மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இறையுதிர் காடு - 83

இறையுதிர் காடு
பிரீமியம் ஸ்டோரி
News
இறையுதிர் காடு

குட்டை மனிதரான மொழமடியார் நிமிர்ந்து தன்னையும் பெட்டியையும் பார்த்தபடி இருந்த புலிப்பாணியாரைப் பார்த்தார்.

அன்று உடையார் மயக்கமின்றி, மயங்கியவர் போல் அரை மயக்கத்தில் கிடப்பதையும், தான் பேசுவதை எல்லாமும் அவர் கேட்டபடி இருப்பதும் புலிப்பாணிக்குத் தெரிந்தே இருந்தது. மொழமடிச் சித்தரும் புலிப்பாணியார் சொன்னதை வைத்து அங்கே ஓதுவார் அருகில் இருந்த பெட்டியை நெருங்கி அதை வருடிப்பார்க்கலானார். அவர் உயரம்தான் இருந்தது அந்தப் பெட்டி. அதன் மர உடம்பு மேல் ஏராளமான சந்தனப் பொட்டுத் திவலைகள். நடுவில் பட்டை போட்டு, குங்குமமும் வைக்கப்பட்டிருந்தது.

அந்தக் குட்டை மனிதரான மொழமடியார் நிமிர்ந்து தன்னையும் பெட்டியையும் பார்த்தபடி இருந்த புலிப்பாணியாரைப் பார்த்தார்.

இறையுதிர் காடு - 83

“என்னவே... உள்ள பாக்க ஆசையா இருக்கா?”

“ஆமாம்... ஊர் ஊரா சுத்தற இந்த சாமிய பாக்கணும்னு ஆசையாதான் இருக்கு...”

“இது ஒரு விசித்திரம்... கன்னிவாடி மலைக்குகைல செஞ்ச அதிசயமும்கூட... இதோட கோத்து செய்ததுதான் பொதினி தண்டபாணி சாமி உருவம்..!”

“பொதினியா?”

“ஆங்... அன்னிக்குப் பொதினி... இன்னிக்குப் பழநி...”

- பேசிக்கொண்டே பெட்டியைத் திறந்தார் புலிப்பாணி. திறந்த மாத்திரத்தில் முகத்தில் மோதியது நவபாஷாணத்தோடு கலந்துவிட்ட சந்தன குங்குமப் பூவாசம்.

புலிப்பாணியின் கரங்கள் தன்னையுமறியாது வணங்கியது. மொழமடிச் சித்தனாகிய அந்தக் குட்டை மனிதரும் வணங்கினார். கூடவே ஏட்டுக் கட்டுகள்.

“மொழமடி... உனக்கு ஏடெழுதத் தெரியும் தானே?”

“நல்லா...!”

“அப்ப ஒரு காரியம் பண்ணலாமா?”

“என்ன?”

“இந்தக் கட்டை (தன்னைச் சுட்டிக்காட்டியபடி) இப்ப இங்க செய்துகிட்டிருக்கற யவ்வன சூரிய, ஒரு பாட்டா பதிவு செய்து சாமியோட ஏட்டுக் கூட்டத்துல சேர்த்திட விரும்பறேன்... நான் பாடப்பாட நீ எழுதறியா?”

“அதை ஏன் இதோட சேர்க்க நினைக்கறே?”

“இது பரமன் சொத்து... அழிவில்லாமக் கிடக்கும் - நிதமும் பூசையும் கிடைக்கும்.”

“அதனாலதான் இதோட இத்தினி ஏடுகளா?”

“இன்னும் பல காரண காரியம் இருக்கு... எனக்குத் தெரிஞ்சது அல்பம்... நம்ம குருவுக்குத்தான் பூரணமாத் தெரியும்.”

“இதெல்லாமே ரகசியம்... ரகசியத்தை இப்படியா எழுதி இந்தக் கருமம் பிடிச்ச பயலுக கிட்ட கொடுப்பார் நம்ம குரு...”

இறையுதிர் காடு - 83

“ஆரம்பத்துல எனக்குள்ளயும் இப்படி ஒரு கேள்வி இருந்தது. ஆனா போகப் போகத்தான் பதில் கிடைச்சது. இதுமட்டும் இல்லாம இருந்திருந்தா இப்ப நீ பாக்கற பூமி இப்படி இருந்திருக்காது...”

“என்ன புலி சொல்றே நீ?”

“இந்த பாஷாண லிங்கம் கங்கையையே பலதடவை சுத்தப்படுத்தியிருக்கு. அதோட பாவச் சுமையையும் குறைச்சிருக்கு. சித்தன் கடன்பட்ட மனுஷக் கூட்டம் ஒண்ணு இருக்கு. அவங்க கடனை இது சரியான சமயத்துல அடைச்சிருக்கு.”

“என்னென்னமோ சொல்றே... சரி யவ்வன சூரிய பத்திச் சொல்லு. நானும் எழுதிடறேன்...”

- மொழமடிச் சித்தர் முன் சில விநாடிகளில் ஏட்டுக் கட்டு ஒன்றும் அதில் பதின்மூன்று ஏடுகளும் இருக்க, மொழமடியார் கைக்கு ஏற்ப ஒரு சிறு ஊசியும் புலிப்பாணியால் தரப்பட்டது.

மொழமடியார் பெட்டியையே தனக்கான மேசையாகக் கொண்டு தயாரானார்.

“இந்த யவ்வன சூரிய சாப்பிட்டவனுக்கு ரோகமில்ல தாபமுமில்ல. காலம் எவ்வளவானாலும் வாரிசு விருத்தி உண்டு. ஆனால் துரோகமோ, பெண்பாவமோ கூடாது.”

“பெண்பாவம்னு எதைச் சொல்றே?”

“தாய்க்குக் கருமம் செய்ய மறந்துபோவது, சகோதரிக்குச் சீர் செய்ய மறுப்பது, கட்டியவள் இருக்க கட்டிலுக்கு இன்னொருத்தி வருவது, பெண் தெய்வ வழிபாடு பிசகுவது இப்படி எவ்வளவோ இருக்கு...”

“அப்ப மத்த பாவம் செய்தா ஏதுமாகாதோ?”

“எந்தப் பாவமும் எவனையும் விடாது. ஆனா நான் சொன்ன இந்தப் பாவங்களுக்குப் பரிகாரமே கிடையாது. தண்டனையே வாழ்வாயிடும்.”

இறையுதிர் காடு - 83

“அப்ப நான் இந்த யவ்வன சூரிய சாப்பிட்டா, பெண்பாவத்துக்கு இடம் கொடுத்துடக் கூடாதா?”

“ஆமாம்...”

“பஞ்சமா பாதகம்தான் பெரிய பாவம்னு சொல்வாங்க. நீ பெண் பாவத்த சொல்றியே...”

“இந்த யவ்வன ஆரியோட மூல மூலிகைகள் அவ்வளவும் பெண் சக்தி அம்சங்கள். இதுல குமரிங்கற சத்தாழைக்குப் பெரும்பங்கு உண்டு. இந்தக் குமரி சக்திதேவியோட வியர்வைல விதையாகி மண்ணுல தழைச்ச ஒண்ணு. சிவபெருமான் வியர்வை எப்படி ருத்ராட்சமாச்சோ அப்படி சக்தி வியர்வை குமரியாச்சு.

ஆணில் குமரனும், பெண்ணில் குமரியும் நித்ய சூரிகள். காலகதியை ஜெயிச்சு, கோளாதிக்கத்தையும் ஜெயிச்சவங்க... இவங்க விதியை இவங்களே எழுதிக்கலாம். ஆனா எழுதிக்கத் தெரியணும்.”

“புலி... நீயும் நம்ம குருவைப் போலவே பேசறே! கொஞ்சம்தான் புரியுது... மீதிபுரியல...’’

“போகட்டும்... நீ பாட்டை எழுது. நான் சொல்லிமுடிக்கறேன். நேரமாகுது பார்...”

“சொல்லு... சொல்லு...” மொழமடியார் தயாராகிட, எல்லோரும் மயங்கிக் கிடந்த நிலையில் உடையார் மட்டும் அரை மயக்கத்தில் அந்தப் பாடலைக் கேட்கலானார்.

“ஆதிசிவன் திருவடி போற்றி...

ஆர்த்த வேழக்கரி போற்றி...

ஜோதி வடிவான வேலவன் போற்றி...

நாதியற்ற எனக்கும் ஓதியுரைத்த

போகசித்தக் கழலடி போற்றி...” என்று இறைவணக்கமுடணும் குருவணக்கமுடனும் வரிகள் தொடங்கிற்று. மொழ மடியாரிடமும் நல்ல வேகம்...

இறையுதிர் காடு - 83

‘தா’வதில் மரை, தி’யதில் கள்ளி, து’வதில் வளை, தெ’வதில் கொமுக்கு, தொ’வதில் சிணுங்கி, ந’வதில் உருவி, நி’யதில் ஆரை, நீ’யதில் முள்ளி, நு’வதில் நுணா, நெ’வதில் நெட்டி, நே,வதில் பூண்டு, நொ’வதில் நொச்சி எனும் பன்னிரு மூலியுடன்...’

- புலிப்பாணி சொல்லியபடி செல்ல, அரைமணி கால அளவில் அந்தப் பதின்மூன்று ஏடுகள் பூர்த்தியாகி யவ்வன சூரியின் ரகசியம் வார்த்தைகளில் வடிவம் கொண்டது. எழுதி முடித்த மொழமடியாரும் உதறி நீவிவிட்டுக் கொண்டார். பின் அந்தக் கட்டும் பெட்டிக்குள் அடங்கிவிட, அதுவரை எரிந்தபடியிருந்த ஹோமகுண்டம் அவிந்து அடங்கியிருந்தது.

தான் கொண்டுவந்திருந்த பொருள்களில் திருவோடுகள் சில இருக்க, அந்தத் திருவோட்டில் அவிந்து அடங்கியிருந்த சாம்பலை அள்ளிப் போட்ட புலிப்பாணி, கற்குழி நீரை மொண்டு வந்து சாம்பலில் விட்டு அதைச் சேறு போலாக்கி, சிறு சிறு உருண்டைகளாய் ஒரு நிழல் மிகுந்த பாறையில் உலர்த்தலானார். நூற்றுக்கணக்கில் உருண்டைகள்.

“அப்ப இதுதான் யவ்வன சூரிக் குளிகைகளா?” என்று கண்கள் மலரக் கேட்டார் மொழமடியார்.

“ஆமாம்... காயவும் மரப் பெட்டிக்குள்ள எடுத்து வெச்சிடணும். நாளுக்கு ஒண்ணுன்னு நாப்பத்தெட்டு நாள். நாப்பதொன்பதாவது நாள் நரைமுடி கருக்கத் தொடங்கும், பூவிழுந்த நகமெல்லாம் புதுசா மாறும், சுருக்கங்கள் நீங்கித் தோலில் மினுமினுப்பு தெரியும், நெற்றி விரிஞ்சு கண்கள் ஜொலிக்கும். உடம்புல மருக்கள் இருந்தால் உதிர்ந்துவிழும். தழுப்புகள் அழியும்.”

“தழும்புகூட அழிஞ்சிடுமா?”

“ஆமாம். உடம்பே புதுப்பிறப்பெடுக்கும் - பழைய பதிவு எல்லாம் அழியும். இந்த யவ்வன சூரி உண்டவன் முன்னோர்க்குத் திதிகூடக் கொடுக்கத் தேவையில்லை. அவர்கள் முக்தியடைஞ்சிருப்பாங்க. இவன்தான் இனி ஆரம்பம்.”

“அப்ப இது ஒரு மிகப் பெரிய விடுதலைன்னு சொல்...”

“ஆமாம்... ஆனால் இந்தப் புதுப்பிறவிக்காரன் பெண் பாவத்திற்கு ஆட்பட்டா இந்த பலமே பலவீனமாகி எந்த உடம்பு அதன் சதையும் எலும்பும் மாறாத ஒண்ணா ஆச்சோ. அதே சதை எலும்பைச் சாப்பிட்டு வாழும் சர்ப்பமா மாறி இருளில் கிடந்து ஒளிக்கு பயந்து திரியும் படியாகிடும்.”

- புலிப்பாணி முக்கியமான இந்தக் கட்டத்தைச் சொன்னபோது அதுவரை அரைமயக்கத்திலிருந்த உடையார் முழுமயக்கத்திற்கு ஆளாகியிருந்தார்.

“புலி... அப்ப சர்ப்பப் பிறப்பெல்லாம் சாபப்பிறப்பா?”

- மொழமடியின் காற்றுக் குரலிலான கேள்வி முன் புலிப்பாணியின் சிரம் ஆமோதிப்பாய் அசைந்தது.

“சாபப்பிறப்புன்னா இதுகளுக்கு சாமி சம்பந்தம் மட்டும் எப்படி ஏற்பட்டது?” மொழமடி விடுவதாயில்லை.

“அதெல்லாமே குறியீடு, தத்துவமாப் பாக்கணும். சர்ப்பம்கற வார்த்தைல புள்ளி விலகினா சாபம். சாபம்னாலே கோபம், வெப்பம் துக்கம்கற எதிர்மறைகள்தான்... சர்ப்பம்னா நெளிவுசுளிவுன்னும் ஒரு பொருள் உண்டு. அதாவது நெளியாம சுளியாம அதால ஒரு இடத்தைக் கடக்க முடியாது.

சர்ப்பம்னா ஒண்ணே ஒண்ணுன்னும் ஒரு பொருள் உண்டு. ஆமாம். சர்ப்பத்துக்கு வாய் மட்டும்தான் எல்லாம். கை கால் மூக்கு காது கொம்புன்னு எதுவும் கிடையாது. எந்த சர்ப்பமும் விதையால விளைஞ்சதை சாப்பிடாது - விந்தால விளைஞ்ச உயிரினத்தைத்தான் உண்ணும். உயிரை விழுங்கி உயிர் வாழ்வதால இதுக்குக் காலன்னும் பேர் உண்டு.

தெய்வங்களைச் சார்ந்திருக்கும்போதுதான் இவற்றுக்கு மதிப்பு. விலகியிருக்கும்போது இவை அச்சமூட்டிகளாத்தான் இருக்கும்.

அச்சம் வேற நாகம் வேற கிடையாது.

நரகத்துல ரகரம் திரிஞ்சா நாகம்”

- புலிப்பாணியின் சர்ப்ப விளக்கம் மொழமடிச் சித்தரை வாயைப் பிளக்க வைத்திருந்தது.

“புலி... ஒரு பாம்புக்குத்தான் எவ்வளவு விளக்கம்! உன்னை நான் ஞானத்துல கரைகண்டவனா இப்ப பாக்கறேன்...”

“போதும்... எல்லாம் என் குரு போட்ட பிச்சை. என்னையே இப்படிச் சொல்றியே... அப்படின்னா என் குருவை என்னன்னு சொல்வே?”

“நம்ம குருன்னு சொல்லு... அவரைப் புகழ்ந்து சொல்ல வார்த்தைகள் மொழியில இல்லேன்னு நான் நினைக்கிறேன்”

அவர்கள் இருவரும் பேசியபடியே காயப்போட்ட உருண்டைகளைத் திரும்ப எடுத்து மரப்பெட்டிக்குள் போட்டனர்.

ஹோம குண்டம் முற்றாய் அவிந்திருக்க, மற்ற குழிகளில் உள்ள நீரையும், எண்ணெய்போன்ற திரவத்தையும் நீக்கிக் குழிகளைக் காலியாக்கி, அங்கே ஒரு முயற்சி நடந்த தடயமே இல்லாதபடி செய்தார் புலிப்பாணி. இறுதியாக, மயங்கிக் கிடந்தவர்களின் உச்சித் தலைமுடியைச் சிண்டி இழுக்கவும், அவர்களும் கொட்டாவி பிரிய எழுந்துகொண்டனர்.

மேற்கில் கதிரவன் நீர்மேல் மிதக்கும் ஒரு பரங்கிப்பழம்போலத் தெரிந்தபடி இருந்தான்.

“ஐயோ இருட்டப் போகுது... இப்படி உறங்கிட்டோமே...” என்று பதைத்தார் செட்டியார்.

“எப்படி இப்படித் தூங்கினோம்?” என்று ஆச்சர்யப்பட்டார் மேழிமடையார்.

“எல்லாம் ஹோமப் புகையாலதான்” என்று அவர்கள் கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் புலிப்பாணி.

“நல்ல வேளை இப்ப எழுப்பிட்டீங்க. இல்ல இந்த ராத்திரிய தவற விட்டிருப்போம்” என்று நன்றி பாராட்டினார் ஓதுவார்.

“சரி, என்ன முடிவெடுத்திருக்கீங்க?”

“முடிவா?”

“ஆமாம்... பெட்டிய என்கிட்ட கொடுத்துட்டுப் போற முடிவா? இல்லை இன்னிக்கு ராத்திரியில தரிசனம் தரப்போற போகர் சித்தரை தரிசிக்கப் போற முடிவா?”

- கேள்வி அவர்கள் அவ்வளவு பேரையும் கட்டிப் போட்டது.

“இருட்டப் போகுது பாருங்க - சீக்கிரமா சொல்லுங்க.”

“சாமி... எனக்கு யவ்வன சூரிய கொடுத்திடுங்க. நான் திரும்பிடறேன்” என்று தைரியமாக முதலில் பேசியது மேழிமடையார்தான்...

“அப்ப நீங்க...?” கைவிரல் செட்டியாரைப் பார்த்துக் கேட்டது.

“நான்... நான்...”

“என்ன நான்... அதான் 12 வருஷமா அனுபவிச்சிட்டீங்களே... இன்னுமா ஆசை விடலை...?”

“இது ஆசையில்ல சாமி - பக்தி.”

“சரி, என்ன உங்க முடிவு?”

“நான் சாமிய நேர்ல பார்த்து அவர்கிட்ட பெட்டிய ஒப்படைக்கறதையே விரும்பறேன்.”

“செய்யுங்க... ஆசீர்வாதம் பண்ணுவார் - ஆனா நான் அப்படி இல்லை - உங்களையே தன்வந்திரி ஆக்கறேன்.”

“அது... அது வந்து...”

“யோசிங்க...” என்ற புலிப்பாணி அடுத்து உடையாரைப் பார்க்கவும் உடையார் உறுதிபட “போகர் தரிசனமே எனக்குப் பெரிது...” என்று சொல்லவும், ஒரு சிரிப்பு துளிர்த்தது புலிப்பாணிக்கு.

கரும்பாயிரமும் ஓதுவாரும் மிரள மிரளப் பார்த்தனர்.

“உங்களுக்கெல்லாம் ஒரு விஷயம் தெரியுமோ தெரியாதோ... 48 பேருக்குத்தான் பொட்டல்ல குகைக்குள்ள நுழைய அனுமதி... மற்றவர்கள் அடுத்த தடவை தங்களுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டிக்கிட்டுத் திரும்பிடணும்.

புத்திசாலித்தனத்தைக் காட்டறேன்னு ஒளிஞ்சிருந்து பாக்கறது, ரகசியமா உள் நுழைய முயல்றது எல்லாம் பொட்டல்ல பலிக்காது. அங்கே எல்லாமே நேர்மையா வெளிப்படையாதான் நடக்கும். அதை மதிக்கணும். மதிக்க மறுத்தா தன்னையே தனக்குத் தெரியாமப்போயிடும். சித்தம் கலங்கி குற்றாலத்துல திரிய வேண்டிவரும்...”

- புலிப்பாணியாரின் எச்சரிக்கை கரும்பாயிரம் முதல், ஓதுவார்வரை சகலரையும் ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது.

பேசாமல் புலிப்பாணி தந்த சில குளிகைக் குடுவைகளை வாங்கிக்கொண்டு திரும்ப ஆரம்பித்தனர். செட்டியாரும் உடையாரும் மட்டும் பொட்டல் நோக்கி நடைபோட்டனர்.

செட்டியார் தானே பெட்டியைச் சுமக்க லானார். உடையாரிடம் ஏராளமான கேள்விகள்...

இந்த மலையில் காலடி எடுத்து வைத்ததில் இருந்து அந்தி சாயப்போகும் இந்த ஒரு பகல் பொழுதுக்குள்தான் எத்தனை விசித்திரமான அனுபவங்கள்.

செட்டியாரைவிட மேழிமடையார் பெரும் பக்தராகத் தெரிந்து பின் அவர் சராசரி மனிதராக மாறியது மட்டும் என்னவோ செய்தது.

இறையுதிர் காடு - 83

இரவும் திரண்டுவரத் தொடங்கியது.

சித்திரை நிலவும் உருட்டிவிட்ட ஒளிப் பந்தாய் மலைமேல் விண்ணகத்தில் தெரிந்திட, அதன் தண்ணொளி பால்கறப்பு போல் மலை மேல் பொழிந்திட - காற்றிலும் ஒருவகைக் கூதல்.

புலிப்பாணியும் மொழடியாரும் நடப்பதேகூட விநோதமாயிருந்தது. புலிப்பாணியாரின் ஒரு தோளில் தூளிபோல் துணிமூட்டை.

மறு தோளில் மொழமடியார் ஒரு சிறு குழந்தை தந்தை தோளில் காலைத் தொங்கப் போட்டு அமர்ந்திருப்பதுபோல் அமர்ந்திருக்க, கையிலொரு கோலை ஊன்றிக்கொண்டு புலிப்பாணி முன்னடந்தார். பின்னாலே பெட்டித் தலையோடு செட்டியார் - அவருக்கும் பின்னாலே உடையார்.

முழு இரவு சூழவும் புலிப்பாணியார் பந்தம் தயாரித்துக்கொண்டார். துணிமூட்டைக்குள் கண்ணாடி சீசா ஒன்றில் வேப்பெண்ணெய் இருந்தது. அதைத் துணியில் நனைத்து அதற்குத் தீயிடவும் பிடித்துக்கொண்டது. அதன் ஒளியில் ஏராளமான பூச்சிகள் இடைபறந்து திரிந்த நிலையில் ஒன்றிரண்டு நெருப்பில் அகப்பட்டு பட்பட்டென்று வெடித்து உயிர் விட்டன.

எந்த திசை? எவ்வளவு தூரம்? என்று எதுவும் தெரிந்திடாத ஒரு நடைப்பயணம். அருவி ஒன்று இடையிட்டு சப்தம் காதை அமுக்கிற்று.

நீர்ச்சரம் பாணங்கள்போல் பாய்ந்த படி இருந்தது. அதன் காரணமாகவே அதற்கு பாணதீர்த்தம் என்கிற பெயர் என்ற செட்டியார் தனக்குத் தெரிந்த தகவலைக் கூறினார்.

அருவியில் சில சடைபிடித்த சாமியார்கள் முழு நிர்வாணமாய்க் குளித்ததோடு, தங்கள் சடைமுடியாலேயே உறுப்புகளை மறைத்துக் கொண்டுமிருந்தனர். ஒரு மனிதர் தலை இவ்வளவு முடிக் கற்றைகளை உமிழுமா என்கிற ஆச்சர்யம் அப்போது உடையாரிடம் ஏற்பட்டது.

வட்டமாய் அமர்ந்து ஓரிடத்தில் சிலர் தீங்காய்ந்துகொண்டிருந்தனர்.

எல்லோருமே புலிப்பாணி வரவும் பின்தொடரத் தொடங்கினர். ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு என்று ஒருவர் பின் ஒருவராகப் பதினாறு பேர்.

ஓரிடத்தில் உடையார் காலில் முள் தைத்து முகம் சிணுங்கினார். அதை ஒரு நிர்வாண சாமியார் நொடியில் பிடுங்கிப் போட்டு முள் குத்திய இடத்தில் தன் எச்சிலை உமிழ்ந்து தேய்த்து விட்டார். வலி நொடியில் விலகியது மட்டுமல்ல, காலுக்கே புதிதாய் தெம்பு வந்தது போல இருந்தது.

ஒரு பெண் யோகினியும் முழு நிர்வணமாய் தன் நீண்ட தலைமுடியால் முன்னும் பின்னும் உறுப்புகளை மறைத்துக்கொண்டு ஓரிடத்தில் இணைந்துகொண்டாள்.

எல்லாமே வியப்புக்குரிய காட்சிகள்.

இதற்கு முன் கனவிலும் நினைத்திராதவை...

உடையார் அந்த அனுபவங்களை ஒரு ஓரமாக அமர்ந்து தன் வசமுள்ள டைரியில் எழுத விரும்பினார். ஆனால் தோது இல்லை. எங்கும் அமராமல் நடந்துகொண்டே இருக்கின்றனர்.

இது என்ன முடிவே இல்லாத மலைப்பாதையா?

இப்போது மணிதான் என்ன? இப்படி ஆயாசத்தில் உடையார் சுகப்பட்ட நொடி ``சந்திரன் தலைக்கு நேரா இருக்கான் பாருங்க... மணி இப்ப பன்னெண்டு” என்று ஒரு குரல் ஒலித்தது.

யார் என்று தெரியவில்லை. ஆனால் `நான் எனக்குள் நினைத்தது அவருக்கு எப்படிக் கேட்டது?’ என்கிற பிரமிப்பு உடையாருக்குள் மூண்டது.

அப்போது ஓரிடத்தில் பெரும் தீப்பிழம்புகள் தெரிந்தன, மரம் ஒன்று பற்றியெரிவதுபோல... அதைக் காணவும் ``ஓம் நமசிவாய... குருவே நமக...’’ என்று ஒருசேர பலர் எதிரொலித்தனர். அதுதான் சித்தன் பொட்டல். அது யாக குண்ட நெருப்பு.

சுற்றிலும் பலர் அமர்ந்திருக்க, ஒரு இடத்தில் புலித்தோல் ஆசனத்தோடு ஒரு இருக்கை காலியாக..!

இன்று பாரதிதான் இனி எல்லாம்...’ என்று திவ்யப்பிரகாஷ்ஜி சொன்னபோது அந்தக் கார் தாம்பரத்தைக் கடந்து நாற்கரச் சாலையில் நல்ல வேகத்துக்கு ஆட்பட்டது.

சாரு சோர்வாகச் சாய்ந்திருக்க, சாந்தப்ரகாஷ் “சாரு பசிக்குதா... வழில டிபன் சாப்பிடலாமா?” என்று கேட்டான்.

“எதுவும் வேண்டாம்... நாம மலைக்குப் போய்ப் பெட்டியை ஒப்படைச்சிட்டா போதும். கார்ல பிஸ்கட்டும் பிரெட்டும் இருக்கு. எனக்கு இது போதும்” என்றாள் சாரு. அப்போது சார்ஜில் போட்டிருந்த அவள் செல்போனில் சிணுங்கல் - திரையில் ஆகாஷ் தெரிந்தான், நெற்றியில் விபூதியோடு.

“ஓ ஆகாஷ்... ஆகாஷ் ஹேப்பி டு சீ யூ மேன்...! எப்படி இருக்கே?”

“நான் நல்லா இருக்கேன் மம்மி...ரொம்ப நேரமா ட்ரை பண்ணுறேன் - ஸ்விட்சுடு ஆஃப்னே வந்திச்சு. எனி பிராப்ளம்?”

“நோ... நோ... செல்போன்ல சார்ஜ் போனதுகூடத் தெரியல, ஜஸ்ட் இப்பதான் சார்ஜரோட கனெக்ட் பண்ணினேன். ஆமா நெற்றியில் விபூதியெல்லாம் இட்டுக்கிட்டிருக்கே... நீயான்னு எனக்கு ஆச்சர்யமாய் இருக்கு...”

“அதுக்குத்தான் கால் பண்ணினேன். நான் நல்லா தூங்கிட்டேன். தூக்கத்துல ஒரு வயசானவர் வந்து என் நெத்தியில விபூதி வெச்சு விட்டாரு. சட்னு கனவு கலைஞ்சிடிச்சு. கண் திறந்து பார்த்தா நிஜமாலுமே என் நெத்தியில விபூதி... இது என்ன மிராக்கிள் மம்மி?”

“ரியலி?”

“நீதான் பாக்கறியே... நீ பாக்கணும்னுதான் நான் அழிக்காம இருக்கேன்...”

- ஆகாஷ் சொல்லச் சொல்ல சாருவிடம் ஒரு நெகிழ்வான பரவசம்.

“அவர் எப்படி இருந்தார் ஆகாஷ்?” என்று திக்கித் திணறியபடி கேட்டாள்.

“நீ வீட்ல ஒரு சமாதி போட்டோ வெச்சிருப்பியே... அதுலகூட ஒரு படம் இருக்குமே... அப்படியே அவர் மாதிரியே இருந்தார். அவர் என் உடம்பு முழுக்க தன்கையை வெச்சு வெச்சு நல்லாத் தடவி விட்டார்... எனக்கு நிஜமாலுமே ரொம்ப பிரிஸ்க்கா இருந்தது. மம்மி!”

- அவன் சொல்லச் சொல்ல

“சந்தா... நமக்கு நல்லது நடக்க ஆரம்பிச்சிடிச்சு. இங்க சர்ப்பமா நடமாடின உங்க தாத்தா யூஎஸ்ல நம்ப ஆகாஷை மீட் பண்ணி அவனுக்கு விபூதி வெச்சி விட்டுருக்காரு” என்று சாந்தப்ரகாஷிடம் சொல்லத் தொடங்கினாள். சந்தா அடுத்த விநாடி சாலையோரமாக வண்டியைத் தேக்கி நிறுத்தியவனாகத் திரும்பி சாருவிடமிருந்து செல்போனை வாங்கிப் பார்க்கலானான்.

ஆகாஷின் பளிச்சென்ற விபூதிப்பட்டை முகம் ஆச்சர்யம் மட்டுமல்ல ஆனந்தமும் தந்தது. திவ்யப்ரகாஷும் பார்த்தார். அவரிடமும் மகிழ்ச்சிப் பெருக்கு.

ஆகாஷிடம் கோணல் இல்லை - கொனஷ்டை இல்லை. தங்கள் தாத்தாவின் இளம்பிராயத்து உடல்கட்டு அப்படியே அவனுக்கு இருப்பது போல்கூட ஒரு எண்ணம் தோன்றியது.

குளித்துமுடித்து பளிச்சென்று தனக்குப் பிடித்த ஜீன்ஸ் பேன்ட்டையும், டி ஷர்ட்டையும் அணிவதற்காக பீரோவைக் குடைந்த பாரதிமேல் சரிந்து விழுந்தது அந்தப் புடவை.

அரக்கு நிறத்திலான மைசூர் சில்க் சாரி. மஞ்சள் பார்டரில் கண்களை விரிய விட்டது. அடுத்த நொடி இதை இன்று கட்டிக்கொண்டால் என்ன என்கிற ஒரு கேள்வி எழும்பி, பின்பு அதையே கட்டிக்கொண்டு தலையைக் கோதிக் கொண்டே வந்த பாரதியை முத்துலட்சுமி விடைத்துப் போய்ப் பார்த்தாள்.

“என்ன அப்படிப் பாக்கறே... நான்லாம் சேலை கட்டக் கூடாதா, இல்லை, கட்டினதே இல்லையா?” என்று கேட்டபடியே மாடியில் இருக்கும் அவள் அறை நோக்கிப் படி ஏறினாள்.

“ஆமா, உன் அப்பாவைப் பாக்கலியா?’’ என்று பதிலுக்கு இழைவாய்க் கேட்டாள் அந்தக் கிழவி.

“பாக்கறேன்... பாத்துதானே தீரணும்... அதுக்கு முன்னால சில முக்கிய வேலை இருக்கு...” என்று படிகளில் ஏறிக்கொண்டே சொன்னாள்.

முத்துலட்சுமி கேட்டதும், அவள் பதில் சொன்னதும் கிரவுண்ட் ஃப்ளோரில் அறைக்குள் இருந்த ராஜா மகேந்திரன் காதுகளிலும் விழவே செய்தது. முகத்தில் ஒருவித சிந்தனை கலந்த இறுக்கம். கணேச பாண்டியன் அருகில் இல்லை. தனித்த நிலையில் கைப்பேசியில் எதையோ பார்த்தபடி இருந்தார்.

முத்துலட்சுமியும் எட்டிப் பார்த்தாள். கச்சிதமாய் அந்தக் கைப்பேசி சமீபத்திய திரைப்படம் ஒன்றின் தீம் மியூசிக்கை காலர் டோனாய் ஒலித்திட, காட்சியைக் கத்தரித்து செல்லின் ஸ்பீக்கரை ஆன் செய்தார் எம்.பி.

ஸ்பீக்கரில் கணேச பாண்டியன் குரல்.

“அய்யா ஜோசியரு கண்ண முடிட்டாருய்யா... டாக்டருங்க கைய விரிச்சிட்டாங்க...!”

“நெஜமாவா...?”

“ஆஸ்பத்திரிக்கு வரும்போதே ரத்தம் எக்குத்தப்பா வெளியேறிடிச்சி... இவரு பிளட் குருப் அபூர்வ வகையாம்... இங்க எங்கையுமே ஸ்டாக் இல்லை...”

“மத்தபடி எப்படியாச்சுன்னனுல்லாம் கேட்டு சிக்கலாக்கிடலியே?”

“உங்க பேரைச் சொல்லவும் ஆரம்பத்துல எந்தச் சிக்கலும் இல்லையா - ஆனா இப்ப உயிரே போகவும் கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டாங்க.

போலீஸுக்கு இன்ஃபார்ம் பண்ணி பாடியையும் போஸ்ட் மார்ட்டம் பண்ணித்தான் தருவாங்களாம்...”

“எஸ்.பி.கிட்ட பேசினியா?”

“பேசிட்டேன்... நான் பாத்துக்கறேன்னாரு. அந்தக் கத்திய முதல்ல தூக்கிப் போட்ருங்கய்யா. அது இன்னும் எத்தனை பேரை வெட்டப் போகுதோ?”

“அதையும் வந்து நீயே செய்... ஆமா, பானு பத்தி எதாவது தெரிஞ்சிச்சா?”

“போன்ல பேசினேன்யா... என்னை விட்ருங்க நான் இப்ப புதுப்பிறவி. இந்த ஊரே எனக்கு வேண்டான்னு சாமியார் மாதிரிப் பேசிச்சிங்க...”

“அவளை இழுத்துக்கிட்டு இப்பவே வா... அந்தப் புதுப்பிறவிய நான் நேர்ல பாக்கணும். அது புதுப்பிறவி இல்ல... புது துரோகி...!”

“சரிங்க...”

- போன் பேச்சு முத்துலட்சுமி காதுகளிலும் விழுந்து பாரதியின் அறையைத் தேடி ஓடச் செய்தது. அறைக்குள் பாரதி சார்ஜரில் போட்டிருந்த தன் செல்போனை எடுத்துப் பார்த்தபடி இருந்தாள். அதில் அரவிந்தன் அவளுக்குத் தேவையான பாஸ்வேர்டை அனுப்பியிருக்கவில்லை. கோபமாக அவனுடன பேச விழைந்த அவள் முன் முத்துலட்சுமி பெரு மூச்சோடு நிற்கவும், செல்போனைக் காதில் வைத்தபடியே என்ன என்று நெற்றிச் சதையை உயர்த்தினாள்.

“அந்த ஜோசியன் செத்துட்டானாம்!” என்ற அவள் குரல் அடுத்த நொடி செல்போனை அணைத்தபடியே முத்து லட்சுமியிடம் ஊன்றச் செய்தது.

“அது சாதாரண கத்தியில்ல... தொடக்கத்துல வெட்டுக் காயம்தான். கடைசியா பலியே வாங்கிடிச்சு..!”

“...........”

“எனக்கு பயமா இருக்கு பாரதி... பெட்டிய திருப்பிக் கொடுத்த மாதிரியே அதையும் திருப்பிக் கொடுத்துரு. உங்கப்பனும் அடங்காம யார் யார் கூடவோ பேசிகிட்டே இருக்கான். கொஞ்சம் முந்திகூட அந்த எழுத்தாளரையும் உங்க எடிட்டரையும், போலீஸ் என்கொயரிக்குக் கூட்டிக்கிட்டுப் போனதா காதுல விழுந்துச்சு...”

“என்ன... அரவிந்தனும், என் எடிட்டரும் இப்ப போலீஸ் என்கொயரில இருக்காங்களா?” என்று அதிர்வோடு போனில் அரவிந்தன் எண்ணைத் தொடர்பு கொண்டாள். ஸ்விட்ச் ஆப் என்று வந்தது. எடிட்டர் ஜெயராமனிடம் இருந்தும் அதே பதில்...

எரிச்சல் பிறீட ஆவேசப் புயலாகக் கீழிறங்கியவள், ராஜா மகேந்திரன் முன் சென்று நின்றாள்.

“வா பாரதி... இப்பதான் என்னப் பாக்கணும்னு தோணிச்சா?”

“உங்களப் பாக்க வரலை... உங்ககிட்ட கேக்க வந்திருக்கேன், அரவிந்தனும் என் எடிட்டரும் போலீஸ் கஸ்டடில என்கொயரில இருக்காங்களாமே?”

“அப்படியா... எனக்குத் தெரியாதே?”

“வேண்டாம்ப்பா... உங்க தகிடுதத்தமெல்லாம் என்கிட்ட வேண்டாம். அவங்கள என்கொயரி பண்ண என்ன இருக்கு?”

“எனக்கு எதுவும் தெரியாதும்மா... உனக்கு யார் சொன்னா?” - ராஜா மகேந்தர் கேட்டிட, அவளும் முத்துலட்சுமியைப் பார்த்திட அவளும் “நீ பேசியதை நான் கேட்டேன்... அதான் சொன்னேன்” என்றாள்.

“சரி, இப்ப அதுக்கென்னப்பா?” என்ற அடுத்த நொடி சாதாரணமாக திருப்பிக் கேட்டார்.

“முதல்ல தெரியாதுன்னீங்க... இப்ப அதுக்கெக்கன்னு கேக்கறீங்க.. நீங்கள்ளாம் ஒரு பார்லிமென்ட் மெம்பர்!”

“இதோபார்... நீ எதுவா இருந்தாலும் அவங்க கிட்ட பேசிக்கோ... என்கிட்ட பேசாதே. நீ என் டாட்டர் இல்ல; என் டார்ச்சர்...”

- அவரிடமும் கோபம் சீற்றமாய் வெளிப் பட்டது.

“புரியுது... அவங்கள மிரட்டி லேப் டாப்ல இருக்கற ஏடுகளோட காப்பியை வாங்கத் துடிக்கிறீங்க. ஆனா அது நான் இருக்கறவரை நடக்காது. அதுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அதையெல்லாம் உங்களப் போன்ற ஒரு மக்கள் தொண்டன் நம்பறதே தப்பு. ஆனா இதையெல்லாம் உங்க கிட்ட நின்னு பேசவோ உங்ககூட சண்டை போடவோ இப்ப எனக்கு நேரமும் இல்லை, மனசும் இல்லை... வரேன்’’ என்று விறுவிறுவெனத் திரும்பியவள், மாடியேறி, அரவிந்தன் பதவிசாய் மேஜைமேல் மின்தொடர்போடு வைத்திருந்த லேப்டாப்பை எடுத்துக்கொண்டாள்.

விறுவிறுவெனப் படிகளில் இறங்கியவள், காரின் பின் சீட்டில் அதை வைத்துவிட்டு முன்னால் ஏறிக்கொண்டு கிளம்பலானாள்.

வெளியே இருட்டத் தொடங்கியிருந்தது.

செல்லும்போதே சாந்தப்ரகாஷைத் தொடர்பு கொண்டாள்.

“சார் எங்க இருக்கீங்க?”

“விழுப்புரத்துல டிபன் சாப்டுக்கிட்டிருக்கேன்.”

“நானும் வரேன்... அந்த திங்க்ஸ் எல்லாம் பத்ரமா இருந்ததா?”

“இருந்தது... இப்ப எங்க கார்லதான் இருக்கு...”

“ஒரிஜினல் அது... டூப்ளிகேட் என் லேப்ல இருக்கு. இதை நான் உங்ககிட்ட ஒப்படைச் சிடறேன். இதோட சேர்த்து ஒப்படைச்சிடுங்க. ஐ வான்ட் டூ கீப் மை வேர்ட்ஸ்!”

“சாரி... இப்பவே லேட்! உங்களுக்காகக் காத்திருக்க முடியாது.”

“ப்ளீஸ்... எனக்காக அங்க மலை அடிவாரத்துலயாவது காத்திருங்க... நான் வந்துடறேன்...” என்றவள் ஆக்ஸிலேட்டரில் அழுத்தம் கொடுத்தாள். காரும் சீறியது!

- தொடரும்