
பாரதி அதன்பின் எதுவும் பேசவில்லை. டாக்சியை நோக்கி நடந்தாள். மணி பத்தைக் கடந்துவிட்டிருந்தது.
இன்று
அந்தப் பண்டார சித்தர் முகத்தில் ஒரு குறும்புச் சிரிப்பு. ஏர்போர்ட் லாஞ்சுக்குள் திறந்த மார்போடும் அழுக்கு வேட்டியோடும் அவரால் எப்படி வர முடிந்தது, என்கிற கேள்வியோடு பாரதி அவரைப் பார்க்கவும், ஆச்சர்யமானாள்.
சென்னையில் தீட்சிதர் வீட்டு முன்னால் பகல் பொழுதில் இருந்தவர், இங்கே இந்த இரவில் எப்படி வர முடிந்தது என்றும் ஒரு கேள்வி பாரதிக்குள் எழ, அவரையே வெறித்தாள்.
திவ்யப்ரகாஷ்ஜியும் திரும்பிப் பார்த்து வியப்புக்கு மாறியவராக ``சாமி நீங்களா? நமஸ்காரம்'' என்று வணங்கினார்.
``என்ன கால் தட்டிடுச்சா..?’’ என்று அடுத்து அவர் கேட்ட கேள்வி, திவ்யப்ரகாஷைச் சற்றுக் குழப்பியது.
``என்ன சாமி சொல்றீங்க?''
``பயணத்தத் தொடர முடியலியான்னு கேட்டேன்?''
``அ... ஆமா சாமி - ஆக்ஸிடென்ட் ஆயிடுச்சு... நான்கூட கால் வலியோடுதான் பேசிக்கிட்டி ருக்கேன்... ஊனி நடக்க முடியல...!''
``நின்னாதானே நடக்க...?''
`` ஆமா சாமி... நிக்கிறதும் கஷ்டமா இருக்கு...''
``தப்போ சரியோ உறுதியா நிக்கணும். நிக்காமப் போனதாலதானே பிரச்னையே..?’’
அவரிடம் இருபொருள் படும் பேச்சு. பாரதிக்கு அந்தப் பேச்சு எரிச்சலைத்தான் மூட்டிற்று.
``ஆமா... எப்படி நீங்க இங்க வந்தீங்க?’’ என்று ஆரம்பித்தார்.
``நீ கேட்க எவ்வளவோ பெரிய கேள்வி எல்லாம் இருக்கு பாப்பா... இதைப் போய் ஒரு கேள்வின்னு கேட்கிறே...’’ என்றார் அவரும்.
``முதல்ல இதுக்கு பதிலைச் சொல்லுங்க, எதுக்கு இப்படி என்னையே சுத்தி வர்றீங்க?''

``நீ சொன்னபடி நடக்கறியான்னு பார்க்கத்தான்...’’
அந்த வாக்குறுதிக்காகத்தான் இவ்வளவு தூரம் வந்திருக்கேன். ஆனால், இதெல்லாம் எனக்கு சம்பந்தமேயில்லாத வேண்டாத வேலைங்க...’’ எரிச்சல் பாரதியிடம் பீறிட்டது.
``அது எப்படி உனக்குத் தெரியும்?'' - பதிலுக்கு பண்டாரத்திடம் இகழ்வான பதில்கேள்வி.
``என்னைப் பத்தி எனக்குத் தெரியாம உனக்குத்தான் எல்லாம் தெரியுமோ?'' - பாரதி கோபத்தில் ஒருமைக்கு மாறிவிட்டாள். ஆனால் பண்டாரம் அசரவே இல்லை.
``அப்படிக் கேளு, இதுதான் கேள்வி... இதுக்கு நான் பதில் சொல்லவா?'' பண்டாரம் திருப்பிக் கேட்க, பாரதி பதிலுக்குப் பரபரப்பாகிட, திவ்யப்ரகாஷ்ஜிக்கு மட்டும் பண்டாரம் காரணமில்லாமல் வரவில்லை என்பதோடு ஒரு அலகிலா விளையாட்டு அங்கே நடக்கப்போவதும் புரிந்துவிட்டது.
நல்லவேளை, ரெஸ்டாரன்ட்டில் எவருமில்லை.
எல்லோரும் வெளியேறிவிட்டிருந்தனர். அப்படியே வெளியே கிடந்த ஒரு பிளாஸ்டிக் சேரை நோக்கி நகர்ந்து, நிற்கமுடியாமல் அதில் அமர்ந்துவிட்டார் திவ்யப்ரகாஷ் ஜி. மூச்சு ஏறி இறங்கியது.
பண்டாரத்தை உற்றுப் பார்க்கலானார். பண்டாரத்திடம் ஒரு அநாயாசம். ``பாப்பா... உன்னைப் பத்தி உனக்குத் தெரிஞ்சதெல்லாம் ரொம்பக் குறைவு. தெரியாததை நான் வரிசையா சொல்லிக்கிட்டே வரேன். எல்லாமே அப்பழுக்கில்லாத சத்தியமான உண்மைகள். நீ ஒரு சிவராத்திரி அன்னிக்குப் பிறந்தவங்கிறது உனக்குத் தெரியுமா?''
- என்று ஆரம்பித்தார்.
``சரி... அதுக்கென்ன இப்போ?''
- பாரதி அலட்சியமாக எதிர்கொண்டாள்.
``அவசரப்படுறியே, இன்னும் இருக்கு. ஒரு சிவராத்திரி அன்னிக்குத்தான் இதோ இப்ப டாக்ஸியில இருக்குன்னு இவன் சொன்னானே அந்த பாஷாணலிங்கம்... அது உன் வீடு தேடி வந்தது. அதுக்கு உன் பாட்டியோட அம்மாதான் காரணம். ஒரு கோடி தடவை முருகன் பேரை ஜெபிச்ச புண்ணியம் - அந்த முருகனோட அப்பன் வடிவத்துல அருள் போய்ச் சேர்ந்திடுச்சு. அப்ப கிட்ட இருந்து எல்லாத்தையும் பார்த்துக்கிட்டிருந்தது யார் தெரியுமா?''
- கேள்விக்குப்பின் ஒரு இடைவெளி. திவ்யப்ரகாஷ்ஜிக்கும் எல்லாம் புதிய செய்திகள். பாரதியிடமும் முதல்முறையாக ஒரு குழப்பச் சலனம்.
``என்ன பாப்பா அமைதியாயிட்டே. இப்போ இருக்கற உன் பாட்டிக்கு போனைப் போட்டுக் கேளு, நான் சொல்றதெல்லாம் உண்மையான்னு, நீ உன் பாட்டிக்குப் பேத்தி மட்டுமல்ல... பெத்த அம்மாவும்கூட...''
``இதோ பாருங்க... எதுக்கு என்னை இப்படிக் குழப்புறீங்க. இதுக்கு முந்தி நடந்ததுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்... எதுக்கு அதையெல்லாம் இப்ப சொல்லிக்கிட்டு இருக்கீங்க?''
``கோடி ஜெபம் பண்ணுனே. போதும் இந்த மனுஷப் பிறப்பும்னும் அப்ப நினைச்சே... ஒரு குருவாலதான் பிறவிங்கிற கடலைக் கடக்க முடியும்னு நம்பினே. இப்ப எதுக்கு சொல்லிக்கிட்டி ருக்கீங்கன்னா என்னப்பா அர்த்தம்? அப்ப கேட்டது இப்ப கிடைக்கப் போகுது.’’
``தயவுசெய்து சுத்தி வளைக்காம நேராகப் பேசுறீங்களா?''
``அப்படி நான் பேசினா உனக்குப் புரிய வேண்டியது புரியாதே பாப்பா.''
``இப்ப மட்டும் புரிஞ்சிடிச்சாக்கும்..? நான் சொன்னபடி இப்பவே இங்கேயே நடந்து காட்டிடறேன். இதோ என் கையில இருக்கிற இந்த லேப் டாப்ல அந்த போட்டோ ஃபைல் இருக்கு. பாஸ்வேர்டும் வந்துடுச்சு. அதை அப்படியே உங்க கண்ணு முன்னயே எரேஸ் பண்ணிடறேன். அப்புறம் இந்த லிங்கம், ஏடுகளையெல்லாம் நான் கொண்டு போய்க் கொடுக்கவேண்டிய அவசியம் எதுவும் இனி எனக்கில்லை. அதெல்லாம் உங்க பாடு.
நான் இப்படியே ஏர்போர்ட் ரெஸ்ட் ரூம்ல தங்கிட்டு, காத்தால ஃப்ளைட் பிடிச்சி திரும்பிப் போயிடுறேன். ஆள விடுங்க.''
பாரதியின் வெடிப்பைப் பண்டார சித்தர் லட்சியமே செய்யவில்லை. அப்படியெல்லாம் போக முடியாது பாப்பா. இதோ, போகனைப் பார்க்க இவன் எவ்வளவு துடிக்கிறான் தெரியுமா? ஆனால் கால் ஒடிஞ்சிடுச்சே... பார்க்க முடியாதே... ஆனா உன் விஷயம் அப்படியில்லை.
நீங்க இந்தப் பொட்டில இருக்கிறத இனி அழிக்கிறதாலயும் எந்த பிரயோஜனமும் இல்ல. ஏன்னா அங்க எல்லாத்தையும் திறந்து பார்த்துகிட்டி ருக்காங்க. அது தெரியுமா உனக்கு?'' என்று கண்களை அகல விரித்தார் பண்டாரம்.
``என்ன சொல்றீங்க?''
``அங்க எழுத்தாளனும் உன் முதலாளியும் சித்தன் சமாச்சாரமெல்லாம் உண்மையா பொய்யான்னு பரிசோதனை பண்ணிகிட்டிருக்காங்கன்னேன்.''
``நெஜமாவா?''
``போன் பண்ணிக் கேளேன்... அதான் கையிலேயே இருக்குதே செல்போனுங்கிற ஒரு செவ்வகப் பிசாசு. கலியுகத்தில் மனுஷன் பொய் சொல்லுவான், கருவியால சொல்ல முடியாதே?''
பாரதி உடனேயே அரவிந்தனுக்குப் போன் செய்தாள். ஸ்விட்ச் ஆஃப் என்று குரல் ஒலித்தது.
ஜெயராமன் போனிலிருந்தும் அதே பதில்.
``என்ன... பிடிக்க முடியலையா?''
``ஸ்விட்ச் ஆஃப்!''
``கூட இருக்கிற போலீஸ்காரனோட வேலை. ஆனா, நான் சொன்னதுதான் நிஜம்.''
``சரி நீ சொன்ன மாதிரியே இருக்கட்டும். அதுல எனக்கு ஒண்ணும் தப்பு இருக்கிறதா தெரியல. குறிப்பா என் எடிட்டர், எதையும் தோண்டிப் பார்க்கறவர்... நல்லா பார்க்கட்டும்.''
``அவங்க பாக்கப்போறத நீ என்ன செய்யப்போறே? இந்த லிங்கமும் ஏடும் அடுத்து என்ன ஆகும்னுதான்...''
``இன்ட்ரஸ்டிங் தப்பில்லையே.''
``சரி... அப்ப நீ ஒரு முடிவுக்கு வா. இவங்க கேட்ட உதவியை உன்னால செய்ய முடியுமா முடியாதா?''
``ஏன் அதை நான்தான் செய்யணுமா? நீங்க செய்யக்கூடாதா?''
``என்கிட்ட இவங்க உதவி செய்யச் சொல்லிக் கேட்கவே இல்லையே...’’ - பண்டார சித்தர் கேட்ட கேள்வி திவ்யப்ரகாஷுக்கு ஒரு இடி இடித்தது.

``சாமி உங்களை நான் இங்கதானே இப்பதானே பார்க்கறேன். எதை வெச்சு உதவுங்கன்னு கேட்க முடியும்? அதோடு இது என்ன சாதாரண விஷயமா? இது அபகரிக்க போலீஸ் வேற காத்துக்கிட்டு இருக்கு. அவங்கள சமாளிச்சு உண்மையா நடந்துக்க இப்போதைக்கு பாரதியால மட்டும்தான் முடியும்கறது என் எண்ணம்.''
``அப்படிச் சொல்லு... போலீஸுக்குக் காரணம் இவ அப்பன். அதாவது எம்.பி. அப்ப, அப்பன் தப்புக்குப் பொண்ணுதானே பொறுப்பெடுத்துக்கணும்.''
- பண்டாரத்தின் வளைப்பு பாரதியிடம் நன்றாகவே வேலை செய்தது.
``சரி... இப்ப நான் என்ன செய்யணும்?''
``எப்படியாவது எல்லாத்தையும் மலையில போகர் சாமிகிட்ட சேர்த்துடணும்...''
``அவரை நான் எங்கன்னு தேடுவேன்?''
``இது சித்ரா பவுர்ணமி ராத்திரி. பலர் சித்தன் பொட்டல் நோக்கிப் போய்க் கிட்டிருப்பாங்க.''
``இது எனக்கு சரியாப் படலை. முட்டாள்தனமாவும் தெரியுது.''
``நான் கூட்டிட்டுப் போறேன் பாப்பா... என்னைச் சேர்த்துக்கிறியா?'' - பண்டார சித்தர் ஒரு சிறு பிள்ளையின் உடல் மொழியோடு கேட்கவும் ``என்னை நீ விட மாட்டியா?'' என்றாள் சற்றுக் கேலியாக.
``எனக்கும் கடமை இருக்கு பாப்பா... உடையார் எனக்கு குரு. என்னை எனக்குக் காட்டினவர்... அவர் கடனை உன்கூட சேர்ந்து அடைக்க விரும்புறேன்.''
``உடையாரா?''
``ஆமாம்... இதோ இந்த மதியூகியோட கொள்ளுத்தாத்தாதான் அவர்.''
``கொள்ளுத் தாத்தாவா... அப்ப அவர்கூட எப்படி நீங்க...?''
``அவர் இப்ப இருந்தா 135 வயசாகும். எனக்கு அவ்வளவெல்லாம் இல்ல. ஒரு இருபது வயசு குறைச்சுக்கோ...''
``என்ன... உனக்கு வயசு இப்ப 115 ஆ...?''
`` ஆமாம் இந்த லிங்கத்துக்கு ஆசைப்பட்டவர்கள்ல நானும் ஒருத்தன். அப்ப என் பெயர் காத்தமுத்து. ஆனா, போகப் போக இது கிடைக்க ஒரு கணக்கு இருக்குன்னு புரிஞ்சுபோச்சு. அந்தக் கணக்குப்படி பார்த்தா, எனக்கு இல்லைன்னும் தெரிஞ்சிடுச்சு. ஆசைப்பட்டது கிடைக்கலன்னா கிடைச்சது மேல ஆசைப்படணும்னு சொல்லுவாங்கல்ல...! நானும் என் மனசை மாத்திக்கிட்டேன். ஒருநாள் உடையார், லிங்கத்தைத் தூக்கி என்கிட்ட கொடுத்து `வெச்சுக்குங்க... சாமி எல்லோருக்கும் பொதுவானவர்'னு சொன்னப்போ ஆடிட்டேன். அந்த நிமிஷம் அவர் என் குரு ஆயிட்டாரு...’’
பண்டாரத்தின் பேச்சு பாரதிக்குப் புரியவே இல்லை. அதன்பின் அவரை வா, போ, நீ என்று கூப்பிடவும் தோன்றவில்லை. பண்டாரம் பேசிய விதத்திலும் பிரதிபலித்த உணர்விலும் எங்கும் பொய் இல்லை என்பது பாரதிக்கு நன்கு தெரிந்தது.
``போய்க்கிட்டே பேசலாமா?'' என்று கேட்டாள்.
``இவரை போற வழியில விட்டுட்டு நாம பேசிக்கிட்டே போகலாம்... என்ன சொல்ற?''
``நிச்சயமா...''
அடுத்த பதினைந்தாவது நிமிடம் பாரதியும் பண்டாரமும் திவ்யப்ரகாஷ்ஜியுடன் மதுரையிலிருக்கும் நான்கு வழிச்சாலையின் ஒரு ஆஸ்பத்திரியில் இருந்தனர்.
சாந்தப்ரகாஷுக்குச் சற்று பலத்த காயம். ஆனால் ரத்தக்காயம் எதுவும் சாரு பாலாவுக்கு இல்லை. இருப்பினும் மயக்கத்தில் இருந்தாள். சாந்தப்ரகாஷ் பாரதியைப் பார்க்கவும் கையெடுத்துக் கும்பிட்டார். கும்பிட்டபடியே ``பாரதி... எங்களுக்கு விதி இல்ல. ஆனா நாங்க உங்களையே அந்த போகரா நம்பி ஒப்படைக்கிறோம். எப்படியாவது சேர்த்துடுங்க. உங்களுக்கு நம்பிக்கை இல்லன்னாலும் எங்களுக்காக...'' என்றான்.
``நான் என்னால முடிஞ்ச எல்லாம் செய்யறேன். ஒரே ஒரு கேள்விதான் எனக்கு... இதை ஒப்படைச்சுதான் தீரணுமா? உங்க தாத்தா பிராப்பர்ட்டியா நினைச்சு நீங்க வச்சிக்கக் கூடாதா?'' - பாரதியால் சில கேள்விகளைக் கேட்காமல் இருக்க முடியவில்லை.

``இல்ல பாரதி... இது தாத்தா பிராப்பர்ட்டி இல்ல. போகரோட பிராப்பர்ட்டி இது. இது ஒரு கமிட்மென்ட். தாத்தாவால அதைச் செய்ய முடியல. காரணம் என் பெரியப்பா, இதோ இவரோட அப்பா... அவர் செய்த துரோகம். பொய் சத்தியம். எல்லாத்தையும் எங்க கொள்ளுத்தாத்தா டைரியைப் படிச்சுத் தெரிஞ்சுக்கிட்டோம். இதை ஒப்படைச்சாதான் அவர் ஆத்மா சாந்தி அடையும். எங்க மூலமா உங்களைப் பயன்படுத்தற காரணம்தான் எங்களுக்குத் தெரியல. ஆனா நிச்சயம் சரியான காரணம் இருக்குன்னு நான் நம்புறேன். போகர் ஒப்படைச்சதெல்லாம் இப்ப அப்படியே இருக்கு’’ என்றான் சாந்தப்ரகாஷ்.
பாரதி அதன்பின் எதுவும் பேசவில்லை. டாக்சியை நோக்கி நடந்தாள். மணி பத்தைக் கடந்துவிட்டிருந்தது.
அரவிந்தனும் ஜெயராமனும் காலப் பலகணி ஏட்டின் பக்கங்களில் சிக்கிக் கொண்டிருந்தனர். காலப் பலகணியை எப்படித் திறக்க வேண்டும்?
எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்கிற குறிப்புகளின் படி செயல்பட்டதில் அரவிந்தன் எதிரில், ஒரு தாளில் சிறுசிறு சதுரங்களில் தமிழ் மொழியின் 247 எழுத்துகளும் 247 சதுரங்களுக்குள் இருந்தன.
கண்களை மூடிக்கொண்டு ஒரு தர்ப்பைப் புல் நுனியால் அந்தச் சதுரங்களைத் தொடவேண்டும். தொடும் முன் ஒவ்வொரு முறையும் `பிரம்ம முனி திருவடி போற்றி - பிரம்ம பீஜம் போற்றி... ஓம் ஷடஷட்'' என்று சொல்லிச் சொல்லித் தொடவேண்டும்.
தர்ப்பையின் நுனி காட்டும் எழுத்தை எடுத்து வரிசையாக எழுதிவர, இறுதியில் ஒரு வாக்கியம் உருவாகும். அந்த வாக்கியத்தில் கேள்விக்கு விடை இருக்கும்.
இதைச் செய்ய தர்ப்பை நுனியைத்தான் பயன்படுத்தவேண்டும் என்ற நிலையில், டி.எஸ்.பி தனக்குத் தெரிந்த ஒரு பிராமணருக்கு போன் செய்து தர்ப்பை வந்து சேரவே ஒரு மணி நேரத்துக்குமேல் ஆகிவிட்டது. `தர்ப்பையைத் தவிர வேறு எதையும் பயன்படுத்தக் கூடாது' என்றும் குறிப்பு இருந்தது. அதுவரை முயற்சி செய்ததில், `மதுரையில் மடங்கி' என்று ஒன்பது எழுத்துகள்தான் வந்திருந்தன.
பாரதி மதுரையில் இருப்பதால், காலப் பலகணி சரியான திசையைக் காட்டுவதாகவே மூவருக்கும் தோன்றியது. அரவிந்தன் நெற்றியில் விபூதியெல்லாம் தரித்து பக்திப் பழமாய் மந்திரத்தை மனதில் சொல்லிச்சொல்லி சதுரக் கட்டங்களில் தர்ப்பை நுனியை வைத்துக்கொண்டு செல்ல, ஜெயராமனும் எழுத்துகளைக் கோத்துக்கொண்டே போனார்.
டி.எஸ்.பி எட்டி எட்டிப் பார்த்துக்கொண்டு, ``இதை நம்பவும் முடியல, நம்பாம இருக்கவும் முடியல'' எனும்போது அவருக்கு மதுரையிலிருந்து போன் வந்தது.
சாந்தப்ரகாஷின் கார் விபத்துக்குள்ளாகி மூவரும் ஆஸ்பத்திரியில் இருப்பதாகவும், பாரதி மட்டும் ஒரு சாமியார்போன்ற மனிதரோடு காரில் புறப்பட்டுக் குற்றாலம் நோக்கிச் செல்வதாகவும் போனில் பேசிய நபர் கூறவும் டி.எஸ்.பி-யிடம் வியப்பு.
'மதுரையில் மடங்கி'ங்கிறதுக்கு இப்பதான் அர்த்தம் புரிகிறது என்று விபத்துச் செய்தியை விரிவாக அவர்களுக்குக் கூறத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து அவர் முகத்தில் ஒரு பிரகாசம்.
பாரதி ஒதுங்கினாலும் இந்த விஷயம் அவளை ஒதுங்கவிடாமல் செய்ததில் ஒரு ஆச்சர்யம். எல்லாவற்றுக்கும் பலகணியில் விடை கிடைக்கும் என்றும் அவன் மனம் நம்பத் தொடங்கியது.
காருக்குள் ஏறிய நொடி, களைப்பில் பாரதி தூங்கிவிட்டாள். கண் விழித்தபோது மணி மூன்று. காரும் குற்றாலத்துக்குள் நுழைந்து கொண்டிருந்தது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் காரை நிறுத்தி, இருவரும் இறங்கிக்கொண்டனர். பின்னால் ஒரு அட்டைப்பெட்டிக்குள் லிங்கமும் ஏடுகளும் இருக்க, பெட்டி டேப் போட்டு நன்கு ஒட்டப்பட்டிருந்தது. பெட்டியை பண்டாரசித்தர் தூக்கிக் கொண்டார். டிரைவரிடம், ``இங்கேயே காத்திரு... நாங்க எப்ப வேணா திரும்பி வருவோம்'' என்று சொல்லிவிட்டு நடக்கத் தொடங்கினார்.
டிரைவர் உதட்டைப் பிதுக்கி ஆச்சர்யமானான். அங்கே எந்த ஒரு கட்டடமும் இல்லை. இப்படி ஒரு இடத்தில் இறங்கி எங்கே செல்கிறார்கள் என்று பார்த்தான்.
பண்டார சித்தர் பக்கவாட்டில் ஒரு சரிவில் இறங்கியபடியே, ``உன் செல் போன்ல டார்ச் இருக்கும் பார், அடி'' என்றார்.
பாரதியிடம் தயக்கம். சற்றே பயமும் கூட... ``தயங்காதே... எல்லாரும் போற வழியில குறிப்பிட்ட இடத்துல உங்கப்பனோட போலீஸ் நிக்குது... அதுவும் சித்தர் சாமிங்க வேஷத்தில... அதான் குறுக்கு வழியில் போறேன்’’ என்று விளக்கவும், பின்தொடர்ந்தாள்.
இந்த சாமியை நான் நூறு வருஷத் துக்குப் பிறகு இப்பதான் தூக்குறேன். அப்ப எனக்கு பதினைஞ்சோ பதினாறோ வயசு. உடையாருக்குத் தான் லிங்கம்னு மயில் எடுத்துத் தரவும், நான்தான் லிங்கத்தைச் சுமந்துகிட்டு, பல்லாவரம் வரை போனேன்'' என்று பழைய நினைவுகளில் மூழ்கியபடி நடந்தார் பண்டாரம்.
``ஆமா... எப்படி என்னைவிட வேகமா மதுரை வந்தீங்க. உங்ககிட்ட நான் கேட்க நிறைய கேள்விகள் இருக்கு... நாங்க தீட்சிதர் வீட்டுக்கு வந்தப்ப நீங்க அங்க இருந்தீங்க? பானுவையும் தீட்சிதரையும் நீங்க எப்படிக் காப்பாத்தினீங்க?'' பாரதியும் சற்று சகஜமாய் நடந்தபடியே கேட்டாள்.
``உன் எல்லாக் கேள்விக்கும் என்னால வார்த்தையால பதில் சொல்ல முடியாது. அனுபவித்துத் தெரிஞ்சிக்கிறியா?'' பெட்டியைத் தோள் மாற்றியபடியே கேட்டார்.
``கஷ்டமா இருந்தா நான் கொஞ்ச தூரம் தூக்கிட்டு வரட்டுமா?''
``அட இந்த மலைக் காத்து படவும் இந்த ஜென்மகுணம் அடங்கி உன் பழைய பக்தி தலைதூக்குதாட்டம் இருக்கே. ``தாராளமா தூக்கி வா... எல்லாரையும் எல்லாத்தையும் சுமக்கற அந்த ஈஸ்வரனை நாம சுமக்கிறது பெரும் பாக்கியம்'' என்று கை மாற்றிவிட, பாரதிக்கு அது புதிய அனுபவம்.
வாழ்வில் முதல் முறையாக தெய்விகத்துடன் அவளுக்கு ஒரு தொடர்பு உருவான நிலையில் மனதிலும் ஒரு இனம்புரியாத உற்சாகம்.
``ஆமா எவ்வளவு தூரம் போகணும்?'' என்று உற்சாகம் குறையாமல் கேட்டாள்.
``இங்கிருந்து 30 கல். அதாவது கிட்டத்தட்ட 45 கிலோமீட்டர்'' என்றபடியே தன் வேட்டி இடுப்பு மடிப்புக்குள் இருந்து ஒரு மணி மாலையை எடுத்து அவள் கழுத்திலும் போட்டுவிட்டார்.
``இது என்ன மாலை?''
``பழநியில் உன் கழுத்துல விழுந்த அந்த மாலைதான்.''
``அது இப்ப இங்கே எப்படி உங்க கையில?''
``காரிலிருந்த உன் லேப்டாப் பேக்கில இருந்தது. எடுத்து வெச்சிக்கிட்டேன். இதுல இருக்கிற ஒவ்வொரு கல்லும் ஒரு சித்தன். இப்ப நீ பெரும் சித்த சக்தியோடு இருக்கிற ஒருத்தி.''
``உங்க சித்த உலகத்துல இப்படி இன்னும் எவ்வளவு விஷயங்கள்?''
``அது இருக்கு, கொள்ளையா... இப்ப உனக்கு ஒரு போன் வரும் பார்'' சொன்ன மறுவிநாடி அரவிந்தனிடமிருந்து போன்.
``சொன்னேன்ல... எழுத்தாளன்தானே?''
``ஆமாம்...''
``பரிசோதனை சரியா இருக்கான்னு பரிசோதிக்கத்தான் போன்னு நினைக்கிறேன். அது சரியாதான் இருக்கும். ஆனா நீ அதை ஒப்புக்காதே. ஏன்னா, நாம போற பாதையை உறுதிப்படுத்திக்கிட்டு வந்து நம்ம கிட்ட இருக்குற பெட்டிய அபகரிக்கலாம். ஜாக்கிரதை!''
பண்டார சித்தன் சொன்னதைக் கேட்டபடியே அரவிந்தனுக்குக் காதைக் கொடுத்தாள்.
``பாரதி...''
``சொல்லுங்க அரவிந்தன்.''
``இப்ப எங்க இருக்கே?''
``நீங்க என்ன பண்ணிகிட்டு இருக்கீங்க. நான் கூப்பிடும்போதெல்லாம் சுவிட்ச்டு ஆஃப்னே வருதே?''
``ஆமாம் நான் எல்லாத்தையும் விவரமா அப்பறம் சொல்றேன். இப்ப நீ காட்டுக்குள்ள ஏதாவது குறுக்கு வழியில போய்க்கிட்டிருக்கியா அதை மட்டும் சொல்...''
``என்ன அரவிந்தன், பரிசோதனை நடந்துகிட்டிருக்கா?''
``ஆமாம், பெட்டி, ஏடு இவற்றோட சக்தியும் உண்மைத்தன்மையும் நீ இப்ப சொல்லப்போற பதில்லதான் இருக்கு.''
``அப்படியா, நாங்க இப்ப காருக்குள்ள இருக்கோம்''
``நிஜமாவா?''
``இது என்ன கேள்வி... குற்றாலத்தை நோக்கி எங்க கார் போய்க்கிட்டிருக்கு.''
``அப்படியா... குற்றாலம் முன்னே இடத்தே பிரிந்து வனத்தில் புகுந்து செல்கிறாள், பாரதி சங்கரி காலமிதேன்னு பலகணி சொல்லுது. ஆனா தப்பா இருக்கே...!''
``நான் சொன்னப்பல்லாம் நம்பிக்கை வரலை. இப்ப தப்பா இருக்குன்னா?'' காட்டமாய் திருப்பிக் கேட்டாள்.

``சரி, அப்புறமா திரும்ப கூப்பிடுறேன்'' என்று கட் செய்தான் அரவிந்தன். பாரதியிடம் முதல்முறையாக மிகப்பெரும் மாற்றம்.
``என்னமா அப்படிப் பார்க்குற?''
``பாரதி சங்கரிங்கறதுதான் என் முழுப் பேர். ஆனால் அது என் அப்பா, பாட்டியைத் தவிர யாருக்கும் தெரியாது. சர்ட்டிபிகேட்லகூட பாரதி மட்டும்தான். ஆனா இப்ப என் முழுப்பெயரை காலப் பலகணி சொல்லிடுச்சு . அது மட்டுமல்ல... நாம இப்ப போய்க்கிட்டிருக்கிற பாதையைக் கூட சொல்லிடுச்சு. இது எப்படி சாத்தியம்?''
- சித்திரைப் பௌர்ணமி நிலவின் ஒளி, மழைபோல் பொழிந்த நிலையில் பாரதி கேட்ட கேள்விக்கு நெஞ்சு நிமிர்த்திச் சிரித்த பண்டாரம் ``சித்தத் துள்ளே எல்லாம் புரியும். எதுவும் இங்க மாயம் இல்ல... ஆன்மிகத்துக்கு உண்மையிலே என்ன பொருள் தெரியுமா?''
``என்ன?''
``விளங்காத விஞ்ஞானம்''
``இப்படி ஒரு டெபனிஷனா?''
``ஆமாம்பா. பொய் உடம்பால விளங்கிட்ட ஞானம் விஞ்ஞானம். மெய் மனசால விளங்கிக்க முடிஞ்ச ஞானம் மெய்ஞ்ஞானம்.''
- பேச்சோடு நடந்ததில் ஒரு புதிய உலகிற்கு வந்தது போலிருந்தது. மடு ஒன்றில் புலி நீர் அருந்தியபடி இருந்தது. சற்றுத் தள்ளி மான் ஒன்று படுத்திருந்தது. ஓடை ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. அதுவரை நுகர்ந்திராத ஒரு வாசனை அப்பகுதி முழுக்கப் பரவி இருந்தது.
மரங்களின் தளிர்களில் நிலவொளி உமிழ்ந்தாற்போல் வழிந்து கொண்டிருந்தது.
``இது என்ன, குற்றாலத்தில் இப்படி ஒரு இடமா?'' வியந்தாள் பாரதி.
``நாம இப்ப 40 மைல் கடந்துட்டோம்மா''
``அது எப்படி?'' திகைத்துப் பதைத்துக் கேட்டாள்.
`` அது அப்படித்தான்... நான் உன்னை அஷ்டமாசக்தியால வசப்படுத்தி அழைச்சுக்கிட்டு போய்க்கிட்டி ருக்கேன்.’’
``அஷ்டமா சித்தியா... அப்படின்னா?''
``சித்தத்துக்குள்ள வா... புரியும்!''
``அதான் வந்துகிட்டே இருக்கேனே...’’
``இப்பதான் தொடங்கியிருக்கே... இனி உனக்கு வாழ்நாளெல்லாம் சித்தானுபவம்தான்.''
``அடடே... நான் இதைச் சரியா புரிஞ்சுக்காம இவ்வளவு நாள் இருந்துட்டேனே...''
``எல்லாத்துக்கும் நேரம்னு ஒண்ணு இருக்கு. இவ்வளவு நாள் நேர்மையோட இருந்தே. இனி நேரத்தோடயும் இருக்கப்போறே’’ - பண்டாரம் சொன்னவிதமே மிக நைச்சியமாக இருக்க, இருமலைகளுக்கு இடைப்பட்ட அந்தப் பாறைப்பகுதி வந்தது.
மறுபுறமாய் பலர் நின்றிருக்க, பண்டாரம் பாறையைத் தழுவிக்கொண்டு கடந்து பாரதியையும் கடக்கச் செய்தார். மறுபுறம் கால் வைத்த நொடி மயிலின் அகவல் குரல், மான் ஒன்றின் செருமல். வெண்புறாக்களின் படபடப்பு. ஒரு ஓங்கி வளர்ந்திருந்த வேர்த்தண்டுகள் மிகுந்த மஞ்சள் கடம்ப மரத்தின் கீழ் புலித்தோல் ஒன்றின்மேல் போகர் அமர்ந்திருந்தார்.
வேறுயாருமில்லை. பண்டாரம் அட்டைப்பெட்டியை முன்வைத்தார். ``சாமி... உடையார்கிட்ட கொடுத்த ஜெகவலலிங்கமும் ஏடுகளும் நூறு வருஷம் கழிச்சு திரும்ப வந்துருச்சு. இது உங்களச் சேரணும்னு உடையாரும் சர்ப்பமா பெரும்பாடு பட்டார். விதி இந்தப் பொண்ணுக்கு இருந்திருக்கு'' என்று ஒரு சிறு விளக்கம் தரவும்.
புன்னகைத்த போகர் ``நீ எப்பவும் நீயாய் இரும்மா. உண்மையும் சத்தியமும்கூட சிவம்தான்’’ என்று அருகில் அழைத்து, நெற்றியில் புருவ மையத்தில் கட்டை விரல் பதித்து, அழுத்தம் கொடுத்து ஞான விழிப்பைத் தூண்டியவர் அப்படியே விபூதியையும் பூசினார்.

பின்னர், ``உடையார் வாழ்க்கை ஒரு உதாரணம். நீதான் நல்லா எழுதிவியே... எழுது! உன்னால உண்மையும் சத்தியமும் நிலைக்கட்டும். எது சித்த ஞானம்கறதும் புரியட்டும்'' என்றார்.
பாரதிக்கு வானமண்டலத்தில் மிதப்பது போல் இருந்தது. ``சாமி, வழக்கம் போல உங்க தரிசனத்திற்காக விதி உள்ள பலரும் வந்திருக்காங்க. நாங்க உத்தரவு வாங்கிக்கிறோம்'' என்று பண்டாரமும் சொல்லிக்கொண்டு பின்னோக்கி நடந்திட, பாரதியும் தொடர்ந்தாள்.
பொழுது விடிந்து சூரியன் உதித்த வேளை... முன்பு இறங்கிக்கொண்ட அதே தார்ச்சாலையை அடைந்தபோது டாக்சி காத்திருந்தது. போனதும் தெரியவில்லை... வந்ததும் தெரியவில்லை. ஆனால் உடம்பில் புத்துணர்வுக்குக் குறைவில்லை. உலகமே புதிதாய்த் தெரிவதுபோல் இருந்திட, திரும்பவும் அரவிந்தனிடமிருந்து அழைப்பு.
``பாரதி இப்ப எங்க இருக்க?''
``இன்னும் உங்க ஆராய்ச்சி முடியலையா?''
``ப்ளீஸ்... போகரைப் பார்த்திட்டியா... நீ பார்த்ததாகவும் உன் நெற்றியில் அவர் திலகமிட்டு தீட்சை தந்ததாகவும் ஏடு சொல்லுது'' அரவிந்தன் சொன்னதில் ஒரு இன்ப அதிர்வு பாரதிக்குள் பரவியபோதிலும் அடக்கிக்கொண்டவளாய்,
``நான் குற்றாலமே போகல அரவிந்தன். திரும்பிக்கிட்டிருக்கேன். பெட்டியையும் தூக்கிப் போட்டுட்டேன்.
சித்தன் பொட்டல் போக வழி சொல்லுங்கன்னு ஒருத்தர் கிட்ட கேட்டப்போ அவர் சிரித்த சிரிப்பு இருக்கே. கொடுமை அரவிந்தன்... அவர் பாரஸ்ட் ரேஞ்சர் ஆபீஸராம். மலையில அப்படியெல்லாம் இடமே கிடையாதாம். முன்னே ஒரு குரூப் இருந்து சித்ரா பௌர்ணமி சமயம் சந்திப்பாங்களாம். ஆனா அவங்க எல்லாம் சாமியார் வேஷம் போட்டவங்களாம். இந்தப் பெட்டி, லிங்கம் எல்லாம் அவங்க வேலை என்றுதான் நினைக்கிறேன். பாம்பு விஷயம்தான் பிடிபட மாட்டேங்குது. சுருக்கமா சொல்லப்போனா எல்லாமே பொய்.
அந்த ஃபைலை முதல்ல எரேஸ் பண்ணிட்டு மறுவேலை பாருங்க. நான் ஈவினிங் வந்துடுவேன். நேரில் பேசுவோம்'' பாரதி பேசி முடித்து போனையும் முடக்கிவிட்டு, பண்டாரத்தைப் பார்த்தாள்.
``காப்பாத்திட்டே பாப்பா... எல்லாத்தையும் காப்பாத்திட்டே... நன்மை பயக்குமெனில் பொய்மையும் வாய்மை இடத்துன்னு நிரூபிச்சிட்டே’’ என்று தன்னை மறந்து கைதட்டலானார் காத்தமுத்து என்கிற கண்ணாயிர பண்டாரம். பதிலுக்கு ``கண்டவர் விண்டிலர்- விண்டவர் கண்டிலர்'' என்பது இதுதானோ?'' எனக் கேட்டுச் சிரித்தாள்.
மனதுக்குள் நாளையே இந்தக் குமாரசாமி பிரச்னையில ஒரு நல்ல தீர்வைக் கண்டுவிட வேண்டும் என்றும் நினைத்துக்கொண்டே காரை நெருங்கினாள். கண்ணாடியில் காலைச் சூரியன் ஜொலித்துக்கொண்டிருந்தான். காட்சிக்குப் புலனானவன் கைக்கு அகப்பட மறுத்தான் சித்த ஜாலம்போல்!
- முற்றும்