மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இறையுதிர் காடு - 84

இறையுதிர் காடு
பிரீமியம் ஸ்டோரி
News
இறையுதிர் காடு

உடையாரின் கண்களிரண்டும் போகர் மேலேயே இருந்தன... வியப்பு விழிகளில் வழிந்து கொண்டிருந்தது.

அன்று

அந்தப் புலித்தோல் ஆசன இருக்கையின் இருபுறமும் பெரிய இரண்டு தீப்பந்தங்கள் திகுதிகுவென எரிந்தபடி இருந்தன. யாக குண்டத்தைச் சுற்றிலும் சிலர் அமர்ந்திருந்தனர். அவர்களில் பலர் முன்பு போகர் பிரானோடு இருந்த அஞ்சுகன், சங்கன், மருதன் போன்றோர் சாயலில் இருந்தனர்.

இரண்டு பேர் இரு மூங்கில் பிரம்புக் கூடையில் வைத்து நெய், தேன், பால், தயிர், மஞ்சள், குங்குமம், விபூதி முதலான மங்கலப் பொருள்களைக் கொண்டு வந்திருந்தனர். அவர்கள் யாரோ அல்லர், தண்டாயுதபாணி உருவை அச்சில் வார்த்துத் தந்த கருமார்களான ஆழி முத்து, செங்கானின் வழித்தோன்றல்கள். வேல்மணிக்கிழார், அருணாசலக்கிழார், கார்மேகக் கிழார்களின் வழித்தோன்றல்களும் வந்திருந்தனர். அவர்கள் மூவருமே பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணியாற்றிவருகின்றனர். தலைப்பாகை, தாழ் பூட்டாத கோட்டு, கச்ச வேட்டி, நெற்றியில் நேர்த்தியாக விபூதிப் பட்டை மையத்தில் சந்தன குங்குமம் என்று அவர்கள் தோரணையாகக் காட்சி தந்தனர்.

புறத்தில் யாக குண்ட நெருப்பொளியைப் பார்த்தபடி வந்த உடையாருக்கு வர வேண்டிய இடத்திற்கு வந்துவிட்டது புரிந்தது. உடன் வந்த செட்டியாரும் பெட்டியைத் தலையிலிருந்து இறக்கிக் கீழே வைத்தார். சற்று சோம்பல் முறித்தார்.

இறையுதிர் காடு
இறையுதிர் காடு

காதில் இரவின் மௌன அழுத்தம் - அதனுடன் சிள்வண்டுகளின் ரீங்காரம். புலிப்பாணியும் மொழமடியாரைக் கீழிறக்கி விட்டார்.

கையில் இருந்த தீப்பந்தத்தை அருகில் இருந்த மரக்கிளை ஒன்றில் இடம் பார்த்துச் செருகினார். காகிதம் ஒன்று காற்றில் படபடப்பது போல் ஒரு சப்தமும் அங்கே கேட்டது. புலிப்பாணியார் அந்த சப்தம் வந்த பக்கம் செல்லவும் கீழே அருவியின் பிரிவு வாய்க்கால்போல ஓடிக்கொண்டிருந்தது. வாய்க்காலுக்குள் ஏராளமான கூழாங்கற்கள். அந்த வாய்க்காலில் நின்று முகம் கழுவி நீரையும் மொண்டு குடித்துக் களைப்பை அதில் கரைத்து ஓட விட்டார்.

அதைப்பார்த்து செட்டியாரும், உடையாரும், அப்படியே செய்துகொள்ள மொழமடியாரோ மளுக்கென்று விழுந்து இப்படியும் அப்படியும் புரண்டு குளித்தே முடித்தார். பின் தன் கோவணத்தையும் பிழிந்து கட்டிக்கொண்டார். தன் நிர்வாணம் குறித்த சிறு வெட்க நெளிசலும் அவரிடமில்லை.

உடையாருக்குத்தான் எல்லாமே புதிய அனுபவங்கள்.

ஒருமாதிரி தங்களைப் புதுப்பித்துக்கொண்டு புறப்பட்ட அவர்களை ஒரு பெரும்பாறை வரவேற்றது. ஒரு மலைக்கும் மறுமலைக்கும் இடையில் பாகப்பட்டுக்கொண்டுவிட்டது போல் காட்சியளித்தது. அதன்மேல் சாய்ந்து படுத்து மெல்ல நடந்து மறு புறத்தை அடைய வேண்டும். பருமனானவர்கள், பதற்றம் கொண்டவர்கள், உடல் நடுக்கம் உடையவர்கள் அந்தப் பாறையைக் கடக்க முடியாது. 48 பேருக்குத்தான் அனுமதி என்றதோடு எல்லோராலும் வர முடியாது என்று கூறியதன் காரணம் உடையாருக்கு அப்போதுதான் புரிந்தது.

புலிப்பாணி சாதாரணமாக முன்புறம் சரிந்து படுத்து ஒரே ஒரு காலளவு இடத்தில் காலைப்பதித்து, அப்படியே ஒட்டி காலைத் தூக்காமல் நகர்த்தி மறுபுறத்தை அடைந்தார். மொழ மடியாரும்.

செட்டியாருக்கு பெட்டியோடு கடப்பது பெரும்பாடாக இருந்தது.

“இப்பகூட ஒண்ணும் கெட்டுப் போயிடலை. பெட்டிய என்கிட்ட கொடுத்துட்டு யவ்வன சூரிக் குளிகையை வாங்கிட்டுப் போகலாம்” என்ற புலிப்பாணியாரின் குரல் செட்டியாரிடம் ஒரு ஆவேசத்தை உண்டுபண்ணிற்று.

பெட்டியைப் பின்தோளில் வைத்து ஒரு துணியால் மார்போடு சேர்த்துக் கட்டிக்கொண்டு அப்படியே சரிந்து பாறையைப் பிடித்தபடி நடந்து ஒரு வழியாக மறுபுறம் உள்ள பொட்டலை அடைந்தார்.

இறுதியாய் உடையார்.

தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ஒருவழியாக அவரும் மறுபுறத்தை அடைந்து முடித்தார். அந்த நள்ளிரவு கடந்த நேரத்திலும், மலைக்குளிரிலும் வியர்த்துவிட்டிருந்தார்.

பாறையின் மறுபுறம் ஒளிமயமாக ஜொலித்தது. அந்த 48 பேரும் கண்களில் பட்டனர். ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்துகொண்டனர். பலர் புலிப்பாணியின் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற முயன்றனர்.

வானில் சித்திரை நிலா.

அதன் ஒளிப்புனல் மழைநீர்ச்சரம்போலச் சொரிந்தபடியே இருந்தது. அந்த ஒளியில் குறிஞ்சி மலர்கள் ஒரு சரிவு முழுக்க மலர்ந்திருப்பதைக் காண முடிந்தது.

அரிய காட்சி - மனிதர்களின் காலடிகள் அவ்வளவாய் பட்டிராத நிலப்பரப்பு.

சமதளமான நிலப்பரப்பில் யாக குண்ட நெருப்பு ஒரு பெண்ணானவள் மேடையில் நெளிந்து ஆடுவது போல் ஆடிக்கொண்டிருந்தது. இடைஇடையே மயில் அகவும் குரல் கேட்டது. உடையார் மருளமருளச் சூழலைப் பார்த்தார். அப்போது அவர்வசம் ஒரு ஏடு தரப்பட்டது.

“இது எதுக்கு?”

“உங்க பேரை எழுதிக்கொடுங்க...”

“அது எதுக்கு?”

“ஏன்... உங்களுக்கு பாஷாண லிங்கமும் ஏடுகளும் வேண்டாமா?”

“ஓ அதுக்கா...?” - உடையார் வேக வேகமாய் ஏட்டை வாங்கினார். எப்படி எழுதுவது என்பதில் குழம்பிய போது மைக்கூட்டுடன் ஒரு கூரிய முனை கொண்ட வேலங்குச்சி அவரிடம் தரப்பட்டது. அதன் முனையை மைக்கூட்டுக்குள் விட்டு நனைத்து, தீப்பந்த ஒளியில் ஏட்டின் இடது முனையில் தொடங்கி, வலது மூலை வரை இடைவெளியின்றி ‘சந்தப்பிரகாச பிரம்மாண்ட ராஜ உடையார்’ என்று எழுதி முடித்து பின் அதை வாயால் ஊதி மையைக் காயச் செய்தவராகத் திருப்பித் தந்தார்.

செட்டியார் சுமந்து வந்திருந்த பெட்டி போகர் பிரான் அமரவிருந்த புலித்தோல் ஆசனம் முன் ஒரு கல்மேடை மேல் வைக்கப்பட்டு உள்ளிருந்து லிங்கம் முதல் சகலமும் எடுக்கப்பட்டு பெட்டிமேல் காட்சிப் பொருள்போல வைக்கப்பட்டது. அதில் களவுபோன ஏடு சேர்க்கப்பட்டதோடு புலிப்பாணியார் யவ்வன சூரி ஏடும் புதிதாகச் சேர்ந்திருந்தது.

இறையுதிர் காடு
இறையுதிர் காடு

நீண்ட தோகை கொண்ட மயிலானது தன் தோகை தரை உரசிட அந்தப் பெட்டி அருகே லிங்கத்தைப் பார்த்தபடியே கடந்தும் போனது. செட்டியார் தலையில் அணிந்திருந்த பாகையைக் கழற்றி இடுப்பில் கட்டியிருந்தார். அருகிலிருந்த உடையாரிடம்,

“எப்படியோ எல்லாப் பிரச்னை களையும் கடந்து நல்லபடி வந்துட்டோம்...” என்றார்.

“அது சரி... போகர் சாமி எப்ப வருவார்?”

“எப்பவேணா வருவார்...”

“நடந்து வருவாரா... இல்லை வானமார்க்கம் பறந்தா?”

“போன தடவை வானமார்க்கமா தான் வந்தார். இப்ப எப்படி வராரோ - யாருக்குத் தெரியும்.”

- அவர்கள் இருவரும் கேள்வியும் பதிலுமாய் இருக்கையில், மயிலின் அகவல் குரல் மிகப்பெரியதாய் ஒலித்தது. கூடவே கிளிகள் சிலவற்றின் அலகு பிளந்த சப்தம். சற்று தூரத்தில் புதர் ஒன்று அசைவதும் தெரிந்தது. எல்லோரும் அந்தப் புதரைப் பார்த்தபோது அதனுள் இருந்து இலை தழை மிகுந்த கொடிகளை விலக்கிக் கொண்டு இடையில் ஒரு காவி வேட்டியுடன் திறந்த மார்புடன் தன் முகத்து தாடி தொப்புள் வரை நீண்டு முன் மார்பினை மறைந்தபடி இருக்க போகர் அவர்கள் கண்முன் தோன்றி வரலானார்...

அவர் வருகையைக் கண்ட சித்தர்களில் சிலர் “ஹரஹர மகாதேவி...” என்று ஓங்கிக் குரலெடுத்தனர்.

போகரும் அவர்கள் அவ்வளவு பேரையும் நாலாபுறமும் பார்த்து இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி ஆசீர்வதித்தார். அப்படியே நடந்து வந்து புலித்தோல் ஆசனத்திலும் அமரலானார்.

உடையாரின் கண்களிரண்டும் போகர் மேலேயே இருந்தன... வியப்பு விழிகளில் வழிந்து கொண்டிருந்தது. பிரமிப்பில் நெஞ்சக்கூடு நிமிர்ந்திருந்தது. கேமரா எடுத்துவராமல்போன வருத்தம் எட்டிப் பார்த்து அடங்கிற்று.

போகரின் உடல் ஒளியுடலா இல்லை ஸ்தூல உடல்தானா என்கிற கேள்வி உடையாரிடம் மூண்டிருந்தது.

அங்கே எண்ணி 48 பேர்!

வேள்வியும் தொடங்கியது... நாற்புறமும் நான்கு சித்தர் பெருமக்கள் அமர்ந்திருந்து வேள்வியைத் தொங்கினர். போகர் அதைக் கவனிக்கலானார்.

இறுதியாக அதில் சேர்க்க வேண்டிய ஹோம திரவியங்கள் ஒரு தாம்பாளத்தில் வைத்து எடுத்துவரப்பட்டு எல்லோர் முன்னாலும் கொண்டு வரப்பட்டது. அதை எல்லோருமே தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொண்டனர். பின் அது யாக நெருப்பில் போடப்பட்டது. அதில் 1,008 தாவர விதைகளும் அடக்கம்.

“விதைகளைத் தீயில் போடுவதா... நிலத்தில் போட்டால் முளைக்கும். இது என்ன இப்படி..?” என்ற கேள்வி உடையாருக்குள் எழும்பிற்று.

“நமக்கு எதெல்லாம் மிகுதியாகத் தேவையோ அதை அக்னி மூலம் பரம்பொருளுக்கு அர்ப்பணிக்கிறோம். நாம் ஒன்று தந்தால் அது திரும்ப ஒன்பது தரும். பூமியில் கானுயிர் பெருகத்தான் இந்த வேள்வி” என்று ஒரு விளக்கமும் அருளப்பட்டது.

அதன்பின் பாஷாணலிங்கத்திற்கான வழிபாடுகள் தொடங்கின. போகர் இமைகொட்டாது ரசித்துக் கொண்டிருந்தார்.

அபிஷேகம் ஆயிற்று - பின் அலங்காரம், அதன் பின் நைவேத்யம். போகர் ஏட்டுக்கட்டுகளில் ஒன்றிரண்டை மட்டும் எடுத்து விரித்துப் பார்த்தார்.

அப்படியே செட்டியாரையும் பார்த்தார். அந்தப் பார்வையில் ஆயிரம் பொருள். செட்டியார் பதிலுக்குப் படபடவென கன்னத்தில் போட்டுக்கொண்டு நெளிந்தார்.

உடையார் பார்த்தபடியே இருந்தார். போகரின் மேல் வைத்த கண்களை அவரால் எடுக்க முடியவில்லை. அப்படி ஒரு தேஜஸ்... வெள்ளை நிற ஜொலிப்பு.

அங்கே நடக்க வேண்டிய நிகழ்வுகள் அடுத்தடுத்து நிகழத் தொடங்கின. அஞ்சுகனைப்போலவே இருந்த சீடர்களில் ஒருவன் அன்றைய பஞ்சாங்கக் குறிப்பை வாசித்தான். பின் போகரின் காலடியில் விழுந்து வணங்கிய அவன் சிரம்மேல் தன் இரு கைகளையும் குவித்து பொத்தி மூடியதுபோல் அவனை ஆசீர்வதித்தார் போகர். அதே போல் ஒவ்வொருவராக வந்து ஆசிபெற்றனர். சிலர் கண்ணீர் சிந்தினர். ஏனோ போகர் வாயைத் திறந்து ஒரு வார்த்தைகூடப் பேசிடவில்லை.

இறுதியாக புலிப்பாணி தான் தயாரித்து முடித்திருந்த யவ்வன சூரிக் குளிகையை போகர் முன் வைத்தார். போகர் அதை எல்லோருக்கும் கொடுக்கச் சொன்னார். புலிப்பாணியும் அவ்வாறே செய்தார். அதன்பின் சிரட்டையில் அபிஷேகப் பால் விநியோகிக்கப்பட்டது. பின் துணிப்பை ஒன்றில் விபூதி எல்லோருக்கும் வழங்கப்பட்டது.

முக்கியக் கட்டம் அதன்பிறகே வந்தது.

48 பேரின் பெயர் கொண்ட ஏடுகள் போகர் முன் கலைத்து பின் அடுக்கப்பட்டு, லிங்கம் முன்னால் விசிறிபோல விரித்து வைத்து அடுக்கப்பட்டது. அதன்பின் மயிலானது வந்து அதில் ஒன்றை எடுத்தது. எடுத்த ஏட்டை போகரின் முன் வைத்துச் சில விநாடி வெறித்தது. பின் பலமான அகவலுடன் விலகிச் சென்றது.

சூழ்ந்திருக்கும் அவ்வளவு பேரிடமும் ஒரு படபடப்பு. பரபரப்பு. போகரோ அந்த ஏட்டை எடுத்து பெயரைக் கூறிடாமல் எல்லோரையும் பார்த்துப் பேசலானார்.

“அருள் மிகுந்த சீடர்களே,

எல்லோருக்கும் எனது நல்லாசிகள்...

ஆதிசிவன் அருளாலும், அருட்சக்தி கருணையாலும் ஜோதி வடிவாய்ப் பிறந்த குமரக்கடவுளின் அடியைப் போற்றித் தொடங்குகிறேன்.

இந்தப் பௌர்ணமி இரவு பஞ்சபூதங்களும் சம நிலையில் இருக்கும் ஈர்ப்பு விசை மிகுந்த பௌதிகமான ஓர் இரவு. குறிஞ்சி மலர்ந்திடும் நில மிசை நான் சமாதியினின்றும் விடுபட்டு உலா வருவது இவ்வேளையில்தான். இமயம் சென்று மானசத்தில் இந்த ஒளியுடலை நனைத்து, கைலாய கிரியை பிரதட்சணம் வந்த நிலையில் இந்தப் பொதிகையில் கால் பதித்த எனக்குள் உங்கள் குரு பூசை பூரிப்பைத் தருகிறது.

இறையுதிர் காடு
இறையுதிர் காடு

வழிப்பாட்டில் வழிபாடு பலம்மிக்கது.

அதிலும் குருவழிபாடு பெரும் பலம் மிக்கது

குருவருளாலே திருவருள் பெற்றாலே அது சித்திக்கும் பூரண விடுதலையாகவும் இருக்கும். இல்லாவிட்டால் பிறப்பதும் இறப்பதுமாகவே வாழ்க்கைப்பாடு இருக்கும். பூரண விடுதலை நிமித்தம் இங்கு வந்துள்ள உங்களுக்கு நல் முக்தியும் மோட்சமும் கிட்டும்.

உங்களில் ஒருவருக்கு ஒரு சித்த கடப்பாட்டைத் தரவே இன்று நாம் கூடியுள்ளோம். இந்தக் கடப்பாடு என் குருவின் மூலமாய் நான் அறியப் பெற்றுச் செய்யும் ஒரு சிறு தொண்டு, இதனால் சித்த நெறி நிலைப்பதுடன் பூமியில் மாந்தர் பெரும் துன்பங்களின்றி வாழ்ந்திடுவர்.

அசுர சக்திகளின் கை ஓங்கிடாது தடுக்கப்பட்டு அறம் காக்கப்படும். குறிப்பாகக் கானகம் வாழ்ந்திடும்.

கானகம் வாழ்ந்தால் காணும் நம் அகமும் தானே நல் வாழ்வு வாழ்ந்திடும். வினைப்பயனால் கடந்த முறை இக்கடமையைச் செய்திடும் பாக்யம் பெற்ற சிதம்பரமாணிக்கத்திற்கு என் பூரண நல்லாசிகள்!

வலியில்லா மரணம், மறுபிறப்பில்லா முக்தி சந்ததியர்க்கும் அதற்கான வாய்ப்பு அருளப்படுகிறது!” - என்று போகர் கூறி முடித்த மறு நொடி செட்டியார் எழுந்து போகர் முன் சென்று சாஷ்டாங்கமாய் விழுந்து வணங்கிய நிலையில் தேம்பியழத் தொடங்கிட, அவரை சீடர்களில் சிலர் எழுப்பி அழைத்துச் சென்றனர்.

பின் அந்த ஏட்டினை எடுத்துப் பார்த்தார்.

அதில் உடையாரின் பெயர். அவர் பார்வையும் உடையார் பக்கம் திரும்பிற்று. எல்லோருக்கும் இம்முறை அதிர்ஷ்டசாலி அவர் என்பது தெரிந்துவிட்டது. புலிப்பாணி அவரை அழைத்து வந்து போகர் முன் நிறுத்தினார். உடையார் கண்களில் கண்ணீர்.

“என்ன ஆனந்தக் கண்ணீரா?” - போகர் கேட்டார்.

“ஆமாம் சாமி...”

“கண்ணீர் பொதுவில் நல்லது. அது ஒரு நல்ல ரசாயனம். நீ கொடுத்து வெச்சவன்...”

“சாமி, நீங்க சொல்றது பணம் காசுக்குப் பொருந்தும். ஆனா வாரிசு இருந்தும் அது தரிசாப்போயிட்ட பாவி சாமி நான்...”

“அரவாணம் சித்தம் எல்லாம் அருள் நிலையப்பா. போக வாழ்க்கைக்கு அருள் நிலைகள் எப்பவும் இருள் நிலைகளாதான் தெரியும்.’’

“புரிஞ்சுகிட்டேன் சாமி... நான் பாவம் மட்டுமல்ல, கொஞ்சம் புண்ணியமும் செய்திருக்கேன் - இல்லேன்னா இந்த ராத்திரி உங்களப் பார்க்க முடிச்சிருக்குமா?”

“பாவ புண்ணியமெல்லாம் ஒன்பது பேர் (கோள்கள்) சம்பந்தமிருக்கறவரைதான். இப்பகூட நீ ஒரு பரீட்சைதான் எழுதப் போறே... இந்த வாய்ப்புதான் அந்தப் பரீட்சை.

இதுல நீ உன்னை ஜெயிக்கணும். இல்லேன்னா பிரயோஜனமில்லாமப்போயிடும்.”

“ஜெயிப்பேன் சாமி... நிச்சயம் ஜெயிப்பேன். நீங்க சொல்றபடி நடந்து நிச்சயம் ஜெயிப்பேன்.”

“நல்லது... இத்தனை வருஷத்துல முதல்முறையா ஒரு கோடீஸ்வரன் கிட்ட இந்த ஈஸ்வரன் வரப்போறான். உன் ராஜாங்கத்துல நீ உன்னை எப்படி வெச்சுக்கப் போறேங்கறத வெச்சிதான் இனி எல்லாம். இன்னொரு முக்கிய விஷயம்...”

- போகர் பீடிகை போட்டார்.

“என்ன சாமி?”

“இதுவரை இந்த ஜெகவலலிங்கத்துக்கு 12 வருஷம்கற ஒரு கணக்கு இருந்தது. அதை நான் 4 மடங்காக்கி 48 வருஷம்னு பண்ணப் போறேன். இனி நீ 48 வருஷம் கழிச்சு வந்தாப் போதும். 48 வருஷங்களும் நான் உன்னை ஏதோ ஒரு வகைல வழிப்படுத்துவேன். சிறு தவற்றுக்கும் நீ இடமளிச்சிடக் கூடாது.”

“சாமி... நான் அவ்வளவு நாள் உயர் வாழ்வேனா?”

“நீ இப்ப ஜமீன்தார் இல்ல... சித்தன்... உன் பேச்சை காலம் கேட்கும். காலத்தின் பேச்சை நீ கேட்கவேண்டியதில்லை. உன் பரம்பரையும் சித்த பரம்பரை யாகட்டும். உலகம் முழுக்க சித்த நெறியும் பரவட்டும்... நமச்சிவாயம்..!

- போகரின் முடிவைக் கேட்டு எல்லோரும் வியப்பை முகத்தில் ரேகைகளில் காட்டினர்.

இறையுதிர் காடு - 84

“சாமி, எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல...” என்று அப்படியே நெகிழ்வோடு மண்டியிட்டார் உடையார். பெட்டியும் லிங்கமுடன் அவர்வசம் ஒப்புவிக்கத் தயாரானது.

காத்தமுத்து என்பவன் தூக்கித் தலையில் வைத்ததுடன் “நான் உங்களுக்குத் துணையா உங்ககூட வந்து உங்கள ஜமீன்ல விட்டுட்டுத் திரும்புவேன்...” என்றான்.

அதிகாலை வேளை... சில பல நிமிடங்களில் கதிரவன் உதித்து விடும்.

“புறப்படு... விருட்சங்களை போஷிக்க மறந்துடாதே...” என்றார் போகர். ஒரு மூங்கில் கூடையில் மரக்கன்றுகள் ஏராளமாய் இருக்க, பெட்டி உடையார் தலையிலும், கூடை காத்தமுத்து தலையிலும் ஏறிக்கொண்டது.

‘வழிகாட்டி நெறி’ எனும் ஏடு இறுதியாகப் புலிப்பாணியால் வழங்கப்பட்டது.

“இந்த ஏட்டில் உள்ளபடி ஒவ்வொரு நாளும் நடக்கணும்” என்று சொல்லித்தான் தந்தார் புலிப்பாணியார். அதை இடுப்பில் செருகிக்கொண்டார் உடையார்.

செட்டியாரும் ஒத்தாசித்தார்.

“உடையாரே... என் கணிப்பு வீண் போகல. உங்களுக்குத்தான் கிடைக்கும்னு நான் நினைச்சது பலிச்சிடிச்சி... உங்களுக்கு இம்மட்டுல வழிகாட்ட நானும் இருக்கேன்” என்றார்.

பின் மூவருமாய்ப் புறப்படுமுன் போகர் பிரான் ஹோம குண்டத்தை வலம் வந்தவராய் பனி சூழ்ந்த திசை நோக்கி நடந்து அப்படியே அந்தர்யாமியானார்.

அப்படியே புலிப்பாணியும், ஏனைய சித்தர் பெருமக்களும்...!

இறுதியில் காத்தமுத்துவும் செட்டியாரும் உடையாரும்தான் மிச்சமிருந்தனர். உடையார் தலைமேல் பெட்டி.

உடையாருக்குத் தான் தூங்கி எழுந்ததுபோலவும் தூக்கத்தில் கனவு கண்டார் போலவும்தான் தோன்றியது. அவர்வரையில் சோதனை அங்கேயே அப்போதே தொடங்கிவிட்டது!

இன்று பாரதியின் காரிடம் நல்ல வேகம். இருந்தும் விடிவதற்குள் குற்றாலம் போய் மேலே உள்ள அந்தப் பொட்டலுக்கு போய்விட முடியுமோ என்கிற ஒரு சந்தேகம் அவளுக்குள் ஏற்படாமல் இல்லை.

விமானத்தில் மதுரை போய் மதுரையில் இருந்து குற்றாலம் போவதில் ஒரு நான்கு மணிநேரம் கிடைக்கும் என்று தோன்றியது.

மதுரைக்கு விமானம் இருக்கிறதா? அதில் டிக்கெட் கிடைக்குமா? இரண்டு கேள்விக்கும் அவள் கைப்பேசி அதிக பட்சம் ஐந்து நிமிடத்தில் பதிலளித்துவிட்டது.

எட்டு மணிக்கு ஒரு இண்டிகோ விமானம் இருக்கிறது. அதிர்ஷ்ட வசமாய் அதில் சீட்டும் இருப்பதை இண்டிகோவின் வெப் சைட் காட்டிக்கொடுத்தது. மின் அணுப் பரிவர்த்தனையில் பத்தாவது நிமிடம் விமான டிக்கெட் மெயிலாகிவிட்டது.

மதுரைக்கு விமானம் 9 மணிக்குச் செல்லும். 9.15க்கு வெளியே சென்றுவிட முடியும். ஒரு டாக்சி பிடித்தால் நான்கு மணி நேரம். நள்ளிரவு ஒரு மணிக்குக் குற்றலாம் போய்விடலாம். இல்லாவிட்டால் சாந்தப்ரகாஷும் சாருவும் வந்தபடி இருக்கும் காரில் ஏறிக்கொண்டும் பயணிக்கலாம்.

விமான நிலைய கார் பார்க்கிங்கில் சரியான இடமாகப் பார்த்து பார்க் செய்துவிட்டு லேப்டாப் பேக்குடன் தன் லெதர் பர்சையும் எடுத்துக்கொண்டு செக் இன் செய்ய ஓடியவள், செக் இன் செய்த மறுநொடி ஏர்போர்ட் லாஞ்சில் அமர்ந்தபடி திரும்பவும் சாந்தப்ரகாஷை போனில் பிடித்தாள்.

“நான் 9 மணிக்கெல்லாம் மதுரை போயிடுவேன். நீங்க ஏர்போர்ட் வந்து என்னை பிக்கப் பண்ணிக்க முடியுமா?” என்று கேட்கவும் சாந்தப்ரகாஷும் “ஷ்யூர்” என்றான். அப்படியே “அரவிந்தன் சாரும், ஜெயராமன் சாரும் என்ன ஆனாங்க?” என்று கேட்டான்.

“அவங்கள என்னால காண்டாக்ட் பண் முடியல. அவங்க ரெண்டு பேருமே போலீஸ் என்கொயரில இருக்கறதா கேள்விப்பட்டேன். ஆனாலும் எனக்கு அரவிந்தன்மேல நம்பிக்கை இருக்கு. அரவிந்தன் நிச்சயம் ஈ ஃபைல்ஸைத் தர மாட்டார். சமாளிப்பாருன்னு நான் நம்பறேன்...”

“ஒருவேளை அவங்க டார்ச்சர் தாங்காமத் தந்துட்டா, நீங்க இவ்வளவு சிரமப்பட்டு வந்தும் புண்ணியமில்லாமப் போயிடாதா?”

“எனக்கு என் பேச்சு கணக்கு. நான் சொன்னபடி செய்துடறேன். அரவிந்தன் மாறி நடந்தா அதுக்கு அவர்தான் பொறுப்பு... ஆனாலும் சொல்றேன் - அவங்க நடக்க மாட்டாங்க. நிச்சயம் புத்திசாலித் தனமா ஏதாவது செய்து எஸ்கேப் ஆயிடுவாங்க...”

“பார்ப்போம் என்ன நடக்கு துன்னு... ” என்று சாந்த ப்ரகாஷ் போனை கட் செய்தான்.

இறையுதிர் காடு - 84

பாரதிக்குள்ளோ அலை பாய்ச்சல்!

அது ஒரு ஹோட்டல் அறை.

உள்ளே டி.எஸ்.பி ராஜ ரத்தினத்தின் எதிரில் அரவிந்தனும் ஜெயராமனும் அமர்ந்திருந்தனர். பிரம்மாண்ட மாளிகைக்கு வந்தவர்களை அங்கே வாசலிலேயே காத்திருந்து மடக்கிவிட்டனர். அதுவும் “சாந்தப் பிரகாஷும் திவ்யப்ரகாஷ்ஜியும் நீங்கள் வந்தால் அழைத்து வரச் சொன்னார்கள்” என்கிற ஒரு பொய்யைச் சொல்லி.

டி.எஸ்.பி ராஜரத்தினம் மிக நிதானமாகப் புகைபிடிக்கத் தொடங்கினார். பெரிய பண்புள்ளவர் போல் “சார், நீங்க சிகரெட் பிடிப்பீங்களா?” என்று கேட்டு சிகரெட் பாக்கெட்டையும் நீட்டி னார். எரிச்சல்தான் வந்தது ஜெயராமனுக்கு.

டி.எஸ்.பி சார்... என்ன இது பைத்தியக்காரத்தனம். எங்களை எதுக்கு இப்படி மடக்கிப் பிடிச்சிகிட்டு வந்திருக்கீங்க. எங்களுக்கு எவ்வளவு வேலை இருக்கு தெரியுமா?” என்று ஜெயராமன் பதிலுக்கு சீற ஆரம்பித்தார்.

“நிறைய வேலை இருக்கறவர் எதுக்கு சார் குற்றாலம் அப்புறம் அங்க மேல இருக்கற ரெஸ்ட்ரிக்டட் ஏரியாவுக்கெல்லாம் போறீங்க?”

- டி.எஸ்.பி.யின் குரலில் ஒரு மோசமான போலீஸின் முகம் தெரியத் தொடங்கியது.

“டி.எஸ்.பி சார்... நான் யார்னு தெரியும்ல? நீங்க எங்களை ஏதோ குற்றவாளிகளைப் பாக்கறமாதிரி பாக்கறதும் பேசறதும் கொஞ்சமும் சரியில்லை. நாளைக்கே நீங்க என் பத்திரிகைல அட்டைப்படச் செய்தியாயிடுவீங்க. ஜாக்ரதை...”

“என்னடா இன்னும் இப்படிப் பேசலியேன்னு நினைச்சேன். மிஸ்டர் ஜெயராமன் நீங்களும், அப்புறம் இந்த எழுத்தாளரும் எம்.பியோட டாட்டரும் எதுக்காகக் குற்றாலம் வரை போனீங்கன்னு எனக்கு நல்லாத் தெரியும். நான் சுத்தி வளைச்செல்லாம் பேச விரும்பலை. உங்ககிட்ட சித்தர்கள் எழுதிய ஓலைசுவடிகளோட போட்டோ காப்பி இருக்குன்னும் எனக்கு நல்லாத் தெரியும். அதுக்கு நூறு கோடி வரை விலை பேசப்பட்டதும் தெரியும். இப்ப எங்க தேவையும் அதுதான். அதை தயவுசெய்து எங்ககிட்ட ஹேண்ட் ஓவர் பண்ண முடியுமா?”

- டி.எஸ்.பி நேராக விஷயத்தைத் தொடவும் ஜெயராமன் அரவிந்தனைப் பார்த்தார். அவனும் குறுகுறுவென அவரைப் பார்த்தான்.

“என்னப் பாருங்க சார்... அங்க என்ன பார்வை?”

“இதுல நீங்க எங்க சார் வந்தீங்க?”

“நான் மட்டுமல்ல... டெல்லிவரை இப்ப இதுக்காகத் தவிச்சிக்கிட்டு இருக்காங்க. இன்னும் சொல்லப் போனா, ஒரு வெளிநாட்டு அதிபர் உயிரோட இருக்காரா இல்லை செத்துட்டாரான்னே தெரியலை. உங்ககிட்ட இருக்கற காலப் பலகணில அதுக்கு பதில் இருக்காம்ல?”

“டி.எஸ்.பி கேட்டுவிட்டு ஏ.சி-க்கான ரிமோட்டை எடுத்து அதன் டிகிரி லெவலைக் கூட்டத் தொடங்கினார்.

“சார்... இதையெல்லாமா நம்பறீங்க நீங்க?”

- அரவிந்தன் கேலியாக திருப்பிக் கேட்டான்.

அது டி.எஸ்.பி-யின் கன்னத்தில் அறைந்ததுபோல் இருந்தது.

பதிலுக்கு முறைத்துப் பார்த்தார்.

“என்ன சார் முறைக்கறீங்க?”

“இப்ப அந்தப் போட்டோ காப்பியைத் தருவியா மாட்டியா?”

``நூறு கோடிவரை டீல் பேசிட்டு இப்ப இப்படி திருப்பிக் கேட்டா என்ன சார் அர்த்தம்..?”

“எவ்வளவு பணம்கறது பிரச்னையே இல்லை. அது எவ்வளவு தூரம் உண்மைங்கறதுதான் பிரச்னையே.”

“உண்மை, பொய்யைப் பரிசோதனை செய்து பார்த்தால்ல தெரியும்...?”

“பரிசோதனையா?”

“ஆமா, அந்த அதிபர் உயிரோட இருக்காரா இல்லையான்னு பலகணில பார்த்துத் தெரிஞ்சிக்குவோம். இன்னும் நிறைய கேள்விகள் இருக்கு. இப்ப இருக்கற சூழ்நிலை யுத்தம் வரும் போலத் தெரியுது. அது நிச்சயம் வருமா? வந்தா கட்டாயம் ஜெயிப்போமான்னும் தெரிஞ்சிக்கணும்.”

“விட்டா யார் எவ்வளவு பிளாக் மணி வெச்சிருக்காங்க, அதெல்லாம் எந்த பேங்க்ல யார் பெயர்ல இருக்குன்னும் தெரிஞ்சிக்க விரும்பறோம்னு சொல்வீங்க போலத் தெரியுதே?”

“நல்லதுதானே, தெரிஞ்சா நல்லதுதானே?”

“ஒருவேளை எல்லாம் பொய்யாப் போய்ட்டா?”

“இல்லை... எம்.பி உயிர்பிழைச்சதே ஒரு அதிசயம்னு டெல்லி நினைக்குது. எல்லாத்துக்கும் மேலே ஒரு நேர்மையான ஜர்னலிஸ்ட்டான நீங்க இதுல இன்வாலவ் ஆகியிருக்கறதையும் டெல்லில நோட் பண்ணிட்டாங்க. அப்ப அதுலே நிச்சயம் ஏதோ இருக்குங்கறதுதானே உண்மை?”

டி.எஸ்.பி அழகாய் மடக்கினார். ஜெயராமனும் அரவிந்தனும் அவரின் உறுதியான பேச்சைக் கேட்டு ஆழமாக யோசிக்கத் தொடங்கினர்.

“என்ன யோசனை... எல்லாம் உண்மையா இருந்தா உங்களுக்கு நூறுகோடி உறுதி. நானே வாங்கித் தரேன். அதுவும் ஹாட் கேஷா. உங்களுக்கு விருப்பம்னா ஸ்விஸ் பேங்க்ல ஒரு லாக்கருக்கும் இம்மீடியட்டா அரேஞ்ச் பண்ணுறேன்.”

“சார், இந்த விஷயத்துல எம்.பி டாட்டர் ரொம்ப ஸ்ட்ரிக்ட். அவங்களுக்குத் தெரிஞ்சா அவ்வளவுதான்.”

“உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா?”

“என்ன சார்?”

“பாரதி இப்ப ஏர்போர்ட்ல இருக்காங்க. எட்டு மணி ஃப்ளைட்ல மதுரை போய், அப்படியே குற்றாலம் போகப்போறாங்க - மிஸ்டர் சாந்தப்ரகாஷ் பேமிலி இப்ப... அதாவது இந்த செகண்ட் திருச்சிகிட்ட இருக்காங்க. அநேகமா மதுரைல எல்லாரும் ஒண்ணா சேர்ந்து குற்றாலம் போகக்கூடும்?”

“அப்ப பாரதியில் இருந்து எல்லாரையும் மானிட்டர் பண்ணிக்கிட்டே இருக்கீங்க, அப்படித்தானே?”

“நிச்சயமா... என்வரைல இது ஒரு பெக்கூலியர் அசைன்மென்ட்.”

“எக்ஸ்யூஸ்மீ... கொஞ்சம் டாய்லெட் போய்ட்டு வந்துடட்டுமா?”

“எதுக்கு... பாரதிகூட பேசி நான் சொன்னதெல்லாம் சரியான்னு தெரிஞ்சிக்கவா?”

- டி.எஸ்.பி மிக ஷார்ப்பாகத்தான் கேட்டார். அரவிந்தனுக்குச் சுருக்கென்றது. அதற்கொரு பதிலைச் சொல்ல முடியாமல் தடுமாறியவன்,

“சார், பாரதி இந்தச் சுவடிகளையெல்லாம் நம்பாத ஒருத்தி. அவ எங்ககூட வந்ததுகூட எங்க கம்பல்ஷனுக்காகத்தான். இப்ப நாங்க இங்க இருக்கும்போது அவ போறான்னு சொல்றத நம்பமுடியல.”

“சரி.. சந்தேகமா இருந்தா போன் பண்ணிக் கேட்டுக்குங்க. ஆனா ஒண்ணு... நீங்க போட்டா காப்பியைக் கொடுக்காம இங்க இருந்து நகரவே முடியாது.”

பர்சனலாவும் நான் ஒரு விஷயம் சொல்றேன். எனக்கும் இதுல எல்லாம் நம்பிக்கை இல்லை. அதனால் இது எவ்வளவு உண்மைன்னு தெரிஞ்சிக்க நான் துடிக்கறேன். நிச்சயமா இந்த க்யூரியாசிட்டி உங்களுக்கும் இருக்கணுமே?”

- டி.எஸ்.பி-யின் பிடிவாதம் ஜெயராமனை ஒரு நல்ல முடிவெடுக்கச் செய்தது.

“யூ ஆர் ரைட் சார்... பரிசோதிப்போம் - அதுதான் இப்போதைக்கு சரி. கண்டதை எதுக்குப் பரிசோதிச்சிக்கிட்டு. பாரதி இப்ப போய்க்கிட்டிருக்கா... ஒரிஜினல் சாந்தப்ரகாஷ் பேமிலி கைல இருக்கு. அது அடுத்து என்ன ஆகும்னு பார்ப்போம். என்ன சொல்றீங்க?”

- ஜெயராமன் சொன்னது டி.எஸ்.பி-க்கும் மிகப் பிடித்துவிட்டது.

“அருமையான ஐடியா. கமான் ஓப்பன் த லேப்... எடுங்க அந்தக் காலப்பலகணியை...” என உற்சாகமானார். ஜெயராமனின் ஆபீஸ் லேப்டாப்பும் அந்தப் புகைப்படங்களைக் காட்டிக்கொடுக்கத் தயாராயிற்று.

- தொடரும்...