
முதல்ல இடத்தைக் காலி பண்ணு. எங்க மாமாவை எங்களுக்குப் பாத்துக்கத் தெரியும். கிளம்பு கிளம்பு.
அன்று
உடையாரும் காத்தமுத்துவும் உன் பிரம்மாண்ட மாளிகை முன் பெட்டியோடு வந்து நின்றதைப் பார்த்த காவல்கார கருத்த விநாயகத்துக்கு ஜிவ்வென்றானது. உடன் கருத்த விநாயகத்தின் மகனான மணிவேல் (இன்றைய வாட்ச்மேன்). உடையாரின் தோற்றம், கையில் பெட்டி - உடன் காத்தமுத்து என்று எல்லோருமே ஆச்சர்யமும் அதிர்வுமளித்தனர்.
யதார்த்தமாகக் கார்வாரும் பார்த்துவிட்டு ஓடிவந்தார்... ராவுத்தன் குதிரை முதுகில் உண்ணிகளை நசுக்கிக்கொண்டிருந்தான். அவனும் எஜமான் ஜி என்றபடியே ஓடிவந்தான்.
``உடையாரும் எல்லோரையும் ஒருமாதிரி கண்கள் பனிக்கப் பார்த்தார். என்ன ஆண்டே, இப்படிப் பண்ணிட்டீங்க...? அம்முணி துடிச்சுப் போயிட்டாங்க'' என்று கார்வார் உடையாரிடம் இருந்த தோல் பை மற்றும் விருட்சக் கட்டையை வாங்கிட, அதற்குள் தகவல் சிட்டாள் சுந்தரவல்லி காதுக்குச் சென்றதில், கிறக்கத்தில் படுத்திருந்தவள் படபடப்போடு ஓடிவரலானாள்.
வந்தவள் உடையாரைப் பார்க்கவுமே மயங்கி விழுந்தாள்.
``ஐயோ சுந்தரம்...'' என்று அவளைத் தொட்டுத் தூக்கியவராக உள் நடந்தார் உடையார். ஹாலில் கிடக்கும் லண்டன் ரோஸ் வுட் சோபா ஒன்றில் கிடத்தி, ``சுந்தரம் சுந்தரம்...'' என்று அவன் கன்னங்களைத் தட்டி அவளின் மயக்கத்தைத் தெளிவிக்க முயன்றார்.
அதற்குள் சுந்தரவல்லியின் சகோதரன் சங்கமேஸ்வர உடையார் மனைவி செஞ்சுலட்சுமி தேவி, அவர்களின் மகன் பிரேமசந்திரன், சமையல்காரன் கிருஷ்ணமணி என்று எல்லோருமே கூடிவிட்டனர்.
மெல்ல கண்களைத் திறந்தாள் சிட்டாள் சுந்தரவல்லி. பொங்கி வந்த அழுகையோடு உடையார் கழுத்தை இறுக்கிக் கட்டிக்கொண்டாள்.
``நல்லவேளை, திரும்பி வந்தீங்க மாமா... இன்னிக்கு நீங்க வராட்டி கங்கையில் இறங்கி, மாண்டுவிட்டதா அர்த்தம்னு மேல்மலையனூர் பரமேஸ்வர பாண்டி பண்ணாடி குறி சொல்லியிருந்தார். அக்கா உசுர்ல பாதி அப்பவே போயிடுச்சு. அது உங்கள பாக்கவும் இப்பதான் திரும்ப வந்திருக்கு'' என்றான் சுந்தரவல்லியின் சகோதரன் சங்கமேஸ்வரன் உடையான்.

``எல்லாரும் என்னை முதல்ல மன்னிக்கணும். நெசத்துல காசி பக்கம் போய் கங்கையிலே ஜலசமாதி ஆகத்தான் நினைச்சேன். ஆனா, விதி என்னைக் குற்றாலம் பக்கம் கூட்டிக்கிட்டு போயிடுச்சு'' என்று ஆரம்பித்த உடையாரும், சகலத்தையும் சொல்லி முடித்தார். அப்படிச் சொல்லும்போது பெட்டியில் உள்ள ஏடுகள் பற்றிச் சொல்ல வாயெடுத்தவரை, காத்தமுத்து ஜாடை காட்டித் தடுத்துவிட்டான்.
எப்படியோ, போனவர் திரும்பி வந்ததில் எல்லோருக்கும் மகிழ்ச்சி. ஆனால், இப்படி ஒரு சன்யாசி போல காவி வேட்டி, மேல்துண்டு, சிவலிங்கம் என்று ஒரு சித்தனாக வந்து நின்றதைத்தான் எல்லோருமே பெரும் விசித்திரமாகக் கருதினார்கள்.
``மாமா, போய் முதல்ல இந்தக் காவியைக் கழற்றிவிட்டு, பழைய உங்க சூட்டு கோட்டோடு வாங்க... இல்லாட்டி நம்ம பட்டுக்கச்சத்துல வாங்க, உங்கள ஒரு சாமியாரா எங்களால பார்க்க முடியல'' என்றான் சங்கமேஸ்வர உடையான்.
அதை ஆமோதிப்பதுபோலப் பார்த்தாள் சிட்டாள். ஆனாலும் சட்டென்று காவியை உதிர்க்க ஏனோ மனம் வரவில்லை.
``இல்ல, சங்கமேஸ்வரா... நான் இப்படியே இருக்கேன். யாருக்கும் கிடைக்காத பாக்கியம் எனக்குக் கிடைச்சிருக்கு. நீயே கொஞ்சம் யோசிச்சுப் பார். போகர் சாமியை தரிசனம் பண்ணுறதுன்னா சும்மாவா?'' என்று திருப்பிக் கேட்டார் உடையார்.
பதிலுக்கு சிரித்தான் சங்கமேஸ்வரன்.
``என்ன... ஏளனமா சிரிக்கிறே...?''
``அது எப்படி மாமா சமாதில உக்காந்தவங்க திரும்பி உசுரோட வரமுடியும்?''
``அப்ப நான் சொன்னதை நீ நம்பல...''
``நான் மட்டுமல்ல, யாருமே நம்பத் தயாரில்ல...''
அந்த பதில் உடையாரை உளைச்சல்படுத்தியது. உடன் வந்திருந்த காத்தமுத்து, உடையார் முகத்தையே பார்த்தபடி இருந்தான். உடையாரோ ``நீ என்கூட வந்திருந்தா இப்படியெல்லாம் சொல்லமாட்டே... வழியெல்லாம் எவ்வளவு அதிசயம் தெரியுமா?’’
``என்ன மாமா பெரிய அதிசயம்... யாரோ சிலர் உங்களப்போலவே வாழ்க்கை வெறுத்து ஓடிப்போனவங் களாதான் இருக்கணும். அங்க ஒண்ணாச் சேர்ந்து நம்மள அழவுட்ட இந்தச் சமூகத்த நாம நம்மளைக் கும்பிடவைக்கணும்னு திட்டம் போட்டு இப்படியெல்லாம் நடந்துக் கிறாங்கன்னுதான் நான் நினைக்கறேன்.’’
- சங்கமேஸ்வரன் சொன்ன விதமே மிக இகழ்ச்சியாக, ஒரு துணுக்களவு நம்பிக்கையும் இல்லாதிருந்தது. அது உடையார் வாயைக்கூட தற்காலிகமாய்க் கட்டிவிட்டது. அவனுக்கு ஏற்ற ஒரு பதிலைச் சொல்ல முதலில் தோன்றவில்லை. பிறகு தோன்றியது. தான் எடுத்து வந்திருந்தவற்றில் இருந்த ஏட்டுக்கட்டுகளையெல்லாம் வேகமாய் எடுத்தார்.
``இதையெல்லாம் பாரு சங்கமேஸ்வரா... பொய்யா நடிக்கிறவங்க ஏட்டை எழுத முடியுமா?'' என்றும் கேட்டார்.
``ஏன் எழுதணும்... எழுதினதே எவ்வளவோ இருக்குதே? உங்களுக்கு இப்ப எவ்வளவு வேணும் - சொல்லுங்க கொண்டுகிட்டு வரேன்'' என்றான் அசராமல்.
``ஆமாங்க, நாமளோ ராஜவம்சம், இதெல்லாம் ஆண்டிப் பண்டாரங்களோட சமாச்சாரம். நமக்கு எதுக்கு இதெல்லாம்?'' என்பது சிட்டாளின் கருத்து.

காத்தமுத்து மட்டும் பார்த்தபடியே இருந்தான்.
முதல்நாளே உடையார் வரையில் சோதனை. இதில் இவர் 48 வருட காலம் எப்படிச் சமாளிக்கப் போகிறாரோ என்கிற கேள்வி அவன் புருவ வளைவுகளில் தொங்கிக்கொண்டிருந்தது. உடையார் இப்போது துணைக்கு அழைத்தார்.
``காத்தமுத்து... நடந்ததை நீயே சொல்லுப்பா. குற்றாலநாதர் சந்நிதில என் கழுத்துல மாலை விழுந்ததுல இருந்து மயில் வந்து போகர் சாமி முன்னால என் பேரை எடுத்துத் தந்தது வரை விடாம சொல்லு'' என்றார்.
``ஆமா... வேலிக்கு ஓணான் சாட்சியாக்கும். ஆமா, நீ யாருப்பா... உனக்கென்ன பிரச்னை என்று நீ அந்தக் காட்டுப் பக்கம் போனே?'' என்று சங்கமேஸ்வரன் காத்த முத்துவைக் கேட்கவும், காத்த முத்துவுக்கு தானே நேரடியாகத் தாக்குதலுக்கு ஆளாகப்போவது புரிந்துவிட்டது.
எதுவும் பேசாமல் சிரித்தான்.
``இப்படிச் சிரிச்சா என்ன அர்த்தம்?''
``எங்களுக்கு சோதனை ஆரம்பமாயிடுச்சின்னு அர்த்தம்.''
``சோதனையா... இது என்ன பெரிய சோதனை... நீ யாருன்னுதானே கேட்டேன்?''
``அதாவது, நான் யாருன்னு...?’’ - காத்தமுத்து பதிலுக்கு அழுத்தமாய் திருப்பிக் கேட்டான்.
``ஆமா... பொறவு?''
``அதைத் தெரிஞ்சுக்கத்தான் நானும் அந்தக் காட்டுப்பக்கம் போனேன்.''
``எதை?''
``நான் யாருன்னு தெரிஞ்சிக்கன்னு சொன்னேன்ல...’’
``ஏம்பா நீ யாருன்னு உனக்குத் தெரியாதாக்கும், கோட்டி மாதிரி பேசுறே?''
``நமக்கு கண்ணுக்குத் தெரிகிறதெல்லாம் ஒரு விஷயம் இல்லீங்க... தெரியாதது எவ்வளவோ இருக்கு'' காத்தமுத்து சொன்னவிதத்தில் ஒரு அலாதி.
``நான் ஒண்ணு கேட்டா நீ ஒண்ணு சொல்லுற... எதைத் தெரிஞ்சுக்கப் போனேன்னு கேட்டா, என்னைத் தெரிஞ்சுக்க தாங்குற. நீதான் பார்க்க நல்லா தெரியறியே. உனக்குத் தாய் தகப்பன், சொந்த பந்தம் இருக்காங்கில்ல?''
``இருக்காங்க...''
``அப்ப இன்னார் மகன், இதுதான் என் பெயர், இதுதான் என் விலாசம்னு சொல்ல வேண்டியதுதானே.''
``அப்ப இதெல்லாம் நானா?''
``பொறவு?''
``சரிங்க, விட்டுறுங்க...’’
``என்னை விட்டுறுங்கன்னு நான் ஏதோ தப்பாச் சொல்லிட்ட மாதிரி பேச்சை முறிக்கிற?''
``நான் இப்ப என்ன செய்யணும்கறீங்க?''
``முதல்ல இடத்தைக் காலி பண்ணு. எங்க மாமாவை எங்களுக்குப் பாத்துக்கத் தெரியும். கிளம்பு கிளம்பு.''
காத்தமுத்து உடனேயே உடையாரைத்தான் பார்த்தேன்.
``சங்கமேஸ்வரா... அவரும் ஒரு சாமி. அப்படியெல்லாம் சொல்லாதே. இதையெல்லாம் ஒரு கூலிக்காரன் மாதிரி தலையில எனக்காகச் சுமந்துகிட்டு வந்தவர் இவர்.’’
``அப்ப அதுக்கு எட்டணாவோ பத்தணாவோ கொடுத்தாப் போச்சு.''
``எட்டணா பத்தணாவா? என்ன இங்க இருக்கிற சென்ட்ரலில் இருந்து தூக்கிட்டு வந்த மாதிரி சொல்ற... குற்றாலம்பா, ஏறத்தாழ அறுநூறு மைல்கல்லு.''
உடையாரும் சங்கமேஸ்வரனும் முட்டிக்கொள்ளத் தொடங்கவும், காத்தமுத்து தானாக முன்வந்து, ``போதும்... என்ன வெச்சி உங்களுக்குள்ள கிலேசம் வேண்டாம். நான் கிளம்புறேன்'' என்ற காத்தமுத்து எதிரில் சமையல்காரர் கிருஷ்ணமணி பெரிதாய் ஒரு ஏப்பம் விட்டான்.
அந்த இடத்தில் அப்படியொரு துர்வாடை.
அது காத்தமுத்துவை ஒரு விநாடி தூக்கி நிறுத்தியது. கிருஷ்ணமணியை உற்றுப்பார்க்க வைத்து, ``பீமசேனன் மாதிரி சாப்பிடுவீரோ’’ என்று கேட்கவும் வைத்தது.

கிருஷ்ணமணி அதற்கு பதில் கூறாமல் நெளிய,
``பக்கத்துல இருந்து பார்த்த மாதிரியே சொல்றீங்களே, இந்த ஆள் ஒரு பெரும் தீனிப் பண்டாரம் தான்'' என்றான் ஒரு பணியாள்.
``இன்னும் மூணு நாள்தான்...’’ என்றுமட்டும் காத்தமுத்து சொல்லிவிட்டுப் புறப்பட, யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. ஆனால், மூன்றாம் நாள் முடிந்து நான்காம் நாள் காலை கிருஷ்ணமணி எழவே இல்லை. படுக்கையிலேயே மாரடைப்பில் உயிர் போய்விட்டது.
இந்தச் சம்பவம் சங்கமேஸ்வர உடையானை சற்று யோசிக்க வைத்தது. கட்டியும் போட்டது. ``சித்தன் வாக்கு சிவன் வாக்கு என்றது சரியாப் போச்சு'' என்று கார்வார் அதற்குப் பொருள்விளக்கம் தரவும், மொத்த மாளிகையே உடையாரைச் சற்று பயத்தோடும் மரியாதையோடும் பார்த்தது.
அதற்குள் மரக்கன்றுகளைப் பின்னால் உள்ள இடத்தில் நட்டு அவற்றுக்குத் தண்ணீர் பாய ஒரு வாய்க்காலும் வெட்டி விட்டிருந்தார் உடையார்.
அன்றாடம் பாஷாண ஜெகவலலிங்கத்துக்கும் அபிஷேகம் செய்து அந்தப் பாலை எல்லோருக்கும் குடிக்கவும் தந்தார்.
எல்லோரிடமுமே ஏதோ ஒரு மாற்றம். சோர்ந்து சோர்ந்து அமரும் சிட்டாளிடம் நல்ல சுறுசுறுப்பு. அவ்வப்போது தலைவலியால் அவதிப்படும் கார்வாருக்கும் அதிலிருந்து விமோசனம்.
ஒரு நாள், புலிப்பாணி செய்து தந்திருந்த யவ்வன சூரிக் குளிகை விபூதி சம்புடத்திலிருந்து விபூதி எடுத்துப் பூசுகையில் கையில் வந்தது.
அன்றைய சித்ரா பௌர்ணமி இரவில் பங்குகொண்ட 48 பேருக்குமே போகர் தரச்சொல்லியிருந்த குளிகையல்லவா அது?
அதைச் சாப்பிட்டால்தான் எந்த நோயும் வராதே; வயதும் நின்று விடுமே. அதை, தான் சாப்பிட்டால் என்ன என்றுதான் முதலில் தோன்றியது. தனக்காகத் தரப்பட்டதுதானே அது? ஆனால், அப்போது சங்கமேஸ்வரன் நோய்வாய்ப்பட்டு சென்னப்பட்டண மிஷன் ஆஸ்பத்திரி ஒன்றில் அட்மிட் ஆகியிருந்தான். அவன் தனியே தங்களின் மலையாவூர் ஜமீனுக்குத் திரும்பிவிட்டிருந்தான்.
அவன் ஞாபகம் தான் உடையாருக்கு வந்தது. அவனுக்கொரு மகன் பிறந்து அவன் சர்வ லட்சணங்களோடு இருப்பதும் அவனைத் தத்து எடுத்துக்கொள்ள சிட்டாள் விரும்புவதெல்லாம் நினைவுக்கு வந்தது. மைத்துனன் பெரியவனா? மகன் பெரியவனா?
பிரேமசந்திரன் என்கிற அவனுக்குத் தருவதே சரியான தீர்வு, தனது தத்து புத்ரனாக ஆரோக்கியமாக காலமெல்லாம் திகழ்வான் என்று ஒரு முடிவுக்கு வந்தவர். இறுதியில் பிரேமசந்திரன் என்கிற அவனுக்கு அதைத் தந்தார்.
இந்த பிரேமசந்திரன் அதன்பின் ஜொலிஜொலித்தான். ஒரே ஆட்டம்தான் - பாட்டுதான். மறுபுறத்தில் உடையார் சிவலிங்க பூஜையில் எந்த ஒரு குறையும் வைக்கவில்லை. அடிக்கடி கனவுகளில் செய்தி வரும். அநாதைப் பிணங்களைத் தகனம் செய்ய ஒரு தகனக்கூடம் கட்டச் சொல்லி ஒரு உத்தரவு வந்தது. அதுவும் காவேரிக்கரையின் ஓரத்தில்...
லட்சம் மரக்கன்றுகளை மலை அடிவாரங்களில் நடச் சொல்லி ஒரு முறை கனவு வந்தது. வேதபாடசாலைகளுக்கு ஆயிரம் பசுக்களை வாங்கி தானம் தரச் சொல்லி ஒரு கனவு வந்தது.
ஒரு கோயில் குருக்கள் காசநோய் வந்து படுத்த படுக்கையில் கிடந்தார். அவருக்கு, தான் சொல்லும் விதத்தில் மருந்து தரச் சொல்லிக்கூட கனவு வந்தது. அந்த கிராமத்துக் கோயில் குருக்கள் தன் பணியை மிகவும் விரும்பிச் செய்பவராம். யாராவது தட்டில் காசு போட்டால் பிடிக்காதாம். நைவேத்ய பிரசாதத்தைக்கூட ஏழைகளுக்கு பார்த்துப் பார்த்துத் தருவாராம்.
ஒரு தமிழ்வருடப் பிறப்புநாளில் ஆயிரம் பேருக்குக் குறைவின்றி வேப்பம் பூ, வெல்லம் கலந்த பிரசாதம் தரச்சொல்லி... 108 குளங்களைத் தூர்வாரச் சொல்லி என்று உடையாருக்கு அவ்வப்போது கட்டளைகள் பிறந்தபடியே இருந்தன. உடையாரும் சளைக்காமல் எல்லாவற்றையும் செய்தார்.
ஒரு சமயத்தில் சிட்டாளே, ``இப்படிச் செலவழித்தால் நாம் ஒரு நாள் நடுத்தெருவில்தான் இருக்க வேண்டி வரும்'' என்று சொல்லி அலுத்துக்கொண்ட அன்று, அவள் சொப்பனத்தில் தோன்றிய சித்த புருஷர் ஒருவர், ஒரு குறிப்பிட்ட நிலத்தைச் சொல்லி அதில் உழுது பயிரிடச் சொன்னார்.
அப்படியே செய்தபோது உழுத நிலத்தில் ஒரு இடத்தில் பெரும் புதையல் பானை ஒன்று அகப்பட்டது. பானை முழுக்கத் தங்கம். அதன்பின் சிட்டாள் வாயே திறப்பதில்லை.
1941இல் அதாவது பாஷாணலிங்கம் வசப்பட்டு 21 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், தன் மைத்துனரின் மகனான பிரேமசந்திரனை அவனது 24-ம் வயதில் தத்து எடுத்துக்கொண்டார்.
அவ்வளவு நாள் காத்திருக்கவும் காரணம் இருந்தது. எங்கே அவனும் தன் குடும்ப சாபம் காரணமாகத் திருநங்கை ஆகிவிடுவானோ என்கிற அச்சமே.
பிரேமசந்திரனுக்கு 24 வது வயது நடந்தபோது பிரம்மாண்ட ராஜ உடையாருக்கு 60 வயது ஆகியிருந்தது. இந்த வயதில் ஒரே சமயத்தில் பிரேமசந்திரனுக்குத் திருமணம் செய்யவும், தங்களுக்கு அதே மேடையில் அறுபதாவது திருமணம் செய்துகொள்ளவும் ஆசைப்பட்டார் உடையார். அதற்கேற்ப பொன்மலியூர் ஜமீன்தாரின் மகளான திவ்யதர்ஷினிக்கும் பிரேமசந்திரனுக்கும் திருமணம் நடைபெற்றது. அதே மேடையில் சந்தப்ரகாச பிரம்மாண்ட ராஜ உடையார், சிட்டாள் கழுத்தில் தாலிகட்டிட பிரம்மாண்ட சமஸ்தானத்தின் அந்த இரு திருமணங்கள் பற்றியும் ஊர் உலகமே பேசியது.
இதற்குப் பிறகு 1948-ல் 48 வருட மண்டலக் கணக்கை முடித்து லிங்கத்தையும் ஏடுகளையும் போகர் பிரானிடம் திரும்ப ஒப்படைக்கும் அந்த சித்திரைப் பௌர்ணமியும் வந்தது. இக்காலகட்டத்தில் பிரேமசந்திரனின் மகன்களாக அதாவது உடையாரின் பேரன்களாக ராஜசேகரன் என்பவனும் ஞானசேகரன் என்பவனும் திருமணப் பருவத்தில் இருந்தனர். இவர்களும் ஆபத்தான அரவாண காலத்தைக் கடந்து உடையாருக்கு நிம்மதி அளித்தனர்.
ஒரு ஆச்சர்யம்போல பிரேமசந்திரன் பிள்ளைகளான ராஜசேகரன் ஞானசேகரன் பார்க்க சமவயதுபோலத் தென்பட்டனர்.
யவ்வன சூரியை உண்டதால் பிரேமசந்திரன் உடல் வாலிபத்தி லேயே நின்றுவிட்டது. இதை வியக்காதவர்கள் இல்லை. எப்படி என்று கேட்காமலும் இல்லை.
இக்கேள்வியை பிள்ளைகளும் கேட்டு தங்களுக்கும் யவ்வன சூரி வேண்டும் என்று ஆசைப்பட்ட போதுதான் அதைத் தயாரிக்கும் விதமறிய அந்த ஏட்டுக்கட்டை பிரேமசந்திரன் எடுத்துப் பார்க்க நேரிட்டது. அதுவும் பிரம்மாண்ட ராஜ உடையாருக்குத் தெரியாமல்.இந்த ஏட்டுக்கட்டைக் குறிவைத்து சித்த வைத்தியர்கள் சிலரும் பிரேமசந்திரனுக்கு வலை விரித்தனர். இது ஒரு அதிசயம் அபூர்வம். இதை இழப்பது முட்டாள்தனம் என்றனர்.
பிரேமசந்திரனும், உடையார் அந்தப் பெட்டியைச் சித்ரா பௌர்ணமியன்று போகரிடம் ஒப்படைத்துவிடக் கூடாது; அது தங்களிடமே இருக்க என்ன வழி என்று யோசிக்கலானான்.
இன்று அந்த ஹோட்டல் அறையின் டேபிள்மேல் லேப்டாப்பை வைத்து, இணைப்பும் கொடுத்து, அதைத் திறக்கத் தொடங்கினான் அரவிந்தன். டி.எஸ்.பி அடுத்த சிகரெட்டுக்கு மாறியிருந்தார். அறைக்குள் புகைமண்டி அவனுக்கு இருமல் வரும்போல் இருந்தது. லேசாக இருமியபடியே அவரைப் பார்த்தான். அவன் பார்க்கவுமே சிகரெட்டை நசுக்கி அணைத்தார்.
நெருப்பை அவமதிப்பதுபோல் தோன்றியது.
மனதுக்குள் இப்படி அவர் எதிரில் இதைத் திறப்பது சரியா என்பது போலவும் ஒரு எண்ணத் தடுமாற்றம். ஆசிரியர் ஜெயராமன் இப்படி ஒரு பரிசோதனைக்கு ஒப்புக்கொண்டது சரியில்லை என்றும் நெருடல்.
உள்ளே நெருடும்போது திரை விழித்துக் கொண்டு ஸ்கிரீனில் நயாகரா அருவியின் சலனக் காட்சி தெரிந்தது. ஜெயராமனின் ஸ்கிரீன் சேவர் அந்த அருவித் திரை.
மௌஸின் திரை அம்பு திறக்க வேண்டிய பிளாக் நோக்கி நகர்த்தப்பட்டது. தன் மெயில் ஐடியை டைப் செய்து பாஸ்வேர்டையும் டைப் செய்யச் சென்ற சமயம் டி.எஸ்.பி-யின் கைப்பேசியில் அழைப்பு சப்தம். அவசரமாய் எடுத்து, `முத இதை சைலன்ட் மோடுல போடணும்' எனும்போதே திரையில் தெரிந்த பெயர் அவரைப் பதற்றத்துக் குள்ளாக்கி அட்டெண்ட் பண்ணச் செய்தது.
``ஹலோ, சாருங்களா... ஒன் மினிட் சார்...’’ என்ற டி.எஸ்.பி, அரவிந்தனையும் ஜெயராமனையும் பார்த்து ``கொஞ்சம் இருங்க, வந்துடுறேன்'' என்று அறைக்கு வெளியே ரகசியமாகப் பேசச் சென்றார்.
அந்த இடைவெளியில் அரவிந்தன் ஜெயராமனிடம், ``சார், என்ன சார் இப்படி மாட்டிக் கிட்டோம். நம்மை நிர்பந்திக்க இவர் யார் சார்? நீங்களும் சரின்னுட்டீங்களே சார்'' என்றான்.
``ஏன் அரவிந்தன், உங்களுக்கு இந்தப் பரிசோதனையில் இஷ்டம் இல்லையா?''
``பாரதிக்குத் தெரிஞ்சா என்னை, உங்களை ரொம்ப தப்பா நினைப்பா சார்.''
``அவளுக்கு நீங்க ரொம்பவே பயப்படுறீங்க... பிராக்டிகலா யோசியுங்க.''
``பாரதிக்கு நான் பயப்படலை சார்... அவகிட்ட ஒரு அசைக்கமுடியாத நேர்மை இருக்கு. அதுக்கு நான் ரொம்பவே மதிப்பு கொடுக்கிறேன்.’’
``விடுங்க, அதான் அவங்ககூட போய் அதை ஒப்படைச்சிடப் போறாளே.’’
``சார் இதெல்லாம் நிஜமாவே பெரும் பொக்கிஷங்களா இருந்து இந்த அரசியல்வாதிங்க கையில் சிக்குறது சரியா சார்?''
`` நிச்சயமா இல்லை. அதே சமயம் இங்க இப்ப நாம என்னதான் செய்துவிடமுடியும். சினிமாவா இருந்தா, நீங்க இந்த மாடியில் இருந்தே டைவ் அடித்து காரில் ஏறித் தப்பிக்கலாம். இல்ல, டி.எஸ்.பி-யோடு சண்டை போட்டு அவரைக் கட்டிப் போட்டுவிட்டுத் தப்பிக்கலாம். நாமளோ அப்படியெல்லாம் எதையும் செய்ய முடியாது.’’
``முடியும் சார்... டி.எஸ்.பி தனி மனுஷன். நாமளோ இரண்டு பேர்.’’
``அது சரி. அதுக்கப்புறம் அவர் முகத்துல முழிக்க வேண்டாம்? நாம என்ன இந்த நாட்டை விட்டேவா ஓடப்போறோம். ஆமா, உங்களுக்கு 100 கோடி வேண்டாமா? நிஜமா அவ்வளவு பெரிய தொகை உங்களை இம்ப்ரஸ் பண்ணலியா?’’
``முதல்ல கொஞ்சம் ஆசையாதான் இருந்தது. ஆனா, அப்புறம் என் மனசாட்சி முழிச்சிக்கிச்சு சார். அதோடு, இவங்க கிட்ட அப்படியெல்லாம் பணத்தை வாங்கிவிட முடியாது. சும்மா சொல்லுவாங்க...! பணத்தைத் தரத் தயாரா இருந்தா இப்படி டி.எஸ்.பி கிட்ட மாட்டி விடுவாங்களா?’’
``சரி, இப்ப என்னதான் பண்ணலாம்கிறீங்க?''
``நான் பாஸ்வேர்டை பாரதிக்கு அனுப்பி விடுறேன். அவளும் எரேஸ் பண்ணிடட்டும். அதைச் சொல்லி நாம தப்பிச்சிக்குவோம்''
- சொல்லிக்கொண்டே பாஸ்வேர்டைத் தன் கைப்பேசியிலிருந்து பாரதிக்கு அனுப்பி வைத்தான் அரவிந்தன். அந்த நொடி டி.எஸ்.பி திரும்பி உள்ளே வந்தார்.
``என்ன, ஓப்பன் பண்ணிட்டீங்களா? எல்லாம் கிடைச்சிடுச்சான்னு கேட்டுதான் போன்... என்ன ஓப்பன் பண்ணலையா?’’ டி.எஸ்.பி லேப்-டாப் திரையைப் பார்த்தபடியே கேட்டார்.
``நீங்க வரட்டும்னுதான் காத்திருந்தேன்'' என்று சமாளித்த அரவிந்தன் விளையாட்டு காட்ட ஆரம்பித்தான்.
அப்படியே ``சார் அந்த ஏடுகளும் லிங்கமும் இப்போ யார்கிட்ட இருக்குன்னுதான் தெரிஞ்சிடிச்சே. அவங்களை பிளாக் பண்ணுற திட்டம் எதுவும் இல்லையா... இந்தப் போட்டோ காப்பிகளே போதும் என்ற முடிவுக்கு வந்துட்டீங்களா?'' என்று கேட்டபடியே தன் மெயிலைத் திறந்தான்.
டி.எஸ்.பி அந்தக் கேள்விக்காக அவனைக் கூர்மையாகப் பார்த்தார்.
``என்ன சார் அப்படிப் பாக்கறீங்க?''
``அவங்கள பிளாக் பண்ணப் போறது உங்களுக்கு எப்படித் தெரியும் மிஸ்டர் அரவிந்தன்?''
``ஒரு கெஸ்ஸிங்தான் சார்.''
``ரைட்டர்ங்கிறதை நிரூபிச்சிட்டீங்க. யூ ஆர் ரைட். குற்றாலத்துல அவங்கள பிளாக் பண்ணிப் பிடிக்க ஒரு பெரிய ஏற்பாடு செய்திருக்கோம்.
ஒரிஜினல் டூப்ளிகேட் இரண்டும் இனி டெல்லியோட பிராப்பர்ட்டி. கமான் சீக்கிரமா ஓப்பன் பண்ணுங்க. நாடி ஜோதிட ஏடுகளைப் பார்த்திருக்கேன். ஒண்ணும் புரியாது. நூறு பிள்ளையார் எறும்பு வரிசையா ஊர்ந்து போற மாதிரி இருக்கும். இது எப்படி இருக்குன்னு பார்த்துடுவோம்...''
டி.எஸ்.பி பரபரத்திட, அரவிந்தனிடம் டென்ஷன் கூடிக்கொண்டே போனது. மனதுக்குள் `பாரதி எல்லாவற்றையும் அழித்து விடு. நீ அழித்துவிட்டதாகச் சொல்லி நான் இங்கே சமாளிக்க முயற்சி செய்றேன்' என்று சொல்லிக்கொண்டே, ``நெட்வொர்க் ஸ்லோவா இருக்கு'’ என்று டி.எஸ்.பி-யைப் பார்த்தான்.
``ஏதாவது தில்லாலங்கடி வேலை பண்ணிடாதீங்க, எனக்குக் கொஞ்சம் ஃபேஸ் ரீடிங் தெரியும். 27 வருஷ டிபார்ட்மென்ட் எக்ஸ்பீரியன்ஸுல மூஞ்சியை வச்சு உள்ளே ஓடுறதை நான் கண்டுபிடிச்சிடுவேன். நீங்க டயத்தை இழுக்கிற மாதிரி தெரியுது'' என்று இருவரையும் சற்றே அசர அடித்தார் டி.எஸ்.பி ராஜரத்தினம்.
``சார் எப்பவும் அவசரம்னு பண்ணும்போது கம்ப்யூட்டர் இப்படித்தான் சார் கழுத்தறுக்கும். பை த பை பாரதி ஃபைல்ஸை எரேஸ் பண்ணிடாம இடுக்கணும்னு சாமி கும்பிட்டுக்குங்க.''
``என்னது, பாரதி எரேஸ் பண்ணிடுவாளா?''
``ஆமாம், அதுக்கு நிறைய சான்ஸ் இருக்கு.’’
``அப்ப எதுக்கு லேப்டாப்போடு அவங்கள தேடிப் போகணும்?''
``அது... அது...’’
``என்ன அரவிந்தன், ஏதோ சொல்றீங்க, டபுள்கேம் விளையாடாதீங்க. ஸ்மார்ட்டா நடந்துக்கோங்க. எப்பேர்ப்பட்ட ஃபைலையும் எங்க சைபர் க்ரைம் ஆட்கள் வெளியே எடுத்துடுவாங்க. நீங்க எதையும் செய்ய வேண்டாம். அவங்கள வர வைக்கவா?''
டி.எஸ்.பி-யின் அந்த மூவ் அரவிந்தனுக்கு அதிர்வைத் தந்தாலும் அசராமல் சமாளிக்க முயன்றான்.
``சார், இது ஒரு ரகசிய முயற்சி... உங்க டிபார்ட்மென்ட்ல உங்களுக்கு அடுத்த ரேங்கில் இருக்கிறவருக்கு இது பற்றி எவ்வளவு தெரியும்னு சொல்ல முடியாது. இதுல சைபர் கிரைம் வந்து டேக் ஓவர் பண்ண இது என்ன ஏதாவது பப்ளிக் கம்ப்ளைன்டா, இல்ல டிபார்ட்மென்ட் ஒர்க்கா?'' என்று தன்னுடைய கூர்மையையும் காட்டினான்.
``சரி, சரி, சீக்கிரமா ஓப்பன் பண்ணுங்க. நீங்க ஒரு பெரிய எழுத்தாளர்னு எனக்குத் தெரியும்.''
``அரவிந்தன், எப்படியாவது அந்தக் காலப் பலகணியைத் திறக்கப் பாருங்க. அது டுபாக்கூரா, இல்ல, நிஜமாலுமே சித்த பொக்கிஷமான்னு பாத்துருவோம்’’ என்று ஜெயராமனும் தூண்டினார்.
மெயில் பாக்ஸும் திறந்துகொண்டது. ஃபைலை அரைமனதாக நெருங்க, திறந்தான்.

முதலில் பெட்டி புகைப்படமாய் கண்களில் பட்டது. அடுத்து அது திறக்கப்பட்ட நிலையில், பின் லிங்கம், அதற்குப் பின் ஏட்டுக்கட்டுகள், ரசமணி என்று ஒவ்வொன்றாகக் காட்சி தந்தன.
டி.எஸ்.பி ராஜரத்தினம் அகண்ட விழிகளுடன் இமைக்கக்கூட மறந்து அப்படி ஒரு பார்வை பார்த்தார். ஜெயராமனும்...
``இதுதான் அந்த பாஷாணலிங்கமா..? பார்க்க கொஞ்சம் கரும்பச்சைல இருக்கு. பாஷாணம் அப்படித்தான் இருக்குமோ?
அதென்ன... சொர்ண ஜாலமா? அது என்ன ஏடு? யவ்வன சூரி என்கிற யவ்வன காந்தி. அதோ... அதோ... காலப் பலகணி ஏடு.
பழைய ஏடுமாதிரிதான் தெரியுது.’’
கமென்ட்டுகளுடன் டி.எஸ்.பி பார்த்தபடியே இருக்க, காலப்பலகணியின் முதல் பக்கத்தைத் திறந்தான்.
அதில் ஒரு பாடல்...
`ஆதி சிவன் கழலடி போற்றி, ஆதித்த சுடரொளி போற்றி, மேதினியை நிலைப்படுத்தி பூதலத்தைப் பாரித்திடும் நவகிரக நாயகர் போற்றி, நொடி நாடி நிமிடமெனும் காலமதன் நேரமதில் ஜாலம் செய்யும் காலன் என்னும் கணக்கன் போற்றி, ஒன்று முதல் ஒன்பதனை நன்றியுடன் நினைத்தே பூஜ்ஜியத்தை பூஜித்தேன் போற்றி... போற்றி... போற்றி'
என்கிற பாடலை அரவிந்தன் சிரமப்பட்டுத் தான் படித்தான். டி.எஸ்.பி ``இப்படிப் பாட்டவா எல்லாம் இருக்கும்?’’ என்று விக்கிப்போடு கேட்டார்.
அரவிந்தன் அடுத்த பக்கத்துக்கு, அதாவது அடுத்த ஏட்டுக்குச் சென்றான். அதில் பலகணிச்சக்கரம் எனும் சொற்களுக்குக் கீழே 9 வட்ட சக்கரங்களும் அதன் மேல் கிரகங்களின் பெயர்களும் இருந்திட, சக்கரம் நடுவில் ஒவ்வொரு சக்கரத்திலும் ஒரு எழுத்து காணப்பட்டது. ஒரு சக்கரத்தின் நடுவில் `அ' என்கிற எழுத்து. அடுத்ததில் `க' அதற்கடுத்து `ச' இப்படி எழுத்து மட்டும் இருந்தது.
``இது என்ன எழுத்தாளரே... எல்.கே.ஜி படிக்கிற பசங்க ஹோம் ஒர்க் நோட்டு மாதிரி இருக்குது’’ டி.எஸ்.பி பொறுமை இழந்து கேட்டார்.
``சார், பொறுமையா படிச்சு படிப்படியா போகணும் சார். எல்லாப் பக்கங்களையும் பார்த்தாதான் இதை எப்படிப் பயன்படுத்தறதுன்னே தெரியும்.''
``அப்ப சரி ஒவ்வொரு பக்கமா போங்க.''
``எப்படியும் இன்னிக்கு நைட்ட ஓட்டியாகணும். அதிகாலையிலதான், அதுலயும் அவங்க மலைல கால் வைக்கயிலதான் எல்லாமே இருக்கு. அதுவரை என்ன பண்ணப்போறோம்? நீங்க ஒவ்வொரு பக்கமாவே படியுங்க. எனக்கு ஒரு கேள்விதான், அந்த ஐட்டங்கள் வசப்படுமா? அவ்வளவுதான்.’’
அவர் திரும்ப ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தபடி லேசானார். அரவிந்தனுக்கு அடுத்தடுத்து நன்றாகக் குழப்ப முடியுமென்று தோன்றியது.
கடிகாரத்தைப் பார்த்தான். மணி ஒன்பது.
மதுரை விமான நிலையம்!
பாரதி டிபார்ச்சர் கேட் வழியாக வெளியே வந்தபோது ஒன்பதே கால். கைப்பேசியை இயக்கத் தொடங்கி சாந்தப்ரகாஷிடம் பேச விழைந்தவள், அரவிந்தன் பாஸ்வேர்டு அனுப்பியிருப்பதையும் பார்த்தாள்.
ஒரு சின்ன நம்பிக்கை பிறந்தது. அப்படியே வெளியே ரெஸ்டாரன்ட் நோக்கிச் சென்றவள், லேப்டாப்பைத் திறந்து மெயிலை ஓப்பன் செய்து ஃபைல்களின் பக்கம் செல்லத் தொடங்கினாள்.
அப்போது பாரதி என்கிற ஒரு குரல் ஒலித்திட நிமிர்ந்தாள்.
எதிரே திவ்யப்ரகாஷ் ஜி! அவர் தலையில் கட்டு. ஜிப்பாவின் மேல் அங்கங்கே ரத்தத் திட்டுகள்.
``ஜி, என்ன ஆச்சு?’’ என பாரதியும் தன் லேப்டாப்பை மூடியபடியே எழுந்தாள். வழியில் கார்ல சாருவுக்கு ஃபிட்ஸ் வந்துடுச்சு. அதைப் பார்த்த சந்தா பதற்றத்துல காரை சைடுல விட்டதில பள்ளத்தில் விழுந்து எல்லோருக்கும் காயம். நல்லவேளை, லிங்கத்துக்கோ ஏடுகளுக்கோ எந்த பாதிப்பும் இல்லை. நீங்க இங்க காத்திருக்கேன்னு சொன்னதால ஒரு டாக்ஸி பிடித்து வந்தேன். அந்த டாக்ஸியிலதான் ஒப்படைக்க வேண்டிய எல்லாம் இருக்கு. எங்களுக்குக் கொடுப்பினை இல்லை. உன்னாலதான் ஒப்படைக்க முடியும்’’ என்ற திவ்யப்ரகாஷ்ஜியை பாரதி திகைப்புடன் பார்த்தாள்.
``இன்னொரு விஷயம். அரவிந்தன், ஜெயராமன் இரண்டு பேரும் இப்ப சிக்கல்ல இருக்காங்க. எங்களை வழிமறிச்சி எல்லாத்தையும் கைப்பற்ற போலீஸும் தயாரா இருக்கு. நான் இதை என் மதியூகரணி சக்தியால சொல்றேன். தயவுசெய்து நம்பி இப்பவே புறப்படு. உன்னால மட்டும்தான் இனி எதையும் செய்ய முடியும்'' என்ற அவருக்குப் பின்னால் ஒருவர் பார்த்தபடியே சென்றார். அது அந்தப் பழநி பண்டார சித்தர்.
- அடுத்த இதழில் முடியும்