
அவர்களைச் சந்திரகாந்தக்கல் நீரும் பிரிதொரு மூலிகைகளும் குணப்படுத்தி விட்டிருந்தன. அவர்களிடம் ஒருவித அமைதி.
அன்று பங்குனி உத்திரப் பெருநாள்! பொதினிக்கு மேலான வான்பரப்பில் கிஞ்சிற்றும் மேகங்களில்லை. மலைப் பரப்பில், தாவரப் புதர்கள் மேல், மர உச்சிகளில் என்று பல இடங்களில் பல வண்ணங்களில் கொடிகள் பறந்தபடி இருந்தன. ஆடவரும் பெண்டிரும் ஆங்காங்கே பாதையை உருவாக்கி, ஒருவர் பின் ஒருவராய் மெல்ல மேலேறியபடி இருந்தனர்.
அடிவாரச் சருக்கத்தில் தண்ணீர்ப் பந்தலும், அதில் பதநீரும், மிளகு நீரும், கறுப்பஞ்சாறும் வழங்கப்பட்டபடி இருந்தன. கொட்டாரத்தில், போகர் பிரான் எப்போதும்போல் தனக்கான யோகத்தில் இருந்திட, அஞ்சுகனும் சங்கனும் அதுவரை தரித்திராதபடி யோக வஸ்திரம் எனும் நெறிப்படி மார்பின் குறுக்கே செல்லும்படியாகத் துண்டைத் தரித்துக்கொண்டு, இடுப்பில் முழங்காலுக்குச் சற்றுக் கீழ்வரையிலான அளவுக்குக் கச்சக்கட்டு கட்டியிருந்த நிலையில் அவர் முன் வந்தனர். நெற்றியில், தோளில், கைகளில், வயிற்றில் என்று மேனி முழுக்க விபூதிப்பட்டை. பாலாவை உத்தேசித்து அவள் சார்ந்த குங்குமத்தைத் தீபச்சுடர்போல அடிபாகம் அகன்றும் மேல்பாகம் குறுகியுமாகப் பார்க்கவே யோக புருஷர்களாய் ஜொலித்தனர்.
போகர் பிரான் நெற்றியிலும் குங்குமத் தீற்றல். அது அவர்வரையில் நெற்றிக் கண்ணாகவே சுடர்விட்டது. அஞ்சுகன் சங்கனைக் காணவும், புன்னகைத்தார் போகர். அவ்வேளை கிழார்கள் மூவரும்கூட அவர் முன் சங்கன், அஞ்சுகன் போலவே உடை உடுத்தி, முகத்தில் விபூதி குங்குமம் துலங்கிட வந்து நின்றனர்.
அவர்களைச் சந்திரகாந்தக்கல் நீரும் பிரிதொரு மூலிகைகளும் குணப்படுத்தி விட்டிருந்தன. அவர்களிடம் ஒருவித அமைதி.
“கிழார் பெருமக்களே, தாங்களும் தயாராகி விட்டீர்கள்?”
“ஆம் பிரானே, அரிய நாள்… அரிய நிகழ்வு… தங்கள் பெரும் கருணை எம்மை குணப்பாடடையச் செய்து விட்டது.”
“தாங்கள் சற்றுக் கடிது முயன்றால் சித்தர்களாகி விடலாம். தங்கள் உடம்பில் உங்கள் மனநலம் பொருட்டு நான் தந்த மூலிகை மருந்து களுக்கு அப்படி ஒரு சக்தி. தாங்கள் சிறிது முயன்றால் கூடப் போதும். தங்கள் மனமானது, தங்களுக்கு அடங்கிக் கட்டுப்பட்டுவிடும்.”
“நாங்களும் முயல்கிறோம். இப்போது நாங்கள் உங்கள் அரிய சாதனையைக் கண் குளிரக் கண்டிடும் விருப்பத்தில் இருக்கிறோம்.”
“நல்லது… மலை மேல் எல்லா ஏற்பாடுகளும் செய்தாகிவிட்டதுதானே?”
“தங்கள் சொற்படி சகலமும் செய்தாகிவிட்டது.”
“மகிழ்ச்சி… வாருங்கள் செல்லலாம்.”
போகர் அவர்களை அழைத்துக்கொண்டு கொட்டாரத்தினின்றும் பொதினி மலை நோக்கி நடக்கலானார். உடனே இரு தூபம் தாங்கிகள் அவற்றைப் பிடித்துக்கொண்டு, அதில் குங்கிலியத்தைப் போட்டுப் புகையைக் கமழச் செய்தபடியே அவரைத் தொடர்ந்தனர்.

அழகாய் நாட்டிய மங்கைபோல தூபப் புகையும், வெட்டவெளியில் மணந்து கலைந்து மறைந்தது. போகர் மலைமேல் எழுந்தருள விருப்பதை எல்லோருக்கும் அறிவிப்பது போல, பறைமுரசை ஒருவன் கொட்டிக்கொண்டு முன்சென்றான். நடுவில் ஊதுகொம்பை ஒருவன் முழக்கினான்.
சிலர் திருச்சின்னத்தை (ஒரு வகை இசைக் கருவி) முழங்கினர். மொத்தத்தில் ஒரே கோலாகலம். அதுவரை மேகப் பொதியின்றித் தென்பட்ட வானிலோ, மெல்லிய மேகச் சேர்க்கை. சாம்பல் நிற மேகங்கள், பொதினியின் மேல் உஷ்ணம் கூடாதென்பதுபோல ஒன்றுதிரளத் தொடங்கியிருந்தன. பொதினிசூழ் சிற்றரசர்களுக்கோ, சேர சோழ பாண்டிய மண்டலாதிபர்களுக்கோ போகர் அழைப்பு விடுக்கவில்லை. சுற்றுப்புறமெல்லாம்கூட ஆர்வத்தில் வந்தவர்களே.
“முதலில் வானம் பார்த்த கோயிலாக, வேதாகமங்கள் ஏதுமின்றி சித்த சாத்தியத்தால் மட்டும் தண்டபாணி நிமிர்ந்து நின்றால் போதும். பின், காலத்தால் ஒவ்வொன்றும் தானாய் வந்து சேர்ந்திடட்டும். அவ்வேளை ஆகமங்களும் வந்துசேரும். சைவம், சாக்தம், வைணவமென்னும் ஆகமங்களில் சைவ சாக்தக் கலப்பாய் இக்குமரனுக்கென்றேகூட ஓர் ஆகமம் தோன்றக்கூடும்” என்று தன்னோடு இயைந்து நடந்துவரும் கிழார் பெருமக்களிடம் போகர் கூறிக்கொண்டே வந்தார். அதிலிருந்தே அன்று பெரிதாய் ஆகமச் செயல்பாடுகள் ஏதுமில்லை என்பது தெளிவாகிவிட்டது.
“வானம் பார்த்த கோயிலாக இது இருப்பது சரியா?” என்று வேல்மணிக்கிழார் இடையிட, “அப்படியும் கோயில்கள் இருக்கின்றனவா?” என்று அருணாசலக் கிழாரும் கேட்டிட, “சதுரகிரியின்மிசை சுந்தர மகாலிங்கம் அப்படித்தானே கோயில்கொண்டுள்ளது?” என்று கேட்டு அவர்களைத் திகைக்கச் செய்தார் போகர்.
“என்றால் பூசனைகள்?”
“வானம் பார்த்த கோயிலுக்கு எப்போது வேண்டுமானாலும் பூஜை செய்யலாம். இரவு பகல் பேதமில்லை. ஆண் பெண் பாரபட்சமில்லை. ஏன், ஊர்வதும் பறப்பதும் நான்கு கால்களால் திரிவதும்கூட வந்து பூஜிக்கலாம். பூஜிக்கும் சாத்யங்களுமுண்டு.”
“பக்தி உணர்வென்பது ஆறறிவு படைத்த மனிதனுக்குதானே? ஏனைய உயிரினங்களுக்கு அது எப்படி சாத்தியமாகும்?’’
“அந்த உயிராய் நாம் வாழ நேர்ந்தாலன்றி இதற்கான விடையை ஒருவர் சரியாகக் கூறிட இயலாது. ஆனால், சித்தர்களால் கூற இயலும். கூடு விட்டுக் கூடு பாய்வது அவர்களுக்கு சாத்தியமான ஒன்றல்லவா?”
“அப்படியானால் தங்களால் கூற இயலுமே?”
“இயலும்… பலவிதப் பிறப்புகளில் மானுடப் பிறப்பு இறுதியானதும் உறுதியானதுமாகும். ஆயினும், இப்பிறப்பிலும் மாயையில் இடறி விழுந்து சில சாபங்களுக்கும் பாபங்களுக்கும் சில சித்தர் பெருமக்களும் முனிகளும் ஆளாகிவிடுவதுண்டு. அவர்கள் அதற்குரிய விமோசனமாய்ப் பாம்பாய், பறவையாய், பசுவாய் ஜனிப்பதுண்டு. அதுபோல, ஜனித்தவர்களின் செயல்களில் மானுட அறிவார்த்தத்தை நாம் காணமுடியும்.’’
இப்படி போகர் கூறவுமே அஞ்சுகன், “பிரானே... மேலே பாலாவின் சந்நிதியில் பாம்பு வடிவில் சித்தர் ஒருவர் வழிபாடு செய்துபோலதானே?” என்று முன்பொருமுறை அங்கு சென்று, அம்பிகை உருவை தரிசித்ததை ஞாபகத்தில் வைத்துக் கேட்டான்.
“ஆம், அவர் ஒரு சரியான உதாரணம்” என்றார் போகர். இடையிடையே கொம்பு முழக்கம், திருச்சின்ன முழக்கம், பறையொலி… தூபத்தின் குலாவல்.
மேலே சமதளத்தை அடைந்தபோது, பாஷாண தண்டபாணி உருவச்சிலை ஒரு காரைத் தொட்டியில்... நெல், பொன்மலர், நவதானியம் எனும் சகலத்துடன் மூழ்கிய நிலையில் கிடந்தது. அதன் அருகிலேயே ஆழிமுத்துவும் செங்கானும் நின்றபடி இருந்தனர்.
நைருதி பாகத்தில கூடாரம் எழும்பி நின்றிருக்க, அதனுள் பூஜைக்கான பொருள்கள் குவிந்திருந்தன. கூடாரம் மேல் சேவல் பார்வையாளன்போல அமர்ந்திருந்தது. பீடம் மேல், நாகம் படம் விரித்திருந்தது. அருகில் மயிலானது அகவிக்கொண்டிருக்க, அதைப் பல்லோர் விழி விரியக் கண்டபடி இருந்தனர்.
புலிப்பாணி அனைவரையும் இயக்கிக் கொண்டிருந்தான். உச்சிப்போதுதான் நல் முகூர்த்த வேளை.
அதற்குக் காலமிருந்தது. முன்னதாய், போகர் தான் பல இடங்களிலிருந்தும் கொணர்ந்திருந்த புனித நீரால், பீடத்தை நனைத்து மீதி நீரை ஓரமாய் வைத்தார். பீடத்தின் எதிரில் மயில் வாகனம் வரும் இடத்தில் உள்ள சிறு பீடம் மேல், ஒரு பெரும் அகலினைவைத்து, அதில் நெய்யினை நிறைத்து, பருத்தி நுலால் ஆன திரியினைப் போட்டு, அதன் நுனியில் ஆதவனின் நேர்க் கிரணம் பட்டுத் தீப்பற்றும் விதமாய் ஒரு தொலைநோக்கி ஆடியைப் பிடித்தார்.
மேலே மழை மேகமும் விலகி, சூரியனும் தன் கிரணக் கதிரை மலைமேல் பாயவிட்ட நிலையில், ஆடி வழி புகுந்த சூரியக் கதிர் சில நொடிகளில் திரியில் பற்றி, தீயும் பற்றி, சுடரும் ஒளிர்ந்தது.
அது ஓர் அரிய காட்சி. அக்னியை நேராகப் பெறுதல் என்பது இதன் பொருள். இதற்கு சுத்தாக்னி என்று பெயர். இனி அதிலிருந்து பல தீபங்களை ஏற்றிடலாம். முதல் தீபமும் யாக நெருப்பும் இப்படித்தான் பெறப்பட்டன.
கொட்டார ஊழியர்கள் பலர், புஷ்பத் துளியில் மலர்களை நிரப்பியிருந்தனர். செவ்வரளி, காந்தள், தாமரை, முல்லை என்று அம்மலர்கள் கலந்துகிடந்த நிலையில், அவற்றைக் கைகளால் அள்ளி நாலாபுறமும் இறைக்கத் தொடங்கினர்.

பீடத்தை ஒட்டிய ஒரு கூடையில ஒரு சத மலர்க் கூட்டமே இருந்தது. ‘காந்தள், ஆம்பல், அனிச்சம், குவளை, குறிஞ்சி, வெட்சி, கருவிளம், பயினி, வானி, குரவம், பசும்பிடி, வகுளம், காயா, ஆவிரை, வேரல், சூரல், செங்கொடு வேரி, தேமாம்பூ, மணிச்சிகை, உந்தூழ், கூவிளம், ஏறுழம், சுள்ளி, கூவிரம், வடவனம், வாகை, குடசம், எருவை, செருவிளை, குறுநறுங்கண்ணி, மருதம், கோங்கம், போங்கம், திலகம், பாதிரி, செருந்தி, அதிரல், செண்பகம், கரந்தை, குளவி, மாம்பூ, தில்லை, பாலை, முல்லை, கஞ்சலங்குல்லை, செங்கருங்காலி, வாழை, வள்ளி, நெய்தல், தாழை, தளவம், தாமரை... என்று நாற்புறமும் அலைந்து திரிந்து சேகரித்து எடுத்துவந்த மலர்கள்... சத மலர்கள்.
“யார் இந்த எத்தனத்தைச் செய்தது?” என்றபோது, கறுப்பாய் இருந்து பின் பொன்னிறத்துக்கு மாறியிருந்த அந்த அழகிய கரிசலாங்கன்னியே பொன்னாங்கன்னியாக முன்வந்து நின்றாள்.
“அடடே நீயா... அரிதான காரியத்தைச் செய்திருக்கிறாய். இந்த முருகனின் அருளால் பல தலைமுறைகள் தழைப்போடு வாழ்வாயாக” என்றார்.
அப்படியே சுற்றி எல்லோரையும் பார்த்தார். அத்தனை பேரும் சாமானியர்கள். அவர்கள் வாழ்வில் ஒரு வாழ்வாங்கு வாழப்போகும் விஷயத்தைக் காணப்போகின்றனர். யாரையும் போகர் பிரான் வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கவில்லை. எந்த அரசனுக்கும் ராஜகுருவாய் இருந்து, அவர்கள் உதவியோடு இதைச் சாதிக்கவுமில்லை.
“இது ஒரு சித்தனின் பிரத்யேக முயற்சி. அதிலும், விபரீதம் நேர்ந்தாலும் நேரும் எனும்படியான ஒரு முயற்சி. அதுவரையில் உலகில் சிலைகள் என்பவை... கல், மரம், மண் மற்றும் ஏனைய உலோகங்களால் மட்டுமே உருவாகியுள்ளன. இந்த பாஷாணக் கலவையோ புதிது. இது கல்லையும் உலோகத்தையும் விஞ்சியதா, அல்லது எஞ்சியதா என்பதை பொருட் பரிசோதனையாய் செய்துபார்த்ததில் விஞ்சியே நிற்கிறது. அருட்பரிசோதனை இன்றுதான் ஆரம்பம்.
அதற்கான காலம் ஒரு மண்டல காலம். இருபத்தியேழு நட்சத்திர காலம். அதன் உள்ளீடாகப் பன்னிரண்டு ராசிகளின் அம்சம். இவற்றை ஒட்டுமொத்தமாய்த் தன்வசம்கொண்ட ஒன்பது கோள்களின் தன்மை. ஆக, 48 நாள்கள் எனும் கால அளவில் அந்த அருட்பரிசோதனை ஆரம்பம். இன்று அதன் முதல் நாள்” என்றவர், விண்ணைப் பார்த்தார். அப்படியே புலிப்பாணியையும் பார்த்தார்.
“புலி…”
“ஆசானே?”
“இந்த உத்திர நாளில்தானே செவ்வாய்க் கோளின் கதிர் மிக நேரிடையாக இங்கே படுகிறது?”
“ஆம் ஆசானே… அதன் வினைப்பாடு மிகக் கொடியது. சனி, செவ்வாய் எனும் இரு பகைக் கோள்களின் சங்கமத்தால் நில நடுக்கம், கடல் கொந்தளிப்பு, பூகம்பம், பெரும் தீவிபத்து போன்றவை உருவாகிப் பேரழிவு ஏற்படும். அதற்கான சாத்தியங்களும் தெரிகின்றன. இவ்வேளை குழுமியிருக்கும் மேகங்கள்கூட கோடை மழைக்கான மேகங்கள் இல்லை. காற்றழுத்தத் தாழ்வினால் உண்டான மாற்றம் இது. அநேகமாய், சில பல நாழிகைகளில் இங்கே பெருங்காற்று வீசி, மழைப்பொழிவும் உண்டாகி, அது புயல் எனப்படலாம். நாம் தொலைவிலும் போய் விழலாம்.”
“இதை நீ முன்பே எதிர்பார்த்தாயா?”
“இல்லை… கூட்டிக் கழித்துப் பார்க்கவும்தான் தெரியவந்தது.”
“அப்படியானால் இன்றைய தினம் இந்தப் பிரதிஷ்டை எனப்படுவது ஒரு கூடாத செயல்தானே?”
“இல்லை… கோள் சாரத்தில் கேதுவும் துணை நிற்பதால், இந்நிகழ்வு நடந்தபடி உள்ளது. இந்நிகழ்வு மட்டும் நிகழாவிட்டால், நிச்சயம் பெரும் அழிவை வேறு வகையில் உலகம் கண்டிருக்கும். என் கணக்கு சரியாக இருக்குமானால், இன்று பெருமழையோ, காற்று வீச்சோ இருக்காது. ஆனால், பூமியின் மறுபக்கத்திலோ, இல்லை கடல் மீதோ பெருமழை பொழிந்து, வினைப்பாடு திரிந்துபோகும்.”
“அப்படியானால் இந்த நவபாஷான தண்டபாணி தண்ணருளாளனே என்று நாம் உறுதிசெய்துகொள்ளலாம்தானே?”
“நிச்சயமாக… உறுதியாக…’’
புலிப்பாணியின் குரலில் தெரிந்த உறுதி, முகத்தில் மின்னியது. அந்த முகூர்த்த காலகதியை, மணற்கடிகையும் காட்டத் தொடங்கியது. போகர் பிரானும் தனக்கு உதவிய நவமரை அருகழைத்து, காரைத் தொட்டியில் இருக்கும் தண்டபாணி உருவை ஒன்றுசேர்ந்து தூக்கச் சொல்லி, பீடத்தின் மையக்குழியில் நிறுத்தப் பணித்தார்.
“அஞ்சுகன், புலிப்பாணி, சங்கன், மருதன், அகப்பை முத்து, மல்லி, நாரணபாண்டி, சிவமணி, சடையான் ஆகிய அந்த நவமரும் அவ்வாறே செய்தனர். பீட மையத்தின் பின்புறத்தில் போகர் பிரான் நின்றுகொள்ள, இடவலமாய் செங்கானும் ஆழிமுத்துவும் நின்றிட்ட நிலையில், பன்னீர்த் தூறல்போல மேகம் சிணுங்கிட, பீடக்குழி பாகத்துக்குள் தன்வசமிருந்த அறுகோணச்சக்கர யந்திரத்தை வைத்து, அதன்மேல் மருந்து சாற்றப்பட்ட நிலையில், தண்டபாணித் தெய்வ பாஷாண சிலை, முதல்முறையாக நிமிர்ந்து நின்றது. அந்த நொடி அதீத விசையுடன் பறையொலி முழங்கிட, கொம்பு எக்காளமிட, திருச்சின்னமும் செருமிட, சுர முழக்கமும் ஒலித்தது (அரோகரா). போகரின் கட்டளைக்கேற்ப ஆழிமுத்து, முருகப்பெருமானின் இரு கண்களை உளிகொண்டு நெம்பித் திறக்கலானான். அது ஒரு பொன் உளி. செதுக்கிமுடித்த நிலையில், கூட்டத்தில் இருந்த வேதியர் ஒருவரை அழைத்து, போற்றித் துதிப்பாடச் சொல்ல, அவரும் பாடிட, கிழார் பெருமக்கள் வசம் சதமலர்களைத் தந்து தூவச் சொன்னார்.
அப்படியே திரு உரு முன் அவர் மண்டியிடவும், எல்லோரும் மண்டியிட்டனர். கரங்களைக் கூப்பித் தொழுதனர். மனதுக்குள் உருக்கமான பிரார்த்தனை.
“எம்பெருமானே… சிவ சக்தி மைந்தா – மால்மருகா- தமிழ்க் கொண்டலே... –வேதங்களின் காவலா... வித்தைகளின் விளைநிலமே... – ஞானச்சுடரே... சித்தன் சிந்தையில் உதித்த சிவனருட் செல்வனே... எல்லோரும் எல்லாமும் பெற்று வாழ்ந்து முக்தியினை அடைந்திட, உன் தண்ணருள் எந்நாளும் துணைபுரியட்டும்’’ என்று உள்ளம் கசிந்தார் போகர். அப்படியே கண் மலர்ந்தவராய், அபிஷேக ``ஆராதனைகள் தொடர்வது நிகழட்டும்’’ என்றார். நவமர் அவர் சொன்னதைச் செய்யத் தயாராயினர்.
பாலும் தேனும் கருப்பஞ்சாறும் இளநீரும் ஆறாக ஓடி, அந்த நவபாஷாண மேனியைக் குளிர்வித்திட, அங்கே பலப்பல சித்தர் பெருமக்களும் வரத்தொடங்கினர். போகர் கரம்பற்றி வாழ்த்தினர். உச்சமாய் கற்பூர தீபம் காட்டப்பட்ட சமயம், கலகலவென்ற சிரிப்போடு, பாலாவின் பிரவேசமும் நிகழ்ந்தது. கிழார்கள் தாங்கள் ஒரு புது உலகில் குடிபுகுந்தாற்போல உணர்ந்தனர்.

“போகா… காலகாலத்துக்குமான செயலைச் செய்திட்டாய். காலக் கருணைதான் மேகத் தூறல். இந்த நாவல பூமி நீங்கலாய் எங்கனும் மழையும் புயலுமே. இங்கே அங்காரகன் அடங்கி, மங்களன் என்றானான். சனியும் கனியானான். உன் அருட்பரிசோதனையும் வெற்றிபெற்றது. இனி, இத்தலம் நல்ல வழி தரும். நல்லருள் பொழில் தரும். அழியா மொழி தரும். காலமெல்லாம் உன் புகழும் நிலைத்திருக்கும்” என்றார் அந்த அருள்கன்னி.
ஆமோதிப்பதுபோல பெருங்குரலெடுத்து அகவியது மயில். சேவலும் கொக்கரித்தது. சர்ப்பமோ சிலை பீடத்தின் காலடியில் படம் விரித்துப் பார்த்தது.
போகரின் நெஞ்சுக்குள் ஓர் இனம்புரியா இதம். அவ்வேளை ஞாபகமாய் ஞாபகத்துக்கு வந்தது, அந்த நவபாஷாண ஜெகவலலிங்கம்.
அதன் அருட்பயணத்துக்கொரு வழியைக் கண்டாக வேண்டுமே?
இன்று புயல் காற்றோடு அதிசயமாகக் கோடை மழை கொட்டியதில், குற்றாலத்தில் நல்ல நீர்ப்பெருக்கு. வெள்ளைப் புரவிகள் நுரை உடம்போடு பாய்ந்துவருவதுபோல இருந்தது. அக்கற்பனை பொய் இல்லை என்பதுபோல, சாந்தப்ரகாஷ் முதுகின் மேல் திமுதிமு என்று சப்தம். நீர்ப்புரவிகள் அவன் முதுகின் மேல் ஓடின.
`அமெரிக்காவிலும் அருவிகளுண்டு. ஆயினும், இந்தக் குற்றாலம் போலாகாது’ என்றொரு எண்ணம் தோன்றிய நிலையில், போதும் என்கிற உணர்வோடு அருவியைப் பிரிந்து வந்தான் சாந்தப்ரகாஷ். அவன் மட்டும்தான் குளித்தான். சாருபாலா குளிக்கவில்லை. ஆனால் சிலிர்த்திருந்தாள். தலைதுவட்டி, மாற்று ஆடை அணிந்து நிமிர்ந்த நிலையில், அவர்களின் வழிகாட்டியான சடையன், “வழியில் அய்யர் கடைல நெய் தோசை சாப்பிடலாங்க…” என்றான்.
“நெய் தோசையா… நோ... நோ... ஹெவி கொலஸ்ட்ரால்.”
“அய்யா... இது நல்ல கொழுப்புங்க. ஒரு தோசை சாப்ட்டுப் பாருங்க. ஒன்பது சாப்டுவீங்க…” என்று, கோயிலுக்கு எதிர்ச்சாரியிலான கடைத் தெருவின், கோமதி அய்யர் கடைக்குப் போனபோது நல்ல கூட்டம். பலர் நின்றபடியே விழுங்கிக்கொண்டி ருந்தனர். சாம்பார், சட்னி, நெய் என்கிற கலவை வாசம் வேறு எதையும் சிந்திக்க விடவில்லை.
ஒரு பிடி…
“ரியலி... வெரி டெலிஷியஸ்” என்று 2000 ரூபாய் தாளைத் தந்திட, மீதிச் சில்லறையைத் திருப்பி வாங்கித் தந்து, ``எண்ணிக்குங்க சார்…” என்றான் சடையன்.
இடையில் சிலர் தேன் வேண்டுமா; மங்குஸ்தான் வேண்டுமா; பூச்சாங்கொட்டை வேண்டுமா என்றெல்லாம் நுணுகிப்பார்த்து அவனால் விரட்டப்பட்டனர்.
“அவ்வளவும் பழைய சரக்கு. உங்களுக்கு நான் மலைல சாமிகிட்ட நல்ல சரக்கா வாங்கித் தரேன். அமெரிக்கா போய் நீங்க என்னை நினைச்சு நினைச்சு சந்தோசப்படணுமில்ல” என்றான்.
சாருவுக்கு அவனை மிகப் பிடித்துவிட்டது.
“சந்தா… இவன் ரொம்ப சின்சியரா இருக்கான். விரும்பினா நம்ப பங்களாவுக்குக் கூட்டிக்கிட்டுப் போய் தாத்தாவுக்கு சப்போர்ட்டா இருக்கவைப்போம். அவருக்கும் வயசாயிடுச்சில்ல” என்றாள்.
அதன்பின் அவர்களின் கார், குற்றாலச் சாலைகளை விட்டுப் பிரிந்து, புதிய வழித்தடம் ஒன்றில் மலையடிவாரத்தை ஒட்டியே பயணித்தது.
சென்னையிலிருந்து வந்த டிரைவரையும் திருப்பி அனுப்பியாயிற்று. சடையனே காரை ஓட்டினான். நன்றாகவே ஓட்டினான்.
“அய்யா… நான் இப்போ உங்களை அந்தச் சித்தன் பொட்டல்ங்கற இடத்துக்கே கூட்டிட்டுப்போறேன். ஆனா, நீங்க அங்கே யாரைப் பாக்கணும், என்ன பண்ணணும்னே சொல்லலை. சொன்னாக்கா, நான் அதுக்குத் தகுந்த மாதிரி உதவி செய்யலாம்’’ என்று காரை ஓட்டியபடியே பேசினான்.
பதிலுக்கு சாந்தப்ரகாஷ் சாருபாலாவைப் பார்த்திட, சாருவும் பின்னால் திரும்பிப் பெட்டியை ஒரு பார்வை பார்த்தவளாக, “இங்கே காட்டேஜ் கிடைக்கும். அப்படிக் கிடைக் காட்டியும் டென்ட் போட்டுக்கலாம்னு சொன்னியேப்பா” என்றாள்.
“அதெல்லாம் சிக்கல் இல்லம்மா… வன இலாகாக்காரங்களைக் கொஞ்சம் கவனிச்சுட்டா, மலை ஓடைப் பக்கமாவே டென்ட் போட்டுக்க விடுவாங்க. ஆனால், ராத்திரியில நெருப்புக் கும்பா போட்டுக்கணும். சமயத்துல யானைங்க வரலாம். தைரியமா இருக்கணும்.”
“நெருப்புக் கும்பான்னா?”
“அதாம்மா... இந்த சினிமாலெல்லாம்கூட வருமே… நெருப்பு மூட்டி, சுத்தி உக்காந்து குளிர் காய்வாங்களே?”
“ஓ… கேம்ப் ஃபயரா?”
“அதேதாங்க… ஆமா, எவ்வளவு நாளைக்குங்க தங்க உத்தேசம்?”
“சித்ரா பௌர்ணமி ராத்திரியோடு சரி.”
“அப்போ, போகர் சாமிய பாக்கறதுதான் உங்க திட்டமா?”
- அவன் மிக நேராகவே கேட்கவும், ஒரு விநாடி திகைப்பு இருவரிடமும்.
“என்னங்க, நான் ஏதாவது தப்பா கேட்டுட்டேனா?”
“இல்லை… சரியாதான் கேட்டிருக்கே. ஆமா, போகர் பன்னிரண்டு வருஷத்துக்கு ஒருமுறை காட்சி தருவாருங்கறது உனக்கெல்லாம் எப்படித் தெரியும்?”
“இந்த மலைக்காடுதான் எங்களுக்கு எல்லாமே. பல தலைமுறைகளா இருக்கோம். தெரியாமப் போகுங்களா. அதுலயும் நீங்க பொட்டியோடு வந்திருக்கீங்க… எப்படிங்க தெரியாமப்போகும்?”
“பொட்டியோடன்னா?”
“பொட்டிய சாமிகிட்ட ஒப்படைச்சுட்டு, அவர்கிட்ட விபூதி வாங்கிட்டுத் திரும்பிப் பாக்காமப் போகணும்கறதும், பொட்டிய போகர் சாமி வேற ஒருத்தருக்குக் கைமாத்தி விடுவாருன்னும் கேள்விப்பட்டிருக்கேன். இந்தப் பொட்டி அதுக்குத்தானே?”
``நான் எங்க முன்னோர் எழுதின டைரியைப் பார்த்துத் தெரிஞ்சிக்கிட்டதை நீ சாதாரணமா சொல்றியேப்பா?” - வியந்தாள் சாரு.

கார் மலைப்பாதையில் சென்றபடி இருக்க, சாரு அப்படி ஒரு கேள்வியைக் கேட்டபோது, வழியில் ஒரு பெரிய பாறாங்கல். காரை நிறுத்திய சடையன், இறங்கினான். அதை அகற்ற முற்பட்டபோது, பக்கவாட்டுப் புதர்களிலிருந்து சரசரவென்று முகமூடியணிந்த சிலர் கையில் துப்பாக்கியோடு காரைச் சூழ்ந்துகொண்டனர். எல்லாம் சில நொடிகளில்…
சடையன், “ஐயா... என்னை விட்ருங்க” என்று அங்கிருந்து ஓடத் தொடங்க, ஒரு முகமூடிக்காரன் டிக்கியைத் திறக்கச்சொல்லி பெட்டியைத் தொட்டுத் தூக்கினான்.
“நோ… அதை மட்டும் தொடாதே; எவ்வளவு பணம் வேணும்னாலும் கேள்… ப்ளீஸ் அதைத் தொடாதே...” அலறினாள் சாரு.
அவர்கள் காதிலேயே வாங்கிக்கொள்ள வில்லை. பெட்டியைத் தூக்கிக்கொண்டு, புதர்களில் புகுந்து மறைந்தேபோனார்கள்.
சாந்தப்ரகாஷுக்கும் சாருவுக்கும் எல்லாமே ஒரு கனவுபோல இருந்தது. அவ்வேளை ஒரு வாகனம் வரும் சப்தம் அவர்கள் இருவரையும் கூர்மையாக்கியது.
அவர்கள் வந்த அதே வழியில் ஒரு வேன். அவர்கள் பார்க்க, வேனும் நின்றது. வேனுக்குள் பாரதி, அரவிந்தன், ஜெயராமன், திவ்யப்ரகாஷ்ஜி.
டிரைவிங் சீட்டில் செம்பூரான் என்கிற அந்தக் காக்கி அரை டவுசர்க்காரன். சாந்தப்ரகாஷும் சாருவும் அவர்களைப் பார்த்த நொடி, அடுத்தகட்ட அதிர்வுக்குச் சென்றனர். சாந்தப்ரகாஷ் துளியும் திவ்யப்ரகாஷை அங்கே எதிர்பார்க்கவில்லை. இருவருமே தயங்கி, பின் கைகளைப் பற்றிக்கொண்டனர்.
“இங்கே நீங்க என்ன பண்ணிகிட்டிருக்கீங்க?” என்று ஜெயராமன் கேட்ட கேள்விக்கு, நடந்ததை அப்படியே சொல்லிமுடித்தனர்.
“சந்தேகமே இல்லை… இது என் அப்பாவும் அந்த ஜோசியனும் செய்த வேலையாதான் இருக்கணும்” என்றாள் பாரதி.
“ஆமா… அவங்களைத் தவிர வேற யாரும் இந்த விஷயத்துல நமக்குப் போட்டியும் இல்லை” என்று ஆமோதித்தான் அரவிந்தன்.
“உங்களைப் பாக்கவும் எச்சரிக்கவும் நாங்க ரொம்பவே முயற்சி செய்தோம். ஆனா, எதுவும் கைகூடி வரலை” என்ற பாரதி, ஒரு விநாடி கைகளைச் சொடுக்கிக்கொண்டு, அவர்களையே ஒரு மாதிரி பார்த்தாள்.
“இப்படிப் பார்த்தா என்ன அர்த்தம்?”
“ஆமா… எப்பவும் பெட்டியோடேயே இருக்குமே அந்த ஸ்னேக்…?” என்று கையைப் பாம்பு போல அசைத்துக் காட்டினாள்.
“நாங்க பெட்டியோடு கிளம் பிட்டோம். அதை நாங்க மைண்டே பண்ணல” என்றான் சாந்தப்ரகாஷ்.
“சரி, எந்தப் பக்கம் போனாங்க? எப்படிப் போனாங்க?” என்று திவ்யப்ரகாஷ்ஜி தன் திறமையைக் காட்டத் தயாரானார்.
“இதோ இந்தப் பக்கம்” என்று ஒரு சரிவைக் காட்டினான் சாந்தப்ரகாஷ். அவரும் அந்த வழியில் இறங்கி, சில அடிகள் நடந்தார். கீழே ஓரிடத்தில் ஒரு கர்ச்சீப் கிடந்தது.
எடுத்தபடியே நிமிர்ந்தவர் அதை ஊடுருவினர். தலையையும் உதறிக்கொண்டார்.
“ஆமா, வந்தவங்க மொத்தம் ஆறு பேரா?”
“அப்படித்தான் நினைக்கறேன்.”
“கறுப்புத் துணியால முகத்தை மூடியிருந்தாங்களா?”
“எக்ஸாக்ட்லி… எக்ஸாக்ட்லி…” – திவ்யப்ரகாஷ் பார்வை அடுத்து வேன் டிரைவர் செம்பூரான் பக்கம்தான் திரும்பியது.
“உனக்கு அவங்களைத் தெரியும்தானே?” என்று நறுக்காகக் கேட்டார்.
அவன் முகத்தில் கண்ணாடி தட்டியது போல ஒரு நொறுங்கல். படபடப்போடு, “எ... என்ன சாமி சொல்றீங்க நீங்க?” என்றான்.
“இல்ல… உனக்கு அவங்களை நல்லாத் தெரியும். நீ இப்போ அவங்களை நினைச்சே. அதுல ஒருத்தன் பேர்கூட அழகு… அழகு முத்துவா… இல்லையில்ல அழகுசுந்தரம்” – திவ்யப்ரகாஷ்ஜியின் அந்தப் பெயர், அவனை வெலவெலக்கச் செய்துவிட்டது.
“சாமி நீங்க இந்த ஊரா?” என்றான் அடுத்து.
“அழகுசுந்தரம்தானே?” – அவர் அழுத்தமாய்க் கேட்ட மறுநொடி, அவனும் அங்கிருந்து தலைதெறிக்க ஓடத்தொடங்கினான். ஒரு அம்புபோல புதர் ஒன்றுக்குள் புகுந்தவன், இந்த மலையில் எனக்குத் தெரியாத இடமேயில்லை என்பதுபோல, ஓடி மறைந்தே போய்விட்டான்.
“நாம இனி இங்கே நிக்கறதுல எந்தப் பிரயோஜனமுமில்லை. பெட்டி இங்கிருந்து நிச்சயமா சென்னை திரும்பப்போகுது. அநேகமா வழில ஒரு காரைப் பார்த்தபோது, என் உடம்புல ஒரு தாக்கம் ஏற்பட்டதா சொன்னேன் இல்லையா...? அந்க்த கார்லதான் இந்தப் பெட்டியைக் கடத்தினவங்க வந்திருக்கணும்” என்றார் திவ்யப்ரகாஷ்ஜி.
“ஸ்டில்... அந்தக் கார் நெம்பர்கூட நல்லா ஞாபகம் இருக்கு. அது சென்னை ரெஜிஸ்ட்ரேஷன் கார்தான். டி.என்.01, 4002. அந்த ரெஜிஸ்ட்ரேஷனை வெச்சேகூட வந்தவங்களைக் கண்டுபிடிக்க முடியும்” என்று அவர் தொடரவும், பாரதி முதல்முறையாக அவரைச் சற்று பிரமிப்போடு பார்த்தாள்.
சாருவோ கண்கள் கலங்கி இறுகிப்போயிருந்தான். எல்லாம் நல்லபடியாக நடந்து முடியப்போகிறது என்று எண்ணிக்கொண்டிருந்தவளுக்குப் பேரிடி.
“சாரு... நீ ஃபீல் பண்ணாதே; நாம எந்தத் தப்பும் பண்ணலையே” என்று, அவள் கண்ணீரைத் துடைத்தான் சாந்தப்ரகாஷ்.
“நாம பண்ணல சந்தா… ஆனா, நம்ம தாத்தா பண்ணிட்டார். பெட்டியை ஒப்படைக்காமலே அவர் காலமானதுதான் பிரச்னையே. நம்ம யார்கிட்டேயும் சொல்லக்கூட இல்லை. ஒருவேளை அவர் ஒப்படைக்கவே விரும்பாமக்கூட இருந்திருக்கலாம்னும் தோணுது…”
“அதோட மதிப்பு தெரிஞ்சவங்களுக்கு நிச்சயம் ஒப்படைக்கத் தோணாது. அதோட வேல்யூ அப்படி” என்றான் அரவிந்தன்.
“இருக்கலாம்… அதுக்கு மதிப்பு பல ஆயிரம் கோடியாகக்கூட இருக்கலாம். ஆனா, அதையெல்லாம்விட ஒரு குருவோட அருளும் அவர் நம்பிக்கையும் ரொம்பப் பெருசு. அந்த நம்பிக்கைக்கு ஒரு துரோகத்தை நம்ம தாத்தா செய்துட்டார்னுதான் நான் நினைக்கிறேன். எனக்கும் அதுல கொஞ்சம் பங்கு இருக்கு.
அந்தப் பாவமும் குருவோட கோபமும்தான் உன் மகன் ஒரு திருநங்கையா மாறக் காரணம் சாந்தா” என்று திவ்யப்பிரகாஷ்ஜி அமெரிக்காவில் இருக்கும் ஆகாஷ் வரை தொடரவும், சாந்தப்ரகாஷ், “அது உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்பதுபோல அகண்ட விழிகளோடு பார்த்தான். சாருவுக்கோ உடம்பு நடுங்கவே ஆரம்பித்துவிட்டது.
“எப்போ உன்னைப் பார்த்தேனோ அப்பவே என் மதியூகரணி செயல்படத் தொடங்கிடிச்சு. ஆகாஷ் என்ன, வீட்ல கைல கால்ல கட்டோடு கிடக்கறானா?”
“பிரதர்… எப்படி இவ்வளவு சரியா கேட்க முடியுது உங்களால?”
சாந்தப்ரகாஷ் கேள்விமுன், காரில் இருந்த தன் பிரீஃப்கேசில் இருந்து ஓர் ஏட்டுக்கட்டை வெளியே எடுத்துக் காண்பித்தார் திவ்யப்ரகாஷ்ஜி. அதன் முகப்பில், ‘மதியூகரணி’ என்கிற வளைவெழுத்தும், கீழே ‘எண்ணத்தின் வண்ணமே திண்ணமாய் வாழ்வு’ என்கிற ஒரு விளக்கவரியும் சாந்தப்ரகாஷை மட்டுமல்ல, பாரதியைக்கூட ஓர் உலுக்கு உலுக்கியது. பாரதி அந்தக் கட்டை வாங்கி உற்றுப் பார்க்கலானாள்.
“இது அந்தப் பெட்டியோட ஐக்கியங்கள்ல ஒண்ணு. இதோட சக்திக்கு நானே சாட்சி… இந்த மாதிரி பெட்டிக்குள்ள பல சித்த சங்கதிகள் – உச்சமா அந்த சிவலிங்கம். விஞ்ஞானம், மெய்ஞ்ஞானம் இரண்டுமே சம அளவு கலந்த ஒரு சித்த ஞானம்தான் அவ்வளவுமே!”
– திவ்யப்ரகாஷ்ஜியின் விளக்கம், ஜெயராமனையும் சிலிர்க்கச் செய்து, “இப்போ நாம அடுத்து என்ன செய்யப்போறோம்?” என்று கேட்கச் செய்தது.

“நமக்கு இப்பகூட அவகாசம் நிறைய இருக்கு. சித்ரா பௌர்ணமிக்கு இன்னும் நாலு பகல் பொழுது இருக்கு. சென்னைக்குப் போய், பெட்டி இருக்கிற இடத்தைக் கண்டுபிடிச்சுட்டா, திரும்பிவந்து, தாத்தா செய்யத் தவறின, இல்ல செய்யமுடியாப்ம போய்ட்ட அந்தக் கடமையை நாம செய்திடலாம். எனக்கு ஒரே ஒரு லட்சியம்தான். சாந்தலிங்கத்தை பூஜிக்கணும்… சமாதி சித்தி அடைஞ்சுட்ட போகர் பெருமானை தரிசிக்கணும். அடுத்த நிமிஷம் என் உயிர் போனாலும் சந்தோஷம்தான்!” என்று தெளிவாய்ப் பேசினார் திவ்யப்ரகாஷ்ஜி.
“இவங்க அப்பா கைக்கு அது போய்ட்டா மலைப்பாம்பு வாய்ல விழுந்த ஆட்டுக்குட்டி மாதிரிதான் அதுவும். நம்மளால மீட்க முடியுமா?” - அரவிந்தன் சந்தேகம் பொங்கி வழியக் கேட்டான்.
“அதுமட்டும் என் அப்பாகிட்ட இருந்தா, அதை அவர்கிட்ட இருந்து வாங்கிக்கொடுக்கறது என் பொறுப்பு. அரவிந்தன் உங்களுக்கு அந்தச் சந்தேகமே தேவையில்லை” என்றாள் பாரதி.
“பெட்டி அங்கே போக எப்படியும் 12 மணி நேரமாவது ஆகும். நடுவழில நம்மால அதைத் தடுத்து மீட்கமுடியாதா?” என்று ஒரு புதிய கோணத்தைக் காட்டிக் கேட்டார் ஜெயராமன்.
“வேண்டாம்... தடுக்க வேண்டாம். அவரைக் கையும் களவுமா பிடிக்கணும் புறப்படுங்க” என்ற பாரதியிடம் ஒரு சத்ய ஆவேசம்.
தீட்சிதர் வீடு காரிலிருந்து உதிர்ந்த பானுவும் நீலகண்ட தீட்சிதரும், லிங்கத்தோடு கூடிய ஏட்டுக்கட்டு களுடனும், சர்ப்பமண்டிப் பானையுடனும் உள்நுழைந்தனர்.
பானைக்குள் நாகம் புரள்வதையும் சீறுவதையும் தீட்சிதரின் கைகள் நன்றாகவே உணர்ந்தன. நெடுநேரம் வைத்திருக்கவும் முடியாது. மிகவேகமாய்ச் செயல்பட்டாக வேண்டிய ஒரு தருணம்.
பானுவிடமும் ஏடுகளோடு ஓடிவிடும் ஒரு துடிப்பு… அவை அவள் வரையில் ஏடுகளல்ல; பல நூறு கோடி ரூபாய்!
- தொடரும்