மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இறையுதிர் காடு - 72

இறையுதிர் காடு
பிரீமியம் ஸ்டோரி
News
இறையுதிர் காடு

பலர் மலைச் சிகரம் மேல் ஓர் ஒழுங்கின்றி ஏறிக்கொண்டிருந்தனர், தண்டபாணியை தரிசிக்க.

அன்று அந்தப் பங்குனி உத்திரத் திருநாள், பொதினி மலையையே ஒரு கோயிலாக மாற்றிவிட்டது. பெரிதாய் எந்த ஆகம பூர்வமும் இல்லை. அக்னி வேள்வியோ, ஆஹுதிப் பொருளோ எதுவும் தரப்படவில்லை. அஷ்டதிக் பாலகர்களுக்கு நிவேதனமோ, அண்ட விளக்குகளான சூரிய சந்திரருக்கு ஆரத்தியோ, முப்பத்துமுக்கோடி தேவர்களுக்குத் தோத்திரமோ துதியோ எதுவுமில்லை.

ஒரு சித்தனின் மனம் கெழுமிய தத்துவச் செயல்பாடு. மிக எளிதான ஒரு வெட்டவெளி ஆலயமாய் அங்கு ஓர் ஆலயம் வந்தது மட்டுமல்ல, அதை இறைவன் அங்கீகரித்துத் தன் சாந்நித்தியத்தையும் உணர்த்திவிட்டான். நான் இந்த நவபாஷாண உடலுக்குள் ஐக்கியமாகிவிட்டேன். இது இனி பாஷாணச்சிலை இல்லை. பாஷாணங்களால் ஆன அருள் மிகுந்த பாலமுருகனின் சிலை. அந்தப் பாலமுருகனும் மயில் மேல் ஏறி விளையாடிடும் குறும்பனில்லை, தண்டம் பிடித்த தண்டபாணி! வேலிருக்கும் இடத்தில், அதாவது அது இருக்கவேண்டிய இடத்தில் தண்டக்கோல். காலுக்கு முன்னால் கொம்பு முளைத்தால் கோல். இது காலுக்குக் கால், கோலுக்குக் கோல்!

என்னை உற்றவரை நான் தாங்கியும் நிற்பேன், தாங்கியும் பிடிப்பேன் என்று சொல்லாமல் சொல்லும் கோலம்! நான் தாங்கி நிற்பவன் மட்டுமா? தாங்கிப் பிடிப்பவனும் மட்டுமா? நானே மருத்துவன் – நானே மருந்து!

பிறவிப் பிணிக்குப் பெருமருந்து!

சந்தனம் தரித்த முருகன் இவ்வாறெல்லாம் பேசுவதாகத்தான் போகர் பிரான் கருதினார்.

ஒரு நல்ல சித்தனுக்கு இருநீர் கிடையாது. ஒன்று கண்ணீர். இன்னொன்று வியர்வை நீர். இங்கே இவ்வேளை அந்த இலக்கணம் உடைந்து, போகருக்குக் கண்ணீர் துளித்தது.

ஆனந்தக் கண்ணீர்.

அவரே சிலிர்க்கும்போது மற்றவர்கள் எம்மாத்திரம்?

கிழார்கள் சிலிர்த்துக் குழைந்தே போயிருந்தனர்.

“பிரானே… உங்கள் அருளால் அம்பிகை, ஐயன், அவன் புதல்வன் என்று சகலர் தரிசனமும் வாய்க்கப்பெற்றோம். எங்கள் சந்தனத்தை உவந்து ஏற்று இந்த ஞானப்பிள்ளை எங்களையெல்லாம் ரட்சித்துவிட்டான்” என்றனர்.

“குரு மகானே... இந்த ஆலயம் காலங்களை விஞ்சி ஒரு பெரும் அருட்கோட்டமாய் திகழப்போவது மிகவே உறுதி. ஒரே ஒரு கேள்வி… அதுவும் இப்போதுதான் தோன்றியது. கேட்கலாமா?” என்று ஓர் ஊர்க்காரர் கேட்டார்.

“குரு மகானே… பொதுவாய் ஆலயத்து மூர்த்தங்கள் கிழக்கு பார்த்தல்லவா அமர்வர் அல்லது நிற்பர்? ஆனால், இங்கோ அஸ்தமன திசையான மேற்கு பார்த்து நிற்பதன் காரணம் யாதோ?” என்கிற அவர் கேள்வி, அவர் அப்படிக் கேட்ட பிறகே மற்றையோர் மனதிற்குள்ளும், `அடடே… இது நமக்குத் தோன்றவில்லையே’ என்று எண்ணவைத்தது.

இறையுதிர் காடு - 72

“உங்கள் கேள்வியிலேயே மறைவாக பதிலைக் கூறிவிட்டீர்… மேற்கு அஸ்தமன திசை. குளிர்ந்த மாலைப் பொழுதுக்கான திசை. அதைத் தொடர்வது இருள். நடமாடித் திரிந்த உடல், மண்மீது கிடக்கப்போவதும் இந்த இருளில்தான். மனம் குளிர்ந்தும் தெளிந்தும் கிடக்க, தேவை அருள் ஞானம். அதையே நான் வாரித் தருபவன் என்று சொல்லாமல் சொல்கிறான் இந்தத் தண்டபாணி!”

- என்று மேற்கு நோக்குக்குரிய பதிலைக் கூறிய போகர் பிரான், புலிப்பாணியை அருகழைத்து, “புலி… நான் அருளியவற்றில் ஞான பூஜா விதியை அடிப்படையாகக்கொண்டு இங்கே தினசரி பூஜைகளை வகுத்துச் செயல்படுத்து. இன்று தொடங்கிடும் இப்பூசனைகள் இப்பூவுலகமே பிரளயத்துக்கு ஆட்படும்போதும் தடையின்றி நடந்திட வேண்டும். ஒரு நாள் ஒரு பொழுதும் இடையறாச் செயல்பாடாக அது திகழ்ந்திட, அதற்குரிய காலகதியில் அதன் முதல் பூசனையைத் தொடங்குவாயாக” என்றார்.

பின்னர், கிழார் பெருமக்களிடம், ``தாங்கள் என்னைக்கொண்டு எழுதிய நூல்களைப் பட்டியலிடுங்கள் பார்ப்போம்” என்றார்.

இருட்டிவிட்ட நிலையில், தீப்பந்த ஒளியில் தண்டபாணியின் சந்தனக் காப்புத் திருவுரு முன் அவர்களும் கூறலாயினர்.

“பிரானே... ஞானசூத்திரம், திருமந்திரஞானம், சிவயோக ஞானம், பூஜாவிதி, அட்டாங்க யோகம்… இவற்றை நான் படி எடுத்தேன்” என்றார் வேல்மணிக்கிழார்.

``பிரானே... மூப்பு சூத்திரஞானம், ஞான கற்பசூத்திரம், ஜெனை சாகரம், நிகண்டு 1200 போன்றவை நான் படி எடுத்தவையாகும்” என்றார் கார்மேகக்கிழார்.

“பிரானே... ஞான கற்பசூத்திரம், ஞான சாராம்சம், ஏழாயிரம் மெய் ஞானபோகம், உபதேச ஞானம், பல திரட்டு ஆகியவை நான் படி எடுத்தவை” என்றார் அருணாச்சலக்கிழார்.

“இவையன்றி நான் சீனத்திலும், இமயத்திலும் அமர்ந்து என் கைப்பட எழுதியவை என்று சில உண்டு. கருவி ஞானம், விருட்ச மகோன்னதம், பட்சிபாவம், அன்னகோசம் போன்றவையே அவை. வரும் நாளில் நான் ஜீவசமாதி ஆன நிலையில், எல்லா ஏடுகளும் பத்திரமாய்ப் பாதுகாக்கப்பட வேண்டும். இவற்றோடு, சித்தர்கள் பலரின் ஞானத்தால் விளைந்த காலப்பலகணி, ரசவாதம், வினைச்செயல் முடிவு, பிரசன்னதருணம் இவற்றை நான் ஜெகவலலிங்கத்தோடு வைத்து, உலகை வலம்வரச் செய்ய விரும்புகிறேன். அவ்வாறு அது வலம்வரும் சமயம், நானே அதைத் தேவைக்கேற்பப் பயன்படும்படியும் செய்வேன். எனது பிரசன்னம் எந்த உருவிலும் இருக்கும். எந்த வடிவிலும் இருக்கும்… நாளை காலை ஜெகவலலிங்கம் யாருக்கு என்பது முடிவாகும் தருணமாகும்” என்று எல்லோர் காதிலும் விழும்படியாகச் சொல்லிமுடித்தார் போகர்.

“போகர் பிரானே… இப்படித் திறந்த வெளிக் கோயிலாக இருப்பதற்கு, மாமதுரைச் சொக்கன் ஆலயம்போல, திருவரங்கப் பெருமான் ஆலயம்போல, ஏன் கடலுகந்த செந்தூர் ஆலயம் போலும் இதைக் கோபுரக் கோட்டமாய் ஆக்கிடலாம்தானே?”

“ஆகும்… ஐயம் வேண்டாம்! காலத்தால் எல்லாம் நிகழ்ந்திடும். கோபுரம், கொடிமரம், நுழைமுகம் எனும் அனைத்தும் ஆன்மிக ஞானம் மட்டுமல்ல, அது ஒரு விஞ்ஞானம். வரும் நாளில் விஞ்ஞானம் வளர்கையில் அது கோயில்களை ஒட்டியே இருக்கும். கூர்ந்து கவனிப்போர்க்கு அது தெரியவும் வரும். எந்திரம், மந்திரம், தந்திரம் என்னும் மூன்றின் வழி, அருட்கதிர்கள் பரவிடும். அனுதினமும் வழிபாடுகளால் தூண்டப்பட்டு, அக்கதிர்க் கூட்டம் வானில் மேகம் சூழ்ந்திருப்பதுபோல, அதனூடே சூழ்ந்துகிடக்கும். அவ்வாறு அருட்கதிர்க் கூட்டம் சூழப்படாத நிலையில், அது சூழப்படாத இடத்தில், பஞ்சபூதங்கள் சமச்சீர் நிலையை இழக்கும். மழை பொய்க்கும். அன்றேல் வெப்பமிகும், அதுவுமில்லாவிடில் காற்றால் சேதம், விளைவுக் குறைவு, மாந்தர் மனதில் அமைதியின்மை என்று அது எதிரொலித்திடும். எனவே, பஞ்சபூதங்கள் சீரான பலத்தோடு திகழவும், மழை குன்றாதிருக்கவும், மக்கள் மன அமைதியோடு வாழவும், அன்றாட பூஜைகளும் அதன் வினைப்பாடுகளும் முக்கியம். இறைவன் படைத்த உலகில், இறைவனைக்கொண்டு இதை நிகழ்த்துவதும் அவனருளால்தான். ஆனால், இவ்வினைக்கும் இறைக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. நம்மை வணங்கச் செய்ய அவன் விரும்பினால், அதற்கு ஒரு நொடி என்பதும் அதிக காலமே. தான் வணங்கப்படவேண்டும் என்று அவன் நினைத்த மாத்திரத்தில், உயிர்களிடம் அது நிகழ்ந்து முடிந்துவிடும். ஆனால், அவன் அவ்வாறு எண்ணுபவனல்லன். அவனை மறுக்கும் உரிமையையும்கூட அவன் தந்துள்ளான். உண்டென்றால் உண்டு, இல்லை என்றால் இல்லை. அவ்வளவே!

எனவே, ஒரு நீர் நிலையை நாம் பயன்படுத்திக்கொள்ள விழைவது போன்றதே கோயிலும். இதைத் தெளிவாய்ப் புரிந்து செவ்வனே செயல்படுவதே பகுத்தறிவாகும்…” - போகரின் வியாக்கியான முடிவில், தண்டபாணித் தெய்வத்துக்குக் கற்பூர ஆரத்தி காட்டப்பட்டது.

ஆனந்த தரிசனம். அதன்பின் அனைவருக்கும் விபூதி வழங்கப்பட்டது. சிலர் போகர் கரங்களால் இடச்செய்துகொண்டு, தங்கள் புருவ மையத்தைத் திறந்துகொண்டனர். இரு கைகளையும் நீட்டச் சொல்லி, இரண்டு சிட்டிகை விபூதி தரப்பட, ஒன்று மேனிப் பூச்சாகியது. ஒன்று நாவில் விழுந்து கரைந்து மருந்தாகியது. போகரின் உதவியாளர்களில் ஒருவனான கம்பண்ணன், இதற்காகவென்றே பசுஞ் சாணியை உலர்த்திக் காயச் செய்து, பின் அதனுடன் நெய், பச்சைக் கற்பூரம். மிளகு ஆகியன சேர்த்து, அதைச் சாம்பலாக்கி, சாம்பலைச் சலித்து வில்வப் புடங்களில் இட்டு நிரப்பி எடுத்துவந்திருந்தது வசதியாகிவிட்டது.

முன்பே அது அருமருந்து. தண்டபாணியின் பாஷாண மேனி மேல் அபிஷேகிக்கப்படவும், அதுவும் கலந்து மாமருந்தாகிவிட்டது.

போகர் விபூதி தீட்சை தந்தவராக அக்குன்றை விட்டு இறங்கத் தொடங்கினார். உடன் நடப்போர் அரமுழக்கம் மீட்டியபடியே சென்றனர்.

தண்டாயுதபாணிக்கு அரோகரா…

போகர் பிரானுக்கு அரோகரா…

குருமகானுக்கு அரோகரா…

குமரக் கடவுளுக்கு அரோகரா…

மறுநாள் காலை.

விடிந்தும் விடிந்திராத அக்காலை வேளையில், மலை உச்சியில் மணி சப்தம் ஒலித்தது. அது, கீழே கொட்டாரத்தில் இருந்த போகரின் காதுகளில் மட்டுமல்ல, அவர் முன் குழுமியிருந்த சகலரின் காதுகளிலும்… எல்லோரும் அப்படியே முகத்தைத் திருப்பி மலை உச்சியைப் பார்த்து, கன்னத்தில் போட்டுக்கொண்டார்கள்.

பலர் மலைச் சிகரம் மேல் ஓர் ஒழுங்கின்றி ஏறிக்கொண்டிருந்தனர், தண்டபாணியை தரிசிக்க.

போகருக்கு வலப்பக்கமாய் மரப்பெட்டியும், பெட்டி மேல் அந்த நவபாஷாண ஜெகவலலிங்கமும் இருந்திட, அதன் முன் போகர் குறிப்பிட்ட ஏட்டுக்கட்டுகள். மேலும், சில ரசமணிகள், ருத்திராட்ச மாலை, சிறு கமண்டலம். அதுபோக, விபூதிச் சம்புடத்துடன் உதிரியாக வில்வ இலைகளும் இருக்க, முன்னால் ஒரு நெய் தீபம் சுடர்விட்டு எரிந்துகொண்டிருந்தது.

நெய்தீபம் எரியும் தாம்பாளத்தில், லிங்கம் தங்களுக்கு வேண்டும் என்று விரும்பிக் கேட்டிருப்போரின் பெயர்கொண்ட ஏட்டுக்கட்டு.

எண்ணிப் பார்த்தபோது 48 பேர் கேட்டிருந்தனர். அந்த எண்ணிக்கையே போகருக்கு ஒரு வியப்புதான். அதைப் புரி கொண்டு பிளந்து பார்த்திட, எந்த ஏடு வருகிறதோ அந்த ஏட்டுக்கு உரியவரே ஜெகவலலிங்கத்தை எடுத்துச்சென்று வழிபட உரிமை உடையவராவார்.

வரும் சித்ரா பௌர்ணமி நாள்தொட்டு, மிகச் சரியாக 12 பௌர்ணமி காலம் அவர்வசம் இந்த லிங்கம் பூசனைக்குரியதாக இருக்கும். 13ஆம் பௌர்ணமி தொடங்கிடும் நாளன்று இந்த லிங்கத்தை, மற்றுமுள்ள யாவற்றையும் சிரம் மேல் வைத்துச் சுமந்து வந்து, பொதிகை மலைமேலுள்ள சித்தன் பொட்டலில், போகரின் குகையில், போகர் திருவுரு முன் ஒப்படைத்து விட வேண்டும். எக்காரணம் கொண்டும் இதில் பிசகல் கூடாது. இதைப் பிரஸ்தாபிப்பது, பெருமைகொள்வது, இதைப் பயன்படுத்தி அதிசயங்கள் நிகழச் செய்வது என்கிற எல்லாமே தவறாகும். அது குரு சாபத்தையும் அளித்துவிடும். அதேசமயம், உலக நன்மையின் பொருட்டு குருதேவரிடம் உத்தரவு கேட்டு, குருநாதர் உத்தரவளித்தால், ஏடுகளையோ இல்லை லிங்கத்தையோ உலக நலன் பொருட்டுப் பயன்படுத்தலாம். இடைப்பட்ட காலத்தில் வனக் கொண்டாட்டம் துளியும் தவறிடக் கூடாது. இவ்வாறு 12 வருடங்கள் மிகச் சரியாக நடந்துகொள்பவரின் தலைமுறைகள் அத்தனை பேரும் நோயற்ற வாழ்வு, குறையில்லாத செல்வம், நன்மக்கட் பேறு, பொலிந்த உடல், சிறந்த கல்வி, அழகிய மனைவி, அருளுடைய பிள்ளைகள், அரண்மனை போல வீடு, அள்ளக் குறையாத நெல் என்கிற நவநிதிகளைப் பெற்றுச் சிறப்பர்.

போகரின் இக்கருத்தை எடுத்துக் கூறிய நிலையில், ஜெகவலலிங்கத்துக்கான பூஜையைச் செய்துமுடித்து, இறுதியாக அந்த ஏட்டுக்கட்டையும் எடுத்து பாலாவை போகர் பிரான் எண்ணவும், அக்கூட்டத்திலிருந்த ஓர் இளம் பெண் எழுந்து நின்று சிரித்தாள்.

இறையுதிர் காடு - 72

போகரும் அவளை அருகில் அழைத்து, “வா தாயே வா” என்றிட, அப்பெண்ணும் அருகில் சென்று நூற்புரிகொண்டு ஏட்டுக்கட்டைப் பிரித்திட, பிரித்த இடத்தில் இருந்த ஏட்டைப் பார்த்தார் போகர்.

‘ஆரூர் சம்பந்தன் என்கிற பந்தநாடன்’ என்கிற பெயர் கண்ணில் பட்டது. அந்த பந்தநாடனும் கூட்டத்தில்தான் இருந்தார். உடல் சிலிர்க்க எழுந்து நின்றார். அவரை அருகில் அழைத்து, “நீ கொடுத்து வைத்தவனப்பா” என்றார். பின், அவரைத் தனியே அழைத்துக்கொண்டு தன் குடிலின் தியான பாசத்துக்குச் சென்றவர், அவரை அமரச்செய்து எதிரில் தானும் அமர்ந்துகொண்டார்.

போகர் என்ன கூறப்போகிறாரோ என்கிற தவிப்பு, துடிப்பு அவரிடம்.

“பந்தநாடா… நீ அதிர்ஷ்டசாலி! அதனால்தான் என்னைக் கண்டாய். பின் இந்த லிங்கத்தைப் பெற்றிடும் பேற்றுக்கும் ஆளாகியுள்ளாய். நான் இதனை வரும் சித்ரா பௌர்ணமி நாளன்று உன் வசம் ஒப்புவிப்பேன். அதன்பின் 12 வருடங்கள் இது உன் சொத்து. உலக நன்மைக்காக மட்டுமே வணங்க வேண்டும். ஏடுகளைப் பயன்படுத்தும் தேவை ஏற்பட்டால், என்னை நினைத்து உளமறிய முயலு, நான் ஓடிவந்து பதில் தருவேன். உனக்கு நான் மந்திரோபதேசமும் செய்ய விரும்புகிறேன். அது பஞ்சாட்சர உபதேசம். நீ அதைத் தினமும் தியானிப்பாயாக.

நான் விரைவில் முக்தி அடைந்துவிடுவேன். அதன்பின், என்னை சுவேத உடலோடுதான் காணமுடியும். என்னைக் கண்டதையும் காண வேண்டியதையும்கூட ரகசியமாக, பிறர் அறியாதபடி வைத்திட வேண்டும்.

இது கலிகாலம். எல்லோரும் கர்மக் கணக்குக்கு உட்பட்டவர்கள். அவரவர் துன்பத்துக்கும் இன்பத்துக்கும் அவர்களே காரணம். இதில் துன்பத்தை அனுபவிக்கையில், அதிலிருந்து மீண்டிட எதையும் செய்வர். இப்படி எதையும் செய்பவர்களின் புகழுக்கும் பாராட்டுக்கும் ஆசைப்படுவது இழிவு. இதையெல்லாம் புரிந்து நடந்துகொள். உன்னில் தொடங்கும் இந்த ஜெகவலலிங்கப் பயணம் காலம் உள்ள அளவும் தொடர்ந்தபடியே இருக்கட்டும்” என்று கூறி, அவர் காதில் பஞ்சாட்சர உபதேசத்தையும் செய்து, சிரத்தில் கை வைத்து தீட்சையும் வழங்கினார். பந்தநாடனும் தீட்சை பெற்றவராய் போகர் பிரானை வணங்கினார்.

அப்படியே, “பிரானே… பொதிகைச் சாரலுக்கு, அதிலும் அங்குள்ள சித்தன் பொட்டலுக்கு என்னால் எப்படி வர இயலும்? திருவாரூரிலிருந்து தங்களைப் பற்றியறிந்து நான் இங்கு வந்து சேரவே ஒரு மாதத்துக்கும் மேலாகிவிட்டது. அப்படி இருக்க அங்கே என்னால் எப்படி வர இயலும். இந்த லிங்கத்தை இங்கேயே ஒப்படைக்கலாமே?” என்றார்.

“உன் கேள்விகளின் பொருள் புரிகிறது. ஆயினும் நான் சகலத்தையும் உத்தேசித்தே பொதிகை உச்சிக்கு வரச் சொன்னேன். அந்த உச்சி பாகம் அனைத்து சித்தர் பெருமக்களும் நடமாடித் திரியும் இடமாகும். அது கயிலைக்குக் கயிலை, வைகுண்டத்துக்கு வைகுண்டம். இந்தப் பொதினி தண்டபாணிக்கு மட்டுமே உரியது. சித்தன் பொட்டலோ, இவன் தந்தைக்கு உரியது. இவன் தந்தையல்லவா அந்த லிங்கன்?

கையில் இந்த லிங்கமுடன் வருவோர்க்குத் தானாய் அங்கே வழி பிறக்கும். இயற்கை இசைந்து வழிவிடும். உயிரினங்கள் உதவுமேயன்றி, உத்பாதம் செய்யாது. எல்லோராலும் வரமுடிந்த ஒரு பாகமல்ல அது. குறிப்பாக, ஆசையுள்ள மனிதர்களுக்கு அங்கு வர அனுமதியில்லை. மீறி வருவோர் தங்களையே இழப்பர். இருந்தும் இல்லாது போவர்.

போகட்டும்… நீ சித்திரைப் பௌர்ணமியன்று இங்கு வந்துவிடு. நான் உன்னை அங்கு அழைத்துச் செல்கிறேன். அதுவரை பஞ்சாட்சரத்தை உபாசனை செய். தண்டபாணியை வழிபாடு செய். உன் அன்றாட உணவுப் பழக்கங்களில் மாற்றத்தைச் செய்துகொள்.

குருதி செறிந்த புலால் உணவை நினைத்துக்கூடப் பார்க்காதே” என்றிட, பந்தநாடனும் கண்கள் பனித்திட அவரை மீண்டும் வணங்கினான்.

ஒரு சித்த செயல்பாடு இப்படித்தான் தொடங்கியது. இதன் தொடர்ச்சியில்தான் 1920ஆம் வருட சித்திரைப் பௌர்ணமியும் வந்தது. அந்தப் பௌர்ணமிக்கான சில தினங்களுக்கு முன்னான ஒரு காலைப் பொழுது, பல்லாவரம் பிரம்மாண்டம் ஜமீனுக்கு ஒரு பேரிடிப் பொழுதாய் விடியத் தொடங்கியது. ஜமீன் வாயிலில் வந்துநின்ற ஒரு சாரட் வண்டியிலிருந்து இறங்கி நின்றாள் அன்னபூரணி மகாதேவி. ஆறடி உயரத்தில் அகலக்கரை பட்டுப் புடவை உடுத்தி, சீவிச் சிங்காரித்து சீடை அளவிலான குங்குமப் பொட்டுடன், மல்லிகைச் சரம் இரு தோள்களிலும் புரண்டு கிடக்க, கால் கொலுசு சப்திக்க அவள் உள்வரத் தொடங்கியபோது, பிரம்மாண்ட ராஜ உடையாரும் அவர் பத்தினியுமான சுந்தரவல்லி என்கிற சிட்டாளும் அவள் கால்களுக்கு மலர்களைத் தூவித்தான் வரவேற்றனர்.

அவள் அதை மிக ரசித்தாள். சற்று நின்று அந்த மாளிகையின் லாவண்யம் அவ்வளவையும் ஒரு பார்வை பார்த்தவள், ‘இதன் வாரிசு இனி என் வாரிசு’ என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டாள். ஆனால், பிரம்மாண்ட ராஜ உடையார் மனம் உடைந்து கண்ணீரோடுதான் பூ தூவிக்கொண்டிருந்தார்.

புராணத்தில் நகுலன் என்கிற பாம்பை, இந்திரன் வரவேற்ற சம்பவம் அவர் ஞாபகத்தில் வந்து, அப்படியே பாதியில் திரும்பவும் செய்தார்.

அது அன்னபூரணி மகாதேவியை மிகவே பாதித்துவிட்டது.

“நில்…” என்றாள் அதிர்குரலில்!

இன்று சீரான வேகத்தில் ஓடிக்கொண்டிருந்த காருக்குள் பாரதி பேசிக்கொண்டு வர, அரவிந்தன் காரை ஓட்டிக்கொண்டிருந்தான். சமயபுரத்தைக் கடந்து கார் சீறிக்கொண்டிருந்தது. மருதமுத்து சொன்ன விஷயங்களால் பாரதி முகத்தில் பலத்த திகைப்பு. ஸ்பீக்கரில் போன் இருந்ததால், அரவிந்தன் தனியே கேட்கத் தேவையில்லாத ஒரு நிலை.

“நான் இப்ப என்னம்மா பண்ணட்டும், நீங்க இப்ப எங்கே இருங்கீங்க?” – மருதமுத்துதான் கேட்டான்.

“நான் வந்துட்டு இருக்கேன். இப்பத்தான் திருச்சியைத் தாண்டியிருக்கோம்.”

“அப்போ குற்றாலத்துல இல்லீங்களா?”

“பெட்டி இங்கே இருக்கும்போது அங்கே எங்களுக்கு என்ன வேலை?”

“அப்ப இந்தப் பெட்டியை இவங்க களவாண்டுட்டு வந்துட்டாங்களா?”

“ஆமா… அப்பா தப்புக்கு மேல தப்பா பண்ணிகிட்டே போறாரு.”

“ஆமாம்மா… ஆனா, இப்போ தெம்பா இருக்காரு. நடக்க முடியாட்டியும் வீல்சேர்ல உக்காந்துகிட்டு வந்து பழைய மாதிரியே ஒரே மிரட்டல்.”

“நான் திட்றேன், நீ மெச்சறியா?”

“எனக்கு முதலாளிம்மா.”

“அவர் முதலாளி இல்ல… முதலை... யாழி!’’ – பாரதி மருதமுத்துவிடம்கூட அப்பா என்றெல்லாம் பார்க்காமல் நடுநிலையோடு பேசுவதை அரவிந்தன் ரசித்தான்.

இடையிட விரும்பியவனாய், “மருதமுத்து… அந்தப் பெட்டிக்கு எந்த சேதமும் ஏற்படக் கூடாது. அவங்க என்ன செய்யறாங்கன்னு வீடியோ எடுத்து அனுப்ப முடியுமா உன்னால?”

“அனுப்புறேங்க.”

“உனக்கு வீடியோ எடுத்து அனுப்பத் தெரியுமா?”

“என் பொண்ணு சொல்லிக் கொடுத்திருக்குங்க.”

“சபாஷ்… அப்பா மகளுக்குச் சொல்லிக்கொடுத்தது அந்தக் காலம். மகள் அப்பாக்குச் சொல்லித்தர்றதுதான் இந்தக் காலம். நீ ஜாக்கிரதையா அதைச் செய்” என்றபடியே காரை வேகமாக ஓட்டி முன்சென்றுகொண்டிருந்த ஜெயராமன், திவ்யப்ரகாஷ்ஜியின் காரைக் கடந்து சைகை காட்டி, சாலை ஓரமாக நிறுத்தினான்.

அவர்களும் இறங்கினார். பின்னாலிருந்து சாந்தப்ரகாஷும் சாருபாலாவும் இறங்கினர்.

சாலையோரப் பூமரம் தரை முழுக்கப் பூக்களை உதிர்த்து மலர்ப்பாதை ஆக்கியிருந்தது. அதன் நிழலில் காரின் ஏ.சி குளிரை மீறிய ஓர் இதம்.

“என்ன அரவிந்த் எதுக்கு நிறுத்தினே?” என்று ஆரம்பித்தார் ஜெயராமன்.

“சார்… பெட்டி இப்போ பாரதி பங்களாவுலதான் இருக்கு. பாரதி சந்தேகப்பட்டது ரொம்ப சரி. அந்தத் திருட்டுக் கூட்டம், பாரதி அப்பா மற்றும் அந்த ஜோசியன் ஏற்பாடு. அதோட லாக் சிஸ்டம்தான் இப்போ நமக்கு உதவிக்கிட்டு இருக்கு. அதைத் திறக்க முடியாம உடைக்கப்போறாங்க.”

“அடக் கொடுமையே… பாரதி, இப்போ என்ன பண்றது? நாம என்ன ட்ரை பண்ணாலும் நாலு மணி நேரமாகுமே போய்ச்சேர.”

“சார், இப்பவே இங்கிருந்து நாங்க போன் மூலமா போலீஸ் கம்ப்ளெயின்ட் கொடுத்து, பெட்டியைத் திறக்கவிடாமச் செய்ய முடியும்தானே?” சாந்தப்ரகாஷ் அழகாய் எடுத்துகொடுத்தான்.

“அது ஒரு நல்ல ஆப்ஷன்தான். ஆனா, என் அப்பா அதையெல்லாம் சமாளிச்சுடுவார். சட்டத்தாலயோ, போலீஸாலயோ இப்போ நமக்கு உதவமுடியாது. தந்திரமா ஏதாவது செய்தாதான் உண்டு!”

“தந்திரமான்னா… எப்படி பாரதி?”

“யோசிங்க… யோசிப்போம்… நமக்கு உதவ இப்போ அங்கே மருதமுத்து இருக்கான்.”

இறையுதிர் காடு - 72

“அவன் ஒரு தோட்டக்காரன். அவனால என்ன செய்திட முடியும்?”

இப்படி சாலை ஓரமாய் நின்று அவர்கள் பேசிக்கொண்ட நிலையில், ஜெயராமன் மட்டும் திவ்யப்ரகாஷ்ஜியைப் பார்த்தார்.

“என்ன சார் அப்படிப் பார்க்கறீங்க?”

“இந்த மாதிரி ஒரு சூழ்நிலை உங்க மதியூகரணியால எதுவும் செய்யமுடியாதா?”

“அதான் யோசிக்கறேன்.”

“சார்… இப்ப நீங்க உங்க ஸ்பெஷல் பவரைக் காட்டுங்க. நான் உங்க யோக சக்தியை மதிக்கறேன்” –பாரதியும் கொம்பு சீவினாள்.

திவ்யப்ரகாஷ்ஜி அந்த மரத்தின் மேல் சாய்ந்து நின்றுகொண்டு, நெற்றிப்பொட்டில் கை வைத்து ஆழமாய் யோசிக்கலானார்.

“இன்னிக்குக் காலைல தியானத்துல உட்காராததால ஒரு பெரிய ஈர்ப்பு இல்லை. தூங்காததால களைப்பு வேற…” - அவரிடம் முணுமுணுப்பு.

“அப்போ நீங்க எங்கள மாதிரி ஒரு சராசரி மனிதர். அவ்வளவுதான்! ஈர்ப்பில்ல, களைப்புன்னு நல்லா சமாளிக்கிறீங்க.” - பாரதி சினந்தாள்.

அப்போது அவள் கைப்பேசிக்கு அழைப்பு. அழைத்தவன் மருதமுத்து. ஜன்னலுக்கு வெளியே இருந்துகொண்டு செல்போனை உள்நோக்கிப் பிடித்து, நடப்பதை லைவ் ஆக ஸ்கைஃபில் அனுப்பிக்கொண்டிருக்க, எல்லோருமே அதை ஒட்டி உரசிக்கொண்டு பார்த்திட, குறிப்பாக அதைப் பார்த்த திவ்யப்ரகாஷ்ஜி பார்வையில் ஒரு பதற்றம்.

காட்சியில் ரம்பத்தால் பெட்டியை அறுக்க ஆரம்பித்திருந்தனர். சில நொடிகளில் அதுவும் கட் ஆனது. டவர் சிக்னலிலும் தொடர்பு விட்டுப்போனது. அரவிந்தனோ புலம்பத் தொடங்கினான்.

“மைகாட்! என்ன ஒரு பெட்டி தெரியுமா இது? இதோட மெக்கானிசத்துக்கே பல லட்சம் போகும். அருமை தெரியாம அறுக்க ஆரம்பிச்சுட்டாங்களே…” என்று அரவிந்தன் புலம்பிட, திவ்யப்ரகாஷ், ``நோ ப்ராப்ளம், நோ ப்ராப்ளம்... அவங்க நல்லா ஏமாறப்போறாங்க” என்று உற்சாகமாய்ச் சொன்னார்.

“என்ன ஜி சொல்றீங்க?”

“அந்தப் பெட்டி திறக்கப்பட்டு உள்ளே இருக்கிற எல்லாம் எடுக்கப்பட்டாச்சு. இப்போ அதுக்குள்ளே இருக்கிறது எல்லாம் டூப்ளிகேட்…”

“எப்படிச் சொல்றீங்க?”

“பெட்டியைப் பார்த்த உடனேயே அது திறக்கப்பட்டு உள்ளிருந்து எல்லாம் எடுக்கப்படற காட்சி எனக்குள்ளே புலனாச்சு?”

“யாரு… எங்கே… எப்போ?”

ஜெயராமன் கேள்விக்கு முன்நெற்றியைச் சுருக்கிய திவ்யப்ரகாஷ், “யாருன்னு தெரியல… ஆனா, அவர் ஒரு பிராம்மணர். கைல மணிக்கட்டுகிட்ட விபூதிப்பட்டை தெரிஞ்சது. விரல்ல பச்சைக்கல் மோதிரம் போட்டிருந்தார்.”

“ஜி… நான் உங்களை சராசரின்னு சொன்னதுக்காக, எதையாவது சொல்லி திசை திருப்பிடாதீங்க…”

“உன்னைவிட மோசமான விமர்சனங்களை நான் எதிர்கொண்டவன்மா. நல்ல ஆன்மிகவாதிக ளுக்கான பரீட்சையே இந்த மாதிரி விமர்சனங்கள் தான். இதைக் கடக்கறதோடு விமர்சிச்சவங்க வாயாலயே தப்புன்னு சொல்லவைக்கறவன்தாம்மா உண்மையான ஆன்மிகவாதி!”

“அப்போ, இப்போ நீங்க சொன்னதுதான் உண்மையா?”

“ஆமாம்மா… உண்மையான லிங்கமும் ஏடுகளும் இப்போ அந்தப் பெட்டியில இல்ல. அது நிச்சயம்…”

“அப்போ அது எல்லாம் இப்போ எங்கே?”

“யார் அந்த பிராம்மணர்? அவர் இடையில எப்படி வந்தார்? யார் கூட்டிகிட்டு வந்தாங்க? இல்ல அவர் தானாவே வந்தாரா? இப்படிப் பல கேள்விகளுக்கு நமக்குப் பதில் கிடைக்கணும்.”

“நீங்க சொல்ற எல்லாமே எனக்கு வியப்பா இருக்கு. பெட்டி உங்ககிட்ட இருந்து எங்க கைக்கு வரவும், தாத்தாவோட உதவியோட நான் அதைத் திறந்து பார்த்தேன். எல்லாமே இருந்தது. அதுல இருந்த டைரியைப் படிச்சுதான் அதைத் திரும்ப ஒப்படைக்கணும்கற விஷயத்தை நான் முழுசா தெரிஞ்சுகிட்டேன். சொன்னா நம்பமாட்டீங்க, பெட்டி வந்த அன்னிக்கு ராத்திரி கனவுல நடமாடிகிட்டிருந்த பாம்பு, ஒரு சித்தரா மாறி பெட்டியைத் திறக்க திருப்புளியால எத்தன சுத்து சுத்தணும்கற எண்ணிக்கையைத் தரையில எழுதிக் காமிச்சார். அதை ஞாபகம் வெச்சுதான் திறந்து பார்த்தேன். இப்படி அதுகூட ஒரு காவலும் பாதுகாப்பும் இருக்கும்போது யாரால அதைத் தொடமுடியும், அதுவும் எங்களுக்குத் தெரியாம..?”

- அதுவரை பேசாத சாருபாலாவின் கேள்வி, பாரதிக்குள் பல பதில் கேள்விகளை உருவாக்கியது.

“ஆமா… எப்பவும் கூடவே இருக்குமே அந்தப் பாம்பு, அது எங்கே போச்சு? நீங்க பெட்டியோடு குற்றாலம் வரும்போது அது உங்ககூட வரலையா?” என்ற அவள் கேள்வி, சாந்தப்ரகாஷை பதில் சொல்லத் தூண்டியது.

“நாங்க புறப்படறதுக்கு முன்னால பங்களா பின்னால இருக்கிற எங்க தாத்தாவோட ஜீவசமாதிக்குப் போய் வணங்கிட்டுதான் கிளம்பினோம். அப்போ சமாதி மேலே அந்தப் பாம்பு வந்து படம் விரிச்சு நின்னது. வாட்ச்மேன் தாத்தா அதைக் கும்பிட்டதோடு அதுக்கும் கற்பூரம் காமிச்சார். `தைரியமா போய்ட்டு வாங்க, அய்யா உங்களுக்குத் துணை இருப்பார்’னும் சொன்னாரு. நாங்களும் தைரியமாதான் கிளம்பினோம். ஆனா, அதுக்கப்புறம் பாம்பை எங்கேயும் பார்க்கலை.”

“அப்போ இவங்க சொல்றத வெச்சுப் பார்த்தா, திவ்யப்ரகாஷ்ஜி நீங்க சொன்ன மாதிரி நடத்திருக்க வாய்ப்பு இல்லேன்னு தோணுதே.”

“உங்களுக்கு அப்படித் தோணலாம். நான் தப்பு சொல்லமாட்டேன். ஆனா, எனக்குள்ள ஏற்பட்ட காட்சி பிம்பங்கள் பொய் கிடையாது. பெட்டியை ஸ்கைஃப் வழியா பார்த்தபோது, பெட்டி தொடர்பா ஏற்பட்ட பிம்பம் நிச்சயம் நடந்தி ருக்கிற ஒரு சம்பவம்தான். அப்படி நடக்கலேன்னா எனக்குத் தோணவே தோணாது.”

“அப்போ கை தெரிஞ்ச அளவு முகம் தெரியலியா?”

“தெரியல… நான் குளிச்சுட்டு, திரும்ப தியானத்துல உட்கார்ந்தா நிச்சயம் தெரியவரக்கூடும்…”

அப்போது திரும்ப டவர் கிடைத்து. பாரதியின் கைப்பேசி ஸ்கைஃப் வழியாகக் காட்சிகளைக் காட்டிட, அதில் ஜோதிடர் நந்தா, லிங்கத்தைப் பார்த்து, “நோ… இது அந்த லிங்கம் இல்லை. இது அதோட ரெப்ளிகா… அவங்க நம்பள நல்லா ஏமாத்திட்டாங்க” என்று வெடிப்பது காதில் விழுந்தது.

பாரதி, ஜெயராமன், அரவிந்தன், சாந்தப்ரகாஷ், சாருபாலா என்கிற ஐவரும் அடுத்த நொடி திவ்யப்ரகாஷ்ஜியைத்தான் பார்த்தனர்.

- தொடரும்...