மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இறையுதிர் காடு - 76

இறையுதிர் காடு
பிரீமியம் ஸ்டோரி
News
இறையுதிர் காடு

“அப்போ இது அந்த ஆச்சாரி வேலைதான்” - மேழிமடையார் தீர்க்கமாய்க் கூறினார்.

அன்று புதருக்குள் ஒளிந்திருந்த அவன் கறுப்புப் போர்வையால் உடம்பை மூடிக்கொண்டிருந்தான். முகத்தில் மூக்கு முனையில் புண் தெரிந்தது. நெற்றியிலும் தோலின் உரிவு. காது மடல்கள் இரண்டும் செதில் செதிலாய் வெடித்திருந்தன. கழுத்திலும் தோல் உதிர்வு...

மொத்தத்தில் அவன் ஒரு பெருநோயாளி என்பதும், அவன் உடல் முழுவதுமேகூட அழுகிப்போய் அது வெளியே தெரிந்துவிடாதபடி போர்வை போர்த்திக்கொண்டிருந்தான். இடது கையின் முழங்கைப்பரப்பில் ‘சேதுக்கண்ணு ஆச்சாரி’ என்கிற பெயர் பச்சை குத்தப்பட்டிருந்தது.

அவன்தான் குரூரமாய் உற்று உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் ஒளிந்திருந்து கவனிப்பதை அங்கு யாரும் உணர்ந்ததுபோலவே தெரியவில்லை. அந்த ஓட்டுமனை வீட்டுக் காவலன் திண்ணையிலிருந்த தீப்பந்தத்தை எடுத்து, ஒரு வேப்பெண்ணெய்ச் சட்டிக்குள் முக்கி எடுத்துவிட்டு, பின் அதன்மேல் நாட்டுக் கற்பூரத்தைப் பொடிசெய்து தூவிய நிலையில், உள்ளே எரிந்தபடி இருந்த தீப்பந்தத்தில் பிடித்தான். பந்தமும் மளுக்கென்று பற்றியபடி, மஞ்சள் நிற நெருப்பு தன் தாவணியை விரித்துக்கொண்டு ஆடியது.ச் சட்டிக்குள் முக்கி எடுத்துவிட்டு, பின் அதன்மேல் நாட்டுக் கற்பூரத்தைப் பொடிசெய்து தூவிய நிலையில், உள்ளே எரிந்தபடி இருந்த தீப்பந்தத்தில் பிடித்தான். பந்தமும் மளுக்கென்று பற்றியபடி, மஞ்சள் நிற நெருப்பு தன் தாவணியை விரித்துக்கொண்டு ஆடியது.

அந்த இடமே பொன் மண்டலம் போல ஜொலித்திட ஆரம்பித்தது. இதமான குளிர் வேறு... இடையீடாக வீச்சலான பொதிகை மலைத் தென்றல் காற்று. பிரம்மாண்ட ராஜ உடையார் வரையில், பல்லாவரத்தில் இருந்திருந்தால் இது நாட்டியம் பார்க்கும் நேரமாக இருந்திருக்கும். மயிலாப்பூர் சகோதரிகள், மாம்பலம் ஜாக்ரிணி குழுவினர், திருவல்லிக் கேணி மஸ்தான் சாகிபுவின் மாண்டலின் இசை என்று தினம் யாராவது வந்து, தங்கள் திறமையைக் காட்டி, பரிசுபெற்றுச் செல்வார்கள். சனி ஞாயிறுகளில் வெள்ளைக்கார துரைமார்கள், தங்கள் துரைசானியர் களுடன் கோச்சு வண்டிகளில் வந்திறங்கி கலந்துகொள்வார்கள்.

இறையுதிர் காடு - 76

துரைசானிகளின் புசு புசு உடையும், கையுறைகளும் ஜமீன் ஊழியர்களின் கண்களைக் கொத்தி எடுக்கும். அவர்களின் குதிகால் உயரச் செருப்புகளை, அந்த ஊழியர்கள் மிகவே ஆச்சர்யமாகப் பார்ப்பார்கள். “நம்ம ஆளுங்களால எல்லாம் இப்படித் தைக்க முடியாது. என்ன சொல்றே?” என்று தங்களுக்குள் பரஸ்பரம் பேசிக்கொள்வார்கள். லண்டனிலிருந்தும் பாண்டிச்சேரியிலிருந்தும் வரவைக்கப்பெற்ற மதுவகைகள் பெரிதும் பரிமாறப்படும்.

மிச்சக் கிண்ணங்களுக்கும் அதிலுள்ள எச்சில் மதுவுக்கும் ஒரு போட்டியே நடக்கும். மொத்தத்தில் கலகலவென இருக்கும் பிரம்மாண்ட ஜமீன் மாளிகை.

உடையார் குற்றாலக் குச்சு வீட்டில் அதையெல்லாம் தன்னையும் மீறி எண்ணிப் பார்த்தவராக அமர்ந்திருந்தார். மனைவி சிட்டாள், இந்நேரம் என்ன செய்துகொண்டிருப்பாளோ? கார்வார் கந்தசாமி நாலாபுறமும் ஆட்களை அனுப்பியிருப்பான். அவன் சற்றுப் பொறுப்பானவன். கோச்சு ராவுத்தனும் விசுவாசமானவன். அவனுக்கு தன் போக்கிடம் அவ்வளவும் தெரியும். வீரன் (குதிரை) மேல் ஏறிக்கொண்டு, சென்னப்பட்டின பார்களைச் சுற்றிவந்துகொண்டிருப்பான். சிட்டாள் ஒரு சமயம் பனிநீரில் குளிக்க ஆசைப் பட்டது அறிந்து, கோச்சு வண்டியில் கடற்கரையை ஒட்டிய ஐஸ்ஹவுஸ் வரை சென்று, தனது எடைக்குப் பனிக்கட்டியை வாங்கி அது உருகிவிடாதிருக்க மரத்தூள் போட்டு, சாக்கில் சுற்றித் தூக்கி வந்தவன். அதில் ஒரு பாதித் துண்டுப் பகுதியைச் சமையல்கார கிருஷ்ணமணியிடம் கொடுத்து, எலுமிச்சை கலந்த சர்க்கரை பானம் தயாரிக்கச் செய்து, அதை அன்று எல்லோரும் குடிக்கவும், பரவசப்பட்டுப்போனார்கள்.

அந்த ஐஸ்கட்டியை ‘பேராலங்கட்டி’ என்று சிட்டாள் சொல்லிச் சொல்லி மகிழ்ந்திருந்தாள். அன்று அந்தப் பனிக்கட்டி கரைந்த நீரில் குளித்து, தடுமனுக்கும் ஆளாகி அது தலைவலி வரை போனபோது, அதற்காகப் பதறிவிட்டான் ராவுத்தன். எங்கோ போய் சிங்கோனா தைலம் என்று வாங்கிவந்து அதைப் பூசவும்தான் சிட்டாள் சற்றுத் தெளிந்தாள்.

சிட்டாள் ஆனாலும் சிணுங்கி! அனிச்சப்பூ போன்றவள். நாய் குரைத்தால்கூடப் பிடிக்காது. காதைப் பொத்திக்கொள்வாள். இதனால், பிரம்மாண்ட ஜமீனில் நாய் வளர்ப்பே இல்லை. மாறாக, கிளிகள் நிறைய உண்டு. மான்களும் நிறைய உண்டு. இவற்றின் நடுவே வளர்ந்தவன்தான் முருகப்பிரகாஷ்.

அவனை அந்தப் பழநிமுருனாகத்தான் நினைத்தாள் சிட்டாள். பளிச்சென்று நெற்றிக்கு நீறு பூசிவிட்டு, தலையையும் வகிடெடுத்து அழகாய் வாரிவிடுவாள். அது என்னதான் உணர்வோ... சிறுவயதிலேயே அந்த விபூதிப் பந்தலுக்கு நடுவே, பெரிதாய் ஒரு குங்குமப் பொட்டை வைத்துக்கொண்டு வருவான் முருகப்பிரகாஷ்.

“குங்குமம் வேண்டாங் கண்ணு. உனக்கு நன்றாக இல்லை” என்றால் முறைப்பான். ஆனால், அழித்துக்கொள்ள மாட்டான். ஒரு நாள் கண்ணுக்கு மை வைத்துக்கொண்டு வந்து சிட்டாளிடம் காட்டி, “நன்றாக இருக்கிறதா?” என்று கேட்டான். சிட்டாள் நொறுங்கிப்போனாள்.

குற்றாலக் குச்சு வீட்டின் சாணி மெழுகிய திண்ணைப்பரப்பில் எல்லாமே ஞாபகத்துக்கு வந்து, உடையாரைப் பெரும் மௌனத்தில் ஆழ்த்திவிட்டன.

உள்ளே எல்லோரும் சாப்பிட்டு முடித்துக் கை கழுவியிருந்தனர். உடையாருக்கு மாலையில் சாப்பிட்டதே போதும் என்று தோன்றியதால், இரவு சாப்பிடவில்லை. ஆனபோதிலும் கடுக்காய்த்தூள் ஒரு சிட்டிகையும், மிளகுத் தண்ணீர் ஒரு சொம்பும் அவருக்குத் தரப்பட்டது.

“இதை வாய்ல போட்டுக்கிட்டு தண்ணிய குடிங்க. காலை நாலு மணிக்கெல்லாம் மூத்திரப்பை முட்டி தூக்கம் கலைஞ்சிடும். எவ்வளவு அசதி இருந்தாலும் இந்தத் தண்ணி எழுப்பி விட்டுரும். அப்புறம் தூக்கக் கலக்கமும் இருக்காது. நம்ம பயணத்தை நாமளும் தொடங்கிடலாம்” என்று சிதம்பர மாணிக்கம் சொன்னதோடு, அவரும் அவ்வாறே செய்தார்.

அப்படியே அருகமர்ந்து, “கலங்காதீங்க ஜமீன்தாரே! எல்லாம் நல்லபடியா நடக்கும். யோகக்காரர் ஜமீன்தார் நீங்க” என்று ஆறுதலாய்ப் பேசினார். பின், உடையார் தன் தோல்பை மேல் துண்டு விரித்து அதையே தலையணையாக்கிக்கொண்டு படுத்திட, சொல்லிமாளாத அளவுக்குக் கொசுக்களும் பொடிப்பூச்சிகளும் கடிக்கத் தொடங்கின.

இறையுதிர் காடு
இறையுதிர் காடு

அதைத் தடுக்க வேண்டி மேழிமடையார் ஒரு காரியம் செய்தார். ஒரு அரைச்சட்டியில் கரித்துண்டுகளைப் போட்டு அதைத் தீக்கங்குகளாக்கி, அதன்மேல் வேப்பிலையையும் விபூதிப் பச்சிலையையும் போட்டார். இரண்டும் கலந்து முதலில் உலர்ந்து பிறகு எரியவும், ஒருவகை திண்மப் புகை உருவாயிற்று. அதை வாயால் ஊதவும், திண்ணைப் பாகம் முழுக்கப் புகை நாட்டியம். புகையிடமும் ஒரு எதிர்வினை இல்லாத வாசம். கொசுக்களும் பூச்சிகளும் அதன்பின் போன இடம் தெரியவில்லை. “கொஞ்சம் அபின் உருண்டையைப் போடறேன். நல்லா தூக்கம் வரும்” என்று நெல்லிக்காயளவு இரு அபின் உருண்டைகளையும் மேழிமடையார் போடவும், நிஜமாலுமே தூக்கம் அப்படி வரத்தொடங்கியது.

மேழிமடையார் சொன்னதுபோலவே காலை நான்கு மணிக்கெல்லாம் சிறுநீர் கழிக்கும் அவஸ்தை உருவாகி, தூக்கமும் கலைந்துவிட்டது. எழுந்துசென்று ஒரு புதரோரமாக ஒதுங்கி நின்றபடியே சிறுநீர் பெய்தபோது, மொத்த உடம்புமே ஒரு சுகக் கோட்டம் ஆகிவிட்டதுபோல இருந்தது. உடையார் அவர் வாழ்நாளிலேயே அவ்வளவு நேரம் அவ்வளவு சிறுநீர் பெய்திருக்க மாட்டார்.

உடம்பிலும் துளியும் கலக்கமில்லை. கடுக்காய்த்தூள் காரணமா, ஆழ்ந்த தூக்கம் காரணமா என்று யோசிக்கும்போது, “ஐயோ... பெட்டிய காணோமே...” என்றொரு குரல் இடிபோல ஒலித்தது. தூக்கிவாரிப்போட்டது! திரும்பிவந்து குச்சுமனைக்குள் பார்வையைச் செலுத்தவும், பெட்டி இருந்த இடம் காலியாக இருந்தது.

சிதம்பர மாணிக்கம் அப்படியே விரிந்த விழியும் அதிர்ந்த நெஞ்சுமாய் திண்ணைமேல் உட்கார்ந்துவிட்டார். பெரிய புராண ஒதுவாரோ கண்ணீர்விட்டே அழத்தொடங்கிட, மேழி மடையார் மட்டும் தாடையைத் தடவியபடியே யோசிக்கலானார். உடையாருக்கு எல்லாமே விசித்திரமாக இருந்தன.

“செட்டியாரே... கலங்காதீங்க. உங்களப்பத்தியும் பெட்டிபத்தியும் நல்லாத் தெரிஞ்ச யாரோதான் தேட்ட போட்ருக்காங்க. ஆமா, இந்த ஊருக்கு வந்த இடத்துல இதுபத்தி யார்கிட்டயாவது பேசினீங்களா?”

“இல்லை வைத்யரே, நான் பேசினது இதோ இந்த ஜமீன்தார் கிட்டதான். ஆனா, இவர் இங்கதானே இருக்காரு.”

“ஊர்ல இருந்து கிளம்பும்போது யார்கிட்டேயும் சொன்னீங்களோ?”

“என் பொண்டாட்டி பிள்ளைகளைத் தவிர யாருக்கும் தெரியாது.”

“நல்லா ஞாபகப்படுத்திப் பார்த்துச் சொல்லுங்க... இது மதிப்பு தெரிஞ்ச யாரும் இதைச் சாமிகிட்ட திருப்பிக் கொடுக்கறத விரும்பமாட்டாங்க.”

“அப்படிப் பார்த்தா எவ்வளவோ பேரைச் சொல்லலாம். அதேசமயம் சாமிகிட்ட கள்ளத்தனம் பண்ணினா ஏழு ஜென்மத்துக்கு விமோசனம் இல்லன்னு அவங்களுக்கெல்லாம் தெரியும்.”

“ஓதுவாரே... நீங்க சொல்லுங்க. நீங்க யார்கிட்டயாவது இது போகர் சாமி புதையல்னு ஒரு ஆர்வத்துல சொல்லிட்டீங்களா?”

“ஆமா... சேதுக்கண்ணு ஆச்சாரின்னு ஒருத்தர். நகை நட்டு செய்யறவர். எப்போ பார் புலம்பிக்கிட்டே இருப்பார். ஊர் உலகத்துல இருக்கிறவங்களுக்கு விதவிதமா நகை செய்துகொடுத்து அலுத்துப்போச்சு. என் பொண்டாட்டி பிள்ளைகளுக்கு ஒரு சங்கிலி பண்ண வக்கில்லாதவனா இருக்கேன்னு சொல்லி அழுவார்.”

“அவர் எந்த ஊர்?”

“பழநி பக்கம் தாராபுரம். பூசத்துக்குப் பூசம் பழநிக்குப் போயிருவார். அங்ககூட முருகனை முதல்ல கும்புட மாட்டார், போகர் சாமியத்தான் கும்புடுவார். அங்கே சித்தர் சாமிங்க யாராவது வர்றாங்களான்னு பார்த்துகிட்டே இருப்பார். ஒருசமயம் ஒரு சித்தர் சாமி வரவும், அவர் கால்ல விழுந்து கெட்டியா பிடிச்சிக்கிட்டு அழுதிருக்காரு. `சாமி, தங்கத் தட்டான் நான். ஆனா, குந்துமணி தங்கம் எனக்குன்னு இல்லை. ரசவாதத்துல தங்கம் பண்ணமுடியுமாமே... எனக்கு அந்த வித்தைய சொல்லித்தர்றீங்களா’ன்னு அந்தச் சித்தர் சாமிகிட்ட கேட்டுருக்காரு. அவரோ, `போகன் பொட்டிக்குள்ளே எல்லாம் இருக்கு’ன்னு சொல்லிட்டுப் போய்ட்டார். இதை ஒருசமயம் என்கிட்ட சொல்லவும்தான் பொட்டி பத்தி எனக்குத் தெரியவந்துச்சு. என் புண்ணியம், அது செட்டியார் கிட்ட இருக்கறதும் தெரியவந்து செட்டியாரைப் பார்த்து, பிரதோஷ பூஜைல கலந்துக்கிட்டு சேவை செய்யத் தொடங் கினேன். அப்புறம் நான் ஆச்சாரியைப் பார்க்கல. ஆனா, சமீபத்துல பார்த்தப்போ அப்படியே அதிர்ந்துபோனேன். பெருநோய் வந்து அவரைப் பார்க்க சகிக்கலை. ரசவாதம் பண்ணும் ஆசைல தப்பா பல பேர் கூட்டு ஏற்பட்டு, பஸ்பம், சூரணம்னு கண்டதைத் தின்னதுல, அவர் உடம்பு அழுக ஆரம்பிச்சுடிச்சு. மனுஷன் கதறிட்டான். அப்போ அவர்கிட்ட இந்த சித்ரா பௌர்ணமிக்குப் பொதிகை சித்தன் பொட்டலுக்கு எப்படியாவது வாங்க. போகர் சாமி தரிசனமும் அருளும் உங்களுக்கு விமோசனம் தரும்னு சொன்னேன்.”

“அப்போ இது அந்த ஆச்சாரி வேலைதான்” - மேழிமடையார் தீர்க்கமாய்க் கூறினார்.

“வைத்யரே அவன்தான்னா... அவனை இப்போ எப்படிப் பிடிக்கிறது? ஏய்யா ஓதுவாரே, இதையெல்லாம் ஏன்யா என்கிட்ட முன்பே சொல்லலை?”

“சாமி... இப்படி ஆகும்னு நான் நினைக்கலீங்களே.”

“மண்ணாங்கட்டி... கடைசில என் குடில்லயா இப்போ கெடப்போகுது. சாமீ... நான் இப்போ என்ன செய்வேன்” - புலம்பத் தொடங்கிவிட்டார் சிதம்பர மாணிக்கம்.

“அய்யா... கலக்கம் வேண்டாம். நாம சாமிய மனசாரக் கும்புடுவோம். பொன் பொருள ஒருத்தன் திருடி அடைஞ்சிடலாம். எஞ்சாமிய எவனாலயும் திருட முடியாது”- மேழிமடையார் நம்பிகை இழக்கவில்லை. உடையார் அமைதியாகக் கேட்டபடி இருக்க, திடும்மென்று புலி ஒன்று உருமும் சப்தம். அடுத்தநொடி, எல்லோரிடமும் அமைதி. காற்றிடம் மட்டும் உசாவல்! மேழிமடையார் வேகமாய்ச் சென்று தீப்பந்தத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, வீட்டுக்குள் எல்லோரும் ஒடுங்கிய நிலையில் கதவைத் தாழிட்டார்.

“அமைதியா இருங்க... புலி மேல இருந்து கீழ இறங்கியிருக்கு. இவ்வளவு தூரம்லாம் அது வராது” என்று சொல்லும்போதே, வெடிச் சத்தம் ஒன்றும் மலைமேல் வெடிப்பது கேட்டது.

“என் யூகம் சரி... மலைமேல வெடியப் போட்டு மிருகங்களைத் துரத்தறாங்க சிலர். அதான் புலி கீழே இறங்கியிருக்கு. இந்த நேரம் யாரும் இப்படி வெடி போடமாட்டாங்க.

அநேகமா இது அந்த ஆச்சாரி வேலையா இருக்கலாம். ஒருத்தனால இதைச் செய்யமுடியாது. அவன்கூட சிலர் இருக்கலாம். சப்தம் வடமேற்கே இருந்து வந்துச்சு. அங்கேதான் நிறைய சிறு குகைகள் இருக்குதுங்க. களவாணிப் பசங்க அங்கேதான் ஒளிவாங்க. ஆஷ் துரையை வாஞ்சிநாதன் சுட்டப்ப, ஒரு கூட்டம் அங்கிருந்துதான் செயல்பட்டுச்சு. நாம அங்கே போனா நிச்சயம் அந்த ஆச்சாரியைப் பெட்டியோடு புடிச்சிடலாம்.”

- மேழிமடையாருக்கு மூளை துரிதமாகவும் தெளிவாகவும் வேலை செய்தது. ஆனால், சிதம்பர மாணிக்கம் முகம் அவர் பேச்சை மறுப்பதுபோல எதிரொலித்தது.

“அய்யா... என்ன யோசனை?”

“நீர் சொல்றது எனக்குப் பொருத்தமாப் படலை வைத்யரே. ஒருவேளை அந்த ஆச்சாரி எடுத்திருந்தா அதைத் தூக்கிட்டு எதுக்குக் கஷ்டப்பட்டு மலை ஏறணும். தன் இருப்பிடத்துக்கில்ல கொண்டுபோகப் பார்ப்பான்?”

“அது ஒரு கோணம்... அதேசமயம் தங்கம் செய்ய ஆசைப்பட்ட ஒருத்தனுக்கு, ரசவாதம் செய்ய வீடு தோது கிடையாது; மலைக் குகைதான் தோது. ரசவாத மூலிகையும் மலைமேலதான் இருக்குது.”

- இப்படி அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டிருக்கும்போதே பொழுதிலும் விடியல். லேசாய் மழைச்சாரலும்கூட. அதன்பின் உறுமல் சப்தம் கேட்டிராத நிலையில், மெல்ல கதவைத் திறந்துகொண்டு வெளியில் வந்தனர். உடையாருக்குள் கடுக்காய்த்தூள் நன்றாக வேலைசெய்ததில் ஜலவாதி அவஸ்தை வேறு.

“நான் கொஞ்சம் ஒதுங்கிட்டு வந்துடறேனே...” என்றார். செட்டியார் எதுவும் சொல்லவில்லை.

இறையுதிர் காடு
இறையுதிர் காடு

“பார்த்து. எதுக்கும் கைக்கு ஒரு கம்பும், இடுப்புல ஒரு கத்தியும் இருக்கட்டும்” - என்று மேழிமடையார் லேசாக பயமுறுத்தினார். உடையாருக்கு ஒதுங்கியே தீரும் நெடிக்கடி. துணிவுடன் அங்கிருந்த ஒரு கம்புடன் கச்சவேட்டியை அவிழ்த்துத் தோள்மேல் போட்டபடி, கதராடை உள்டவுசர் முழங்கால் வரை தெரிய நடந்தார். வழியெங்கும் ஈர நொதிப்பு. நசநசவென்கிற ஈரம்... தாவரங்கள் உரசும்போது ஒரு குட்டி நீர்ச்சிலுப்பல். ஒருவழியாக ஒரு சமனான நிலப்பரப்பை அடைந்து உட்கார எத்தனித்தபோது பகீர் என்றது. அந்த நிலப்பரப்பின் மேல் ஓரிடத்தில் அந்த சேதுக்கண்ணு ஆச்சாரி உடல் ரத்த விளாராகக் கிடந்தது. கை ஒரு இடத்தில் கால் ஒரு இடத்தில்... தலை ஒரு கவிழ்ந்த செம்புபோல ஒரு ஓடைக்கரையில் குப்புறக் கிடந்தது.

இன்று வயிற்றை அந்த வாள் கிழிக்கவும் ஜோதிடர் நந்தா அப்படியே மண்டியிட்டு அமர்ந்து, பின் சொத்தென்று பக்கவாட்டில் விழுந்து, உடம்பையும் ஒடுக்கிக்கொண்டு துடிக்கலானார்.

வாளின் கூரிய பரப்பொங்கும் ரத்தப் பரவல்!

அதைப் பார்த்த அந்த எடுபிடியும் வாளை மிக வேகமாகக் கீழே போட்டான். எல்லோரிடமும் ஓர் உறைவு! அப்படியப்படியே சிலையானார்கள். முத்துலட்சுமி மட்டும் அதிலிருந்து வேகமாக விடுபட்டு, “காயம்படும்னு சொன்னேனே கேட்டியா... இப்போ பார்த்தியா” என்றாள்.

அதற்குள் விழுந்துகிடந்த ஜோதிடர் உடம்பிலிருந்து ஒரு ரத்தப்பெருக்கு பாம்பு போலவே வளைந்து ஓடப் பார்த்தது. ராஜா மகேந்திரனும் ஸ்தம்பிப்பில் இருந்து விடுபட்டவராக, “கணேச பாண்டி டாக்டருக்கு போன் பண்ணு... ஓடு!” என்றார்.

“அய்யா... டாக்டர் வர்றதுக்குள்ள நாம ஆஸ்பத்திரிக்குப் போகலாம்யா” என்றார்.

“எதுவா இருந்தாலும் சீக்கிரம் செய். நந்தாஜி... நந்தாஜி... பேசமுடியுமா?” என்று அவரையும் ராஜா மகேந்திரன் தூண்டவும் நந்தாவிடம் முனங்கல்.

“சார் கொஞ்சம் மஞ்சள் கொண்டு வரச்சொல்லுங்க... ஃபர்ஸ்ட் எய்டு பாக்ஸ் இருந்தா கொண்டுவாங்க. என்னால மூச்சுவிட முடியல... சீக்கிரம்...” என்று கஷ்டப்பட்டு பேசவும், முத்துலட்சுமி மஞ்சளுக்காக ஓடிட, மருதமுத்து முதலுதவிப் பெட்டியை வெளியே உள்ள ஸ்டோர் ரூமிலிருந்து எடுத்துவர ஓடினான்.

அந்த வாள் மட்டும் ரத்தத் திப்பியோடு தரையில் கிடந்தது. அதை ராஜா மகேந்திரன் வெறிக்கவும், அதில் பொறிக்கப்பட்டிருந்த எழுத்துகள் தெளிவின்றித் தெரிந்தன.

“கணேச பாண்டி அந்தக் கத்தியில என்னய்யா எழுதியிருக்கு?”

“தெரியலீங்க... ஆனா, இந்த வீட்டுக்குள்ளே நம்ம பாப்பாவைத் தவிர எல்லாரையுமே இது வெட்டியிருக்குதுங்க.”

“அப்போ உனக்கு எல்லாம் தெரியுமா?”

“பாப்பாகிட்ட பேசியதை வெச்சும், வீட்ல சமையக்காரம்மா சொன்னதை வெச்சும் கொஞ்சம் தெரியுங்க.”

அதற்குள் ஃபர்ஸ்ட் எய்டு பாக்ஸ்ஸுடன் மருதமுத்து வந்து, நந்தா உடலைப் புரட்டிப் போட்டுக் கட்டுப்போட முயல, முத்துலட்சுமியும் மஞ்சள் தூளுடன் வந்தாள். அதை அப்படியே காயம்பட்ட இடத்தில் தூவச்செய்து கட்டு போடப்பட்டது. நந்தாவின் உதவியாளன் வெளியே காரைக் கிளம்பிக்கொண்டு தயாராக இருக்க, நந்தாவின் உடல் மருதமுத்துவால் அப்படியே தூக்கிச் செல்லப்பட்டது. கணேச பாண்டியும் பின்னாலேயே சென்றிட, வீட்டில் இப்போது ராஜா மகேந்திரனும் முத்துலட்சுமியும் மட்டும்தான். முத்துலட்சுமி முகத்தில் சலனக் கசங்கள்!

“ராஜா... எனக்கு பயமா இருக்குப்பா. திரும்பவும் சொல்றேன். நீ உயிர்பிழைச்சதே பெருசு. இதுக்கு மேல இந்த ஜோசியன் பேச்சைக் கேட்டு அந்தப் பெட்டி, ஏடுன்னு எதுவும் பண்ணாதே. பெட்டியோடு இந்த வாளும் போயிருக்கணும். ஆனா, போகாம இங்கேயே தங்கவுமே நினைச்சேன், இன்னும் ஏதோ இருக்குன்னு. அது இன்னிக்கு நடந்துடிச்சு” என்றவளை ஒரு மாதிரி பார்த்தார் ராஜா மகேந்திரன்.

“இப்படியெல்லாம் பார்க்காதே... திரும்பச் சொல்றேன், நீ பொழச்சதே பெருசு. உன் கூட்டாளிகள் யாரும் இப்போ உயிரோடு இல்ல. கொஞ்சம் யோசிச்சுப் பார்!”

“கொஞ்சம் என்ன... நிறையவே யோசிக்கறேன். என் கூட்டாளிகள்னுல்லாம் யாரும் கிடையாது. நான் பணம் தரேன். அவங்க அதுக்குக் காரியம் செய்து தராங்க அவ்வளவுதான். அவங்க சாவுக்கு அவங்க பயம்தான் காரணம். நீ சொன்னியே நல்லா யோசின்னு... நல்லா யோசிச்சுதான் கேட்கறேன். கஷ்டப்பட்டு சித்தர்கள் ஓலைகளை எழுதினது யாருக்காக... மக்களுக்குப் பயன்படறதுக்காகத்தானே? கல்லுல செய்யாம நவபாஷாணத்துல லிங்கம் செய்ததும் எதுக்காக... அது மருந்தா மக்களுக்குப் பயன்படத்தானே? அதைப்போய் பூட்டிவைக்கறதும் திரும்ப கொண்டுபோய்க் கொடுக்கிறோம்னு சொல்றதும் நல்லாவா இருக்கு? ஒரு கோயில் கட்டி அதுல அந்த லிங்கத்தை வெச்சு தினமும் வழிபாடு செய்யச் சொல் கேட்கறேன். ஏடுகளைப் படிச்சு மருந்து கண்டுபிடிச்சா அது நாட்டுக்குத்தானே நல்லது? தங்கம்கூட செயற்கையா செய்யமுடியுமாமே... ஒருவேளை அப்படி மட்டும் செய்யமுடிஞ்சா நாமதாம்மா வல்லரசு. அமெரிக்காவும் ஆப்பிரிக்காவும் நமக்கு சாமரம் வீசும். தெரியுமா?”

ராஜா மகேந்திரன் முகத்தில் பேராசை பளீரிட்டது. தாடையெல்லாம் முடியிருந்தும் கண்களில் துலக்கினதுபோல ஒரு வெண்மை. அதில் அந்தப் பேராசை மின்னியது.

“இல்லப்பா... இப்படி நீ ஆசைப்படறபடி எல்லாம் நடக்க முடியாது. சித்தர்கள் விஷயம் ரொம்பப் புதிரானது. அதைப் புரிஞ்சுக்க நமக்கெல்லாம் அறிவும் கிடையாது, அனுபவமும் கிடையாது. அவங்க பேச்சைக் கேட்டு அதன்படி நடக்கறதுதான் எல்லாருக்கும் நல்லது.”

முத்துலட்சுமி சொல்லும்போது மருதமுத்து உள்ளே வந்தவனாய், “அவங்க ஆஸ்பத்திரிக்குப் போய்ட்டாங்க” என்றான்.

இறையுதிர் காடு
இறையுதிர் காடு

“எங்கே அந்தக் கத்தியை எடுத்துத் துடைச்சு என் கைல கொடு பாப்போம்...” என்றார் ராஜா மகேந்திரன். மருதமுத்துவும் குனிந்து எடுத்து, தரையில் ரத்தத்தைத் துடைத்து பாத்ரூமைத் தேடிச்சென்று ரத்தக்கறையைக் கழுவி முடித்தவனாக எடுத்துவந்தான். அதை ராஜா மகேந்திரன் கையில் தரப்போகும் சமயம் வாசலில் டி.எஸ்.பி ராஜரத்னத்தின் கார் வந்து நிற்பது தெரிந்தது.

அவரும் இறங்கி வரலானார். ராஜா மகேந்திரனும், “சரி சரி, அதை உறையில போட்டு அது இருந்த இடத்துல வை” என்றிட, அவனும் அவ்வாறே செய்துவிட்டு வெளியேறினான். டி.எஸ்.பியும் ராஜா மகேந்திரனும் பரஸ்பரம் பேசிக்கொள்ள, முத்துலட்சுமியும் விலகி, பூஜை அறைப் பக்கமாகச் சென்று எதிரில் தெரியும் சாமி படங்களைப் பார்த்தபடியே நின்றுவிட்டாள்.

அரசமரத்தடியில் திவ்யப்ரகாஷ்ஜியின் தியானம் கலைந்த நிலையில் அவர் முகத்தில் அவ்வளவாகச் சுரத்தில்லை.

“என்ன ஜி… எனி இம்ப்ரூவ்மென்ட்?” – அரவிந்தன் ஆர்வமாகக் கேட்டான்.

“ஊர் தெளிவாகத் தெரியல… ஆனா, ஒரு கார் அந்த வீட்டு வாசல்ல அவங்களை இறக்கிவிட்டுருக்கு. அது தென்காசில நாம குற்றாலம் நோக்கிப் போனபோது நம்மைக் கடந்துபோன கார்தான். என் உடம்புலயும் ஒரு சிலிர்ப்பு அப்போ ஏற்பட்டுச்சு” என்றார்.

“கார் நம்பரைச் சொல்லுங்க… இன்னிக்கு இந்த மாதிரி ஏதாவது ஒரு நம்பர் இருந்தா போதும். யாரும் எங்கேயும் ஒளியவோ ஓடவோ முடியாது. ஆர்.டி.ஓவுல நமக்குத் தெரிஞ்சவங்க நிறைய பேர் இருக்காங்க” என்றார் ஜெயராமன்.

திவ்யப்ரகாஷும் கண்களை மூடிக்கொண்டும், நெற்றியை இடுக்கிக்கொண்டும் கார் எண்களைச் சொன்ன மறுநொடி, அவர் செல்போன் சென்னை ஆர்டி.ஓவுக்கு அழைப்பு விடுத்தது.

“ஹலோ சார்… எப்படி இருக்கீங்க?”

“நல்லா இருக்கேன் சார். ஒரு உதவி செய்யணுமே?”

“என்ன சார் டிரைவிங் லைசென்ஸை ரினிவல் பண்ணணுமா? ஆபீஸ் ஸ்டாபை அனுப்புங்க. முடிச்சு விட்டுடறேன். விஷன்லாம் நல்லா இருக்குல்ல?”

“அது இல்ல சார்… எனக்கு ஒரு அட்ரஸ் தெரியணும். கார் நம்பர் கையில இருக்கு.”

“இது போலீஸ் விவகாரமாச்சே… உங்களுக்கெதுக்கு?”

“நாங்களும் யூனிஃபார்ம் போடாத போலீஸ்காரங்கதானே?”

“வாஸ்தவம்தான்… உங்களைப்போலவே ஒரு எடிட்டர் இதேமாதிரி கேட்டு நானும் சொல்லிட்டேன். கடைசில பார்த்தா அது மந்திரியோட ட்ரங்க்கர் லாரி. உள்ளே 5,000 கோடி பணம் இருக்கிறதா ரூமர். அந்த எடிட்டர், டிரைவரைப் பிடிச்சு போட்டோவோட போட்டு, பெரிய சிக்கலாயிடிச்சு.”

“நல்லா புரியுது சார்… இது அந்த மாதிரி எல்லாம் இல்லே. அதேசமயம் அல்ப விஷயமும் இல்லை.”

“என்னான்னு நான் தெரிஞ்சுக்கலாமா?”

“எல்லாம் நல்லபடி முடியட்டும். நிச்சயம் சொல்றேன். இப்போ இக்கட்டான நிலையில இருக்கேன்.”

‘சரி கொடுங்க… உங்க பத்திரிகை மேலே இருக்கிற அபிமானத்துக்காக ரிஸ்க் எடுக்கறேன்” என்ற அந்த ஆபீஸர், அடுத்த பத்தாவது நிமிடமே முகவரியைத் தந்துவிட்டார்.

அடுத்தநொடி அவர்களின் கார்களிடம் பெரும் சீற்றம்!

டி.எஸ்.பி.யும் ராஜா மகேந்திரனும் பேசிக்கொண்டிருக்கையில், மகேந்திரன் அருகில் இருந்த மருதமுத்து செல்போனுக்கு அழைப்பு. திரையில் பாரதி பெயர் தெரிந்தது. ராஜா மகேந்திரனிடம் ஒரு படபடப்பு. `ஒன் மினிட்’ என்று கத்தரித்துக்கொண்டு செல்லை ஆன் செய்து காதில் வைத்தார்.

“மருதமுத்து… நல்லாருக்கியா. உன்னை ரொம்ப அடிச்சிட் டாங்களா?” என்றுதான் பாரதியும் ஆரம்பித்தாள்.

“……...” – ராஜா மகேந்திரனிடம் ஒரு பேரமைதி.

“ஓ… டாடியா? உங்ககிட்டதான் இருக்கா அவன் போன். நினைச்சேன்” என்று சரியாகச் சொல்லி, அவர் புருவத்தில் ஓர் அரிவாளை உருவாக்கினாள் பாரதி.

“நீ ரொம்ப க்யூட்! பயங்கர ஐக்யூ உனக்கு… இப்போ எங்கடா இருக்கே?”

“தேவையில்லாத கேள்வி. எதுக்காகப் புறப்பட்டோமோ அதை முடிக்காம திரும்பமாட்டேன். உங்ககிட்ட இப்போ எதுவும் இல்லேன்னு நல்லாத் தெரியும் எனக்கு? எங்களைப் பிடிச்சு உங்க விருப்பப்படி நடக்கலாம்னு தயவுசெய்து கனவு காணாதீங்க. செஞ்ச தப்பெல்லாம் போதும். கொஞ்சம் அமைதியா ஓய்வெடுங்க. செஞ்ச தப்புக்கெல்லாம் நீங்க நிறைய பரிகாரம் பண்ணவேண்டியிருக்கு.”

“சரிடா… நான் அப்புறமா பேசறேன். டேக் கேர்” என்று போனை கட் செய்தவர் முகத்தில் பலத்த மாறுதல். டி.எஸ்.பி ராஜரத்னம் கூர்மையாகப் பார்த்தபடி இருந்தார்.

“யார் சார்… டாட்டரா?” – ஆமோதித்தது ராஜா மகேந்திரன் சிரசு.

“திருச்சிகிட்ட இருக்கிறதா சொன்னீங்க. இப்பவும் அங்கேதான் இருக்காங்களா?”

“அது தெரியல. ஒண்ணு மட்டும் நல்லாத் தெரியும். இங்கேயும் பெட்டி இல்லை. அங்கே என் மகள், அப்புறம் அந்தப் பத்திரிகை ஆசிரியன், எழுத்தாளன்கிட்டயும் பெட்டி இல்லை. எனக்கென்னவோ பானு மேலேதான் சந்தேகமா இருக்கு.”

“தப்பா எடுத்துக்காதீங்க… ஏதோ தங்கம் வைரத்தைக் கேட்கிற மாதிரி அதை நீங்க கேட்கறது எனக்குப் பெரிய ஆச்சர்யம். எனக்கு இந்தச் சாமி பூதம் மேலெல்லாம் நம்பிக்கையே கிடையாது. என் அனுபவத்துல நான் உருப்படியா ஒரு சாமியாரைப் பார்த்ததில்லே. எல்லாரும் 420 வகைதான். அதனாலதான் கேட்கறேன்” என்ற டி.எஸ்.பி ராஜரத்னத்தை விடைப்பாகப் பார்த்த ராஜா மகேந்திரன், “நான் பிழைச்சு உங்க முன்னாடி உட்கார்ந்து பேசிட்டிருக்கிறதைப் பார்த்துமா உங்களுக்கு சந்தேகம்?” என்றார்.

“அது என்னமோ வாஸ்தவம்தான். ஆனாலும், சுடுகாட்டுல நெருப்பு வைக்கும்போது உசுர் வந்து எழுந்த மனுசங்க பலர் இருக்காங்க. நியூஸ்ல படிச்சிருப்பீங்க.

அதனால அது கொஞ்சம் தற்செயலாகூட இருக்குமோன்னு எனக்கு தோணுது.”

“சரி… எங்கேயாவது ஒரு பாம்பு ஒரு பெட்டிய சுத்திச் சுத்தி வருமா?”

“இதுகூட எனக்குப் பெருசாப் படலை. பல கிராமத்து வீடுகளில் மனைப்பாம்புங்கன்னே ஓர் இனம் இருக்கு. சரியா வீட்டுல நல்லது கெட்டது நடக்கும்போது எங்கிருந்தாலும் வந்துடும்.”

“என்ன சார் நீங்க. எல்லாத்துக்கும் ஒரு பதிலைச் சொல்றீங்க. அப்போ அமானுஷ்யம்கறதுக்கு உங்க அகராதில என்ன அர்த்தம்?”

“சரியான தகிடுதத்தம், கேப்மாரித்தனம்னு அர்த்தம். அமானுஷ்யம்கற ஏராளமான கேப்மாரித்தனத்தை நான் என் சர்வீஸ்ல நிறையவே பார்த்தவன் சார். தேங்காய் தானா சுத்தறது, குடிசை தானா தீப்பிடிக்கிறது, அதுமேலே எங்கிருந்தோ கல் வந்து விழுறது, அப்புறம் இந்தக் கோபுரக் கலசத்துக்கு சூப்பர் பவர் இருக்குதுங்கற புருடா, ரைஸ் புல்லிங், இப்படி எல்லா டுபாக்கூர் மேட்டரையும் பார்த்தவன். சென்ட்ரல் ஜெயில்ல இப்படி எத்தனை பேர், இப்போ களி தின்னுகிட்டு இருக்கான் தெரியுமா சார்?”

இறையுதிர் காடு - 76

“மிஸ்டர் ராஜரத்னம். உங்களைவிட என் மகள் இதையெல்லாம் வெறுக்கறதுல ரொம்பத் தீவிரமானவ. ஆனா, அவளே இப்போ அந்தப் பெட்டியைத் தேடறான்னா கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க.”

“இதுவரை நீங்க சொன்னதுலயே இதுமட்டும்தான் சார் பாயின்ட். உங்க டாட்டர் என்னையே பல தடவை சீண்டி, கிழங்கெடுத்தவங்க.”

“அப்போ அதை மனசுல வெச்சுக்கிட்டு அந்த பானுவைக் கண்டுபிடிச்சு, பெட்டிய பிடிக்கப் பாருங்க. பெட்டி கிடைக்கட்டும். அப்போ தெரியும் எது உண்மை, எது பொய்யின்னு…”

“பானுவைக் கண்டுபிடிக்கறது அவ்வளவு கஷ்டமா?”

“வீடு பூட்டியிருக்கு. செல்போன் ஸ்விட்ச் ஆஃப்ல… இதுக்கு மேல நீங்கதான் உங்க சாமர்த்தியத்தைக் காட்டி அவளைப் பிடிக்கணும்.”

“அவகிட்டதான் இருக்குதுன்னு உங்களுக்குத் தீர்மானமா தெரியுமா?”

“பெட்டி சம்பந்தப்பட்ட எல்லா கேரக்டர்களோட நிலையும் இப்போ க்ளியர். எக்ஸெப்ட் பானு. சந்தேகப்படறதுக்குத் தோதா அவ வீட்ல இல்லை. போன் ஸ்விட்சும் ஆஃப்ல இருக்கு… இதுபோதாதா அவளை சந்தேகப்பட?”

ராஜா மகேந்திரன் கேட்டிட, டி.எஸ்.பி ராஜரத்னமும் ஆமோதிப்பவராக எழுந்தவர், யதார்த்தமாக வாளைப் பார்த்துவிட்டு அதை நெருங்கி எடுத்தார். உருவவும் முயல, ராஜா மகேந்திரன் “நோ…” என்றார் பெருங்குரலில்!

- (தொடரும்)