மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இறையுதிர் காடு - 80

இறையுதிர் காடு
பிரீமியம் ஸ்டோரி
News
இறையுதிர் காடு

எப்படியோ அந்தப் பழக்கம் மட்டும் கல்லூரி நாளிலிருந்தே தொற்றிக்கொண்டுவிட்டது.

அன்று

உடையார் முகத்தில் துளித்த பரவசக் கண்ணீரைத் துடைத்து விட்டார் மேழிமடையார். அப்படியே, “இப்ப நான் சொல்றத நம்பறீங்களா? பாருங்க. அரோகரா சொல்லி ஓடிவரவும் கருப்பனும் வந்தான். வழியையும் காட்டினான். பொட்டியும் திரும்பக் கிடைச்சிடுச்சு” என்றார்.

“உண்மைதான்... எனக்கு இந்த அனுபவங்கள் புதுசு. நான் பட்ணம்தான். எனக்கு என் பட்ணம் சந்தேகப்படத்தான் சொல்லிக்கொடுத்திருக்கு. நம்பிக்கை வைக்கச் சொல்லியே தரலை.”

“இனி நான் எது சொன்னாலும் நம்புவீங்க தானே?”

“நிச்சயமா... வாதையான சூழல்ல ஒருத்தர் எப்படி நடந்துக்கறாருங்கறத வெச்சிதான் நான் எப்பவும் முடிவுசெய்வேன். கரும்பாயிரம் கால் உடைஞ்சு நடக்கமுடியாமப் போனநிலைலேயும் அவனை நீங்க கைவிடலை. வேலைக்காரன்னும் பார்க்காம உங்க தோள்ல தூக்கிக்கிட்டீங்க பாருங்க... அங்கதான் நான் உங்களைப் புரிஞ்சுக் கிட்டேன். எல்லாத்துக்கும் மேலா நம்ம கைல எதுவுமில்லைன்னு விழுந்து கும்பிடச் சொன்னதுதான் உச்சக்கட்டம்!”

“உடையாரே, உமக்கு போகர் சாமி தரிசன விதி இருக்குங்க. அதான் அப்பப்ப மனம் சொணங்கினாலும், எப்படியோ எங்ககூட நடந்து வந்துட்டீங்க” என்று சிதம்பர மாணிக்கம் தட்டிக்கொடுக்கலானார். ஓதுவாரோ பெட்டிக்குள் இருக்கும் ஏட்டுக்கட்டுகளைச் சரியாக இருக்கிறதா என்பதுபோல ஒரு பார்வை பார்க்கலானார். சொர்ண ஜால மகாத்மியத்தில் ஓர் ஏடு எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அது ஓதுவார் முகத்தில் அதிர்வாக எதிரொலித்தது.

“என்ன வேய்?”

“அய்யா, ஒரு ஏட்ட காணோம்?”

“அப்படியா... எதைவெச்சு சொல்றீரு?”

“பாருங்க... ஏட்டோட எழுதப்பட்ட பாகத்தைக் காணோம்” - துவாரமுள்ள பக்கம் ஓர் அங்குல அளவு வெறும் ஏடாகக் கிழிந்து காட்சி தந்தது. அதைப் பார்த்த சிதம்பர மாணிக்கம்...

“அட பாவி... குறிப்பிட்ட ஏட்ட மட்டும் உருவி எடுக்கப் பார்த்திருக்காங்க. அது கிழிஞ்சு கைக்கு அகப்பட்டிருக்கு” என்று பதைத்தார் சிதம்பர மாணிக்கம்.

“இந்த ஏட்டுக்கட்டோட சிறப்பென்ன?”

“இதுதான் தங்கம் செய்யற முறையைச் சொல்லித்தரும் ஏடு...”

“அடடே ரசவாத ரகசியமா?”

“ஆமாம்... அதுல எந்த மூலிகையை எப்படிச் சேர்க்கணும்கற கணக்கைச் சொல்ற ஏடு அது!”

“இதைச் சரியா ஒருத்தன் எடுத்திருக்கான்னா, அவன் நிச்சயம் சித்த வைத்தியனாதான் இருக்கணும். ஏடு படிக்கத் தெரிஞ்சவனாவும் இருக்கணும்.”

இறையுதிர் காடு
இறையுதிர் காடு

“இப்போ என்ன பண்ண... மத்த ஏடுங்க பத்திரமா இருக்கா?”

“இருக்கு... அதுகளை பிரிக்கல! வெச்சது வெச்ச மாதிரி அப்படியே இருக்கு.”

“அப்போ இதை மட்டும் எடுத்துப் பிரிச்சுப் படிச்சிருக்காங்களா?”

“ஆமாம்... ரசவாத ரசசியத்த தெரிஞ்சிக்கத்தான் திருடியிருக்காங்க.”

“ஒருவேளை செத்துக் கிடக்கறவங்க ஜேபியில (பாக்கெட்) இருக்குமோ?”

“இடுப்புலகூட கட்டி வெச்சிருக்கலாம். இருங்க போய்ப் பார்த்துட்டு வரேன்.”

மேழிமடையார் திரும்பி ஓடினார். காட்டுக்குள் கடந்துவந்த மூன்று பிணங்களையும் நசிவுகளுக்கு நடுவில் நின்று உற்று நோக்கினார். மூவருமே அறுபது வயது கடந்தவர்கள். தங்கம் மேல் உள்ள அவர்கள் ஆசையே அவர்களை பங்கப்படுத்தி விட்டது. மனிதர்கள் வரையில் நவ துவாரங்கள் வழியாகவே உயிர் பிரியும். இதில் வாய் வழி மத்திமம், குதவழி அதமம், கபால வழி உத்தமம். இவர்களுக்கு எதன் வழி உயிர் போயிற்றென்றே தெரியவில்லை. மரத்தில் தொடங்கிக் கொண்டிருந்தவரின் உடலை காலைத் தொட்டு இழுக்கவும் சொத்தென்று விழுந்து உருண்டு போயிற்று அந்த உடம்பு. அதன் இடுப்புக் கச்சவேட்டி மடிப்பில் அரைஞாண் கயிறும் தாயத்தும்தான் இருந்தது.

இன்னோர் உடலின் வயிற்றுப் பாகத்தில்தான் யானை மிதித்திருந்தது. ரத்தக்கூழாகக் கிடந்த பாகத்தைச் சிறுகுச்சி கொண்டு புரட்டிப் பார்த்ததில், அங்கேயும் ஏடு இல்லை. மூன்றாவது மனிதனிடமும் இல்லை.

அதற்குள்ளாகவே காட்டு நரிகளும் கூகைகளும் அங்கு கூடத் தொடங்கிவிட்டன. விசுக்கென்று கண்ணில்பட்ட நரியும், கிளை ஒன்றில் தழைய வந்து அமர்ந்த கூகையும், மேழிமடையாருக்குள் ஒரு வகை பரிதாபத்தைத்தான் ஏற்படுத்தின. அவர் நகர்ந்த மாத்திரத்தில் பிணங்களை அவை பிய்த்துக் குதறிவிடும்.

மனித உடம்பு முழுமையாக மண்ணுக்குள் அடங்க வேண்டும். இல்லாவிட்டால் எரி சாம்பலாகி நீரில் கரைய வேண்டும். முற்றும் துறந்த சன்யாசி உடம்பு மட்டும்தான் துஷ்டப் பிராணி போஜனமாகலாம்.

மற்ற உடம்புகள் ஆவதென்பது பெரும் ஆத்மாவஸ்தையை ஏற்படுத்திவிடும்.

ஒரு விநாடி நின்று யோசித்தவர், பலத்த குரலில் சிதம்பர மாணிக்கத்தையும் ஓதுவாரையும் அழைக்கலானார். அவர்கள் வரும்போது அவர்களோடு உடையாரும் வந்தார். வந்தவர்கள் தூரத்திலேயே நின்றனர்.

“என்னாச்சு வைத்தியரே... இருந்திச்சா?”

“இல்ல செட்டியாரே. இங்கே இந்தப் பிரேதங்களை இப்படியே விட்டுட்டுப் போறதும் சரியாப்படலை.”

“என்ன சொல்லுதீக?”

“குழியைத் தோண்டி புதைச்சுட்டுப் புறப்படுவோம்கறேன்.”

“அய்ய... அந்தக் காரியம் இப்ப நமக்கெதுக்கு?”

“தப்பு... நாம இப்படியே விட்டுப்போனா நரியும் கழுகும்தான் திங்கும். பாருங்க அங்கே ஒரு நரி தயாரா இருக்கறத.”

மேழிமடையார் கைகாட்டும்போது இன்னொரு நரியோடு சில காட்டு நாய்களும் வந்துவிட்டிருந்தன.

“தின்னா தின்னுட்டுப் போகட்டும்... திருட்டுப் பசங்கதானே?” என்று கேள்வி எழுப்பினார் சிதம்பர மாணிக்கம்.

“தப்பு செட்டியாரே. தப்பு மட்டுமல்ல... பெரிய பாவமும்கூட. என்னடா இப்படிச் சொல்றேனேன்னு நினைக்காதீங்க. திருமூலத்தேவர் வாக்க நினைச்சுப் பாருங்க. உள்ளம் கோயில் ஊனுடம்பு ஆலயம் கள்ளப்புலன் அஞ்சும் காளா மணிவிளக்குன்னு சொல்றார். உடம்பு கோயிலாம்... அப்படிப்பட்ட கோயிலை, நாயும் நரியும் திங்க விடலாமா?”

“என்ன செய்யணும்கறீங்க?”

“ஒண்ணா போட்டு எரிச்சிடுவோம்.”

“வைத்தியரே, நாம சித்த தரிசனம் பண்ண வந்திருக்கோம். கேதத்துக்கு இல்ல!”

“ஆனா, அது நாம போற வழியில நம்ம முன்ன வந்து நிக்குதே?”

“நீங்க என்னதான் சொல்ல வர்றீங்க?”

“அதான் சொன்னேனே எரிச்சிடுவோம்னு.”

“எனக்கு என்னவோ சரியாப்படலை. பொட்டி கிடைச்சும் பிரயோஜனமில்ல. முக்கியமான ஏட்டைக் காணலை. அதைக் கண்டுபிடிச்சி ராத்திரி, மேல போகர் சாமிகிட்ட ஒப்படைக் காட்டி அவ்வளவுதான்.”

அவர்கள் தர்க்கம் செய்துகொண்டிருக்கும் போது, ஒரு நரி மெல்ல அருகில் வந்து வயிற்றுச் சதையில் வாயை வைக்கப் பார்த்தது. மேழிமடையார் மிக வேகமாய் ஒரு கல்லை எடுத்து, அதன்மேல் எரியவும் விசுக்கென்று மறைந்தது.

“பெட்டி கிடைச்ச மாதிரி ஏடும் திரும்பக் கிடைக்கும். தைரியமா இருங்க. தேங்கி நிக்காம உடம்புங்கள இழுத்து ஒண்ணா ஒரே இடத்துல போட்டு, சுள்ளி, விறகுகளைப் பொறுக்கிப் போட்டுத் தீ வைப்போம். அப்புறம் புறப்படுவோம்” என்று சுள்ளிகளைப் பொறுக்கத் தொடங்கினார்.

இறையுதிர் காடு
இறையுதிர் காடு

வேறு வழியின்றி எல்லோரும் சுள்ளி மற்றும் மலைக்குச்சிகளைப் பொறுக்கிவந்து, ஒரு செம்பட்டை நிலத்தில் அந்த உடல்களை இழுத்துப்போட்டு மூடி, தீயையும் வைத்ததில் தயக்கமின்றிப் பற்றிக்கொண்டது அந்தச் சிதை. அதைப் பார்த்தபடியே இருந்தார் உடையார். அவர் மனதுக்குள் மேழிமடையார் மேலே உயரே உச்சியிலே என்று ஏறிக்கொண்டே இருந்தார்.

“எங்கையோ பொறந்து, இங்க வந்து யானைக் காலால செத்து, என் கையால கொள்ளி வாங்க ணும்னு இவங்க தலைல எழுதியிருக்கும்போது அதை யாரால மாற்றமுடியும்?” என்று கேட்டபடியே, ஓரிடத்தில் அமர்ந்திருந்த கரும்பாயிரத்தைப் போய்த் தூக்கிக்கொண்டார்.

அவன் நெளிந்தான். அவன் கண்களில் கசிவு.

“ஏன்லே அழுவறே? முட்டி ரொம்பவும் நோவுதா?”

“இல்ல... உங்கள நான் சுமக்கணும். ஆனா, என்னை நீங்க சுமக்கறீங்க. உங்க பெரிய மனச நினைச்சேன்.”

“என்ன மனசோ... நோயாளிகளப் பாத்துப் பாத்து எனக்கு அலுத்துப்போச்சு. எத்தனை ரோகம்? எவ்வளவு கோரம்? ஹூம்... என்ன உடம்போ இது? இதை ஜெயிச்சாதான் நான் பரம்பரை வைத்தியன்கறதுக்கே அர்த்தம்” - நடந்தபடியே முதல்முறையாக தன் லட்சியம் எது என்பதைக் கோடு காட்டினார் மேழிமடையார்.

“வைத்தியரே... முதுமையிலிருந்து இளமைக்குத் திரும்பற ரகசியமும் இந்தப் பெட்டிக்குள்ள இருக்கு” என்று உடனே அதற்கொரு பதிலைச் சொன்னார் சிதம்பர மாணிக்கம்.

“தெரியும்... நல்லாவே தெரியும். அந்த ரகசியம் மட்டுமா இதுக்குள்ள இருக்கு? நம்ம காலக் கணக்கு பூராவும் இதுக்குள்ள இருக்கறது எனக்குத் தெரியும்.”

“அப்போ அதெல்லாம் வேணும்கறதுக் காகத்தான் சாமிய பார்க்க வர்ரீங்களா?” என்று இடையிட்டுக் கேட்டார் உடையார்.

“அதுக்காகவும்னு சொல்லலாம். ஆனா, சாமி உத்தரவு தராம எந்த ஏட்டையும் எடுத்துப் படிக்கக் கூடாதுதானே?” - இது ஓதுவாரின் கேள்வி.

“ஆமாம்... சுருக்கமாச் சொல்லப்போனா, பூமியோட அழிவுக் காலத்துல இருந்து நம்மோட மரணம் எப்போங்கற எல்லா ரகசியங்களுக்கும் விடை இதுக்குள்ள இருக்கு. தங்கம் செய்யப் பயன்படற ‘சொர்ண ஜால மகாத்மியம், எப்ப என்ன நடக்கும்கறதுல இருந்து, யார் ஊருக்கு ராஜாங்கறது வரை சகலத்தையும் சொல்ற `த்ரிகாலப் பலகணி’, எந்த வியாதிக்கு எந்த மருந்துன்னு சொல்ற ‘வைத்ய சிகாமணி,’ ‘ருணரண விமோசனம்’ நடப்பு காலத்தைப் புட்டுப் புட்டு வைக்கற `தசாபுத்தி பலன்’, காட்டோட சிறப்பைச் சொல்ற ‘வனமகோத்சவம்!” காணாமல்போன பொருள் எங்கே இருக்குன்னு கண்டுபிடிச்சுச் சொல்ல முடிந்த ‘கருடப் பார்வை’ - இப்படி இதுல உள்ள ஒவ்வொரு ஏட்டுக் கட்டுமே ஒரு பொக்கிஷத்துக்கு சமம்” என்று அதைப் பட்டியலிட்ட சிதம்பர மாணிக்கம், “இப்ப அந்த முக்கியமான ஏடு காணாமப்போச்சே... நாம என்ன பண்ண?” என்று இறுதியாக ஏட்டில் வந்து முடித்தார்.

ஓதுவார் தலைமேல் பெட்டி வழக்கம்போல அமர்ந்திருக்க, அவரும் இணைந்தவராக, “இப்ப எனக்கும் அதுதான் கவலை. பெட்டி கிடைச்ச மாதிரியே அதுவும் கிடைச்சுடணும். இல்லன்னா ஒச்ச மேற்பட்டு, போகர் சாமி கோபத்துக்கு நாம ஆளாக வேண்டியிருக்கும்” என்று முடித்தார்.

“கவலப்படாம வாங்க... நம்ம கரும்பாயிரம் சொன்ன மாதிரி நாலு பேர் வந்திருக்காங்க. அதுல மூணு பேர்தான் யானைகளால இறந்திருக்காங்க. ஒருத்தனக் காணோம். அவன்தான் பெட்டிய தூக்கிட்டு ஓட முடியாதுன்னு பெட்டிய போட்டுட்டு, அந்த ஒரு ஏட்ட எடுத்துக்கிட்டு போயிருக்கணும். பாவம் அவன். இவங்களாவது யானையால சில நொடிகளில் இறந்துட்டாங்க. அவன் என்ன கதி ஆகப்போறானோ?” என்ற மேழிமடையாரின் நம்பிக்கை, உடையாருக்கு வியப்பைத் தந்ததோடு கூடவே ஓர் எண்ணத்தையும் ஏற்படுத்திற்று.

இறையுதிர் காடு - 80

“வைத்தியரே... இந்த ஏடுகள்ல கருடப் பார்வைங்கற ஏடு காணாமப்போனதைக் கண்டு பிடிக்கப் பயன்படற ஏடுன்னு சொன்னீங்களே. அந்த ஏட்டை வெச்சுக்கிட்டு நாம ஏன் கஷ்டப்படணும்?’’ என்று கேட்கவும், சிதம்பர மாணிக்கம் முகத்தில் அந்தக் கிழிந்த ஏடு கிடைத்துவிட்டது போலவே ஒரு மகிழ்ச்சி.

“ஆமாம் வைத்தியரே... கைல வெண்ணெய வெச்சுக்கிட்டு எதுக்கு நெய்க்கு அலைஞ்சுகிட்டு?” என்று பதிலுக்கு ஆமோதித்தார். மேழிமடையார் சிந்திக்கத் தொடங்கினார். வழித்தடத்தில்கூட ஒரு தேக்கம். திசையறிவதில் சிறிதாய் ஒரு குழப்பம். மனிதர்கள் நடந்து நடந்து உருவான தடயங்கள் துளியும் இல்லாத பாதையில் எதைவைத்துப் பயணிப்பது?

சூரியன் உச்சிக்கு வந்தபடி இருந்தான். வானத்திலும் மேகத் துணுக்குகள் இல்லாத துப்புரவு. பருந்துகள் மட்டும் வட்டமடித்துக் கொண்டிருந்தன.

“என்ன வைத்தியரே யோசனை?”

“சாமிகிட்ட அனுமதி இல்லாம ஏடுகளை யாரும் படிக்கக் கூடாது இல்லையா?”

“ஆமாம்.”

“இதுநாள் வரை அப்படித்தானே இருந்து வந்திருக்கீங்க?”

“அதுல என்ன சந்தேகம்?”

“இப்ப மட்டும் அதுல ஏன் மாறணும்?”

“முக்கியமான ஏடு போயிடிச்சே? அது களவு போயிடிச்சு சாமின்னு போகர் சாமிகிட்ட சொல்லவா?”

“அவர் அனுமதி இல்லாமத் திறந்து பார்க்கறதுக்கு இது எவ்வளவோ மேல் இல்லையா?”

“அதுவும் சரிதான்...” என்று சிதம்பர மாணிக்கம் அரை மனதாய் ஆமோதித்தார்.

“சத்தியமா இப்படி எல்லாம் நடக்கும்னு நான் நினைக்கவே இல்லை. காலைல ஒரு பொணம். இப்போ ஒண்ணுக்கு மூணு பொணங்க. இந்தப் பொழுது இப்படியா விடியணும். நான் என் மனசரிஞ்சு ஒரு தப்புப் பண்ணலியே வைத்தியரே!” - குரல் உடைந்து பேச்சில் கமறல். கண்களிலும் கண்ணீர்.

“நல்லா வருத்தப்படுங்க. அழுவறதும் நல்லதுதான். கர்மம் கரையட்டும். நிச்சயம் சாமிங்க நல்ல வழியக் காட்டுவாங்க. அந்த ஏட்டை எடுத்துக்கிட்டு அப்படியெல்லாம் யாரும் எதையும் செய்துட முடியாது” என்று நம்பிக்கை அளித்தார் மேழிமடையார்.

உடையாருக்கு இப்படித் தொட்டுத் தொட்டு பிரச்னைகள் வருவது ஒருபுறம் ஆச்சர்யமளித்திட, அந்த அடர் வன மலைமேல் தான் அத்தனை தூரம் ஏறி நடந்தபடி இருப்பதே ஒரு பெரும் சாதனைபோலத் தோன்றியது.

ஓதுவார் பெட்டியைக் கர்மசிரத்தையாகச் சுமப்பது ஒருபுறம் சற்றுப் பரிதாபத்தை உருவாக்கியது. தான் சற்று சுமந்து அவருக்கு ஓய்வளிக்கலாமா என்றும் ஓர் எண்ணம் ஓடிற்று. அதைச் சுமக்க முடியாமல் சரிவில் விழ நேரிட்டால் அவ்வளவுதான் என்றும் தோன்றிற்று. அவ்வளவு சம்பவங்களையும் டைரியில் எழுதும் எண்ணமும் தோன்றியது.

எப்படியோ அந்தப் பழக்கம் மட்டும் கல்லூரி நாளிலிருந்தே தொற்றிக்கொண்டுவிட்டது. கல்லூரியில் வகுப்பெடுத்த இன்னொசன்ட் தாமஸ் என்கிற ஆங்கிலேய பேராசிரியர்தான் டைரி எழுதும் பழக்கத்தைத் தூண்டிவிட்டவர்.

‘டைரி எழுதுவது ஒரு கலை. இதனால் எழுத்தாற்றால் அதிகரிக்கிறது. காலத்தைத் திரும்பிப் பார்த்து அந்த நாளைய நாஸ்டால்ஜியாவில் திளைக்க முடியும். டைரி ஒரு சரித்திரமும்கூட. இந்த உலகம் எழுத முடிந்தவனைத்தான் பதிவுசெய்து வைத்துக்கொள்கிறது. பெரும் செல்வந்தனோ, பேரழகனோ, அழகியோ, விளையாட்டு வீரனோ அவர்கள் வாழும் நாளில் மதிக்கப்படுவர்.

ஆனால், ஒரு புலவனோ, எழுத்தாளனோ, உலகம் உள்ளவரை மதிக்கப்படுவார்கள்.’ இப்படி அவர் சொன்னதும் ஞாபகத்தில் வந்தது. கூடவே, இனி எதை எழுதி என்ன பயன்? நாம் என்ன குடும்பம் குட்டி என்றா வாழப்போகிறோம்? வேண்டாம் அந்த வாழ்க்கை’ என்று நினைத்த வேகத்தில் அழித்துக்கொண்டார்.

‘ஒருவேளை நிஜமாலுமே போகர் இருந்து, அவரைச் சந்திக்கவும் நேர்ந்து, அவரால் ஒரு விடிவு தன் ஜமீனுக்குப் பிறக்கக் கூடுமோ?’ என்றொரு நம்பிக்கையும் மெல்லத் துளிர்விட்டது.

மொத்தத்தில் மனதுக்குள் ஒரே அலைமோதல். ‘தன் வாரிசு இவ்வேளை அந்த அலிமாதாவின் அரவணைப்பில் இருப்பான். நான் ஓர் அப்பாவாய் அவனை நினைத்துப் பார்ப்பதைப் போல அவன் நினைத்துப் பார்ப்பானா?’ என்றும் கேட்டுக்கொண்டவர், அதன் நிமித்தம் அவன் நினைவால் உண்டான கண்ணீரைச் சுண்டி விட்டுக்கொண்டார். அதை மேழி மடையாரும் கவனித்தார்.

“என்ன உடையாரே... நடக்க சிரமமா இருக்குதா? ராஜாவாட்டம் லாகிரியா இருந்திருப்பீக. இப்ப இப்படித் தனியா மலை ஏற வேண்டி வந்துடுச்சே. என்னடா வாழ்க்கை இதுன்னு மனசு நினைச்சு வருந்துறீரா?”

“இல்ல... நான் இப்ப நடக்கறத நினைச்சே வருத்தப்படல. திடும்முன்னு என் மகன் நினைப்பு வந்துடுச்சி... ஒரு அரவாண் கூட்டத்தோடயும் சேர்ந்துட்டான். இந்நேரம் அங்கே அவன் என்ன செய்துகிட்டிருப்பானோன்னு நினைச்சேன். மனசு கட்டிப் போயிடிச்சுங்க.”

இறையுதிர் காடு
இறையுதிர் காடு

“ஹூம்... எல்லாம் உம்ம தலைமட்டு! கவலப்படாதீரும். போகர் சாமி நல்ல வழிகாட்டுவார். நம்பிக்கையோட வாங்க” என்றார்.

அப்போது கலவையான மூலிகை வாசனை எங்கிருந்தோ வந்து மூக்கை நிரடியது.

“குருவே... என்ன இது வாசனை?” என்று ஓதுவாரும் கேட்டு, பெட்டியைச் சுமக்கும் தலையோடு மூக்கைச் சூம்பினார். வாசனை அருகே இருந்துதான் வெளிப்பட்டது.

யாரோ இருந்து மூலிகையைப் பறித்தோ அல்லது அதைக் கசக்கிப் பிழிந்து ஏதோ செய்தபடி இருப்பதாகத் தோன்றியது.

வாசனை வந்த பக்கமாய் மூக்கை சிணுக்கியபடி நடக்கவும், புதர்கள் மறித்தன. ஆயினும், புதர்களை விலக்கி நடந்ததில் ஒரு சமதளமான பாறை மேல் யாரோ ஒருவர், மூலிகை இலைகளை மருதாணிபோல அரைத்து, வட்ட வட்டமாய் எரு முட்டைபோல காயப்போட்டபடி இருந்தார். அங்கே பாறைப் பகுதியிலும் நிறைய குழிகள். அந்தக் குழிகளிலெல்லாம் மழைத் தண்ணீரின் சேர்க்கை. ஓரிடத்தில் ஹோமகுண்டம் உருவாக்கப்பட்டு, அதில் நெருப்பின் நாட்டியம்.

இன்று விக்கித்த அரவிந்தன் சில விநாடிகள் அமைதியானான்.

“என்ன எழுத்தாளரே! எடுத்த எடுப்புல 100 கோடின்னு நான் விஷயத்துக்கு வரவும் ஷாக் அடிச்ச மாதிரி இருக்குதா?” - அவர் நிமிண்டினார்.

“அது... அது...”

“ஒண்ணும் அவசரமில்ல. நிதானமா யோசிச்சே முடிவுக்கு வாங்க. அதான் கூடவே பத்திரிகை ஆசிரியரும் இருக்கார்போலத் தெரியுதே? அவர்கிட்ட பேசிகூட முடிவுக்கு வாங்க. தப்பித் தவறியும் பாரதிகிட்ட மட்டும் பேசிட வேண்டாம். பாரதிக்கு நேர்மைங்கற விஷயம் ஒரு ஃபோபியா அளவுக்கு ஃபார்ம் ஆகியிருக்கு. சின்ன வயசு. பொத்திப் பொத்தி வளர்க்கப்பட்டதால இந்த உலகம் பத்தி அவளுக்குச் சரியா தெரியல. உண்மைல, தப்பு சரின்னே ஒண்ணு இந்த உலகத்துல கிடையாதுங்கறதும் அவளுக்குத் தெரியல.”

“போதும் சார்.... பாரதிய பத்தி எனக்கும் ஓரளவு தெரியும். உங்களையும் தெரியும்” - அரவிந்தன் உங்களையும் என்று சொன்ன விதத்தில், அந்த ஒலி மாத்திரை அளவிலேயே அவரை அவன் மதிக்கத் தயாரில்லை என்று சொல்லிவிட்டான். அது அவருக்கும் புரிந்தது.

“எழுத்தாளரே, பிராக்டிகலா யோசியுங்க. 100 கோடி சின்னத் தொகை இல்லை. அப்புறம் அந்த ஏடுகளும் பூட்டி வைக்கறதுக்கானதே இல்ல. மக்களுக்குப் பயன்படணும்னுதானே எழுதிவைக்கறாங்க? அதைப் பயன்படுத்திக்க விரும்பறது ஒண்ணும் சர்வதேசக் குற்றமில்லை. திரும்பச் சொல்றேன். நான் காந்திக்குப் பேரன், அரிச்சந்திரன் வம்சத்துல வந்தவன்னு வெட்டிப் பேச்சு பேசாம நல்ல முடிவுக்கு வாங்க. நான் அப்புறமா திரும்பக் கூப்பிடறேன்.”

அந்தப் பேச்சு தற்காலிகமாய் முடியவும், கசங்கிய முகத்துடன் திரும்பி வந்தான். வந்தவன் முகத்தை பண்டாரச் சித்தர் ஒரு மாதிரி பார்த்தார்.

“யார் அரவிந்தன் போன்ல, ஏதாவது தப்பான விஷயமா?” - ஜெயராமன் கிட்டத்தட்ட சரியாகக் கேட்டார்.

“அதெல்லாம் எதுவுமில்ல சார். அந்த டாக்சி டிரைவர் வீட்டைக் கண்டுபிடிச்சிட்டீங்களான்னு கேட்டான்.”

அரவிந்தனிடம் இருந்து முதல் பொய்! ஜெயராமன் அதை சந்தேகிக்கவில்லை. ஆனால், பாரதி சந்தேகித்தாள்.

“அவனுக்கு உங்க போன் நம்பர் எப்படித் தெரியும்?” என்று கேட்டாள். இந்தக் கேள்வியை அரவிந்தனும் எதிர்பார்க்கவில்லை.

“நான் கொடுத்திருந்தேன் பாரதி” என்றான் வேகமான குரலில். பாண்டார சித்தரோ குறுகுறுவெனப் பார்த்தபடியே, “என் கேள்விக்கு என்ன பதில்?” என்று நாட்டிய முத்திரைபோல கையை ஆட்டியபடியே கேட்டார்.

“சாமி நீங்க என்ன சொல்றீங்க. கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுங்க” என்றான் அரவிந்தன்.

“படி எடுத்தியா?” தாடியை நீவிக்கொண்டே சற்று ராகமாய் கேட்டார்.

“படி எடுத்தியாவா... அப்படின்னா?”

“ஏடுகளை அப்படியே இன்னொரு ஏட்டுல எழுதி எடுத்துக்கறது. தப்பு தப்பு... உங்ககிட்ட படம் எடுத்தியான்னுல்ல கேக்கணும்?”

அவர் கேட்டு முடிக்கும் முன்பே, “ஆமாம் சாமி. அதோட போட்டோஸ் இப்போ எங்ககிட்ட இருக்கு. அதுக்கென்ன இப்போ?” என்று பதில் சொல்லிமுடித்தாள் பாரதி.

“உண்மைய பேசறியே... என் தங்கம்!” என்று கொஞ்சுவதுபோல சொல்லி பலமாய் சிரித்தார் அந்தப் பண்டார சித்தர்.

“சாமி, இருக்கிற பிரச்னை போதும். நாங்க இப்போ ரொம்பவே குழப்பத்துல இருக்கோம். எங்கள சோதிக்காம கொஞ்சம் நேரா விஷயத்துக்கு வாங்க” என்று இடையிட்டார் ஜெயராமன். குரலில் சற்றுக் கட்டளை இடும் தொனிக்கலப்பு. அது பண்டார சித்தரை உசுப்பிவிட்டது.

“டேய்ய்ய்... நீ போகனைப் பார்க்க முடியாதுடா. ஒருகாலும் பார்க்க முடியாது. போகன் என்ன காட்சிப் பொருளா? நீயெல்லாம் பாக்கறதுக்கு. உன் சந்தேகங்களை உன்னோட வெச்சுக்கோ. நீ பார்க்க முடியாதுன்னா பார்க்க முடியாது. அதான் போன மச்சான் திரும்பி வந்தான் பூ மணத்தோடன்னு போன வேகத்துல திரும்பி வந்துட்டீங்க. இனி நீ அந்த மண்ணுல சாகற வரை காலை வைக்க முடியாது தெரிஞ்சிக்க.”

- அவரிடம் பதில் கோபத்தில் அனலடித்தது. அதிலும் அந்த `டேய்ய்ய்’ என்கிற தொடக்கத்தில் மிகமிக அழுத்தம்.

ஜெயராமனுக்கு ஒரு யானை தன்னைத் தும்பிக்கையால் வளைத்துப் பிடித்து தூர வீசி எறிந்ததுபோல இருந்தது. அரவிந்தனும் அந்தப் பேச்சால் ஆடிப்போனான். பாரதிக்கும் அது அதிர்ச்சியாகவே இருந்தது. அதேசமயம் அவளுக்கு அது பிடிக்கவும் செய்தது.

“ஐயா... எனக்கு அப்படி எந்த ஆசையும் இல்லை. இந்த போகர் பத்தி எல்லாம் எனக்கு எதுவும் தெரியாது. தெரிஞ்சுக்கவும் நான் விரும்பலை. நாங்க என்ன செய்யணும்னு மட்டும் சொல்லுங்க. அந்தப் பொட்டியும் ஏடுகளும் ரொம்ப தற்செயலாதான் எங்களுக்குக் கிடைச்சது. நாங்க ஒண்ணும் திட்டம் போட்டுத் திருடலை. ஒரு கலைப்பொருள்னு நான் காசு கொடுத்து வாங்கினது அது. போகட்டும்னு அதை நான் திருப்பியும் கொடுத்துட்டேன். இடையில அதை அரவிந்தன் படம் எடுத்தது, அதைப் பாதுகாப்பா வெச்சிக்கத்தான். அது எங்க பொருள். அதனால எடுத்துவெச்சிக்கிட்டோம். வேணும்னா அதைத் திருப்பித் தந்துடறோம், இல்ல அழிச்சிடறோம்.”

- பாரதி தெளிவாகவும் திடமாகவும் அவரிடம் பேசினாள். அவரோ சிரித்தபடியே, “எங்கே சொன்னபடி செய் பார்ப்போம்” என்றார்.

பாரதி அடுத்த விநாடி அரவிந்தனைத்தான் பார்த்தாள். அவன் முகத்தில் எப்போதும் இல்லாத சலனம்.

“அரவிந்தன்... எங்க உங்க லேப்டாப் - அதை எடுங்க” என்றாள் படபடப்பாக.

“கொஞ்சம் பொறுமையா இரு பாரதி. லேப்டாப் இப்போ கைல இல்லை. உன் வீட்லதான் இருக்கு.”

“நோ பிராப்ளம். இப்பவே நேரா வீட்டுக்குப் போறோம். அதை எரேஸ் பண்றோம்” என்றவள், பண்டார சித்தர் பக்கம் திரும்பி, “ஐயா... நான் சொன்னா சொன்னபடி நடக்கறவ. வீட்டுக்குப் போன நிமிஷம் அதை எரேஸ்... அதாவது எல்லாத்தையும் அழிச்சிடறேன் சரிங்களா?” என்று கேட்டாள்.

அவரோ திரும்ப ஒரு மாதிரி சிரித்தார். அரவிந்தனையும் ஜெயராமனையும் ஒரு மாதிரி பார்த்தார்.

“அவங்கள என்ன பார்த்துகிட்டு? நான்தான் சொல்லிட்டேன்ல. எனக்கும் இப்படிச் சுத்தி சுத்தி வர்றது சுத்தமா பிடிக்கல. பெட்டி, போகர், பொதிகை மலைன்னு ரொம்பவே அலைஞ் சுட்டோம். எல்லாமே மாய்மாலம். இப்போ இங்கே உங்கள பார்த்துப் பேசிட்டிருக்கறது வரை எல்லாமே இல்லாஜிக்! இது எதுவும் எனக்கு சுத்தமா பிடிக்கலை. இனியாவது வீட்டுக்குப்போய் என் பாட்டி கையால சாப்ட்டு, ஆபீசுக்குப் போய் என் சீட்ல உட்கார்ந்து எனக்கான வேலைய பார்க்கணும். போதுண்டா சாமி!” என்று அவர் எதிரில் பெரிதாக அலுத்துக்கொண்டாள்.

இடையில் உள்ளே சென்றிருந்த நீலகண்ட தீட்சிதர் திரும்பி வந்தவராய், “சாமி... உள்ள வந்து ஒரு வாய் சாப்ட்டுட்டுதான் போகணும். சாதம் வடிச்சு, மிளகு ரசம் செய்து, அப்பளம் பொரிச்சிருக்கேன். இரண்டு மூணு நாளா ஊர்ல இல்லாததால பால், தயிர் வாங்கலை, தப்பா எடுத்துக்கப்படாது” என்றார்.

“அப்பளம் பொரிச்சிட்டேல்ல அதுபோதும் எனக்கு.”

“எனக்கு உயிர்ப் பிச்சை போட்டவர் நீங்க. உங்களுக்கு நான் நிக்கவெச்சு அபிஷேகமே பண்ணணும். ஏதோ என்னால ஆனது” என்று உருக்கமாய்ப் பேசினார் தீட்சிதர்.

“எப்படியோ நீ அந்த பாஷாணலிங்கத்தைப் பார்த்து அதுக்கு பூஜையும் செய்துட்டே. அதுதான் நீ இப்போ நின்னு பேசவே காரணம். இனி இந்தத் தொழிலே உனக்கு வேண்டாம். காசி ராமேஸ்வரம்னு ஒரு சுத்து சுத்திட்டு வா. என்ன?”

“உத்தரவு சாமி... என் மனசுலயும் இப்போ அந்த எண்ணம்தான்...” - அவரின் ஆமோதிப்புக்கு நடுவில்,

“எக்ஸ்யூஸ்மீ... நாங்க கிளம்பறோம்” என்றாள் பாரதி. மீண்டும் அவள் பக்கம் திரும்பியவர், “சொன்னபடி செய்துடுவேதானே?” என்று சற்று சந்தேகம் இழையக் கேட்டார்.

“நிச்சயமா...”

“செய்யாமப்போனா நான் விடமாட்டேன்.”

“அதுக்கு அவசியமே இல்லை. நான் சொன்னா சொன்னதுதான்.”

“இப்படியெல்லாம் பேசாதே. பணிவாப் பேசு.”

அவர் பாரதியைக் கீறிவிடுவதுபோல பதிலுக்குப் பேசிய பேச்சு, அவள் முதுக்குத்தண்டை முள்ளால் நிரடியதுபோல இருந்தது.

“என்ன நீ ரொம்பப் பேசுற? உன்கூட நான் இவ்வளவு நேரம் பேசியதே பெருசு. இதுக்கு மேல உனக்குப் பதில் சொல்ல எனக்குப் பொறுமையுமில்ல தேவையும் இல்ல. அரவிந்தன் புறப்படுங்க நேரமாச்சு” என்று அவர்கள் பக்கம் திரும்பினாள் பாரதி.

ஏனோ அந்தப் பேச்சு பண்டாரச் சாமியை எதுவும் செய்யவில்லை.

“கிளம்பு... கிளம்பு... சொன்னபடி நீ நடக்கறியான்னு நானும் பார்க்கறேன். இவங்க என்ன செய்யப்போறாங்கன்னும் பார்க்கறேன்” என்று அவர்கள் இருவரையும் திரும்ப ஒரு மாதிரி பார்த்தார். அரவிந்தனுக்கு அந்தப் பார்வை ஓர் எச்சரிக்கைபோலத் தோன்றியது.

பாரதி விறுவிறுவென்று காரை நெருங்கி அதில் ஏறிக்கொண்டாள். அவர்கள் இருவரும் மெல்ல காரை நோக்கி நடந்தனர். திரும்பித் திரும்பிப் பார்த்தனர்.

இறையுதிர் காடு - 80

அப்போது பண்டார சித்தர் உதட்டில் ஔவை பாடிய ஒரு பாட்டு கேலியாக வெளிப்பட்டது. அதுவும் ராகமாய்...

“மதியாதார் தலைவாசல் மிதியாமை கோடி பெறும்...

கோடி கொடுப்பினும் உண்ணீர் உண்ணீர் என்று

சொல்லாத பெண்டீர் கை உண்ணாமை கோடி பெறும்...

நாக் கோடாமை கோடி பெறும்...

பாப்பா... இது உனக்கு... சொன்னபடி நடக்கணும். நடந்தாதான் மதிப்பு... அதுவும் எவ்வளவு... கோடியில! உண்மையான கோடி அதுதான்... அச்சடிச்ச பணக்கோடி எல்லாம் சும்மா...!”

- இரு பொருள்பட அவர் பேசுவது பாரதிக்குப் புரியவில்லை. ஜெயராமனுக்குப் புரிந்தது. அரவிந்தனுக்கு நன்றாகவே புரிந்தது. காரை ஸ்டார்ட் செய்தான். கமறிக்கொண்டு சீறியது. பயங்கர குலுக்கல். அதுவே அரவிந்தன் தனக்குள் ஒரு தெளிவில் இல்லாததைச் சொல்லிவிட்டது.

“அரவிந்தன் நான் ஓட்டவா?” என்று அடுத்த நொடியே கேட்டாள் பாரதி. அவனும் மறுக்காமல் காரை நிறுத்தி இறங்கினான். அதற்குள் சிறிது தூரம் அந்தக் கார் வந்துவிட்டிருந்தது. நின்ற இடத்திலும் யாருமில்லை. திரும்பிப் பார்த்தபோது தீட்சிதர், பண்டார சித்தரை அழைத்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்துவிட்டது தெரிந்தது.

“ஸ்... அப்பா! என்ன இந்தப்ப் பண்டாரத்தோட பெரிய ரப்சராப்போச்சு. வாடா போடான்னுல்லாம் பேசறான். எனக்கு வந்த ஆத்திரத்துக்கு அறைஞ்சிருப்பேன்” என்று காரிலிருந்து ஜெயராமனும் இறங்கிக்கொண்டார்.

“சார், எல்லாத்தையும் வீட்ல போய்ப் பேசிக்கலாம். முதல்ல லேப்டாப்ல அதை அழிச்சிட்டுதான் மறுவேலை. கமான் ஏறுங்க சார்.”

“ஏறி?”

“இது என்ன கேள்வி? எங்க வீட்டுக்குப் போறோம்.”

“போய் லேப்டாப்பை எடுத்து அழிக்கணு மாக்கும். ஒரு பண்டார பரதேசி எதையோ உளறுவான். உடனே அதைச் செய்யணுமா?” - ஜெயராமன் கேட்ட விதத்தில் பலமான ஒரு ஏளனம். பாரதி வெறித்தாள்.

“கரெக்ட் சார். பாரதி ஸ்டார்டிங்கல இருந்தே ஒரு இடதுசாரி. அவளுக்கு அந்த ஏடுகளோட மதிப்பு தெரியல. ஆனா, நாம அதை விட்றக்கூடாது” என்ற அரவிந்தன் பேச்சிலும் ஒரு தனி காட்டம். பாரதிக்கு இருவருமே அதிர்ச்சியளித்தனர்.

“அரவிந்தன், நான் அழிக்கிறேன்னு சொல்லிட்டேன். சொன்னா சொன்ன மாதிரி நடந்துக்கணும்” என்றாள் மிகக் காட்டமாய்.

“நோ பிராப்ளம்... நான் அதை உனக்கு ஃபார்வர்ட் பண்றேன். நீ உன் லேப்ல அதை எரேஸ் பண்ணிடு” - அரவிந்தனும் சற்று ஏளன மாகவே சொன்னான். பாரதிக்குப் புரிந்துவிட்டது.

- தொடரும்