
“அப்போ இந்த லிங்கத்துக்கு இப்போ சக்தி கிடையாதா?”
அன்று அந்த நவபாஷாண ஜெகவலலிங்கம் நினைவுக்கு வரவும், இந்த உத்திர நாளில் அதுவும் அபிஷேக ஆராதனைக்கு ஆட்படுவது சிறப்பாகும் என்று அவருக்குத் தோன்றியது.
அந்த எண்ணத்தோடு தண்டபாணிச் சிற்பம் இருக்கும் பீடத்துக்கு இடது பக்கமாய், தென்மேற்கு மூலை நோக்கி நடந்தவர், அங்குள்ள ஒரு சிறு மட்டப்பாறை மேல் அமரலானார்.
உச்சி சூரியன் மேற்கில் சரியத் தொடங்கி யிருந்தான். போகரின் உதவியாளர்களில் ஒருவனான கம்பண்ணன், சில வகை சித்திரான்னங்களைச் செய்து, அவற்றைப் புறமாய் விநியோகிக்கத் தொடங்கி யிருந்தான். அதை வாங்கி உண்பதற்குப் பலரும் தயாராக இருக்க, நவமரும், ஆழி முத்துவும், செங்கானும், கிழார் பெருமக்களோடு போகர் அமர்ந்த அந்தத் தென் மேற்கு பாகத்துக்கு வந்து அவர் எதிரில் நின்றனர்.
வானில் திரும்பவும் மென்மேகப் பந்தல்... இதமான கவரி வீச்சு போன்ற காற்று…
“எல்லோரும் அமருங்கள்” என்றார் போகர். புலிப்பாணி மட்டும் அமராமல் நின்றபடியே இருக்க, மற்றவர்கள் அமர்ந்தனர்.
போகரின் பெரு விருப்பம் பூர்த்தியாகிவிட்டது. செயற்கரிய ஒரு செயலைச் செய்துமுடித்தாயிற்று. உத்திர நாள் காரியங்கள் உத்திரம் போலவே காலத்துக்கும் தாங்கி நிற்கும். அதிலும், அன்றைய உத்திரம் உத்பாதகம் நீக்கிய உத்திரம். விண்மிசை புதிது புதிதாய் பறவைக் கூட்டம். மாவிலை தொட்டுத் தெளித்தாற்போல மழைத் தூறல்… மிக மிக இதமான சூழல். அவ்வேளை அஞ்சுகன் மட்டும் ஒரு சரிவிலிருந்து, மனோன் மணித்தாயின் சிலாரூபத்தைத் தலைமேல் சுமந்தபடி அவரை நோக்கி வந்து கொண்டிருந்தான்.
அப்பொதினிக் குன்றின் மிசை சந்தன மரம் ஒன்றின் கீழ் நாகசித்தரால் வணங்கப்பட்டுவந்த அருள் தேவதை!
“என்ன அஞ்சுகா… நாக சித்தர் இதை என்னிடம் ஒப்படைக்கப் பணித்துவிட்டாரா?” என்று போகர் கேட்டிட, பின்னாலேயே நாக சித்தர் ஒரு சிறு சிவலிங்கத்துடன் கமண்டலம், தண்டம், ருத்திராட்ச மாலைகள், சிறு திரிசூலம் என்று ஏராளமான பொருள்கள் சகிதம் வந்தபடி இருந்தார்.
வந்தவர் சகலத்தையும் போகர் முன்வைத்து, போகரையும் வலம்வந்து வணங்கினார்.
“என்ன நாகா… சித்தனுக்குச் சித்தன் வணங்குதல் முறையா?” என்று ஆரம்பித்தார் போகர்.
“இந்த வணக்கம் செயற்கரிய செயல் செய்தமைக்கு… இக்குன்றத்தை உலகறியச் செய்யப் போவதற்கு!”

“எதையும் எங்கே நாம் செய்கிறோம். நம்மைக்கொண்டு இறைவனே அல்லவா செய்து கொள்கிறான்?”
“என்றால், நாம் வேறு இறை வேறில்லை என்றாகிறதல்லவா?”
“உண்மை… ஆனால், இந்த உண்மையைக் கர்வத்தோடு ஒருவர் உணரக்கூடாது. அதுதான் சிறப்பு!”
“அற்புதமான விளக்கம். என் தவமும் முற்றுப்பெற்றது. இமயம் வரை சென்று, அங்கே சில காலம் கழித்துப் பார்க்க விருப்பம். எனவேதான் இந்த மனோன்மணியை, புவனேசுவரியைத் தங்களிடம் ஒப்படைக்க வந்தேன்.”
“இந்தச் சிவலிங்கம்?”
“இதையும்தான்… இவையிரண்டும் ஒரு நாள்கூட பூஜை காணத் தவறியதில்லை. உங்களிடமும் தவறாது என்று நம்புகிறேன்.”
“சிவவாக்கியன் இருந்தால் உன் பேச்சைக் கேட்டுக் கைகொட்டிச் சிரிப்பான். அண்டம் கடந்தவனை ஒரு சிலைக்குள்ளும் லிங்க வடிவிலும் சுருக்கிப் பார்ப்பதும், இந்த ரூபங்களைப் பூஜிப்பது அவனைப் பூஜிப்பதாக எப்படி ஆகும் என்றும் கேட்பான்.”
“உண்டென்பார்க்கு உண்டு: இல்லையென் பார்க்கு இல்லை. வான் மேகமாயிருந்த மழை நீர், நம்மேல் பட்டு ஒழுகும்போது அது நீர் எனப்பட்டாலும் அதன்மூலம் மேகமும், அந்த மேகத்தின் மூலமான கடலும்தானே? அதற்காக, மழை நீரை மேகமென்றும் கடலென்றுமா அழைக்கிறோம்?”
“விளையாட்டுக்குச் சொன்னேன், விவாதம் வேண்டாம். ஆனாலும், சித்தம் சிறப்பது விவாதங்களாலும்தான்.”
“விவாதங்களால் மட்டுமா, முரண்களாலும் தான்! திருமூலருக்கு உள்ளம் கோயில் – ஊனுடம்பு ஆலயம்; கடுவெளியாருக்கோ, இக்காயம் பெரும்பொய் வெறும் காற்றடைத்த பை அல்லவா?”
“ஆம்… மெத்த உண்மை. இந்த உடல் கோயிலாவதும் வெறும் காற்றடைத்த பையாவதும் பார்க்கும் கோணத்தைப் பொறுத்தது. போகட்டும், தண்ட பாணியை தரிசித்தாயிற்றா?”
“ஆயிற்று. நிறைவான தோற்றம், அருகில் மூலிகை வாசம். மனம் மறக்காது.”
“மறக்கக் கூடாது. இனிவரும் மனிதர்கள் தொட்டு, இப்போது இருப்போர் வரை அனைவரும் ஒருமுறையாவது இங்குவந்து இவன் நிழலில் சில விநாடிகளாவது நின்று சென்றிட வேண்டும் என்பதே, இப்போது என் விருப்பம்.”
“தங்கள் விருப்பம் நிச்சயம் ஈடேறிடும். நானும் புறப்படுகிறேன்” நாக சித்தர் வணங்கியபடியே புறப்பட்டார்.
போகர் அருகில் இப்போது மனோன்மணி என்றும், புவனேஸ்வரி என்றும் விளிக்கப்பட்ட தேவி சிலையுடன் சிறு சிவலிங்கமும், உடன் ருத்திராட்ச மாலைகளுடன் தண்டக மண்டலம்.
அவற்றை அங்கேயே வைத்த போகர் எல்லோரையும் பார்த்து, “விரைவில் நான் இங்கே சமாதியில் ஆழ்ந்திடப்போகிறேன். குன்றின் இந்தத் தென்மேற்கு பாகமே இனி என் ஜீவன் முக்திகொள்ளும் இடமாகும்” என்றார்.
அதைக் கேட்ட எல்லோரிடமும் ஓர் அதிர்ச்சி… அப்படியே ஆச்சர்ய உணர்ச்சிகளும். சங்கன் அதை வார்த்தைப்படுத்தினான்.
“பிரானே… தங்கள் பதில் அதிர்ச்சி தருகிறது. இந்த ஆலயம் இன்னும் எவ்வளவோ வளரவேண்டும். அதைத் தாங்கள் அருகிலிருந்து காணவும் வேண்டும் என்பதே எங்கள் எல்லோரது விருப்பமுமாகும்!”

“நான் பார்க்கத்தானே போகிறேன்” – போகர் பளிச்சென்று சொன்ன விதம் அவர்கள் ஆச்சர்யத்தை மேலும் கூட்டியது.
“தாங்கள் சமாதியானால் எப்படிக் காணமுடியும்?” என்று கேட்டான் நாரண பாண்டி.
“அப்போதுதான் அதிகம் காணமுடியும். இது ஊனுடம்பு. சமாதியில் விடுபடப்போவதோ ஒளியுடம்பு.”
“அது எப்படி இருக்கும்; அதை எங்களால் காண இயலுமா?”
“காண்பீர்கள்… ஒளியுடம்பாய் மட்டுமல்ல, பறவைகள் வடிவில், பாம்பு வடிவில், விசை மிகுந்த காற்றாய், ஒளிப்புனலாய் என்று ஒரு ஜீவசமாதி சித்தன் தன் நடமாட்டத்தை எப்படியும் நிகழ்த்துவான். அது அன்றைய சூழலையும் அமைப்பையும் பொறுத்தது.”
“அப்படியானால், சங்கரதி கம்பரர் போல தாங்களும் சமாதியில் அமரப்போவது உறுதியானதுதானா?”
“ஆம்! அதற்கு முன் சில கடமைகள் உள்ளன. அவற்றை ஈடேற்ற வேண்டும்.”
“அந்தக் கடமைகள்…?”
“முதலில் ஜெகவலலிங்கத்துக்கு ஓர் ஏற்பாடு செய்யவேண்டும்.”
“முதலில் செய்த நவபாஷாண லிங்கத்தைத் தானே சொல்கிறீர்கள்?”
“ஆம்! அதுதான் நடமாடும் சித்தநெறியாக, சித்தர்களின் விலைமதிப்பில்லாக் கருத்துப் புதையல்களோடு வருங்காலத்தில் வலம்வரப் போகிறது.”
“எப்படி என்று விவரமாகக் கூறமுடியுமா?”
“கூறுகிறேன். நாளைக் காலை கீழே கொட்டாரத்தில் எல்லோரும் ஒன்றுகூடுங்கள். இந்த லிங்கம் எனக்கு வேண்டும் என்று ஏட்டில் கீறல் இட்டுத் தந்தவர்கள் முதல் சகலரும் இருக்க வேண்டும். இன்று பங்குனி உத்திரம். வரும் சித்திரைப் பௌர்ணமி நாளே நான் தேர்வு செய்யப்போகும் ஜீவன்முக்தனுக்கான நாளும்கூட!”
“உங்கள் பேச்சு புதிராக உள்ளது.”
“ஆம்… புதிர்தான்! அந்த லிங்கம் அதன் வினைப்பாடு என்று எல்லாமே புதிர்தான். புதிராக இருப்பதே சிறந்தது. தெளிவாக இருப்பது சித்த ஞானத்துக்கு ஏற்றதல்ல.”
“இங்கே இந்தத் தண்டபாணிக்கான வழிபாடுகள்?”
“நெறிகளை எழுதியே தந்திருக்கிறேன். பாஷாணப் பொருள்களுக்கு வெப்பம் கக்கும் தன்மை உண்டு. அவை கக்கும் வெப்பமும் நாள் பொழுதின் தட்பவெப்பமும் முரண் இன்றிக் கலந்து செயல்படுவதில்தான் அருள்வீச்சு உள்ளது.
முரண் ஏற்பட்டால் அருள் வீச்சு இருள்வீச்சாகிவிடும். எனவே, வெப்பத்தைச் சமன்செய்ய அபிஷேகம் நிகழ்த்தப்பட வேண்டும். பால், தேன், இளநீர், தயிர், கருப்பஞ்சாறு என்று உண்ணும் பொருள் எதுவாயினும் நன்று. இரவுக் காலத்தில் சந்தனக்காப்பு முக்கியம். காப்புச் சந்தனம், பாஷாணவெப்பத்தைத் தன்னுள் வாங்கி வேதிவினைக்கு ஆட்பட்டு, அச்சந்தனம் மருத்துவ குணத்துக்கு மாறிடும். அந்தச் சந்தனத்தை நெற்றியில் பூசிட, முக ஒளி கூடும். விழிப்புலன்கள் கசட்டுக்கு ஆளாகாது. விழிப்புரை தள்ளிப்போகும்.
ஓர் எறும்பு ஊர்வதைப் பன்னிரண்டு கெஜ தூரத்திலும் துல்லியமாகக் காணலாம். இச்சந்தனத்தைக் கடுகளவு உண்டிட, குடல் அழற்சி நீங்கும். செறிவு கூடும். இதோடு, அபிஷேகப் பொருள்களை உண்பவர்க்கு, ரோகமே ஏற்படாது. ரோகிகள் ஒரு மண்டலம் உண்டால் போதும். அவர்கள் ரோகம் எதுவாகினும் நீங்கும். தண்டபாணிக்கு இரவில் சந்தனமெனில், பகலில் விபூதியே அபிஷேகிக்க உகந்தது. அபிஷேக விபூதியை நீரில் குழைத்துப் பூசிட, உடல் ஒளிபெற்றிடும். துஷ்ட சக்திகள் நெருங்காது. பூச்சிகள் கடித்தாலும் பெரும்பாதிப்பு இராது.”
“பிரானே... தாங்கள் கூறுவதிலிருந்து ஓர் உண்மை புலனாகிறது. தண்டபாணி ஒரு சித்தநாதனாகவும் இருந்து, தன்னை வணங்குபவர்க்கு அந்த வணக்கத்தின் வழியே வைத்தியம் புரியும் வைத்தியநாதனாகவும் திகழ்ந்திடுவான் எனலாமா?”
“மிகச் சரி… இவன் வைத்தியநாதனே! என் மூலநோக்கும் அதுவே. இவனைக் காண வருவோர்க்கு ரோக விடுதலை கிடைக்கும். யோக மனம் வாய்க்க வேண்டும். இதுவே என் விருப்பம்.”
“நாளை இதனால் ரோகிகள் மட்டுமே வந்துசெல்லும் ஒரு வைத்தியசாலை போல இந்தச் சந்நிதி ஆகிவிட்டால் என்ன செய்வது?”
“வாய்ப்பே இல்லை. இவனைக் காண ஒரு விதிப்பாடு உண்டு. இவனருள் பெற புண்ணியக் கணக்குண்டு. மலைமேல் ஏறிவந்திட, ஓர் ஆரோக்கியமும் தேவை. பெரும் பாவத்தால் ரோகிகளானவர்கள், இம்மலை அடிவாரத்தில் தவமி ருந்தாலே தரிசனம் வாய்க்கும்.”
“உலகமாந்தர் அத்தனை பேரும் வந்துசெல்ல வேண்டும் என்று கூறினீரே?”
“உலகமாந்தர் அத்தனை பேரும் ஆரோக்கியமாகத் திகழ விரும்பி அவ்வாறு கூறினேன். ஆயினும், உலகமாந்தர் அனைவரும் அறிந்தவனாய், ஏதோ ஒரு வகையில் அம்மாந்தரோடு தொடர்புடை யவனாய் இத்தண்டபாணி திகழ்ந்திடுவான். இத்தலத்தில் இனி அநேக அருள் விளையாட்டுகள் நிகழ்ந்திடும்!”
“தாங்கள் அதைச் சூட்சும வடிவிலிருந்து கண்காணித்தபடியே இருப்பீர்களோ?”
“கண்காணித்தபடி என்பதைவிட, கண்குளிரக் கண்டபடி எனும் பிரயோகமே சரி!”
“அப்படியானால் தங்கள் ஜீவனுக்கு முக்தியே கிடையாதோ?”
“இத்தலமிசை இவனையொட்டி சமாதி யோகத்தில் இருப்பதே ஒரு வகை முக்திதானப்பா?”
“அதற்கு ஏதேனும் கால அளவு உள்ளதா?”
“இப்போது அதற்கு எனக்கு விடை தெரியவில்லை… வரும் காலத்தில் தெரியவரக்கூடும்.”
“இத்தலத்தால் வேறு என்னவெல்லாம் நிகழ்ந்திடும்?”
“குன்றையொட்டி நகரம் உருவாகும். நகரை ஒட்டி கிராமங்கள் தோன்றிடும். சித்தநெறியைப் பின்பற்றும் ஒரு கூட்டத்தவர், பல்வேறு பெயர்களால் தோன்றுவர். மண்ணாளும் அரசர்க்கு தண்டபாணி தோன்றாத் துணையாய்த் திகழ்வான். அலட்சியம் புரிவோர் அவிந்து அடங்குவார். அதர்மமாய் நடப்பவரும் அவதிக்கு ஆளாவர். தீராரோகம் பரம்பரைக்கே தோன்றி வாட்டும். யாத்திரை புரிவோர் ஆனந்த நித்திரைகொள்வர். தன்னையறிய விரும்பும் ஞானியர்க்கு இந்தத் தண்டபாணி ஏதோ ஒரு வழியில் ஞானகுருவாய்த் திகழ்ந்து வழிகாட்டுவான்.”
போகரின் விளக்கம், கிழார் ஒருவரை ஒரு விசித்திரமான கேள்வியைக் கேட்கச் செய்தது.

“பிரானே... வாலைக்குமரி பாலா முதல் நாகசித்தர் வரை மேலும் பல சித்தர் பெருமக்களையும் உங்களின் இந்தச் செயல்பாட்டால் நாங்கள் தரிசித்தோம். சீறும் சர்ப்பம் சுருண்டும், கொக்கரிக்கும் சேவல் மருண்டும், மயிலானது அகவியும் திரியும் அதிசயத்தையும் கண்டோம். சிலைக்குரிய தண்டபாணித் தெய்வமாம் எம் முருகப் பெருமானை நாங்கள் கண்ணாராக் காணவியலாதா? இங்கே கோயில்கொண்ட அப்பெருமானின் அருள் வடிவைக் காலத்தால்தான் உணரவியலுமோ?”
கிழாரின் கேள்வி, போகரையே சற்று சிந்திக்க வைத்துவிட்டது. அமைதியாகக் கிழாரை உற்றுநோக்கியவர், “உங்கள் கேள்வி அவன் காதில் விழுந்திருக்கும். அதற்குப் பதில் கூறவேண்டியவன் அவனே. கூறிடுவான் என நான் நம்புகிறேன்” என்றார்.
அந்தப் பதிலோடு எழுந்தவர், “நான் கொட்டாரம் செல்கிறேன். இரவு பூசைக்கு வருவேன். காப்புச் சந்தனம் தயாராக இருக்கட்டும்” என்றார்.
அதைக் கேட்ட கிழார்கள் மூவரும், ``பிரானே… காப்புச் சந்தனத்தை இன்று நாங்கள் எங்கள் உபயமாக அளிக்க விரும்புகிறோம்” என்றனர்.
“முதல் காப்பு உங்களுடையதாக இருக்க வேண்டும் என்பது உங்கள் விருப்பமோ?”
“ஆம்! நாளை அதை நாங்கள் திரும்பப் பெற்றுச்சென்று, எங்கள் உற்றார் உறவினர்கள் சகலருக்கும் தந்து, இவனருளுக்கு அவர்கள் பாத்திரமாகிட விரும்புகிறோம்!”
“நல்ல எண்ணம். அப்படியே செய்திடுங்கள்” என்றபடியே புறப்பட்டார்.
மாலை நேரம்.
கிழார் பெருமக்கள், தங்கள் மனைகளில் சந்தனக் கட்டையை அம்மியிலும், கல்மேடையிலும் தேய்த்து அரைத்து, அந்தச் சந்தன விழுதை ஒரு யானைக் கவளம்போல உருட்டி, வெள்ளிப் பேழை ஒன்றில்வைத்து எடுத்துக்கொண்டு புறப்பட்டனர். கிழார் பெருமக்களின் மனைவியர், பிள்ளைகள் மற்றும் உற்றார் உறவினர் அவர்களைத் தொடர்ந்தனர். அடிவாரத்தை அவர்கள் அடைந்த வேளை, போகரும் வந்தபடி இருந்தார். பின், அவரோடு சேர்ந்தே புறப்பட்டபோது, மலைக்குன்றின் வழித்தடத்தில் ஓர் இளம் பாலன் கோவண தாரியாகக் கையில் கோலுடன், அதேசமயம் உடம்பெல்லாம் கொப்புளங்களோடு வந்தபடி இருந்தான்.
உடம்பில்தான் கொப்புளம். முகத்தில் ஒரு ஜோதிப் பிரகாசம். அந்திச் சூரியனின் மஞ்சள் வெயில்பட்டு, அவன் உடலில் ஒரு விசேடப் பிரகாசம். கழுத்தில் ஒரு ருத்திராட்சமும் தரித்திருந்தான். சிரத்தில் தலைப்பாகை… அப்படி ஒருவனை அவர் கொட்டாரத்தில் பார்த்ததேயில்லை. ஒருவேளை அண்மை ஆவினன்குடியைச் சேர்ந்தவனோ? மனதில் ஓடிய கேள்வியோடு போகர் அவனைப் பார்த்திட, அவன் சற்றுப் பெருமூச்செறிந்தவனாக, “உங்களைத் தேடித்தான் மேலே சென்றேன்” என்றான்.
“யாரப்பா நீ?”
“என் பெயர் சித்த குரு. நானொரு ஆண்டி” என்று சற்று முகம் சுளித்தான்.
“இவ்வளவு இளவயதிலா?” – போகரும் மடக்கினார்.
“ பிறப்பிலேயே!”
அந்தப் பதில் போகரை அதிரச்செய்தது.
“என்னப்பா சொல்கிறாய்?”
“என் தாய் தந்தையர் என்னை ஆண்டியாக்க வென்றே பெற்றுவிட்டனர்.”
“அரசனாக்கவல்லவா எப்போதும் பெற்றோர் என்பார் விரும்புவர்?”
“என்னை ஆண்டிகளுக்கு அரசனாக்கி விட்டனர் என்று வைத்துக்கொள்ளுங்களேன்!” – யாரும் எதிர்பாராத பதில் அவனிடம்.
“ஆமாம்… இது என்ன மேலெல்லாம் கொப்புளம்?”
“அக்கினிக் கொப்புளம்… அதுவும் நான் மேல் செல்லவும்தான் ஏற்பட்டது. உடம்பும் கொதிக்கின்றது. பூசிக்கொள்ள சந்தனம் இருந்தால் குளிர்ந்துவிடும். கிடைக்குமா?”
அந்தக் கேள்வி, கிழார் பெருமக்களை ஒரு இடி இடித்தது. கைவசம் பேழையில் சந்தன உருண்டையும் தெரியவும், “அடடே… கையோடு கொண்டுவந்துவிட்டீர்களே. உங்களுக்கு ஞானதிருஷ்டி போலும்” என்று வேகமாய் நெருங்கி வந்து, அந்தச் சந்தன உருண்டையை எடுத்த அந்த சித்தகுரு, மளமளவென்று மேனிமேல் பூசிக்கொள்ளவும் செய்தான்.
``அப்படியே இந்த அங்காரக வெப்பம் அடங்கட்டும்’’ என்று முணுமுணுத்தான். எல்லோரும் திகைத்து நின்றுவிட, போகர் மட்டும் தடைகூறாமல் புன்னகைத்தார். முழுவதுமாய்ப் பூசிக்கொண்டவன், மீதமாய் உள்ள சந்தனத்தைக் கிழார் பெருமக்கள் மூவர் நெற்றியிலும் இட்டவனாய், “நான் குளிர்ந்தேன். நீங்களும் குளிர்ந்து, உங்கள் தமிழ்போலக் குன்றா இளமையோடு நன்றாய் இம்மண்ணில் வாழ்வீர்களாக” என்று வாழ்த்தியவனாக, “வருகிறேன்” என்று கூறி, அங்கிருந்தும் செல்லலானான். கிழார்கள் போகரை வெறித்தனர்.
“கலங்காதீர்கள்… மேலேறுங்கள்!” என்றார்.
“எங்கள் முதல் முனைப்பு இப்படி வழிப்பறி போலக் கொள்ளை போய்விட்டதே பிரானே” – அருணாசலக் கிழார் உதடுகள் துடித்தன.
“இல்லை… வந்தவனும் சராசரி மனிதனில்லை. அவன் பதில்களும் சராசரி பதில்களில்லை. அனைத்துக்கும் விடை நாம் மேலே சென்றால் கிடைத்துவிடும். நடங்கள்…”
சொன்னதோடு வேகமாய் மேலேறத் தொடங்கினார் போகர். அவர்களும் பின் தொடர்ந்தனர். மேலே செல்லச் செல்லவே, சந்தன வாசம் காற்றில் கலந்துவந்தது. மேலுள்ள சமதளத்தை அடைந்து, சிலை பீடத்தை நெருங்கியபோது, கிழார்ப் பெருமக்கள் உடம்பு சிலிர்த்துப்போனது. அந்த நவபாஷாணச் சிலை முழுக்க சந்தனக் காப்பு! சிரத்திலும் துணிப்பாகை! அடிவாரத்தில் தென்பட்ட சித்தகுரு அணிந்திருந்தது போலவே. கிழார்கள் மூவரும் பெரும் சிலிர்ப்போடு, “தண்டாயுதபாணிக்கு” என்று குரல் கொடுக்க, மலை ஏறிய சகலரும், “அரோகரா” என்றனர்.
அதே சிலிர்ப்புடன் முதல் பக்தி முழக்கம். அது எட்டுத்திக்கும் விட்டுத் தெறித்தது!
இன்று தீட்சிதரின் வீட்டில் அவ்வேளை ஒருவருமில்லை. அந்த வீட்டுக்குப் பதஞ்சலி கிரகம் என்று பெயர். நாகதோஷத்துக்குப் பரிகாரம் செய்வது, மந்திரிப்பது எல்லாம் இந்த வீட்டில்தான்.
வீட்டின் மத்தியில் உள்ள பிரம்மபாகம் கூரையின்றி, கம்பி கட்டப்பட்டு வானம் பார்க்கத் தெரிந்தது. அந்தப் பிரம்மபாகத்தில் ஒரு கல்நாகப் பட்டியக்கல். அதில், ஐந்து தலை நாகத்தின் செதுக்கல். அக்கல் மஞ்சள் குங்குமம் பூசப்பட்டு, முன்புறம் குத்துவிளக்கெரியக் காட்சி தந்தது. விளக்குக்கும் முன்னால் ஆசனப்பலகை, அதன்மேல் அமர்ந்துகொண்டு இடப்புறமாய் திரும்பி, நாகக்கல்லைப் பார்த்து வணங்கியபடியே, தன்னைத் தேடிவருகின்றவர்களிடம் தீட்சிதரும் பேசிடுவார். அரவம் சம்பந்தப்பட்ட அவ்வளவு தோஷத் தொடர்பு உடையோரும், எதிரில் அமர்ந்த நிலையில் பங்குகொள்வர். சமயங்களில் அரவங்களைப் பிடித்துவந்து அவற்றுக்கே பூஜிக்கும் வழக்கமும் உண்டு. எனவே, குடும்பம் நடத்த அந்த இடம் தோதில்லை என்பதால், நீலகண்ட தீட்சிதர் மனைவி மற்றும் பிள்ளைகள் அங்கே இல்லாமல், ஒரு அப்பார்ட்மென்டில் வசித்துவருகின்றனர்.
அப்படிப்பட்ட பிரம்மபாகத்தில்தான், குற்றாலம் கெஸ்ட் ஹவுஸில் தன்வயப்படுத்திய அந்த நாகம்கொண்ட பானையைத் தீட்சிதரும் கீழே வைத்திருந்தார். பக்கத்திலேயே பெட்டியிலிருந்து இடம் மாற்றிய ஏடுகள் மற்றும் பாஷாண லிங்கம்கொண்ட மூட்டை.
நாகமுள்ள பானைக்குள் சர்ப்பம் சீறுவதும் சுருண்டு புரள்வதும் பானை அசைவதிலும் காற்றுச் சப்தத்திலும் நன்கு தெரிந்தது. பானுவை அந்தக் காட்சி பயம்கொள்ளவைத்தது.
``தீட்சிதர் சாமி... பானை உடைஞ்சிடாதே? எனக்கு பயமா இருக்கு’’ என்றாள்.
“இந்த சர்ப்பத்தைப் பொறுத்து என்னால் எதையும் சொல்லமுடியாது. நீ கொஞ்சம் பொறுமையா இரு. நாம கொண்டுவந்த அபூர்வ லிங்கத்துக்கு நான் பூஜையை ஆரம்பிக்கிறேன். முதல்ல நாம குளிக்கணும். திரேக சுத்தி ரொம்ப முக்கியம்.”

“குளிக்கறதா… இப்பவா?” – பானு அலட்சியமாய்க் கேட்டாள்.
“ஆமாம்! ஒரு நாள் முழுக்கப் பயணம்செய்து வந்திருக்கோம். எனக்கு சுத்தம் முக்கியம்.”
“அப்போ நீங்க குளிச்சிட்டு என்ன வேணும்னா செய்யுங்க. நான் கிளம்பறேன்.”
“பைத்தியம் மாதிரி பேசாதே… ஏன் அவசரப்படறே?”
“அவசரப்படல சாமி… இப்போதான் நான் என் வாழ்க்கைலயே சரியா நடந்துகிட்டு வரேன். எங்க எம்.பியும் அந்த டெல்லி ஜோசியரும் இப்ப தவியா தவிச்சுட்டு இருப்பாங்க. நாம டூப்ளிகேட்டைவெச்சு அசலைக் கைப்பற்றினதும் அவங்களுக்குத் தெரியாது. இப்போ, நான் எங்க எம்.பியைப் போய்ப் பார்த்து, அந்த அமெரிக்க ஜோடி இருக்கிற இடம் எனக்குத் தெரியும்னு சொன்னா, எம்.பியும் ஜோசியரும் என்னை விடமாட்டாங்க. நான் என் உயிரைப் பணயம் வெச்சு ஏடுகளை மட்டும் கொண்டுவரேன்னு சொல்லி என் பிசினஸைத் தொடங்குவேன்.”
பானு கண்களில் கனவுகளுடன், அச்சு அசல் டி.வி சீரியல் வில்லிகளை ஒற்றி எடுத்தாள்.
“நீ என்ன வேணா பண்ணிக்கோ. இந்த லிங்கம் என்கிட்ட இருக்கறத பத்தி மட்டும் மூச்சு விடக்கூடாது. திரும்பவும் சொல்றேன், உனக்கும் சரி எனக்கும் சரி, இனி நடக்கிற எல்லாம் நல்லபடியா மட்டுமே நடக்கணும்னா, நாம லிங்க பூஜை அவசியம் செய்தாகணும். இந்தப் பூஜையும் பிரார்த்தனையும் அவ்வளவு சக்தி வாய்ந்ததாகும். கார்ல வர்ற வழியில நான் லிங்க பூஜை தொடர்பான ஏடுகளைப் படிச்சிட்டுதான் வந்தேன். இப்போ இந்த லிங்கம் 31 லட்சணங்களோடு இருக்கிற ஒச்ச லிங்கம். லிங்கத்தோட நெத்தியில் ஒரு குழி இருக்கு பார். அதுதான் ஒச்சம். அந்தக் குழியைக் குங்குமம்கொண்டு மூடும்போது, 32 லட்சணம்கொண்ட பூர்ணசக்தி லிங்கமா இது மாறிடும். அப்போ நாம கேட்கிறதைக் கொடுக்கும். குங்குமப் பொட்டு வெச்சா ஒரு பலன், சந்தனப் பொட்டு வெச்சா ஒரு பலன், மை வெச்சா ஒரு பலன். போகர் சித்தர் காரண காரியத்தோடு இப்படிப் பண்ணிவெச்சிருக்கார்.”
நீலகண்ட தீட்சிதர் சொன்னது எதுவுமே பானு காதில் விழவில்லை.
“சாமி… எல்லாத்தையும் நீங்களே பண்ணிக்குங்க. நல்லாவும் இருங்க. என்னோட நிலை உங்களுக்குத் தெரியலை. எங்க எம்.பியும் சரி, அந்த டெல்லி ஜோசியரும் சரி, இந்த நிமிஷம் எல்லாத் தில்லாலங்கடி வேலையையும் தொடங்கியிருப்பாங்க. என்னையும் தேடிட்டிருப்பாங்க. ஏன்னா, எங்க எம்.பியோட பல இல்லீகல் ஆக்டிவிட்டி பத்தி எனக்குத்தான் எல்லாம் தெரியும். ஆகையால், நான் ஒதுங்கிப்போனாலும் எம்.பி விடமாட்டார். என் வீட்ல என் அம்மா, என் சிஸ்டரை நான் எங்கே போயிருக்கேன்னு கேட்டு டார்ச்சர் பண்ணத் தொடங்கியிருப்பாங்க.”
“அவளுக்கு போன் பண்ணிக் கேட்டா விஷயம் தெரிஞ்சுட்டுப் போறது. இதை ஒரு பெரிய விஷயமா நினைச்சுப் பேசறியே?”
“என் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணிவெச்சிருக்கேன். ஆன் பண்ணினா அவ்வளவுதான்!”
“ஏன் வேற போன் இல்லையா? என் போன்ல பேசு!”
“பேசவே தேவையில்லை. எனக்கு அவங்களை நல்லா தெரியும். போலீஸும் அவங்க கையில. ஆகையால், பயங்கரமா எதையாவது பண்ணிட்டிருப்பாங்க. அவ்வளவு ஏன்... அந்த அமெரிக்க ஜோடிகளையே கண்டுபிடிச்சு அவங்களைக்கூட ஃபாலோ பண்ணிட்டி ருக்கலாம்.”
“இவ்வளவு தூரம் பேசிட்டி ருக்கிற நாழிக்கு, குளிச்சிட்டு வந்து பூஜையைத் தொடங்கி யிருக்கலாம்.”
தீட்சிதர் சலித்துக் கொண்ட போது, சர்ப்ப கடம் என்கிற அந்தப் பானை அப்படியே உருளத்தொடங்கியது.
“அடடா… ரொம்ப சீறுதே... இப்ப என்ன பண்ண?”
“பேசாம குழியைத் தோண்டிப் புதைச்சுடுங்களேன்.”
“அது பெரும் பாவம். இத்தன வருஷத்துல ஒரு சர்ப்பத்தைகூட நான் கொன்னது கிடையாது” என்றபடியே பானையை நிமிர்த்திவைத்து, வாய்த் துணியையும் இறுக்கிக் கட்டி, பானையையும் ஒரு கயிறுகொண்டு தூணோடு சேர்த்துக் கட்டத்தொடங்கினார் தீட்சிதர்.
“பேசினது போதும் பானு… போ, போய்க் குளிச்சிட்டு வா. நானும் குளிச்சிட்டு வரேன். நீ பாத்ரூமை யூஸ் பண்ணிக்கோ. நான் கொல்லைக் கிணத்தைப் பயன்படுத்திக்கிறேன். மங்கலமா பூஜை பண்ணுவோம். எல்லாத்தையும் அவன்ட்ட ஒப்படைச்சுடுவோம். நமக்கு அப்புறம் எல்லாம் நல்லதாவே நடக்கும்.”
“அப்போ இந்த லிங்கத்துக்கு இப்போ சக்தி கிடையாதா?”
“ஆமா! இது ஒச்சலிங்கம்தான். போகர் காரணமாகத்தான் இப்படிப் பண்ணியிருக்கார்.”
“இல்லையே… நான் மழை வேணும்னு வேண்டிகிட்டேன். நல்ல மழையும் பெஞ்சுகிட்டிருக்கே…”
“அது காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதையா நடக்கிற சமாச்சாரம். இதுகிட்ட எதை எப்படிக் கேட்கணும்னு முறை இருக்கு. போகர் மாதிரி சித்த புருஷாள் காரணம் இல்லாமலா இதை இப்படி ஊரைச் சுத்தி வர்ற லிங்கமா படைச்சிருக்கார்?”
“சரி, அப்படி முறையோடு நாம் பூஜைபண்ணி எதைக் கேட்டாலும் கிடைக்குமா?”
“குபேர சம்பத்துல இருந்து, இந்த லோகத்து ராஜாவா உலகை ஆள்ற பதவி வரை எதையும் தரும்னு ஏட்டுல இருக்கு.”
“அவ்வளவெல்லாம் வேண்டாம் சாமி. எங்க எம்.பி பிரதமராகணும். நானும் எம்.பியாகி ஒரு மந்திரியாகிடணும். ஏய் பானு… ஏய் செக்ரட்ரி, அல்லக்கை அப்படி இப்படின்னு என்னை அலட்சியமா கூப்பிட்டு வேலை வாங்கின அரசியல் வாதிகள், போலீஸ் காரர்களைப் பதிலுக்கு நான் சொடக்குப் போட்டுக் கூப்பிடணும். அவங்க என் கால்ல விழுந்து கிடக்கணும்… நடக்குமா?”
“இப்படி சந்தேகப்படுறத விடு. எதையும் முழுசா நம்பணும். முள்ளப் பிடிச்சாலும் முழுசாப் பிடிக்கணும். அரைகுறை ஆபத்து. இப்படிப் பேசிட்டே இருந்தா எப்படி? கிளம்பு… முதல்ல குளிச்சிட்டு வா. தலைக்கு விட்டுக்கோ… இந்தக் காலத்துப் பெண்களுக்கு இதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியிருக்கு” என்று தீட்சிதர் கொல்லைப்புறம் செல்ல, பானுவும் அரைமனதாய் பாத்ரூம் நோக்கிச் செல்லலானாள்.
சீறிக்கொண்டு பங்களாப் பிரவேசம் செய்த காருக்குள்ளிருந்து நான்கு பேர் திபுதிபுவென்று இறங்கினர். வாசலிலேயே காத்துக்கொண்டி ருந்தார் அந்த டெல்லி ஜோசியர் நந்தா. பின்னாலேயே கணேச பாண்டியன்.
கார் டிக்கியிலிருந்து பெட்டியும் இறங்கியது. வற்றாத அந்த விபூதி வாசம். தோட்டப் புல்வெளிக்குத் தண்ணீர் பீய்ச்சிக்கொண்டிருந்த மருதமுத்து, தண்ணீர் ட்யூபோடு திரும்பிப் பார்த்து விடைத்தான்.
பெட்டியைக் காணவும் நந்தா முகத்தில் வெளிச்சக் கும்மாளம். கணேச பாண்டி முகத்தில் புரிபடாத கலவரம்.
“சபாஷ்… சபாஷ்… சாதிச்சிட்டீங்கடா! அப்படியே பெட்டியக் கொண்டுபோய் ஹால்ல, அந்த முருகன் படத்துக்குக் கீழ வையுங்க’’ என்ற நந்தாவின் கட்டளையை அவர்களும் செயல்படுத்தினர்.
நான்கு பேரில் மூன்று பேர் வடநாட்டவர்கள். காதில் கடுக்கன், பான்பராக் என்கிற வடநாட்டு அப்பட்டங்கள் அவர்களிடம். ஒருவன்தான் உள்ளூர். அவன்தான் `சலோ… சலோ...’ என்று அவர்களை வழிநடத்தி, பெட்டியை முருகன் படத்துக்குக் கீழே இறக்கினான்.
மருதமுத்து பக்கவாட்டில் வந்து ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டிருக்க, ஹாலுக்கு முத்துலட்சுமியும் வந்து பெட்டியைப் பார்த்து, “இது திரும்ப வந்துடிச்சா... ஈஸ்வரா…” என்று கன்னத்தில் போட்டுக்கொள்ள, ஒரு சக்கர நாற்காலியில் ஏகப்பட்ட முகச்சுளிப்புகளோடு எம்.பி ராஜா மகேந்திரனும் ஹாலுக்கு வந்து பெட்டியைப் பார்த்திட,
“க்யாஜி… க்யா? பெட்டியைக் கொண்டு வந்துட்டேன் பாத்தீங்களா… இந்த நந்தா சொன்னா சொன்னதுதான். அது பிரம்மாவே சொன்ன மாதிரி” என்று தன் ஜிப்பாவை இழுத்துவிட்டுக்கொண்டு, ஒரு மாதிரி தெனா வெட்டாகப் பேசிட,
“உள்ளே ஓப்பன் பண்ணிப் பார். நான் அந்த லிங்கத்தைப் பார்க்கணும்” என்றார் ராஜா மகேந்திரன். அதைத் திறக்கச் சொல்லவுமே நந்தாவிடம் திணறல்!
`திருப்புளிச் சங்கரம்’ என்கிற எழுத்துகள் பல்லிளித்திட, தாடையைத் தடவலானான் அந்த ஜோதிடன்.
“என்ன நந்தாஜி யோசனை?”
“ஆமாமா… இதைத் திறக்க அந்த எழுத்தாளரே ரொம்ப கஷ்டப்பட்டாரு. ஸ்க்ரூ டிரைவரை வெச்சுட்டு திருப்பித் திருப்பி ரொம்ப நேரம் சிரமப்பட்டுதான் திறந்தாரு” என்றாள் முத்துலட்சுமி.
“என்ன நந்தாஜி, அம்மா இப்படிச் சொல்றாங்க. அது என்ன மெக்கானிசம்?’’
“சித்தர் சமாச்சாரம்னா சும்மாவா? ஆனா, திறந்துடலாம் டோண்ட் ஒர்ரி!”
“அப்படியெல்லாம் திறக்கமுடியாது. அது ஒரு கணக்கு. அது தெரியணும்”-திரும்பவும் முத்துலட்சுமி.
“எனி சீக்ரெட் நம்பர்… நம்ப டிஜிட்டல் லாக்கர் மாதிரியா?”
“எதுவா இருந்தா என்ன? முடியாட்டி ரம்பம் வெச்சு அறுத்துத் திறப்போம். என்ன இப்போ?” – நந்தா அலட்சியமாகச் சொன்னது மட்டுமல்ல...
“ஜி… ரம்பம் கொண்டுவரச் சொல்லுங்க உங்க ஆளுங்ககிட்ட” என்றான்.
சற்றுத் தள்ளி மேஜை மேல், அந்தச் சுடலை மாடன் வாள்!
“ரம்பம்லாம் வேண்டாம். அந்த எழுத்தாளருக்கு போன் பண்ணிக் கேட்டா சொல்லிட்டுப் போறாரு” என்ற முத்துலட்சுமியை முறைத்துப் பார்த்த ராஜா மகேந்திரன்,
“அந்த எழுந்தாளன் இப்போ நமக்கு எதிரி… தெரிஞ்சுக்கோ! உன் பேத்தியோடு குற்றாலத்துலதான் இருக்காங்க. இந்தப் பெட்டியை நாம கடத்திட்டு வந்ததும் அவங்களுக்குத் தெரியாது. அவங்களுக்குத் தெரியவும் கூடாது புரிஞ்சிச்சா?”
ராஜா மகேந்திரன் உணர்ச்சிமயமாகிக் கத்தவும், “சரிடா... நீ கத்தாத! உனக்குத் திரும்ப ஏதாவது வந்துடப்போகுது” என்றாள் முத்துலட்சுமி.
“கணேச பாண்டி… என்னய்யா பாத்துக்கிட்டு நிக்கற. போய் ரம்பம் சுத்தின்னு எல்லாத்தையும் எடுத்துட்டு வா” – ராஜா மகேந்திரனின் கட்டளைக் குரல், கணேச பாண்டியைத் துரத்த, அவ்வளவையும் பார்த்தபடி இருந்த மருதமுத்துவின் கைக்பேசியில், “நான்தான்டா இனிமேலு… வந்து நின்னா தர்பாரு” என்கிற ரஜினியின் அலப்பறை.
மிகவேகமாகப் பின்னோக்கிப் போய், சப்போட்டா மரத்தடியில் நின்று காதைக் கொடுத்தவனுக்குள் பாரதிதான் புகுந்தாள்.
``மருதமுத்து, நான் பாரதி பேசறேன்…”
“அம்மா…”
“என்ன பண்ணிகிட்டிருக்கே, பங்களாவுல தானே இருக்கே?”
“ஆமாம்மா… நல்ல நேரத்துல போன் பண்ணுனிங்க” என்று ஆரம்பித்தவன், பெட்டியை அறுத்துத் திறக்க கணேச பாண்டியன் போயிருப்பது வரை சொல்லிமுடித்தான்.
- தொடரும்