மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இறையுதிர் காடு - 77

இறையுதிர் காடு
பிரீமியம் ஸ்டோரி
News
இறையுதிர் காடு

“ஏன் உங்களுக்கு போகர் சாமியைப் பாக்கற ஆசை இல்லையா?”

அன்று துண்டு துண்டாய்க் கிடந்த உடம்பும், குறிப்பாக தலைமட்டும் தண்ணீர் குடிப்பதுபோல் ஓடைக் கரையில் கிடந்த காட்சியும் உடையாரை உலுக்கி எடுத்துவிட்டது. இயற்கை உபாதைகூட இந்த அதிர்ச்சியில் அடங்கிப்போனது. உடையார் திரும்பி ஓடத் தொடங்கினார்.

வியர்த்து விறுவிறுக்க தோள்மேல் கிடந்த வேஷ்டி கீழே விழுந்ததுகூடத் தெரியாதபடி கதர் உள்ளடையோடு மேலுக்கு அணிந்திருந்த காவி முழுக்கைச் சட்டையுடன் திரும்பி வந்து நின்றவரைப் பார்த்து சிதம்பர மாணிக்கம் உள்ளிட்ட சகலரும் பதைத்தனர்.

‘‘என்னாச்சு உடையாரே... புலியகிலிய பாத்துட்டீகளா?”

“அதாத்தான் இருக்கும்... நல்ல வேளை பாஞ்சு பிடுங்கலையே..?”

“இல்ல... இல்ல...”

“அப்படின்னா..?”

“கொலை... உடம்பு... கைவேற கால் வேற கிடக்குது..!”

“என்ன உடையார் சொல்றீங்க..?”

கேள்வியோடு அவர் வந்த வழித்தடத்தில் ஓடினான் அந்தக் குச்சுமனை வேலைக்காரன் கரும்பாயிரம் என்பவன். அவனை மேழிமடை யாரும் தொடர்ந்தார். அப்படியே சிதம்பர மாணிக்கமும், ஓதுவாரும்கூட ஆர்வம் தாளாமல் நடந்தனர்.

உடையார் தான் பார்த்த காட்சியை நினைத்த படியே திண்ணையில் சென்று அமர்ந்தார். உள்ளாடையை மீறிக்கொண்டு பின்பாகம் முழுவதும் ஜில்லிப்பின் அசுரக் கவ்வல். அந்தப் பதற்றத்திலும் உச்சி முடி விடைத்தது. மருள மருளப் பார்த்ததில் திண்ணையின் ஒரு ஓரத்தில் அவரது தோல் பையும் அதன் மேல் அவர் விரித்திருந்த காவித் துண்டும் கண்ணில் படவும்தான், இடுப்பு வேட்டி நினைவு வந்தது.

அதற்குள் போன அத்தனை பேரும் திரும்பி வந்தனர்.

எல்லோரிடமும் கிழங்கு மாவைப் பூசிக் கொண்டு முகம் விகாரமானதுபோல் ஒரு விகாரம்!

மேழிமடையார் வீட்டு முகப்பில் மரத்தடியில் கட்டப்பட்டிருந்த குதிரை முதுகுமேல் கைவைத்தபடி சிந்தனை கலந்த பேச்சு பேசலானார்.

இறையுதிர் காடு
இறையுதிர் காடு

“செத்துக் கிடக்கிறவன்தான் ஆச்சாரிங்கறது தெளிவாயிடிச்சு. ஆனா அங்க பெட்டி இல்ல. அப்ப கூட்டுக் களவாணித்தனம்தான் நடந்திருக்கு. இங்க இருந்து பெட்டியைத் தூக்கிட்டு ஓடவும்தான் ஏதோ நடத்திருக்கு. எதுப்பால புலிவரவும் அதுகிட்ட ஆச்சாரி மாட்டியிருக்கலாம் - மத்தவங்க பெட்டியோடு ஓடியிருக்கலாம் சரியா செட்டியாரே?”

“என்னக் கேட்டா..? கத்தி போய் வாலு வந்த கதையா என்னய்யா இதெல்லாம்... என் சாமி ஏன் இப்படி என்னை சோதிக்கிறாரு?” - சிதம்பர மாணிக்கம் மெல்ல அழவே தொடங்கிவிட்டார்.

“அழுவாதீங்க... பெட்டிய நீங்க ஒண்ணும் சந்தோசமா ஒப்படைக்க விரும்பலையே..? அது உங்க கூடவே இருக்கோணும்னில்ல எதிர் பார்த்தீங்க...”

“ஆமாம் எதிர்பார்த்தேன்... ஒரு சாமி என் கூடவே காவல் தெய்வமா இருக்கணும்னு எதிர்பாக்கறது எப்படி தப்பாகும்?”

“இப்ப எதுக்கு இந்தப் பேச்செல்லாம்.... அடுத்து என்ன செய்யப் போறோம்? தலையாரி இல்ல மணியகாருக்கு ஆச்சாரி உடம்பைப் பத்தித் தாக்கல் கொடுக்க வேண்டாமா?”

“அதெல்லாம் நம்ம வரைல வேண்டாத வேலை. கொஞ்ச நேரம் கழிச்சுப் போய்ப் பார்த்தா அங்கன ஒரு எலும்புத் துண்டுகூட மிஞ்சியிருக்காது. நரியும் கூகையும் பிச்சித் தின்னுரும். அத்த விட்டுத்தள்ளுங்க. நாம அப்படி ஒரு உடம்பையே பாக்கலன்னு நினைங்க. பெட்டி விசயத்துக்கு வருவோம்...”

“பெட்டி நிச்சயமா மலை மேலதான் ஏறியிருக்கு... என் சந்தேகமெல்லாம் தேனருவிக்குத் தெக்கால புலிமடுவைத் தாண்டியிருக்கற மொட்டச் சாமி மலைமேலதான்...”

- தீர்மானமாகக் கூறினார் மேழிமடையார்.

“அப்ப புறப்படுவோம்... சாமிக்கு நான்ல பதில் சொல்லணும்...” வெடித்தார் சிதம்பர மாணிக்கம். ஓதுவார் கண்களில் கண்ணீரின் வடிசல்.

“பெட்டியோடு மலை ஏறி, அந்த வல்லாள சித்த சாமிகள கண்ணாரப் பாக்கப் போறோம்னு ரொம்ப ஆசையா இருந்தேன். கடைசில எல்லாமே பொளிச்சிப்போச்சே...” என்று முணுமுணுப்பு வேறு.

“இப்ப எதுவும் கெட்டுடல... இது ஒரு சோதனை. இதுக்கெல்லாம் அசைஞ்சிடக் கூடாது... சித்தமார் விசயம்னாலே அதுல கூத்து இருக்கும், குறும்பிருக்கும். நாம அசந்திடக் கூடாது. சிவசிவான்னு சொல்லிகிட்டு நடப்போம். நான் சொன்ன மொட்டச் சாமி மலைக்குப் போய்ப் பாப்போம்...”

- மேழி மடையார் வெளியே காயப்போட்டிருந்த தன் வேட்டி துண்டை எடுத்து மடித்து ஒரு துணிப்பைக்குள் செருகியபடியேதான் பேசினார்.

எப்போது சொன்னாரோ தெரியாது - உரிச்சட்டியில் ஆவி பறக்க சுக்கு மல்லிக் காபி வந்தது. உரிச்சட்டியோடு கட்டப்பட்டிருந்த தேங்காய்ச் சிரட்டைதான் காபியை மொண்டு ஊத்தும் கரண்டி. ஐந்தாறு வழுவழுப்பான சிரட்டைகளும் கூடவே இருந்தன. அவற்றில் ஆளக்கொன்றை எடுத்துக்கொண்டு அதில் சுக்குக் காபியை வாங்கிக் குடித்தனர்.

அந்தக் காலை நேர ஈரத்துக்கு, காபியின் சூடு ஒரு காதலியின் தழுவல்போல் இருந்தது.

உடையாரிடம் மட்டும் தேக்கம்.

“என்னய்யா... எங்க கூட மேல வரத் தயக்கமா?”

“நெசத்த சொன்னா... ஆமா, தயக்கம்தான்!”

“அப்ப நாங்க கிளம்பறோம்... நீர் உம் போக்குல போய்க்கும்...” என்றார் சிதம்பர மாணிக்கம்.

“இப்படி சடுதியில் அவரை விடாதீங்க. சாமீ... உடையார் சாமீ, நீங்க எங்க கூட வர்ரீங்க...” - கட்டளையிடுவதுபோல் சொன்னார் மேழிமடையார்.

“வந்து..?”

“என்ன சாமி கேள்வி இது... வாங்க சாமி, சன்யாசம்தானே இப்ப உங்க நோக்கம்?”

“ஆமா...”

“அப்ப வாங்க எங்க கூட... பட்டனத்து வாழ்க்கையைக் கொஞ்சம் ருசிச்சிப் பாருங்க...”

“மேல போய் என்ன பண்ணப் போறோம்?”

“ஏன் உங்களுக்கு போகர் சாமியைப் பாக்கற ஆசை இல்லையா?”

“இப்பகூட சொல்றேன்... அது போகர் சாமியால்லாம் இருக்க முடியாது. நம்பளப் போல யாரோ அங்க தன்னை போகர்னு சொல்லிக்கிட்டு கிடக்கலாம்...”

“இங்க நம்ம செட்டியாரைத் தவிர எல்லாருமே உங்களப்போலதான் யோசிக்கிறாங்க. பேசிக்கிட்டே நடப்போமே... ஏகதூரம் போகணும். உச்சிப்பொழுது வந்துட்டா ரொம்ப எளைக்கும்.”

“ஆமா... உங்களுக்கு இந்த மலைக்காடு நல்ல பரிச்சயமோ?”

“பரிச்சயமாவா... இந்தப் பொதிகை வெளில என் கால் அச்சுப்படாத இடம் ஒண்ணுகூட கிடையாது. எங்க அருவி இருக்கு, எங்க ஓடை கிடக்கு, எங்க பொய்கை இருக்கு, எத்தினி புலி, எத்தினி சிங்கம்னு எல்லாக் கணக்கும் என் கைக்குள்ள...”

- நடந்தபடியே பேசினார் மேழிமடையார்.

“அதெல்லாம் சரி... பொட்டி கிடைச்சிடுமா வைத்யரே?”

- சிதம்பர மாணிக்கம் மையப்புள்ளி பெட்டியாகவே இருந்தது.

“நம்புவோம் செட்டியாரே... போகர் சாமிதான் அதை உமக்குத் தந்தார்னா, அந்தச் சாமி இப்பவும் காலம் கடந்தும் நடமாட்றார்னா, இன்னேரம் நாம பேசற பேச்சு அவர் காதுல விழுந்திருக்கும். நீங்க நம்பிக்கையை மட்டும் இழந்துடாதீங்க” மேழி மடையார் நன்கு ஊக்கம் தரவும் செய்தார்.

உடையாருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மௌனமாக அவர்களுடன் நடக்கலானார். ஒரு கோலை ஊன்றிக்கொண்டே செட்டியாரின் வேலைக்காரன் முன்புறம் நடந்தபடி இருந்தான். அவன் முதுகின் மேல் ஒரு பொதி மூட்டை. அதனுள் சில பாத்திரங்கள் கரித்துண்டுகள், ஒரு பூதக் கண்ணாடி வடிகட்டி, சில கத்திகள், ஒரு சிறிய மண் கெல்லி என்கிற சமாச்சாரங்கள்.

மேழிமடையார்தான் வழிகாட்டி. இடுப்பு மடிப்பில் ஒரு சிறு காம்பஸ் பெட்டி வைத்திருந்தார். அதை அவ்வப்போது எடுத்துப் பிடித்துப் பார்த்து திசையை அறிந்துகொண்டு நடப்பார்.

மேழிமடையார் கப்பலில் அநேக தடவை இலங்கைக்குப் போய் வந்தவர். அப்போது கப்பல் கேப்டன் ஒருவருக்கு வைத்யம் பார்க்கப் போய் அவர் நினைவுப்பரிசாகக் கொடுத்தது அந்தக் காம்பஸ்.

அந்தக் காம்பஸை இப்போதும் பார்த்தார். பின் இடுப்பில் செருகிக்கொண்டார். குறிப்பிட்ட இடம் ஒன்றில் ஓங்குதாங்காக ஒரு மஞ்சக்கடம்பை மரம். மரத்தின் அடிப்பாகத்தில் ஒரு சிவப்புத் துணி கட்டி அது லேசாய் சிதைந்துபோயிருந்தது. தரையில் மரத்தை ஒட்டி ஒரு சதுரவடிவக் கருங்கல். அதன்மேல் கற்பூரம் ஏற்றிய கறுப்புத் தடயம். மேழிமடையார் அந்த மரம் முன் நின்று அண்ணாந்து ஒரு பார்வை பார்த்தார். கிளை ஒன்றில் செம்போத்து இரண்டு ஜோடியாக அமர்ந்திருந்து. ஒரு கால் தூக்கி அலகை உரசிக் கொண்டு கீழே பார்த்தது. மேழிமடையாரும் பார்த்தார் அப்போது அவரை எல்லாரும் நெருங்கி ஏன் நின்றுவிட்டீர்கள் என்று பார்த்தனர்.

‘என்ன பாக்குறீங்க... கடம்பன வணங்கிட்டுதான் மேல ஏறணும்... நல்ல சகுனம் பாருங்க! ரெண்டு செம்போத்து உக்காந்திருக்குது...” என்று கை காட்டினார். அந்த இரு பறவைகளோ தங்களை அடிக்கவே கையை ஓங்குகிறார்கள் என்று கருதினாற்போல் கிளையை விட்டுத் தெறித்துப் பறக்க ஆரம்பித்தன.

இறையுதிர் காடு
இறையுதிர் காடு

“போச்சுடா... வேட்டக் காரங்கன்னு நினைச்சு எகிறிடிச்சுங்கு. போவட்டும்... எல்லாம் மண்டி போட்டுக் கும்புடுங்க...” என்றபடியே தன் இடுப்பு மடிப்பில் இருந்து கற்பூரத்தை எடுத்துக் கருங்கல் மேல் வைத்து, பின் அங்கும் இங்குமாய்க் கிடந்த இரு கற்களை எடுத்து வந்து சிக்கிமுக்கிக் கல்போல் உரசியதில் சில தீக்கதிர்கள் பாய்ந்ததில் கற்பூரம் பற்றிக்கொண்டது.

இவ்வளவு சீக்கிரமாக ஒருவர் நெருப்பைப் பிடித்து உடையார் பார்த்ததும் இல்லை. பிரமித்தார். அதற்குள் மேழிமடையார் வணங்கி முடித்ததோடு தரை மண்ணை எடுத்து நெற்றியிலும் பூசிக்கொண்டார். சிதம்பர மாணிக்கமும் பவ்யமாக அதேபோல் நடந்து கொண்டார். ஆனால் உடையாரிடம் மட்டும் தேக்கம்.

“கும்புடுங்க உடையாரே...”

“இந்த மரத்தையா?”

“ஆமா... மரம்னு மட்டமா நினைச்சிடாதீங்க. கடம்பன் நமக்கெல்லாம் மேல...”

“அப்படின்னா?”

“நமக்கெல்லாம் ரெண்டு சுத்துதான் ஆயுள் காலம். அதாவது முதல் சுத்து பகல் கால அறுபது. அடுத்து இரண்டாவது சுத்து ராத்திரி கால அறுபது... அதாவது 120 வருஷம். ஆனா கடம்பன் வயசு எனக்குத் தெரிஞ்சு 600 இருக்கும்.

இவனே பூமியில புதைஞ்சா மூவாயிரம் வருசத்துல கரியாயிடுவான். பதினெட்டாயிரம் வருசத்துல வைரமாவும் மாறிடுவான். ஆனா நாமளோ எரிச்ச மறு நிமிசம் சாம்பலாவும், புதைச்ச மறு நிமிஷம் மண்ணாவும் கலந்துடறோம்...”

“அதனால?”

“என்ன அதனால... இவன் நம்ம பாட்டன்யா. காட்டுப் பாட்டன். இவன் ஆசியோட போனா போற காரியம் ஜெயமாகும்.”

“வேடிக்கையா இருக்கு... ஆஃப்ட்ரால் ஒரு மரம் இதைப் போய் கடவுளுக்கு சமமா...”

- முதல் தடவையாக சிரித்தார் உடையார். அதை கவனித்த சிதம்பர மாணிக்கம் ``சிரிக்காதீங்க உடையாரே. நானும் சிரிச்சவன்தான்... அப்பால ரொம்பவே கஷ்டமும் பட்டுட்டேன். நம்மை எல்லாம் நம்ம சமூகத்துக்குத்தான் தப்பாவே பழக்கி வெச்சிருக்கு. நம்ம சமூகத்துக்குத்தான் கொம்புன்னு ஒரு நினைப்பு. ஆறாம் அறிவு, பகுத்தறிவுன்னு ரொம்பவே தெனாவெட்டு நமக்கெல்லாம்... அதனால நமக்கு மிஞ்சி எதுவும் கிடையாதுன்னு நினைக்க அப்படியே பழகிட்டோம். ஆனா இந்தக் காடும், காட்டு மரங்களும் நமக்கெல்லாம் மேல. உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லட்டுமா? இந்தக் காட்டுக்குள்ள ஒரு மரத்தோட அனுமதியில்லாம அதை எவனாலயும் வெட்ட முடியாது தெரியுங்களா?”

- சிதம்பர மாணிக்கம் சொன்னதைக் கேட்டு ஆச்சர்யமிகுதியானார் உடையார். அப்படியே நடந்தபடியேதான் பேசிக்கொண்டார்கள்.

“நீங்க என்ன சொல்றீங்க... நான் வேணா இப்ப ஒரு மரத்தை உங்க முன்னால வெட்டிக் காட்டவா?” என்று பதிலுக்குக் கேட்டார் உடையார்.

“நல்லா கேட்டுக்குங்க... சித்தங்க வெச்ச மரங்களை எவனாலயும் வெட்ட முடியாது. மரமும் வெட்ட உடாது!”

“யாரு வெச்சா என்ன, மரம் மரம்தான் - அதுக்கு என்ன கை காலா இருக்கு - நாம வெட்டப் போகும் போது நம்மை எதிர்த்து சண்டை போட..?”

“எல்லாம் இருக்கு உடையாரே... அதுக்குக் கண் காது மூக்குகூட உண்டு!”

“விளையாடாதீங்க... எங்க பிரம்மாண்டம் ஜமீன்ல உள்ள அவ்வளவு மர வேலைப்பாட்டு மரங்களும் நாங்க மலேசியாக் காட்டுல மரத்தைத் தேர்வு செய்து வெட்டி எடுத்துக்கிட்டு வந்ததுங்க... அங்க எந்த மரமும் எங்கள தடுக்கலையே...?”

“அது வேற... இது வேற... இங்க சில சித்தர் சாமிங்களே மரமாவும் இருக்காங்க..!”

“ஒரு மனுஷன் எப்படி மரமாக முடியும்?”

“ஒரு கடுகளவு விதையால முடியும்போது, அந்த விதையைக் கண்டுபிடிச்சு அதுக்கொரு பேரும் வெச்சு அதை வளர்க்கத் தெரிஞ்ச மனுஷன் எவ்வளவு மேலானவனா இருக்கணும்?”

“குழப்பறீங்க... அவங்க ஏன் மரமாகணும்? எதுக்கு மரமாகணும்?”

- உடையார் கேட்ட இந்தக் கேள்விகளை எல்லாம் சிதம்பர மாணிக்கமும் கேட்டவர்தான், ஆனால் அனுபவம் அவரை அமைதிப்படுத்தி விட்டது. உடையாருக்கோ எல்லாமே புதிய அனுபவங்கள்... அங்கே பார்ப்பதில் இருந்து பேசுவதில் இருந்து எல்லாமே புதிய அனுபவங்கள்.

ஓர் இடத்தில் வரிசையாக ஏழு வில்வமரங்கள்! அதைப் பார்த்த மாத்திரத்தில் ஒரு ஆச்சர்யம். சிதம்பர மாணிக்கம் அந்த மரங்களை நெருங்கி அதை வருடிப் பார்த்து குழந்தைபோல் சந்தோஷப் படலானார். மரங்கள் நன்கு செழித்து வளர்ந்திருந்தன. கீழே அநேக வில்வ இலைகள் பழுப்பேறி உதிர்ந்து கிடந்தன.

“இது நம்ப செட்டியார் 12 வருஷம் முன்னால இப்ப நீங்க வந்த மாதிரி வந்தபோது நட்ட மரங்க.. ஏழு மரமும் ஏழு பாட்டனுங்க. அதாவது ஏழுதலைமுறைப் பாட்டனுங்க. அவுக இப்ப சந்தோஷமா இந்தப் பூமியில எங்கியோ ஒரு மூலைல வாழ்ந்துகிட்டிருக்காங்க. அதைத்தான் இந்த மரங்களும் இதோட பசுமையும் சொல்லுது...”

- மேழிமடையார் விளக்கினார். ஏழுமரம் ஏழு பாட்டன் - ஏழு தலைமுறை? என்ன தொடர்பு... எப்படி இதெல்லாம்?

உடையாருக்குப் புரியவில்லை.

“என்ன உடையாரே முழிக்கிறீங்க?”

“முழிக்காம... ஏன் இப்படிக் குழப்பற மாதிரியே பேசுறீங்க. இந்த ஏழுமரங்க எப்படி அவரோட பாட்டன்களா மாற முடியும்? அவங்க இப்ப எங்கியோ வாழறதும் எப்படி உங்களுக்குத் தெரியும்?”

“இதுக்கு நான் பதில் சொல்லணும்னா திருமூலர் சாமிகிட்டல்லாம் போக வேண்டியிருக்கும். சுருக்கமா சொல்லிடறேன். உங்க உடம்புல, என் உடம்புல, இதோ இவங்க எல்லார் உடம்புலயும் நம்ப 28 பாட்டன் பாட்டி மார் தடயங்கள் இருக்குது. தாய்வழி 14 பேர். தந்தை வழி 14 பேர். அதாவது, தாய்வழி பாட்டிமார் ஏழுபேரும், தாத்தன்மார் ஏழு பேரும் சேர்ந்து 14 பேர்... அதேபோல் தந்தை வழில ஒரு 14 பேர். ஆகமொத்தம் 28 பேர்.

நம்ம பரம்பரைல நூறு தாத்தன் பாட்டன் இருக்கலாம். ஆனா ஏழு பேரோட தடயங்கள் தான் விந்துலயும் சுரோணிதத்துலயும் இருக்குது. உங்களுக்கொரு மகன் பிறக்கும்போது உங்க ஏழுல ஒண்ணு விடுபட்டு நீங்க அவன்வரைல ஏழாவதா ஆவீங்க...! இப்படிதான் எல்லார் உயிருடம்பும் உருவாகுது. இதுல தந்தைவழிதான் தூக்கலா இருக்கும். தாய்வழி உடம்புல தொடராம மனசுல தொடரும். பூஞ்ச மனசு, வைரம்பாஞ்ச மனசு, தெளிஞ்ச மனசு, ரசிக்கற மனசு, இப்படி மனசுல எத்தனை ரகங்கள் இருக்கு தெரியுமா?

இப்ப உங்க மனசையே எடுத்துக்குவோம். அது நீங்க பாத்தது, கேட்டது, படிச்சதால உருவானதா இருக்கலாம். ஆனா அதோட தன்மை நிச்சயம் உங்க மூதாதையர் ஒருத்தரைப் போன்றதுதான்.

அதேபோலதான் உடம்பும்... உங்க அப்பாவை ஒரு விஷயத்துலயாவது கொண்டிருப்பீங்க. அதேபோல உங்க பாட்டன், கொள்ளுப் பாட்டன், எள்ளுப் பாட்டனையும் உங்களுக்குள்ள கொண்டிருப்பீங்க. அது கைநகமா, தலைமுடியா, உங்க பெரிய மூக்கா, சொட்டத் தலையா எப்படி வேணா இருக்கலாம்...”

- மேழி மடையார் கொஞ்சம் மூச்சிளைத்தார். உடையாரிடம் பெரும் பிரமிப்பு. மேழிமடையார் பேச்சை மறுக்கவும் முடியவில்லை - ஒப்புக் கொள்ளவும் முடியவில்லை. அப்போது “சாமீஈ...ஈ...” என்றொரு அவலக்குரல். சப்தம் வந்த திக்கில் நடந்தபடி இருந்த சிதம்பரமாணிக்கத்தின் மேல் ஒரு மலைப்பாம்பு விழுந்து அவரை வளைத்துக்கொண்டிருந்தது.

அவர் விழிகளில் தெறிப்பு...!

இன்று வாளை உருவ முயன்ற டி.எஸ்.பி ராஜரத்னம், ராஜா மகேந்திரன் கத்தவும், அதை உருவாமல் அவரை அதிர்ச்சியோடு பார்த்தார்.

“அதை வெச்சிடுங்க... எடுக்காதீங்க...” என்றார் ராஜா மகேந்திரன்.

“ஏன் சார்..?”

“அது ஒரு புதிர். அந்த வாளை வெளிய எடுக்கும்போதெல்லாம் அது பக்கத்துல இருக்கறவங்கள வெட்டிடுது...”

“இது என்ன கூத்து?’’ இளக்காரமாய் டி.எஸ்.பி சிரிக்க, முத்துலட்சுமி சப்தம் கேட்டு வந்து விட்டிருந்தாள். அவளைப் பார்க்கவும் டி.எஸ்.பியிடம் ஒருவிதத் தயக்கம். வாளையும் திரும்ப அந்த மோடோ மேல் வைத்தார். அடுத்த நொடி முத்துலட்சுமி அதை எடுத்துக்கொண்டு பூஜையறை நோக்கிச் சென்றாள்.

“அம்மா எங்க எடுத்துகிட்டுப் போறே?”

“இது சாமியறைல சாமிகிட்ட இருக்கட்டும். இங்கதான் என்னைத் தவிர யாரும் வர மாட்டாங்க...”

“அது வெட்டுக்கத்தி... சாமியில்ல... சாமியாகவே இருந்தாலும் சாமி எங்கையாவது எல்லாரையும் வெட்டுமா - அதைப் போய் சாமி அறைல வைக்கறே?”

“சுடலை மாடன் கத்தி வெட்டும்... அது வெட்னதைத்தான் கொஞ்சம் முந்தி பார்த்தியே...?”

“எல்லாத்துக்கும் ஒரு கதை வெச்சிருக்கியா நீ...?”

- ராஜா மகேந்திரனும், முத்துலட்சுமியும் பேசிக் கொண்டதிலேயே பாதி புரிந்துவிட்டது டி.எஸ்.பி ராஜரத்னத்துக்கு. ராஜா மகேந்திரனை மலங்க மலங்கப் பார்த்தார்.

“நான் கேட்ட மத்த கேள்விக்கெல்லாம் மளமளன்னு பதில் சொன்ன மாதிரி அதுக்கு நீங்க சொல்ல முடியாது சார். இந்த வாள், அப்புறம் அந்தப் பெட்டின்னு இரண்டையும்தான் ஆன்டிக்ஸ் ஐட்டம்னு பாரதி வாங்கிட்டு வந்திருக்கா... வாள் ஏதோ சுடலைமாடன் கோயில் சாமியோடதாம். நேர்த்திக்கடனா செலுத்தினதை ஏலம் விடுவாங்களாம். அப்படி ஏலத்துல எடுக்கப்பட்ட வாள்தான் ஆன்டிக்ஸ் ஜட்டமா மாறி இங்கேயும் வந்திருக்கு. வந்ததுல இருந்து பாரதியைத் தவிர கிட்டத்தட்ட இதை உருவின எல்லாரையும் பதம் பாத்திடிச்சு... இது என்ன மர்மம்னு யாருக்கும் புரியல... அதனாலதான் நீங்க உருவிப்பார்க்க ஆசைப் பட்டப்ப தடுத்தேன்...” - ராஜா மகேந்திரனின் விளக்கம் டி.எஸ்.பியை நெடுநேரம் யோசிக்க வைத்தது.

“என்ன சார்... இதுக்கு பதில் விளக்கம் எப்படிக் கொடுக்கறதுன்னு யோசிச்சிறீங்களா?”

“ஆமாம் சார்... நீங்க என்ன பாக்கணும் பேசணும்னு சொன்னப்ப அதை நான் சாதாரணமா நினைச்சுதான் வந்தேன். ஆனா இங்க நடந்தது, நடக்கறதையெல்லாம் பார்த்தா எனக்கு மலைப்பா இருக்கு.

கத்தி ஒரு உலோகம். அது ஒரு ஜடம்... ஆனா வெட்றது கொல்றதுங்கறதெல்லாம் உணர்வு சார்ந்த விஷயங்கள். ஒரு ஜடப்பொருள் எப்படி உணர்வோடு செயல்பட முடியும்?’’

“கண்டுபிடியுங்க... எதுவும் விஞ்ஞானமா இருந்தாதான் கண்டுபிடிப்பீங்களா... இந்த மாதிரி அக்கல்ட் மேட்டரையும் கவனியுங்க...”

“அக்கல்ட்...! யார் இப்படியெல்லாம் பேர் வைக்கிறாங்க? பேசாம டுபாக்கூர்னு வெச்சிருக்கலாம். மெட்ராஸ்பாஷைல சொல்லலாம்னா ஒரே ஜிலாங்கிரியா இருக்குதும் பாங்க.”

இறையுதிர் காடு
இறையுதிர் காடு

“அக்கல்ட்டோ, டுபாக்கூரோ, ஜிலாங்கிரியோ.... பெட்டி கிடைச்சாகணும் சார். நான் டெல்லில ரொம்பப் பேருக்கு நம்பிக்கை கொடுத்துட்டேன். அவங்க உலக அளவுல பலர்கிட்ட பேசிட்டாங்க போல... அவங்களையெல்லாம் நான் அப்பறம் சமாளிக்க முடியாமப்போயிடும், அப்பறம் நாளைக்கு நான் எதுக்கும் டெல்லி பக்கம் போக முடியாது. நீங்ககூட உங்க மச்சினனுக்கு பெட்ரோல் பங்க் வைக்க லைசென்ஸ் கேட்ருக்கீங்க இல்லை... அதுவும் அண்ணா சாலைல...?”

- பாய்ன்ட்டாக வந்து நின்றார் ராஜா மகேந்திரன். டி.எஸ்.பி முகத்தில் தாடையில் சற்று உப்பல். கண்ணிரண்டில் ‘உனக்கெப்படி அது தெரியும்?’ என்பதுபோல் ஒரு கேள்வி.

“போங்க... போய் கொஞ்சம் வேகமாப் பாருங்க. அப்பப்ப ஃபீட் பேக் கொடுங்க...” என்று முற்றுப்புள்ளி வைக்கவும், எழுந்து நின்று டக் இன்னை சரிசெய்தபடியே புறப்பட்டார். புறப்படும் முன் ஒரு நடை நடந்து பூஜை அறைக்குள் வைக்கப்பட்ட அந்த வாள்மேல் ஒரு பார்வை...

அந்தக் கார் டிரைவர் வீடு வளசரவாக்கத்தின் ஒரு சேரி போன்ற பகுதியில் இருந்தது. கிட்டே வந்தாகிவிட்டது. ஒரு பங்களா வாசலில் ஒரு ஜெனரேட்டர் லாரி கனன்றபடி இருக்க அதன் உற்பத்தி மின்சாரத்தில் ஒரு டி.வி சீரியல் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தது.

அரவிந்தனிடம் எரிச்சல் பீறிட்டது.

‘இங்க எங்க பார் சீரியல் ஷூட்டிங். பேசாம பெயரை மாத்தி ஷூட்டிங் பாக்கம்னு வெச்சிடலாம்” என்று முணுமுணுத்தான். அங்கே வழியை ஏற்படுத்திக்கொண்டு கடப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.

பாரதியின் செல்போனில் கூகுள் மேப் வழி காட்டியதில், அந்த டிரைவரின் கார் வீட்டு வாசலியே நின்றுகொண்டிருந்தது. ஜெயராமன் அதைப் பார்த்துக் கையைச் சொடுக்கி உற்சாகமானார்.

“திவ்யப்ரகாஷ்ஜி... அதோ கார்! நெருங்கிட்டோம்” என்று சற்றுக் கூவவும் செய்தார். காரை விட்டு இறங்கி அந்த டிரைவர் வீட்டுக்குள் நுழைந்தபோது வாசலில் ஒரு பத்து வயதுப் பெண்ணுக்குப் பேன் பார்த்தபடி இருந்தாள் ஒரு பெண்.

“என்னாடி தல உன் தல... ஒரு பண்ணையே இருக்குதுடி...! அந்த அகிலாண்டம் மவளோட சேராதடின்னா கேக்குறியா?” என்று இடித்தபடியே நிமிந்தவள் முன் அரவிந்தன், ஜெயராமன், சாந்தப்ரகாஷ் என்கிற மூவரும் நின்றிருந்தனர்.

“ஆரு சார் நீங்கள்ளாம்... வண்டி எடுத்துகினு வாரேன்னுட்டு எம்புருசன் வராமப் பூட்டாரா?” என்று கேள்வியும் பதிலுமானாள் அவள்.

“இல்ல... அவர் எங்கே?” அரவிந்தன்.

“தூங்கிக்கினு கீறாரு...”

“கொஞ்சம் எழுப்ப முடியுமா?”

“ரவையெல்லாம் ட்ரிப் அட்சுட்டு வந்து படுத்துருக்காருங்க. என்ன மேட்டர், என் கைல சொல்லுங்கோ...”

“இல்ல. அவர்கூடதான் பேசணும் - ரொம்ப அவசரம்.”

“எதான ஆக்ஸிடென்ட் பண்ணிட்டு வன்ட்டாரா...? ஒரு குவாட்டர் அட்சிட்டு வரும் போதே நெனச்சேன்... தா... இங்க யாரு வந்துருக்குறாங்கன்னு பாரு - கும்பலா வந்து நிக்கிறாங்கோ... என்னய்யா எவன் மேலயாவது இட்சிட்டு வந்துட்டியா...?”

- கூக்குரலோடு உள்ளே சென்றாள். பாதி வாரப்பட்ட தலையோடு அந்தச் சின்னப் பெண் பரிதாபமாக அரவிந்தனைப் பார்த்தாள். அரவிந்தன் கமுக்கமாய் சிரித்தான்.

“டாடிய பாக்கணுமா?” என்று மழலையாக பதிலுக்குக் கேட்டாள் அவள். அரவிந்தன் பதிலுக்கு ஜெயராமனைப் பார்த்து, “சார் கேட்டீங்களா... அப்பா இல்ல - டாடியாம்” என்றபோது அந்த டிரைவர் துக்கக்கலக்கத்துடன் “யார் சார் நீங்க?” என்றபடி வெளியே வந்தான். முகத்தில் துக்கக்கலக்கம் - பின்னாலேயே பெருங்கலக்கத்துடன் அந்தப் பெண்.

“நீங்க பயப்படாதீங்க... ஆக்ஸிடென்ட் டெல்லாம் எதுவுமில்ல. ஒரு இரண்டு நாளுக்கு முந்தி இவர் ட்ரிப் அடிச்ச இடம் பத்தித் தெரியணும், அவ்வளவுதான்.”

- அந்தப் பெண் முகத்தைப் பார்த்தபடியே சொன்னான் அரவிந்தன்.

“ட்ரிப் அடிச்ச இடமா... ரெண்டு நாளுக்கு முந்தியா?”

“ஆமா... பானுன்னு ஒரு பெண்ணோட நீங்க ட்ரிப் அடிச்சிருக்கீங்க...”

“பானுவா?”

“ஆமாம். ஆள் போட்டோவைக் காட்டவா?” - என்று கேட்டபடி தன் செல்போனில் அப்லோடு செய்திருந்த அவர் படத்தைக் காட்டினான். அந்த டிரைவரும் உற்று உற்றுப் பார்த்துவிட்டு “இல்லீங்களே... இவங்க யார்னே எனக்குத் தெரியாதுங்களே” என்றான்.

மூன்று பேருக்குமே சுருக்கென்றது.

“நல்லாப் பார்த்துச் சொல்லுப்பா...”

“அட என்னங்க நீங்க... தெரிஞ்சா தெரிஞ்சிருக்குன்னு சொல்லிட்டுப் போறேன். ஆமா என் வண்டி என் அட்ரசை எப்படிக் கண்டுபிடிச்சி வந்தீங்க...”

“இதோ பார்... இதுவரை மரியாதையா பேசிக்கிட்டு இருக்கோம். அதைக் கெடுத்துக்காதே - உண்மையச் சொல்லு, இந்தப் பொண்ணு, அப்புறம் ஒரு ஐயரோடு நீ ஒரு பெரிய ட்ரிப் அடிச்சிருக்கே... அதுவும் குற்றாலத்துக்கு... அங்க இருக்கற டோல்கேட் சிசி கேமராவுல உன் கார் என்ட்ரி பதிவாகியிருக்கு... அதைக் காட்டவா?”

அரவிந்தனின் கேள்வி அவனை மிரள வைத்தது. அது முகத்தில் நன்கு தெரிந்தது. உண்மையில் அரவிந்தனிடம் அதெல்லாம் இல்லை.

இறையுதிர் காடு - 77

“இப்ப சொல்லப்போறியா இல்லையா?”

“நீங்க யாருங்க...?”

“அது எதுக்கு உனக்கு... கேட்டதுக்கு பதில் சொல்.”

“நான் வாடகைக்கு வண்டி ஓட்றவன். அதுல ஆயிரம் இருக்கும் - அதையெல்லாம் உங்களண்ட நான் எதுக்குச் சொல்லணும்?”

“ஒரு பெரிய தப்பு நடந்திருக்கு... பானு ஒரு பெட்டிய திருடியிருக்கா. திருட்டு கொடுத்தவங்க நாங்க. இப்ப சொல்றியா?”

“ஓ... அதான் அந்தப் பெட்டியா?”

“வழிக்கு வந்தியா... கடைசியா அவங்கள எங்க இறக்கி விட்டே?”

“அது... அது...”

“இவர் பத்திரிகை ஆசிரியர் - உன் அட்ரசைக் கொடுத்தது ஆர்.டி.ஓ. நாங்க போலீஸ் கம்ப்ளயின்ட் இன்னும் தரலை. தந்தா நீ அவ்வளவுதான்...”

“ஐயோ என்னாங்க மிரட்றீங்க. நான் கூலிக்கு மாரடிக்கறவங்க. என்ன மெர்சலாக்காதீங்க...”

“அப்ப அவங்கள எங்க இறக்கிவிட்டே சொல்...”

“பம்மல் சிங்க முதலி சந்துல ஒரு குடோன் இருக்குது. அதுக்கு அப்பால போனா ஒரு அந்தக்கால ஊடுங்க. முன்னையும் பின்னையும் காலி பிளாட்டுங்க. கருவேலம் மூடிக் கெடக்கும்...”

“அட்ரஸ்ல தப்பு இல்லியே..?”

“அதான் சொல்லிட்டேன்லிங்கோ...”

“தப்பா இருந்தது. போலீஸோடுதான் வருவோம்...” என்று ஒரு உதார் கொடுத்துவிட்டு அவர்கள் புறப்பட்டனர். சிறிது தூரம் சென்றபின் அரவிந்தன் மட்டும் திரும்பி வந்தவனாய்,

“ஆமா, பானு போட்டோவைப் பாத்துட்டு முதல்ல தெரியலேன்னு ஏன் சொன்னே?” என்று கேட்டான்.

மௌனம் சாதித்தான் அந்த டிரைவர்.

“அவ யார்கிட்டயும் சொல்லக்கூடாதுன்னு சொல்லி மிரட்டி வெச்சிருக்காளா, சொல்லு..?”

“இல்லீங்க. இது வேற மேட்டர்...”

“அப்படின்னா...?”

“நீங்க போலீஸுக்கெல்லாம் போக முடியாது...”

“என்ன உளர்றே?”

“கொஞ்சம் முந்திதான் தென்காசி இன்ஸ்பெக்டர் டோல்ல சிசிடிவி கேமரால தெரிஞ்ச பானும்மா உருவத்த வெச்சு என்னாண்ட பேசி நீங்க கேட்ட அதே கேள்வியைக் கேட்டார். நானும் சொன்னேன்.”

“என்ன சொன்னே?”

“நீஙக கேட்ட அதே அட்ரசைத்தான் அவங்களும் கேட்டாங்க. சொல்லிட்டேன்...”

-அவன் பதில் அரவிந்தன் தலையில் ஒரு இடியாகத்தான் இறங்கியது.

- தொடரும்...