மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இறையுதிர் காடு - 82

இறையுதிர் காடு
பிரீமியம் ஸ்டோரி
News
இறையுதிர் காடு

“ஓ... இப்ப அதுதான் உங்க சிக்கலா?”

அன்று

மேழிமடையார் புலிப்பாணி என்கிற பெயரைக் கேட்ட மாத்திரத்தில் சிலிர்த்திட, மற்றவர்களிடமும் பெரும் புல்லரிப்பு. புலிப்பாணியும் அவர்களை அளப்பதுபோல் பார்த்தபடியே யவ்வன சூரிக்காகவும் முயன்றார்.

“சாமி... உங்களப் பத்தி நிறைய கேள்விப்பட்டி ருக்கோம். சாமியின் சீடர்களிலேயே உங்களதான் அவருக்கு ரொம்பப் பிடிக்கும்னு முக்காலம் (ஜோசியம்) சொல்றதுல உங்களவிட்டா ஆளே இல்லேன்னெல்லாம் நிறைய கேள்விப்பட்டிருக்கோம் சாமி...” என்று ஓதுவார் தன் பரவசத்தை முன்வந்து வெளிப்படுத்தினார்.

“சாமி... நிஜமா நீங்கதான் புலிப்பாணி சாமியா? கேக்கறேன்னு என்னைத் தப்பா நினைச்சிடாதீங்க... உங்களுக்கு ஒரு அம்பது வயசு இருக்கலாம்னு தோணுது, ஆனா போகர் சாமிக்கும் அவங்க சிஷ்யங்களுக்கெல்லாம் இப்ப இருந்தா ஐயாயிரம் ஆறாயிரம் வயசுல்ல ஆகியிருக்கும். அப்படி இருக்க...?”

- மேழிமடையார் தன் சந்தேகத்தை தைரியமாகக் கேட்டு வெறித்தார்.

பதிலுக்கு தன்னைப் புலிப்பாணி என்று சொல்லிக்கொண்ட சித்தர் நிதானமாய்ச் சிரித்தார். சிரித்துக் கொண்டே மூலிகை அடைகளைத் திருப்பிப் போட்டார்.

“சாமீ...”

“என்ன?”

“எதுவும் சொல்லாமச் சிரிச்சா என்ன அர்த்தம்..?”

“என் பேச்செல்லாம் அவ்வளவுதான்... அதை நம்பறதும் நம்பாததும் உங்க விருப்பம். அப்புறம் என் கேள்விக்கு பதில் சொல்லவேயில்லை யாரும்..?”

“சாமீ...!”

“என்னடே?” (சலிப்புடன்)

“இல்ல... எதை வெச்சு சாமி உங்கள நாங்க நம்பறது?”

“ஓ... இப்ப அதுதான் உங்க சிக்கலா?”

“ஆமாம் சாமி... காட்ல வர்ற வழியில எல்லாம் சில மோசமான அனுபவங்கள், அதான்... முதல்ல களவு... அப்பால காயம்... இப்ப நீங்க?”

“சரி... நான் என்ன செஞ்சா நீங்க நம்புவீங்க...?”

“புலிமேலயே உக்காந்து போய் உங்க குருவான போகர்சாமிக்குத் தண்ணி கொண்டு வந்து கொடுக்கப்போய்த்தானே உங்களுக்கு அந்தப் பேர் வந்தது?” அதுவரை பேசியிராத கரும்பாயிரம்கூட அப்போது பேசினான்.

“அதனால இப்பவும் புலி மேல உக்காந்து போய்க்காட்டச் சொல்றியா?” கோபமாக அவனைப் பார்த்துக் கேட்டார் அவர்.

இறையுதிர் காடு - 82

“இல்ல... வந்து...” கரும்பாயிரம் தடுமாறினான்.

“நான் எதையும் நிரூபிக்கப்போறதில்ல - எனக்குத் தேவையுமில்ல. எல்லாரும் போங்க இங்க இருந்து...” அவரிடம் ஒரு பெரும் கோபம்...

“சாமி... பெட்டியை உங்ககிட்ட கொடுக் கணும்னா, உங்களை நாங்க நம்பாம எப்படிக் கொடுக்க முடியும்?” சிதம்பர மாணிக்கம் செட்டியார்தான் நயமாக இடையிட்டு இப்படிக் கேட்டார் - பதிலுக்கு அவரைக் கூர்மையாக வெறித்த புலிப்பாணி சித்தர், வெறிப்பை அப்படியே சிரிப்புக்கு மாற்றினார்.

“உங்க பார்வை சிரிப்பு இரண்டும் என்னை என்னென்னவோ செய்யுதுங்க சாமி...”

“இல்ல... இந்த யவ்வன சூரிக்காக இந்தப் பெட்டியை என்கிட்ட ஒப்படைக்கத் தயாராயிட்ட மாதிரி இருக்கே உன் கேள்வி... அதை நினைச்சேன்... ஆமா, உனக்குத் திரும்ப குருவைப் பாக்கற விருப்பமில்லையா?”

“அப்படியில்ல சாமி... அதே சமயம் இந்த யவ்வன சூரி பத்திக் கேள்விப்படவும் எனக்குள்ள ஒரு ஆசை...”

“சாமி... நான் பல வருஷமா தேடிக்கிட்டிருக்கறதே இதைத்தான். இந்த உடம்பு - இதோட உபாதைகள் படுத்தற பாட்டைத்தான் ஒரு வைத்தியனா தினமும் பலபேர்கிட்ட பாத்துகிட்டு இருக்கேனே...?” என்று இடைமறித்தார் மேழிமடையார்.

“அப்ப உன் இலக்கே இதுதானா?”

“ஆமா சாமி... இந்த யவ்வன சூரி பத்தி எனக்குத் தெரிஞ்சா போதும். பல ஜமீன்தார்கள், மிட்டா மிராசுகள் இதுக்காக தவமிருக்காங்க. என்னைத் தேடி வந்து என் கால்லேயே விழுவாங்கில்ல...”

“ஓ... உனக்குள்ள இப்படியெல்லாமும் கனவுகள் இருக்கா?”

- புலிப்பாணி சித்தர் கேட்ட தொனி உடையாருக்கு வேறுவிதமாகப் புரிந்தது. அவர் வரையில் தன் குணப்பாடுகளாலும் செயல்பாடுகளாலும் மேலே, உயரே உச்சியிலே என்று ஏறிக்கொண்டிருந்த மேழிமடையார் இப்போது சரேலென்று கீழிறங்குவதுபோல் தோன்றியது.

“சாமி... உடம்பை நிலைப்படுத்திட்டா போதுமே சாமி? யாரோ அல்லமர்னு ஒரு சித்தர் சாமி இருக்காராம்ல...? அவர் யவ்வன சூரி, யவ்வன காந்தின்னு அவ்வளவையும் சாப்பிட்டவராம்ல? கத்தியால அவர் கையை வெட்டினா அடுத்த நிமிசம் ஒட்டிக்குமாம்ல?”

“பரவால்லியே, அல்லமன் பத்தித் தெரிஞ்சி வெச்சிருக்கியே...?”

“தினமும் நூத்தி எட்டுச் சித்தர் சாமி பேரைச் சொல்லிக் கும்பிடறேன் சாமி. அதுல நீங்களும் இருக்கீங்க. அதான் உங்க தரிசனம் இப்ப கிடைச்சிருக்கு...”

“சரி... அப்ப பெட்டிய என்கிட்ட கொடுத்துட்டுப் போக நீங்க தயாராயிட்டீங்கன்னு சொல்லுங்க...”

“நீங்க யவ்வன சூரிக் குளிகையைக் கொடுத்துத் திரும்பிப் போன்னு சொல்லும்போது அப்புறம் உங்க பேச்சை நாங்க கேட்கா விட்டா எப்படி?

இல்ல... அது வந்து என்னால முடியாது. பெட்டிக்கடப்பாடு போன குறிஞ்சியில இருந்து இந்தக் குறிஞ்சி வரை எண்டது. அதை நான் நேர்ல சாமி கைல ஒப்படைச்சு அவர்கிட்ட ஆசீர்வாதம் வாங்கறதுதான் சரி...” என்று சற்றுத் திக்கித்திணறிப் பேசினார் சிதம்பர மாணிக்கம் செட்டியார். முதலில் சம்மதித்தவருக்குள் அதற்குள் மன மாற்றம்.

“ஓ... போன குறிஞ்சியில ஏடு அகப்பட்டது உமக்கா?” என்று புலிப்பாணி தெரியாததுபோலக் கேட்டிட, ``ஆமா... அவர் சீடப்புள்ள உங்களுக்கு இது தெரியாதா... அப்ப நீங்க அவர் கூட இல்லையா?” என்று கூர்மையாகக் கேட்டார் ஓதுவார்.

எல்லாப் பேச்சும் கைக்குக் கை, வாய்க்கு வாய் என்றே நிகழ்ந்தபடி இருந்தது. திடுமென்று யாரோ சீட்டியடிப்பதுபோல ஒரு சப்தம்... எந்தப் பக்கமிருந்து வருகிறதென்றே தெரியவில்லை. ஆனால் புலிப்பாணி முகத்தில் மட்டும் சட்டென்று ஒரு உற்சாகத் தொற்று.

“சரி சரி... எல்லாரும் கொஞ்சம் அமைதியா இருங்க, மொழமடிச்சித்தர் வர மாதிரி தெரியுது. இடுக்குப் பாசியையும் பனிப் பூஞ்சாணத்தையும் கேட்ருந்தேன். அவருக்கு மட்டும்தான் அது இந்த உலகத்துல எங்க இருக்கும்னு தெரியும்” என்ற படியே ஒரு சட்டியில் தேங்கிக்கிடந்த நெய்யை எடுத்து எரிகின்ற குண்ட நெருப்பில் கொட்டினார்... அதுவரை சற்று அமுக்கமாய் எரிந்த நெருப்பு நெய் கொட்டவும், நிமிர்ந்து எழுந்து பெரிய உருவம் எடுத்து ஆட ஆரம்பித்தது. அப்படியே ஒரு சட்டியில் கற்றாழைச் சோற்றுடன் பலவித வேர்த்துண்டுகள் கலந்திருக்க அதையும் எடுத்து எரி நெருப்பில் ஆஹுதி பட்சணம் போல போட்டார். அதனால் விரிந்த நெருப்பு சுருங்கிப்போய் புகைபிடித்துக்கொண்டது. அந்தப் புகையால் அவர்கள் அத்தனை பேருக்கும் தும்மலும் செருமலும் உண்டானது. கண்களையும் சிறு அரம் கொண்டு ராவுகிறாற்போல் ஒரு எரிச்சலும் பொழிச்சலும் ஏற்பட்டது. மெல்ல மயக்கமும் வரப்பார்த்தது. கண்களை இரு கைகளால் கசக்கிக்கொண்டும் தும்மியபடியும் தவித்த அவர்கள் முன் கையில் ஒரு அடியளவு மாத்திரமே உடைய ஒரு மனிதர் இடுப்பில் ஒரு கோமணம் மட்டும் கட்டியவராய் தலைக்கு மேல் கலயம்போல் ஒரு பானையைச் சுமந்தபடியே வந்து கலயத்தை மெல்ல இறக்கி வைத்தவராய் திரும்ப சீட்டியடித்தார்.

“பாத்துட்டேன்... பாத்துட்டேன்... ஆள்தான் ஒரு மொழம். ஆனா எழுப்பற சப்தம் வனத்தையே கிழிக்குதே!” அவரைப் பார்த்துச் சொன்னபடியே அவரைத் தூக்கி அருகில் உள்ள பாறைமேல் தன் முகத்துக்கு நேர் அவர் முகம் தெரியும்படி நிற்க வைத்தார் புலிப்பாணி.

அப்படி அவர் செய்ததை அரை மயக்கத்தில் பார்த்த உடையாருக்கு வெலவெலத்து மயக்கமெல்லாம் ஒரு உதறலோடு நீங்கிப் போனது.

“புலி... நீங்க கேட்டதை எப்படியோ கொண்டு வந்துட்டேன். மழைத்தண்ணி படாம கொண்டு சேர்க்கறது பெரும்பாடாப்போச்சு. இடுக்குப்பாசி சுலபமா கிடைச்சிடிச்சு - பனிப்பூஞ்சாணம்தான் சுத்த விட்ருச்சி...”

“அப்புறம்.. எங்கதான் கிடைச்சது?”

“அகத்தியர்தான் இடத்தைக் காட்டிக் கொடுத்தார்... கைலாசகிரி மலைமேல ஒரு குகை... அங்க பனியில ஒடுங்கிக் கிடந்த மலைப்பசுவோட பிருஷ்டத்துல இருந்தது. பசு மடங்கிக் கிடந்தது. அதோட தூக்கம் கெடாதபடி வழிச்சு எடுத்து வந்திருக்கேன்” என்று மொழமடிச்சித்தர் சொன்னது உடையார் காதில் விழுந்து அவருக்குள் பட்டுப்பூச்சிகள் எழும்பிப் பறக்க ஆரம்பித்திருந்தன.

இறையுதிர் காடு - 82

கைலாசகிரி, மலைப்பசு, பிருஷ்ட பாகம் - அதில் பனியின் பூஞ்சாணம்... இதெல்லாம் என்ன, இது எதற்கு, இப்படியாய் கேள்விகளில் சிக்கியவர், எதிரில் அந்தக் கலயத்தை வாங்கிக் கண்களில் ஒற்றிக்கொண்டே உட்புறம் பார்த்தார் புலிப்பாணி... அவர் கண்களுக்கு என்ன தெரிந்ததோ, ஒரு துணி கொண்டு அதன் வாய்ப்புறத்தைக் கட்டி ஓரிடத்தில் இருந்த சுரைக்குடுவை ஒன்றன் பக்கத்தில் பாதுகாப்பாக வைத்தார்.

மேழிமடையாரிலிருந்து, ஓதுவார், சிதம்பர மாணிக்கம், கரும்பாயிரம் வரை எல்லோரும் மயக்க நிலையில் அமர்ந்தும் சரிந்தும் கிடக்க, உடையார் மட்டும் விழிப்பில் சகலத்தையும் பார்த்தபடியே இருந்தார். ஆனால் அரைக் கண்களைதான் திறக்க முடிந்தது.

சென்னை பாரீஸ் கார்னரில் டூப்ளே கிளப்பில் ஒருமுறை சிவப்பு ஒயின் குடித்தபோதுகூட இப்படித்தான் இருந்தது. இனிப்பும் காரமும் கலந்த அந்த பானத்தை ஒரு அவுன்சு எட்டணா கணக்கிற்கு பத்து அவுன்சுகள் வாங்கிக் குடித்ததும் அப்போது கிறுகிறுப்பு தட்டியதும், அதேபோல் ஒரு கிறுகிறுத்த நிலை இப்போது இருப்பதையும் அந்த நிலையிலும் சாந்தப்பிரகாச பிரம்மாண்ட ராஜ உடையார் என்கிற நெடிய பெயர் கொண்ட உடையாரால் உணர முடிந்ததுதான் விந்தை. அதனால் ஒரு இனம்தெரியாத பிரமிப்பு மனதில் ஏற்பட்டிருந்தது.

இந்த மலைக்காடுதான் எவ்வளவு பெரிய விநோத சக்தி. இதனுள் புகுந்து முழுவதுமாய் 24 மணிநேரம்கூட ஆகவில்லை. ஆனால் தன் ஒட்டுமொத்த வாழ்நாளில் பார்த்திராத காட்சிகளைக் காண நேர்ந்ததில் அவர் அறிவுக் கண்களிலும் ஒரு திறப்பு.

கூரையில்லை குடிசையில்லை, ஆனாலும் இங்கே மனிதர்கள். அவர்களில் குட்டையானவர்கள் என்று உண்டுதான். ஆனால் இப்படி ஒரு முழம் மட்டுமே உடைய ஒரு மனிதர்கூட இருக்க முடியுமா? ஒரு மனிதனுக்குண்டான எல்லா அவயவங்களும் அப்படியே உள்ளன. ஆனால் உயரம் ஒரு முழமே.

இது எந்த வகை சிருஷ்டி. இவரின் தாய் தந்தைகூட இப்படி ஒரு அடிக்குள் அடங்கிவிடு பவர்கள்தானோ?

உடையார் பார்த்துக்கொண்டே இருக்க அவர்கள் உரையாடுவது காதில் விழுந்தது.

“புலி… இவுகல்லாம் ஆரு? நம்மட சாதியா?”

“இல்லயில்ல… ஒருத்தன்தான் விதிக்காரன். அதோ அந்தாளோட மூதாதையர் காசியில ஆயிரம் பேருக்குச் சோறுபோட்ட புண்ணியம் இவன் வரைல பாஷாணலிங்க பண்டாரமா (பாதுகாப்பவர்) விடிஞ்சிருக்கு. ஒரு குறிஞ்சி முடிஞ்சி மறு குறிஞ்சி பிறந்தாச்சே… இன்னிக்கு என்ன நாள்?”

“பௌர்ணமி…”

“வெறும் பௌர்ணமியில்ல… சித்திரைப் பௌர்ணமி. கடல் விசை, வெளி விசை, காற்று கனம், அக்னி அடக்கம்னு பிருத்வியிலயும் மூப்பு தரிக்கற விசேஷ நாளில்லையா?”

“ஓ… அதான் என்னைச் சதுரகிரிய விட்டு வரச் சொன்னியா… உன் குருவை நான் இன்னிக்கு பாக்கப்போறேனா?”

“ஆமா… இந்த முறை யவ்வன சூரியோட வான்னு எனக்கும் உத்தரவு. போன முறை சீனத்து ஆஸ்ரமத்துக்குல்ல என்னை அனுப்பிட்டார்?”

“அப்ப இந்தப் பனிப்பூஞ்சாணமும், இடுக்குப் பாசியும் அதுக்குத்தானா?”

“ஆமா… நித்யசூரியான யவ்வன சூரிக்குள்ள நெடுங்கால திரவியங்களா இந்த இரண்டும் சேரணும். பாசிக்கும் பூஞ்சாணத்துக்கும் பல்லாயிர வருஷ மாறாத்தன்மை உண்டே…”

“இந்த அழியாத்தன்மைதான் மனுஷ உடம்புக்கும் அழியாத் தன்மையைத் தரப்போகுதா?”

“ஆமாம்… பஞ்சபூத ஸ்னேகத்தை இது உருவாக்கும். இப்ப நாம அதோட தாக்கத்துலல்ல இருக்கோம்…?”

“தாக்கத்துலன்னா?”

“என்ன சித்தன் நீ? காத்து நின்னுபோனா உன் சுவாசப்பை தாங்குமா?”

“ஊஹூம்…”

“தண்ணிகுடிக்காம எவ்வளவு நாள் இருப்பே?”

“ஒரு அஞ்சாறு நாள்…”

“நெருப்பைத் தொடுவியா?”

“கிட்டயே போக மாட்டேன்…”

“இதெல்லாம்தான் தாக்கம்… யவ்வன சூரிய சாப்பிட்டவனுக்கோ அஞ்சும் அவன்கிட்ட கெஞ்சும்…”

“அப்ப எனக்கும் கொடுக்கிறியா?”

“இது சித்தப்பிரசாதம். என் குரு இதை யவ்வன பாலான்னு தான் கும்பிடற சக்தி அம்சமாவே சொல்வார்… அவர் பார்த்து உனக்குக் கொடுத்தா வாங்கிக்கோ…”

“நீ இதை சாப்பிட்டதாலதான் இப்பவும் அப்படியே இருக்கியா?”

“அப்படியும் சொல்லலாம். ஆனா என் குரு இதைச் சாப்பிடலை. இதைச் சாப்பிட்டா உடம்பை உதிர்க்கத் தேவையில்லாமப்போயிடும். மலம் மூத்திரம் நிரந்தரமாயிடும்.”

“அதனால என்ன?”

“மலமும் மூத்திரமும் கர்மப் பிறவிகளுக்கானது. காரணப் பிறவிகளுக்குமானது. ஆனா சித்தன் உடம்பு மலம் மூத்திரத்தை ஜெயிச்ச ஒரு விசித்ரம். பிரம்மனே வியக்கற ஈசக்காரனே சித்தன்.”

“அப்ப நாம ஈசக்காரங்களா?”

“அதுல என்ன சந்தேகம்? இதோ இவங்களுக்கு பூமியில உற்றார் உண்டு – உறவுண்டு – வீடு வாசல் மாடு கழனின்னு கைவிட்டுப் போற சொத்து தான் உண்டு. நமக்கு பூமியே சொந்தம் – வானம் சொந்தம் பஞ்ச பூதங்களுமல்ல சொந்தம்.”

“ஈசக்காரன்னா ஈசன்னும் ஒரு பொருள் உண்டில்ல?”

“ஆமா… நாம ஈசனோட அம்சங்கள் – அவன் பிள்ளைகள் – கர்மப்பிறப்பெடுத்து அதைக் கடைஞ்சு ஈசக்காரனா ஆனவங்க…”

- மொழமடிச் சித்தரும், புலிப்பாணியும் பேசிக் கொள்வது உடையார் காதில் விழுந்தபடியே இருந்தது.

“இந்த வனம் மட்டும் புதியதில்லை… இந்த வார்த்தைகளும் புதிது. இதையெல்லாம் வைத்துதான் அவ்வைக் கிழவி கற்றது கைமண் அளவென்றாளா?”

- உடையார் செருமாந்திருந்தார். அவர்கள் பேச்சு தொடர்ந்தது.

“புலி… இன்னிக்கு குருவைக் காணத்தான் இவங்கல்லாம் வந்திருக்காங்களோ?”

“ஆமாம்… எல்லார் ஜாதகத்துலயும் கேது சிறப்போட இருக்கான். குரு பார்வையும் இருப்பதால இதுவரை வந்துட்டாங்க. ஆனா சனி இரண்டு பேரைப் பிடிச்சி இழுத்துக்கிட்டே இருக்கான். ஒருத்தன் காலை உடைச்சிட்டான். இன்னொருத்தனை ஆசையால உடைக்கப் போறான்…”

“என்ன சொல்றே?”

“நான் ஆசை காட்டியிருக்கேன்… இந்த யவ்வன சூரியைத் தரேன்னு… வாங்கிட்டுத் திரும்பிப் போகப்போறாங்க…”

“எனக்கு மட்டும் குரு தரணும், இவங்களுக்கு இதை நீ தூக்கித் தந்துடுவியோ?”

“அவசரப்படாதே… யவ்வன சூரியை நான் தூக்கித்தர இவங்க என்ன நம்மளப்போல ஈசக்காரங்களா… சும்மா கல்ப கோலியதான் தரப்போறேன். அதுவே இவங்க சாகற வரை நோய் நொடி இல்லாமச் செய்துடும். ஆனா விதிமுடிஞ்சா கிளம்பித்தான் தீரணும்.”

“இப்படி ஏமாத்தறது சரியா?”

“பேராசைக்காரங்களை இப்படித்தான் சமாளிக்கணும். சித்த சொத்தை அடைய ஒரு யோக்கியதை இருக்கு. வர்ற வழியில சில பரீட்சைங்க வெச்சதுல தேறிட்டாங்க. இது உச்சபட்சம்.”

“ஆமா இன்னிக்கு சாமி தரிசனத்துக்குக் கூட்டம் அதிகம் இருக்குமோ?”

“எப்பவும் போல 48 பேர்தான். ஆயிரம் பேர் புறப்பட்டாலும் 48 பேராலதான் சித்தன் பொட்டலுக்குள்ள நுழைய முடியும். குருவும் பழநியில இருக்கற சமாதிய விட்டுக் கிளம்புவார்…”

“அப்ப அவங்கள்ள ஒருத்தருக்குத்தான் அடுத்த வாய்ப்போ?”

“ஆமா… இந்தச் செட்டியார் கொஞ்சம் தடுமாறிட்டார். ஒரு ஏட்டையும் களவு கொடுத்துட்டார். அந்தக் களவாணியை நான் மூலிகை எடுக்கப் போன இடத்துல கண்டேன். ரசவாத தங்கத்துக்காகப் பொன்னாவரையைத் தேடி வந்தவனை அந்தப் பொன்னாவரைப் புதருக்குள் இருந்த கார்கோடகன் கடிச்சதுல நீலம் பாரிச்சு செத்துப்போனான். அவன் கைல இருந்த ஏட்டை நான் எடுத்துக்கிட்டு அப்படியே அவன் உடம்புக்கு நெருப்பை வெச்சிட்டு வந்தேன். என் கை நெருப்பு அவனுக்கு அடுத்து வைத்தியப் பிறப்பைக் கொடுக்கும்.”

“ஒரு மரணத்தைப் பார்த்த நிலைல அதன் அடுத்த பிறப்பைக்கூட உன்னால கணக்கிட முடியுதே புலி… எனக்கும் உன் ஜோசியத்த சொல்லிக்கொடேன்.”

- அவர்களின் தொடர் பேச்சில் உடையார் பிரமித்துப்போனதோடு, தன் சகல கேள்விகளுக்கும் விடை கிடைத்துவிட்டது போலவும் உணர்ந்தார். அப்படியே எக்காரணம் கொண்டும் திரும்பிவிடாமல் இன்று இரவில் போகரை தரிசித்தே தீருவது என்கிற வைராக்கியத்திற்கும் ஆட்பட்டார்.

மதிய சூரியன் மாலைச் சூரியனாகிக் கொண்டிருந்தான். சில மணிகளில் இருள் சூழ்ந்து விடும். வரப்போகும் இரவு சித்திரைப் பௌர்ணமி இரவு. புலிப்பாணி சொன்னதுபோல் கடல் விசை, வெளி விசை, காற்று கனம், அக்னி அடக்கம், பிருத்வியாகிய நிலத்திலும் மூப்பு தரிக்கும் காலம். உடையாருக்கு முதல் முறையாக தனக்கு மட்டும் ஒரு நல்ல வழி பிறக்கப்போவது போல் தோன்றியது!

இன்று அந்தப் பண்டார சித்தரை அரவிந்தன் மட்டும்தான் பார்த்தான். ஜெயராமன் பார்வை பக்கவாட்டில் இருந்தது. விசுக்கென்று தோன்றி மறைவதுபோல் அவரும் மறைந்து விட்டார்.

காரும் டிராஃபிக்கிலிருந்து விடுபட்டு வேக மெடுத்தது. அரவிந்தனுக்குள் ஒரு பயம் கலந்த இறுக்கம்.

“என்ன அரவிந்தன் அமைதியாயிட்டீங்க… பயமா இல்லையான்னு கேட்டீங்கில்ல… கொஞ்சம் கூட பயமில்லை, ஆனா த்ரில்லா இருக்கு…”

“சித்தர்கள் விஷயமே த்ரில்தான் சார்… ஆனா ஆபத்தும்கூட…”

“என்ன ஆபத்து?”

“அந்தப் பண்டார சித்தர் இப்ப நம்ம காரை கிராஸ் பண்ணிப் போனார். அதுவும் என்னப் பார்த்து சிரிச்சுக்கிட்டே… நீங்க பார்க்கலையா?”

“நெஜமாவா..?”

“சத்யமா சார்...”

“அது எப்படி அரவிந்தன்… அவர் சாயல்ல யாராவது இருக்கும்…”

“இல்ல சார்… அவர்தான். அவர் லேசுப்பட்ட ஆள் இல்லை சார்…”

“அப்படின்னா… புரியற மாதிரி சொல்லுங்க…”

“அவரைப் புரிஞ்சிக்கவே முடியல. அப்புறம் எப்படிப் புரியற மாதிரி சொல்றது. சுருக்கமா சொல்றதா இருந்தா இப்ப, இங்க அவரை நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கல சார். அவர் வந்து பானுவையும், தீட்சிதரையும் காப்பாத்தின தெல்லாம் சாதாரண விஷயங்களில்லை…”

இறையுதிர் காடு - 82

“எனக்கு அப்படித் தோணலை. பானுவும் தீட்சிதரும் நிஜமா சாகக்கிடந்தாங்களா... நாம அதைப் பார்க்கவே இல்லையே..?”

“அப்ப நீங்க யோகி திவ்யப்ரகாஷ் சொன்னதை நம்பலியா?”

“ஓ... நீங்க அப்படி வரீங்களா?”

“சார் எதுவும் பொய் இல்ல… யோகி திவ்யப்ரகாஷ்ஜி சொன்னபடி தீட்சிதர் வீடு, அங்க நாகர் சிலை எல்லாமே இருக்கு. தீட்சிதரும் பானுவும் இருந்திருக்காங்க, போலீஸும் வந்திருக்கு… ஆனா பிரயோஜனமில்லை. எல்லாமே இந்தப் பண்டார சித்தராலதான்…”

“சரி, முடிவா என்ன சொல்றீங்க?”

“இவர் நாம எங்க போனாலும் விடமாட்டார் சார்…”

“அதனால?”

“இவர் இருக்கறவரை நம்மால அந்த போட்டோ ஸ்டேட் காப்பிகளைப் படிக்கவோ இல்லை விக்கவோ முடியாது சார்…”

“இந்த ஆளோட சில சித்துவேலை உங்களை இவ்வளவு தூரம் பாதிச்சிடிச்சா?”

“சார், சித்துவேலையோ இல்லை உண்மையான சக்தியோ, கண்ணால பார்த்தவன் நான்… ஒரு தென்ன மரம் இவர் கேட்ட உடனே இளநீரைத் தருது சார்… நம்புவீங்களா? இவர் சொன்ன எந்த விஷயமும் இதுவரை பொய்யாகல…”

இருவரும் தங்களை மறந்து பேசிக்கொண்டு வருவது அந்த ஓலா கார் டிரைவருக்குப் பெரும் குழப்பமாக இருந்தது, அவன் பார்க்கவும்தான் அரவிந்தனும் சுதாரிக்கத் தொடங்கினான். இனி இந்தப் பேச்சு இந்தக் காருக்குள் வேண்டாம் என்பதுபோல சைகை காட்டினான். ஜெயராமனும் புரிந்துகொண்டார்.

பிரம்மாண்ட ஜமீன் பங்களா. பங்களாவின் பின்புறக் காட்டுப்பகுதியில் இருக்கும் ஜீவ சமாதி முன் சாந்தப்ரகாஷும் சாருபாலாவும் திவ்யப்ரகாஷ்ஜியுடன் நின்றுகொண்டிருந்தனர். சமாதியின் மேல் காவல் நாகத்தின் உயிரில்லாத உடல் சுருண்டு கிடந்தது.

காவல்காரக் கிழவர் கண்ணீரோடு பூக்களைப் பறித்து வந்து சமாதிமேல் துவி வழிபடச் சொன்னார். அவர்களும் அப்படியே செய்தனர். கிழவரிடம் தழுதழுப்பு…

“நான் எப்பவும்போல கட்டில்ல படுத்திருந்தேன்… ஸ்ஸ்… ஸ்ஸ்ங்கற சப்தம் கேட்கவும் எழுந்து பார்த்தேன். சர்ப்ப வடிவத்துல சாமி என்னைக் கூப்பிட்ட மாதிரியே இருந்தது. பின்னாலேயே போனேன். –இங்க வந்து பார்த்தபோது சமாதி மேல சுருண்டு படுத்த மாதிரி தெரிஞ்சது. பிறகுதான் உயிர் போயிடிச்சின்னு தெரிஞ்சது. அப்ப பழநியைச் சேர்ந்த பண்டார சாமி ஒருத்தர் மூட்டையா பாஷாணலிங்கத்தையும் ஏடுகளையும் கட்டி எடுத்து வந்து இங்க வெச்சாரு. சாமி எப்படி உங்க கிட்டன்னு கேட்டேன். நான் பழநிக்காரன். அதுக்குமேல கேக்காதே. உன் எஜமானர் காலம் முடிஞ்சிபோச்சு… இதை உரிய இடத்துல சேக்கணும். வாரிசுங்க வருவாங்க, அவங்ககிட்ட சொல்லிடுன்னு சொல்லிட்டுப் போய்ட்டாரு. ராத்திரியே சித்ரா பௌர்ணமி தொடங்கிடுது. அந்த மூட்டை என் சாமியோட பாதாள அறைலதான் இருக்கு. இங்க கும்பிட்டுட்டு அதையும் எடுத்துக்கிட்டு வேகமாக் கிளம்புங்க. விரட்டிப் போகணும். விடியக்காலை பிரம்ம முகூர்த்த நேரத்துலதான் போகர் சாமி பிரசன்னமாவாராம்… இப்ப மணி நாலு. விரட்டிப் போனா காலை 4 மணிக்கு சித்தன் பொட்டல் போயிடலாம். அங்க நீங்க ஒப்படைச்ச பிறகுதான் இங்க நான் இந்தப் பாம்போட உடம்பை எரிக்கணும். இதுவும் அந்தப் பழநி சாமி சொன்னதுதான்.

இந்த நாளுக்காகத்தான் என் சாமி சுத்திச் சுத்தி வந்திருக்காருன்னு நான் நினைக்கறேன்...’’ என்று சொல்ல வேண்டியதைச் சொல்லிமுடித்தார்.

திவ்யப்ரகாஷ்ஜியும் சாந்தப்ரகாஷைப் பார்த்தார்.

“சந்தா… இவர் சொன்னதெல்லாம் ரொம்பவே சரி. யுஎஸ்ல இருந்து உன்னை வரவெச்சு நம்ப தாத்தா நமக்கு உணர்த்தவேண்டிய எல்லாத்தையும் உணர்த்திட்டாரு.

பெட்டில இருந்து மதியூகரணிங்கற ஒரு விசேஷ ஏட்டுக்கட்டை நான் எடுத்தது பெரிய தவறு. இதே மாதிரி ஒரு தப்பை தாத்தாவும் செய்திருக்கணும். அதனாலதான் லிங்கத்தையும் ஏடுகளையும் தாத்தா போகர் சாமிகிட்ட திட்டமிட்டபடி ஒப்படைக்க முடியாமப் போயிடிச்சுன்னு நினைக்கறேன்.

தன்னால ஒப்படைக்க முடியாமப் போன தவற்றுக்குப் பிராயச்சித்தமாதான் அவர் காத்திருக்காரு. நம் கையால நாம பிராயச்சித்தம் செய்யணும்கறது அவரோட விருப்பம். அதனாலதான் ஏடுகளையும் லிங்கத்தையும் யாரும் களவாட அவர் விடலை… இதுக்குள்ள நமக்கு இன்னும் புரியாத சில விஷயங்கள் இருக்கு. எனக்கு இவ்வளவுதான் தோணுது. நாம நம்ம கடமையைச் சரியா செய்து முடிச்சாப் போதும். நம்ப குடும்பச் சிக்கல்களெல்லாம் தானா சரியாயிடும்’’ திவ்யப்ரகாஷ்ஜி பேச்சில் ஒரு மகா இதம்.

“ஆமாம் பிரதர், யூ ஆர் ரைட். நாம இனி ஒரு நிமிஷம்கூடத் தாமதிக்கக்கூடாது, கமான்…” என்று சந்தாவும் துரிதமானான்.

அவர்கள் மூவரும் வேகமாய் அந்தச் சமாதியை விட்டு நடக்க, தாத்தா முன்னால் நடந்தார். பங்களாவினுள் நுழைந்தவர்கள் பாதாள அறை இருக்கும் இடத்தை அடைந்து வரிசையாக ஏணி வழியே அறைக்குள் இறங்கினார்கள். உள்ளே ஒரு குத்துவிளக்கு எரிந்தபடி இருக்க, சுவரில் வரையப்பட்டிருந்த லிங்க உருவத்தின் முன் கீழே ஒரு மரப்பெட்டியும் அதன்மேல் லிங்கமும் பெட்டிக்கு முன்னால் ஏட்டுக்கட்டுகளும், சிறிய சங்கு, சில ரசமணிகள் காய்ந்த வில்வ இலைகள், அப்புறம் டைரி என்று எல்லாம் இருந்தன. அறைக்குள் ஆச்சர்யமாய் விபூதி வாசமும் அகலாது மூக்கை நிரடியது.

“இந்தப் பெட்டி ஏது?” என்று சாந்தப்ரகாஷ் கேட்டான். “இதுவும் அந்தப் பழநி சாமி கொடுத்ததுதான். என் சாமியோட பழைய பெட்டியை உடைச்சிட்டாங்களாமே?”

“அது எப்படி உங்களுக்குத் தெரியும்?”

“பழநி சாமிதான் சொன்னாரு…”

“அவரை இதுக்கு முந்தி பார்த்திருக்கீங்களா?”

“அப்பப்ப சமாதிக்கு வந்துட்டுப் போவாரு…”

“தாத்தாவுக்குப் பழக்கமோ?”

“ஆமாம்… சிறு வயசா இருக்கறப்ப இருந்தே பழக்கம்… அவரும் லேசுப்பட்டவர் இல்ல… பெரும் சித்தன்.”

“அவர் மட்டும் இல்லேன்னா இது எதுவும் திரும்பி வந்திருக்காது. நல்ல வேளை… இந்த நொடி எதுவும் கைமீறிப் போயிடலை…” என்றபடியே பெட்டிக்குள் சகலத்தையும் வைத்துப் பூட்டி, பெட்டியை சாந்தப்ரகாஷ் தலைமேல் தூக்கி வைத்தார் திவ்யப்ரகாஷ். மறக்காமல் தன்வசம் வைத்திருந்த மதியூகரணி ஏட்டையும் உள்ளே வைத்திருந்தார்.

சாருபாலா நெற்றி நிறையப் பூசிய விபூதியோடு ஒரு பெரும் பரவசத்தில் இருந்தாள். வாந்தி, மசக்கை என்கிற இடையூறுகளே துளியும் இல்லை.

ஏணி வழியாக மேலேறி வந்து, காரை நோக்கி நடந்து பதவிசாகப் பெட்டியையும் பின்னால் வைத்தனர். காரின் டேஷ் போர்டில் மூன்று பேரின் செல்போன்களும் சார்ஜ் போன நிலையில் கிடந்தன.

சாந்தப்ரகாஷ்தான் காரை இயக்கினான். பக்கத்தில் திவ்யப்ரகாஷ் ஜி. பின்னால் சாரு.

“நம்ப வாழ்க்கைல ரொம்ப முக்கியமான நாள் இந்த நாள். இந்தக் கடமையை நாம சரியா செய்து முடிச்சிட்டா அதைவிட வேறு எதுவும் இல்லை.

இதுல ரொம்ப முக்கியம் போகர் சித்தரோட தரிசனம். கற்பனையா, ஃபேன்டசியா, நம்ப முடியாத ஒரு விஷயமா, ஏன், சிலர் வரைல ஒரு மிகப் பெரிய பொய்யாக் கருதப்படற சித்த விஷயங்களில் போகர் சித்தர் இப்பவும் நடமாடுறார்ங்கற விஷயமும் ஒண்ணு. அப்படி ஒரு விஷயத்தை நம்ப தாத்தாவால நாம பாக்கப் போறோம். யாருக்கும் கிடைக்காத பாக்கியம் நமக்குக் கிடைக்கப்போகுது” என்று நெகிழ்வுடன் பேசிய திவ்யப்ரகாஷ்ஜி “இதுக்காக பெருசா ஆசைப்பட்ட எடிட்டர் ஜெயராமன், எழுத்தாளர் அரவிந்தன் இப்ப தடம் மாறிட்டாங்க… பெரிய குழப்பத்துலயும் இருக்காங்க’’ என்று முடிக்கவும், சாருதான் அதிக அதிர்வடைந்தாள்.

“அண்ணா, என்ன சொல்றீங்க… அவங்க தடம் மாறிட்டாங்களா?”

“ஆமாம்மா… என் சக்தியை முன்னப்போல என்னால பயன்படுத்த முடியல. அந்தப் பழநி பண்டார சித்தர் என்னை உத்துப் பார்த்ததுல இருந்தே எனக்குள்ள ஒரு தளர்வு. இந்த உலகமே பிரமிப்பா பாக்கற ஒரு யோகியா நான் நீடிக்க முடியுமான்னு எனக்கு இப்ப சந்தேகம் வந்திருக்கு. நான் செய்த தப்புக்கும் சேர்த்துதான் போகர் கால்ல விழ ஆசைப்படறேன்.,.”

“உங்க விஷயம் இருக்கட்டும்… அவங்க தடம் மாறிட்டதா எதை வெச்சுச் சொல்றீங்க?”

“என் மனசுக்குப் பட்டுச்சி… அநேகமா அவங்களை இப்ப போலீஸ் வளைச்சுப் பிடிக்கக் கூடும்.”

இறையுதிர் காடு - 82

“அவங்க என்ன தப்பு பண்ணுனாங்க?”

“நம்பகிட்ட மூலம் இருக்கு. இதோட போட்டோ ஸ்டேட் காப்பியெல்லாம் அரவிந்தன் கம்ப்யூட்டர்ல இருக்கே. அதை ஒரு பென் டிரைவுக்குள்ள அடக்கிச் சுருட்டியில்ல வெச்சிருக்காரு… இதெல்லாம் சித்த ரகசியங்களில்லையா...’’

“அந்த ரகசியங்களால அவங்களுக்கு என்ன பிரயோஜனம்?” சாரு ஒரு குழந்தைபோலவே கேட்டாள்.

“அம்மாடி… நீ என்ன இவ்வளவு வெகுளியா இருக்கே? நான் இந்த ஏடுகள் அவ்வளவையும் பார்த்தவன். இந்த பூமி உருண்டையோட ஒட்டுமொத்தத் தலையெழுத்தே இந்த ஏடுகளில் இருக்கும்மா… அதைப் பத்தி நான் சுருக்கமாச் சொல்றேன். அப்பதான் அந்த எம்.பி ஏன் இப்படிப் பறக்கறார்னு உனக்கும் புரியும்” என்றார்.

“பாரதி நல்ல பெண்ணாச்சே… அவங்கப்பா தப்பு செய்ய விடுவாளா?” சாரு சரியாகத்தான் திருப்பிக் கேட்டாள்.

“இனி எல்லாமே பாரதி கைலதான்னு என் மனசுக்குப் படுது… ஆமாம், பாரதிதான் இனி எல்லாம்...”

- திவ்யப்ரகாஷ்ஜி தீர்க்கமாகச் சொன்னார்.

- தொடரும்…