
“உன் மூச்சு நிக்கற நேரமே தெரியும் போது, பேர்தான் தெரியாதாக்கும்?”
அன்று பொதிகை மலையின் நீண்டு நெளிந்த போக்கில், தாங்கள் எங்கே இருக்கிறோம் என்பதே தெரிந்திடாத நிலையில், ஒரு குறிப்பிட்ட இடத்தில் மலைப்பாறைகளும், அதில் மாவாட்டும் கல்லுரல்போல் குழிகளும், அந்தக் குழிகளின் அளவுக்கேற்ப ஆட்டுக்கற்களும் இருந்திட, ஒரு புறம் ஹோம குண்டம்போல் நெருப்பும் எரிந்தபடி இருக்க, அவற்றுக்கு நடுவில் தென்பட்ட மனிதர், பெட்டியோடு வந்து சேர்ந்த சிதம்பர மாணிக்கம், அந்த செட்டியார், கூடவே வந்திருந்த உடையார், மேழிமடையார், ஓதுவார், பணியாளன் கரும்பாயிரம் ஆகியோரைப் பார்த்து அதிர்வை முகத்தில் காட்டினார். மேழிமடையாருக்கு அந்தச் சூழல் புதிதில்லை என்பது அவர் பதிலுக்கு அந்த மனிதரைப் பார்த்தவிதத்தில் தெரிந்தது.
“ஆருவே, நிங்கடவெல்லாம்... எப்படி இப்பக்கம் வந்தீக?” என்று அந்த மனிதர் கேட்ட விதமும் சரியில்லை.
“நீ ஆருவே... இங்க என்ன பண்ணுறே? இது கோரக்கர் குண்டா இல்ல?” மேழிமடையார் திருப்பிக் கேட்டார்.
“ஓ... உமக்கு இந்த பாகம் பத்தி தெரியுமோ?”
“இது என் மலைக்காடு... எனக்கு இப்ப வயசு எம்புட்டு இருக்கும்னு நினைக்கறே?”
“அது தெரிஞ்சு எனக்கு என்னாவணும்?”
``எம்பது வயசாகுது. ஆனா, அம்பதுதான் மதிக்காம். சரியா?’’
``அதுக்கென்ன இப்போ?’’
“இந்த எம்பது வயசுல ஆயிரம் வட்டமாவது மூலிகை பறிக்க நான் இந்த மலைக்காட்டுக்கு வந்தவன். உன்னப் பாத்தாதான் புதுசாத் தெரியுது”
- மேழிமடையார் எங்கு வருகிறார் என்பது அவருக்கும் தெரிந்தது. கச்சவேட்டி கட்டி அதையும் மல்யுத்தக்காரர்கள்போல் தொடை தெரியும் வண்ணம் இறுக்கமாய்க் கட்டியிருந்த நிலையில், அடர்வான தாடிமுடியுடனும், பின் குடுமியுடனும் காட்சி தந்த அந்த மனிதர் பதிலுக்கு சற்று உற்றுப் பார்த்தார்.

“என்னவே அப்படிப் பாக்குறீர்?”
“பெட்டிச்சுமையோட வந்திருக்கறத பார்த்தா, அதுவும் இன்னிக்குப் பௌர்ணமி... இந்த நாளா வந்திருக்கறத பார்த்தா போகரைப் பார்க்க வந்த மாதிரில்ல தெரியுது...?”
“தெளிவாச் சொல்லிட்டீரு... ஆமா இங்க இப்ப என்ன நடக்குது?”
“அது என்னவோ நடந்துட்டுப் போவட்டும். நீர் வந்த சோலிய பாரும்...”
- அந்த மனிதர் அலட்சியமான பதிலோடு ஒரு கல் குழி நீரை அகப்பை ஒன்றால் கலக்கிவிட்டார். அந்த நீர் பச்சை நிறத்தில் சற்றே எண்ணெய் போல் இருந்தது. உச்சி சூரியனின் கிரணங்கள் பட்டபடி இருந்தன.
அருகில் காய்ந்தபடி இருந்த எருமுட்டை போன்ற மூலிகை அடைகளையும். தோசைக்கல்லில் தோசையைத் திருப்புவதுபோலத் திருப்பிப் போட்டார். கரும்பாயிரம் அங்கேயும் ஒரு மரத்தடியில் சரிந்துவிட்டான். அந்த மனிதர் பார்வை கரும்பாயிரம் பக்கம் சென்றது. அவனை நெருங்கி உற்றுப் பார்த்தார்.
அவன் மிகச்சோர்வாய் அவரைப் பார்த்தான்.
கால் கட்டு முறிவைச் சொல்லாமல் சொன்னது.
“முறியோ?”
“ஆங்...”
“மரத்து மேலேருந்து விழுந்தியோ?”
“ஆங்.. ஆங்...”
“நேரம் சரியில்ல... நீ மிதுனக் காரனோ?”
“அப்படின்னா?”
“மிதுன ராசிக்காரனோன்னு கேட்டேன்.”
“தெரியாது... பொறந்த நேரமே தெரியாது...”
- அவர் கேட்க, கரும்பாயிரம் பதில் கூற, அருகில் வந்தார் மேழிமடையார். மடையாரிடம் இப்போது வேறு மாதிரி எண்ணங்கள். இந்த மனிதர் ஒரு சித்தபுருஷர். தங்களுக்கு நடப்பது ஒரு சோதனை என்பதுபோல் ஓர் எண்ணம்.
அதற்குள் அவர் கரும்பாயிரத்தின் கட்டைவிரல் ரேகையைக் கையைப்பிடித்து இழுத்து உற்றுப்பார்த்த வராய் “இருவால் சுழி...” என்று சிரித்தார். அப்படியே மணிக்கட்டில் கண்மூடி நாடி பார்த்தார். பின் சிந்தித்தார், ``அப்படியே நீ யோகக்காரன்லே... ஒரு ஊருக்கே சோறு போட்ட புண்ணியம் தான் இப்ப நீ என்னை இங்க பாக்கறே...” என்றார்.
“என்னென்னமோ சொல்றீங்களே சாமி...”
“நான் அப்படித்தான்... உளறுதேன்... கண்டுக்காத. உன்பேர்ல ஒரு கணக்கு இருக்கணுமே?”
“கணக்கா?”
“ஆமா... ஆறுமுகம், ஏழுமலை, நவந்தன்கற மாதிரி எண்ணிக்கையைப் பேராக் கொண்டிருக்கணும் நீ... சரியோ?”
- அவர் கேட்ட விதம் மேழிமடையாரை மட்டுமல்ல, பெட்டியை இறக்கி வைத்த நிலையில் அதன் அருகில் அமர்ந்திருந்த ஓதுவார் முதல், உடையார், சிதம்பர மாணிக்கம் வரை சகலரையும் வியக்க வைத்தது.
“சாமி என்பேர் கரும்பாயிரம்... எண்ணிக்கைப் பேருன்னு ருசுவா சொல்லிட்டீகளே எப்படி சாமி?”
“எதுக்கு இருக்கு உன் கைரேகை... அத்த கேட்டா அது சொல்லிட்டுப் போவுது...”
“யம்மாடி... கைரேகைல பேரெல்லாம் தெரியுமோ?”
“உன் மூச்சு நிக்கற நேரமே தெரியும் போது, பேர்தான் தெரியாதாக்கும்?”
- அந்த மனிதர் பேச்சுக்குப் பேச்சு செயலுக்குச் செயல் என்று கற்குழி நீரைக் கிளறி விட்டும், மூலிகை அடைகளைத் திருப்பித் திருப்பிப் போட்டும், எரியும் குண்ட நெருப்பில் அவ்வப்போது சில இலை தழைகள் சருகுகளைப் பொசுக்கிப் போட்ட படியுமே இருந்தார்.
மேழிமடையாரிடம் பெரும் மாற்றம். பெரும் பணிவுக்கு மாறியவர் “சாமி யாருன்னு நான் தெரிஞ்சிக்கலாமா?” என்று கேட்டார்.
“தெரிஞ்சி என்ன செய்யப்போறே?” - படுவேகமாய் அவர் திருப்பிக் கேட்டார்.
“என்ன செய்துகிட்டிருக்கீங் கன்னாவது தெரிஞ்சிக்கலாமா?”
“இதுவா... யவ்வன சூரிங்கிற மருந்துக் காக முட்டிமோதிக்கிட்டு இருக்கேன்.’’
‘’யவ்வன சூரியா?”
“ஆமலே... சாப்ட்டா வயசு நின்னுபோகும்... சாவுகூட நாம கூப்ட்டா தான் வரும். இல்லாட்டி வராது...”
“சாமி அப்ப நீங்க...?”
“என்ன நீங்க... நான் யாருன்னு தெரியணுமாக்கும்?”
“ஆமாம் சாமி... சோதிக்காதீங்க... எங்களுக்கு ஒத்தாச பண்ணுங்க...”
“போவட்டும்... பெட்டியில் எல்லாம் பத்ரமா இருக்குதா?” அவர் சட்டென்று பெட்டிக்கு மாறவும் ஒரு தடுமாற்றம். செட்டியார் வேகமாய் முன்வந்தார்.
“ஆம்... எல்லாம் இருக்குது சாமி...”
“சந்தோஷம்... முறையா தினசரி பூசைங்க நடந்திச்சா?”
“ஆங்... நடந்திச்சு சாமி... ஒரு நாகூட தப்பலை?”
“போகர் மரம் நடச் சொல்லி யிருப்பாரே?”
“ஆமாம் சாமி... எங்க தோட்டத்துல பத்தும், இந்தக் காட்டுல மிச்சத்தையும் நட்டதுல எல்லாமே நல்லா வளர்ந்து நிக்குதுங்க.”
“எதாவது ஒச்சமாச்சா?”
“ஒண்ணே ஒண்ணு... நவாப்பழ மரம்! அதான் எழும்பாம முடங்கிப்போச்சு...”
“அப்படின்னா உம்மகூடப் பொறந்த ஒரு பொறப்பு கல்யாணமே ஆகாம சன்யாசி கணக்கா இருக்குதாக்கும்?”
“பக்கத்துல இருந்து பார்த்தமாதிரி சரியா சொல்லிட்டீங்களே சாமி...”
“எல்லாம் ஒரு கூட்டல் கழித்தல் கணக்குதான்...”
“ஆச்சர்யமா இருக்கு... உங்களுக்கு ஜோசியம் தெரியுமோ?”
“ஓரளவு தெரியும்னு வையேன்...”
“சாமி பேரு...”
“சொல்றேன்... ஆமா வழியில நிறைய சிக்கலோ?”
“ஆமா சாமி... பாடாப்பட்டுதான் வர்றோம்...”
“போவட்டும் இந்தப் பொட்டில லிங்கம் பத்ரமா இருக்குதா?”
“இருக்கு சாமி...”
“இதை கங்கைல உன் கைல பிடிச்சிக் கிட்டே வெச்சுக்கிட்டு குளிச்சியோ?”
“குளிச்சேன் சாமி... நான் மட்டுமல்ல - இதோ இந்த வைத்யரும் குளிச்சார்...”
“இவருக்கு சாமி உத்தரவு கொடுத்தாரா?”
“கொடுத்தார் சாமி.”
“பன்னெண்டு வருசம்... 4,272 நாள்கள், விடாத பூசை... நடந்திச்சுதானே?”
“நடந்திச்சு சாமி...”
``ஏடுங்க பயன்பட்டுச்சா..?’’
“பட்டுச்சு சாமி!”
“எப்படின்னு சொல்லு...”
“ஒரு தடவை ஊர் உலகத்துக்கே தொத்து வந்தப்ப மூணு உப்பு மூணு மிளகு, ஒரு சிட்டிகை கடுக்காப் பொடிய தினம் வெறும் வயத்துல, காலைல எழுந்திரிக்கவும் சாப்பிடச் சொன்னார் சாமி...”
“கனவுல வந்து சொன்னாரா?”
“ஆமா... ஏடெடுத்து ஏழாம் பக்கம் பார்த்து, அதுல இருந்த பாட்டைப் படிச்சு நடக்கச் சொன்னாரு... அதுலதான் மூணு மிளகு, மூணு உப்பு, கடுக்காய்த் துள் பத்தின குறிப்பு இருந்துச்சு.”
“ஆட்டுக்கும் மாட்டுக்கும் நோவு வந்தப்பகூட செய்தி வந்திருக்குமே?”
“வந்திச்சிங்கய்யா... ஆயிரக்கணக்குல வைசூரிலயும், கோமாரிலயும் செத்து விழுந்த ஆடு மாடுகளுக்கும் சாமி மருந்து சொன்னார்.’’
“மழைதப்பிப் போனப்ப திருவாரூரைச் சுத்தி ஏழு தலங்களை வாண வேடிக்கை நடத்தி சாமியை வீதி சுத்தி வரச் சொன்னாரு. அதனால புயலே வந்து நாடு முழுக்க நல்ல மழை பேஞ்சி விவசாயம் செழிச்சிச்சு...”
- அவர் கேட்க, சிதம்பர மாணிக்கம் சொல்லிக் கொண்டே வர அப்போதுதான் உடையாருக்கும் பெட்டிக்குப் பின்னால் அத்தனை காரியங்கள் நடந்ததும் தெரிய வந்தது.
சாமியும் ஏடுகளும் வழிபாட்டிற்காக மட்டுமல்ல... வழிப்பாட்டிற்காகவும் என்று தெரிந்தது.
“சாமி உச்சமா ஒரு காரியம் செய்தேன். அதுவும் சாமி உத்தரவுப்படிதான். இமயமலைக்கு மேற்க புத்தர் சாமி வழில நடக்கற ஒரு சன்யாசியை சந்திச்சு அவர் கைல ஒரு விதைப்பையைக் கொடுக்கச் சொன்னார். அவ்வளவும் அபூர்வ மூலிகைப் பயிர்கள் ‘காக்கட்டான், காட்டுத்துளசி, கொப்பிரண்டை, சதுரக்கள்ளி, சிலந்தி நாயகம், தழு தாழை துத்தி, தும்பை, நரிமிரட்டி, நாயுருவி, பாதாள மூலி, பிரம்மதண்டு, பேய்மிரட்டி, மஞ்சாடி, மயில் கொன்றை, விஷ்ணுகிரந்தி, வெற்றிலை, மிளகரனை’ன்னு பதினெட்டுப் பயிர்களோட விதைகள்தான் அதெல்லாம்... அதை சாமி ஏன் கொடுக்கச் சொன்னார், எதுக்குக் கொடுக்கச் சொன்னார்னு தெரியாது. கொடுக்கச் சொன்னார்; நானும் போய் கொடுத்துட்டு வந்தேன்” என்று தொடர்ந்து சிதம்பர மாணிக்கம் கூறவும் உடையாரின் ராஜபுத்திக்குள் பல சங்கதிகள் யாரும் சொல்லாமலே புரியத் தொடங்கிவிட்டது.

சித்த புருஷர்கள் இருந்த இடத்தில் இருந்துகொண்டே தன் சீடர்கள் மூலம் இந்த உலகில் தாங்கள் நினைப்பதைச் செய்து முடிப்பவர்களாய் இருப்பது என்பதே அதில் பிரதானம்.
அந்தச் செயல்களும் எவரும் செய்ய முடியாத, எவரும் அறிந்திராத அதிசயச் செயல்களே. இவ்வாறு செய்வதன் மூலம் இயற்கையை சமன் செய்வது, பஞ்ச பூதங்களை சாந்தப் படுத்துவது, இறை சக்தியை எங்கும் நிலவச் செய்வது, அதர்மங்களால் நேரிடும் எதிர்மறையை திசை மாற்றம் செய்து கடல்புயலாய், ஊழிக்காற்றாய் மாற்றிவிடுவது என்பதெல்லாமும் அதனுள் அடக்கம் என்பது உடையாருக்குப் புரியவரவும், அந்த மனிதர் உடையாரை நெருங்கி ``என்ன, வாரிசு தரிசாப் போச்சா?” என்று சுருக்கமாய்க் கேட்டார்.
உடையாருக்கு நெஞ்சுக் குழிக்குள் கத்தி இறங்கினது போல் இருந்தது. எதுவும் பேச முடிய வில்லை... விழிகளில் மளுக்கென்று நீர் தேங்கி விட்டது.
“நல்லாக் கேட்டுக்கோ... அரவாணம் ஒரு அருள் நிலை. இச்சைகளோட போராட்டத்துக்கு இடமில்லாத உடம்புங்கறது ஒரு வரம்.
ஆணாவும் பெண்ணாவும் ஒரே கால கட்டத்துல வாழ்ந்தாக வேண்டிய விதிப்பாடுதான் கருவுக்குள்ள திரிஞ்சி போய் இப்படியாகும். திருமூலன் பாட்டாலயே பிறப்பப் பத்தி நிறைய சொல்லியிருக்கான். அதைப் படி... புத்தி தெளியும். உன்னை ஒரு பெரும்பாவியா நினைக்காதே. ஒரு பாவியால இந்த மலைப்பக்கமல்லாம் வர முடியாது” என்று விளக்கமாய்க் கூறவும், சற்று இதமாய் இருந்தது.
“சாமி... நான் இமய மலைப் பக்கமா போகத்தான் ஆசைப்பட்டேன். ஆனா இந்தப்பக்கம் எனக்கே தெரியாமதான் வந்தேன். எப்படி வந்தேன்னே தெரியல... இதோ உங்க முன்னால இந்த மலைமேல நின்னுகிட்டிருக்கேன். கோடி கோடியா சொத்து இருந்து என்ன பிரயோ ஜனம்? எதுவும் என் கைல இல்லைங்கற உண்மையை என்னால ஜீரணிக்க முடியல சாமி...” என்று வெடித்து அழத் தொடங்கி விட்டார் உடையார்.
“அழு... நல்லா அழு. தண்ணீர்ல கண்ணீர்தான் மகா மருந்து. மருந்துன்னா உட்கொண்டாதான் குணப்பாடு. ஆனா இந்தக் கண்ணீர் மருந்து வெளியேறினாதான் குணப்பாடு. இது உனக்கு மட்டுமல்ல... உலக உயிர்கள் அவ்வளவு பேருக்கும் சொல்றேன். அழுவது நல்லது... ஞாபகம் வெச்சுக்குங்க”
- என்று எல்லோரையும் சுற்றி ஒரு பார்வை பார்த்தார். மேழிமடையாருக்குள் அவர் யார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டிய அரிப்பு கூடிக்கொண்டே போயிற்று.
அவர் என்ன நினைத்தாரோ... குனிந்து பாறைமேல் தட்டிப் போட்டிருந்த மூலிகை அடைகளைக் கையில் எடுத்தார். அப்படியே தூக்கி, எரியும் குண்ட நெருப்பில் போட்டார்.
“என்ன சாமி பண்ணுறீங்க?”
“அதான் சொன்னேனே... யவ்வன சூரியைச் செய்துகிட்டிருக்கேன்...”
“வெய்யில்ல காய்ஞ்சதை நெருப்புல போட்டுட்டீங்களே... இதுக்குக் காய வெச்சிருக்க வேண்டாமே?”
“காய்ஞ்சா ஈரம் ஆவியாகும் - குணம் மாறும் - அப்படி குணம் மாறியதை நெருப்புல போடும்போது சாம்பலாகும். அந்தச் சாம்பலுக்குள்ளதான் நம்ம இளமையோட ரகசியம் ஒளிஞ்சிருக்கு...”
“அப்படின்னா?”
“இந்த நெருப்பு அவிஞ்சி அடங்கும் நிலைல சாம்பலை எடுத்து, அதோ அந்தக் கற்குழி திரவத்துல கலந்து உருண்டையாக்கி 48 உருண்டைகளை 48 நாள்கள் வெறும் வயித்துல பல் படாம விழுங்கி வந்தா 49-ம் நாள் உன் உடம்பு இப்ப எப்படி இருக்கோ அப்படியே எப்பவும் இருக்கும். ஒரு வியாதி வராது... வெட்டுக்காயம்கூட தைத்த மாத்தரத்துல திரும்பச் சேர்ந்துடும். மரத்து மேல இருந்து தரைல போற எறும்பை சாதாரணமா பாக்கலாம்... உங்கள்ள யாருக்காவது இது வேணுமா?” என்று இறுதியாக அவர் கேட்கவும், எல்லோருக்குமே இன்ப அதிர்வு. எல்லோர் முகமுமே வேண்டும் என்கிற உணர்வையே காட்டிட...
“அப்படின்னா ஒரு காரியம் பண்ணணும். பெட்டிய என்கிட்ட ஒப்படைச்சிட்டு நீங்க யவ்வன சூரியோடு வந்த வழியே திரும்பிப் போயிடணும். பெட்டியை என்கிட்ட கொடுத்தாப் போதும், நான் போகர்கிட்ட சேர்த்துடுவேன். ஏன்னா, நான்தான் அவரின் முதல் சீடன். என் பேர் புலிப்பாணி’’
- என்று சொல்லிமுடித்திட... மேழிமடையார், “சாமீஈஈ... நீங்களா?” என்றார், மிகவே பலமான குரலில்.
இன்று பாரதியால் அரவிந்தனின் ஏளனப் பேச்சை ஜீரணிக்க முடியவில்லை. அது அவள் வரையில் பெரும் கோபமாக மாறியது.
“அரவிந்தன்... இந்தக் கிண்டலெல்லாம் என்கிட்ட வேண்டாம். அதையெல்லாம் எரேஸ் பண்ணுறேன்னு நான் சொல்லிட்டேன். சொன்னா சொன்னபடி நடக்கணும்...” என்றாள் மிக அழுத்தமான உச்சரிப்பில்.
“பாரதி... டென்ஷன் ஆகாதே. நாம இப்ப ரொம்பவே முக்கியமான ஒரு தருணத்துல இருக்கோம். இந்தப் பண்டார சித்தர் பேச்சையெல்லாம் எடுத்துக்காதே. எத்தன நாள் உழைப்பு..? எவ்வளவு தேடல்..? யோசிச்சுப் பார்...”
- ஆசிரியர் ஜெயராமன் தன் பங்குக்கு வளாவ ஆரம்பித்தார்.
“சாரி சார்... ஒரு ஜர்னலிஸ்டா உங்க பேச்சைக் கேட்டு நடக்கற கடமை எனக்கிருந்தாலும், இந்தப் புதிரான விஷயத்துல எனக்குத் தொடக்கத்துல இருந்தே இன்ட்ரஸ்ட் இல்லேங்கறது உங்களுக்கு நல்லாத் தெரியும். இப்பகூட இங்க நாம பாத்தது கேட்டது எல்லாமே நம்ப முடியாத ஒண்ணுதான். இந்த விஷயத்துல மிஸ்டர் அண்டு மிசஸ் சாந்தப்ரகாஷுக்குத்தான் கமிட் மென்ட்ஸ் இருக்கு... எனக்கு இல்லை. உங்களுக்கில்லை... நம்ப யாருக்குமே இல்லை... அதை நீங்க உணரணும்.”
“நேரடி கமிட்மென்ட் இல்லாம இருக்கலாம். ஆனா ஒரு ஜர்னலிஸ்ட்டா இதெல்லாம் எவ்வளவு துாரம் உண்மை பொய்ன்னு பாக்கற கடமை நமக்கு இருக்கு பாரதி...”
“சரி, என்ன பண்ணணும்கறீங்க?”
“நாம இப்ப சாந்தப்ரகாஷோட அந்தப் பல்லாவரம் ஜமீன் அரண்மனைக்குப் போறோம். பெட்டி அங்க இருக்கறத கன்ஃபார்ம் பண்ணிக்கிறோம். அவங்க குற்றாலம் கிளம்பிட்டு இருப்பாங்க. பெட்டியை மலைமேல சித்தன் பெட்டல்ங்கற இடத்துல போகர் கிட்ட ஒப்படைக்கவும் முயற்சி செய்வாங்க. அப்ப நாம கூட இருந்து எல்லாத்தையும் வாட்ச் பண்ணுறோம். சாதுர்யமா வீடியோவும் எடுக்கறோம்...”

“சார்... நான் இப்பவே இங்கையே என் கருத்தைச் சொல்லிடறேன். அங்க சித்தர்கள்னு நாம யாரையாவது பார்த்தாலும், குறிப்பா போகரையே பார்த்தாலும் அவர் நிச்சயமா ஐயாயிரம் ஆறாயிரம் வருஷத்துக்கு முன்னால வாழ்ந்த போகரா இருக்க சான்ஸே இல்லை. அவர் ஒரு டூப்ளிகேட்டாகவோ, அல்லது, சம காலத்தவராகவோதான் இருக்கணும்...”
“அது உன் கருத்து... அதே கருத்து எனக்கு இருக்கணும்னு இல்லையே?”
“எப்படி சார்... எப்படி சார் ஒரு மனுஷன் ஐயாயிரம், ஆறாயிரம் வருஷமெல்லாம் உயிரோடு இருக்க முடியும்? அனாடமி சைன்ஸ் படிச்சிருந்தா இப்படிப் பேச மாட்டீங்க. இந்த உடம்பு நொடிக்கு நொடி அழியற செல்களால ஆன ஒண்ணு... இதோட எல்லை அதிகபட்சம் 150 வருஷங்கள்னு சொல்லுங்க. கேட்டுக்கறேன். பல ஆயிரம் வருஷமா ஒருவர் அப்படியே இருக்கார்ங்கறத எப்படி ஏற்க முடியும்.’’
``அதை பாக்காம முடிவு செய்யாதே... சாப்பிடாம, பச்சத்தண்ணிகூடக் குடிக்காம உயிர் வாழ முடியுமா?”
“நிச்சயமா முடியாது...”
“ஆனா ஒரு யோகி ஒரு வருஷம் இரண்டு வருஷமில்ல... 46 வருஷங்களா உயிரோடு ஜீவசமாதியில இருந்திருக்காரு. எலும்புக்கூடான அவர் தோற்றத்தைப் பார்த்தப்போ நான் மிரண்டு போயிட்டேன். நான் சொல்ற இந்த விஷயம் யூடியூப்ல இருக்கு. பார்க்கறியா?”
“யூடியூப் இப்ப ஒரு பழைய மூர் மார்க்கெட்! அதுல வரதை எல்லாம் நம்பணும்கற அவசியம் எனக்கில்லை. நீங்க சொல்ற மனிதர் நிச்சயம் 46 வருஷ மெல்லாம் இருந்திருக்க வாய்ப்பில்லை. வேணும்னா ஒரு மாசம் இல்ல ரெண்டு மாசம் சாப்பிடாமலோ, இல்ல சாப்பிட முடியாத வியாதியிலேயோ இருந்திருக்கலாம்...”
“அப்ப நீ எங்ககூட வர விரும்பல... அப்படித்தானே?”
“ஆமாம்...”
“சரி. நீ வீட்டுக்குப் போ... நாங்க இந்தப் பயணத்தைப் பாதியில நிறுத்துறதா இல்லை... அரவிந்தன் ஒரு டாக்சி புக் பண்ணுங்க. கமான் க்விக்!”
“அது உங்க விருப்பம். என்வரைல இப்ப அந்தப் போட்டோ காப்பியெல்லாம் அழிக்கப்படணும். அரவிந்தன் அதுக்கான பாஸ்வேர்டு என்ன?”
“பாரதி... அது ஒரு பொக்கிஷம். அதைத் தூக்கித் தர நினைக்கறது கடைஞ்செடுத்த முட்டாள்தனம்.”
“அரவிந்தன்... அதை நம்பறது, படிக்கறது கடைஞ்செடுத்த துரோகம்... அது நம்முடையதில்ல...! துரோகத்துக்கு முட்டாள்தனம் பரவாயில்லை அரவிந்தன்...”
“ நீ ஆன்மிக நம்பிக்கை இல்லாததால இப்படிச் சொல்றே... பல அமானுஷ்ய அனுபவங்களுக்கு ஆட்பட்டும் நீ மாறாம பிடிவாதம் பிடிக்கறே...”
“நேர்மையா நடக்கறதுல காட்ற உறுதி பிடிவாதமா உங்களுக்குத் தோணினா நான் எதுவும் பண்ணுறதுக்கில்லை!”
“சரி... பாஸ்வேர்டை நான் வாட்ஸ் அப்ல அனுப்பறேன். உன் விருப்பம் போல செய். இதுக்குமேல உன்கூடப் பேசி நேரம் கடத்த நாங்களும் தயாரா இல்லை.”
- அரவிந்தன் கார் சாவியை அவள் கையில் தந்தவனாக ஒதுங்கினான். அவளும், “என்ன சீட் பண்ணிடாதீங்க’’ என்றபடி புறப்பட்டாள். அவள் விலகவுமே ஜெயராமன் அரவிந்தனை உலுக்கத் தொடங்கினார்.
“அரவிந்தன், இது என்ன இப்படிச் சொல்லிட்டீங்க... அது நமக்குக் கட்டாயம் வேணும்.”
“தெரியும் சார்... நுாறு கோடியை நான் சுலபமா தூக்கிக் கொடுத்திடுவேனா?”
“என்னது... நூறு கோடியா?”
“ஆமாம் சார்... டீல் இப்பதான் தொடங்கியிருக்கு!”
“யார்கிட்ட?”
“ஒரு நிமிஷம் இருங்க... டாக்ஸி புக் பண்ணிடறேன்.”
- தன் கைப்பேசியில் சில நிமிடங் களைச் செலவழித்து முடித்தவன் இறுதியாக நிமிர்ந்தான். நிமிரும்போதே ஒரு மதர்ப்பு.
“இப்ப கேளுங்க சார்...”
“ஏதோ நூறு கோடின்னீங்களே அரவிந்தன்...”
“ஆமாம் சார்... மகள் அழிக்க நினைக்கறா! ஆனா அப்பா ஆக்க நினைக்கறாரே...?”
“ஓ... எம்.பிய சொல்றீங்களா?”
“ஆமாம்... கொஞ்சம் முந்தி போன் வந்ததே, அது அவர் கிட்ட இருந்து தான்...”
“மை குட்நெஸ்... நூறு கோடி எல்லாம் அவருக்கு சாதாரணம். அது சரி, பாரதியை எப்படி சமாளிக்கப்போறோம்?”
“சொல்றேன். நீங்க நம்ம ஆபீஸுக்கு போன் பண்ணி உங்க ஆபீஸ் லேப் டாப்போட யாரையாவது பல்லாவரம் ஜமீன் பங்களாக்கு எடுத்து வரச் சொல்லுங்க... அதுல நான் என் பாஸ்வேர்டைப் போட்டு ஓபன் பண்ணி அந்த ஃபைலை நம் லேப்டாப்புக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணிட்டு பாரதிக்கும் பாஸ்வேர்டைக் கொடுத்துடறேன். அவ அதை எரேஸ் பண்ணிட்டு திருப்தியடைஞ்சுக்கட்டும்...”
“நாம ஃபார்வர்டு பண்ணுவோம்னு அவளுக்குத் தெரியாதா?”
“தெரிஞ்சா வந்து சண்டை போடட்டும். நமக்குதான் இப்ப எதுக்குமே நேரமில்லையே...”
“அதுவும் சரிதான்... நமக்கு மலைல நடக்கப்போற சம்பவங்கள்தான் முக்கியம்...”
“சரி... பாரதி அப்பாவுக்கு என்ன பதில் சொல்லப் போறோம்.?”
“சொல்வோம் சார்... அதே சமயம் நாம கொஞ்சம் ஜாக்ரதையாவும் இருக்கணும்.”
“இப்ப அஜாக்ரதையாவா இருக்கோம்?”
“அப்படி இல்ல சார்... பாரதி இந்த சித்தர் விஷயத்துல நம்பிக்கை இல்லாதவளா இருந்தாலும், வாக்கு கொடுத்தா கொடுத்தபடி நடக்கணும்கற நேர்மையோடு இருக்கா. ஆனா நாம அமானுஷ்யங்களை நம்பிகிட்டே அதே சமயம் அதுக்கு எதிரா நடக்க நினைக்கறோம்...”
“நீங்க இந்தப் பழநி பண்டார சித்தர் பேச்சுக்கு இவ்வளவு முக்கியத்துவமா தருவீங்க...”
“என்ன அப்படிச் சொல்லிட்டீங்க... திவ்யப்ரகாஷ்ஜீ சொன்னபடி அந்த தீட்சிதரும் பானுவும் பாம்பு கடிச்சு உயிருக்குப் போராடி யிருக்காங்க. சரியான சமயத்துக்கு இவர் வந்து காப்பாத்தியிருக்காரு. லிங்கம் ஏடுன்னு அவ்வளவும் திரும்ப ஜமீன் பங்களாவுக்கே போயிருக்கு. இது சாதாரண விஷயமா?”
“பயமுறுத்தறீங்களே அரவிந்தன்...”
“உள்ளதைத்தான் சொல்றேன். சொல்லப் போனா, நாம் இப்ப பெரிய ரிஸ்க் எடுத்திருக்கோம். ஒரு பக்கம் உண்மையாங்கற ஆராய்ச்சி. மறுபக்கம் நூறு கோடிக்கான டீலிங்.”
-அரவிந்தன் சொல்லி முடிக்கும் முன் ஓலா தேடி வந்தது. அதைக் கைகாட்டி, திரும்பி வரச் செய்து அதில் ஏறி அமர்ந்தான். இருவருமே பின் சீட்டில் அமர்ந்தனர்.
காரும் கிளம்பியது... டிரைவரிடம் ஜமீன் பங்களா பற்றிச் சொன்ன நொடி ``தெரியும் சார்...” என்றார் டிரைவர்.

ஜெயராமன் முகத்தில் பலத்த யோசனை.
“ஆபீஸுக்கு போன் பண்ணி லேப் டாப்போடு வரச் சொல்லுங்க.”
“சொல்றேன். எல்லாத்தையும் ஒரு பென்டிரைவ்ல காபி பண்ணி வெச்சுக்கறதுதான் பாதுகாப்பு... இல்லையா?”
“நிச்சயமா... இப்ப அதுதான் நம்ப முதல் வேலை...”
- ஜெயராமன் அலுவலகத்துக்கு போன் செய்யத் தயாரானார். அரவிந்தனும் சாந்தப்ரகாஷுக்கு போன் செய்தான் ஸ்விட்சுடு ஆஃப் என்று வந்தது. திவ்யப்ரகாஷ்ஜிக்கும் போன் செய்தான்... அதே பதில்தான்.
அதற்குள் ஜெயராமன் சொல்லி முடித்திருந்தார்.
அரவிந்தன் முகத்தில் சலனம்.
“யாருக்கு போன் பண்ணுனீங்க?”
“சாந்தப்ரகாஷ், திவ்யப்ரகாஷ் ரெண்டு பேருக்குமே பண்ணினேன். ஸ்விட்சுடு ஆஃப்!”
“ஓ நாங்களும் வரோம்னு சொல்றதுக்காகவா?”
“ஆமாம்... அவங்க பாட்டும் கிளம்பிட் டாங்கன்னா?”
“நாளைக்கு நைட் சித்ரா பௌர்ணமி... அவங்களால போயிட முடியும்.
ஒரு வேளை கிளம்பிட்டாலும் பாதகமில்லை. நாம ஃபாலோ பண்ணிப் போவோம்...”
“சார்... கேக்றேனேன்னு தப்பா எடுத்துக்காதீங்க... நாம அவசியம் போகத்தான் வேணுமா?”
“ஏன் அரவிந்தன்... போகர் வருவார்ங்கற விஷயத்துல உங்களுக்கும் இப்ப சந்தேகம் வந்துடிச்சா?”
“இல்ல சார்... நாம இங்கையே இப்படி இருந்துடறதுதான் சரின்னு தோணுது. அப்பறம் அந்த ஏடுகள்... அதுல அப்படி என்னதான் எழுதியிருக்குன்னு பாக்கற ஆர்வம்தான் இப்ப எனக்குள்ள பிரதானமா இருக்கு...”
“போகும்போது அதைப் பார்த்துப் படிச்சிகிட்டே போவோமே?”
“ரிஸ்க் சார்... உங்களுக்கு பயமா இல்லையா?”
- அரவிந்தன் அழுத்தமாகக் கேட்டான். அப்போது டிராஃபிக்கில் அந்தக் காரும் தேங்கி நின்றது. முன்னால் சிரித்தபடியே கிராஸ் செய்து கொண்டிருந்தார் பழநி பண்டார சித்தர்.
அரவிந்தனுக்கு உதறல் எடுக்கத் தொடங்கியது.
- தொடரும்.