மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இறையுதிர் காடு - 78

இறையுதிர் காடு
பிரீமியம் ஸ்டோரி
News
இறையுதிர் காடு

நாளைய இரவு சித்ரா பௌர்ணமி.

அன்று அந்த மலைப்பாம்பு சிதம்பர மாணிக்கத்தை முறுக்கிப் பிசையத் தொடங்கியிருந்தது. இருபதடி நீளமிருக்கும் - யானைத்தும்பிக்கையின் தடிமனில் இருந்தது அதன் நீண்ட குழலுடல்! மொத்த உடலை மஞ்சளில் தோய்த்து கரும்புள்ளிகள் இட்டாற்போன்ற அதன் தோற்றமும், அதன் வலிமையும் அவ்வளவு பேரையும் உளைந்து போகச் செய்துவிட்டது. மரத்தின் மேல் இருந்து சொத்தென்று சிதம்பர மாணிக்கம் மேல் விழுந்து வளைத்திருந்தது.

நல்ல வேலையாக இரண்டு மலையர்கள் தேன் குடுவைகளோடு சில முயல்களையும் பிடித்தபடி வந்துகொண்டிருந்தனர். அவர்கள் அக்காட்சியைக் காணவும் பதறவோ, சிதறவோ இல்லை. மாறாக, குடுவைகளைக் கீழே வைத்தனர். முயல்களையும் கால்களைக் கட்டிப்போட்டிருந்த நிலையில் சருகுகள் மிகுந்த நிலப்பரப்பில் போட்டுவிட்டு “ஐயரவம் (பயம்) ஆண்டே வேண்டாம். இப்ப இதை விலக்கிடுவோம் கவலைப் படாதீங்க’’ என்றபடியே இருவருமே கோணி ஊசிபோல் ஒன்றைத் தங்கள் இடுப்பில் இருந்து கையில் எடுத்துக்கொண்டு, கீழே தரை மேல் சுருளலோடு கிடந்த சிதம்பர மாணிக்கத்தை நெருங்கி, மலைப்பாம்பின் உடம்பில் அங்கங்கே அந்த ஊசிகளால் குத்தவும், அது வலியோடு தன் பிடியைத் தளர்த்த ஆரம்பித்தது. தொடர்ந்து உடல் முழுக்கக் குத்தவும் சிதம்பர மாணிக்கம் முற்றாக விடுபட்டார். இது அவர்கள் கையாளும் உத்தி. அந்தப் பாம்பும் தன் குத்துக் காய உடலோடு அருகில் புதருக்குள் புகுந்து மறையலாயிற்று.

சிதம்பரமாணிக்கம் வெலவெலத்துப் போயிருந்தார். எமனை மிக நெருக்கத்தில் பார்த்த அதிர்ச்சியில் பேச்சே வரவில்லை. மலையர்களும், குடுவைகளையும் முயல் களையும் திரும்பத் தூக்கிக் கொண்டனர். மேழிமடையாருக்கு அவர்கள் இருவருமே வனக்காவல் தெய்வமாகத்தான் தெரிந்தனர்.

“மலைமக்கா... ரொம்ப சந்தோசம் மக்கா...! சமயத்துக்கு வந்தீக! உங்க வனப் பொம்மி தான் உங்கட இந்த வாட்டம் அனுப்பி வெச்சிருக்கா...” என்று மேழிமடையார் சற்றே அவர்கள் பாஷையில் பேசி அவர்களுக்கு நன்றி கூறினார்.

அவர்கள் பதிலுக்குச் சிரித்தனர். அவர்களில் ஒருவருக்கு மூக்கில் வளவி, ஒருவருக்குத் தோளில் பச்சை குத்தப் பட்டிருந்தது. அந்தப் பச்சையும் மான் உருப்போல் இருந்தது. மேழி மடையார் விடவில்லை.

“மக்கா நீ என்ன ஏழாம் போரோ... நீ என்ன மான் காட்டு நாடோ?” என்று இருவரையும் மாறி மாறிப் பார்த்தும் கேட்டார்.

“ஆண்டே எப்படி அறிஞ்சீக..! எனக்கும் முன்ன ஆறு அக்கா மாருக. நான் என் ஆயி அய்யனுக்கு ஏழாம்போர்தான். இவனும் மான் காட்டு நாடுதான்...” என்றார்.

இறையுதிர் காடு
இறையுதிர் காடு

“சந்தோசம்... ஆமா மேல மொட்டச்சாமி மலை பக்கமிருந்துதானே வரீக?”

“இல்லியே... நாங்க புலிமடுவ ஒட்டி வந்தோம்...”

“வழியில யாரையும் பாத்தீங்களா?”

“யாரையும்னா சாமி மார்கள சொல்றீகளா?”

“இல்ல, எங்கடம்போல ஆசாமிமாருங்க...”

“இல்லியே... ஆனா நடமாட்டம் இருக்கா போல தான் தெரியுது.”

“எதை வெச்சு?”

“வழித்தடத்துல ஒரே புகையிலக் குப்பியோட வாடை - குப்பி ஒண்ணும் உடைஞ்சு கீழே கிடந்துச்சு...!”

“சாமிமாரா இருக்கலாமில்லியா?”

“இல்ல... அவுக புகையிலையைத் தீண்டாங்க! கஞ்சபத்ரம் தான் அவுகளுக்கு எப்பவுமே...?”

“நல்லா கணக்கு பண்ணுதீக... ஆமா தேனும் முயலும் விக்கவா?”

“அதே...!”

“எம்புட்டு?”

“மூணுபடி தேனு, நாலு மொசலு, நெல்லா இருந்தா ஏழுமணக்கு - அல்லாட்டி முக்கா ரூவா துட்டோட மூணுபடி சீரக சம்பா அரிசி...”

“மள்ளாட்டை (கடலை) காராமணிக்குத் தர மாட்டீகளோ?”

“அதுக்கு கரிப்பிலி (மிளகு)யும், கடுக்காயுமல்ல கேப்பாக...”

“கூடுதலா புனுகும், தேன் மெழுகும் கிட்டுமா?”

“உத்தரவு போடுங்க... எடுத்தாரோம். தெங்காசி மிராசுகல்ல அத்த கேப்பாக...”

“அவுகளுக்காகத்தான் நான் கேட்டேன், போட்டம், போய் சோலிய பாருங்க. மலையம் பிடில இருந்து காப்பாத்துனதுக்கு கால்பிடிச்ச வந்தனம்...”

“பெரிய வார்த்த... பெரிய வார்த்த... சூதானமா போங்க...” என்று அவர்கள் விலகிடத் தொடங்கினர். சிதம்பர மாணிக்கம் இடக்கையின் சதை உருண்டையை அமுக்கியபடியே நின்றிருந்தார். அவருக்கு இது மறுஜென்மம். பாம்பின் வளையில் உடம்பில் கட்டுக் கட்டாய் வலி.

பெட்டி காணாமல் போனது ஒரு புறம். இங்கே இப்படிப் பாம்பு வளைத்தது ஒருபுறம்... நடக்கிற எதுவும் நல்லதெற்கென்றே தோன்றவில்லை. எங்கோ தப்பு நடக்கிறது. அது தன் மேல்கூட விடியலாம் என்கிற ஒரு எண்ணமும் ஏற்பட்டுவிட்டது.

திடுமென்று சாரல் சிந்த ஆரம்பித்தது. மின்னல் சொடுக்கு போட்டபடி ஓடி, வான மேகப் பாளங்களை இடிகள் தாக்கிட, பொல பொலவென அப்பாளங்கள் மழையோடு சேர்ந்து அந்த மலைமேல் பொழிகிறாற்போல் இருந்தது.

நாளைய இரவு சித்ரா பௌர்ணமி.

இருட்டுகட்டு முன் பெட்டியோடு சித்தன் பொட்டலுக்குப் போய்விட வேண்டும். பூப்பறிப்பது, தோரணம் கட்டுவது, நெய் உருக்குவது, பிரசாதக் களியைக் கிளறுவது என்று நிறைய சிறு வேலைகள் உள்ளன. எல்லாவற்றிலும் பாரபட்சமின்றி ஈடுபட்டாக வேண்டும். நடுராத்திரி சமயம்தான் போகர் பிரசன்னமாவார். அவர் வரும் சமயம் ஆடாது அசையாது அமர்ந்து ஜெபித்தபடி இருக்க வேண்டும். அதன்பின்தான் ஒவ்வொன்றாக நடக்கத் தொடங்கும். குறிப்பாக பெட்டியோடு தன் வருகையை எதிர்பார்த்துப் பலர் காத்திருக்கக் கூடும்...

அப்படி ஒரு தருணத்திற்காக வந்திருக்கும் போது இப்படி ஆகிவிட்டதே என்று சிதம்பர மாணிக்கத்தின் விழிகள் கண்ணீரைப் பொழிந்தன.

நனைந்தபடியே நடந்தனர். உடையார் தோல்பையைக் காவித்துணியில் சுற்றித் தலைமேல் வைத்துக்கொண்டார். ஒதுங்கத் தோன்றிய நிலையில் ஒரு காட்டு வாகை மரமும் குமிழ்தேக்கும் கலப்பு மணத் தம்பதிகளைப்போல வளர்ச்சிப்போக்கில் பின்னிப் பிணைந்து கிடக்க, கீழே பருத்த அதன் தண்டுப் பாகத்தில் ஒரு பெரும் துவாரம். உள்ளே ஏழெட்டுப் பேர் தாராளமாய் அடையலாம்.

மேழிமடையார் சற்றும் தயங்காது உள் நுழைந்து அப்படியே குந்த வைத்து அமர்ந்தார். உள்ளே மெதுமெதுவென தழை மூடாக்கு! ஒவ்வொருவராய் உள் நுழைந்து அப்படியே உரசியபடி நின்று கொண்டனர்.

“என்ன உடையாரே... ஏதும் பேசாம வாரீரே, நெஞ்சுக்குழி தபதபங்குதா?” என்று மேழிமடையார் பேச்சு கொடுக்கலானார்.

“எனக்கு இது எல்லாமே புது அனுபவம் தான். ஒரு மரப் பொந்து இப்படி ஒரு அறை கணக்கா இருக்கறத இப்பதான் பாக்கறேன். உள்ள தேளு பூரான் இருந்து கடிச்சிடாதா?” என்று பயத்தை எதிரொலித்தார்.

“இம்மாதிரி பூதவாய் கணக்கா இருக்கற பொந்துகள்ள அதுக அடையாது. கரடி அடையும், இல்லாட்டி மலையாடுகள் அடையும். புழுக்கை வாடை அடிக்குது பாருங்க. ஆடு அடையற பொந்து இது. தெகிரியமா தங்கலாம். கால் புண்ணு இருந்தா அதோட சாணமும் இங்க உள்ள கிடக்கிற இலை தழை மூடாக்கும் ஒண்ணு கலந்து களிம்பு மாதிரி வேலை செய்யும். அதனால புண் குணமாயிடும்.”

“அது சரி... இப்படி இலக்கில்லாமப் போய்க்கிட்டிருந்தா எப்படி?”

“யார் சொன்னது... இலக்கில்லேன்னு... இன்னும் ஏழு கல்தொலைவு இருக்கு சித்தன் பொட்டலுக்கு. இடைல மொட்டச் சாமி மலைல அந்தப் பொட்டிக் கூட்டத்தைப் பிடிக்கறோம்...”

“அது என்ன மொட்டச்சாமி மலை...?”

“அதான் இந்த புத்தர் சாமிய கும்பிடுமே ஒரு கூட்டம்... அவுக தங்கியிருந்த மலையைத்தான் மொட்டச்சாமி மலைம்போம்.”

“அவங்க எங்க இங்க?”

“அதுசரி... அவங்க இல்லாத இடமே இல்லைன்னு சொல்வேன். மதுரைல அழகர் மலை, திருப்பரங்குன்ற மலை, யானைமலை, அப்படியே தெக்க வர வர கழுகு மலை, வத்றாப்பு தாணிப் பாறை, இந்தப் பக்கத்துல தலையணை அருவி, திருமலை அடிவாரம் - அப்பால இந்தப் பொதிகைல மொட்ட மலை இப்படி அவங்க தடயங்க இல்லாத இடமே கிடையாது.”

“இந்த வரலாறெல்லாம் உமக்கெப்படித் தெரியும்?”

“வைத்தியனுக்குத் தெரியாத வரலாறு வாத்திக்கும் தெரியாதுன்னு ஒரு சொலவடை உண்டு உடையாரே. அதுலயும் மொட்டச் சாமிக கிட்ட நீர் வைத்தியம் கத்த பரம்பரை எங்க பரம்பரை...”

“நீர் வைத்தியமா?”

“ஆமாம்... நீர்ல நல்ல வெள்ளைத் துணியை நனைச்சு உடம்புல நாடி துடிக்கற இடங்கள்ள கட்டு போட்டு அதுமேல நீர்ச் சொட்டு படும்படி செய்து குணப்படுத்தறது ஒரு முறை.”

“ஆச்சர்யம்...”

“அது என்ன ஆச்சர்யம்? கபாலத்தை வலி இல்லாம வெட்டி எடுத்து உள்ள இருக்கற ரத்த அடைப்பைச் சரிபண்ணி திரும்ப கபாலக் கிண்ணத்தைப் போட்டு மூடிக் கட்டு போடற ரண சிகிச்சையெல்லாம் தெரிஞ்சவங்க எங்க மூதாதையர்.”

“கேக்கவே சிலிர்க்குது. இவ்வளவு தெரிஞ்ச உங்களுக்கு அரவாணத்தை குணப்படுத்தத் தெரியாதா?” உடையார் இறுதியாகத் தன் தேவையைத் தொட்டுக் கேட்ட கேள்வி மேழிமடையாரை விக்கிக்கச் செய்தது.

அந்த அரை இருளில் மழைப்பொழிவின் சோவென்ற சப்தத்தின் இடையில் உடையாரை ஊன்றிப் பார்த்தார். உடையாரிடம் உறைவு.

“உடையாரே... உம்ம கேள்விக்கு மருந்து என்கிட்ட இல்லை. ஆனா போகர் சாமிக்கு நிச்சயம் தெரிஞ்சிருக்கும். உடம்புக்குள்ள எந்த சுரப்பியால பால் மாறாட்டம் நடக்குதுங்கறதை அவராலதான் சொல்ல முடியும். ஆனா ஒரு விநாடில என் கர்வத்தை உங்க கேள்வி சரசரன்னு அறுத்துப் போட்ருச்சு...” என்று முகத்தைத் துடைத்துக் கொண்டார். அப்போது யாரோ அழும் சப்தம் செவியை உரசவும் “யாரது விசும்பிக் கிட்டு...” என்று மேழிமடையார் பார்த்திட, ஓதுவார்தான் அழுதபடி இருந்தார்.

“என்ன சாமி ஆச்சு?”

“பெட்டி கிடைக்கும்... பாக்ய சாலியாகப் போறேன்னு நினைச்சிருந்தேன். ஆனா என்னாலயே அது காணாமப்போனதை நெனைச்சேன்... கருக்குன்னு இருக்குது. கண்ணீரையும் அடக்க முடியல. தேவாரம் முச்சூடும், திருவாசகத்தை உருக்கிப் பெருக்குவேன் - திருமந்திரமும் மனப்பாடம். கஷ்டப்பட்டு ருத்ரமும் கத்துக்கிட்டேன். பாடாத நாளுமில்லை. ஆனா எனக்கு ஏன் இப்படி ஒரு சோதனை?

என்னால செட்டியாருக்குமில்ல கெட்டபேர் வரப்போகுது... போகர் சாமி இவரண்ட, எங்க நான் கொடுத்த சாமியும் ஏடுகளும்னு கேட்டா காணாமப்போச்சு சாமின்னா சும்மா விடுவாரா?”

- ஓதுவார் கேள்விகளில் நேர்மையும் நியாமும் மிகவே இருந்தது. யாராலும் அதற்கொரு பதிலைக் கூறமுடியவில்லை. சட்டென்று கட்டிக்கொண்டாற்போல் ஒரு மௌனம். இறுதியில் அதை உடைத்தார் சிதம்பர மாணிக்கம்.

இறையுதிர் காடு
இறையுதிர் காடு

“எம்மேல தப்பே இல்ல... நான் கடமையைச் சரியா செய்ய மலைக்கு வந்துட்டேன். இவ்வளவு நாள் நான் அந்த சாமியை சுய நலமில்லாம கும்புட்டது சத்யம்னா என் சாமி என்கிட்ட திரும்ப வந்தேதீரும். வராட்டி போகர் சாமி முன்னால அவர் வளக்கப்போற நெருப்புல நான் பாஞ்சிடுவேன். இது சத்யம்...” என்றார்.

அந்த சத்தியத்தை யாரும் எதிர் பார்க்கவில்லை.

மழையிடமும் சற்றுத் தணிவு.

“இப்படி உணர்ச்சி வசப்படறதெல்லாம் சரியில்ல... அதுல சத்யம் வரை போறதெல்லாம் கொஞ்சமும் பக்குவப்படலன்னுதான் உணர்த்துது. நம்பிக்கையை இழந்துடாதீங்க. சாமிமேல பாரத்தப் போட்டுத் தேடுவோம். ஒரு கள்ளன் எம்புட்டுப் பொருளை வேணா திருடலாம் - கடவுளைத் திருடல்லாம் முடியாது’’ என்றபடியே பொந்தை விட்டு வெளிவந்து, ``நடப்போம்’’ என நடந்தார். மற்றவர்களும் தொடர ஆரம்பித்தனர்.

தரைப்பரப்பில் சொதசொதப்பு. பாதையைக் கண்டறிவது சிரமமாக இருந்தது. அதனால் மேழிமடையார் தடுமாறினார். திசைகாட்டிக் கருவியை எடுத்து ஒரு பார்வை பார்த்தார். முகப்புக் கண்ணாடிக்குள் தண்ணீர் இறங்கி எதுவுமே தெரியவில்லை. ஒரு விநாடி தவித்தவர் “திசை தெரிய மாட்டேங்குது... வானமும் மூடிக்கிடக்கு. சூரியனைப் பாக்க வழியில்ல... கருவியும் வேலை செய்யல. இப்ப ஒரே வழிதான்... யாராவது அதோ அந்த வாகை மரம் மேல ஏறி நாலாபுறமும் பார்த்துச் சொன்னா நாம அதுக்கேற்ப நடக்கலாம்’’ எனவும், பணியாளனான கரும்பாயிரம் வேகமாய் மரத்துமேல் ஏறத் தொடங்கினான். ஏறும் வேகத்தை வைத்தே பயிற்சி உடையவன் என்பது தெரிந்தது. விறுவிறுவென மேலேறினான். சில சிங்கவால் குரங்குகள் தங்களை அவன் பிடிக்க வருவதாய் நினைத்து அவை மரங்கள் நோக்கி ஒரு அரை வட்டப்பாய்ச்சல் பாய்ந்தன.

சரசரவென ஏறிவிட்ட கரும்பாயிரம், தலைப்பாகையை அவிழ்த்து முகத்தைத் துடைத்துக்கொண்டே தனக்கு நேர் திசையில் ஒரு சரிவில் தெரிந்த சில மனிதர்களைக் கண்டு அதிர்ந்தான். நெடுந்தொலைவில் ஒரு சரிவில் அவர்கள் ஏறியபடி இருக்க, அவர்களில் ஒருவன் தலைமேல் அந்தப் பெட்டி இருந்தது.அவனுக்கும் முன்னால் ஒருவன் தீப்பந்தம் பிடித்தபடி செல்வதும், அந்தப் பந்தம் புகையை உமிழ்வதும் நன்கு தெரிந்தது.

பெட்டி மனிதனுக்குப் பின்னால் ஒரு நான்கைந்து பேர். எல்லோருக்குமே வயது அறுபதுக்கு மேல் ஆகியிருந்தது. கரும்பாயிரம் கண்கள் விரிய கத்தத் தொடங்கினான்.

“ஆண்டே... பெட்டியோடு சிலர் போய்க்கிட்டிருக்காங்க. நல்லாத் தெரியுது ஆண்டே...” என்றான். அப்போது சற்றும் எதிர்பாராத படி அந்த மரக்கிளை ஒடியத் தொடங்கி, கரும்பாயிரம் விழ ஆரம்பித்தான்.

இன்று அதிர்வோடு அந்த டிரைவரைப் பார்த்த அரவிந்தன்,

“என்னய்யா சொல்றே?” என்றான் விழிகள் அகண்டு விரிந்திட்ட நிலையில்...

“உங்களப் போலவேதான் அவங்க கேட்டாங்க. அதுலயும் போலீஸு... எப்படிச் சொல்லாம இருக்க முடியும்? நாளைக்கு என் வண்டி ரோட்டுல ஓடணுமில்ல...?”

“இதை ஏன் முதல்லயே சொல்லல...?”

“ஆமா அப்படி என்ன இருக்குது அந்தப் பொட்டியில? அதனால தான் ராத்திரி என்னை லாட்ஜில தூங்கச் சொல்லிட்டு அந்தம்மா காரை எடுத்துக்கிட்டுப் போச்சா?”

“அந்தப் பெட்டியைக் களவாடும்போது நீ இல்லையா?”

“இல்லீங்க... நீங்க ஆளாளுக்கு வந்து முட்டுறதப் பார்த்தா விவகாரம் பெருசா இருக்கும்போலத் தெரியுது... என்னிய இத்தோட உட்ருங்க சாமி...”

- அவன் வீட்டு வாயிலில் நின்றபடி கையெடுத்துக் கும்பிட்டான். அரவிந்தனுக்குக் குழப்பம் கும்மியடிக்கத் தொடங்கியது.

மெல்ல சோர்வாக நடந்து வந்தான். பாரதி காருக்குள் இருந்து பார்த்தபடியே இருந்தாள். கார் அருகே வந்தவனிடம் பெரும் சோர்வு.

ஜெயராமனும் திவ்யப்ரகாஷ்ஜியும் உற்றுப் பார்த்தவர்களாய் “என்ன அரவிந்தன் புதுசா ஏதாவது சிக்கலா?” என்று கேட்க, திவ்யப்ரகாஷே அவன் கூறு முன் விடையைக் கூறிவிட்டார்.

“நம்மை போலீஸ் முந்திடிச்சு போல?” என்றார்.

“என்ன சொல்றீங்க?” ஜெயராமன் பதறவும் அரவிந்தனே டிரைவர் சொன்னதைச் சொல்லிமுடித்தான்.

“அப்ப, நாம இப்ப பம்மல் சிங்க முதலி சந்துக்குப் போகப் போறோமா இல்லையா?” சாந்தப்ரகாஷ் தன் காரில் இருந்து இறங்கி வந்து கேட்டான்.

“போய்ப் பார்ப்போம். ஆனா எனக்கு நம்பிக்கையில்லை. பாரதி, உங்கப்பா எப்படியோ முந்திட்டார்’’ என்ற அரவிந்தனை பாரதி வெறித்தாள்.

சாந்தப்ரகாஷ் முகம் கலங்கிவிட்டிருந்தது. ஆனால் திவ்யப்ரகாஷ்ஜி நம்பிக்கை இழக்கவில்லை.

“பாம்பு இருக்குற வரை தப்பா அதை யாரும் நெருங்க முடியாது... நான் அதைப் பாம்புன்னு சொல்றதும் தப்பு. என் தாத்தா அவர்... சுய நலத்தோடு அதை ஒருவர் நெருங்க விடவே மாட்டார்” என்று மிக நம்பிக்கையாகப் பேசினார்.

எல்லோரும் அந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டதுபோல் தெரிந்தது. ஆனால் பாரதி முகத்தில் ஒரு ஆத்திரமும் அதனூடே கேலிச்சிரிப்பும் தெரிந்தது.

“நம்பிக்கை இழக்காம பம்மலுக்குப் போய்ப் பார்ப்போம்” என்று திவ்யப்ரகாஷ்ஜி தூண்டவும் அவரவர் கார்களில் ஏறிக் கொண்டனர்.

அரவிந்தன் காரை ஓட்டிய நிலையில் அருகில் பாரதி. பின்னால் ஜெயராமனும், திவ்யப்ரகாஷ்ஜியும் அமர்ந்திருந்தனர். அவர்களை சாந்தப்ரகாஷ் சாருவோடு தொடரத் தொடங்கினான்.

சாந்தப்ரகாஷுக்கு சென்னை டிராஃபிக்கில் கார் ஓட்டுவது மிகச் சிரமமாக இருந்தது. சாருவோ கண்ணீர் திரண்ட நிலையில் சிலைபோல் அமர்ந்திருந்தாள்.

“சாரு...”

“உம்...”

“ஏன் கலங்கறே?”

“உனக்குக் கலக்கமா இல்லையா சந்தா...”

“ஒரே குழப்பமா இருக்கு. ஒரு பெட்டிக்கு இந்தப் பாடான்னு வருத்தமாவும் இருக்கு...”

“எனக்குள்ள அதெல்லாம் எதுவுமில்லை. நான் பிரமிப்புலதான் இருக்கேன்...”

“பிரமிப்புலயா?”

“ஆமாம்... உன் கொள்ளுத்தாத்தா நம்ம தலைமுறைக்கே விமோசனம் தேடியிருக்கார். நாமெல்லாம் எதுக்குப் பிறக்கறோம்னே தெரியாமப் பிறக்கறோம் - பிறந்துட்டதால வாழ்க்கைன்னு ஒண்ணு வாழறோம் - அப்புறம் சாவு வரவும் போய்ச் சேர்ந்துடறோம். எங்க இருந்து வந்தோம்னும் தெரியாது - சாவுக்குப் பிறகு என்னாவோம்னும் தெரியாது. ஆனா இதுக்கெல்லாம் உன் தாத்தா விடையைக் கண்டுபிடிச்சிட்டவராதான் எனக்குத் தெரியறாரு...”

“இந்த நேரத்துல பெட்டியப் பத்திக் கவளைப்படாம எப்படி சாரு உன்னால இப்படியெல்லாம் யோசிக்க முடியுது?”

“அதைப் பத்தி நாம கவலைப்படத் தேவையே இல்லை. நிச்சயம் அது பத்ரமா தான் இருக்கும்... நமக்கு இனி நல்ல காலம் தான் சந்தா...”

“அப்ப எதுக்குக் கலங்கினே?”

“கலங்கல... பரவசப்பட்டேன்! அடேயப்பா... நாம இந்தியா வந்ததுல இருந்து எத்தனை எத்தனை அனுபவங்கள். வெளிய யார்கிட்ட சொன்னாலும் நம்ப மாட்டாங்க. ஏதோ ஃபிக்‌ஷன் மாதிரி இருக்குன்னு சொல்வாங்க.

பட்... ஆல் ஆஃப் அவர் எக்ஸ்பிரியன்ஸ் வாஸ் நாட் ஒன்லி எ மிராக்கிள். இட்ஸ் அபௌ...!”

“பை தபை நான் ஒண்ணு சொன்னா நீ அதிர்ச்சியோ ஆத்திரமோ அடையக் கூடாது...”

“காரை கரெக்டா ஃபாலோ பண்ணு. சரி, அது என்னன்னு சொல்.”

“பெட்டியில் நிறைய ஏட்டுக்கட்டுகள் இருக்கறதா கேள்விப்பட்டோம் இல்லையா?”

“ம்...”

“அதுல காலப்பலகணிங்கற ஒண்ணு பத்தி ஞாபகமிருக்கா?”

“அதுக்கென்ன?”

“அந்த எம்.பியில இருந்து அவருக்கு சப்போர்ட்டா இருக்கற பவர் மோட் அவ்வளவுக்கும் அந்தப் பலகணிமேலதான் கண்ணு...”

“அதனால...?”

“அதை நாம ஏன் நம்ம ஆகாஷுக்காகப் பயன்படுத்திப் பார்க்கக் கூடாது!”

-சாந்தப்ரகாஷ் கேள்வி சாருவை நம்பி நிமிர்த்தியது.

“யூ மீன்...?”

“அதைப் பயன்படுத்த ஒரு ஃபார்முலா இருக்காம். அதன்படி அதைப் பயன் படுத்தினா அடுத்த வேர்ல்டு வார், அடுத்த சுனாமி, அடுத்து சாகப்போற லீடர் யார்? இப்படி எல்லாக் கேள்விக்கும் விடை இருக்கற அந்தப் பலகணில நம்ப ஆகாஷ் எதிர்காலத்துக்கும் ஒரு விடை இருக்கும்தானே?”

- சாந்தப்ரகாஷ் அப்படி ஒரு கேள்வி கேட்பான் என்று சாரு கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

“அதுமட்டுமல்ல... இப்ப உன் வயித்துல இருக்கற நம்ப வாரிசு ஆணா பெண்ணாங்கறதுல இருந்து அதோட எதிர்காலமும் நமக்கு முக்கியமில்லையா? சுருக்கமா சொல்லப்போனா நம்ம இரண்டு பேரோட எதிர்காலம் எப்படி இருக்கும்? என் பிசினஸ், உன் ஹெல்த், அப்புறம் நம்ம டெத்... அதாவது எப்ப நம்ம உயிர் பிரியும்கறது வரை அதைக் கொண்டு தெரிஞ்சிக்க முடியும்னும் போது ஒய் நாட் வி ட்ரை?”

இறையுதிர் காடு
இறையுதிர் காடு

“நல்ல கேள்விதான்... ஆனா...”

“புரியுது... அப்படிச் செய்யலாமா, அது தப்பில்லையாங்கறதுதானே இப்ப உன் கேள்வி?”

“ஆமா... இனி ஒரு தப்பை நாம எக் காரணம் கொண்டும் செய்துடக் கூடாது சந்தா...”

“நாம இதுக்கு முந்தி என்ன தப்பு செய்தோம். இனி ஒரு தப்புங்கறே?”

“நாம செய்யல... ஆனா உன் தாத்தா செய்திருக்கார். அதனாலதான் நம்ம வம்சத்துல திரும்ப தப்பு நடந்திருக்கு. அந்த லிங்கத்தையும் ஏடுகளையும் ஏன் உன் தாத்தா மலைக்குப்போய் முந்தியே போகர் சாமி கிட்ட ஒப்படைக்கல? ஏன் ஒரு பாம்பா சுத்தி சுத்தி வர்றாரு. இப்பகூட நம்மால ஏன் அவ்வளவு சுலபத்துல ஒப்படைக்க முடியல? இப்படிப் பல கேள்விகள் விடை தெரியாம இருக்கு. இதுல நாளைக்கு நைட் சித்ரா பௌர்ணமி. நம்ம கைல இருக்கறது அதிகபட்சமா முப்பதுல இருந்தது நாப்பது மணி நேரம்தான்... அதுக்குள்ள லிங்கத்தையும் ஏடுகளையும் நாம ஒப்படைக்கற நெருக்கடில இருக்கோம். எப்படி அதைச் சாதிக்கப் போறோம்?” சாருபாலா சாந்தாப்ரகாஷிடம் கேட்ட அதே கேள்வியை முன்னால் செல்லும் காரில் அரவிந்தன் ஜெயராமனிடம் கேட்டிருந்தான்.

“சார்... நாளைக்கு நைட் சித்ரா பௌர்ணமி. நாமளோ இங்க சுத்திக்கிட்டி ருக்கோம். போகரை பாக்கணும்கற உங்க ஆசை என் ஆசையெல்லாம் அம்போதானா?”

ஜெயராமன் மௌனமாய் வெளியே பார்த்தார்.

திவ்யப்ரகாஷ்ஜி கண்களை மூடி தியானத்தில் இருந்தார்.

பாரதியிடம் பேச்சே இல்லை.

“என்ன சார்... அமைதியாயிட்டீங்க?” அரவிந்தன் கிளறினான்.

“சாண் ஏறினா முழம் சறுக்குது... என்னை என்ன பண்ணச் சொல்றீங்க அரவிந்தன்?”

“நாம அப்ப ஆரம்பிச்ச இடத்துக்கே வந்துட்டோமா... கிட்டத்தட்ட ஒரு மாசமா பெட்டி, போகர்னு சுத்தினதெல்லாம் இப்ப வேஸ்ட்டா...?”

“அப்படித்தான் தோணுது. நம்ம சுத்தி நடந்த பல அமானுஷ்ய சம்பவங்கள்ங்கற மிஸ்ட்ரி பவரை, எம்.பியோட பொலிட்டிகல் பவர் காலி பண்ணிடு மோன்னு பயமாகூட இருக்கு...”

“பக்கத்துலயே ஒரு மகா சக்தி கொண்ட யோகிய வெச்சுக்கிட்டுப் பேசற பேச்சா சார் இது?”

“என்னன்னு தெரியல... இப்ப பார்த்து இவர் தியானத்துல உக்காந்துட்டாரு. நாம பேசறது காதுல விழுதா இல்லையான்னுகூடத் தெரியல.’’

“பாவம் சார்... சாந்தப்ரகாஷ் கப்புள். நம்பளோடு சேர்ந்து அவங்களும் அலையறாங்க, அதுல அந்தம்மா பிரக்னென்ட் வேற...”

- நடுவில் ஜெயராமன் செல்போனில் அமட்டல். அவர் காதுகளுக்குள் தமிழ் வாணி அலுவலகத்திலிருந்து நியூஸ் எடிட்டர் ராமநாதன் பேச ஆரம்பித்திருந்தார்.

“சார் பேசலாமா?”

“தாராளமா... என்ன விஷயம் ராமநாதன்?”

“எல்லாம் நல்லபடியா போய்க்கிட்டிருக்கு சார். போன மாச சர்க்குலேஷன் சார்ட்டை மெயில் பண்ணியிருந்தேன். பாத்துட்டீங்களா சார்?”

“சாரி ராமநாதன்... பாத்துடறேன். இப்ப ஒரு விசித்ரமான சூழ்நிலைல இருக்கேன். நேர்ல பாக்கும்போது விவரமா சொல்றேன்...”

“எப்ப சார் ஆபீஸ் வருவீங்க?”

“எப்படியும் இன்னும் இரண்டு நாள் ஆகும்?”

“எழுத்தாளர் அரவிந்தனும் உங்ககூடதான் இருக்கார்னு சொன்னீங்க. ஏதாவது கதை சம்பந்தமான டிஸ்கஷனா சார்...?”

“இல்ல... இது வேற மாதிரியான விஷயம். நான் நேர்ல சொல்றேன். நல்ல வேளை அரவிந்தன் பத்தி இப்ப ஞாபகப்படுத்திப் பேசுனீங்க. இந்த வார மெடீரியல் பிரின்ட்டுக்கு ரெடியாயிடிச்சா?”

“சில பக்கங்கள் மட்டும் பாக்கி இருக்கு சார். கொஞ்ச நேரத்துல ரெடியாயிடும்.”

“அதெல்லாம் ரெகுலர் பேஜஸா?”

“ஆமாம் சார்... கவிதை, சினிமா விமர்சனம், அப்புறம் ஒரு பேட்டிக் கட்டுரை சார்...”

“பேட்டிக் கட்டுரையை அடுத்த வாரத்துக்கு ஷிப்ட் பண்ணிடுங்க. நல்லா இரண்டு ஃபுல்பேஜுக்கு பிரபல எழுத்தாளர் அரவிந்தனின் மர்மத் தொடர் விரைவில் ஆரம்பம்னு ஒரு அறிவிப்பு வைங்க. அவரோட போட்டோ நம்ப கேலரில இருக்கும். ஒரு முழுபக்கம் அவரோட போட்டோ வரட்டும்....”

இறையுதிர் காடு - 78

“மர்மத் தொடரா, அதுவும் அரவிந்தன் சார் கிட்ட இருந்தா?”

“சாரி, மர்மத் தொடர் இல்ல... அமானுஷ்யத் தொடர். அது மர்மத்துக்கும் மேல இல்ல..?”

“என்ன சார் சொல்றீங்க?”

“அதான் அமானுஷ்யத் தொடர்னு சொல்லிட்டேனே... அந்த வார்த்தையைப் பெரிய எழுத்துல போடுங்க... ஆச்சர்யமா இருக்கில்ல?”

“ஆமாம் சார்... இது எனக்கே ஒரு ஆச்சர்யமான நியூஸ் சார்.”

“இது என்ன ஆச்சர்யம், நாங்க ஆச்சர்யங்கள் அதிர்ச்சிகள்ளதான் இப்ப நீந்திக்கிட்டிருக்கோம். இது கற்பனை இல்லை ராமநாதன், அவ்வளவும் ரியல் எக்ஸ்பீரியன்ஸ்...!” பேசிவிட்டு அரவிந்தனைப் பார்த்தார் ஜெயராமன்.

“என்ன சார் இப்படி என்னை மாட்டி விட்டுட்டீங்க?” என்றான் அரவிந்தன்.

“நல்லவேளை நான் தப்பிச்சேன்...” என்று வாய் திறந்தாள் பாரதி.

“உங்களால முடியும் அரவிந்தன். நம்மளோட இந்த அலைச்சல் துளியும் வீண் போகக் கூடாது...”

“என்னத்த சார் எழுத... இதுவரை நடந்த எல்லாமே விடையில்லாத புதிராதான் முடிஞ்சிருக்கு. அடுத்து என்ன நடக்கப் போகுதுன்னும் தெரியல. இதுல ஐரனியே போகர் வர்றாருங்கறதுதான். இந்த லிங்கம், ஏடுகள விடுங்க. நம்மகிட்ட அதோட போட்டோ காப்பி இருக்கு. அப்படிப் பார்த்தா என் லேப்டாப்பும் அந்த உடைக்கப்பட்ட பெட்டியும் இப்ப ஒண்ணுதான். அதோ நாம போகரைப் பார்க்கப்போனா பாக்க முடியுமா?”

- கேள்விகேட்ட அந்த நொடி அவன் கார் பம்மல் சிங்க முதலி சந்தில் உள்ள நீலகண்ட தீட்சிதர் வீட்டு வாசலில் நின்றது. வாயிற்புறம் பழநி சென்ற சமயம் கணக்கம்பட்டித் தென்னந்தோப்பில் சந்தித்த அந்தப் பண்டாரச் சித்தர். கூடவே நீலகண்ட தீட்சிதரும்..!

- தொடரும்.