
அதைப் பார்த்துவிட்ட அவர் முகத்தில் ஒரு பரவசம்.
அன்று ஹோ என்கிற பெருங் குரலு டன் கீழே விழ ஆரம்பித்த கரும்பாயிரம், தரையில் ஒரு சரிவில் விழுந்து, அப்படியே அந்தச் சரிவில் பொட்டலமாய் உருளலானான். நல்ல வேளையாக பற்றிக் கொள்ள ஒரு காட்டுக்கொடி அவன் கைக்குத் தட்டுப்பட்டு அதை அப்படியே பிடித்துக் கொண்டான்.
அவன் அப்படித் தொங்குவதைப் பார்த்த சிதம்பர மாணிக்கம் “ஏலேய், பிடியை விட்றாத லே... அப்படியே இரு அப்படியே இரு....” என்று கத்தலானார்.
உடையாருக்கு உச்சியில் விடைப்பு தட்டி கண்ணு முழி இரண்டும் வெறித்து விட்டிருந்தது. ஓதுவார் புலம்பத் தொடங்கிவிட்டார்.
“சிற்றம்பலம்... சிற்றம்பலம்... சாமி, சோதிக்காதய்யா... நாங்க தாங்க மாட் டோம்...” என்று எல்லோரையும் கூட்டு சேர்த்துக் கொண்டார். மேழிமடையார் மட்டும் சுறு சுறுப்பாகத் தன் பணியாளன் மூட்டையைத் திறந்து அதில் முழுநீள கடாவெட்டுக் கத்தியை எடுத்தவராய் அதைக் கொண்டு கரும்பாயிரம் கிடந்த சரிவில் முளைத்திருந்த தாவரங்களை வெட்டி வழியை உருவாக்கிக்கொண்டே அவனை நெருங்கினார். கரும்பாயிரம் உந்திக் கொண்டு கொடியைப் பிடித்திருந்தான். தன் தலைப்பாகையை அவிழ்த்து அவனை நோக்கி வீசி, அவன் அதையும் பிடித்துக்கொள்ளவும், தான் இருந்த இடத்திலிருந்து மேலே இழுக்கலானார். அவனும் முகத்தைக் கோணலாக வைத்துக் கொண்டு மேலேறி வந்து அவர் மேலேயே சாய்ந்தும்விட்டான்.
நெடுநேரம் மூச்சிளைத்தான். எல்லோரும் உற்றுப் பார்த்தபடியே இருந்திட, ஒரு இரண்டடி தூரத்தில் ஒரு இருதலைவிரியன் எனும் பாம்பு முட்டையிட்டு தன் உடம்பால் சுற்றி அடைகாத்துக் கொண்டிருந்தது. இருபுறத்திலும் நான்கு கண்களோடு அது பார்த்தவிதமே உடம்பில் கூச்சலேற்படுத்தியது.
அது பெரும்பாலும் தீண்டாது. தீண்டிவிட்டு நாம் பிழைத்தாலோ அதனால் ஒரு பயனுமில்லை - தீண்டப்பட்ட நபருக்கு ரோகம் பாவிப்பது நடக்கத் தொடங்கிவிடும். மேழிமடையார் அதைப் பார்த்தபடியேதான் கரும்பாயிரத்தையும் சுமந்தபடி மேலேறினார். சில கற்கள் உருண்டு அதன் மேல் விழுவதுபோல் சென்றன. நல்ல வேளை விழவில்லை.
பையப் பையத்தான் ஏற முடிந்தது. கரும்பாயிரத்துக்கும் ஒரு காலைத்தான் ஊன்ற முடிந்தது. இன்னொன்றை ஊன்ற முடியவில்லை. அநேகமாய் எலும்பு முறிந்திருக்க வேண்டும். சமதளத்துக்கு வந்து, தலைப்பாகைத் துணியை விலக்கிட அவன் மல்லாந்து படுத்து மூச்சிளைத்தான். பின் “ஆண்டே... அவுக பொட்டியோட போய்க்கிட்டிருக்காக... நான் கீழ உழுகவும் அம்மட்டும் என்னால கெட்டுப் போச்சி... மன்னிச்சிடுங்க ஆண்டே” என்று அந்த நிலையிலும் கசிந்தான்.
“நீ தொணப்பிக்காதே... கொஞ்சம் அமைதியா கிட...” என்று அடுத்து என்ன செய்யலாம் என்பது போல் யோசிக்கலானார்.
“வைத்தியரே, கௌம்புன நேரம் சரியில்லையோ... தப்பாவே எல்லாம் நடக்குதே...” என்றபடி பார்த்தார் ஓதுவார்.
“எனக்கும் அதான் எண்ணம்... கௌம்பன நேரம் சரியில்லை...” என்று உடையாரும் வக்காலத்து வாங்கலானார். இடையில்,
“ஆண்டே... இடக்கால் வலி உசுர் போவுது. முட்டி தட்டிப்போச்சாட்டம் தெரியுது...” என்று முகம் சுணக்கி வலியைப் பிரதி பலித்தான் கரும்பாயிரம்.

சிதம்பர மாணிக்கம் மட்டும் எதுவும் பேசவில்லை. அவர் எதுகுறித்தோ தீவிரமாய் யோசிப்பது அவர் முகத்தைப் பார்க்கையில் நன்கு தெரிந்தது.
“என்ன செட்டியாரே ரோசன...?”
அவரும் கலையலானார்.
“இல்ல... பெட்டிய கண்டும் தொடர முடியலையே... இப்படி கால் ஒடியுறதெல்லாம் நல்ல சகுனமில்லை யேன்னுதான் ரோசிச்சேன்.”
“அதிகாலைக்கு சகுனம் கிடையாது... சகுனம் மேல பழியப் போட வேண்டாம். திரும்ப சொல்றேன்... இது ஏதோ சோதனை... சித்தர் சாமி விசயம்கறது சல்லிசு கிடையாது. அதுலயும் சமாதியாயிட்ட சாமியையே பாக்கற மாதிரி ஒரு விசயம். அதுக்கு ஒரு தகுதி வேணும். அது நமக்கு இருக்கான்னு அவுகதான் சோதிக்கறாங்க” என்ற மேழிமடையாரிடம் இப்போது இந்தக் கரும்பாயிரத்துக்கு என்ன வழி என்பதுபோலப் பார்த்தார் சிதம்பர மாணிக்கம்.
“என்ன செட்டியரே?”
“இல்ல... இப்ப இவன என்ன செய்ய?”
“ஆண்டே... எனக்காகத் தேங்காதீங்க... நீங்க கிளம்புங்க. நான் இப்படியே மெல்ல ஊர்ந்து ஊர்ந்து கீழ இறங்கிடறேன்.”
“கூடாது... கீழ இருந்து புறப்பட்ட எல்லாரும்தான் மேல போகணும். நடுவுல ஒரு உதிரல்கூடக் கூடாது...”
“எப்படி வைத்தியரே... அதான் கால் ஒடிஞ்சு போச்சுல்ல?”
“அதுக்கு வைத்தியம் பாப்போம்... எதுக்கு இருக்கேன் நான்?”
“இந்தக் காட்டுல எங்க போய் என்னத்த பண்ணுவீக?”
“பண்றேன் பாருங்க...”
“அப்ப பொட்டி...?’’
“அதுக்கும் வழி இருக்கு...”
“என்ன வழி?” சிதம்பர மாணிக்கம் கேட்டிட, மேழிமடையார் ஒரு காரியம் செய்யலானார். நாலாபுறமும் விறுவிறுப்பாகப் பார்த்தார். நல்ல வேளையாக மழையின்றி வெறித்து நீலம் பிலிற்றியது வானம்.
கூழைக்கடா, மணிச்சிட்டு, சப்த வண்ணி, மஞ்சுக் குருவி, உளிமூக்கன் என்கிற பொதிகைப் பறவையினங்களின் கூப்பாடு நன்றாகக் கேட்டது. மிளா மான்களும், வரையாடுகளும் அப்பகுதிக்குள் சிறுத்தை நடமாட்டம் அப்போதைக்கு இல்லாததைச் சொல்லிக் கொண்டிருந்தன.
மேழிமடையார் நாற்புறமும் பார்த்ததில் ஒரு மஞ்சள் கடம்ப மரம் அதன் உச்சாணிக் கிளைமேல் ஒரு மஞ்சள் கொடி பறக்கக் காட்சியளித்தது.
அதைப் பார்த்துவிட்ட அவர் முகத்தில் ஒரு பரவசம்.
“சாமி விருட்சம் அதோ...” என்று அந்த மஞ்சள் கடம்பு நோக்கி ஓடியவர், கீழே இலைகள் உதிர்ந்து தரைப்பரப்பில் தன் கைவசம் உள்ள கடாவெட்டுக் கத்தியால் குத்திக் கிளறி மண்ணைக் கெல்லி ஒரு தட்டளவுக்கு எடுத்தார். பின் தன் வசமுள்ள ஏனங்களில் ஒன்றை எடுத்துக்கொண்டு தண்ணீர் எங்கே கிடைக்கும் என்பதுபோல் பார்க்கவும், ஓரிடம் ஒரு சிறு வாய்க்காலாய் நீரோட்டம். அதில் ஒரு குழியைத் தோண்டவும் அதில் நீர் நிரம்பியது. சில நொடிகளில் குழம்புபோன்ற அந்த நீர் ஓடிவிட சுத்த நீர் தேங்கியது. அதைத் தன் ஏனத்தில் மெல்ல மொண்டு எடுத்து வந்து மண்ணைப் பிசைந்து சிவலிங்கம்போல் ஒரு உருவைப் பிடிக்கலானார்.
“வைத்தியரே... என்ன பண்ணறீங்க?”
“லிங்கம் பிடிக்கறேன்.”
“எதுக்கு?”
“கும்புடத்தான்... போங்க... போய் கண்ணுலபட்ட பூக்களையெல்லாம் பறிச்சு எடுத்தாங்க...”
“எடுத்து வந்து?”
“இந்த லிங்கம்மேல தூவி உழுந்து கும்புடுவோம். இனி நீதான் எங்களைக் கூட்டிப் போகணும்னு கண்ணீர் விடுவோம்...”
“கீழ குற்றால நாதரைக் கும்புட்டுதானே கிளம்பு னோம்?”
Also Read
“அது நேத்து... இப்ப சோதனைல இருக்கோம். நாமல்லாம் கொஞ்சம் நான்கற திமிரோடவும் இருக்கோம். பாஷாணலிங்கம் நமக்குக் கிடைச்சிட்டா அதைப் பெரிய பாக்யமா மட்டும் நினைச்சா பரவாயில்லை. சிலர் அது தனக்கு மட்டும் கிடைக்கணும்னு நினைக்கற மாதிரி தெரியுது. அப்படியே போகர் சாமி நிஜமா இருக்க வாய் பில்லைன்னும் சிலர் நினைக்கற மாதிரி தெரியுது...”
“அதனால?”
“இப்படி சந்தேகமும் சங்கேதமுமா சித்த தரிசனம் பண்ணப்போறது பெருந்தப்பு. ஆன்மிகத்துல அடக்கமும் நம்பிக்கையும்தான் முக்கியம். அது இல்லாதவங்க வெந்ததைத் தின்னுட்டு வேளை வரவும் சாகப்போற சாமான்யப் பொறப்புங்கதான்...”

- மேழிமடையாரின் பதில் உடையாரை லேசாகக் குத்தியது.
“வைத்தியரே, நீங்க என்னைத்தான் சொல் றீங்கன்னு நினைக்கறேன்...” என்றார்.
“ஆமாம்... உங்கள மட்டுமல்ல... உங்களையும் சேர்த்தே சொல்றேன். நீங்க போகர் சாமி இப்ப இருக்க வாய்ப்பில்லேன்னு வாய் விட்டே சொன்ன வராச்சே?”
“நினைச்சதைச் சொன் னேன்... அது எப்படித் தப்பாகும்?”
“அம்மட்டுல சரி... ஆனா நினைக்கறதெல்லாம் சரியா இருக்கும்னு உறுதி தர முடியுமா?”
“இப்பகூடச் சொல்றேன்... இறந்தவங்க பிழைச்சு வந்ததாவோ, இல்லை, சாவே இல்லாம நடமாடறதாவோ நான் புராணக் கதைலகூடப் படிச்சதில்லை...”
“புராணம் வேற... சித்தம் வேற... சித்தன்கறவன் உயிரோட ரகசியமறிஞ்சவன். அதனாலதான் அவனால கூடுவிட்டெல்லாம் கூடு பாய முடிஞ்சது.”
“மடையாரே, வாதம் பண்ணும் நேரமா இது? பெட்டியைக் கைப்பத்தணும். இப்பபோய் இப்படி லிங்கத்தைச் செய்துவிட்டு நேரத்தை வீணடிக்கறது சரியா?”
- இந்தக் கேள்வியை சிதம்பர மாணிக்கம்தான் கேட்டார். மேழிமடையார் சுவரை உற்றுப் பார்க்கலானார்.
“என்ன இப்படிப் பாக்குதீக?”
“வேற எப்படிப் பாக்க... 12 வருஷம் என்னத்த செட்டியாரே நீங்க சாமிய கும்புட்டீர்...?”
“அதுல நான் ஒரு குறையும் வைக்கல வைத்தியரே?”
“பூசையைச் சொல்லல... உங்க புரிதல சொன்னேன்...”
“என் புரிதல்ல என்ன குறை?”
“அந்த லிங்கமும் ஏடுகளும் சாதாரணமில்ல தானே?”
“அதுல என்ன சந்தேகம்?”
“அப்ப அதை ஒருத்தன் உங்ககிட்ட இருந்து திருடிட்டான்னா, அது உங்க கைய விட்டு அவன்கிட்ட போயிடிச்சின்னா உங்க எண்ணத்துல ஏதோ குறைன்னுதானே அர்த்தம்?”
“நீங்க சொல்றதே புரியல... என்கிட்ட என்ன குறை?”
“இப்பகூட சாமி எனக்கு வழிகாட்டுன்னு கையத் தூக்காம தேடுவோம், கண்டுபிடிப்போம். எல்லாம் நம்ப கைலதான் இருக்குற மாதிரியே சிந்திக்கிறீங்களே?”
“என் மனசுக்குள்ள அழுது கும்பிட்டுகிட்டுதான் வைத்தியரே இருக்கேன்...”
“போதாது... இங்க இப்ப கும்பிடுங்க! நம்ப கைல எதுவுமே இல்லைன்னு கைய உதறுங்க... நான் கும்பிடறேன், நான் செய்யறேன்னு நான் நான்னு நினைக்கறத விட்டு வெளிய வாங்க... போங்க... போய் முதல்ல பூக்களைப் பறிச்சிக் கிட்டு வாங்க. இந்தக் காடு அவங்க காடு... நாம இங்க கீழ கிடக்கற ஒரு உதுந்த இலை மாதிரி தான்... சுருக்கமா சொன்னா சரணாகதி பண்ணுங்க... மிச்சத்த அவங்க பாத்துப்பாங்க. இப்பகூட நாம பேசறத ஒரு சித்தர்சாமி கேட்டுகிட்டுதான் இருக்காரு. இதோ இந்த மரம்தான் அந்த சாமி. கீழ அவர் சமாதியாகி மேல மரமாயிட்டாரு.
துணில கொடி பறக்குது பாருங்க... இந்த சாமிய கும்புடறவங்க கட்டின கொடி அது. இந்த சாமி நமக்கு உதவி செய்வாரு. திருடினவங்க இந்தக் காட்டை விட்டுப் போக முடியாது. பொட்டி நம்மளத் தேடி வரும். நீங்க வேணா பாருங்க...”
- மேழிமடையார் பேச்சோடு பேச்சாக லிங்கத்தைப் பிடித்துவிட்டார். கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும் லிங்கம் என்பது தெளிவாகத் தெரிந்தது.
அடுத்த சில நிமிடங்களில் எல்லோரும் போட்டு வணங்கிய பூக்களில் மூழ்கிப்போனது அந்த லிங்கம், மேழிமடையாரிடம் நல்ல வேகம். வணங்கிய வேகத்தில் ஓடிப்போய் ஒரு ஒதிய மரத்தை நெருங்கி அதன் பட்டையைத் தன் கடாவெட்டுக் கத்தியால் வெட்டி எடுத்து வந்தார்.
தரையில் கால் நீட்டிக்கொண்டு மரத்தண்டு ஒன்றன் மேல் முதுகைச் சாய்த்து அமர்ந்திருந்த கரும்பாயிரம் வலியைச் சகித்துக்கொண்டு முகக் கோணல்களில் இருந்தான்.
அவனின் உடைந்த காலைப் பக்குவமாகத் துக்கி, அவன் வேட்டியை விலக்கிய நிலையில் முட்டி பாகத்தைப் பார்த்தார். காயம்பட்டு ரத்தம் கசிந்தபடி இருந்தது. அந்தக் கசிவின் மேல் தேடி எடுத்து வந்திருந்த மூலிகை இலைகளைக் கசக்கி அப்படியே வடைத்தட்டுபோலத் தட்டி அதன் மேல் ஒதிய மரப்பட்டையின் உள் பாகம் படிந்த நிலையில் இறுக்கி, அதைத் தன் தலைப்பாகைத் துண்டாலேயே கட்டிமுடித்தார். அவ்வளவு தான். அப்படியே கரும்பாயிரத்தைத் தூக்கித் தன் தோள்மேல் வைத்துக்கொண்டு அய்யனார் தூக்கிபோல நடக்க ஆரம்பித்தார். நடந்தபடியே பேசினார்.
“எல்லோரும் வாங்க... நம்பிக்கையா வாங்க... நம்ப சாமிங்க கைவிடமாட்டாங்க. நமக்கு இனி நல்லதே நடக்கும்... அவங்க பேரைச் சொல்லி கோஷம் போடுவோம்...
சித்தநாதர்களுக்குன்னு நான் சொல்லவும் அரோகரான்னு சொல்லுங்க. வேற நினைப்பே வேண்டாம்... விறுவிறுன்னு நடங்க. நிச்சயம் நல்லது நடக்கும்...’’ என்று மேழி மடையார் சொல்லி முடிக்கும் முன் ஒரு கறுப்பு நாய் எங்கிருந்தோ அவர்கள் முன் வந்து நின்று ‘வந்துட்டீங்களா?’ என்பதுபோல அவர்களைப் பார்த்தது.
“கறுப்பா... வந்துட்டியா? நீ வருவடா... எனக்குத் தெரியும்” உற்சாகமானார் மேழி மடையார். ஓதுவார் அரோகராவில் கரைந்திருந்தார். சிதம்பர மாணிக்கம் விழிகளில் ஒழுகல்.
உடையாருக்கு அங்கு நடக்கும் ஒவ்வொரு செயலுமே விசித்திரமாய் விநோதமாய் இதற்கு முன் எண்ணிப்பாராததாய் இருந்தது. மேழி மடையாரின் தீர்க்கப்பேச்சு, கால் உடைந்த பின்னும் அவரை விட்டுவிடாமல் கழுத்தில் தூக்கிச் சுமக்கும் வேகம் என எல்லாமே பிரமிப்பைத் தந்தது.
கறுப்பு நாய் முன் ஓடியது... மேழிமடையார் பின்தொடர மற்றவர்களும் தொடர்ந்தனர். உடையாரால் அவர்கள் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. அது என்னவோ அரோகரா சொல்லவும் பிடிக்கவில்லை.
சொகுசாய் வாழ்ந்த வாழ்வும், உடம்பைக் கசக்கியிராத போக்கும் அந்த மலைத் தலத்தில் அவரை மிரட்டியது. ஆங்காங்கே தென்பட்ட பச்சோந்திகள், சிங்கவால்குரங்குகள், மூர்க்கமான காட்டெருமைகள், அதன் பின் முதுகில் அமர்ந்திருந்த கரிச்சான்குருவி என்று வனக்காட்சிகள் அவரை ஈர்த்ததோடு பயமுறுத்தவும் செய்தன.
அந்த வரிசையில் அவர்தான் கடைசியில் நடப்பவராக இருந்தார். அரோகரா கோஷம் மலையை நடுக்கிற்று.
“சித்த நாதனுக்கு அரோகரா...!
சிவகுரு மைந்தனுக்கு அரோகரா...!
பழநி பாலனுக்கு அரோகரா...!
போகர் சாமிக்கு அரோகரா...!”
- கோஷத்தின் எதிரொலி மலைமுகடுகளில் முட்டி மோதித் திரும்பி வந்தது. இடையில் யானைகள் பிளிறும் சப்தமும் சேர ஆரம்பித்தது. கஜகர்ணப் பிளிறல்... ஒன்றுக்கு நான்கு யானைகள் பிளிறின. ஓரிடத்தில் புழுதிமூட்டம் புகைபோல் தெரிந்தது. கறுப்பு நாயும் அந்த இடம் நோக்கிதான் ஓடிற்று.
“என்ன வைத்தியரே... இந்த நாய் யானைங்க இருக்கற பக்கமா போகுது...” என்று சிதம்பர மாணிக்கம் கேட்டார், குரலிலும் நடுக்கம்.
“பயப்படாம வாங்க. கறுப்பன் சரியாதான் கூட்டிப் போறான்...” என்று கரும் பாயிரத்தைச் சுமந்தபடியே முன்னடந்தார் மேழிமடையார். வயதுக்கு மீறின தெம்பு. ஒரு இடத்தில் விடைத்துத் தேங்கி நின்றார். நாயும் குரைக்கத் தொடங்கியது. அது நின்ற இடத்துக்கு அருகில் முற்றாகத் தலை சிதைந்த நிலையில் ஒரு உடல்.
சற்றுத் தள்ளி மரக்கிளைமேல் துணிகாயப் போட்டதுபோல் ஒரு உடல். அதன் வாயிலிருந்து ரத்தம் தரை நோக்கி ஒரு நேர்க்கோடாக சொட்டிக் கொண்டிருந்தது.
இன்னும் சற்றுத் தொலைவில் வயிறு நசிந்து குடல் எல்லாம் வெளிவந்த நிலையில் ஒரு உடல்.
மேழிமடையாரிடம் அதையெல்லாம் காண அச்சம் கலந்த அமைதி. திடும்மென்று திரும்பவும் யானைகளின் பிளிறல். கறுப்பு நாய் குறுக்கில் புகுந்து ஓடிவிட்டு வந்து குரைத்தது. அது ஓடிய ஒரு ஒத்தையடிபோன்ற தடத்தில் மேழி மடையாரும் மெல்ல நடக்கலானார்.
சிறிது தூரம்கூட நடந்திருக்க மாட்டார். ஒரு புதர் அருகே அந்தப் பெட்டி கண்ணில் பட்டது. மேழிமடையார் தன்னையும் மறந்தவராய் “சாமீ.... நீ எங்களக் கைவிடலை...” என்றார் உரத்த குரலில்.
அந்தக் குரல் கேட்டு வந்தவர்களும் பெட்டியைப் பார்த்துச் சிலிர்த்தனர். சிதம்பர மாணிக்கம் பதற்றத்தோடு அதைத் திறந்து பார்த்தார்.
உள்ளே லிங்கத்தோடுகூடிய ஏட்டுக்கட்டுகள் பத்திரமாகவே இருந்தன.
பெட்டியைத் தூக்கிச் சென்றவர்கள் வழியில் எதிர்பாராமல் வந்த யானைகளிடம் சிக்கி உயிரையும் விட்டுவிட, பெட்டி பாதிப்பின்றித் திரும்பக் கிடைத்துவிட்டது.
மேழிமடையாரின் கருத்து மெத்த சரி... கையைத் தூக்கவும்தான் வழி பிறந்துள்ளது... கெந்திக் கெந்தி இறுதியாக வந்து சேர்ந்த உடையாரும் பெட்டியைப் பார்த்து விதிர்ப்படைந்தார். திரும்பவும் யானைகளின் பிளிறல்... நாங்கள் வந்த வேலை முடிந்தது. திரும்பிச் செல்கிறோம் என்பதுபோல் தொலைவில் தேய்ந்து ஒலித்தது அந்தக் குரல்.
“இப்ப என்ன சொல்றீங்க செட்டியாரே?” என்று கேட்ட மேழிமடையாரை கண்ணீர் மல்கக் கட்டிக்கொண்டார் சிதம்பர மாணிக்கம்.
உடையாரிடமும் சிலிர்ப்பும் கண்ணீரும்...!
இன்று காருக்குள் இருந்தபடியே பண்டாரசித்தரையும், நீலகண்ட தீட்சிதரையும் பார்த்த அனைவருக்குமே பிரமிப்பு தட்டி, தூக்கிவாரிப் போட்டது.
காரும் வீட்டு முகப்பில் தேங்கி நின்றது.
ஒவ்வொருவராக இறங்கினர். தீட்சிதர் நிதானமாக அவர்களை ஏறிட்டார். பண்டாரமோ திண்ணையில் போய் ஒரு காலைத் தொங்கப் போட்டபடி அமர்ந்தவராக ஒரு சுருட்டை எடுத்துப் பற்ற வைத்தார்.

நீலகண்ட தீட்சிதர் வாயைத் திறக்கலானார்.
“யார் நீங்கல்லாம்... என்ன வேணும் உங்களுக்கு?”
“இங்க நீங்க யாருன்னு நான் தெரிஞ்சிக்கலாமா?” என்று ஜெயராமன் கேட்க “இவர்தான் என் மதியூகரணில அகப்பட்ட பிராமணர்” என்றார் திவ்யப்ரகாஷ்.
அடுத்த நொடி ஒரு பெரும் சிரிப்பு பண்டார சித்தரிடம்.
அரவிந்தன் அவரை நெருங்கி நின்று அவரையே பார்க்கலானான். அவன் அவரைக் கொஞ்சம்கூட அங்கே எதிர்பார்க்கவில்லை.
பண்டார சித்தரின் சிரிப்பில் வலுத்த ஒரு கேலி.
அரவிந்தன்தான் அதை உடைக்க முற்பட்டான். “சாமி, எதுக்கு இந்தச் சிரிப்பு... ஆமா நீங்க எப்படி இங்க?” என்று கேட்டு முடித்தான்.
“நீ என்னைக் கேக்கறியா... சித்தன் போக்கு சிவன் போக்கு. கேள்விப்பட்டதில்லையா நீ?”
புகையை உமிழ்ந்தபடியே அவர் அலட்சியமாகக் கேட்டார்.
“ஆமா... நீங்கள்ளாம் எதுக்கு வந்திருக்கீங்க?”
- திரும்பக் கேட்டார் நீலகண்ட தீட்சிதர்.
“உங்களப் பார்க்கத்தான்... நீங்கதானே பானுகூட குற்றாலம் போனவர்?”
“ஆமா... அதுக்கென்ன இப்போ?”
“உங்களைப் பாம்பு கடிச்சு உங்களுக்கு எதுவும் ஆகலையா?”
“அது நான் சர்ப்ப வஸ்யம் பண்ணும்போது சகஜமா நடக்கும். அதையெல்லாம் பார்த்தா சர்ப்பங்களைப் பிடிக்க முடியுமா என்ன?”
“இல்ல, உங்களையும் பானுவையும் சர்ப்பம் கடிக்க நீங்க இறந்துட்டதா...” அரவிந்தன் முடிக்க முடியாமல் திணறினான்.
“வாஸ்தவம்தான்... அது எப்படி உங்களுக்குத் தெரியும்? இதோ இந்த சித்த மகான்தான் ஓடி வந்து காப்பாத்தினார் எங்கள... கிட்டத்தட்ட நப்த நாடில ஆறு நாடி அடங்கிடுத்து... எங்க நல்ல நேரம், இந்த மகான் வந்து விஷத்தை முறிச்சு எங்க உசுரைக் காப்பாத்திட்டார்...”
- நீலகண்ட தீட்சிதர் மிக இயல்பாகப் பேசினார். திவ்யப்ரகாஷ் முகம் அதைக் கேட்டு நம்ப முடியாத முக பாவங்களுக்கு ஆட்பட்டி ருந்தது. அப்படியே மனதைக் குவித்து அதெல்லாம் உண்மையா என்று உணர முற்பட்ட அவருக்கு மயக்கம்தான் வந்தது.
பாரதி சாருவோடு காருக்கு வெளியே நின்று மௌனமாகப் பார்த்தபடியே இருந்தாள். சாந்தப்ரகாஷ் அருகில் வந்தவனாக திவ்யப்ரகாஷின் மயக்கத்தைத் தெளிவிக்க முயன்றான். தீட்சிதரோ உள்ளே போய் தண்ணீர் கொண்டு வந்தார். அப்போது ஜெயராமனும் அரவிந்தனும் உள்ளே ஒரு பார்வை பார்த்ததில் திவ்யப்ரகாஷ்ஜி வர்ணித்த அந்த நாக சிற்பம், அதன் முன் மஞ்சளும் குங்குமமும் சிந்திக் கிடந்தன.
திவ்யப்ரகாஷ்ஜியும் மெல்ல மயக்கம் கலைந்து எழுந்தார். அவரைக் கண்ணாயிர பண்டார சித்தர் வெறித்துக் கொண்டே இருந்தார். அந்தப் பார்வையில் ஆயிரமாயிரம் அர்த்தங்கள். அது சாதாரண சராசரிப் பார்வையுமில்லை. அது ஒருவித நேத்ர தீட்சை.
“ஜி... என்னாச்சு?” என்று அரவிந்தன் அவர் தோளைப் பற்றிக் கேட்கையில் காதுவழியாக ரத்தம் கசிய ஆரம்பித்திருந்தது.
“புறப்படு... போய் மருத்துவனை பார்த்து உசுர் பொழைக்கற வழியப் பார். சித்த ஞானம்கறது உபதேசத்தாலயும், தவத்தாலையும்தான் வரணும். ஏட்டைத் திருடி எடுத்தெல்லாம் படிச்சு அதை அடைய முயற்சிசெய்யக் கூடாது. புறப்படு... புறப்படு...”
- பண்டாரத்தின் பேச்சு திவ்யப்ரகாஷ்ஜிக்குப் புரிந்தது. தடுமாறியபடி பண்டாரத்தை நெருங்கியவர். “என்ன மன்னிச்சிடுங்க சாமி... தப்பு பண்ணிட்டேன்” என்றார் நிதானமான குரலில்.
ஜெயராமனுக்கும் அரவிந்தனுக்கும் பாரதிக்கும் அவர் எதனால் அப்படிச் சொல்கிறார் என்றே தெரியவில்லை. சாந்த ப்ரகாஷும் குழம்பினான். பண்டாரமோ அவனை அருகில் அழைத்தார். முகத்தில் புகையை ஊதிவிட்டுச் சிரித்தார். அவன் கையால் விசிறிவிட்டுக்கொண்டான்.
“பாட்டன் பேரை வெச்சிருக்கே... ஆனா பாட்டன் மாதிரி நடக்காமப் போயிட்டியே... நியாயமா?” என்றார். சாந்தப்ரகாஷ் புரியாமல் பார்த்தான்.
“பரவால்ல... வாச்சவ மகாலட்சுமி - அதான் திருத்திக் கூட்டிட்டு வந்திருக்கா. இப்பவும் ஒண்ணும் கெட்டுப்போயிடல. புறப்படு, பாட்டன் சமாதிக்குப் போ. மத்ததெல்லாம் தானா நடக்கும், போ... போ...”
சாந்தப்ரகாஷ் சற்றுத் தயங்கி நின்றான். திவ்யப்ரகாஷ் அவன் தோளில் கையைப் போட்டவராய் “வா சந்தா.... மிச்சத்த நான் சொல்றேன். நாம இப்ப நம்ப ஜமீன் பங்களாக்குப் போறோம். அங்க நமக்கு ஒரு அதிசயம் காத்திருக்கு...” என்று அவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு கார் நோக்கி நடந்தார்.
ஜெயராமனுக்குள் ஒரே பரபரப்பு... பூடகமாக அங்கே நடப்பதை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. பானு என்ன ஆனாள்? லிங்கம் மற்றும் ஏடுகள் என்னாயிற்று? போலீஸ் வந்ததா இல்லையா?
ஜெயராமனுக்குள் கேள்விகள் குறுகுறுத்திட்ட நிலையில் காரை நெருங்கிய திவ்யப்ரகாஷ்ஜி திரும்பி ஜெயராமனிடம் வந்தார்.
“ஜெயராம்ஜி... நான் கிளம்பறேன். தப்பா எதுவும் நடந்திடலை. பெரிய தப்பை இந்த சித்தர் தடுத்து நிறுத்திட்டார். இப்போதைக்கு என்னால இவ்வளவுதான் சொல்ல முடியும். நான் வரேன்...” என்றார்.
அடுத்த சில நொடிகளில் அவர்கள் கார் மட்டும் புறப்பட்டுச் சென்றது.
ஜெயராமனும் அரவிந்தனும் அநியாயத்துக்கு விழித்தனர். பாரதிக்கும் நடப்பதெல்லாம் குழப்பமாக இருந்தது. அதைத் தெளிவித்துக் கொள்ள வேண்டி தீட்சிதரைக் குடையத் தொடங்கினாள்.
“சாமி நீங்களும் பானுவும் குற்றாலத்துல ஒரு பெட்டியில் இருந்து திருடினீங்களா இல்லையா?” என்று நேராகவே கேட்டாள்.
“ஆமாம்மா... திருடினோம்” தீட்சிதர் துளிகூடத் தயக்கமின்றிப் பேசினார்.
“இப்ப எங்க அந்தப் பெட்டியில இருந்த ஐட்டமெல்லாம்?”
“அதெல்லாம் ஜமீனுக்கே திரும்பிப் போயிடித்துமா.”
“எப்படிப் போச்சு... யார் வந்து வாங்கிக்கிட்டுப் போனாங்க?”
“அது சரி... இதையெல்லாம் நீ எதுக்கும்மா கேக்கறே?”
“அந்தப் பெட்டிக்கு நானும் ஒரு விதத்துல சொந்தக்காரி. என் வீட்லயும் அது இருந்தது...”

“ரொம்பக் கொடுத்து வெச்சவம்மா நீ. அந்த லிங்கத்தை ஒரு தடவ பார்க்கவே நிறைய புண்ணியம் பண்ணியிருக்கணும்.”
“எனக்கு அந்த விளக்கமெல்லாம் தேவை யில்லை. இப்ப பானு எங்க?”
“அவ வீட்ல இருப்பா...”
“உங்களையும் அவளையும் பாம்பு கடிச்சது உண்மையா?”
“ஆமாம்மா... இவர்தான் சஞ்சீவினி மூலிகையால எங்களைக் காப்பாத்தினார்...”
“பெட்டியில டூப்ளிகேட்டை வெச்சதெல்லாம் உங்க வேலைதானா?”
“அது பானுவோட வேலை...”
“அவளோட நீங்களும் கூட்டு சேர்ந்துதானே செயல்பட்டீங்க?”
“ஆமாம்மா... போகரோட லிங்க தரிசனத்துக்காகத் தப்பு பண்ணிட்டேன்.”
“இதெல்லாம் சப்பைக் கட்டு. உங்க வயசுக்கும் தகுதிக்கும் நீங்க அப்படி நடக்கலாமா?”
“கூடாதும்மா... நான் பண்ணுனது தப்புதான்! மனசார அதுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்...”
“உங்க மன்னிப்பு யாருக்கு வேணும்... அந்த லிங்கம் ஏடுகள்ளாம் இப்ப எங்க?”
“அதான் சொன்னேனே... அது ஜமீனுக்கே திரும்ப போயிடித்துன்னு... நல்லவேளை அது போன பிறகுதான் போலீஸ் வந்தது. வீட்டை சோதனை பண்ணிப் பாத்துட்டு ஏமாற்றத்தோடு திரும்பிப் போயிட்டாங்க...”
“சரி, யார்கிட்ட கொடுத்து விட்டீங்க... எப்படிப் போச்சு?”
- பாரதி அடுத்தடுத்து கேட்க, அமைதியாக சுருட்டு பிடித்தபடி இருந்த கண்ணாயிர பண்டார சித்தர்.
“பாப்பா... அவனை விட்று... என்கிட்ட கொஞ்சம் இப்படி வா” என்றார்.
- பண்டார சித்தர் அழைப்பு அவளை அவர் பக்கம் திரும்பியது. அவர் பார்வை ஜெயராமன் மற்றும் அரவிந்தன்மேலும் சென்றது.
அது அவர்கள் இருவரையும் என்னவோ செய்தது.
“என்ன... உண்மை எது, பொய் எதுன்னு தெரியணுமா?” அவர் நிறுத்தி நிதானமாய்க் கேட்ட கேள்வி ஜெய ராமனுக்கும் புரிந்தது.
“இல்ல சாமி... இப்ப சந்தேக மெல்லாம். எனக்கில்லை” என்றார். துளியும் குழப்பமின்றிப் பேசுவதுபோல் இருந்தது.
“போகனைப் பார்க்க ரொம்பவே ஆசைப்பட்ட போல இருக்கே?”
“ஆமாம்... இந்த நொடி அந்த ஆசை எனக்கு அடங்கலை...”
“அப்படியா?”
“உங்களப் பத்தி அரவிந்தன் நிறைய சொல்லியிருக்கார். உங்கள நாங்க இங்க எதிர் பார்க்கவே இல்லை. நீங்க இங்க வந்து இவங்களக் காப்பாத்தி, அந்த லிங்கம் ஏடுகளையும் சேர்க்க வேண்டிய இடத்துல சேர்த்துட்டதுல சந்தோஷம்.
நாங்களும் அந்த ஜமீன் தம்பதிகளோடு மலைக்குப் போறோம். எங்களுக்கு உத்தரவு கொடுங்க” என்று புறப்பட முனைந்தார் ஜெயராமன்.
“கட்டாயம் நீ போகத்தான் வேணும். ஏன்னா உன்கிட்டதானே மூலத்தோட நிழல் இருக்கு...’’ என்று பொடி வைத்து பதிலினைச் சொன்னார் பண்டார சித்தர். அவர் எங்கே வருகிறார் என்று அரவிந்தனுக்கும் புரிந்தது, பாரதிக்கும் புரிந்தது.
சகல ஏடுகளையும் போட்டோ ஸ்கேன் எடுத்துத் தன் லேப் டாப்புக்குள் பாது காப்பாய் அடைத்து வைத்தி ருப்பதும் அப்போது ஞாபகத்துக்கு வந்தது.
அப்போது பார்த்து அவன் கைப்பேசிக்கு அழைப்பு.
ஒரு நிமிடம் என்று ஒதுங்கி, காதைக் கொடுத்தான். பாரதி அப்பா ராஜா மகேந்திரன் தான் பேசினார்.
“எழுத்தாளரே, நான் எம்.பி பேசறேன்...”
“நீங்களா... இப்ப எப்படி சார் இருக்கீங்க?”
“எதுக்கு இந்தக் கர்ட்டசி யெல்லாம். நான் நல்லா இருக்கேன். எதுக்குக் கூப்பிட்டேன்னும் சொல்லிட றேன்... உங்ககிட்ட போகரோட ஏடுகள் அவ்வளவும் போட்டோ காப்பியா இருக்கறது எனக்குத் தெரியும். அதுக்கு நூறு கோடி தர சிலர் தயாரா இருக்காங்க... என்ன சொல்றீங்க?” அரவிந்தன் விக்கித்தான்!
- தொடரும்.