மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இறையுதிர் காடு - 73

இறையுதிர் காடு
பிரீமியம் ஸ்டோரி
News
இறையுதிர் காடு

அவர்கள் எல்லோரும் அன்னபூரணி மகாதேவியை ஒட்டி நின்றுகொண்டனர்.

அன்று அன்னபூரணி மகாதேவியின் குரல், பிரம்மாண்ட ராஜ உடையாரைத் தேக்கி நிறுத்தியது. ஆனால், திரும்பிப் பாராமல் முதுகைக் காட்டிக்கொண்டுதான் நின்றார்.

“திரும்பி என்கிட்ட வாங்க உடையாரே…” – அவள் கட்டளைக் குரலில் அதிகாரத் தொனி.

“இல்ல… நான் உன்னைப் பார்க்க விரும்பல. நீ எதுக்கு வந்தியோ அதை முடிச்சுக்கிட்டு போய்கிட்டே இரு…” என்ற உடையாரின் பதில் அவள் முகத்தை சிவப்பாக்கியது. அதீதமாய் மஞ்சள் பூசி, கிராமக் கோயிலின் பாஞ்சாலி ரூபம்போலக் காட்சி தந்தவள், காளியாக மாறுவதுபோல உணர்ந்தாள் சிட்டம்மாள்.

“ஐயோ… இப்படி வாங்களேன். இவுக எங்க தானா வந்திருக்காங்க? நாம் விளிக்கவும்தானே வந்திருக்காக. இவுகள கோட்டுமலைச்சாமி அம்சம்னு சொல்வீகளே… அப்படிப் பார்த்தா சாமில்ல நம்ம கோட்டைக்கு வந்திருக்கு” என்றாள் சிட்டம்மாள். அதைக் கேட்டுத் தயங்கியபடி வந்த உடையாரை ஊடுருவினாள் அன்னபூரணி மகாதேவி.

உடையார் வியர்த்திருந்தார். அணிந்திருந்த பர்மா சில்க் ஜிப்பா நனைந்து, புலிநகச் சங்கிலி பளிச்செனத் தெரிந்தது. ஜிப்பா பட்டன் எல்லாம் தங்கம். காதுக் கடுக்கனில் பச்சைமரகதக் கல். விரல்களில் நான்கு மோதிரங்கள்: நீலக்கல்லில் ஒன்று, கோமேதகத்தில் ஒன்று, பவழத்தில் ஒன்று, வைரத்தில் ஒன்று!

“சனி நட்சத்திரத்துல பிறந்திருக்கீங்களோ, அதான் வலது மோதிர விரல்ல நீலக்கல் மோதிரம். செவ்வாய் நீச்சனோ, பவழமும் போட்ருக்கீங்க. ராகு தசைக்குக் கோமேதகம். அதுல சுக்ர புக்தி போல, அதான் இடது கைவிரல்ல வைர மோதிரமும் கோமேதகமும் போட்ருங்கீங்க. காதுக் கடுக்கன் பச்சை யாருக்கு, புதன் பகவானுக்கோ… ஜோசியன் யாரு, இப்படியா அவ்வளவு கல்லையும் போட வைப்பான்?”

- அன்னபூரணி மகாதேவி கிண்டலாக அவர் தோற்றத்தைவைத்துக் கேட்டதில், அவளுக்கு ஜோதிட அறிவும் இருப்பது தெரியவந்தது.

“இந்தக் கோபம் ரொம்பத் தப்பு. இதுதான் சாபத்துக்கு ஆளாக்கிடுதுபோல…”

“என் தலையெழுத்து. நீ இப்படிப் பேசி நான் கேட்கவேண்டியிருக்கு.”

“வேண்டாம் உடையாரே... நான் `அரவத் தாய்.’ என்னைப்போலத் திரிஞ்சு போனவங்களை ஆதரிக்கற சக்தி அம்சம் நான். இப்பகூட ஆதரிக்கத்தான் வந்திருக்கேன். உங்க வாரிசு எங்களோடு சேர்ந்து சந்தோஷமா வாழணுமா வேண்டாமா?” - அன்னபூரணி மகாதேவி தாட்டியமாகவே கேட்டாள். அதற்கு ஏதோ பதில் சொல்ல முற்பட்ட உடையார் உதட்டின் மேல், சிட்டாள் தன் வலக்கை விரல்களைக்கொண்டு தடுத்து மூடினாள்.

இறையுதிர் காடு
இறையுதிர் காடு

அப்படியே, “கொஞ்சம் அமைதியா இருங்க… இந்தச் சடங்கு முடியட்டும். அப்புறம் நீங்க என்ன வேணா பேசுங்க, நான் கேட்டுக்கறேன். அரவம்மாவை ஏதும் சொல்லிடாதீங்க. இவங்களுக்கு ஒரு வாழ்க்கை இல்லாம இருக்கலாம். ஆனா, இவங்களை மதிச்சா, மதிக்கறவங்க வாழ்க்கை மதிப்புக்குரியதா மாறும்னு பாரதம் படிச்சப்போ உலகநாதம் பிள்ளை சொன்னது மறந்துபோச்சா?” என்றும் கேட்டாள்.

“ ஓ… பாரதக் கதை கேட்கற வழக்கமுண்டோ?” – அன்னபூரணி மகாதேவி இடையிடவும், ஆமோதித்தாள் சிட்டாள்.

“உண்டு தாயி… எங்க சமஸ்தானத்துல நூத்துக்கும் மேலான குடிகள் உண்டு. அவுகதான் இங்கே களத்து சமூகம். அவுகளுக்காகக் காணும் பொங்கல், உரியடி, திரௌபதியம்மன் திருவிழால்லாம் எங்க சமஸ்தானமே நடத்தும். அதுல திரௌபதியம்மன் திருவிழா பத்து நாள் திருநாள். பத்து நாளும் கூத்து குலவையோடு பாரதம் படிக்கிற சம்பிரதாயமும் உண்டு.”

“அப்போ, அரவான் கதை கேட்ருக்கியா?”

“கேட்ருக்கோம்.”

“அப்போ நீ நினைச்சுக்கூடப் பார்த்திருக்க மாட்டே, உன் குலத்துலயே ஒருத்தன் அரவானுக்காகப் பிறந்து வருவான்னு. இல்ல?’’

அக்கேள்வி சிட்டாளை மனம் குமுறச் செய்தது, வாயை மூடிக்கொண்டு பொங்கி வந்த அழுகையை அடக்கிக்கொண்டாள். மெல்லிருட்டு. பகல்பொழுதின் வெளிச்சம் மாளிகை பிரம்ம பாகத்திறப்பில் விழுந்து, வடிகட்டப்பட்டுப் பரவியிருந்தது. ஆங்காங்கே பணியாளர்கள், பணிப்பெண்கள். கார்வார் கந்தசாமி, மணியசாரர், சிட்டாளின் உடன்பிறந்த சகோதரனான சங்கமேஸ்வர உடையான், அவன் மனைவி செஞ்சுலட்சுமி தேவி என்று சொந்தங்கள்.

மாளிகை நடுவில் சிம்மாசனம்போல ஆசனம் போடப்பட்டிருந்தது. அதில் அன்னபூரணி மகாதேவியை அமர்த்தி, சடங்கைத் தொடங்க வேண்டும். அவளும் அந்தச் சிம்மாசனம் நோக்கி நடந்து அமரலானாள். தொடர்ந்து கால்களுக்குப் பூப் போடப்பட்டது.

அன்னபூரணி மகாதேவியோடு மேலும் பல திருநங்கையர் வந்திருந்தனர். எல்லோருக்கும் பதினைந்திலிருந்து முப்பது வயதுக்குள்தான் இருக்கும். பெரும்பாலோர் பாவாடை தாவணி என்றும், சிலர் மட்டும் புடவையிலும் இருக்க, அந்த முதிர்ந்த முகங்களை ஏனோ யாருக்குமே பார்க்கப் பிடிக்கவில்லை. அவர்கள் எல்லோரும் அன்னபூரணி மகாதேவியை ஒட்டி நின்றுகொண்டனர்.

உடையார் தலைகுனிந்திருந்தார். எதையும் பார்க்க அவருக்குப் பிடிக்கவில்லை. வேகமாய் அந்தச் சடங்கு நடந்துமுடிந்தால் போதும் என்கிற தவிப்பு அவரிடம் நன்கு வெளிப்பட்டது. கார்வாரை அழைத்து, “உனக்குப் பத்து நிமிசம்தான் அவகாசம். இவுக ஒருத்தர்கூட இங்கே இருக்கக் கூடாது” என்று உத்தரவிட்டார்.

நல்லவேளை, அதைத் தொடர்ந்து சடங்குகள் வேகமாக நடக்கத் தொடங்கின. அரவாணிப் பிள்ளையை, அரவாணிச் சமூகத்துக்குள் சேர்ப்பதுதான் அச்சடங்கு. தட்டுத் தட்டாய்ப் பூ பழங்கள், இனிப்பு பலகாரங்களைவைத்து, ஃபேஷன் தங்கச் சங்கிலியோடு 1,300 ரூபாய் பணத்தையும் அன்னபூரணி மகாதேவியிடம் தரவேண்டும். அப்படியே அரவாணிப் பிள்ளையை அலங்கரித்து அழைத்துவந்து, அவள் கையில் பிடித்து ஒப்படைத்துவிட்டால், அவள் அழைத்துச் சென்றுவிடுவாள். அதன்பின், அந்தப் பிள்ளைக்கும் அந்தக் குடும்பத்துக்கும் சம்பந்தமில்லை. சொத்து பத்திலிருந்து சகலத்திலும் சம்பந்தமில்லை. தோஷம் இருந்தால், அதுவும் நீங்கினதுபோலத்தான்.

முந்திய தலைமுறையில் ஒரு பிள்ளை இப்படி ஆகி, அப்போது இதுபோல சடங்கு செய்யாமல் விட்டதில், அவன் எங்கே போய் என்ன ஆனான் என்றே தெரியாமல்போனது. அதுவே ஒரு பெரும் பாவமாகி, அந்தக் குடும்பத்தையும் சூழ்ந்துகொண்டுவிட்டதாக ஜோதிடர்கள் கூறினர். அதனால்தான் இம்முறை அப்படி ஆகிவிடாதபடி, அன்னபூரணி மாதாவைத் தேடிக் கண்டுபிடித்து அழைத்துவந்து, தவமிருந்து பெற்ற ஒரே பிள்ளையான முருகப்ரகாஷை அவன் வசம் ஒப்படைத்தனர். அவர்களுக்கு ஒரு கிராமத்தையே எழுதிக்கொடுத்துவிட்டனர், ஆயிரம் வேலி நிலத்தோடு!

முருகப்ரகாஷும் புடவை அணிந்து கண்களுக்கு மை தீட்டி, குங்குமப் பொட்டெல்லாம் வைத்து, கைவளை குலுங்க வந்தபோது சுந்தரவல்லி சிட்டாள் வெடித்து அழுதாள். ஜல்லிக்கட்டுக் காளை இப்படியா கன்னிப்பாவையாக மாறும்? ஓர் ஆச்சர்யம்… முருகப்ரகாஷிடம் பிரியப்போகும் வேதனையே இல்லை. என்னை என் போக்கில் விட்டுவிடுங்கள் என்பதுபோலத்தான் இருந்தது அவன் போக்கு. உடல் மாறும்போது அதற்கேற்ப மனமும் மாறிவிடுமா என்ன?

அன்னபூரணி மகாதேவியும் முருகப்ரகாஷை அணைத்துக் கொண்டவளாய், ``உன் பெயர் இனி தெய்வானை’’ என்றாள். சுற்றிலும் இருந்த அரவாணியர்கள், வேகமாக அந்தப் பெயரைச் சொல்லி திருஷ்டி கழித்து, குலவையிட்டு அவனைச் சுற்றிவந்து ஓர் ஆட்டம் ஆடினர்.

ஓரளவுக்கு மேல் உடையாரால் நின்று அதைப் பார்க்கமுடியவில்லை. வேகமாய் விலகி, மாடியிலிருக்கும் தனது அறைக்குச் சென்று, அங்குள்ள ஊஞ்சலில் அமர்ந்து அழலானார்.

அவரைப் பின்தொடர்ந்து வந்திருந்தார் கார்வார் கந்தசாமி.

“ஆண்டே!”

“……….”

“கலங்கினது போதும். இனி எல்லாம் நல்லபடியாதான் நடக்கும். உங்களுக்கென்ன வயசா ஆயிடிச்சு?” – கார்வாரின் அக்கேள்வி, உடையாரைக் கீறியது.

“நீ என்னய்யா சொல்றே?”

“வாரிசு இப்படி ஆயிடிச்சேன்னு கலக்கம் வேண்டாம். வயசு இருக்கு… பெத்துக்கலாங்க.”

“சிட்டாள் கேட்டா சிரிப்பாய்யா.”

“சிரிச்சிட்டுப்போகட்டும். அவங்களுக்குதான் என்ன வயசாயிடிச்சு? முப்பதுகூட நிறையலையே.”

“அடுத்ததும் இப்படிப் போனா?”

“நாம நல்லதையே நினைப்போங்க. நம்ம பிள்ளையும் இனி நிம்மதியா இருக்கும். நீங்க என்ன வெறும் 1,300 ரூவா பணத்தோடு வெட்டியா விட்டுட்டீங்க? மரக்காணம் பக்கம் ஒரு கிராமத்தையேல்ல அவங்களுக்கு ஒதுக்கியிருக்கீங்க. அந்தக் கூட்டத்துக்கே உங்களால ஒரு எதிர்காலமுல்ல உருவாகியிருக்கு. அவங்க சந்தோசம் நம்ம குடும்பத்துக்கு ஆசீர்வாதமா மாறி நல்லதுதாங்க செய்யும்.’’

“எல்லாம் சரிடா, ஆனாலும் என் மனசு ஆறவே மாட்டேங்குது. ஏதோ ஒரு பாவம், இல்ல சாபம் விடாம துரத்துற மாதிரியேதான் எனக்குத் தோணுது.”

“தப்புங்க… உங்க நினைப்பு தப்பு. அரவப் பிறப்பு, தெய்வப் பிறப்புன்னுவாங்க. மோட்சம் உறுதியான நிலையில, உடம்பால வாழற வாழ்க்கை யாருக்கு மிச்சப்படுதோ, அவங்கதான் இப்படிப் பிறக்கிறதா எங்க பெரியவங்க சொல்வாங்க. அந்த மிச்ச வாழ்வு முடியவுமே, நேரா மோட்சம்தான் இவங்களுக்கு. அது மட்டுமல்ல, இவங்க மனசார வாழ்த்தினா அது அந்த மகாசக்தியே வாழ்த்தினமாறிம்பாங்க. இவங்க ஆணுக்கு ஆண், பெண்ணுக்குப் பெண்... சாமிக்கு சாமிங்க!’’

இறையுதிர் காடு
இறையுதிர் காடு

“அப்புறம் ஏண்டா ஊர் உலகம் ச்சீங்கறாங்க?”

“அது மதிப்பு தெரியாததால செய்யற தப்பு. இப்பவும் நல்லா படிச்ச மனுஷங்க, சாமியாருங்க இவங்களைப் பார்த்தா கை எடுத்துக் கும்பிடத்தான் செய்வாங்க!”

“உன் பேச்சக் கேட்க ஆறுதலா இருக்கு. இருந்தாலும் நான் ஒரு முடிவு செய்திருக்கேன்.”

“என்னங்க?”

“அதைப் போகப் போக நீயே தெரிஞ்சிக்குவே…” - உடையார் பேச்சு மிக மர்மமாக இருந்தது.

மறுநாள்!

உடையாரைக் காணவில்லை. மாறாக ஒரு கடிதம். அதில், ‘என்னைத் தேட வேண்டாம். நான் திரும்பி வரக்கூடும். வராமலும் போகக்கூடும். மனநிம்மதிக்காக நான் மலைத்தலங்கள் பக்கம் போகிறேன். இனி இந்த ஜமீனின் சகல நிர்வாகமும் சிட்டாளைச் சேர்ந்ததாகும்.

இப்படிக்கு,

பிரம்மாண்டராஜ உடையான்’ - என்று செய்தி.

சிட்டாள் படித்துவிட்டு மூர்சையானாள். முதல் நாள் பிள்ளையை வாரிக்கொடுத்தாள். இன்று புருஷனை… அவளுக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்றே யாருக்கும் தெரியவில்லை!

குற்றாலம்.

குதூகலமாய்க் கொட்டிக்கொண்டிருந்தது அருவி. உச்சிகுளிரக் குளித்துவிட்டு, குற்றாலநாதர் சந்நிதி நோக்கி நடக்கத் தொடங்கியிருந்தார் பிரம்மாண்ட ராஜ உடையார்.

காவி வேட்டி – கழுத்தில் உருத்ராட்சம் – தலையில் உருமா என்று அப்படியே உருமாறியிருந்தார். பல்லாவரத்துக்காரர்கள் யாராவது பார்த்தால், அவர்களுக்கே அடையாளம் தெரியாது. ஒரு கறுப்பு லெதர்பேக்… லண்டன் போயிருந்த சமயம் அவர் மைத்துனன் சங்கமேஸ்வர உடையான் வாங்கி வந்திருந்தது. அதனுள்ளே நிறைய வசதிகள். டைரி பேனா வைத்துக்கொள்ள, உடுப்பு வைத்துக்கொள்ள, மாத்திரை மருந்து வைத்துக்கொள்ள என்று அடுக்கடுக்காய் உள்கூட்டில் பிரிவுகள். அதில் அவர் தேவைக்கு எல்லாமே இருந்தது. சிட்டாளோடு எடுத்துக்கொண்ட ஒரு கறுப்புவெள்ளைப் புகைப்படமும் அதோடு சேர்த்தி. ஊட்டிக்குச் சுற்றுலாப் போன சமயம் ஏரிக்கரையோரமாய் வின்சென்ட் என்கிற ஒரு வெள்ளைக்காரன் எடுத்த போட்டோ.

குற்றாலத்திலும் நிறைய வெள்ளையர்கள்.

நெல்லை கலெக்டர் வந்திருப்பதை பந்தோபஸ்து போலீஸார் உணர்த்தினர். வாஞ்சிநாதன் ஆஷ்துரையைச் சுட்டுக் கொன்றதிலிருந்தே கலெக்டருக்கான பந்தோபஸ்து, ஜனாதிபதிக்கானதுபோல மாறிவிட்டது. லண்டனில் போலீஸுக்கு எந்த வகை யூனிஃபார்மோ அதையே இங்கு போட்டுக்கொண்டு நம்ம ஊர் காக்கி டவுசர், காக்கி சட்டை போலீஸ் நடுவே அவர்கள் தென்பட்டனர். நெல் உழக்குத் தொப்பி, சிவப்பு மேல் சராய், மார்பின் குறுக்குவாக்கில் நவாப்பழ நிறத்தில் பூணூல்போல தோல்பட்டை. இடுப்பில் பிரிட்டிஷ் இலச்சினை பொரித்த பெல்ட்.

நீண்ட வெள்ளை நிற பேன்ட் கால்சராய். காலுக்கு பூட்ஸ். கைக்கும் உறை என்று ஒரு மார்க்கமாய்த் தெரிந்த அவர்களைப் பார்த்தபடியேதான் பிரம்மாண்ட ராஜ உடையார், குற்றாலநாதர் கோயிலுக்குள் அடியெடுத்து வைத்தார்.

உள்ளே பெரிதாகக் கூட்டமில்லை. ஓர் ஓரமாய் நான்கு பேர் அமர்ந்திருக்க, மரவாடி மேல் சேக்கிழார் பெருமான் அருளிச் செய்த பெரிய புராணத்தை, ஒரு வயதானவர் படித்துப் பொருள் சொல்லிக்கொண்டிருந்தார். நடுநாயகமாக ஒரு மரப்பெட்டியும், பெட்டிமேல் ஜெகவலலிங்கமும் உடையார் கண்களில் பட்டன.

முதல் பார்வை!

இன்று திவ்யப்ரகாஷ்ஜி முகத்தில் ஓர் அளவான சிரிப்பு. அதற்குள் ஆயிரம் அர்த்தங்கள்.

“ஜி… ரியலி யூ ஆர் கிரேட்! நீங்க ஒரு வெரி ரிச் ஹ்யூமன் பவர். இந்த மண்ணோட சக்திக்கும் ஓர் உதாரணம்” என்று நிஜமாகவே நெகிழ்ந்தார் ஆசிரியர் ஜெயராமன்.

“எடிட்டர் சார்… ஸ்தோத்ரம்லாம் இப்போ எதுக்கு? நான் அந்தப் பெட்டியில இருந்த ஒரு ஏட்டுக்கட்டுக்கு சாம்பிள். அப்படின்னா, மத்த ஏட்டுக்கட்டுகளோட மதிப்பைக் கொஞ்சம் யோசிச்சுப்பாருங்க.”

- திவ்யப்ரகாஷ்ஜி யோசிச்சுப்பாருங்க என்று சொன்ன அந்தத் தருணம், ஜோதிடர் நந்தா கையைப் பிசைந்துகொண்டு கத்துவதும், பதிலுக்கு ராஜா மகேந்திரன் கத்துவதும், ஒரு லைவ் ரிலேவாக கைப்பேசியில் ஓடிக்கொண்டிருந்தது.

“மகேந்தர் ஜி… சம்திங் ராங்! பெருசா தப்பு நடந்திருக்கு. இது நிச்சயமா உங்க பொண்ணு வேலையாதான் இருக்கணும்” – நந்தா, பாரதி மேல் குற்றம் சாட்டுவது காதில் நன்றாகக் கேட்டது.

“பாவி… நான் தூக்கிக்கொண்டுபோய்க் கொடுத்துட்டு வந்தவள். என்னைக் குத்தம் சொல்றானே” என்று பொருமினாள் பாரதி.

அங்கே வாக்குவாதம் தொடர்ந்தபடி இருந்தது.

அந்தக் கைப்பேசியின் செவ்வகச் சதுரம், காட்சியாக அதைக் காட்டியபடியே இருந்தது.

“ஓலைச் சுவடியெல்லாம்கூட டூப்புதான். பாருங்க பிளைன் பனை ஓலை! அழகா வெட்டி கயித்துல கட்டி, முதல் பக்கம் மட்டும் என்னத்தையோ எழுதிவெச்சு ஏமாத்திட்டாங்க.”

“ஆமா, எதைவெச்சு இது பாரதி வேலைன்னு சொல்றீங்க?”

“இதுக்கு முந்தி இதைத் திறந்தது பாரதியும் அந்த எழுத்தாளன் அரவிந்தனும்தானே?”

“அப்போ, ஒரிஜினலை எடுத்துவெச்சுக்கிட்டு, டூப்ளிகேட்டைவெச்சு அந்த ஜமீன் குடும்பத்துகிட்ட ஒப்படைச்சுட்டாங்களா?”

“சந்தேகமேயில்லை, அப்படித்தான் இருக்கணும். அவங்களும் இது தெரியாம இந்த டூப்ளிகேட்டோடு குற்றாலம் போயிருக்காங்க. அதை அப்படியே போகர்கிட்ட ஒப்படைக்க சித்தன் பொட்டலுக்குப் போகும்போது, இது தெரியாம நாம குறுக்க பூந்து பிடுங்கிட்டு வந்துட்டோம்… அவங்க பாவம்!”

“நீங்க சொல்றபடி ஒரிஜினலை எடுத்துவெச்சுக்கிட்டாங்கன்னா, பாரதி, அந்த எழுத்தாளன், அந்த எடிட்டர் இவங்கல்லாம் எதுக்கு இப்போ குற்றாலத்துக்குப் போயிருக்கணும்?”

“டூப்ளிகேட்டோடு போற ஜமீன் தம்பதிகள், அங்கே யாரைப் பார்த்து என்ன செய்யப்போறாங்கன்னு தெரிஞ்சுக்கப் போயிருக்கலாம்.”

“இது அவ்வளவு சரியான பதிலா தெரியலையே…”

“இல்ல, இதுதான் அவங்க திட்டம்.”

“அப்போ எதுக்கு போட்டோல்லாம் எடுத்து வெச்சிக்கணும்?”

“ஒரு சேஃப்டிக்காகத்தான்…”

“அப்போ, இப்ப எல்லாமே என் பொண்ணுகிட்டதான் இருக்கா?”

“வேற வாய்ப்பே இல்லை… நீங்களே நல்லா யோசிச்சுப் பாருங்க. பெட்டி இங்கே இருந்தது. அப்புறம், ஜமீன் பங்களாவுக்குப் போச்சு. அப்படியே குற்றாலம் போச்சு. அங்கேதான் நாம அடிச்சோம். மொத்தம் மூணே ஸ்பாட். அதுல, அது திறந்து பார்க்கப்பட்டது இங்கேதான். போட்டோ காப்பி எடுத்துக்கிட்டதும் இங்கேதான்.”

- அவர்களின் வாதப் பிரதிவாதங்களைச் செவ்வகத் திரைவழி பார்த்தபடி இருந்த பாரதிக்குப் பற்றி எரிய ஆரம்பித்தது.

“சார்… என்ன சார் இது கொடுமை. நான் கிட்டயே வரலை. அரவிந்தன் நீங்க செஞ்ச காரியம் இப்போ எப்படி வந்து நின்னுருக்கு பாருங்க” சடைத்தாள் பாரதி.

இறையுதிர் காடு
இறையுதிர் காடு

“பொறுமை பாரதி… அங்கே அவங்களால அப்படித்தான் யோசிக்க முடியும். அதுதான் லாஜிக். ஒரிஜினல் இப்போ எங்கே? அதுதான் இப்ப நம்ம முன்னால நிற்கிற பெரிய கேள்வி…” ஜெயராமன் பேச்சை ஒருமுகப்படுத்திட, சாருபாலா இடையிடத் தொடங்கினாள்.

“எங்க பங்களாவுக்கு வந்தப்பவும் எல்லாம் இருந்தது. நாங்க அதை எடுத்துக்கிட்டுப் புறப்பட்டப்போகூட சிக்கல் எதுவும் இல்லை.”

“இதுக்கு ஒரே தீர்வுதான். திவ்யப்ரகாஷ்ஜி யூகத்துல வந்த அந்த பிராமணர்தான் எடுத்திருக்கணும். அவர் யார்? எங்கே இருக்கார்? எப்படி எடுத்தார்? இந்தக் கேள்விகளுக்கு நாம பதில் தேடினா போதும்…” - அரவிந்தன் எடுத்துத் தந்தான்.

“இருங்க... அந்த வடஜோசியன் என்ன கன்க்ளூஷனுக்கு வர்றான்னு பார்க்கறேன்…” - பாரதி திரும்ப கைப்பேசித் திரையைப் பார்க்கலானாள்.

“என்னய்யா வேலை பார்த்திருக்கே… எல்லாம் போச்சு! இங்கே டெல்லியிலிருந்து போன் மேல போன். ஏடு கிடைச்சிடுச்சா, என்ன போட்ருக்குதுன்னு… சரி, இப்போ என்ன பண்ணப் போறோம்?” - எம்.பி ராஜா மகேந்திரனின் கோபமான கேள்விக்கு, ஜோதிடர் நந்தா தீர்மானமான ஒரு பதிலைச் சொல்லலானான்.

“ஜி… குற்றலாம் எஸ்.பி-க்கு போன் பண்ணி உங்க பொண்ணையும் அந்த குரூப்பையும் எப்படியாவது வைண்ட் அஃப் பண்ணுங்க. அவங்ககிட்டதான் எல்லாம் இருக்கு.”

“எங்கே பானு? கூப்பிடு அவளை. போனைப் போடு…” - ராஜா மகேந்திரன் தன்னை மறந்து பானு பெயரைக் கூறவும், ஜோதிடர் நந்தாவிடம் ஒரு சலிப்பு.

“அவதான் ஓடிப்போய்ட்டாளே… இடியட்டிகூஸ்…!”

“ஆமால்ல… ஆனா, அவ அப்படியெல்லாம் போறவ கிடையாதே!”

“நான் கொஞ்சம் கடுமையா திட்டிட்டேன் ஜி. அதான் கோவிச்சுக்கிட்டுப் போய்ட்டா.”

“எங்கே, போனைப் போடுங்க நான் பேசறேன். அவளை அப்படியெல்லாம் விடமுடியாது. என் கான்டாக்ட்ஸ் அவ்வளவும் அவளுக்கு நல்லாத் தெரியும்.”

ராஜாமகேந்தர் பரபரத்திட, கணேச பாண்டியன் அவளுக்கு போன் செய்து, “ஸ்விட்ச் ஆஃப்னே வருதுங்க” என்றார்.

“நான்கூட பண்ணினேன். அவ ஸ்விட்ச் ஆஃப் பண்ணித்தான் வெச்சிருக்கா. விடுங்க, அவ இப்போ நமக்குத் தேவையுமில்லை. தாக் பேட்டி…”

“என்ன சொன்னீங்க?”

“பயப்படற பொண்ணுன்னு சொன்னேன்.”

“இல்ல ஜி… அவ அதுக்காக இல்லாட்டியும் பல விஷயங்களுக்காக எனக்கு வேணும். கணேச பாண்டி, காரை எடுத்துக்கிட்டு அவ வீட்டுக்குப்போய்ப் பார்த்து, கையோடு கூட்டிகிட்டு வாய்யா…”

- எம்.பியின் கட்டளை, கணேச பாண்டியனை வெளியேற்றிட, ஜோதிடர் நந்தா யோசித்தபடியே நடந்துவந்து, மருதமுத்துவின் கைப்பேசியை உற்றுப்பார்த்து, “ஏய்… என்ன பண்றே, அதுவும் ஜன்னலுக்குப் பின்னால நின்னுகிட்டு?” என்று கேட்டுக்கொண்டே வருவதோடு காட்சி கட் ஆனது.

“போச்சுடா… மருதமுத்து மாட்டிக்கிட்டான். அப்பா அவனை உண்டு இல்லன்னு பண்ணப்போறார்” - பாரதி தவிக்கத் தொடங்கினாள்.

இறையுதிர் காடு - 73

“நாம அப்படி ஒண்ணும் நிர்கதியால்லாம் இல்லை. நடுவழிலயே நமக்கு எவ்வளவு விஷயம் தெரிய வந்திருக்கு பாருங்க. அதுக்காக இந்த செல்போனுக்கு ஒரு நன்றியையும், திவ்யப்ரகாஷ்ஜிக்கு ஒரு நன்றியையும் சொல்லியே தீரணும்” என்ற அரவிந்தன், “பாரதி… உங்கப்பா இப்போ நம்மை குறிவெச்சுட்டார். அடுத்து நாம என்ன செய்யப்போறோம்?” என்று கேட்டு, அவள் தவிப்பை மாற்றப் பார்த்தான்.

“இப்போ எம்.பியோ இல்லை மற்ற யாரோ நமக்கு ஒரு பொருட்டில்லை. இடையில ஏதோ நடந்திருக்கு? யார் அந்த பிராமணர்? அதுதான் இப்போ பிரதான கேள்வி. அதுக்கு விடை தெரிஞ்சாப் போதும்” என்றார் எடிட்டர் ஜெயராமன்.

“இன்னொரு பிரதான கேள்வியும் என்கிட்ட இருக்கு” என்றான் அரவிந்தன்.

“என்ன அரவிந்தன்?”

“அந்த சர்ப்பம் என்னவாச்சு? அதோட காவலை மீறி ஒருத்தர் எப்படி எடுக்க முடியும்?”

“சரியான கேள்வி… பெட்டியோடு இவங்க புறப்படும்போது சமாதியில பாம்பைப் பார்த்திருங்காங்க. அப்போ, அதுவரை எந்தப் பிரச்னையும் இல்லை.

பெட்டி சென்னையை விட்டுக் குற்றாலம் நோக்கிப் புறப்பட்ட பிறகுதான் நடுவுல ஏதோ நடந்திருக்கு.”

“இல்லை… எங்களுக்குத் தெரிஞ்சு பெட்டிக்கு எந்தத் தொந்தரவும் இல்லை. கார்ல அது களவாடப்படற வரை” என்றான் சாந்தப்ரகாஷ்.

“எப்படிக் கேள்வி கேட்டாலும் ஒரு முடிவுக்கு வரமுடியலையே… பெரிய புதிரால்ல இருக்கு…”

“திவ்யப்ரகாஷ்ஜி… அந்தப் பாம்பு இப்போ எங்கே இருக்குன்னு உங்க திருஷ்டியால கண்டுபிடிச்சுச் சொல்லமுடியாதா?” – ஜெயராமன்தான் தூண்டிவிடுவதுபோலக் கேட்டார்.

“முயற்சி செய்யறேன். முதல்ல குளிக்கிறேன். குளிச்சிட்டு தனியா ஒரு மணி நேரம் தியானத்துல உட்கார்ந்தா போதும். நிச்சயமா ஏதாவது புலப்படலாம்.”

- திவ்யப்காஷ்ஜி சற்று தூரத்தில் ஒரு வயல்காட்டில் பம்புசெட் மோட்டார் ஓடுவதைப் பார்த்தபடியேதான் சொன்னார். சொன்னபடியே ஜிப்பாவைக் கழற்றியவர், பனியனையும் கழற்றிவிட்டு இடுப்பு வேட்டியோடு சாலைச் சரிவில் இறங்கி, வயல்வெளிக்குள் வரப்புகளின் மேல் நடந்து, பொத பொதவெனக் கொட்டிடும் பம்புசெட் மோட்டார் அருகே சென்றார்.

சாலை ஓரமாய் மரத்தடியில் நின்று பார்த்தபடியே இருந்தனர் மற்ற எல்லோரும். அப்போது சாருவின் கைப்பேசிக்கு ஓர் அழைப்பொலி. திரையில் அமெரிக்காவில் இருக்கும் ஆகாஷின் தோற்றம். சாருவிடம் ஒரு குபீர் பரவசம்…

“ஆகாஷ்…” என்று உற்சாகமானாள். அதேசமயம், அவனது பெண்மை கலந்த அந்தத் தோற்றத்தை யதார்த்தமாகக் கவனித்த பாரதிக்கு பகீரென்றது!

- தொடரும்…