மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இறையுதிர் காடு - 75

இறையுதிர் காடு
பிரீமியம் ஸ்டோரி
News
இறையுதிர் காடு

“பாரதி... ஓர் அரச மரத்தை ஒரு நாள் நாம தேடுவோம்னு நீ நினைச்சுக்கூடப் பார்த்திருக்க மாட்டேல்ல?” என்றான்.

அன்று தன் கழுத்தில் விழவிருந்த மாலையை அந்த பக்தர் தடுத்துத் தன் கைகளில் வாங்கிக்கொண்டார். அவர் ஏன் அவ்வாறு செய்தார் என்று தெரியவில்லை. சிலர் இறைவனுக்குப் போட்ட மாலையைத் தாங்கள் அணிந்துகொள்ளத் தகுதியில்லை என்று நினைப்பார்கள். சிலரோ அதை அப்படியே வீட்டுக்குக் கொண்டுசென்று, சுவாமி படத்துக்கு அணிவித்த நிலையில், அதிலுள்ள வில்வ இலைகளை தினமும் ஈரிலைகள் என்று பிரசாதமாய் சாப்பிடுவார்கள்.

வில்வம் மிகக் குளிர்ச்சியானது. சிலர்வரையில் உஷ்ண உடம்பாக இருந்து, பித்தம் தலைக்கேறிய நிலையில் தலையில் பொடுகு தட்டும். பொடுகு தட்டாதிருக்க நிரந்தரத் தீர்வு, விளக்கெண்ணெய் வைத்து தினமும் தலைக்குக் குளிப்பது, வில்வத்தை ஒரு மண்டல காலம் மென்று தின்பது…

இதனால், உஷ்ணம் குறைந்து பொடுகு மறைந்து, முடியும் உதிராமல் வளரும். சித்த வைத்தியம் காட்டும் இந்த வழிமுறைக்காக அவர் அப்படிச் செய்தாரோ என்றுகூட நினைக்கத் தோன்றியது. ஆனால் அவரோ சந்நிதியை விட்டு வெளியே வந்த நிலையில், காவி வேட்டியும் உருமாக் கட்டும் ருத்திராட்ச மாலையுமாய் ஒரு சன்யாசி போலத் தெரிந்த உடையாரை நெருங்கி, சட்டென்று அவர் கழுத்துக்கு அந்த மாலையைப் போட்டவர், பொதேலென்று சரிந்து காலிலும் விழலானார். உடையாரிடம் பெரும் சிலிர்ப்பு. மாலையைப் போட்ட அந்த பக்தரும் எழுந்தவராய், “சாமி... நாலு நல்ல வார்த்தை சொல்லி என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க” என்றார். உடையாரிடம் பெரும் விதிர்ப்பு.

“என்ன இது, என் கழுத்துல மாலையைப் போட்டுட்டீங்க?”

“எப்பவும் ஒரு சிவனடியார்க்கு மாலை போட்டு ஆசீர்வாதம் வாங்கறது என் வழக்கம். உங்களை சிவனடியாரா நினைச்சுதான் போட்டேன்.”

“நான் சிவனடியாரா?”

“சித்தரும் சிவனடியார்களும் எப்போ தங்களை ஒத்துக்கிட்டிருக்காங்க? என் வரையில நீங்க சிவனடியார்தான்.”

அந்த பக்தர் பேச்சு உடையாரைக் கட்டிப்போட்டு, “நல்லா இருங்க...” என்றும் சொல்லவைத்தது. அவரும், “சந்தோஷம் சாமி” என்று விலகிக்கொள்ள, சோதித்துப் பார்க்கச் சொன்ன சிதம்பர மாணிக்கம் புன்னகையோடு பார்த்தார். உடையாருக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. ஆனால், கேட்டது கிடைத்துவிட்டது. நினைத்ததும் நடந்துவிட்டது!

“என்ன சாமி முழிக்கிறீங்க?”

“எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல...”

“எதுவும் சொல்ல வேண்டாம். இங்கே யாருக்கும் இது போகர் தந்த லிங்கம்னு தெரியாது. தெரிஞ்சா அவ்வளவுதான்! நீங்க பரீட்சை பண்ணிப் பார்த்த மாதிரி ஆளாளுக்கு ஆரம்பிச்சுடுவாங்க.”

“அது தப்பா என்ன... எல்லாருடைய குறைகளும் நீங்கினா நல்லதுதானே? நான்கூட இப்படி உடனே பலிக்கும்னு தெரிஞ்சிருந்தா, என் பையனையே முழுமையான ஆம்பளையா திருப்பிக் கேட்ருப்பேன். அதனால என்ன... நான் இப்போ அதைத் திரும்பக் கேட்கலாம்தானே?”

“கூடாது... கூடவே கூடாது! இதை நம் சொந்த இன்ப துன்பங்களுக்குப் பயன்படுத்தக் கூடாதுங்கறதுதான் போகர் சாமியோட முதல் கட்டுப்பாடே.”

“இப்படி ஒரு கட்டுப்பாடா... ஏன் அப்படி?”

“அதெல்லாம்தான் சித்த ரகசியம்.”

“அப்போ நீங்க உங்களுக்குன்னு எதுவுமே கேட்டதில்லையா?”

“இல்லை... கேட்டதில்லை... ஆனா, உலக நன்மைக்காக போகர் சாமி என் கனவுல வந்து சொல்லி, பல நல்ல காரியங்களைப் பண்ணியிருக்கேன்.”

இறையுதிர் காடு
இறையுதிர் காடு

“அப்போ எனக்கு மட்டும் எப்படி என் விருப்பத்துக்கு அனுமதி தந்தீங்க?”

“உங்களுக்கு மதிப்பு தெரியட்டும்னுதான்.”

“ஐயோ... போயும் போயும் மாலையைக் கேட்டு ஒரு சந்தர்ப்பத்தை வீணடிச்சுட்டேனே.”

“அப்படிச் சொல்லாதீங்க... மாலையை, அதிலும் வில்வ மாலையைக் கேட்டது ஒரு நல்ல விஷயம். வில்வம் ஒரு சிவப் பிரசாதம். மகாலெட்சுமி அம்சம்! உங்க வம்சம் நிச்சயம் தழைக்கும்கறதுதான் என் அபிப்ராயம்.”

“ஐயா... எனக்காக இன்னொரு முறை... நான் அந்த லிங்கத்தைப் பிரார்த்தனை பண்ணிக்கறனே... ஒரே ஒருமுறை... எனக்கு என் மகன் திரும்ப மகனா கிடைச்சாப் போதும்.”

“பிரயோஜனமில்லை... உங்க மகன் அப்படியானது கர்ம வினைகளால... கர்ம வினைகளை அனுபவிச்சுத் தீர்க்கறதுதான் நல்லது.”

“அப்படி என்ன கட்டுப்பாடு... நாமளும் அந்தக் கடவுள்கிட்ட கேட்காம யார்கிட்ட கேட்க?”

“அவசரப்பட வேண்டாம். என்கூட மலைக்கு மேல சித்தன் பொட்டலுக்கு வந்து, அங்கே நடக்கிற சித்ரா பௌர்ணமி பூஜைலயும் கலந்துக்குங்க. அப்போ போகர் சாமி தரிசனம் வாய்க்கும். சாமிகிட்டயே தீட்சை வாங்கிக்குங்க. அப்புறம் அவர் சொல்படி நடங்க. நீங்க எதையும் கேட்கவே வேண்டாம். நாம கேட்காமலே நமக்கு எல்லாம் தானா கிடைக்கும்.”

அவர் சொல்லி முடிக்க, அந்த ஜெகவலலிங்கம் மரப்பெட்டிக்குள் வைத்துப் பூட்டப்பட்டது. பெரிய புராணம் கதை சொன்னவரே அதைத் தூக்கித் தலையில் வைத்தபடி வெளியில் வந்தார். பொறுமையாகக் கதை கேட்டவர்கள் கலைந்துபோயினர்.

உடையார் முகத்திலும் சற்று ஏமாற்றம்.

சரேலென்று சாரல் மழை பெய்து சூழலே அவர் மனதைப் பிரதிபலிப்பதுபோல இருளத் தொடங்கியது.

“வாங்க போகலாம்...” சிதம்பர மாணிக்கம் அவரை அழைத்தபடி கோயிலுக்கு வெளியே அருவி ஆறாக ஓடும் ஆற்றிடை நடக்க ஆரம்பித்தார். பெட்டிக்காரரும் தொடர்ந்தார்.

“மழை பெஞ்சுகிட்டிருக்கே...”

“இது சாரல் மழை. இதைப் பொருட்படுத்தக் கூடாது. இதுல நனையறதும் நல்லது.”

“ஜலதோஷம் பிடிக்காதா?” - தொடர்ந்து நடந்துகொண்டே கேட்டார் உடையார்.

“பிடிக்காது... அவ்வளவும் மூலிகைக் கலப்பு. ஒண்ணரைக் கோடி மூலிகைச் செடிகளைத் தழுவிகிட்டு வருது இந்த அருவி.”

“ஒண்ணரைக் கோடியா?”

“ஆமாம், நம்பமுடியலியா?”

“இல்ல... யார் எண்ணினது? இதையெல்லாம் எப்படி எண்ண முடியும்?”

“நான் கேட்ட அதே கேள்வி. இன்னிக்கு நீங்களும் கேட்கறீங்க. 10 சதுரம் ஓர் அங்கணம். 10 அங்கணம் ஒரு சத சதுரம். 10 சத சதுரம் ஒரு மகா சதுரம். 10 மகா சதுரம் ஒரு சத மகா சதுரம். 10 சத மகா சதுரம் ஒரு மங்கலம். 10 மங்கலம் ஒரு மகா மங்கலம்! அந்த வகைல இந்தப் பொதிகை மலைக்காடு 15 மகா மங்கலம். அதாவது ஒண்ணரைக் கோடி சதுரம்!”

சிதம்பர மாணிக்கம் ஆற்றைக் கடந்து ஒற்றையடிப் பாதையாகச் சென்று, தென்காசி செல்லும் மண் சாலையையும் அடைந்தவராக, அந்தக் கணக்கைச் சொல்லிவிட்டு உடையாரைப் பார்த்தார்.

உடையார் விழிகளில் மருளல்.

“என்னடா, அங்கணம் சதுரம் மங்கலம்னு சொல்றேனேன்னு பாக்கறீங்களா? இது சித்தர் கணக்கு. நமக்கெல்லாம் காணி, ஏக்கராங்கறதுதான் கணக்கு. ஒரு சித்தர் சாமி எனக்குச் சொன்னதை நான் அப்படியே சொல்லிட்டேன். ஒரு சதுரத்துக்கு ஒரு செடின்னாலும், 35 லட்சம் சதுரத்துக்கு 35 லட்சம் செடிகள். இது ஒரு திசைக்கு! நாலு திசைக்குக் கணக்குப் போட்டா, ஒரு கோடியே நாப்பது லட்சம்கறது மலை அளவு. இது தோராயக் கணக்கு. எப்படியும் ஒண்ணரைக் கோடி தாவரம்கறது அவங்க முடிவு. மீதி 10 லட்சம் மேலே சம தளங்களில் இருக்குதாம்!”

“பிரமிப்பா இருக்குது... மலை நிலத்தை இப்படிக் கூடவா கணக்குப் பண்ணமுடியும்?”

“பிரமிப்பெல்லாம் நமக்குத்தான். அவுகளுக்குப் பிரமிப்பு, பூரிப்பு, கவலை, கஷ்டம், சந்தோஷம், துக்கம், பசி, தாகம் எதுவும் கிடையாது.”

இறையுதிர் காடு - 75

“அதெல்லாம் சாத்யமா?”

“இந்தக் கேள்வியையும் நான் கேட்டேன். ஆனா, இப்போ நானே முடியாதுன்னு மனுசங்க நினைக்கிற பல விஷயங்கள் முடிக்கப் பழகிட்டேன். முடியாதுன்னு ஒண்ணு கிடையாது. ஒரு ஜட்காவுக்கு ஒரு குதிரைன்னா, ஒரு தேருக்கு ஆயிரம் குதிரை... கணக்குப் போடத் தெரிஞ்சாப் போதும்.”

எல்லாக் கேள்விகளுக்கும் சிதம்பர மாணிக்கம் சிறிதும் அவகாசம் எடுத்து யோசிக்கும் அவசிய மின்றி, மடமடவென்று பதில் சொல்லிவந்ததே உடையாரை மேலும் பிரமிக்க வைத்துவிட்டது.

“ஆமா, உங்க எதிர்காலத் திட்டமென்ன?”

“தெரியல... கால்போன போக்குல போவோம்னு வந்தேன். உங்களைப் பாத்தது உங்ககூட நடக்கறதெல்லாம் ஒண்ணும் புரியல.”

“அதுக்குப் பேர்தான் விதி! இந்தக் குற்றாலத்துல எவ்வளவோ பேர். ஆனா, எனக்குத்தான் உங்ககூட பேசத் தோணுச்சு. உங்களுக்கும் என்கூட வர முடிஞ்சிருக்கு பாருங்க.”

“என்ன விதியோ... எல்லாரையும் சந்தோசமா வெச்சா இந்த சாமிக்கு எது குறைஞ்சுபோகும்?” - சலித்தார் உடையார். பதிலுக்கு ஒரு புன்னகை மட்டுமே சிதம்பர மாணிக்கத்திடம்.

மண்சாலை ஓரமாய் நகரத்தார் சத்திரம் என்கிற பெயர்ப்பலகை கொண்ட கட்டடம். வெளியே ஒரு மூலையில் எச்சில் இலைகள் கிடக்க, அங்கே காக்கைகள் இலைகளைக் குடைந்தபடி இருந்தன.

“வாங்க... குளிச்சதுக்கும் கும்புட்டதுக்கும் சேர்த்து ஒரு பிடி பிடிப்போம், பசிக்குதுல்ல...?”

“பசிக்குதாவா... விட்டா இந்தச் செடிகொடியை எல்லாம்கூடத் தின்னுடுவேன்.”

“இந்த உடம்போட முதல் வியாதியே பசிதான். முடிவில்லாத வியாதியும் பசிதான். என்னால ஒரு வாரம் பத்து நாள்கூட சாப்பிடாம இருக்க முடியும்” பெருமிதமாய்ச் சொல்லிக்கொண்டே உள்ளே நுழைந்தார். அகண்ட கூடத்தில் ஒண்ணரை அடி அகல குந்திப் பாய்கள் சுவரோரமாக விரிக்கப்பட்டிருந்தன. அதில் அமரவும், தையல் இலை போடப்பட்டு செம்பில் தண்ணீர் வைத்து, ஓர் உரித்த மலை வாழைப்பழத்தை வைத்தனர்.

உடையாருக்கு மட்டும்தான் இலை. சிதம்பர மாணிக்கத்துக்குப் போடவில்லை.

“ஏன் நீங்க சாப்பிடலியா?”

“இல்ல... பௌர்ணமி வரைல வெறும் பால் மட்டும்தான்.”

“எதனால அப்படி?”

“எல்லாம் ஒரு கட்டுப்பாடுதான்...”

“வயித்துக்கு சாப்பிடறதுல என்ன கட்டுப்பாடு?”

“நீங்க சாப்பிடுங்க... எல்லாம் போகப் போகப் புரியும்.”

“ஆமா, கூட வந்தாரே பெட்டியோடு... அவர் எங்கே?”

“அவர் வெளியவே நிக்கறாரு.”

“அவர் சாப்பிடலையா?”

“அவரும் விரதம்.”

“எல்லாம் ஒரே புதிரா இருக்கு!”

“நீங்க சாப்பிடுங்க. நல்லா பசியாறச் சாப்பிடுங்க. மலை மேல ரொம்ப தூரம் நடக்கணும்.”

சிதம்பர மாணிக்கம் மிக இதமாகப் பேசினார். இலையில் இட்லிகள் வைக்கப்பட்டுத் துவையல் போடப்பட்டது. தொடர்ந்து பனியாரம், சீயம், தேங்காய்ப்பால் என்று செட்டிநாட்டு வகைகளாகவே வந்தன. உடையார் உண்டு முடித்தார். வெளியே வந்தபோது சாரல் மழையில் பெட்டியைச் சுமந்தபடியே நின்றிருந்தார், பெரிய புராணம் வாசித்த ஓதுவாரைப் போன்ற மனிதர்.

“பெட்டியை இறக்கி வைக்கலாமே... எதுக்காக இப்படித் தலையில சுமக்கறாரு?”

“அவர் விரும்பித்தான் சுமக்கறாரு. இப்படிச் சுமந்து வருவதற்காக அவர் எனக்கு மூணுவருஷமா சேவை செய்திருக்கார்.”

“என்ன சொல்றீங்க?”

“அவர் அதை பாரமான ஒரு பெட்டியா நினைக்கல. தான் அடைய நினைக்கிற கைலாசமா நினைக்கறாரு!”

“கைலாசமாவா?”

“ஆமால்ல... உள்ளே லிங்கத்துல இருந்து எம்புட்டோ ஏடுங்க. அதையெல்லாம் படிச்சா இரும்பைத் துரும்பாக்கலாம். துரும்பை இரும்பாக்கலாம். வானத்துல பறக்கலாம். தண்ணி மேல நடக்கலாம். எதுத்து வர்ற யானையையே குட்டிக்கர்ணம் போடவும் வைக்கலாம். எல்லாம் சித்த பொக்கிஷம்! அப்போ அதைச் சுமக்க கொடுத்துல்ல வெச்சிருக்கணும்?”

சிதம்பர மாணிக்கம் திகட்டலின்றி திணறலின்றி சாரலில் நடந்தபடியே பேசியதை, உடையாரும் பிரமிப்பு குறையாது கேட்டுக் கொண்டே தொடர்ந்தார்.

ஓரிடத்தில் ஒரு சரிந்த ஓட்டுக்கூரை வீடு. அதன் முகப்பில் குதிரையோடு கூடிய சாரட் நின்றுகொண்டிருந்தது. குதிரையோட்டி குதிரைகளுக்குப் புல் வெட்டி வந்து போட்டபடி இருந்தான். சிதம்பர மாணிக்கத்தைப் பார்க்கவும் ஓடிவந்து, அவர் தந்த தலைப்பாகையை வாங்கிக்கொண்டான். பெட்டியோடு வந்த ஒதுவார் வீட்டுக்குள் போய்விட்டார். வெளியே பெரிய திண்ணை. சாணி மெழுகிக் கோலம் போடப்பட்டிருந்தது. திண்ணையோரம் சுவரில் பந்தம்தாங்கி இருந்து, அதில் பந்தம் செருகப்பட்டிருந்தது.

இறையுதிர் காடு
இறையுதிர் காடு

சிதம்பர மாணிக்கம் திண்ணையில் அமர்ந்தார். உடையாரும் உடன் அமர்ந்தார். தோளில் கிடந்த துண்டால் லேசான சாரல் ஈரத்தைத் துடைத்துக் கொண்டார்.

“இது நம்ம மனைதான். வருஷா வருஷம் குடும்பத்தோடு வந்து தங்குவேன். பத்து நாள் வளர்பிறையா பார்த்து, தினமும் அருவில குளிச்சு, மூலிகை உணவைச் சாப்பிட்டு உடம்பைச் சீராக்கிட்டுப் போவோம். திரும்ப அடுத்த வருஷம் வரும் வரை ஒரு பிரச்னையும் இருக்காது.”

“மூலிகை உணவா... அப்படின்னா?”

“அதுசரி... நீங்க கேள்விப்பட்டதில்லையா?”

“இல்லையே...” உடையார் சொல்லும்போதே மூலிகை வாசம் கமகமக்க, ஐந்தாறு வெண்கலப் பாத்திரங்களை ஒருவர் உண்டிவில்லாய்க் கட்டி எடுத்து வந்திருந்தார். கச்ச வேட்டி கட்டி, மார்புக்குப் பிணைகயிற்று மேலாடை தரித்திருந்தார். தோளிலும் குறுக்காக அங்கவஸ்திரம். நெற்றியில் சந்தனப் பொட்டு. உதட்டில் தாம்பூலக் குதப்பல்.

“வாங்க மேழிமடையாரே...” என்று சிதம்பர மாணிக்கமும் வரவேற்றார். அப்படியே, ``இவர் ஜமீன்தார் பிரம்மாண்ட உடையார். சென்னப்பட்டணத்துப் பல்லாவரம்” என்று உடையாரை அறிமுகம் செய்தார்.

மேழிமடை என்கிற அந்தப் பெயரே புதிதாகத் தோன்றியது உடையாருக்கு.

“ஐயா யாருன்னு..?”

“இவர்தான் நம்ம சித்த வைத்தியர். நான் சொன்ன மூலிகை உணவுக்கு மூலகர்த்தா. இப்போ ரவைக்கு, என் சகாக்களுக்காக கொள்ளுத் துவையல், சிவப்பரிசிச் சோறு, மிளகு ரசம், மாவல்லி ஊறுகா, வேம்பு வெல்லப் பச்சடின்னு கொண்டுவந்திருக்காரு. சாப்பிட்டா எப்படி இருக்கும் தெரியுமா!” சிதம்பர மாணிக்கம் சொல்லும்போதே மிக ரசமாய் இருந்தது.

“இவருக்கு மூலிகை உணவுன்னா என்னன்னே தெரியல மேழிமடையாரே... கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்க. அப்பறம் உடையாரே... நாம அதிகாலை கிளம்பிடுவோம். உச்சிக்கு ஒரு மணி திசாலம் நடப்போம். பிறகு மணி மூணு வரை ஓய்வு. அப்புறமா அந்திவரை திரும்ப நடை. நாளைய இரவு நமக்கு மலைக்கு மேல புலிப்பாறைங்கற இடத்துல ஓய்வு.”

- சிதம்பர மாணிக்கம் தெளிவாகப் பயணத் திட்டத்தைக் கூறினார். மேழிமடையார் எனப்பட்ட வைத்தியரும் உடையாருக்கு சித்தம் கலந்த உணவு பற்றிக் கூறத் தொடங்கினார்.

“ஐயா... இந்த எண் சாண் உடம்புல இருக்கிற ஒவ்வோர் உறுப்புக்கும் அதோட பலத்துக்கும் நலத்துக்கும் ஒரு மூலிகையை அந்தக் கடவுள் கொடுத்திருக்கான். சொல்றேன் பாருங்க...

மூளைக்கு வல்லாரை, மூடி வளர நீலநெல்லி, எலும்புக்கு இளம்பிரட்டை, பசிக்கு சீரகம் இஞ்சி, பல்லுக்கு வேலாலன், ஈளைக்கு முசுமுசுக்கை, கல்லீரலுக்கு கரிசாலை, காமாலைக்குக் கீழாநெல்லி, கண்ணுக்கு நத்தியாவட்டை, உடலுக்கு வெள்ளை எள் எண்ணெய், தொண்டைக்கு அக்ரகாரம், தோலுக்கு அறுகு வேம்பு, முகத்துக்கு சந்திர நெய், நரம்புக்கு அமுக்கரான், நாசிக்கு நச்சுத் தும்பை, ஊதலுக்கு நீர்முள்ளி, அம்மைக்கு வேம்பு மஞ்சள், கருப்பைக்கு அசோகப்பட்டை, விந்துக்கு ஓரிதழ்த் தாமரை, நாப்புண்ணுக்குத் திரிபலா, குடலுக்கு ஆமணக்கு, குருதிக்கு அத்தி, சிறு நீரகக்கல்லுக்குச் சிறுகண் பீளை, வாய்ப்புண்ணுக்கு மணத்தக்காளி, குரலுக்குத் தேன் மிளகு, கக்குவானுக்கு வசம்பு, கால் சொரிக்கு வெங்காரம், கால் வெடிப்புக்கு மருதாணி கிளிஞ்சல், விக்கலுக்கு மயிலிறகு, வேர்க்குருக்கு பனை நுங்கு, நீரிழிவுக்கு ஆவாரை படைநீர், தீப்புண்ணுக்குக் குங்கிலிய வெண்ணெய், சீழ்க் காதுக்கு நிலவேம்பு, கக்கலுக்கு எலுமிச்சை, கழிச்சலுக்கு வெண்பூசணி, உடல் பெருக்க உளுந்து எள்ளு, உளம் மயக்க கஞ்சா கள், உடல் இளைக்க தேன் கொள்ளு. இப்படி நூறு மருந்து மூலிகைங்க இருக்குங்க” என்று சற்று இழுத்துப் பெருமூச்சு விட்டார் மேழிமடையார்.

உடையாருக்கு உச்சி விடைத்து, புத்திக்குள் யாரோ நெருப்பு மூட்டினாற்போல இருந்தது.

“ஆமா, உங்களுக்குக் குற்றாலம் சொந்த ஊரா?” என்று மெல்லிய குரலில் கேட்டார்.

“இல்ல... எனக்குத் தென்காசி. நான் செட்டியாருக்காக வந்திருக்கேன். இந்தத் தடவையாவது இந்த பாஷாண லிங்கம் எனக்குக் கிடைக்கணும். அப்படிமட்டும் கிடைச்சிட்டா, நான் செத்தவனைப் பிழைக்க வெச்சிடுவேன்” என்று சொல்லவும்தான், அவர் எதற்கு வந்திருக்கிறார் என்பது உடையாருக்கும் தெரிந்தது.

ஒருவர் தலையை விட்டே இறக்க மாட்டேன் என்கிறார். ஒருவர் 12 வருடமாகப் பின்தொடர்கிறார். இன்னும் எத்தனை பேர் இதற்குப் போட்டி போடப்போகின்றனரோ என்ற கேள்வி எழும்பியதோடு, தனக்கே ஒருவேளை இந்த லிங்கமும் மற்ற ஏடுகளும் கிடைத்துவிட்டால் என்றும் உடையாருக்குள் ஒரு நம்பிக்கை தோன்ற ஆரம்பித்தது.

உள்ளே பெட்டிக்குக் கற்பூர ஆரத்தி காட்டிக்கொண்டிருந்தார் அந்த ஓதுவார். சற்றுத் தொலைவில் ஓர் ஆவாரம் புதருக்குள் ஒருவன் வெளித் தெரியாதபடி ஒளிந்திருந்த நிலையில், நடப்பதையெல்லாம் பார்த்தபடியே இருந்தான் இலை இடுக்கு வழியாக!

இன்று தன் மனக்கணக்கில் தெரிந்த அக்காட்சியைத் தொடர்ந்து திவ்யப்ரகாஷ்ஜி உடம்பில் ஓர் உதறல். மளுக்கென்று திறந்துகொண்ட கண்களோடு எல்லோரையும் ஒரு பார்வை பார்த்தார். பின் திரும்பவும் கண்களை மூடி, தியானத்தில் மூழ்கத் தொடங்கினர்.

இம்முறை தெளிவாகவே காட்சிகள் புலனாகின. தீட்சிதர் மட்டுமன்றி பானுவும் அதேபோலக் கிடந்தாள். நாகபட சிலை முன்னால் லிங்கமும், லிங்கத்தின் முன்னால் ஏடுகளும் காட்சி தந்த நிலையில், நாகபடக் கற்சிலை மேல் அந்த நாகம் படம் விரித்து நின்றபடி இருந்தது. சிறிது நேரத்தில் திவ்யப்ரகாஷ்ஜி மூக்கின் வழியே ரத்தம் கசிந்த நிலையில் அப்படியே மயங்கி விழுந்தார்.

சுற்றியிருந்த எல்லோரையுமே பதற்றம் தொற்றிக்கொள்ள, சாந்தப்ரகாஷ் “அண்ணே... அண்ணே...” என்று அவரை எழுப்ப முயன்று, மூக்கில் வடிந்த ரத்தத்தைப் பார்த்து அதைத் துடைக்க முயன்றான்.

இறையுதிர் காடு
இறையுதிர் காடு

“சார்... கத்தி போய் வாலு வந்த கதையா ஏதாவது ஆயிடப்போகுது சார்” என்று அரவிந்தனும் பதறிட, ஜெயராமன் ஓடிப்போய் காரிலிருந்து தண்ணீர் பாட்டில் எடுத்துவந்து முகத்தில் தெளித்துப் பார்த்தார். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. திவ்யப்ரகாஷ்ஜி கண்களைத் திறந்து பார்த்தார். பின் அவராக எழுந்து அமர்ந்தார்.

“ஜி... ஏன் இப்படி பயமுறுத்தறீங்க... என்னாச்சு?”

“நத்திங்... மதியூகரணில ரொம்ப டீப்பா இறங்கும்போது அழுத்தம் அதிகமாகி இப்படி ரத்தம் வரும். கொஞ்ச நேரத்துல சரியாயிடும். பயப்பட வேண்டாம். எனக்கு இப்போ கூடுதலா ஆக்சிஜன் தேவை. இம்மீடியட்டா அரச மரத்தடிக்கு இப்போ நான் போனாப் போதும், எல்லாம் நார்மலாயிடும்” என்ற திவ்யப்ரகாஷ்ஜி மெல்ல கைகள் ஊன்றி எழுந்தார்.

தொடர்ந்து ரத்தம் வந்த வண்ணமிருந்தது. தோளில் கிடந்த டவலால் மூக்கை மூடிக்கொண்டு நாலாபுறமும் பார்த்தார். கண்ணுக்கெட்டிய தொலைவுக்கு அரச மரம் தென்படவில்லை.

“வாங்க... நிச்சயம் அரச மரம் கண்ணுல படும்” என்று அவராக கார் நோக்கி நடக்கத் தொடங்கினார். அவர்களும் பின்தொடந்தனர். திடீரென்று ஓர் அரசமரம் அப்போது முக்கியத்துவம் பெறும் என்பதை அரவிந்தன் கொஞ்சம் விநோதமாய்க்கூட உணர்ந்தான். பாரதியிடமும் அதை நடந்தபடியே பகிர்ந்துகொள்ள முயன்றான்.

“பாரதி... ஓர் அரச மரத்தை ஒரு நாள் நாம தேடுவோம்னு நீ நினைச்சுக்கூடப் பார்த்திருக்க மாட்டேல்ல?” என்றான்.

“இப்போ இங்கே நடக்கிற எதையும்கூட நான் நினைச்சுப் பார்த்ததில்ல அரவிந்தன். நீங்க இப்போ தொடர்கதை எழுதத் தொடங்கி பல அத்தியாயங்கள் ஓடியிருக்கணும். எடிட்டர் சார் இன்னிக்கு இந்த வார தலையங்கத்துக்குத் தவிச்சுட்டிருக்கணும். நான் என் டேபிளில் பக்கங்களை ஓகே பண்ணிக்கிட்டிருக்கணும். ஆனா, நான் ஆன்டிக்ஸ்னு நினைச்சு வாங்கின ஒரு பெட்டியால இப்படி பழநி குற்றாலம்னு ஊர் சுத்துவேன்னு கனவுலகூட நினைச்சுப் பார்க்கல...”

- பேச்சோடு பேச்சாக நாற்கர சாலையின் மீடியனை, ஒரு கிராமவாசி அதன் விபரீதம் தெரியாமல் கடப்பதுபோலத் தாண்டிக் குதித்துக் கடந்து, எதிர்ச்சாரியில் பூமரங்களின் கீழ் நிறுத்தப்பட்டிருந்த கார்களில் ஏறி அடங்கினர். திவ்யப்ரகாஷ்ஜி முன் சீட்டில் அமர்ந்தவராய் பக்கவாட்டில் பார்த்திட, காரிடம் மிதமான வேகம். பின் சீட்டில் சாந்தப்ரகாஷும் சாருவும் அமர்ந்திருக்க, ஜெயராமன்தான் காரை ஓட்டினார். பின்னால் இன்னொரு காரில் பாரதியும் அரவிந்தனும் தொடர்ந்தனர்.

நல்லவேளை சாலையோரமாக ஒரு கிராமம் தட்டுப்பட்டு, அதனுள் உள்ளடக்கமாய் ஓர் அரச மரமும், கீழே ஊர்ச் சாவடிக்கான திண்ணையும் கட்டப்பட்டிருந்தது. மரத்துக்கு மஞ்சள் பூசி வழிபாடுகள் செய்யப்பட்டிருந்தன. உள்ளடக்கமாய் ஒரு பிள்ளையாரும், அவரைச் சுற்றி ஐந்தாறு நாகப்படக் கற்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன.

நல்ல பெரிய மரம்!

மாலை நான்கு மணிக்கேயுரிய இளமாலை தொடக்கத்தில், மெல்லிய காற்றின் வருடலில் அரச இலைகளிடம் ஒரு தளதளப்பு. ஜெயராமன் காரை அந்த மரத்தடிக்கே கொண்டுசென்று நிறுத்தினார். திவ்யப்பிரகாஷ்ஜி காரிலிருந்து வேகமாக இறங்கி, நேராக பிள்ளையார் முன் போய் நின்று ஒரு கும்பிடு போட்டுவிட்டு, வழவழப்பான நாற்புற திண்ணையில் சூரியன் சரியும் மேற்கு திசைப்பக்கத் திண்ணை மேல் அமர்ந்தவராக, எதிரே தெரிந்த சூரியனையும் பார்த்தார்.

பாரதியும் அரவிந்தனும்கூட காரை ஓர் இடத்தில் நிறுத்திவிட்டு மெல்ல நடந்துவந்தனர். பாரதியிடம் மௌனம்.

“நார்மலா ரொம்பவே மறுத்துப் பேசுவே. ஆனா, இப்போ உன்னாலகூட எதுவும் பேச முடியலல்ல? நம்ம கையில என்ன இருக்கு, எல்லாம் அவன் கையிலன்னு சிலர் பெருமூச்சு விட்டுகிட்டே சொல்வாங்களே... அது ஒருவேளை ஒரு பெரிய பிரபஞ்ச உண்மையோ?”

அரவிந்தன், பாரதியின் மௌனத்தின் முன் இப்படிக் கேட்டிருக்கக் கூடாது. அவளிடமிருந்து படுவேகமாய், “மண்ணாங்கட்டி...” என்றொரு வார்த்தை வந்து விழுந்தது.

திவ்யப்ரகாஷ்ஜியோ மூக்கில் கை வைத்து, பிராணாயாமம் செய்யத் தொடங்கியிருந்தார். கால்களிடையே பத்மாசனம்.

“ஜியை என்னால மறுக்கவும் முடியல. இப்படியெல்லாம் நடக்கும்போது ஏத்துக்கவும் முடியல. அந்த மாமரத்தடிக்கு என்ன குறை? இந்த அரசமரத்தடியில அப்படி என்ன இருக்கு?”

அரவிந்தன் விடாமல் பேசினான். பாரதி, திவ்யப்பிரகாஷ்ஜியையே பார்த்தபடி இருந்தாள். ஜெயராமன், சாந்தப்ரகாஷ் இருவரும்கூட மெல்ல அந்தத் திண்ணையில் அமர்ந்தனர். திடீரென்று சற்றுப் பெரிதாகக் காற்று வீசி, இலைகளின் சலசலப்பு காதுக்குக் கேட்டது. எந்தக் கருவிகொண்டும் அந்தச் சலசலப்பு சப்தத்தை எழுப்ப முடியாது. மாமரத்தடியைவிட அந்த மரத்தடி கூடுதல் இதமாகவும் இருப்பது போலத் தோன்றியது.

இடையில் கண்களை மூடிய நிலையிலேயே திவ்யப்ரகாஷ்ஜி பேசத் தொடங்கினார்.

“எடிட்டர் சார், பாரதி, அரவிந்தன்... நான் இப்போ சொல்றதை ரெக்கார்டுகூட பண்ணிக்குங்க. அந்த சர்ப்பம் இப்போ என் கண்ணுக்கு நல்லா தெரியுது. அது முன்னால அந்த லிங்கமும் ஏடுகளும் குவிஞ்சு கிடக்கு. பக்கத்துல அந்த பிராமணர் வாய்ல நுரை ததும்ப இறந்து கிடக்கிறார். கொஞ்சம் தள்ளி ஒரு சுவர் ஓரமா ஒரு பொண்ணும் இறந்து கிடக்கறா. பார்க்கவே விகாரமா இருக்கு. நீலம் பூத்த அவள் முகம். நடுவகிடு எடுக்காம ஓரவகிடு எடுத்துத் தலை வாரியிருக்கா. நெத்தியில ஒரு மிளகு அளவுக்குச் சின்னப் பொட்டு. கழுத்துல மெல்லிசா அதிகபட்சம் ரெண்டு பவுன்ல ஒரு சங்கிலி. அதுல ஷீர்டி பாபா லாக்கெட். ஒரு இடத்துல ஒரு பானை சுக்கு நுறா உடைஞ்சிருக்கு. அது ஒரு பழங்கால வீடு. ஜன்னல் சாத்தப்பட்டு வீட்டுக் கதவும் உட்பக்கமா தாழிடப்பட்டிருக்கு. இது என் மதியூகரணியோட தூரப் பிரசன்னம்.

எப்பவும் இந்த மாதிரி பிரசன்னத்துக்கு ஆட்படும்போது பிராண வாயு தேவை அதிகமா இருக்கும். அரச மரத்தடியில் அது எப்பவும் அபரிமிதமா இருக்கும். அதனாலதான் இங்கே வந்தேன். காட்சியை விட்டு விலகாம நான் இப்போ தெரிஞ்சதைச் சொல்லிட்டேன். இப்போ நான் தூரப் பிரசன்னத்துல இருந்து விடுபடப்போறேன்” என்று பேசி முடித்தவர், மெல்ல கண் திறந்து பயங்கரமாய் சோம்பல் முறித்தார். ஜெயராமன் பார்வை, பாரதி மற்றும் அரவிந்தன் பக்கம் திரும்பியிருந்தது.

இறையுதிர் காடு - 75

“செத்துக்கிடக்கிற அந்தப் பொண்ணு பானு. நாகப்படம் மேல இருக்கிற நாகம், பெட்டியைக் காவல் காக்கிற நாகம். பானுதான் இடையில பூந்து ஏதோ பண்ணியிருக்கா. ஒரிஜினல் எல்லாம் அவகிட்ட போனதால பாம்பும் அங்கே போயிருக்கு. அங்கே பெருசா தப்பா ஏதோ நடக்கவும், இதுவரை யாரையும் எதுவும் செய்யாத அந்த நாகம், அவங்களைத் தீண்டியிருக்கு. அவங்களும் இறந்துட்டாங்க. வீடு உட்பக்கமா பூட்டப்பட்டிருக்கறதால வெளிய யாருக்கும் எதுவும் தெரியல. ஆக, இந்த விநாடி வரை அதெல்லாம் பத்திரமாவே இருக்கு. இது என் கன்க்ளுஷன். சரியான்னு சார்தான் சொல்லணும்” என்றாள் பாரதி.

“தெளிவா சொல்லிட்டே... ஆமா, அது பானுன்னு எதைவெச்சு சொன்னே?”

“எப்பவும் ஓரவகிடு அவதான் எடுப்பா. அடுத்து, அந்த ஷீர்டி பாபா லாக்கெட்.”

“அதுசரி, இவ எங்கே வந்தா, எப்படி வந்தா? நாமளும் விடாம பின்தொடர்ந்துட்டுதானே இருந்தோம்?”

“என் அப்பாவோட இன்னொரு ஏவுகணை அவள். என் அப்பாகிட்ட ஒரு பெண்ணால நல்லபடியா குப்பை கொட்ட முடியாது. இவ கிட்டதட்ட ஏழு வருஷமா இருக்கா. அப்போ இவ என் அப்பாவுல பாதியாவது இருப்பா. நிச்சயமா இவ பின்னாலயும் என் அப்பாதான் இருக்கணும்.”

“இல்லையே... பானுகிட்ட ஒரிஜினல் இருக்குன்னா, நம்பகிட்ட இருந்து பெட்டிய ஜோதிடர் ஆட்கள் ஏன் திருடணும்? அதை எதுக்காக உடைக்கணும்?”

“இந்தக் கேள்விகளுக்குள்ள இப்போ நாம போகவேணாம். திவ்யப்ரகாஷ்ஜி... உங்க பிரசன்னத்துல அகப்பட்ட வீடு எங்கே இருக்கு? அது எந்த ஊர்? அது தெரியலியா உங்களுக்கு?” ப்ரகாஷ் மடைமாற்றினார்.

“வீடு பளிச்சுன்னு பிரசன்னமாகுது. ஆனா, ஊர் தெரியல. கிழக்கு பார்த்த வீடு. அதுவும் தெளிவாயிடிச்சு. தெரு பெயர் தெரியல... அதாவது, என்னால அதுக்கு மேல ஊடுருவ முடியல.”

“இப்போ அது தெரிஞ்ச போதும். நாம போய் அந்த லிங்கம் ஏடுகளை முதல்ல கைப்பற்றிடலாம். பாம்பு கடிச்சதாலதான் ரெண்டு பேருக்கும் மரணம்கறதால கொலைங்கிற கோணத்துல போலீஸ் சந்தேகப்படவோ சிக்கல் உருவாகவோ வாய்ப்பு இல்லை. பாவம் பானு... அவளுக்கு இப்படி ஆகியிருக்க வேண்டாம்” - அரவிந்தனும் தனக்குத் தோன்றுவதை சரளமாய்ப் பகிர்ந்துகொண்டான்.

“பௌர்ணமிக்கு இன்னும் இரண்டே நாள்தான் இருக்கு. அதுக்குள்ள அதைக் கண்டுபிடிச்சு புதுசா ஒரு பெட்டி வாங்கி, அதுலவெச்சு நாங்க போகர் சாமிகிட்ட அதை ஒப்படைக்கணும். அதைச் செய்யத் தவறிட்டா இப்போதைக்கு எங்களுக்கு விமோசனமும் இல்லைன்னு ஆயிடும். தயவுசெய்து எப்பாடுபட்டாவது அந்த வீடு எங்கே இருக்குன்னு கண்டுபிடியுங்களேன்...” என்று சாருபாலா கலங்கினாள்.

இறையுதிர் காடு - 75

“ஆமாண்ணே... இப்போ எல்லாமே உங்க கையிலதான் இருக்கு. நம்ம ஒட்டுமொத்தக் குடும்பத்தோட நன்மையே இப்போ உங்க கைக்குள்ள வந்தாச்சு. ஆகாஷ் மாறிட்டு வர்றான். சாருவும் கர்ப்பமா இருக்கா... எல்லாமே நாங்க இதை ஒப்படைக்க அடியெடுத்து வைக்கவும்தான் நடந்தது. இப்போ எல்லாம் கெட்டுப்போனா, இப்போதைக்கு நமக்கு விமோசனமில்லன்னு ஆயிடும்” என்று சாந்தப்ரகாஷும் உருகிட, திவ்யப்ரகாஷ்ஜி திரும்பவும் பத்மாசனமிட்டு தியானத்தில் ஆழலானார். ஊர்க்காரர்கள் சிலரும் என்னவோ ஏதோ என்று வந்து நிற்கத் தொடங்கினர்.

பாரதியின் பங்களா.

“ராஜா... நீ உயிர் பிழைச்சு வீடு வந்ததே பெரிசுப்பா. காரணம் அந்தப் பொட்டியும் லிங்கமும்தான். அது ஒரு விட்டகுறை தொட்டகுறை... எப்பவோ செய்ய ஆசைப்பட்ட பூஜை அது. இப்போ அதைத் தீர்க்கறதுக்குன்னே அது இந்த வீட்டுக்கு வந்துச்சு. திரும்பியும் போயிடிச்சு. அதுல இருந்த ரசமணி உனக்கு உயிர்ப் பிச்சையும் தந்துச்சு. இதுபோதும்பா. நீ பெட்டியை உனக்குச் சொந்தமாக்கிக்க நினைக்கறது ரொம்பத் தப்புப்பா. சர்ப்பம் திரும்ப வந்தா அவ்வளவுதான்...” என்று முத்துலட்சுமி, சக்கர நாற்காலியில் தீவிரச் சிந்தனையில் இருந்த ராஜா மகேந்திரனிடம் சொல்லிக்கொண்டிருந்தாள்.

“அம்மா... வாயை மூடிக்கிட்டு இரு! ஒரு சின்ன ரசமணி உருண்டைக்கே என்னைக் காப்பாத்தற சக்தி இருந்தா, உள்ளே இருக்கிற மத்த பொருளுக்கெல்லாம் எவ்வளவு சக்தி இருக்கும்? அது யாருக்கும் தெரியாம பெட்டிக்குள்ளே இருக்கிறதால என்ன பிரயோஜனம்? அதைத் திரும்பக் கொடுத்துடணும்கறது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் தெரியுமா? அந்தப் பாம்பையும் அது நிஜமா இருந்தா, நான் பார்க்கணும்.”

- ராஜா மகேந்திரன் ஆவேச பதில் சொன்னபடியே யதார்த்தமாக அந்தச் சுடலைமாடன் வாளைப் பார்த்தார். பின்னர், நாற்காலியோடு அருகில் சென்று கையிலும் எடுத்துப் பார்த்தார். ஆங்காங்கே நின்றபடி இருந்த கணேச பாண்டியன், ஜோதிடர் நந்தா, நந்தாவின் பெட்டியை உடைத்த வட நாட்டு அல்லக்கை என்று எல்லோரும்கூட அப்போது அந்த வாளைப் பார்த்தனர்.

ராஜா மகேந்திரன் அதை உருவப் பார்த்தார்.

“வேண்டாம் ராஜா... வெளிய எடுக்காதே. காயம் பட்ரும்” என்று கத்தினாள் முத்துலட்சுமி.

“காயம் பட்ருமா? நாம வெட்டாம அது எப்படிப் படும்? நந்தாஜி... கமான் இதை வெளிய எடுங்க” - வாளைத் தூக்கி நந்தா கையில் கொடுத்தார் ராஜா மகேந்திரன்.

நந்தாவிடம் இனம்புரியாத பயம். தன் அல்லக்கையிடம் தந்து இந்தியில், “வெளியே எடு” என்று சொல்ல, அவனும் இதென்ன பிரமாதம் என்பதுபோல, பலத்தை எல்லாம் திரட்டி வெளியே எடுக்க முனைய, வாளும் விசையோடு வெளிப்பட்டது. அதேவேகத்தில் அருகில் நின்றபடி இருந்த ஜோதிடர் நந்தாவின் வயிற்றையும் கிழித்து முடித்தது!

- தொடரும்.