மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இறையுதிர் காடு - 69

இறையுதிர் காடு
பிரீமியம் ஸ்டோரி
News
இறையுதிர் காடு

புலி, யானை, யாளி சிங்கமென்கிற விலங்கின் உணர்வுகள், சமயத்தில் மனிதனுக்குள்ளும் புகுந்துவிடும்.

அன்று விண்மிசை பறந்துசெல்வதே ஒரு பரவசமான அனுபவம்தான். ஆனால், பறக்கத் தெரிந்த பறவையினத்திடம் அந்தப் பரவச உணர்வு இருக்கிறதா என்றால் அது கேள்விக்குறிதான்.

பறக்கும்போது கிட்டும் பார்வையையே பறவைப் பார்வை என்கின்றனர். பார்ப்பதில், பறவைப் பார்வையே பெரிது.

இதில்தான் 360 கோணமும் தங்கு தடையின்றிப் புலப்படும். தரைமிசை நின்று பார்க்கும் பார்வை, இதில் சரிபாதியே! எப்போதும் ஒரு பாதியே புலப்படுவதும், மறுபாதி மறைபடுவதும்தான் தரைத்தன்மை. அந்தப் பாதியில் புலனாவதை ஏற்பதில் தயக்கமில்லை. புலனாகாததை நம்பியே ஏற்க வேண்டும்.

மனித வாழ்வின் சகல நிலைகளிலும் இத்தன்மை தொடர்வதுதான் விந்தை. போகர் பிரான் கொல்லிமலைச் சாரல் நோக்கிப் பறக்கையில், தன்னுள் இவ்வாறான சிந்தனைகள், கேள்விகளுடனே பறந்தபடி இருந்தார். தன் சிரத்துக்கு மேல் ஏதுமின்றி, ஆனால் எல்லாம் இருப்பதுபோலக் காட்சிதரும் ஆகாயம். கீழோ மலைகள், காடுகள், நாடுகள், நகரங்கள், கிராமங்கள், சேரிகள், ஏரிகள், கிணறுகள்.

இவற்றை நிலத்தில் நின்று பார்க்கும்போது பார்க்கப்படும் அதுவே பெரிதென்று கருதுகிறது மனது. விண்ணிலிருந்து பார்க்கையில், அதே பெரிது எவ்வளவு சிறிதாகிவிடுகிறது? ஒன்றைப் பெரிதாகக் காட்டுவதும் சிறிதாகக் காட்டுவதும் அறிவில்லை; விழிகள் பார்க்கும் கோணமே. கோணங்கள் வாய்ப்பது என்பது அவரவர் நிலைப்பாட்டினாலேயே. இதுவே ஒருவன் உண்டென்று சொல்லவும் இல்லையென்று மறுக்கவும் காரணம். எவரும் பொய்யுரைப் பதில்லை. உணர்வதையே உரைக்கின்றனர். உணர்வதும் இடத்தால் மாறுபடுகிறது. இது ஒருவகை இயற்கை.

இறையுதிர் காடு
இறையுதிர் காடு

- போகரின் சிந்தனை அவரை இன்னமும் மேலே பறக்கத் தூண்டியது. அப்படிப் பறக்கையில் மரங்களெல்லாம் செடிகளாகி, செடிகளும் சிறு புள்ளியாகி, அப்புள்ளியும் விழிப்புலனில் மறைந்துபோயிற்று. இதற்கு மேல் ஓர் உயரம் செல்லமுடியாது என்று உயரப் பறந்த அத்தருணத்தில், அவரது யோக உடலும் குளிரை உணர்ந்தது. கீழே ஒரு நாடே ஒரு சிறு விளையாட்டு மைதானம் அளவுக்குக் காட்சியளித்து. ஒரு பெரிதே சிறிதானதை உணர்த்திற்று.

பார்ப்பதை வைத்தே காட்சி, காட்சியை வைத்தே சிந்தனை, பார்ப்பதென்பதோ இடம் சார்ந்தது. இடம் மாறிட, காட்சி மாறும், சிந்தனை மாறும்...

உண்மையில் புறத்தில் எந்த மாற்றமுமில்லை. மாற்றமெல்லாம் கண்களின் வழி மனதிடம்தான். இந்த மனம் அறிவு சார்ந்தது. அறிவு, அறிவது சார்ந்தது. அறிவதும் இடம் சார்ந்தது. இடம், நிலம் சார்ந்தது. ஆக, நிலமே மனித வாழ்வின் அறிவு, அறியாமை அனைத்துக்கும் மூலம்.

இந்தச் சிந்தனை அவருக்குள் ஒரு பாட்டாகியது. சிவவாக்கியன் பாடியது...

`ஓடம் உள்ள போதலோ ஓடியே உலாவலாம்

ஓடம் உள்ள போதலோ உறுதிபண்ணிக் கொள்ளலாம்

ஓடம் உடைந்த போது ஒப்பிலாத வெளியிலே

ஆடும் இல்லை கோலும் இல்லை யாரும் இல்லை ஆனதே!’

- தரை மீது விண்ணைப் பார்த்து சிவவாக்கியன் போகர் முன் பாடிக்காட்டிய பாடல். யோக உடம்பாதலால் மனதுக்குள் அக்குரல் அப்படியே ஒட்டிக்கொண்டுவிட்டது.

அவ்வேளை இடைக்காடர் குரலும் ஞாபகத்திலிருந்து கசிந்து ஒலித்தது. அது, சிரமிசை கூந்தல்கற்றை பறக்கையில் சிந்திக்கத் தோதாகவுமிருந்தது.

‘அஞ்ஞானம் போயிற்று என்று தும்பீபற – பர

மானந்தங் கண்டோம் என்று தும்பீபற

மெய்ஞ்ஞானம் வாய்த்ததென்று தும்பீபற – மலை

மேலேறிக் கொண்டோம் என்று தும்பீபற…’

ஆஹா என்ன ஒரு பாடல்… என்ன ஓர் உணர்தல்... மட்டுமா, பாம்பாட்டிச் சித்தரும் தன் பாட்டினை போகருக்குள் ஞாபகத்தில் கசியச் செய்தார்.

‘சீறுபுலி யானையாளி சிங்க முதலாய்

சிற்றடிக்குத் குற்றேவல் செய்யச் சொல்லுவோம்

வீறு பெருங் கடவுளை யெங்களுடனே

விளையாடச் செய்வோமென்றாடு பாம்பே!’

புலி, யானை, யாளி சிங்கமென்கிற விலங்கின் உணர்வுகள், சமயத்தில் மனிதனுக்குள்ளும் புகுந்துவிடும். அதற்கு அவன் மட்டும் காரணமில்லை. அவன் வாழும் நிலமும் சூழலும்தான் காரணம், இந்த உணர்வுகள் கடவுளுடன் விளையாடத் தடையாக உள்ளவை. ஒரு சித்தனால் மட்டுமே இந்த விலங்குகளை வேட்டையாடி, கடவுளுடனும் விளையாட முடியும். அப்படி விளையாடினால் அவனே சித்தன்.

அந்த வெட்டவெளி பறத்தல், போகருக்குள் பரமானந்தப் பறத்தலாக இருந்தது. நவபாஷாணச் சிலை என்னும் செயற்கரிய செயல் செய்த அந்த உணர்வு, அவர் சித்தத்தை அசைத்தபடியே இருந்தது. ஒரு செயல், அதன் வெற்றி தோல்வியெல்லாம் தன்னையுணராத மானிடர் போக்கு. தன்னையறிந்தோர்க்கோ அது ஓர் அசைவு அவ்வளவே. அதற்காய் மனம் மகிழ்கிறது என்றால், சித்தம் பூரணமாய் சித்திக்கவில்லை என்றே பொருள். போகர் தனக்கும் பூரணமாய் சித்திக்கவில்லையோ என்று கேட்டுக்கொண்ட போது, கொல்லிமலை வனச்சருகம் கண்மிசை பட்டது.

மீன்பள்ளியாறும் மின்னலைப்போல நெளிந்து விழும் சீற்றலான அருவியும், அளப்பரிய பலாக்களும் வாழைகளும் அதனூடே வாசமாய்க் கமழ்கின்ற ஏலச்செடிகளும் போகரை வரவேற்றுச் சிறப்பிப்பதுபோலக் காற்றிலாடின. இவற்றினூடே ஒரு சமதளத்தில்தான் குதம்பைச் சித்தரின் ஆசிரமக் குடில் இருந்தது. குடிலில் அநேக சீடர்கள் அவரிடம் பாடம் படித்தபடியிருந்தனர்.

இறையுதிர் காடு
இறையுதிர் காடு

அற்புதம், நிகற்பம், கும்பம் என்று எண்களுக்கான பெயர்களைச் சிலர் கூறியபடியிருந்தனர். ‘முக்கால், அரைக்கால், நாலுமா, மூன்று வீசம், இருமா, மாகாணி, முக்காணி, காணி, அரைக்காணி, முந்திரி, இம்மி, மும்மி, அணு, குணம், பந்தம், பாகம், விந்தம், நாகவிந்தம், நுண்மணல் என்று நில அளவுகளை ஒருவன் மணலில் எழுதியபடியிருந்தான்.

இடையிட்ட போகரைக் காணவும் எழுந்துவந்து மார்போடு அணைந்துகொண்டார் குதம்பையார்.

“வா போகா… உன் நலம் வாழ்க’’ என்றார் நட்புடன்.

“குதம்பி, எதற்கிந்த கணக்குப் பாடம்? எதை அளக்கப்போகின்றனர் உன் சீடர்கள்?”

“ஏன், நாளையே இவர்களும் உன்னைப்போல ஒரு விசேஷச் சிலையைச் செய்யலாம். அது கணிதமயமான ஒன்றுதானே?”

“ஆமாம்… ஆமாம்… இவ்வுலகில் எல்லாமே கணிதம்தான். உயரப் பறந்து வருகையில் ஊர்கள் சிறுத்தன முதலில். பின், பார்வையை விட்டே மறைந்துவிட்டன. தூரத்திற்கேற்பவே காட்சி. காட்சிக்கேற்பவே எண்ணம். எண்ணத்துக் கேற்பவே செயல்… பார்த்தாயா, எல்லாமே ஒரு கணக்குக்குள் இருப்பதை?”

“வந்திருப்பது இப்படி வியக்க மட்டும்தானா?”

“இல்லையப்பா… வரும் பங்குனி உத்திர நாளில் என் கொட்டாரம் உள்ள பொதினிக்குன்றின்மிசை தண்டபாணி நிமிர்ந்திட உள்ளான். அப்பாஷாணக் கடவுளைப் பாசத்துடன் நீ வந்து வணங்கி வாழ்த்த வேண்டும்.”

“அரிய செயல்… அவசியம் வருகிறேன். இதை மானசமாய் நீ உணர்த்தியிருந்தாலே போதுமே… எதற்கு மானுடர்போல இவ்வளவு பிரயாசை?”

“மானுடர்கள்தானே நாமும்? சித்தம் விளங்கிடப் போய் சித்தன் என்றானதால் மானுடர் இல்லை என்றாகிவிடுமா என்ன? இதுமட்டும் காரணமில்லை. அங்கொரு கோயில் உருவான நிலையில், நான் யோக சமாதிகொண்டு இந்த யோனி உடலை உதிர்க்க விரும்புகிறேன். பின், எங்கும் ஒளியுடம்பின் சஞ்சாரமே! எனவே, பூத உடலோடு பறக்க விரும்பிப் பறந்து இங்கும் வந்தேன்.”

“வேறு எங்கெல்லாம் சென்றுவர உத்தேசம்?”

“அடுத்த இடம் பொதிகைப் பூங்குன்றம். ஆங்கோர் பொட்டல் வெளியை ஆக்ரஹித்து ஆயிரமாயிரம் காலத்துக்கான ஓர் அருளோட்டச் செயலுக்கு விதைபோட உள்ளேன். அப்படியே அகத்தியர் பெருமானைக் கண்டு வணங்கி, சதுரகிரிமிசை சார்ந்தொழுகும் சகல சித்தர் பெருமக்களையும் சந்தித்து, கைக்குழியளவு சந்திரகாந்தக்கல் நீரினையும் பெற்றிடும் முனைப்பில் இருக்கிறேன்.”

“பிராந்த விழிப்புக்கான மருந்தல்லவா சந்திரகாந்தம்?”

“சரியாகச் சொன்னாய்… என்னைச் சார்ந்த மூன்று கிழார்ப் பெருமக்கள் சித்தம் கலங்கிக் கிடக்கின்றனர். பெருமதி படைத்தோர்தான். ஆயினும், சிறுமதியாய் அதுமாறி ஒரு தவற்றைச் செய்யவைத்து, அவர்களைப் பிராந்தர்களாக்கி விட்டது.”

“அடடே பாதகமில்லை! சித்தன் சார்ந்தோர் எத்தனை சிக்கலில் வீழ்ந்தாலும் மீள்வர் என்பதல்லவா உண்மை? சந்திரகாந்தத்துளி நீர் என் வசமுள்ளது. நான் தருகிறேன்.

இமயத்தில் நூற்றுக்கு நூறு இக்கல்லால் ஆன கூரைகொண்ட ஆலயமும், அதன் நீர்சுரக்கும் பாகத்தில் ஈசனாரின் லிங்கத் திருமேனியும் உள்ளது. நவநாயகச் சித்தர் பெருமக்கள் எழுப்பிய கோயில் அது. அங்கு நான் சென்ற சமயம் நீ எனக்குத் தந்த விசித்திரக் கண்ணாடிக் குடுவையில் அதைப் பிடித்து வந்தேன். அதைக்கொண்டு மனநோய்க்கான குளிகைகளை ஆக்க உத்தேசித்திருந்தேன். பிறகுகூட நான் அதை ஆக்கிக்கொள்கிறேன். இப்போது நீ அதைக் கொண்டுசெல்’’ என்று ஒரு கண்ணாடிக் குடுவையைக் கொண்டுவந்து தந்தார். அதில் இளநீல நிறத்தில் சந்திரகாந்தக்கல் நீர்!

“நன்றி குதம்பி… அருவி பெருகிக்கிடக்கின்றதே, அடாத மழையோ?”

“ஆம்… ஸ்தூலம் துறக்கப்போகிறாய்… எனவே, நீராடிச் செல். உடம்பு தரும் சுகானுபவத்தை விட்டுவிடாதே...”

“சரியாகச் சொன்னாய்… இப்போதே செல்கிறேன். வரட்டுமா?”

“புறப்படு… முகூர்த்த வேளையை அறிந்து நானே வந்துசேர்கிறேன்” என்று குதம்பையார் விடை தர, போகரும் மீண்டும் விண்மிசை பறக்கத் தொடங்கி, அருவி கண்டு அதில் மூழ்கித் திளைத்து, பின் பொதிகை சென்று, அங்கும் பாணதீர்த்தத்தில் விழுந்து புரண்டு, அப்படியே சித்தன் பொட்டல்வெளிக்குச் சென்று, ஆங்கோர் குகைப்புலத்தில் இளைப்பாறி, இறுதியாக சதுரகிரி சென்று, அகத்தியர் முதல் சகலசித்தர் பெருமக்களையும் கண்டு, பொதினியம்பதி எனும் பழனியம்பதி குறித்துக் கூறி, உத்திர நாள் குறிக்கப்பட்டுள்ளதைக் கூறிட, காலகண்டர் என்பவர் முன்வந்து, ``அன்றுதான் அங்காரகனின் மையக்கதிர் அம்மலை மேல் விசையோடு பாய்கிறது. அறிவீரா இவ்வுண்மையை?” என்று கேட்டிட, “ஆஹா… அதுவாய் அமைந்துவிட்டது. இதுவும்கூட அவனருளே!” என்றார் போகர்.

“காலகண்டரே, அங்காரக் கதிருக்கும் அம்மலைத்தலத்துக்கும் அப்படி என்ன சம்பந்தம்?” என்று கேட்டார் ஒரு சித்தர்.

“ஒரு சம்பந்தமுமில்லை… இது ஒரு சுழற்சி வினைப்பாடு. ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் செயல். இதனால் அங்காரகக் கதிர் வினைப்பாடு, `யுத்தம் பித்தம் சப்தம்’ என்கிற வினைக்குக் காரணமாகியது. அதாவது, இவ்வேளை அக்குன்றின் வழி ஓர் அரசனோ அசுரனோ செல்லும்பட்சத்தில் யுத்த வெறிகொள்வர். ஆண்டிகள், பித்தம் முற்றப்பெறுவர். சராசரி மாந்தர்கள், கோபவயப்பட்டு அமைதி இழந்து, மனதில் இரைச்சல் சப்தம்கொள்வர். இதையே நான் சுருக்கி `யுத்த பித்த சப்தம்’ என்று மூன்றே மூன்று சொற்களால் கூறினேன்.

“இப்படியும் நிகழுமா?”

“இது ஒரு பௌதிகச் செயல்பாடு. காற்றழுத்தத் தாழ்வுநிலை புயலாவதுபோல, கிரகணக் காலச்சூழலில் ஈர்ப்புவிசை மாறுதல்களுக்குள்ளாவதுபோல, பௌர்ணமி, அமாவாசை திதிகளில் வெளிமண்டலத்தில் விசைப்பாடுகள் விரிந்து சுருங்குவதுபோல, இதுவும் ஒரு வினை. இனி அவ்வினை பாஷாணக் கதிர்வீச்சுடன் கலந்து நல்வினையாகிடும்.”

“நல்வினை என்றால்?”

“அமைதி, சாந்தம், நோயற்ற உடல், எண்ணிய காரியம் முடிதல் இப்படிப் பலப் பல...”

“இதை அறிவது எங்ஙனம்?”

“காலத்தால், அனுபவங்களால், நம்பிக்கையால் இதை அறிந்திடலாம்.”

“அப்படியாயின் ஒரு சாமானியன் வரையில் அவன் உணர எதுவுமேயில்லை அப்படித்தானே?”

“இனம்புரியா அமைதியும், ஆரோக்ய உடம்பும் அவனுக்கு தண்டபாணியின் விபூதியாலும் அபிஷேகப் பொருள்களாலும் உறுதிப்படும்.”

“இதன் தன்னாட்சி எவருக்குரியது?”

“அம்மண்மிசை பிறந்தோர்க்கே…’’

“இதன் வழிப்பாடுகள்?”

“சீடர்கள் அறிவர்… அவர்களின் வம்சாவளியினர் தொடர்வர். குறிப்பாய், புலிப்பாணி பெரிதும் தொடர்வான்.’’

“இயற்கை உத்பாதங்கள் நேரக்கூடுமோ?”

“இமயம்கூட கலியின் முடிவில் கரைந்து மறையும். இப்பொதினி மறையாது!”

“இதன் நெறி?”

“சித்தநெறி கலந்த ஆகமநெறியே...”

“எவரும் மாற்ற விழைந்தால்?”

“தடுக்கப்பெற்றிடுவர் என் சமாதி விடுப்பால்…’’

“எப்படி?”

“என் சுவேத உடல் எவருள்ளும் புகுந்து செயலாற்றும். அது கற்சிலைக்கும் அசைவைத் தந்திடும்.”

இறையுதிர் காடு
இறையுதிர் காடு

“கலிக்குற்றங்கள் மிகுந்தால்?”

“திருத்தப்பெறுவர். திருந்தாவிட்டால் வருந்தப்பெறுவர்.”

“இப்படி ஓர் ஓயாச் செயலின் நோக்கம் மண்மிசை புகழ்பெற்றிடவோ?”

“அல்ல… மண்மிசை மாந்தர் செழித்திட!”

“அருமை போகா அருமை… அனைத்துக் கேள்விகளுக்கும் அழகாய் விடை பகர்ந்தாய். வாழ்க உன் வினைப்பாடு. வளர்க உன் புகழ்!”

“மாற்றிச்சொல்லுங்கள்... வாழட்டும் சித்தநெறி, வளரட்டும் அதன் மங்காப் புகழ்!”

“அருமை அருமை… உத்திர நாளில் எம் கரப்புஷ்பங்கள் அத்தண்டபாணித் திரு உருமேல் விழக் காண்பாய். முதல் வழிபாடு நம்மாலேயே நிகழ்ந்திடும். திருப்திதானே?”

“திருப்தி! திருப்தி! திருப்தி!”

- போகரும் பிரமாணம்போல மும்முறை கூறி மகிழ்ந்தவராய் அச்சித்தர் பெருமக்களிடையே கங்கை முதல் தாமிரபரணி வரையிலான நீர்ப் பானைகளைப் பெற்று, அதை ஒரு பொன் பானையில் அடக்கி, சிரம் மேல் வைத்துக்கொண்டு மீண்டும் விண்மிசை பறக்கலானார்.

பொதினிக் குன்று.

தோரணங்கள் கட்டப்பெற்று வாழைகள் கட்டப்பட்டு, திருத்தலம்போலக் காட்சி தந்தபடி இருக்க, வேலும் தண்டக்கோலும் நடப்பட்டிருந்த இடத்தில், பீடம் ஒன்று சுண்ணக் கலவை மற்றும் மூலிகைச் சாறுகளால் ஆன குழம்பி மூலம் ஆற்றுமணலின் சேர்கையோடு கற்கள்கொண்டு உருவாக்கப்பட்டு, அதன் மையத்தில் ஓர் அடி அளவு குழியும் கொண்டிருந்தது.

வேலும் தண்டமும், தன்னிச்சையாய் வந்திருந்த மயிலும் சேவலும் அரவமும் வழிவிட்டிருந்தன. அடிவாரம் தொட்டு மேலேறி வந்திட வழித்தடம் ஒன்றும், பாம்புடல் வளைவு போல உருவாக்கப்பட்டிருந்தது. போகர் கொட்டாரம் முழுக்க ஒரே பரபரப்பு.

தானொரு கறுப்பி என்கிற தாழ்மனக்காரி, தகதகச் செழிப்பில் வண்ணமிக்கவளாகி மாக்கோலம் போட்டுக்கொண்டிருந்தாள். கொட்டாரத்திலும் கொண்டாட்டப் போக்கு. போகர் அனைத்தையும் கண்டு நடந்தார்.

அஞ்சுகனும் சங்கனும் குல்லிகம், சிவனார் பாகல், பிண்டரோபணம் என்று போகர் குறிப்பிட்டுக் கூறிய சகல மூலிகைகளுடனும் தயாராய் இருந்தனர். அவர்களோடு மலைக்காட்டில் வசித்துவரும் கூட்டத்தவனான தொந்தனும் தோதனும்கூட இருந்தனர். போகர் அவர்கள் இருவரைப் பார்க்கவும் விழி விரிந்தார். “வேலாமூப்பர் வரவில்லையா?” எனக் கேட்டார். ``வந்துவிடுவதாகச் சொன்னார். சாமிக்கான அபிஷேகத்துக்கான தேனைத் திரட்டிக் கொண்டிருக்கிறார்’’ என்றான் தொந்தன்.

“நீங்களும் உங்கள் மக்களும் சேவற்கொடி பிடித்து மலைமீது திரியுங்கள். அவ்வப்போது அரமுழுக்கமிடுங்கள்’’ என்றார் போகர்.

“குரவைக்கூத்து, வேலன் வெறியாடல், குன்றக்குரவை என்று வெறியாடு களத்தில் நிகழ்வுகள் தொடங்கட்டும்’’ என்று மலை மக்களையும், பெண்களையும் பார்த்துச் சொன்னார். ஆவினன் குடி முழுக்கவும் செய்தி பரவி, ஜனத்திரள் பொதினிக்குன்றைச் சுற்றிச் சுழத் தொடங்கியது. உத்திரப் பெருநாளும் வந்தது!

இன்று திவ்யப்ரகாஷ்ஜியின் உடல் அதிர்ந்ததோடு, திரும்பி, கடந்துசென்ற காரையும் பார்த்தார். தீட்சிதரும் பானுவும் சென்ற காரின் பின்புறமும் கார் எண்ணும் பளிச்செனப் பார்வையில் பட்டன. அது ஒரு இனோவா வெண்ணிறக் கார். மீண்டும் பார்வையைத் திருப்பியவரை ஜெயராமனும் விடவில்லை.

“என்ன சார்… ஷாக் ஆன மாதிரி தெரிஞ்சதே?”

“ஆமாம் மிஸ்டர் ஜெயராமன். அந்தப் பெட்டி நினைப்பாவே இருந்த எனக்கு அந்தக் காரோட பாசிங் ஒரு ஷாக்தான். எனக்கு ரிலேட்டடா ஏதாவது அதுல இருக்கோ என்னவோ?”

“அப்படி இருந்தா உங்களுக்கு ஷாக் அடிச்ச மாதிரி இருக்குமா?”

“ஆமாம்… ரொம்ப சென்சிட்டிவான பாடி என்னோட பாடி. என்ன ஆனாலும் எங்கே இருந்தாலும் காலையில மூணு மணியிலிருந்து நாலு மணிவரை பிராணாயாமம், யோகாசனம், சிரசாசனம்னு தயாராயிடுவேன். அப்புறமா மனோ நாசப் பயிற்சி”

“அப்படின்னா?”

“எந்த எண்ணங்களும் இல்லாதபடி மனதைச் சுத்தப்படுத்தி, காலியான ஒரு பெட்டி மாதிரி வெச்சுக்கறதுக்குப் பேர்தான் மனோ நாசம்.”

இறையுதிர் காடு - 69

“அதனால என்ன பயன்?”

“மனோசக்தி அதிகரிக்கும். உடல் வலிமையைப் போல நூறு மடங்கு அதிகமானது மனோசக்தி. அந்த சக்திதான் நான் குழம்பாம தெளிவா செயல்படவே காரணம். ஒரு உச்சபட்ச மனோசக்தி படைச்சவரால, ஓர் இரும்புக் கம்பியைப் பார்வையாலேயே வளைக்கமுடியும்.”

“ஃபாரீன்ல சில மேஜிக் ஷோக்கள் பார்த்திருக்கேன். அது ஏதோ ட்ரிக்குன்னுதான் நினைச்சிருந்தேன்.’’

“புரியாததை ட்ரிக்குன்னு சொல்றது எப்பவும் நம்ம வழக்கம். ஒண்ணுமட்டும் உறுதி… அந்தக் காருக்குள்ள ஏதோ இருக்கு?”

“ஒருவேளை அது அந்த டெல்லி ஜோசியர் காரா இருக்குமோ? ஏன்னா, அவர்தானே எம்.பி சார்பில் பெட்டிக்காக அலையா அலையறவர்...”

“இருக்கலாம்… நம்ம நோக்கம் இப்போ அந்த ஜமீன் குடும்பத்துக்கு உதவி செய்யறதுதானே?”

“ஆமாம்… அவங்களுக்கு உதவிசெய்யற சாக்குல போகர் சித்தரைப் பார்க்கறதுதான் என் நோக்கம்...”

“பரவாயில்ல ஜெயராமன். நீங்க நம்பத் தொடங்கிட்டீங்க. அரவிந்தனும் ஓ.கே. ஆனா, பாரதிதான் நடக்கிற எல்லாத்தையும் தப்பாவே நினைக்கறா...”

“சொல்லப்போனா அந்தச் சந்தேக புத்தியை... ஸாரி, அவளோட எச்சரிக்கை உணர்வையும் நேர்மையையும் பார்த்துதான் நான் வேலைக்கு எடுத்தேன். ஓர் ஊழல் வி.ஐ.பி பேர்வழி, கேள்வி பதில் பகுதியில் தன்னைப் பற்றிக் கொஞ்சம் பாசிட்டிவா எழுதச்சொல்லி பாரதிக்குத் தூண்டில் போட்டுக்கிட்டே இருந்தார். பாசிட்டிவா எழுதச்சொன்ன விஷயமும் உண்மையானதுதான். அந்த நபர் ஒரு ஆதரவற்றோர் இல்லத்துக்குப் பத்து லட்சம் டொனேஷன் கொடுத்திருக்கார். அதைவெச்சு அவரை தயாளனா காட்டச் சொன்னார். அவரை தயாளன்னு சொல்ல இடமிருந்தது. ஆனா, பாரதி மறுத்துட்டா. அவள் மறுக்கவும், அவள் பிறந்தநாளைப் பயன்படுத்தி, தங்கச்சங்கிலியைப் பரிசா கொடுத்தார் அவர். அதை மறுத்ததோடு, என் மனசு உங்களை நல்லவரா நினைக்கல. அதனால நான் எழுதமாட்டேன்னு அவர் முகத்துக்கு நேரா சொல்லிட்டா. மத்தவங்களா இருந்தா நிச்சயம் வளைஞ்சுகொடுத்திருப்பாங்க...”

“கேட்கவே சந்தோஷமா இருக்கு. இந்த வயசுக்கு இது அசாத்தியமான அறம். பாரதி கடவுளை நம்பத் தேவையே இல்லை. அவளுடைய அறம் கடவுளா அவள் வரையிலிருந்து அவளுக்குத் துணை நிற்கும்.”

ஜெயராமனும் திவ்யப்ரகாஷ்ஜியும் பேசியபடியே குற்றாலத்துக்குள் நுழைந்தனர். முன்னதாக, அரவிந்தன் பாரதியின் காரும் ஜெயராமனின் ஏற்பாட்டில், சாந்தப்ரகாஷும் சாருவும் தங்கியிருந்த ரிசாட் கெஸ்ட் ஹவுஸின் இன்னொரு கட்டடத்தின் முன்நின்றது. பாரதி இறுக்கமாய் இருந்தாள். தூக்கக் கலக்கம் வேறு… பின்னாலேயே அவர்கள் காரும் வந்துநின்றது. இறங்கினார்கள். அரவிந்தன் அடக்க முடியாதபடி கோணல் மூக்கோடு கொட்டாவி விட்டான்.

கைக்கடிகாரத்தைப் பார்த்தனர். மணி எட்டரை.

“அரவிந்தன், பாரதி, உங்க ரெண்டு பேருக்கும் ஒரு ரூம், எங்களுக்கு ஒரு ரூம். அதிகபட்சம் ஒரு மணி நேரத்துல நாம ரெடியாகிறோம். அதுக்குப் பிறகு அந்த சாந்தப்ரகாஷ் சாரைப் போய்ப் பார்க்கிறோம். திவ்யஜியோட கசின்கறதால ஒரு எமோஷனலான சந்திப்பாதான் அது இருக்கும். பிறகு அவங்களோட சேர்ந்து அந்தச் சித்தன் பொட்டலுக்குப் போறதுதான் நம்ம பிளான். ஓகே?”

- ஜெயராமன் பிசிறின்றிச் சொல்லிமுடித்தார். காத்திருந்த கெஸ்ட் ஹாவுஸ் ரூம் பாய்ஸ் தேடிவந்து லக்கேஜுகளை எடுத்துச் சென்றனர்.

பாரதி வாயே திறக்கவில்லை. அறைக்குள் நுழைந்து அழகான சோபாவில் விழுந்தவளாகத் தன் கைப்பேசியில் வாட்ஸப்பைத் திறக்கலானாள்.

“பாரதி...”

“…..”

“பாரதி உன்னைத்தான்!”

“காது கேட்குது அரவிந்தன், சொல்லுங்க.”

“இப்படி இறுக்கமா இருந்தா என்ன அர்த்தம்?”

“எனக்கு இங்கே நடக்கிற எதுவும் பிடிக்கலைன்னு அர்த்தம்.”

“இது ஒரு ரேர் ஆப்பர்ச்சூனிட்டி. கிட்டத்தட்ட ஒரு மாசமா எவ்வளவு எக்ஸ்பீரியன்ஸ், யோசிச்சுப் பார்?! இப்போ அதோட உச்சக்கட்டத்துல இருக்கோம்.’’

“அஃப்கோர்ஸ்... கொஞ்சம் வித்தியாசமான அனுபவம்தான். ஆனா, எனக்கென்னவோ ஒரு ஐந்நூறு வருஷம் பின்னாடி போய்ட்ட மாதிரியே இருக்கு.’’

“அது உன் பாய்ன்ட் ஆஃப் வியூவைப் பொறுத்தது. எனக்கோ, எடிட்டர் சாருக்கோ நிச்சயமா அப்படியில்லை. நம்ம நாடு, அப்புறம் இந்தச் சித்தா தியரி இதெல்லாம் நிச்சயம் பொய்யோ ஏமாற்றோ இல்லை பாரதி.”

“சரி, இங்கே நம்ம அசைன்மென்ட் என்ன?”

“அவங்க அந்தப் பெட்டியை ஒப்படைக்க வந்திருக்காங்க. நாம அவங்களுக்கு உதவப்போறோம். அப்போ சித்தர்களைச் சந்திக்கப்போறோம்.”

“சந்திச்சு..?”

“என்ன சந்திச்சுன்னு சாதாரணமாக் கேட்டுட்டே? இப்போ நம்மகிட்ட அந்த ஏடுகளோட போட்டோ காப்பி இருக்கு. அவ்வளவும் அசாதாரணமான விஷயங்கள். நான் அதுல சில பக்கங்களைப் படிச்சுப் பார்த்தேன். ஒண்ணுமே புரியல. அது புரியணும்னா, சித்தர்கள் நமக்கு உதவணும்.”

“இதெல்லாம் நடக்கும்னு நீங்க நம்பறீங்களா?”

“நம்பாமலா இவ்வளவு தூரம் வந்திருக்கோம்?”

“அரவிந்தன் முதல்ல நீங்க பெட்டியைத் திறந்ததே தப்பு. அதை விலைக்கு வாங்கிட்டதால அது தப்பு இல்லேன்னாலும், உள்ளே இருந்ததை எல்லாம் போட்டோ எடுத்ததும் நேர்மையில்லாத காரியம்தான்.

நான் அதை அழகான ஒரு காலிப் பெட்டியா கலைப் பொருளா நினைச்சுதான் வாங்கினேன். உள்ளே இருந்த லிங்கமோ ஏடுகளோ எனக்குச் சம்பந்தமில்லாத குப்பைகளே. அதனாலதான் அதைத் திரும்பக் கேட்டு வந்தப்போ திருப்பிக் கொடுத்துட்டேன்.

அஃப்கோர்ஸ்... அந்தப் பெட்டியைச் சுத்திவந்த அந்தப் பாம்பு எனக்கு இந்த நிமிஷம்வரை ஒரு புரியாத புதிர்தான். அந்த ரசமணிகூட ஆச்சர்யம்தான். அதுக்காக, அந்தப் பெட்டியையும் அதுக்குள்ளே இருக்கற விஷயங்களையும் ஆ ஊன்னு நினைக்க நான் தயாரில்லே.

என் வரையில அதெல்லாமே அறிவால நேரா புரிஞ்சுக்க முடியாத விஷயங்கள். அப்படிப்பட்ட விஷயங்களை நானும் புரிஞ்சுக்கத் தயாரா இல்லை. இங்கே நாம புரிஞ்சுக்க வேண்டிய லாஜிக்கான விஷயங்கள் நிறைய இருக்கு.

குடிக்கிறது தப்புன்னு தெரிஞ்சும் குடிக்கற கூட்டம், அந்தத் தப்பையே தொழிலா செய்யற அரசாங்கம், உலகுக்கே பொதுவான தண்ணீர் தனக்குத்தான் சொந்தம்னு சொல்ற சுயநலம், அறிவுக்கண் திறக்கிற படிப்பைக் கோடிகளில் விற்கிற கொடுமையான கல்லூரிகள், குழந்தைகளுக்கான பால் பவுடரில்கூடக் கலப்படம் செய்யற கொடூரம், கற்பனையா பொய்யா ஆடிப்பாடி சண்டை போட்டுக் கோடிகளில் சம்பாதிக்கிற ஹீரோ கூட்டம், அந்த ஹீரோக்களைக் கடவுளா நினைச்சுப் பாலபிஷேகம் செய்யற இளைஞர் கூட்டம்னு நாம் கவனிக்கவும் சிந்திக்கவும் சரிசெய்யவும் நூறு விஷயங்கள் நம்மைச் சுற்றி இருக்கும்போது, இந்த மாதிரி புதிர்கள் பின்னால போறது எந்த வகையில சரி?”

- பாரதியின் கேள்விக்கு உடனடியாக ஒரு பதிலை அரவிந்தனால் கூறமுடியவில்லை. ஆனால்...

“உன் கேள்விக்கு நான் பதில் சொல்றேன் பாரதி...” என்றபடி வந்தார் திவ்யப்ரகாஷ்ஜி. அவரை அப்போது பாரதியும் எதிர்பார்க்கவில்லை.

“உன் அவ்வளவு கேள்வியும் சரியானது. அதுல எனக்கு மாற்றுக்கருத்தே இல்லை. அதேசமயம் புதிரான விஷயம், புரிஞ்சுக்கக் கஷ்டமான விஷயம்கறதால சித்த விஷயங்களை ஒதுக்கித் தள்ளுறதும் சரியில்லை. இது ரொம்பப் புராதனமான தேசம். பூகோள ரீதியாகவும் அசாதாரணமான தேசம். இந்த உலகத்துல எவ்வளவோ கண்டங்கள், நாடுகள், நகரங்கள். ஆனா, நம்ம தேசம் போல எல்லா மொழி, எல்லா இனம், எல்லா மத மக்களாலும் ஆளப்பட்ட தேசம் எங்கேயும் கிடையாது. ரொம்பச் சின்ன நிலப்பரப்புதான். ஆனா எல்லாரும் ஏன் ஆள விரும்பினாங்க?

காரணம், தேசத்தோட பூகோள அமைப்பு மட்டுமல்ல, இங்கே கிடைக்கற மாதிரி மூலிகைகளும் தாவரங்களும் வேற எங்கேயும் கிடைக்கறதில்லை. காரணம், சம அளவு இரவு பகல். மூணு பக்கம் கடல். அதன் காரணமான காற்றோட்டமும் மழையும். ஆறு பருவ காலம் சமமாகப் பங்கிடப்பட்டிருக்கிறதும் இங்கேதான். ஆறுகளை வெறும் நீர்க்கூட்டமா பார்க்கிற மற்றவர்கள் நடுவுல, அவற்றை வணக்கத்துக்குரிய தேவதையா பார்க்கிற நம்ம கலாசாரம். இதன் தொன்மை - வரலாறு வேற யாருக்கும் இல்லை.

இதுல சித்தர்கள் தங்களுக்குள்ளே தங்களைக் கண்டறிஞ்சு எது வாழ்கைங்கறத்துக்கு இலக்கணம் வகுத்தவங்க. இன்றைய விஞ்ஞானம் ரொம்பப் பாராட்டுக்குரியதுதான். அதைவிடப் பலமடங்கு பாராட்டுக்குரிய ஒரு வாழ்கையை இங்கே ஒரு தமிழன் வாழ்ந்திருக்கான். 2000 வருஷத்துக்கு முந்தியே இரண்டு வரிகளில் ஒரு ஏழைப் புலவன் மனித வாழ்வின் எல்லாச் சிக்கல்கள், கேள்விகளுக்கும் திருக்குறளில் அசைக்க முடியாதபடி தீர்வு சொல்லியிருக்கான்னா, இது எவ்வளவு பெரிய சமுதாயமா இருந்திருக்கணும், யோசிச்சியா?’’

- திவ்யப்ரகாஷ்ஜி மூச்சுவிடாமல் பேசி யோசிச்சியா என்று கேட்டு முடிக்கவும், பாரதி பதிலுக்கு, ``ஜி… தயவுசெய்து உங்க உபன்யாசத்தை நிறுத்துங்க. எனக்கு இவ்வளவு விளக்கமெல்லாம் தேவையே இல்லை. ஆனாலும், இந்தச் சிறப்பைவிட இந்தத் தேசத்தோட அழுக்கும் ஊழலும், மூடத்தனங்களும்தான் எனக்கு முதல்ல நினைவுக்கு வருது. என்ன, உங்களால மாற்றமுடியாது. ஞாபகம் வெச்சுக்குங்க...”

- பாரதியின் பதில் ஜெயராமனையும் இழுத்துவந்து பேசச் செய்துவிட்டது.

“பாரதி… நாங்க இந்த அனுபவங்களை எப்படி வேணா பார்த்துட்டுப்போறோம். நீ நீயா இருந்து பார். பெட்டி விஷயம் என்வரையில ஓர் அதிசயம். அப்படியெல்லாம் இல்லேன்னு நிரூபி. இனி விவாதத்துக்கு இடமில்லை. புறப்படு!”

- அவர் பேச்சு பலனளித்தது, அடுத்த அரை மணியில் குளித்து, சுடிதாரில் தயாராகி, தலைமுடியை அள்ளிக்கட்டிக்கொண்டு புறப்பட்டுவிட்டாள் பாரதி.

சாந்தப்ரகாஷும் சாருவும் தங்கியிருந்த கெஸ்ட் ஹவுஸ் முன்னால் போய் நின்றனர்.

“அவங்க அங்கே இருக்கிறது உறுதியா தெரியுமா?’’ என்று பாரதியும் கேட்டாள்.

இறையுதிர் காடு - 69

“பிரம்மாண்ட ராஜ உடையார் டைரிக் குறிப்புப்படி குற்றலாம்தான் களம். அவரே இங்கே வந்து புலியருவி பக்கமாகப் போய் சில மலைமக்கள் உதவியயோடுதான் சித்தன் பெட்டலுக்குப் போயிருக்கார். ஆகையால், இந்த ஊர்தான் அவங்க வந்திருந்த ஊர். தென்காசிக்கு அப்புறம் இங்கே இருக்கிற லாட்ஜ்களில் அவங்க பேர்ல ரூம் புக் ஆகலை. இந்த கெஸ்ட் ஹவுஸ்ல ஆகியிருக்கு. அதனாலதான் அங்கே இங்கே சுத்தாம நேரா வந்திருக்கோம்’’ என்று, பாரதி மேற்கொண்டு பேச இடமின்றிச் சொல்லிமுடித்தான் அரவிந்தன்.

“என் கசின் பிரதருக்கு என்னைப் பார்க்க ஷாக்கா இருக்கும். இருந்தாலும் பரவாயில்லை… கமான்’’ - உள்ளே அவர்கள் புக முனைந்தபோது, எதிரில் சாவிக்கொத்தோடு வந்த ஒருவன், `யார் நீங்க?’ என்பதுபோலப் பார்த்தான்.

“இங்கே சாந்தப்ராகாஷ்னு ஒருத்தர் தங்கியிருக்காருல்ல...”

“அவர் காலைல எட்டு மணிக்கெல்லாம் காலி பண்ணிட்டுப் போய்ட்டாரே?”

“அப்படியா!”

“ஆமா… செக் அவுட் பண்ணிட்டே போய்ட்டாங்க.’’

“எங்கே போனாங்கன்னு தெரியுமா?”

“அவங்க வர்ற சித்ரா பௌர்ணமிக்கு வன யாத்ரை பண்ண வந்திருக்காங்க. அவங்களை சடையன்கற ஆட்டுக்காரன்தான் மேலே கூட்டிக்கிட்டுப் போயிருக்கான்.”

“சித்ரா பெளர்ணமிக்கு நாள் இருக்கே... அவங்க மேல போய் எங்கே தங்குவாங்க?”

“இங்கே ஒரு கூட்டம் இப்படி வர்றவங்களை மொட்டையடிக்கத் திரியறாங்க. சடையனும் அவங்களில் ஒருத்தன்தான். மலைமேல கூடாரம் போட்டுத் தங்கலாம். மான் வேட்டையாடலாம். தேன் பிழியலாம்னு கண்டதைச் சொல்லி ஆசைகாட்டிக் கூட்டிட்டுப் போயிடறாங்க!”

“நாங்க போனா பார்க்கமுடியுமா?”

“ஏன் முடியாம …. துணைக்கு ஆள் அனுப்பவா?”

“தாராளமா... எங்களுக்கும் ரொம்ப உதவியா இருக்கும்.”

“நம்ம பய ஒருத்தனை அனுப்பறேன். ஒருநாள் சம்பளம் ஐந்நூறு ரூவா கொடுத்துடணும்.”

“அதுக்கென்ன, கொடுத்துட்டாப்போச்சு” என்றதும் அந்த மனிதன், ஒரு காக்கி டிராயரும் சட்டையும் அணிந்த செம்பூரான் என்பவனை அனுப்பிவிட்டு, சற்று ஒதுங்கி போனில் யாருடனோ பேசலானான்.

“அய்யா... நீங்க சொன்ன மாதிரியே நாலு பேர் வந்தாங்க… அவங்களை நான் திசை மாத்தி அனுப்பிட்டேங்க’’ என்றான்.

- தொடரும்