல்களை மடக்கிக்கொண்டு விரல் முண்டு பாகத்தை அதன் முகத்துக்கு நேரே காட்டியபடியே, இடக் கரத்தால் பின்புறமிருந்து அதன் படம் விரிந்த பாகத்துக்குக் கீழான உடல் பாகத்தைப் பிடித்து அப்படியே தூக்கிப் பானைக்குள் விட்டு அதன் வாயையும் துணியால் இறுக்கமாய் மூடிக் கட்டியதோடு தன் கையிலிருந்த குச்சியால் அந்த வாய்பாகத்தில் பதினொரு முறை சுற்றி, பானையை ஒவ்வொருமுறையும் நொட் நொட் என்று தட்டி உபாசனையை முடித்தார்.
அப்பாடா!
பானு முகத்தில் பிரகாசம்.
தீட்சிதரும் திரும்பினார்
“பானு அதிகபட்சம் பத்து நிமிஷம் - நாம கிளம்பிடணும். நீ போய் அந்தப் போலி லிங்கம், அப்புறம் ஏடுகளை எடுத்து வா" என்றிட, பானு பின்வழியே வெளியேறினாள். தீட்சிதர் பெட்டி இருந்த அறைக்குச் சென்று `திருப்புளிச்சங்கரம்' எனும் எழுத்துகளுக்கான கடபயாதி எண்களை மனதில் கொண்டு பெட்டியைத் திறக்க முனையவும், அது பட்டென்று திறந்துகொண்டது. சம்ஸ்கிருத பண்டிதர்களுக்குக் கடபயாதி ஒரு பாடம். அதன் எண்கள் மனப்பாடம். எனவே பெட்டியைத் திறக்க அரவிந்தனைப்போல சிரமப்படவேயில்லை அவர்.
இடைவெளியில் உள்ளே ஆழ்ந்த உறக்கத்திலும் புரண்டு சற்று பயத்தை அளித்தான் சாந்தப்ரகாஷ். சற்று தூரத்தில் எரிந்து முடிந்த சாம்பல் கூடாய் அந்த சித்த மயக்கிவேர். எழுந்து சென்று அதை அப்படியே வழித்து எடுத்து பின்புறம் சென்று, ஒழுகும் கூரை மழைநீரில் கரைத்துக் கைகளைக் கழுவிக்கொண்டு வந்தார்.
அதற்குள் பானு லிங்கத்தை மார்பில் அணைத்தபடியே, போலி ஏட்டுக்கட்டுகளோடு உள்நுழைந்தாள். ஓர் அசாதாரண காரியமொன்று சாதாரணமாய் நடந்து முடிந்தது. அசல் இருக்குமிடம், போலி இடம் மாறியது. குறுகிய காலத்தில் பானு அந்த லிங்கம் போலவே ஒரு போலி லிங்கத்தை ஃபைபர் கொண்டு ஒரு சினிமா ஆர்ட் டைரக்டரிடம் செய்து தரச் சொல்லி, லிங்கத்தின் புகைப்படத்தையும் காட்டியிருந்தாள்.

அவர்கள்தான் அவசரத்திற்குக் கைகொடுப்பவர்கள். லிங்கத்தைத் தூக்கும்போது பாரமாய் உணரத் தோதாக உள் கூட்டில் களிமண்ணைச் சேர்த்து இரும்புத் துண்டுகளையும் வைத்து வெளியே பூசி மெழுகிக் கருநீல வண்ணத்தையும் பூசிவிட்டதில் அசலுக்கும் போலிக்கும் பெரிய வித்தியாசமே தெரியவில்லை.
அந்த ஆர்ட் டைரக்டர் எதற்கு என்று கேட்டபோது, பங்களா தோட்டத்தில் ஒரு மரத்தடியில் வைப்பதற்காக என்று சொல்லிச் சமாளித்திருந்தாள். முதலில் இப்படிச் செய்வதற்காகத்தான் ஜோதிடர் நந்தா திட்டமிட்டிருந்தார். நந்தாவோடு சேர்ந்து போட்ட திட்டத்தைத்தான் நந்தாவை விட்டு விட்டு தீட்சிதரோடு போட்டுக்கொண்டு அதைச் செயல்படுத்தியும்விட்டதுதான் அவள் சாதுர்யம். தீட்சிதரைத் தேடிப் போய் அவரை அழைத்து வரும் வரை இப்படி ஒரு எண்ணம் அவளுக்குள் இல்லை. தீட்சிதருக்கு நேரிட்ட விபத்தும் அதனால் பிரம்மாண்ட ஜமீன் பங்களாவுக்குள் நுழைய முடியாமல் போனதும் முதலில் தடையாக ஆனாலும் பிறகு அதுவே ரகசியமாகத் திட்டம் போட வசதியாகவும் ஆகிவிட்டது.
தீட்சிதரிடமும் எப்பாடுபட்டாவது லிங்கத்தை அடையும் ஆவேசம் உருவாகியிருந்தது. எனவே இருவரும் தனி ட்ராக்கில் போக அதுவே காரணமாகி விட்டது.
இப்போது எல்லாமே கச்சிதமாக முடிந்து விட்டன. ஒரு காவித்துணி மூட்டைக்குள் பெட்டிக்குள் இருந்த அசலான அவ்வளவும் அடங்கிவிட்டது. சர்ப்பமண்டிப் பானையும் பாதுகாப்பாய் டிக்கியில் அடங்கியது. கெஸ்ட் ஹவுஸுக்குள் அந்த அதிகாலை மூன்று மணிக்கு இப்படி ஒரு அடாத செயல் நடந்தது என்பதற்கு எந்தச் சாட்சிகளோ தடயங்களோ துளியும் இன்றி பின்புறக்கதவைச் சாத்திக்கொண்டு திரும்பி விட்டதில் பானுவிடம் ஒரு பெரும் பிரமிப்பு.
கேரளாவுல சர்ப்பக்காவுங்கற இடத்துல ஒரு நம்பூதிரி இருப்பார். இந்த சர்ப்பத்தை அவர்கிட்ட ஒப்படைச்சிடப்போறேன். அவர் இதைத் தன் சர்ப்ப பலி பூஜைக்கும் மத்த விஷயங்களுக்கும் பயன்படுத்திக்குவார்.
காரைக் கிளப்பியவள் "சாமி… நாம சாதிச்சிட்டோம் சாமி… சாதிச்சிட்டோம்" என்றாள். அதே வேகத்தில் "சாமி அந்தப் பாம்பை என்ன செய்யப் போறீங்க. அதை உயிரோட விட்டா நம்மை அது சும்மா விடுமா?” என்றும் கேட்டாள்.
“அது இப்ப என் மந்திரக் கட்டுக்குள்ள இருக்கு. அதால எதுவும் செய்ய முடியாது. லிங்கமும் நமக்கு வசப்பட்டதால நம்மை அதால எதுவும் செய்ய முடியாது. பொதுவா இப்படிப் பிடிக்கற சர்ப்பங்களைக் காட்டுக்குள்ள விட்றதுதான் என் வழக்கம். ஆனா இதை நான் அப்படி விட முடியாது. கேரளாவுல சர்ப்பக்காவுங்கற இடத்துல ஒரு நம்பூதிரி இருப்பார். இந்த சர்ப்பத்தை அவர்கிட்ட ஒப்படைச் சிடப்போறேன். அவர் இதைத் தன் சர்ப்ப பலி பூஜைக்கும் மத்த விஷயங்களுக்கும் பயன்படுத் திக்குவார். அப்புறம் அவராச்சு, இந்த சர்ப்பமாச்சு… நமக்கென்ன வந்தது?” என்ற தீட்சிதர் லிங்கம் இருந்த அந்தக் காவி மூட்டையைத் தூக்கி மடிமேல் வைத்துக்கொண்டு "எம்பெருமானே, எனக்கு இந்த பாழாப்போன பிறப்புல இருந்து விடுதலையைக் கொடுடாப்பா… எல்லாப் பாவத்துக்கும் உன்னை பூஜித்து மன்னிப்பு கேட்டுக்கறேன். விக்ரமாதித்தன் போல தலையையே வெட்டிக்கூட காணிக்கையாத் தர்றேன். போதும் இந்தப் பொறப்பு… என்னோட இந்தத் திருட்டுத் தனத்தை நீ மன்னிச்சே தீரணும்" என்று உரத்த குரலில் உருகத் தொடங்கிவிட்டார்.
பானுவோ ஏடுகளை எண்ணியும், அதை எப்படிக் கோடிகளாக்கலாம் என்றும் கற்பனை செய்யத் தொடங்கி யிருந்தாள்.
மறுநாள்.
விடிந்ததும் விடிந்திராத அக்காலை வேளையில் தென்காசி கடந்து குற்றாலச் சாலையில் விரைந்துகொண்டிருந்தது பாரதியும் அரவிந்தனும் இருந்த கார். பின்னாலேயே திவ்யப்ரகாஷ்ஜியும் ஜெயராமனும் ஒரு தனிக்காரில் வந்துகொண்டிருந்தனர். அவர்கள் காரை பானுவின் கார் ஒரு புள்ளியில் கடந்து சென்றபோது திவ்யப்ரகாஷ்ஜி உடம்பில் ஓர் அதிர்வு.
- தொடரும்