
அன்று புலிப்பாணி குழப்பத்தோடு கருவூராரைப் பார்த்தான். ஒரு மனிதனின் பருவுடலைத்தான் நாம் எல்லோருமே பார்த்திருக்கிறோம். இது ஒளியுடல்!
இது எப்படிச் சாத்யம்?
அவன் புருவ வளைவில் அதற்கான கேள்வி தொக்கி நின்றது.
“என்ன புலி... என் உடற்கூறு உனக்கு அதிசயமாகத் தெரிகிறதா? குழம்பத் தொடங்கி விட்டாயா?” - கருவூராரும் தூண்டத்தொடங்கினார்.
“ஆம் பெருமானே! நான் உயிருள்ள உடலைக் கண்டிருக்கிறேன். உயிரில்லாத உடலைக் கண்டிருக்கிறேன், ஒளியின் எதிர்விளைவான நிழல் உடம்பையும் கண்டிருக்கிறேன். வரையப்பட்ட ஓவிய உடம்பையும் கண்டிருக்கிறேன். ஆனால், ஒளியுடம்பு என் வரையில் நான் காணாத ஒரு அதிசயமே...”
“போகர் பெருமான் இன்னமும் ஜீவ சமாதி குறித்துச் சிந்திக்கவேயில்லை. அநேகமாக முருகப்பெருமானுக்குக் கோயில் கண்டபின் தன் பிறவி நோக்கம் முடிந்ததாகக் கருதி அவர் என்னைப்போல இந்தத் தூய உடல் துறந்து ஒளியுடம்பெடுக்கலாம். அதனால்தான் எனது ஒளியுடல் உனக்கு ஆச்சர்யப் பொருளாகிவிட்டது.”

“ஆம்... அதுவே உண்மை! இது எப்படிச் சாத்யம் என்று கூறுவீர்களா?”
“இதுகுறித்த உண்மைகளை உன் நேயகுருவான போகர் பிரானே உனக்குக் கூறுவார். கூறக்கூடத் தேவையில்லை, அவர் உன் புருவ மையமான லலாட பாகத்தைப் பார்த்தாலே போதும் அந்த நேத்ர தீட்சையே உனக்கு அளிக்க வேண்டிய சகலத்தையும் அளித்துவிடும்.”
“புருவ மையம் அவ்வளவு சிறப்பிற்குரியதா?”
“ஆம்... ஏழு சக்கரங்களில் சகஸ்ராரம் என்னும் கபால சக்கரம் புருவ மையத்தின் பின்தான் வட்டமாய்ச் சுழல்கிறது. இதற்கு ஈர்ப்பு சக்தி அதிகம். அதனால்தான் நாம் இரு கண்களால் ஒன்றைப் பார்க்கும்போது மிக வேகமாக அதை அறிந்து மகிழ்வோ அதிர்வோ, இல்லை, அது குறித்த தெளிவோ கொள்கிறோம்.
இந்த ஈர்ப்பு சக்திதான் பார்ப்பதை மட்டுமல்ல, தன்னை ஒருவர் பார்க்கும்போதும் அதே வேகத்தில் செயல்பட்டு அவர் பார்வை விசையையும் தனக்குள் இழுத்துக்கொண்டு விடுகிறது. இதைத்தான் திருஷ்டி என்கிறோம். சராசரி மனிதனின் பார்வை திருஷ்டியை உண்டாக்கினால், போகர் போன்ற சித்தன் பார்வை ஞானத்தை உண்டாக்கும். இதுதான் சராசரி மனிதனுக்கும் சித்தனுக்குமான வேற்றுமை. சித்தனோ யோகியோ, இல்லை, ஒரு அருளாளனோ ஒருவருக்குப் பேசித்தான் ஒரு புரிதலைத் தர வேண்டும் என்று இல்லை. உற்று நோக்கினாலே போதும், உள்ளே ஏறிவிடும், அவர்கள் நமக்குச் சொல்ல நினைத்த விஷயம்!”
“இந்தப் புருவ மையத்திற்கு அப்படி ஒரு சக்தியா?”
“புருவ மையம் என்று ஏன் தனியாக அதைப் பார்க்கிறாய். இந்த உடம்பே ஒரு பெரும் சக்திக் கோட்டையப்பா. சிருஷ்டியின் உச்சமும் உன்னதமும் இந்த உடம்புதான்! முதலில் உன் உடம்பைப் புரிந்துகொள்.
இத்தனைக்கும் ஒரு சிறுதுளியான திரவ மூலம்தான் நாம். அந்த மூலத்துக்குள்தான் இந்த ஆறடி உயர சரீரம் எலும்பு, நரம்பு, சதை, ரத்தம், எச்சில், மல மூத்திரம், கேசம், மதோன்மத்தம், நகம் என்று நவாம்சம் கொண்டிருக்கிறது. இந்த நவாம்சத்தையே நவ கோள்களும் தொடர்புகொண்டு நம்மை இயக்குகின்றன.
ஒரு பொம்மலாட்டக்காரன் கயிறுகளால் ஒரு பொம்மையை ஆட்டுவிப்பதுபோல் நாமும் ஆட்டு விக்கப்படுகிறோம். `இந்த ஒன்பது கோள்களா நம்மை ஆட்டுவிப்பது, நமக்கு சுயமான சக்தி கிடையாதா?’ என்ற கேள்வி கேட்டவனே சித்தனாகிறான். இந்த உடம்பு உள்ளவரை இந்த ஒன்பது பேரை வெற்றி கொள்வது மிகக் கடினம். இந்த ஒன்பதுபேர் செயலற்றுப்போக ஒரே வழி நாமும் செயலற்றுப்போவதுதான். அதாவது, அமர்ந்த இடத்தை விட்டு அசையாத தவம்...
இந்த தவத்தில்தான் மனம் ஒடுங்கும். அதற்கு முன் உடம்பை அடக்க வேண்டியது அவசியம். உடம்பு அடங்க உணவுப் பழக்கவழக்கமும் முக்கியம். சத்வமான உணவு, பின் பிராணாயாமம் என்னும் காற்றுப் பயிற்சி - அதைத் தொடர்ந்து பல யோக முறைகள். இறுதியாகக் குண்டலினி யோகம்!
இந்தப் பயிற்சியில்தான் மூலாதாரத்தில் விழுந்து கிடக்கும் குண்டலினி சக்தி மெல்ல மேலெழும்பி பாம்பானது நிமிர்ந்து எழுந்து நின்று படம் விரிப்பதைப்போல் உச்சந்தலையான சகஸ்ராரத்தில் வந்து விரிந்து நிலைகொள்ளும். அப்போது நாம் இருந்தும் இல்லாதவர்கள் ஆவோம். அந்த நிலையில் உருவாகும் இன்பம்தான் கலப்பில்லாத பேரின்பம். இந்த இன்பம் குறித்து உங்களைப் போன்றவர்களுக்கு ஒரு புரிதலுக்காகச் சொல்லலாம் என்றால், ரம்பை ஊர்வசி போன்ற நூறு கன்னியரைப் புணர்ந்தால் கிட்டும் சுகத்தைவிட இது மேலான சுகமாய் இருக்கும். நம் உடம்புக்குள் இதுபோல் புரிந்துகொள்ளவும் தெரிந்துகொள்ளவும் அநேக விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், பெரும்பாலான மாந்தர்கள் வெந்ததைத் தின்றுவிட்டு வேளை வரவும் இறந்துபோகின்ற சராசரி மனிதர்களாகவே உள்ளனர். நான் சித்தனாகி இந்த உடம்பை அடக்கி இதை ஜீவசமாதியில் கட்டிப்போட்டு, கோள்களின் பிடிக்கு அகப்படாத ஒளியுடம்பை அடைந்துவிட்டேன்.”
கருவூரார் உடம்பைத் தொட்டு குண்டலினி யோகம் வரை சென்று விட்டார்.
“பெருமானே! இதே கருத்தை என் குருவான போகர் பிரானும் பலமுறை கூறியுள்ளார். ஆயினும் தாங்கள் கூறிய விதம் எளிதில் புரியக்கூடியதாய் இருந்தது.
என்னைவிட கருமார்கள் இவர்களுக்கே உங்களிடம் கேள்விகள் ஏராளமாய் உள்ளது” என்று புலிப்பாணி அவர்கள் பக்கம் அவரைத் திருப்பி விட்டான். அவர்களும் கருவூரார் முன் கைகூப்பிய நிலையில் கனிவாய்ப் பார்த்தனர்.

“உங்களுக்கு எதில் ஐயப்பாடு?”
“நிறையவே உள்ளது குருமாரே... குறிப்பாக நாங்கள் நிறைய தெய்வச் சிலைகளை வார்க்கிறோம். அதற்காக எவ்வளவோ பாடுபட வேண்டியுள்ளது. உலோகத்தை உருக்கி வார்த்திடும் சமயம் அதன் குழம்பு மேலே பட்டால் அவ்வளவுதான். இவ்வளவு சிரமப்பட்டுச் சிலை செய்யும் எங்களுக்குக் கிடைக்காத அருள் அந்தச் சிலையைக் கோயிலில் வைத்து வணங்கும்போது பக்தர்களுக்கு மட்டும் எப்படிக் கிடைக்கின்றது?”
“இக்கேள்விக்கு உங்கள் முன்னோர்கள் யாரும் பதில் சொன்னதில்லையா?”
“பக்தியோடு வழிபட்டால் கடவுள் அருள் கிடைக்கும் என்பதைக் கடந்து அவர்கள் பெரிதாக எதையும் சொன்னதில்லை.”
“அப்படியானால் நான் இப்போது சொல்வதை நன்றாகக் கேட்டுக்கொள்ளுங்கள். மனிதனின் பார்வைக்குப் பெரிதும் சக்தி உண்டு. அந்த சக்தி கண்களுக்குப் புலனாகாத அலைகளாகச் சென்று பார்க்கின்ற ஒரு விஷயத்தை அடையும். அப்படி அடையும்போது அது அடையும் பொருளை வைத்தோ, உயிரை வைத்தோ ஒரு தாக்கம் உருவாகும். உதாரணமாக ஒரு பூவைப் பார்க்கையில் அழகியல் உணர்வு தோன்றி மனது மகிழும்.
ஒரு முள்ளைப் பார்க்கும்போது எச்சரிக்கை உணர்வு தோன்றி மனம் விழித்திடும்.
இப்படி நாம் பார்ப்பதில் ‘நம்பிக்கை வைத்து நாம் பார்ப்பவை, பொதுவாகப் பார்ப்பவை, வெறுப்போடு பார்ப்பவை, விருப்புவெறுப்பு இன்றிப் பார்ப்பவை என்று பல வகைகள் உண்டு. பொதுவாகப் பார்க்கும்போதும் விருப்புவெறுப்பு இன்றிப் பார்க்கும்போதும் பெரிதாகத் தாக்கம் ஏற்படாது.
நம்பிக்கை வைத்துப் பார்ப்பது எனும் போதும், வெறுப்போடு பார்க்கும்போதும் நம் எண்ண அலைவரிசைகளில் தாக்கம் உருவாகும் இந்தத் தாக்கம் இரண்டு விதம் - ஒன்று நேர்மறையானது. இன்னொன்று எதிர் மறையானது. இரண்டுக்குமே மிக மிக சக்தி உண்டு. கடவுள் சிலைகளை நம்பிக்கை வைத்து பக்தியோடு நாம் பார்ப்பதால் உருவாகிடும் நேர்மறையான அலைகள் கோயில் விக்கிரகம் மேல் பட்டு, திரும்ப நம்மிடமே வந்திடும். அவ்வேளை அங்கே தீபம் காட்டப்பட்டால் தீப ஒளியால் அது பன்மடங்கு பெரிதாகும்.
எனவே, கண்களை மூடாமல் தரிசனம் புரிய வேண்டும். நாம் மட்டுமல்ல, கோடானு கோடிப் பேர் நம்பிக்கையோடு மட்டுமே கடவுள் சிலைகளைப் பார்ப்பதால் சிலைகள் சக்தி கேந்திரம் ஆகின்றன. அங்கு சக்தியும் சேகரிக்கப்பட்டுப் பெரும் சக்தி உருவாகிறது. அப்படி உருவாகும் சக்தி, சிலையின் பீடத்தின் கீழ் பதிக்கப்படும் மூலிகை மருந்துகளாலும், நவரத்னக் கற்கள் மற்றும் சிலைக்குரிய தெய்வத்தின் எந்திரத் தகடு பதிக்கப்படுவதால் அந்தத் தகடுகளாலும் பன்மடங்கு அதிகமாகி, அந்தப் பகுதி எங்கும் நம் மனோ சப்த அளவிலான ஒரு அலை வடிவில் நிலவியபடியே இருக்கும்.
பனைமரம் பெரியது - அதன்கீழ் தரைமேல் வளர்ந்துள்ள ஒரு புல்லானது மிக மிகச் சிறியது. இது வடிவிற்கு மட்டுமே பொருந்தும்; கருத்துக்குப் பொருந்தாது. பனைக்கு அதன் குணம் - புல்லுக்கு அதேபோல் வேறு குணம்.
அப்படியே கோபுரக் கலசங்களின் கூரிய முனை வழியாக ஈர்க்கப்படும் பிரபஞ்ச அலைகள் கர்பகிரகத்தில் உள்ள கடவுள் சிலை மேலான ஒரு நூலளவு துவாரம் வழியாக ஈர்க்கப்பட்டு ஒன்றுடன் ஒன்று கலந்து கர்பகிரகமானது ஒரு காந்த மண்டலம்போல் விளங்கும். அந்த கர்பகிரகத்தில் ஆகமப்படி பூஜைகள் தொடர்ந்து நடக்க நடக்க அந்த அருள் காந்த மண்டலம் தூண்டப்பட்டுப் பெருகிய படியே இருக்கும். ஒரு பாத்திரத்தில் நீர் மிகும் போது அது வழிந்தோடுவதுபோல, பெருகிடும் அருட்கதிர்களும் வழிந்தோடும். அதை, கோயிலுக்கு வருவோர் தங்கள் பக்தி பாவனையால் தங்கள் மனோசக்திக்கு ஏற்ப பெற்றுக்கொள்வர். இதனால் உடல், மனம் இரண்டிலும் ஒரு இதமான உணர்வு உருவாகி அதையே அருள் என்றும் இலேசான மனநிலை என்றும், நிம்மதி என்றும் மகிழ்வு என்றும் பலவாறு கூறுகிறோம்.”
- கருவூராரின் நெடிய விளக்கத்தால் ஒரு கிளைக் கேள்வி கருமார்களில் ஒருவனான ஆழி முத்துவிடம் உருவானது. ஆனால் அதைக் கேட்க, தயக்கம் காட்டினான்.
“என்னப்பா... ஏன் தயங்குகிறாய்?”
“நீங்கள் சொன்ன விஷயங்களில் எங்கேயும் கடவுள் வரவே இல்லையே...?”
- தயங்கித் தயங்கி ஆழிமுத்து கேட்கவும் பலமாகச் சிரிக்கத் தொடங்கினார் கருவூரார்.
அது அவனைப் பாராட்டுவதுபோலவும் இருந்தது, கேலி செய்வதுபோலவும் இருந்தது.
“நான் ஏதாவது தவறாகக் கேட்டுவிட்டேனா?”
“சரியான கேள்வியைத்தான் கேட்டுள்ளாய். உன்னையும் என்னையும்போல இந்தச் சதை உடம்போடு கைகால்களை ஆட்டிக்கொண்டு அவன் வரமாட்டான். வரத்தேவையுமில்லை. இந்தப் பிரபஞ்சம் முழுக்கவே அவன் படைப்புதான். புல் பூண்டு முதல், புழுதிக்காற்றிலிருந்து நீ நான் உட்பட எல்லோரும் எல்லாமும் அவன் படைப்பே...
இதில் நதியைப் பிரிந்து வந்த ஒரு சொட்டு நதிநீர்த் துளிபோல் நாம் எனலாம். நாம் நதி நீர்த்துளியாக இருந்த போதிலும் நதியின் ஆற்றல் இந்தத் துளிக்குக் கிடையாது. அந்த ஆற்றல் இந்தத் துளிக்கு, அதாவது நமக்கு வேண்டும் என்றால், அந்த நீர்ச் சொட்டு நதியோடு சென்று சேர வேண்டும். அப்படிச் சேர்ந்துவிட்டால் நாம் துளியல்ல... நாமும் நதி! நதியின் ஆற்றல், கலந்த துளிக்கும் வந்துவிடும்.
அதுபோல அவன் படைப்பான நமக்கு அவனளவு ஆற்றல் கிடையாது. அவனது ஆற்றல் நமக்கும் வேண்டுமானால் நாம் அவனோடு கலந்துவிட வேண்டும். அப்படிக் கலக்கத் தேவை தான் பக்தி. அந்த பக்திதான் தன் புத்தியால் ஆகமங்களை உருவாக்கி, அதைக்கொண்டு கோயிலைக் கட்டி அவனது ஆற்றலை எண்ணி வழிபடச் சொல்கிறது. இந்த வழிபாடும் ஒரு பயிற்சி! அவ்வளவுதான்! அதற்குமேல் அங்கே ஏதுமில்லை...”
- கருவூராரின் பதில் கருமார் இருவருக்கும் ஒரு புரிதலைத் தரவில்லை என்பது அவர்கள் முகம் போன போக்கில் தெரிந்தது.
“என்ன புரியவில்லையா?”
“ஆம் குருமாரே.”
“எந்த சித்தன் பேச்சு முதலில் எல்லோருக்கும் புரிந்திருக்கிறது. என் பேச்சு புரிவதற்கு..? சொல்லப்போனால் உங்கள் கேள்விக்கான பதில் வார்த்தைகளில் இல்லை. நீங்கள் வாழ்ந்து பார்த்து அனுபவத்தால்தான் பூரணமாகத் தெரிந்துகொள்ள முடியும்...”
“அப்படியல்ல... நாம் நம்பிக்கையோடு பார்ப்பதால்தான் சக்தி என்றால், கடவுள் என்று ஒருவன் ஒருவருக்குத் தேவையே இல்லையே? அப்படி இருக்க, அவர் அருள்வதாகச் சொல்வது எப்படி சரியாகும்?” - என்று அதுவரை பேசாமலிருந்த செங்கான் கேட்டான்.
“இது ஆழமாய் சிந்திக்காமல் கேட்கப்படும் கேள்வி.
நாம் நம்பிக்கையோடு பார்ப்பதால்தான் சக்தி உருவாகிறது. அப்படி நம்பிக்கை வைக்க ஒன்று தேவைப்படுகிறதல்லவா? அந்தத் தேவைதான் கடவுள் சிலையாய், கருவறையாய், ஆகமமாய் எல்லாமுமாய் உள்ளது.”
“எப்படிப் பார்த்தாலும், சிலையோ கோயிலோ, இல்லை, கருவறையோ, ஒரு மனிதன் தன் சக்தியால் சாதித்ததுதானே? அதனுள் வெளிப்படும் சக்தி மட்டும் எப்படி கடவுள் சக்தியாகும்?”
- செங்கான் தொடர்ந்து கேட்ட விதத்தில் அவன் இறை நம்பிக்கை இல்லாதவனோ என்று ஒரு எண்ணம் புலிப்பாணிக்குத் தோன்றியது. ஆனால் கருவூரார் அப்படி எண்ணவில்லை.
“அப்பனே... நீ இப்போது தூண்டப்பட்டு விட்டாய்! நான் சொன்னவை எல்லாம் உனக்குள் உன்னைச் சிந்திக்கச் செய்வதைப் பார்க்கிறேன். விரைவில் நீயே ஒரு தெளிவுக்கு வருவாய். வந்துவிட்டால் பேசமாட்டாய். ஏனென்றால், இறை அனுபவம் எனப்படுவது அனுபவித்து உணரப்படுவது...
நன்றாகக் கேட்டுக்கொள்,
‘கண்டவர் விண்டிலர்
விண்டவர் கண்டிலர்.’
சரி... அவ்வளவுதானா கேள்விகள், இல்லை இன்னமும் உள்ளதா?”
“வாஸ்து குறித்துச் சில கேள்விகளைக் கேட்கலாமா?”
“தாராளமாய்க் கேளுங்கள்...”
“ஒரு மனிதன் நல்ல செல்வத்துடனும் ஆரோக்கியத்துடனும் புகழுடனும் வாழ்ந்திட அவன் விதி காரணமா, இல்லை வீடு காரணமா?”
“விதிதானப்பா வீட்டு வடிவில் காரணமாகிறது.”
“ஒருவன் கஷ்டப்படுவதற்கும் வீடுதான் காரணமா?”
“ஆம் இங்கேயும் விதி வீட்டு வடிவில் காரணமாகிறது.”
“என்றால் அரசர்களின் வெற்றி தோல்வி அவர்கள் அரண்மனை சார்ந்ததா?”
“ஆம்... அரண்மனை சார்ந்ததே!”
“ஊருக்கென்றும் வாஸ்து சக்தி உண்டா?”
“நிச்சயம் உண்டு...”

“எப்படி இருந்தால் ஒரு ஊர் மகிழ்வு தரும் ஊராக இருக்கும்?”
“வடக்கில் நதி ஓட வேண்டும், தெற்கில் மலைச்சிகரங்கள் இருக்க வேண்டும், மேற்கில் இடுகாடும், கிழக்கில் கோயிலும் குடிகளும் இருக்க, அதுவும் சச்சதுரமாய் அந்த ஊர் இருக்க, அந்த ஊர் என்றும் பொலிவுடனும் நல்ல மக்கள் வளமுடனும் அவர்கள் மகிழ்வுடன் வாழ்ந்திடும் வாழ்வினைக் கொண்டிருக்கும்.”
“ஆலயங்களுக்கு. வாஸ்து சக்தி உண்டா?”
“நிச்சயம் உண்டு. வாஸ்து சக்தி என்பது பஞ்சபூதங்களால் உருவான ஒன்று. பஞ்சபூதங்கள் உள்ளவரை வாஸ்து சக்தியும் செயல்படும்...”
“அது இறையருளைவிடப் பெரியதா?”
“கேள்வி தவறு... சக்தியில் பெரிய சக்தி, சிறிய சக்தி எல்லாம் கிடையாது. மனிதர்கள் தங்கள் புரிதலுக்காகப் பேசும் பேச்சு அது. பனைமரம் பெரியது - அதன்கீழ் தரைமேல் வளர்ந்துள்ள ஒரு புல்லானது மிக மிகச் சிறியது. இது வடிவிற்கு மட்டுமே பொருந்தும்; கருத்துக்குப் பொருந்தாது. பனைக்கு அதன் குணம் - புல்லுக்கு அதேபோல் வேறு குணம். பெரிது சிறிது அடையாளம் காண மட்டுமே பயன்பட வேண்டும். மற்ற விஷயங்களில் அதைப் பயன்படுத்தினால் தெளிவு ஏற்படாது.”
“பாரதியோட உடைல கறுப்பு நிறத்துல சோளியோ இல்லை துப்பட்டாவோ இருக்குதா?” -இந்தக் கேள்விக்கு மிக வேகமான பதில் ஜெயராமனிடம். “யு ஆர் ரைட்... பாரதியோட துப்பட்டா பிளாக் கலர்லதான் இருக்கு...”
“ஒரு முக்கியமான கேள்வி...”
“என்வரையில் எல்லாக் கேள்விகளுமே முக்கியமானதுதான்...”
“சோழ அரசன்பொருட்டு தாங்கள் ஒரு தங்கச் சிலையைச் செய்ததுபோல, எங்களுக்கென்று ஒரு சிலையைத் தாங்கள் செய்து தரமுடியுமா?”
“அது என்ன பெரிய விஷயம், நீங்கள் முதலில் ஐம்பொன்னிலோ செம்பிலோ சிலை வடித்து முடியுங்கள். பிறகு நான் வந்து அதைத் தங்கமாக்கித் தருகிறேன்.” - கருவூரார் பதில் கருமார்களுக்கு மட்டுமல்ல, புலிப்பாணிக்கும் ஒரு இனிய அதிர்வை அளித்தது!
இன்று உடல் நடுங்க நின்ற பாரதி, ஜெயராமனுக்கும் அரவிந்தனுக்கும் சற்று பயத்தை அளித்தாள். தொலைபேசியிலோ கணேச பாண்டியனிடம் பேச்சின் தொடர்ச்சி...
“பாப்பா... நான் என்னடா இப்படிச் சொல்றேன்னு நினைக்காம கொஞ்சம் உடனே கிளம்பி வாங்கம்மா! எனக்கு இங்க இருக்கவே என்னமோ மாதிரி இருக்கு. திரும்பின பக்கமெல்லாம் ஒரே ஒப்பாரிச் சத்தமா கேட்குது... நிஜமா சொல்றேன், பயமா இருக்கும்மா.”
``சரிங்கண்ணே... இப்பவே வரேன் - நீங்க தைரியமா இருங்க...”
- காற்றுக்குரலில் பதில் சொன்ன பாரதி நிமிர்ந்தாள்.
“என்ன பாரதி... உன் அப்பாவோட உதவியாளரா?”
“ஆமாம் சார்...”
“எனி பேட் நியூஸ்?”
“என் வரைல இது பேட் நியூஸ் இல்ல சார். குட் நியூஸ்! ஆனா அதை நம்பத்தான் என்னால முடியல...”
“முதல்ல அந்த நியூஸைச் சொல்லு...”
“அந்த ரவுடியும் இறந்துட்டானாம் சார்..!”
“யார்... அந்த நார்த் மெட்ராஸ் வேங்கையனா?”
“ஆமாம்...”
“ஓ... அப்ப உனக்கு இனி வேலை மிச்சம். அந்தக் குமாரசாமி பிராப்பர்ட்டியை சேஃபா ஒப்படைச்சுடலாம்னு சொல்.”
“சார், பாண்டியண்ணே கொஞ்சம் உடனே கிளம்பி வரச் சொல்றாரு... போய்க்கிட்டே பேசுவோமா?”
“நான் அவசியம் வரணுமா பாரதி?”
“உங்க விருப்பம் சார். வந்தா என் குழப்பங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும்னு என் மனசு சொல்லுது.”
“அப்ப சரி... நானும் உன் அப்பாவைப் பார்க்கவே இல்லை. லெட் வி மூவ்...”
-மூவரும் புறப்பட்டனர். அறை ஒன்றின் கதவருகே நாற்காலியில் அமர்ந்துகொண்டிருந்த முத்துலட்சுமி கண்கள் பனிக்க எழுந்து எதிரில் வந்தாள்.
“பாட்டி, நீ போய்ப் படு - அப்பாக்கு ஒண்ணுமில்லை. நான் போய் பார்த்துட்டு வந்துட்றேன்” என்றாள் பாரதி.
“நீ கூப்டாலும் இப்ப என்னால வர முடியாது பாரதி. அதே சமயம் உனக்கொரு விஷயம் சொல்ல விரும்பறேன். இந்தப் பெட்டியை நான் இதுக்கு முந்தி பார்த்திருக்கேன். ஆனா எங்க எப்பன்னுதான் தெரியல. நீ போய்ட்டு வா! அதுக்குள்ள நான் ஞாபகப்படுத்திப் பார்க்கறேன்.”
- முத்துலட்சுமி சட்டென்று ஒரு வியப்பளித்தாள். ஆனால் அதைத்தொட்டுப் பேச நேரமில்லாததால் மௌனமாகப் புறப்பட்டாள் பாரதி.
“என் முருகன் கை விடமாட்டான்மா... இந்த விபூதியைக் கொஞ்சம் உன் அப்பன் நெத்தியில வெச்சு விடு...” என்று முத்துலட்சுமி ஒரு பொட்டலத்தை நீட்டியபடியே சொன்னதை பாரதி காதிலேயே வாங்கவில்லை. ஆனால் அரவிந்தன் அந்தப் பொட்டலத்தை வாங்கிக் கொண்டான்.
“நான் வெச்சு விட்றேன் பாட்டி. நீங்க கவலைப்படாதீங்க” என்றான். முத்துலட்சுமிக்கு அது சற்று ஆறுதலாக இருந்தது. பாரதி காரில் ஏறும் சமயம் மருதமுத்துவைப் பார்த்து ஏதோ சமிக்ஞை செய்தாள்.
“நான் பார்த்துக்கறேம்மா... நீங்க போய்ட்டு வாங்க’’ என்றான் தன் டி-ஷர்ட்டை சரி செய்தபடியே...
காருக்குள்...
அரவிந்தன் டிரைவ் செய்தான். பின் சீட்டில் பாரதியும் ஜெயராமனும்... மீண்டும் பாரதியிடம் ஒரு ஆரம்பம்.
“சார்... இந்த ரவுடி சாவுகூட அந்த முத்துச்சாமியோட ஆவியாலங்கற மாதிரிதான் கணேச பாண்டி நினைக்கறாரு. கூடவே நம்ப அய்யாதான் அடுத்துங்கற மாதிரி சொன்னதைத்தான் சார் என்னால ஜீரணிக்கவே முடியல.” - இதைக்கேட்ட அரவிந்தன் இடையிட்டான்.
“பயப்படாதே பாரதி... அப்படி நிச்சயமா எதுவும் நடக்காது. நாளைக்குக் காலைல அந்தப் பெட்டியைத் திறந்து உள்ள என்ன இருக்குன்னு பார்க்கறதுதான் என் முதல் வேலை. அதனால நிறைய நல்லது நடக்கப்போறதா எனக்குத் தோணுது.”
“அரவிந்தன் இதை நீங்க ஒரு நல்லெண்ண அடிப்படைல சொல்றீங்களா - இல்லை உங்க நம்பிக்கையா?”
- ஜெயராமன் அடுத்து இடை வெட்டினார்.
“எல்லாம்தான் சார்... குறிப்பா நான் பழநியில தென்னந்தோப்புல சந்திச்ச அந்த சித்தன் ஒரு காரணம்.”
“அப்ப அங்கதான் உங்களுக்கு நிறைய அமானுஷ்ய அனுபவங்கள் ஏற்பட்டதா?”
“ஆமாம் சார்... நான் எவ்வளவோ எழுதியிருக்கேன், பேசியுமிருக்கேன். அதேபோல பார்த்துமிருக்கேன். ஆனா இன்னிக்குக் காலைல பழநியில எனக்கு ஏற்பட்ட அனுபவம் டோட்டலா வேற சார்! எனக்கும் பாரதிக்கும் நிறைய வேலை இருக்கு சார்...”
“எனக்கென்னவோ எல்லாம் முடிஞ்சிட்ட மாதிரி தோணுது மிஸ்டர் அரவிந்த்! முக்கிய கல்ப்ரிட்ஸ் இரண்டு பேரும் செத்துட்டாங்க... மிச்சம் இருக்கறது எம்.பி மட்டும்தான்... அவரைக் காப்பாத்திட்டா அவரை வெச்சே அந்தக் குமாரசாமி குடும்பத்துக்கு நியாயம் கிடைக்க வெச்சுடலாம். அவ்வளவுதானே?”
“அவரைக் காப்பாத்திடலாம் சார். அதுல எனக்கு சந்தேகமும் இல்லை. ஆனாலும் வேற சில கடமைகள் இருக்கற மாதிரி ஒரு உணர்வு எனக்கு ஏற்பட்டிருக்கு.”
“அப்ப இந்தக் குமாரசாமி ஆவி பயம் உங்களுக்கு இல்லையா?”
“ஆஸ்பத்திரிக்குப் போய்ப் பார்ப்போம் சார். அப்புறம் முடிவுக்கு வருவோம்.”
“பாரதி... இந்த ரவுடிப்பய இறப்புக்குப் பிறகும் நீ அது ஆவியோட செயல்ங்கறத நம்பலையா?”
- ஜெயராமன் கேள்வியை பாரதிக்குத் திருப்பினார்.
“நான் என் இரண்டு கண்ணால பார்க்காம நம்ப மாட்டேன் சார். ஆவி இருக்கறது உண்மைன்னா அது என் கண்ணுக்குத் தெரியட்டும். அப்புறம் மற்ற விஷயங்கள பேசலாம். அதுவரை இது நிச்சயமா யாரோ செய்யற சதிவேலைதான்!
அதேசமயம் இந்த சதி வேலையை நான் பாராட்டறேன்.
நியாயமா முயற்சி செய்த என்னால முடியாததை ஒரு சதிகாரன் செய்திருக்கான்னா பாராட்டத்தானே வேணும்?”
“நீயா ஒரு இல்லீகலை சப்போர்ட் பண்றே?”
“அவ்வளவு வெறுப்பா இருக்கு சார். என்ன சார் பெரிய லீகல்? சுப்ரீம் கோர்ட் காவேரில தண்ணி திறந்துவிடச் சொல்லி உத்தரவு போடுது. ஆனா திறந்து விடலை. ஒரு தனிமனுஷன் சட்டத்தை மதிக்காமச் செயல்பட்டாகூடப் பரவாயில்லைங்கலாம். சட்டம் ஒழுங்கைக் காப்பாத்த வேண்டிய கவர்ன்மென்ட்டே இங்க சட்டத்தோட பேச்சைக் கேக்காதத என்னன்னு சார் சொல்றது? எங்க இருக்கு சார் லீகல்?”
- ஆவேசமாக பாரதி கேட்டபோது அவள் கைப்பேசியில் அழைப்பொலி, திரையில் யோகி திவ்யப்ரகாஷ் பெயர்!
பகீரென்றது பாரதிக்கு... இந்த நேரத்தில் இவர் எதற்கு போன் செய்கிறார் என்று குழப்பமாகவும் இருந்தது.
போனை கட் செய்தாள் சற்று வேகமாய்...
“யார் பாரதி?”
“அந்த யோகி சார்...”

‘`ஓ... தட்மேன் - திவ்யப்ராகாஷ்! ஆமா ஏன் கட் பண்ணே?”
‘`இந்த மாதிரி நபர்களோட எனக்கு இப்ப இருக்கற மனநிலைல பேச விருப்பமில்லை சார்.”
“நீ தப்பா யோசிக்கறே... இப்பதான் இந்த மாதிரி ஆட்களோட நாம நெருங்கணும். எப்பவும் உணர்ச்சிவசப்பட்டாலே க்யூட்டா யோசிக்க முடியாமப்போயிடும்.”
“சார்... இருக்கற குழப்பம் போதாதா. இவர் பாட்டு நம்ப மனசுல இருக்கறத சொல்றேன்னு புதுசா எதையாவது பூதத்தைக் கிளப்பி விட்டுட்டா என்ன சார் பண்றது?”
“திரும்ப தப்பா யோசிக்கறே. அந்த மனுஷன்கிட்ட ஒரு ப்ரெடிக்ஷன் இருக்கறது நமக்கு நல்லா தெரியும். இதை சயின்ஸ்ல ப்ரீமானிஷன்னு சொல்றாங்க. அதாவது, ஒருத்தரோட பேசும்போது அவர் தொடர்பா நடக்கப்போற சம்பவங்களை முன்னாடியே சொல்றது...
இப்ப உன் அப்பாவும் உயிருக்குத்தான் போராடிக்கிட்டு இருக்காரு... நாளைக்கு அவர் நிலை எப்படி இருக்கும்? நீ பயப்பட்ற மாதிரி எல்லாமே ஆவி வேலையா, இல்லை சதியான்னு அவர் மூலமா தெரிஞ்சிக்கலாம் இல்லையா?”
- ஜெயராமன் கேள்வி அரவிந்தனை காரை ஓட்டியபடியே திரும்பிப் பார்க்கச் செய்தது.
“வெல்செட் சார்... பழநியில அவர் கொடுத்த க்ளூவாலதான் என்னால ஒரு திருடனையே பிடிக்க முடிஞ்சது. ரியலி அது ஒரு வெரிகுட் ப்ரீமானிஷம்! அது ஒரு சயின்ஸ். அவர் என் வரைல ஒரு சயின்டிஸ்ட்தான்... நாம தாராளமா இப்ப அவரைப் பயன்படுத்தலாம்...”
- அரவிந்தன் சொன்ன மறுநொடி ஜெயராமனே திவ்யப்ரகாஷிடம் தொடர்பு கொள்ளத் தயாரானார். அவரும் அகப்பட்டார். ஸ்பீக்கர் போன் முடுக்கப்பட்டது.
“ஹலோ மிஸ்டர் யோகி...”
“அடடே எடிட்டர் சாரா, ஹவ் ஆர் யூ சார்?”
“நல்ல கேள்வி, நீங்களே நான் இப்ப இருக்கற நிலையைச் சொல்லிடுங்களேன்..”
“என்ன சார்... என்ன டெஸ்ட் பண்றீங்களா?”
“ஆமாம் சார்... நான் எதுக்குப் பொய்யெல்லாம் சொல்லணும்? மிஸ்டர் திவ்யப்ரகாஷ், நான் இப்ப பாரதியோட கார்ல அவங்க அப்பா
எம்.பி ராஜா மகேந்திரனைப் பார்க்க ஆஸ்பத்திரிக்குப் போய்க்கிட்டிருக்கேன். கூட வர்ற பாரதியும் அரவிந்தனும் ரொம்பவே டென்ஷன்ல இருக்காங்க - எழுத்தாளர் அரவிந்தனைத்தான் சொல்றேன்... அவர் உங்களைப் பழநியில பார்த்தாராமே? உங்களை ரொம்பப் பாராட்டினார். உங்க க்ளூ அவருக்கு ரொம்பவே பயன்பட்டிருக்கு.”
“இதுக்கு மேல நீங்க எதுவும் சொல்ல வேண்டாம் சார். இனி நானே பேசறேன். பழநியில எல்லாம் நல்லபடி முடிஞ்சதான்னு கேக்கதான் போன் செய்தேன். ஆனால் பாரதி ஏனோ போனை எடுக்கல.. இட்ஸ் ஓ.கே. மிஸ்டர் எடிட்டர்... நான் இப்ப சில கேள்வி கேட்கறேன், சரியா இருந்தா யெஸ்னு சொல்லுங்க.”
“டெஸ்ட் உங்களுக்கா இல்லை எனக்கா மிஸ்டர் திவ்யப்ரகாஷ்?”
“தப்பா எடுத்துக்காதீங்க... உங்களுக்கு உதவி செய்யத்தான் இந்தக் கேள்விகளே.”

“அப்படின்னா கேளுங்க.”
“கொஞ்சம்முந்தி எதாவது இறப்பு செய்திய கேள்விப்பட்டீங்களா?”
“எக்ஸாக்ட்லி... ஒரு செய்திகூட இல்ல - இரண்டு செய்தி.”
“பாரதியோட உடைல கறுப்பு நிறத்துல சோளியோ இல்லை துப்பட்டாவோ இருக்குதா?”
-இந்தக் கேள்விக்கு மிக வேகமான பதில் ஜெயராமனிடம்.
“யு ஆர் ரைட்... பாரதியோட துப்பட்டா பிளாக் கலர்லதான் இருக்கு...”
“சரி சார்... இப்ப நீங்க என்னைக் கேளுங்க. நான் என் மைண்ட்ல ஃபார்ம் ஆகுறத அப்படியே சொல்றேன்.”
“பாரதியோட அப்பா இப்ப சீரியஸ் கண்டிஷன்ல இருக்காரு. அவர் பிழைச்சுடுவார் தானே?”
“இதுக்கு பதிலை நான் பிறகு சொல்றேன். இன்னும் எதாவது கேள்வி இருக்குதா?”
“ஒரே ஒரு கேள்விதான்... நடக்கற எல்லாமே சதிச்செயல்னு பாரதி நினைக்கறா! ஆனா அதெல்லாம் இறந்துட்ட குமாரசாமிங்கற மனுஷனோட ஆவி செய்யற வேலைன்னு ஒரு பயம் உருவாகியிருக்கு. இதுல எது சரி?”
“ஆவியாவது பூதமாவது..? பாரதி நினைக்கறதுதான் சரி! அது மனுஷ சதிதான்... இந்த சதியை முறியடிச்சுட்டா நிச்சயம் எம்.பி. பொழைச்சுக்குவாரு. அதே சமயம் முறியடிக்கறது ஒண்ணும் சாதாரண விஷயமில்லேன்னும் எனக்கு மனசுல தோணுது எடிட்டர் சார்!”
- ஸ்பீக்கர் போனில் ஒலித்த திவ்யப்ரகாஷின் குரல் பாரதியின் கண்களை அகல விரியச் செய்தது! திவ்யப்ரகாஷ் வரையில் இது அவள் சற்றும் எதிர்பார்த்திராத ஒரு திருப்பம்.
- தொடரும்