மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இறையுதிர் காடு - 39

Iraiyuthir kaadu
பிரீமியம் ஸ்டோரி
News
Iraiyuthir kaadu

அன்று கருவூரார் செப்புச்சிலையைத் தங்கமாக்கித் தருகிறேன் என்று சொன்னதைக் கேட்டு வியந்த புலிப்பாணி,“பெருமானே... தாங்கள் நிஜமாகவா கூறுகிறீர்கள்?” என்று கேட்டான்.

“ஒரு சித்தனுக்கு எப்போதும் ஒரு பேச்சு தானப்பா... அதை நீ இன்னமுமா உணர்ந்திருக்கவில்லை?”

“இல்லை பெருமானே... ரசவாதம் குறித்து போகர் பிரானிடம் எவ்வளவு பேசினாலும் அவர் பிடியே கொடுக்க மாட்டார். எங்கள் கொட்டாரத்தில் மூன்று தமிழ்க் கிழார்கள் உள்ளனர். அவர்களுக்கும் ரசவாதத்தின் மேல் மிகுந்த ஈடுபாடு. ஆனால் அவர்களை அவர் ஊக்கப்படுத்தியதே இல்லை. அதை அறிவதும் எமனை அறிவதும் ஒன்று என்பதுபோல் எண்ணுகிறார் போகர் பிரான்.”

“உண்மைதான் புலி! ரசவாதத்தை ஒரு சித்தனைத் தவிர வேறு எவனும் அறிய முடியாது. அப்படி அறிந்த சித்தனால் சித்தனல்லாத ஒருவருக்கு அதைக் கற்பிக்க முடியாது. மீறி ஒருவேளை கற்பித்துவிட்டால் கற்றுக்கொண்டவர் நெடுநாள் உயிர்வாழ முடியாது.”

“அது அத்தனை ஆபத்தான கலையா?”

“ஆமப்பா... ஒரு உயிர், மனிதனாகப் பிறப்பதே பிறவித்தளையிலிருந்து விடுபடுவதற்காகத்தான். ஆனால், ஆசாபாசங்களில் சிக்கிக்கொண்டு விடுபடும் வழி தெரியாமல் தொடர்ந்து கர்மப் பிறப்பெடுக்கின்றவர்களாகவே எல்லோரும் உள்ளனர். லட்சத்தில் ஒருவன்தான் தன்னையறிய முயன்று, பிறந்த பிறப்பைச் சரியாகப் பயன்படுத்தி, பிறவித்தளையிலிருந்து விடுபடுகிறான். மற்றவர்கள் சிக்கிக்கொள்பவர்கள் - அதிலும் இந்த ரசவாதம் பெரும் பேராசை வகையைச் சார்ந்தது...”

“வாழத்தானே வாழ்க்கை... இதில் ஆசாபாசங்கள் எப்படித் தவறாகும்? ஆசைகளில் பேராசை, சிறிய ஆசை என்கிற வகைப்பாடு - சரியானதா?”

“ஆம்... வாழத்தான் வாழ்க்கை. ஆசாபாசங்களிலும் தவறில்லைதான்! ஆனபோதிலும் இந்த வாழ்க்கை ஒரு பெரும் மாயையப்பா...”

“மாயை என்று போகர் பிரானும் கூறுவார். மாயை என்றால் எதுவுமில்லாதது என்பதே பொருள். இருப்பதுபோன்றது - ஆனால் எதுவுமில்லாதது. இங்கே என்வரையில் நான் இருக்கிறேன் - நீங்களும் இருக்கிறீர்கள்... இதோ இந்த மலைக்குகை... இப்போது நாம் பேசிக்கொண்டிருப்பது என்று எல்லாமே இருப்பவையே... அப்படியிருக்க இதில் எதை மாயை என்கிறீர்கள்?”

“எல்லாமே மாயைதான்... நான் இருந்தாலென்ன - நீ இருந்தாலென்ன... இல்லை, இந்தச் செங்கானும், ஆழிமுத்துவும்தான் இருந்தாலென்ன..? நாம் கண்களை மூடிக்கொண்ட நொடி இவை மறைந்துவிடுகிறதல்லவா?”

“ஆமாம்...”

“அதேபோல் நாம் உறங்கும்போது இவையெல்லாம் இருக்கிறதா இல்லையா?”

“இருக்கிறது, ஆனால் உறங்குபவர் வரை இல்லாதுபோகிறது...”

இறையுதிர் காடு - 39

“நான்தான் முன்பே சொன்னேனே... இது இருக்கட்டும்... இருக்கும்... இதை உணர்வது நமது மனமாகிய அறிவே... இந்த அறிவிருப்பதாலேயே இது இருப்பதுபோல நாம் எண்ணுகிறோம். இல்லையா?”

“ஆமாம்...”

“ஆகமொத்தத்தில் நாம் இருந்தாலே இவை இருப்பதை உணர முடியும்... நாம் இல்லாத நிலையில் இவை இருப்பதும் இல்லாததும் ஒன்றுதானே?”

“ஆமாம்..”

“அப்படியானால் நாம் இருக்கப்போய்தான் எல்லாமே இருக்கிறது - இல்லையா?”

“ஆமாம்...”

“நாம் நிரந்தரமானவர்களா?”

“புரியவில்லை...”

“நாம் அழியாமல் அப்படியே இருப்பவர்களா?”

“இல்லை... நொடிக்கு நொடி மாறியபடி இருக்கிறோம்.”

“ஒவ்வொரு நொடியும் காலம் முதுமைக்கு நம்மை இழுத்துச் சென்று ஒரு நாள் நமது உடல் பிணமாகி, பின் அதுவும் மண்ணோடு மண்ணாகி விடுகிறதல்லவா?”

“ஆம்.”

“இதற்கு விதிவிலக்காய் ஒருவராவது உள்ளாரா?”

“இல்லவே இல்லை...”

“போகட்டும்... இப்போது உன் வயது என்ன?”

“முப்பத்திரண்டு.”

“நேற்று வரையிலான உன் வாழ்வு என்பது என்ன... வெறும் நினைவுகள்தானே?”

“ஆமாம்.”

“இந்த நினைவுகளும் காலத்தால் மறந்துவிடக்கூடியதுதானே?”

“ஆமாம்.”

“ஒரு கேள்வியைக்கூட உன்னால் மறுக்க முடியவில்லை பார்த்தாயா?”

“இப்படிக் கேட்பதன் மூலம் நீங்கள் எதை உணர்த்த விரும்புகிறீர்கள் பெருமானே?”

“நடந்து முடிந்த அவ்வளவும் வெறும் நினைவு. நடக்கப்போவதும் நினைவே! இந்த நினைவும் மறந்துவிடக்கூடியது... ஆக எதுவும் மிச்சமில்லை. உடலும் நொடிக்கு நொடி மாறி ஒரு நாள் மண்ணோடு மண்ணாகப் போகிறது. இப்படி வாழும் வாழ்க்கையை மாயை என்று கூறாமல் வேறு எப்படியப்பா கூறுவது?”

- கருவூரார் முத்தாய்ப்பாகக் கேட்ட கேள்வி முன் ஆழ்ந்த மௌனத்தையே புலிப்பாணியால் வெளிப்படுத்த முடிந்தது. ஆனால் ஆழிமுத்துவுக்குள் பளிச்சென்று ஒரு கேள்வி.

“குருசாமியே...”

“சொல்லப்பா...”

“இந்த வாழ்வில் நீங்கள் கேட்ட கேள்விகளை வைத்துப் பார்த்தால் எதுவுமே இல்லைதான். ஆனால் இப்படிப்பட்ட மாய வாழ்க்கை வாழும் மனிதர்களுக்காக போகர் பிரான் மட்டும் எதற்காகக் கோயில் கட்டுகிறார்? எல்லாமே மாயை என்னும்போது இந்தக் கோயிலும் மாயைதானே?” - ஆழிமுத்து தெரிந்து கேட்டானா, இல்லை, தெரியாமல் கேட்டானா என்று தெரியவில்லை. ஆனால் அவன் கேள்வியை கருவூரார் மிகவே ரசித்தார். அதன் விளைவாய்ச் சிரித்தவர் “நீ ஆழமாக யோசிக்கத் தொடங்கி விட்டாய். ஆனால் அவசரப்படுகிறாய். கோயில் என்பது மாயை அல்ல. அதிலும் தண்டபாணித் தெய்வத்திற்கான கோயில், மாயையைத் தெளிவிக்கும் கோயில்.

தண்டபாணியை முருகனாகவும் பார்க்கலாம், ஒரு சித்த சன்யாசியாகவும் பார்க்கலாம். குருவாகவும் பார்க்கலாம். இப்படி அவனைப் பலவாறு பார்க்கலாம். பார்க்கும் கோணத்திற்கேற்ப ஞானமளிப்பவன் அவன்.அவன் உருவை அச்சில் வார்க்கப்போகிறாய் அல்லவா? அதுவே ஒரு நல்வினைப்பாடுதான். அப்படிச் செயல்படும்போது நீ இப்போது கேட்ட கேள்விக்கான பதிலை எவரும் சொல்லாமலே உணர்வாய்.”

- கருவூரார் மிகத் தெளிவாக நிறுத்தி நிதானமாய் பதில் கூறினார். செங்கானும் கேள்வி கேட்க விரும்பினான்.

“குருசாமியே... நாங்கள் சாமானியர்கள். கருமார் ஜாதியில் பிறந்துவிட்டதால் வார்ப்புத் தொழில் எங்கள் தொழில் என்றாகிவிட்டது. இதைத்தவிர வேறு எதுவும் எங்களுக்குத் தெரியாது. மற்றபடி பசிப்பதால் உண்டு, தூக்கம் வருவதால் தூங்கி எழும் வாழ்க்கையே எங்கள் வாழ்க்கை. இப்படிப்பட்ட நாங்கள் உங்களைப்போல ஆவது என்பதைக் கற்பனைகூடச் செய்துபார்க்க முடியவில்லை. நாங்கள் இப்படி வாழ்வதற்கும், நீங்கள் இப்படி இருப்பதற்கும் எது காரணம்?”

“முன்வினைப்பாடுதான் காரணம்.”

“அப்படியானால் இப்பிறப்பில் நாங்கள் இப்படியேதான் இருக்க வேண்டுமா?”

“எப்போது இப்படிக் கேட்கும் அறிவு வந்துவிட்டதோ அப்போதே மாற்றம் வந்து விட்டதாகத்தான் பொருள். உன் எண்ணத்தின் வலிமைக்கும், சிந்தனைத்தெளிவிற்கும் ஏற்ப உன் வாழ்வில் மாற்றங்கள் ஏற்படும்.

எங்களுக்குச் சிற்பசாத்திரம் என்றால் உனக்குக் கால ஞானம்... உண்மையில் இந்த வாழ்வில் அறிந்துகொள்ளவும் புரிந்து கொள்ளவும்தான் எத்தனை விஷயங்கள், எத்தனை விஷயங்கள்..!

ஆனாலும் ஒன்று சொல்கிறேன். நாம் ஆண்டியாக இருந்தாலும் சரி, அரசனாக இருந்தாலும் சரி, வாழ்வது என்பது மனம் சார்ந்த ஒன்றே. இந்த மனமாகிய சித்தம் நமக்குக் கட்டுப்பட்டதாக இருக்க வேண்டும். அதற்குக் கட்டுப்பட்டவர்களாய் நாம் உள்ளவரை விமோசனமில்லை. பசிக்கு உணவு, நோயில்லா உடல், அன்பான உறவுகள், நிம்மதியான உறக்கம், உயிர்தரும் நட்பு, பக்தியுள்ள மனம், பிறர் துன்பம் உணரும் கருணை உள்ளம் இந்த ஏழும்தான் மாயை மிகுந்தவாழ்வின் மகத்தான செல்வங்கள். இந்த ஏழுக்கும் குலம் வேண்டாம்; கோத்திரம் வேண்டாம்; பணம் வேண்டாம், பதவியும் வேண்டாம். மனம் என்கிற ஒன்றும் அதில் தெளிவும் இருந்துவிட்டால் போதும், எக்குலத்தில் பிறந்திருந்தாலும் உலகம் போற்றும் மனிதனாய் வாழமுடியும்.” - கருவூரார் அமர்ந்திருந்த நிலையினின்றும் எழுந்து நிற்கலானார். அதுவே அவர் விடைபெறவிருப்பதைச் சொன்னது. கருமார்களும் புரிந்துகொண்டனர்.

“உங்கள் புத்திமதிகளை என்றும் மறக்கமாட்டோம்” என்றனர்.

“புலி... போகர்பிரானிடம் நம் சந்திப்பைக் கூறு. நான் இங்கிருந்து சதுரகிரி செல்கிறேன். அங்கே சில காலம் யோகத்தில் ஆழ்ந்திட விரும்புகிறேன். எனக்கு இனி பிறப்பில்லை. அதேவேளையில் இந்த விதேக உடம்பை இறை சமர்ப்பணமாக்கி இல்லாதுபோவதே என் நோக்கம். நான் இல்லாது போனாலும் நான் எழுப்பிய ஒலியானது வரிவடிவம் எனும் எழுத்தாகி அழியாப்பெருவாழ்வு வாழ்ந்தபடி இருக்கும்.

தண்டபாணித் தெய்வத்தின் பிரதிஷ்டையின் போது ஆகம நெறிகளில் ஏதும் தெளிவு வேண்டினால் ஓடிவந்து உதவச் சித்தமாயிருக்கிறேன். உனக்கு என் நல்லாசிகள். அருமைக் கருமார்களே உங்களுக்கும் என் நல்லாசிகள்” - என்று மறைய விழைந்தவரை வேகமாய்த் தடுத்தான் செங்கான்.

“குருபிரானே... குருபிரானே...”

இறையுதிர் காடு - 39

“என்னப்பா?”

“செப்புச்சிலையைத் தங்கமாக்கித் தருவதாகச் சொன்னீர்களே...”

“செப்புச்சிலையைச் செய்துவிட்டு என்னைத் தீர்க்கமாய்ச் சிந்தியுங்கள். நான் திரும்ப வருவேன். உங்கள் விருப்பத்தை ஈடேற்றுவேன். நான் சொன்னால் சொன்னதுதான்...”

“எங்களுக்கு அந்த வித்தையைக் கற்பிப்பீர்களா?”

“நீங்கள் சித்தனாவீர்களா?”

“அதைக் கற்க சித்தனாக வேண்டுமென்றால் ஆகிறோம்.”

“சித்தனாவது விடுதலை சார்ந்த விஷயம்... ஆசை சார்ந்ததல்ல... தீர்க்கமாய் யோசியுங்கள். முதலில் வந்த காரியத்தைப் பாருங்கள்... அடுத்து ஒரு முக்கியமான விஷயம்... சிலைகளை வார்க்கும் நீங்கள் அறியாததல்ல... நம் உடல் அசையும் திசுக்களால் ஆனது - சிலையுடல் அசையாத் திசுக்களால் ஆவது. நாம் அசைவதால் வளர்ந்து தேய்ந்து முடிந்துபோகிறோம். சிலைகள் அசையாததால் அவை அழிவின்றி அப்படியே உள்ளன. அசையும் நம் உடலின்கண் உள்ள சக்தியைப் போலவே, அசையாச் சிலை உடம்புக்குள்ளும் ஒரு சக்தி உண்டு. அந்த சக்தியை வகைப்படுத்திய சமூகத்தவர் நம் சமூகத்தவர்... இச்சா சக்தி, க்ரியா சக்தி என்னும் இருபிரிவில் நம் விருப்பங்களை நிறைவேற்ற உதவும் சக்தி இச்சா சக்தி. நம் செயல்பாடுகளைச் சிறப்பாக்குவது க்ரியா சக்தி.

உங்கள் செப்புச்சிலை இந்த சக்தியில் எதைச் சேர்ந்தது என்பது முக்கியம். அதற்கேற்ற ஆகமம் மிக முக்கியம். பொற்சிலைகள் சக்தி அதிகம் மிக்கவை... அதைத் துலக்கத் தவறினால் காற்றுப்பாசியும் தூசியும் படிந்து பொன்னாய் இருந்தும் இல்லாதுபோகும். துலக்கினாலோ தேயத்தொடங்கும். நம் அசையும் உடலின் தேய்மானம்போலவே அதுவும் ஆகிவிடும். அடுத்து காண்பவர் கண்களுக்கு எப்போதும் உலோகம் தெரியக் கூடாது. தெய்வம்தான் தெரிய வேண்டும். பொற்சிலை வரையில் பொன்தான் முதலில் தெரியும் - பிறகே தெய்வம் தெரியவரும். இதனால் தோஷங்கள் உருவாகக் கூடும். ஆசை நிமித்தம் களவாடும் எண்ணம் தோன்றக்கூடும். தோன்றும் எண்ணத்தை வலிமைப்படுத்துவதே சிலைகளின் சக்தி. களவாட வேண்டும் என்று எண்ணுபவனுக்கான வலிமையை அந்தச் சிலையேகூட தரக்கூடும்! இப்படிப் பொற்சிலைகளின் பின்புலத்தில் சிந்தித்துச் செயலாற்ற ஏராளமான விஷயங்கள் உள்ளன. எனவே அனைத்தையும் சிந்தித்து, பின் அதற்கேற்ப சிலை செய்யுங்கள்.”

- மெல்ல நடந்தபடியே குகைவாயில் வரை வந்து அங்கு நின்றபடி கருவூரார் சொன்ன அவ்வளவும், ஏன் பொற்சிலைகள் வழிபாட்டில் இல்லை என்பதற்குப் பதிலாகவும், சிலைகள் என்பவை ஜடப்பொருளல்ல என்பதையும் புலிப்பாணிக்கு உணர்த்திவிட்டது.

கருமார்கள் இருவரும் அதைக் கேட்டு ஆழ்ந்த சிந்தனையில் இருந்தனர். புலிப்பாணி அவர்களை அர்த்தமுள்ள ஒரு பார்வை பார்த்துவிட்டுத் திரும்பினால், கருவூரார் இல்லை. அவரது ஒளியுடல் மறைந்துவிட்டிருந்தது.

“என்ன ஆழிமுத்து... செங்கான்... நீங்கள் சிலைகள் செய்யும் பின்புலத்தில் இவ்வளவு சங்கதிகளா? எனக்கு மலைப்பாக உள்ளது.”

“ஆம் புலி... எங்களுக்கே வியப்புதான்! ஏன் எங்கும் பொற்சிலைகள் பெரிதாய் வழிபாட்டில் இல்லை என்பதற்குக் கருவூரார் விடையளித்து விட்டார். அடுத்து உலோகத்துக்கேற்ற ஆகமம் உண்டு. பொற்சிலைக்கான ஆகமத்தை நாங்களேகூட அறிந்திருக்கவில்லை என்றே கூறுவேன்.”

“அப்படியானால் என்ன செய்யப்போகிறீர்கள்?”

“கருவூரார் கூறியதுபோல வந்த வேலையை முதலில் பார்க்கிறோம். பாக்கியம் மிகுந்த பணியல்லவா இது...”

“நல்லது. இங்கே நீங்கள் முதலில் ஓய்வெடுங்கள். வார்ப்புக்குரிய பொருள்களைச் சேகரித்து வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு உதவி செய்ய சிப்பந்திகள் தேவைப்பட்டால் சொல்லுங்கள்.”

“யாரும் தேவையில்லை. ஆனால் போகர் பிரானின் வழிகாட்டுதல் எங்களுக்கு மிக முக்கியம். அவர் எங்களைக் காண வருவாரல்லவா?’’

“நிச்சயம் வருவார். இது அவரது தியானக் கூடம். இனிதான் எல்லாமே உள்ளது. உங்கள் பணியைத் தொடங்க நான் உகந்த காலகதியைக் கணித்துச் சொல்கிறேன். செவ்வாய் ஹோரையில் தொடங்கினால் சுறுசுறுப்புக்குக் குறைவிருக்காது, புதன் ஹோரையில் கணித்தபடி நடக்கும், வியாழன் ஹோரை தவறே நடவாமல் பார்த்துக்கொள்ளும். சுக்கிர ஹோரை களைப்பைத் தந்து ஓய்வெடுக்கச் செய்யும். இப்படி ஹோரைகள் அவ்வேளையிலான கிரகாதிபத்தியத்துக்கு ஏற்ப நமக்கு உதவி செய்யும்.”

“அருமை... எங்களுக்குச் சிற்பசாத்திரம் என்றால் உனக்குக் கால ஞானம்... உண்மையில் இந்த வாழ்வில் அறிந்துகொள்ளவும் புரிந்து கொள்ளவும்தான் எத்தனை விஷயங்கள், எத்தனை விஷயங்கள்..!”

- ஆழிமுத்து வியந்து சிலிர்த்தான். “நல்லது நண்பர்களே... நீங்கள் வார்ப்புக்குரிய பொருள்களைச் சேகரியுங்கள். நான் புறப்படுகிறேன். இனி நடக்கும் அவ்வளவும் நலமாய் நடக்கட்டும். எங்கே சொல்லுங்கள் பார்ப்போம், வாழ்க போகர்பிரான் கொற்றம்.”

“வாழ்க போகர்பிரான் கொற்றம்.”

“வளர்க சித்தர் நெறி...”

“வளர்க சித்தர் நெறி...”

- அவர்கள் கூறிமுடிக்க, புலிப்பாணி புறப்படலானான்!

இறையுதிர் காடு - 39

இன்று பாரதி திவ்யபிரகாஷ் சொன்னதைக் கேட்டு பலத்த ஆச்சர்யத்தை முகத்தில் பிரதிபலித்தாள். அந்த ஆச்சர்யம் அரவிந்தனிடமும் ஜெயராமனிடமும்கூட வெளிப்பட்டது.

“மிஸ்டர் யோகி... உங்களோட இந்த பதில் உண்மையில் எங்களுக்குப் பெரிய சர்ப்ரைஸ். இதை நீங்க பாரதியை அட்ராக்ட் பண்றதுக்காகச் சொல்லலியே..?”

“என்ன எடிட்டர் சார்... இப்படி ஒரு கேள்வியைக் கேட்டுட்டீங்க? எனக்கு யாரையும் அட்ராக்ட் பண்ண வேண்டிய தேவையோ, அவசியமோ கொஞ்சமும் கிடையாது. என் மனசுல பட்டதைச் சொல்றதுதான் வழக்கம்!”

“ஐ ஆம் சாரி... சில நேரங்கள்ள சில கேள்விகளை என்னால தவிர்க்க முடியல. அதனால கேட்டேன். தப்பா எடுத்துக்காதீங்க. ரியலா உங்க பதில் பாரதிக்கு ஒரு புதுத் தெம்பையே தந்திருக்கு..” - ஜெயராமன் பாரதியின் முகத்தைப் பார்த்துக்கொண்டேதான் பேசினார்.

“ரொம்ப சந்தோஷம்... இதுவரை இந்த மாதிரி எனக்குத் தோணிய எந்த விஷயமும் பொய்யானதில்லை. இதுவும் பொய் ஆகாது. இது நிச்சயம் சதிவேலைதான்! எப்ப இது சதின்னு முன்னாலயே தெரிய வந்துடுச்சோ அப்பவே எம்.பி சார் பிழைச்சுக்கவும் வாய்ப்பிருக் கறதாதான் அர்த்தம். உங்க குரல் மூலமா உங்க தொடர்பையும், ஏற்கெனவே நான் பாரதியைச் சந்திச்ச நினைவுத் தொடர்புகளை வெச்சும் என் மனோசக்தியை நான் பயன்படுத்தினதுல இவ்வளவுதான் தெரிய வந்திருக்கு. போகப்போக எந்த உதவின்னாலும் செய்யத் தயாரா இருக்கேன்.

இன்னொரு முக்கியமான விஷயத்தையும் தெரிவிச்சுக்கறேன். பாரதி இனி ஒரு சப் எடிட்டரா உங்க பத்திரிகையில வேலை பார்க்க மாட்டா. அவ வாழ்க்கை மாறத் தொடங்கிடிச்சு... அவ மூலமா பல அதிசயங்கள் இந்த விஞ்ஞான உலகத்துல பதிவாகப்போகுது.”

``அந்தக் குமாரசாமி இங்க ஆவியா நடமாடினார்ங்கற விஷயம்... அதை நான் கொஞ்சம் மாத்தி ஆவி வேஷத்துல நடமாடின்னு சொல்ல விரும்பறேன்.”

“மிஸ்டர் யோகி திவ்யபிரகாஷ்... உங்க இந்த ப்ரடிக்ஷன் ஒரு பக்கம் இருக்கட்டும். முதல்ல சதிகாரன் யார்னு கண்டு பிடிக்கறோம். ஆமா, சதின்னு சொல்லத் தெரிஞ்ச உங்களால அது யார்னு சொல்ல முடியாதா?”

“இப்ப முடியாது... குமாரசாமி ஆத்மாங்கறது பொய்! அந்தப் பொய்யான ஆத்மாவை ஒருவேளை பாரதி பார்க்க முடிஞ்சா, அப்படிப் பார்த்த பிறகு என்கிட்ட பேசினா அது யார்னு எனக்குத் தெரிய வரலாம்.”

“ஓ.கே. நாங்களும் ஹாஸ்பிடலை நெருங்கிட்டோம். அவசியப்பட்டா கூப்பிடுறோம். பை...”

“பாரதிக்கு என் வாழ்த்துகள்...” - யோகி திவ்யபிரகாஷும் மறுபக்கம் முடித்துக்கொள்ள, இதெல்லாம் எந்த வகை சக்தி என்கிற கேள்வியோடு அரவிந்தன் காரை ஹாஸ்பிடல் பார்க்கிங் ஏரியாவுக்குள் செலுத்தி, சரியான இடம் பார்த்து நிறுத்த முயன்றான்.

ஏராளமான கார்கள்! பார்க்கிங் மார்க்குக்குள் சிலர்தான் சரியாக நிறுத்தியிருந்தனர். இந்தியா ஏழைநாடு என்றால் நம்புவது கடினம் என்பது போல எல்லாவித பிராண்டட் கார்களும் கண்ணில் பட்டன.

மூவரும் இறங்கி முன் வாசல் வழியாக லிஃப்ட் மூலம் முதல் தளத்தில் இருக்கும் ராஜா மகேந்திரனின் வார்டு நோக்கி வேகமாய் நடந்தனர். வழியில் நிறைய உதிர்ந்த ரோஜா இதழ்கள் இறந்துவிட்ட இருவரையும் ஞாபகப்படுத்தின... அங்கங்கே சில போலீசார்!

“நல்லவேளை எம்.பி. சார் அட்மிட் ஆன இந்த ஹாஸ்பிடல்ல எஸ்.ஐ சாரையும் அட்மிட் பண்ணது நல்லதாப்போச்சு. இல்லன்னா இங்க ஒரு ஃபோர்ஸ், அங்க ஒரு ஃபோர்ஸ்னு அல்லாடிக்கிட்டிருந்திருப்போம்” என்று இரு இளநிலை போலீஸ்காரர்கள் பேசியது காதில் விழுந்தது.

“எஸ்.ஐதான் தன்னையும் இங்கேயே அட்மிட் பண்ணச் சொல்லியிருக்கார்.

எம்.பி-யைப் பாக்கவர்ற வி.ஐ.பிங்க அப்படியே இவரையும் பாக்க வருவாங்கல்ல..?”

“விவரமான பார்ட்டிதான். ஆனா என்ன புண்ணியம், போயில்ல சேர்ந்துட்டார்...”

- பாரதிக்கும் அரவிந்தனுக்கும் அமானுஷ்யம் என்று நினைக்கச் செய்த கேள்விகளில் சிலவற்றுக்குப் போகும்போதே விடை கிடைத்து விட்டது.

மூவரும் வருவதைப் பார்த்து கணேசபாண்டியன் ஓடி வந்தார். பக்கத்துக் கடிகாரத்தில் மணி இரவு ஒன்பதரை என்று காட்டிக்கொண்டிருந்தது.

“வாங்க பாப்பா... வாங்க... அய்யா, வணக்கங்க.”

“அண்ணே, அப்பாவை இப்ப பாக்க முடியுமா?”

“இல்லம்மா... சிங்கப்பூர்ல இருந்து ஏதோ மருந்து வரவும், அதைக் கொடுத்து மயக்கத்துலதான் இருக்கார்...”

-கச்சிதமாய் அப்போது ஒரு டாக்டர் கிராஸ் செய்யவும் “டாக்டர்...” என்று பாரதியே தடுத்தாள்.

“யெஸ்...”

“அப்பாக்கு எப்படி இருக்குன்னு தெரிஞ்சிக்கலாமா?”

“நீங்க எம்.பியோட டாட்டரா?”

“ஆமா.”

“ஐ ஆம் சாரி... டாக்டர் வேணு கோபால்தான் உங்க ஃபாதருக்கான டாக்டர். நான் இந்த வேங்கையன்கற கொலை முயற்சி கேஸை அட்டெண்ட் பண்ணிட்டு வரேன். ஐ டோன்ட் நோ த கரன்ட் கிரிட்டிகல் சிச்சுவேஷன் எபௌட் யுவர் ஃபாதர்...”

“அப்ப வேங்கையன் பத்தி உங்களுக்கு எல்லாம் தெரியும்தானே?”

“உங்களுக்கு இந்த கேஸ்ல என்ன தெரியணும்?”

“நல்லா ரெக்கவர் ஆகிக்கிட்டிருந்த அவன் எப்படி இறந்தான்?”

“சீ... நல்லால்லாம் ரெக்கவர் ஆகலை. இங்க வந்து அவன் சேரும்போது உடம்புல ரத்தமே இல்லை. டோட்டல் லாஸ்ட்! நாங்க இந்த கேஸை எடுக்கமாட்டோம், ஜி.எச்-தான் ரைட் சாய்ஸ்னு சொன்னோம். ஆனா போலீஸ் டிபார்ட் மென்ட்லயே டாப்லெவல்ல இருந்து பிரஷர் கொடுத்து, கடைசில இங்க அட்மிட் பண்ணினோம்.

இறையுதிர் காடு - 39

பை த பை, நான் இப்ப ஆஃப் த ரெக்கார்டா உங்ககிட்ட பேசறேன். நீங்க இதை வெளிய சொல்லி ஒரு எம்பாரஸ் சிச்சுவேஷனை உண்டாக்கிடாதீங்க...”

“நோ டாக்டர்... எனக்குத் தேவை ஒரு விஷயம்தான்! அவன் கொலை முயற்சியால தான் காப்பாத்தப்பட முடியாம இறந்தானா, இல்லை பயத்தாலயாங்கறதுதான்...”

“நான் பக்கத்துல இல்லம்மா... அது எனக்குத் தெரியாது. நான் வந்து பார்க்கும்போது சுவாசமே இல்லை. இட்ஸ் ஒன் கைண்ட் ஆஃப் அட்டாக். மே பீ அது பயத்தாலகூட இருக்கலாம்.”

“அட்லாஸ்ட் ஒரே ஒரு கேள்வி... இந்த ஹாஸ்பிடல்ல ஆவி நடமாடினதா சிலர் ஃபீல் பண்றாங்க. டு யூ பிலீவ் தட்?”

“ஐ ஆம் ஸாரி... இட்ஸ் எ வெரி சில்லி கொஸ்டின்! இந்த ஹாஸ்பிடல் ஒரு அப் கமிங் ஹாஸ்பிடல்! பல பெரிய ஹாஸ்பிடல்ல இல்லாத பல சௌகர்யங்கள் இங்க இருக்கு. ஜப்பான்ல இருக்கற ஒரு டாக்டர் இங்க வராம அங்க இருந்துகிட்டே ரோபோ மூலமா இங்க இருக்கற பேஷன்ட்டுக்கு ஆபரேஷன் பண்ண முடியும். இதை எல்லாம் பார்த்து பொறாமைல யாராவது எதையாவது கிளப்பி விடலாம். முதல்ல வாஸ்து சரியில்லன்னு கிளப்பி விட்டாங்க. அப்புறம் அதிகம் சார்ஜ் பண்றதா சொல்லிப் பார்த்தாங்க... இப்ப ஆவிகிட்ட வந்திருக்காங்கபோல?”

“தேங்க்யூ டாக்டர்.”

-அவர் விலகிக்கொள்ள பாரதி அடுத்து கணேச பாண்டியனைத்தான் பார்த்தாள். அவர் திருதிருவென விழித்தார். அப்படியே நடந்து சென்று விசிட்டர் அறை - நாற்காலிகளில் அமர்ந்துகொண்டனர்.

“டாக்டர் சொன்னதைக் கேட்டிங்கல்ல?” - என்று பாரதியும் ஆரம்பித்தாள்.

“பாப்பா... நீங்க இங்க இருக்கற நர்ஸுங்க கிட்டயும் செத்துப்போன வேங்கையன் உறவுக்காரங்க கிட்டயும் கேட்டுப்பாருங்க. இவர் இப்படித்தான் சொல்வார். ஆமா, ஆவி நடமாட்டம் இருக்குன்னா அப்புறம் இந்த ஆஸ்பத்திரிக்கு யாரும்மா வருவாங்க...?”

“அண்ணே... அந்த எஸ்.ஐ-யும் சரி, வேங்கையனும் சரி, குமாரசாமி மாதிரி யாரையோ பார்த்திருக்காங்க. குமாரசாமி ஆவியை இல்லை. அவங்களோட இயலாத சூழ்நிலைல வெளில சொல்ல முடியாம தவிச்சுத் தடுமாறியிருக்காங்க. அதுவே அவங்க சாகவும் போதுமானதா இருந்திருக்கு. இதுதான் இங்க நடந்திருக்கணும்.”

நறுக்குத்தெறித்த மாதிரி சொல்லி முடித்தாள் பாரதி.

“அப்படின்னா அந்த நபர் என் கண்ல பட்டிருக்கணுமேம்மா?”

“உங்க கண்ல படாம ரொம்ப சாமர்த்தியமா அந்த நபர் ஒரு ஆவி மாதிரி தன்னை நம்ப வெச்சிருக்கான்னு ஏன் சொல்லக் கூடாது!”

“என்னப்பா சொல்றீங்க... இதெல்லாம் சினிமாவுக்கு சாத்தியமாகலாம். நடைமுறையில எப்படிம்மா சாத்தியமாகும்?”

“ஆகியிருக்கு... ஆகிக்கிட்டேயிருக்கு... முதல்ல அப்பா, எஸ்.ஐ. வேங்கையன்கற மூணு பேருக்கு நடந்த ஆக்ஸிடென்ட், அடுத்து ஒரே ஹாஸ்பிடல்ல இவங்க அட்மிட் ஆனது, அடுத்து அவங்கள ஆவி பயமுறுத்தினது... இந்த மூணுல எனக்கு ஒரு கேள்விக்கு இங்க உள்ள நுழைஞ்ச உடனேயே பதில் கிடைச்சிடிச்சு. எஸ்.ஐ தனக்கும் நல்ல ட்ரீட்மென்ட் கிடைக்கணும்னு ஆசைப்பட்டதோட, எம்.பி-யைப் பார்க்க வர்ற பலரும் தன்னைப் பார்த்துப் பரிதாபப்படணும்னு நினைச்சு விரும்பித்தான் இங்க சேர்ந்திருக்காரு.

இறையுதிர் காடு - 39

எல்லா விஷயத்துலயும் இவங்க கூட்டாளியான வேங்கையன் தன் எதிரிகளால வெட்டுக் குத்துக்கு ஆளாகவும் நல்ல ட்ரீட்மென்ட்டுக்கு ஆசைப்பட்டு அவனும் இங்க வர விரும்பி, மேல் மட்டத்துல பிரஷர் கொடுத்து இங்க வந்துட்டான். சோ... ஒரு கேள்வி ரூல்டு அவுட்! அடுத்து நடந்த ஆக்ஸிடென்ட்ஸ்...! நிச்சயமா அது தற்செயல் விபத்தா இருக்க சான்ஸ் இல்ல. இது என் இரண்டாவது முடிவு. மூணாவது, அந்தக் குமாரசாமி இங்க ஆவியா நடமாடினார்ங்கற விஷயம்... அதை நான் கொஞ்சம் மாத்தி ஆவி வேஷத்துல நடமாடின்னு சொல்ல விரும்பறேன்.”

- பாரதி பேசிமுடித்தவளாக அரவிந்தன், ஜெயராமன் என்று இருவரையும் பார்த்தாள்.

“நீ சரியாத்தான் செக்ரிகேட் பண்ணியிருக்கே பாரதி” என்றான் அரவிந்தன்.

“அப்ப ஒண்ணு பண்ணலாமா?” - என்று கேட்ட ஜெயராமன், அங்கு அமர்ந்திருந்த நிலையில் நிமிர்ந்து சிசிடிவி கேமராவைப் பார்த்தார்.

“புரியுது சார்... இந்த ஃப்ளோர்ல இருக்கற சிசிடிவி கேமராப் பதிவுகளை க்ராஸ் செக் பண்ணினா அந்தக் குமாரசாமி மாதிரி நடமாடி பயமுறுத்தின நபர் தெரியவரலாம்னு நினைக்கிறீங்க...”

“அஃப்கோர்ஸ்... ஒய் நாட்?”

“செர்ட்டன்லி சார்... இது ஒரு நல்ல முடிவு.”

“பாப்பா... அப்ப எல்லாமே மனுஷங்க வேலை தானா?”

“ஆமாண்ணே... தைரியமா இருங்க... அந்த நபரைப் பிடிச்சுடலாம்.”

“எனக்குத் தெரிஞ்சு உலகத்துலயே பெரிய கிரிமினல் நம்ப அய்யாதான்... அவருக்கே ஒருத்தன் அல்வா கொடுக்க இருக்கான்னா நம்ப முடியலம்மா.”

“உங்களால இதைத்தானே நம்ப முடியல... எங்கள சுத்தி ஒரு ரெண்டு மூணு நாளா எவ்வளவு நம்ப முடியாத விஷயங்கள் தெரியுமா?”

- பாரதி கேட்ட விதத்தில் ஒரு கோபமும் தாபமும் பளிச்சென்று தெரிந்தது. அப்போது டாய்லெட் நோக்கிச் செல்ல எத்தனித்த அரவிந்தன் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் ஒரு இடத்தில் தங்களையே ஒருவன் வெறித்துப் பார்த்துக்கொண்டிருப்பதைப் பார்க்கவும் ஹக்கென்றது!

- தொடரும்