மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இறையுதிர் காடு - 87

இறையுதிர் காடு
பிரீமியம் ஸ்டோரி
News
இறையுதிர் காடு

சென்ற இதழில் `இன்று' பகுதி நிறைவடைந்தது. இந்த இதழுடன் `அன்று' பகுதி நிறைவடைகிறது.

அன்று பிரேமசந்திரன் ஒரு பக்கம் திட்டமிட, அவனுக்குப் பெரிய உறுதுணையே சித்த வைத்தியர் சிவராமய்யாதான். சித்தன் பொட்டல் பற்றியும் போகர் பற்றியும் குற்றாலம் பக்கம் மூலிகை பறிக்கச் சென்ற சமயம் கேள்விப்பட்டிருந்த சிவராமய்யாவுக்கு பழம் நழுவிப் பாலில் விழுந்ததுபோல் இருந்தது, உடையாரிடம் லிங்கமும் ஏடுகளும் இருக்கின்ற விஷயம்.

உடையாரிடமோ அன்றாடச் செயல்பாடு களில் எந்த ஒரு குறையுமில்லை. நித்திய பூஜைகளையும், விருட்ச வணக்கத்தையும் தவறாமல் செய்து வந்தார். நடுநடுவே பிரேம சந்திரனைத் தத்து எடுத்துக்கொண்டதற்காகவும் அவனுக்கு யவ்வன சூரியைக் கொடுத்ததற்காகவும் கொஞ்சம் வருந்தவும் செய்தார்.

இறையுதிர் காடு - 87

இவ்வேளையில் பிரேமசந்திரனுக்கு வயது ஐம்பது. இருப்பினும், இருபத்து நான்காம் வயதில் யவ்வன சூரியை அவனுக்கு சாப்பிடத் தந்ததில் அவன் வயது கிட்டத்தட்ட 24-ல் நின்றுவிட்டது. இன்று அவனுக்கு இரண்டு பிள்ளைகள். மூத்தவன் ராஜசேகரனுக்கு 25 வயதாகிறது. இளையவன் ஞானசேகரனுக்கு 23 வயதாகிறது. இவர்களோடு சேர்ந்து பிரேமசந்திரன் நிற்கும் சமயம், யார் பார்த்தாலும் மூவரையும் சகோதரர்களாகத்தான் நினைப்பார்கள்; நினைத்தார்கள்.

பிரேமசந்திரன் இவர்களுக்கு அப்பா என்று சொன்னால், யாரும் நம்பத் தயாரில்லை. இந்த யவ்வனமும் உடம்பின் பூரிப்பும் பல பெண்களை பிரேமசந்திரன் பக்கம் திருப்பின. பலர் அவனது செல்வாக்கு, இளமை இரண்டையும் வியந்து, அவனை மயக்கித் தங்கள் வசப்படுத்தவும் முயன்றனர்.

பிரேமசந்திரனுக்கு இதனால் பெரும் செருக்கு. ஒருகட்டத்தில் தன்னைப் போலவே தன் பிள்ளைகளுக்கும் யவ்வனசூரியைக் கொடுத்து அவர்கள் வாலிபத்தில், அவர்கள் அப்படியே நின்றுவிட வேண்டுமென்று விரும்பினான். அதற்காக உடையாருக்குத் தெரியாமல் ஏடுகளை எடுத்து தன் யவ்வனம் கண்டு வியந்த சித்த வைத்தியர் சிவராமய்யா என்பவருடன் கூட்டணி அமைத்து, யவ்வனசூரியைச் செய்யும் முயற்சியை ஒருபுறம் தொடங்கினான். ஆனால், பல காரணங்களால் அது முழுமை அடையாமல் வீணாகியது. இதெல்லாம் உடையாருக்குத் தெரியாமலே நடந்தது. ஆனால் பிள்ளைகளான ராஜசேகனுக்கும் ஞானசேகரனுக்கும் தெரிந்துதான் நடந்தது. பிரேமசந்திரன் கவனம் இவ்வேளை யவ்வனசூரி மேலும், அதற்கடுத்து சொர்ண ரகசியம் என்னும் `ரசவாதம்' மேலும் சென்றது.

எதனாலோ காலப் பலகணியைத் திறந்து பார்த்து, அதைப் பயன்படுத்தத் தோன்றவே இல்லை. அதேபோல மற்ற ஏடுகளும் பெரிதாகக் கவரவில்லை. இதன் மதிப்பை உணரும் விதமும் புலப்படவில்லை. ஒருமுறை என்னதான் இருக்கிறது என்று பார்க்க விரும்பி, குறிப்பாக காலச்சக்கர ஏட்டைத் திறக்க முனைந்தபோது பல்லி ஒன்று கரம் மேல் விழவும் அது சகுனத்தடையாகி, கட்டை அப்படியே மூடி வைத்துவிட்டான் பிரேமசந்திரன்.

இவ்வேளையில் விதி பிரேமசந்திரன் வாழ்வில், ஒரு சினிமா கவர்ச்சி நடிகை வடிவிலும் விளையாடத் தொடங்கியது. சினிமா தயாரிக்க வட்டிக்கு பைனான்ஸ் செய்ததில் உருவான தொடர்பு, கங்காதேவி என்கிற கங்காஸ்ரீயின் கட்டில் வரை நீண்டுவிட்டது. கங்காஸ்ரீ தன் உடம்பில் இளமை இருக்கும்போதே சம்பாதித்து, செட்டில் ஆகிவிடும் முனைப்பில் இருந்தபடியால், பிரேமசந்திரனை உடும்புப்பிடியாகப் பிடித்துக்கொண்டாள். வெறுமனே ஆசைநாயகியாக இருப்பதில் பலனில்லை என்பதை அறிந்திருந்தவள், சட்டப்படி பிரேமசந்திரனைத் திருமணம் செய்துகொள்ள முடிவுசெய்தாள். அதற்கான ஏற்பாடுகளையும் ரகசியமாகவே செய்தும் வந்தாள். நாம் எவ்வளவு வேண்டுமானாலும் முயலலாம். அது கூடிவருவது விதி வசம் என்பது அவளுக்குத் தெரியவில்லை. அந்தச் சமயத்தில் அவளால் கன்னத்தில் அறைந்து வெளியேற்றப்பட்ட அவளது உதவியாளன் சுதாகர் என்பவன் அவள்மேல் காதலும் கொண்டிருந்தான்.

சொல்லப்போனால் காரைக்குடி பக்கமாய் தெருக்கூத்துகளில் ஆடிவந்தவளைச் சென்னைக்கு அழைத்து வந்து நடிகையாக்கியதே சுதாகர்தான். அப்படிப்பட்டவனால் கங்காஸ்ரீ தனக்குச் செய்த துரோகத்தை ஜீரணிக்க முடியவில்லை. அவள் திருமணம் நடந்துவிடக்கூடாது என்பதிலும் குறியாய் இருந்தவன், திருமணம் நடக்கப்போகும் நாள், நேரம், இடம் என சகலத்தையும் பிரேமசந்திரனின் மனைவியும் பொன்மலியூர் ஜமீன்தாரிணியுமான திவ்யதர்ஷினிக்குத் தெரியும்படி செய்தான். அடுத்த நொடி திவ்யதர்ஷினி தன் இரு மகன்களுடன் திருமணம் நடக்கிற இடத்திற்கே வந்துவிட்டாள். இதை கங்காஸ்ரீயும் பிரேமசந்திரனும் துளியும் எதிர்பார்க்கவில்லை.

ஒரு மலைக்கோயில் உச்சியில் சொற்பமாக இருந்த சிலரோடு நடக்கவிருந்த திருமணத்தை திவ்யதர்ஷினி நிறுத்த முயன்றாள். ஞானசேகரனும் ராஜசேகரனும் அப்பாவிடம் கெஞ்சினர். ஆனால் பிரேமசந்திரன் கேட்கவில்லை. கங்காஸ்ரீ கழுத்தில் தாலியைக் கட்டிவிட்டான். அவன் அப்படித் தாலி கட்டியதை திவ்யதர்ஷினியால் ஜீரணிக்க முடியவில்லை.

சட்டென்று ஒரு காரியம் செய்தாள். தன் புடவைக்குக் குத்துவிளக்குச் சுடரால் தீ வைத்துக்கொண்டவள் அப்படியே போய் கங்காஸ்ரீ மேல் விழுந்து கட்டிக்கொண்டாள். பிரிக்கப்போன பிரேமசந்திரனையும் இழுத்துப் பிடித்துக்கொண்டாள்.

அந்த நெருப்பு மூவரையுமே விடவில்லை.

இயற்கையின் அதிசயமாய்த் திகழ்ந்தவன் அந்த அதிசயத்தாலேயே கருகியது விந்தை மட்டுமல்ல, அதுதான் யவ்வன சூரி போன்றவை ரகசியமாகவே இருப்பதன் காரணம் என்பது உடையாருக்கும் தெளிவானது. ஒரே சமயத்தில் தன் பிள்ளை, மருமகள் இருவரும் இப்படி அநியாயமாகச் செத்தது உடையாரைப் பெரிதும் பாதித்துவிட்டது.

`தான் தன்னிச்சையாக யவ்வன சூரியை பிரேமசந்திரனுக்குக் கொடுத்ததுதான் காரணமோ? அப்படிச் செய்யாமல் இருந்திருந்தால் இன்று இப்படி நடந்திருக்காதோ? அடுத்து தனக்குத் தெரியாமல் ஏடுகளை எடுத்து சுயநலமாக ஏதேதோ செய்துவிட்டார்களே...இத்தனை நாள் கட்டிக் காப்பாற்றி வந்த எல்லாமே தவிடுபொடி ஆகிவிட்டதே... எந்த முகத்தோடு நான் திரும்ப போகர் பிரானைப் பார்ப்பேன்...? எது எதற்கோ அவரிடம் உத்தரவு கேட்ட நான், யவ்வனசூரியை பிரேமசந்திரனுக்குக் கொடுக்கும் முன் கேட்கத் தவறி விட்டேனே...

இறையுதிர் காடு
இறையுதிர் காடு

இதுதான் சோதனையா?

மலைமேல் நடந்த சோதனைகளில் ஜெயித்த நான், தரைமேல் வாழ்க்கைக்குள் நடந்ததில் தோற்றுவிட்டேனே..!’ என்று குமைந்தவர் அந்த நொடியே ஒரு காரியம் செய்தார்.

ஏடுகள், லிங்கம், ரசமணி தனது டைரிக்குறிப்பு என்று சகலத்தையும் முதலில் மிக ரகசியமாக வைத்திட அவர் தீர்மானித்தார். 'திருப்புளிச் சங்கரம் என்கிற அந்த பர்மாப் பெட்டி பிரம்மாண்ட ஜமீன் கஜானாவுக்குள் தங்க வைர நகைகளைப் பாதுகாத்திடும் ஒரு பெட்டியாக இருப்பதும் ஞாபகத்திற்கு வந்தது.

உடனே அந்தப் பெட்டியை எடுத்து வந்து, அதற்குள் சகலத்தையும் எடுத்து வைத்துப் பூட்டியவர், ஞான சேகரனையும், ராஜசேகரனையும் பிரேமசந்திரன் மற்றும் திவ்யதர்ஷினியின் அஸ்தியோடு காசிக்கு அனுப்பிவிட்டு, அவர்கள் திரும்பி வருவதற்குள், பிரம்மாண்ட ஜமீன் பங்களாவில், அந்தப் பாதாள அறையையும் கட்டி, அதற்குள் பெட்டியைக் கொண்டு சென்று வைத்தது மட்டுமல்ல, தனக்கான தியான அறையாகவும் அதைக் கருதி, சுவரில் சிவலிங்கத்தை வரைந்து, அந்த பாதாள அறையையே தெய்விகமயமாக்கி விட்டார்.

அப்படி ஒரு அறை இருப்பது காவல்காரன் மணிவேலுக்கு மட்டும்தான் தெரியும். அஸ்தியை கங்கையில் கரைத்து விட்டுத் திரும்பிய ஞானசேகரிடமும் ராஜசேகரிடமும் சகஜமாய்ப் பேசுவதையும் நிறுத்திவிட்டார்.

போகர் தனக்குக் கொடுத்த பொறுப்பைத் தான் சரியாகச் செய்யாமல் போய்விட்டதாகக் கருதி மனம் குமையத் தொடங்கினார்.

பிரேமசந்திரனால் உருவான அதிர்ச்சி அதுநாள்வரை ஜமீனுக்கும் நிலவிவந்த தெய்விகமான சூழலையே மாற்றி, ஒரு பெரும் இறுக்கத்திற்கு இடமளித்துவிட்டது. இந்த இறுக்கம் பேரன்களான ஞானசேகரனையும் ராஜசேகரையும் மிகவும் பாதித்தது.

தாத்தாவான உடையார் முன் சென்று, ``அப்பாவின் தப்புக்காக எங்களை தண்டிப்பது சரியா?'' என்று நியாயம் கேட்டனர்.

``நான் இனி யாரையும் நம்புவதாக இல்லை. என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள்'' என்று கூறிவிட்டார் உடையார்.

இச்சமயத்தில் பேரப்பிள்ளைகளுக்கு ஆதரவாக நின்றவர் சிட்டாள் மட்டுமே. ஞானசேகரனுக்கும் ராஜசேகரனுக்கும் நல்ல இடங்களில் பெண் பார்த்துத் திருமணத்தையும் செய்துவைத்தாள். கிட்டதட்ட ஒரு சன்னியாசிபோல மாறிவிட்ட உடையாரிடமும்,

``இந்த லிங்கம், ஏடு... இதுகளை வெச்சு இவ்வளவு நாள் பட்டபாடு போதும். இதனால என் மகன், மருமகள் என்று இரண்டு பேரும் அநியாயமா செத்ததுதானே மிச்சம். இதைத் திரும்ப ஒப்படைச்சிட்டு, என் கழுத்துல அந்தக் காலத்துல தாலியைக் கட்டின அந்த ஜமீன்தார் மாப்பிள்ளையா திரும்பி வாங்க'' என்று கூறிவிட்டு, ஞானசேகரன் மற்றும் ராஜசேகரனோடு அடையாற்றில் உள்ள பங்களாவிற்குப் போய்விட்டாள்.

உடையாருக்கோ சிட்டாளின் செயல் பெரிய வருத்தத்தைத் தந்தது. தன் முதிய பருவத்தில் அருகிலிருந்து தாங்கவேண்டியவள் தனியே போய்விட்டாளே என்று குமைந்தவர் இறுதியாக, பிரேமசந்திரனைத் தத்து எடுத்தது தான் செய்த பெரிய பிழை. அதைவிடப் பெரும்பிழை அவனுக்கு யவ்வன சூரியைத் தந்தது என்கிற முடிவிற்கு வந்து, அதற்கு எது பரிகாரம் என்று யோசிக்க ஆரம்பித்தார். இந்தக் குமைச்சல்களெல்லாம் டைரியில் எழுத்தாகியது.

ஒரே பிடிப்பு அந்த லிங்கம்தான். அதைத் திரும்ப ஒப்படைத்துவிட்டால் தன் கடமையும் முடிந்தது என்று தீர்மானித்தவர், சித்திரைப் பௌர்ணமி நாளுக்காகக் காத்திருந்தார்.

சித்திரைப் பௌர்ணமிக்குச் சில வாரங்கள் இருந்த ஒரு தருணத்தில், 9 பேர் வீடுகளுக்கு லிங்கத்தைக் கொண்டு சென்று அவர்களை பூஜிக்கச் செய்து மகிழ்விக்கச் சொல்லி ஒரு உத்தரவு, கனவு வடிவில் வந்தது. மறுநாளே அந்த ஒன்பது பேர் முகவரியோடு, குற்றாலத்திலிருந்து காத்தமுத்துவும் வந்தான்.

உடையார் பெரிய மாளிகையில் தனியாக இருப்பதைக் கண்டு ஒருபுறம் வருந்தினாலும், இன்னொருபுறம் மகிழ்ந்து, ``உடையாரே... காரணம் இல்லாமல் ஒரு காரியமும் இல்ல... அவங்க விதி வேற மாதிரி, அதனாலதான் ஒதுங்கிட்டாங்க. உங்களோட இருக்க ஒரு புண்ணியக் கணக்கு இருக்கு. அது இல்லாமல் போனாலே இப்படித்தான்'' என்று சமாதானம் சொன்னதோடு அந்த ஒன்பது வீடுகளுக்குப் பெட்டியைத் தூக்கிச் சென்றதும் காத்தமுத்துதான்.

அப்படிப் போகும்போது அதில் ஒரு வீடாக இருந்தது முத்துலட்சுமியின் வீடு. அப்போது முத்துலட்சுமிக்கும் பதின்மூன்றோ பதினான்கோ வயது. முத்துலட்சுமியின் அம்மாவான பாரதிசங்கரி கடும் விரதமிருந்து ஒரு கோடி முறை `ஓம் சரவணபவ' என்கிற பெயரை எழுதி, போகரையும் வணங்கி வந்ததற்குப் பிரதிபலனாகத்தான் அந்த லிங்கம் அவர்கள் வீட்டுக்குச் சென்றது.

பாரதிசங்கரியும் லிங்கத்தை பூஜித்து மகிழ்ந்தாள். அதேசமயம் ``போகர் செய்த லிங்கத்தின் தரிசனம் வாய்த்துவிட்டது... போகரின் தரிசனமும் வாய்த்துவிட்டால் என்னைவிட பாக்கியசாலி யாருமில்லை'' என்று சொன்னதைக் கேட்ட உடையார் ``உங்கள் விருப்பம் இன்றில்லை, நாளை நிச்சயம் ஈடேறிடும்'' என்றார்.

இப்படியே மற்ற வீடுகளுக்கும் சென்று, கனவில் இட்ட கட்டளைகளைக் காத்த முத்துவின் உதவியோடு செய்துமுடித்தார். இவையெல்லாம் 1968-ம் வருடம் மாசி மாதத்தில் நடந்தன.

இதில் மாசி சிவராத்திரி அன்றுதான் முத்துலட்சுமியின் வீட்டுக்கும் அந்த லிங்கம் சென்றது.

இப்படியாகக் கனவில் வந்த கட்டளையை, நல்லவிதமாய் நிறைவேற்றி விட்ட உடையார் 1968-ம் வருட சித்திரைப் பௌர்ணமி எப்போது வருமென்று, பெட்டியோடு போய் சகலத்தையும் நல்லவிதமாய் ஒப்படைத்து விடும் கனவில் இருந்தார். கூடுதலாகத் தன் தவறுகளுக்கெல்லாம் பரிகாரமாய் சித்தன் பொட்டல் சித்தர்களுடனேயே தங்கி விடுவது என்கிற முடிவுக்கும் வந்துவிட்டார். ஒரு பிரதோஷ நாளன்று யாருக்கும் தெரியாதபடி பாதாள அறையிலிருந்து பெட்டியை மேலே கொண்டுவந்து, மணிவேலையும் உடன் வைத்துக்கொண்டு அன்றாட பூஜையை உடையார் செய்த சமயம், தன் மனைவி மற்றும் சிட்டாளுடன் பூஜை நடக்கும் அந்த இடத்திற்கு வந்திருந்தான் மூத்த பேரன் ராஜசேகரன். அவன் வந்தான் என்பதைவிட அவனை சித்த வைத்தியர் சிவராமய்யா அனுப்பியிருந்தார் என்றால் பொருத்தமாக இருக்கும்.

சிவராமய்யாதான் ராஜசேகரனுக்குள் யவ்வன சூரி மற்றும் சொர்ண ரகசியங்கள் குறித்து உருவேற்றியிருந்தார். ``உன் அப்பா சாதிக்காததை நீ சாதி... உனக்கு நான் துணையாய் இருக்கேன். உங்கப்பா சாப்பிட்ட யவ்வன சூரியை மட்டும் நாம் தயாரிச்சிட்டா அப்புறம் இந்த உலகமே நம்ம கையில. ஒரு குளிகைக்கு ஒரு கோடி தர ஆள் இருக்கு'' என்று ராஜசேகரன் மனதை ஆசைச் சமுத்திரத்தில் அமுக்கியிருந்தார்.

இப்படி ஏடுகளை எப்படியாவது எடுத்துவிடும் நோக்கத்தோடு பிரதோஷ பூஜை நடக்கும் சமயம் வந்தவனை, கூடவே சிட்டாள் வந்ததையும் உடையார் சற்றும் எதிர்பார்க்கவில்லை. பூஜை நடுவில் உடையார் தோட்டத்து விருட்சங்களுக்கு கற்பூர ஆரத்தி காட்டச் சென்ற சமயம், சாதுரியமாகப் பெட்டியைத் திறந்து ஒரு கட்டை எடுத்ததில், கையில் அகப்பட்டது மதியூகரணி 12 ஏடுகள், 96 பாடல்கள், 4060 வார்த்தைகளில் அது ஒருவர் மனதில் இருப்பதை எப்படி அறிவது என்று சொல்லித் தருவதோடு, அந்த மனதின் மூலமாகவே அதன் தொடர்புடைய சங்கதிகளை எல்லாமும் காட்சியாகவே மனக்கண்ணில் பார்க்க முடியும் என்றது. சொர்ண ரகசிய ஏட்டை எடுக்கலாம் என்று முனைவதற்குள் உடையார் திரும்பிவிட்டார்.

அப்பன் புரிந்த களவைப் பிள்ளையும் தொடர்ந்ததை அப்போது உடையார் உணரவில்லை. இதற்காக மட்டும் ராஜசேகரன் சிட்டாளை அழைத்து வரவில்லை. அநேகமாக இந்தத் தடவை தாத்தா மலைக்குப் போனா திரும்பி வரமாட்டாரு. இதைப் பலர்கிட்ட சொல்லிட்டாரு. ஆகையால போறது போறாரு... சொத்தைப் பிரித்துக் கொடுத்துட்டு அசலான ஆண்டியா போகச் சொல்லு பாட்டி'' என்று சொல்லித்தான் அழைத்து வந்திருந்தான்.

சிட்டாள் அதற்காக வந்திருப்பதைச் சொன்னபோது உடையாருக்குப் பொசுக்கென்று ஆகிவிட்டது.

இறையுதிர் காடு - 87

``சுந்தரம், நீ இந்தப் பூஜைக்காகவும் என்னப் பார்க்கவும் என்கூட இருக்கவும்தான் வந்ததா நினைச்சேன். ஆனா கடைசியில சொத்துக்காகன்னு சொல்லி பாதாளத்தில் விழுந்துட்டியே'' என்றார்.

``என்ன செய்ய, எனக்குள்ள இன்னும் கொஞ்சம் பாசம் மிச்சமிருக்கு. அது என் பேரப் பிள்ளைகளுடன் இருக்கிறததான் விரும்புது. உங்களப்போல சந்நியாசத்தை இல்ல’’ என்று அதற்கு ஒரு பதிலையும் அளித்தாள் சிட்டாள்.

``கவலைப்படாதே, சொத்தைப் பிரிக்கச் சொல்லி வக்கீல் கிட்ட எப்பவோ சொல்லிட்டேன். அவங்கவங்க பங்கு அவங்கவங்களுக்கு வந்துடும். எனக்குன்னு நான் காலணா எடுத்துக்கப் போவதில்லை. என் சொத்தெல்லாம் அந்தச் சிவனும் அவன் அருளும் மட்டும்தான்.

என் உடம்பைத் தூக்கிப் போடுற கஷ்டத்தைக்கூட நான் உங்களுக்குத் தர விரும்பலை. உடம்போட சமாதியாகறதுதான் என் முடிவு'' என்று சிட்டாளுக்கு பதில் சொல்லும் சாக்கில் தன் முடிவையும் அவர் சொன்னபோது, அதற்காக ராஜசேகரனோ அவன் மனைவியோ வருந்தவில்லை. ஆனால், சார்வாரிலிருந்து மணிவேல் வரை சகலரும் வருந்தினர்.

சிட்டாளும் வந்த வேலை முடிந்தது என்று ராஜசேகனுடன் புறப்பட்டாள். ராஜசேகரனும் அதன்பின் மதியூகரணியை சித்த வைத்தியரிடம் காட்டினான். அதைப் பார்த்த அவர், ``இது மனசை வசியப்படுத்துறது எப்படி... பிறர் மனசுல இருக்கறதைத் தெரிஞ்சுக்கிறது எப்படின்னு சொல்ற ஏடு. ஏழு வயசுல படிக்க ஆரம்பிச்சா, அதாவது பயிற்சி செய்ய ஆரம்பிச்சா 30 வருஷம்கூட ஆகும் பிடிபட... இதை நாம இனி படிச்சா அந்த சக்தியை அடைய முடியாது. இதுக்கு பிராயம் முக்கியம் - வேணும்னா உன் மகனுக்குச் சொல்லித் தரலாம்'' என்றார்.

அப்படியே ``எப்படியாவது அந்த சொர்ண ரகசிய ஏட்டை எடுத்துடு... இல்ல யவ்வன சூரி ஏடு... இந்த இரண்டும் இருந்தால், அமெரிக்க ஜனாதிபதிகூட நமக்காகக் காத்திருந்து காலிலேயே விழுவாரு... பார்த்துக்க'' என்றார்.

அதன் நிமித்தம் பிரம்மாண்ட மாளிகைக்கு ராஜசேகரன் சென்றபோது பெட்டி இருக்கும் இடம் தெரியவில்லை. வேலைக்காரர்கள் சந்தேகத்தோடு பார்க்கத் தொடங்கிவிட்டனர். மணிவேல் இதைக் கவனித்து, உடையாரிடம் சொல்லலானான். ``ஆண்டே... பெரியவரு பெட்டிக்காக ரொம்பவே அலையறாரு, இவர் அப்பாவை ஆட்டி வெச்ச அந்த சித்த வைத்தியன் இப்ப இவரை ஆட்டி வைக்கிற மாதிரி தெரியுது'' என்று சொல்லவும், உடையாருக்கு பகீரென்றது.

வேகமாக பாதாள அறைக்குச் சென்று பெட்டியைத் திறந்து பார்த்தவருக்கு மதியூகரணி இல்லாமல்போனது அப்போதுதான் தெரிந்தது. நெஞ்சை உடனேயே அடைக்கத் தொடங்கிவிட்டது. தட்டுத் தடுமாறிக்கொண்டு மேலேறி வந்தவர், `ஐயோ, நான் சாமிய எந்த முகத்தோடு பார்ப்பேன். ஒரு தப்புக்கு ரெண்டு தப்பு நடந்திடிச்சே...

அருளைப் பொருளா பாக்குற பிள்ளை, பேரனை எனக்கு அந்தக் கடவுள் கொடுத்து விட்டானே’ என்று பதறியவர், அப்படியே காரில் ஏறி ராஜசேகரன் முன்னால்தான் போய் நின்றார். ராஜசேகரனுக்கும் தெரிந்து விட்டது.

``எலேய்... எனக்குத் தெரியாம பெட்டியிலிருந்து ஏடு எதையாச்சும் எடுத்தியா?''

``ஏடா... நானா...?''

``வேணாண்டா... உங்க அப்பன் செஞ்ச தப்பை நீயும் செய்யாதே. அது சாமி சொத்து...’’

``எனக்கு எதுவும் தெரியாது தாத்தா...''

``எங்க, என் மேல சத்தியம் பண்ணிச் சொல்லு...''

``யார்மேல வேணும்னாலும் பண்ணறேன். இப்ப என்ன...?'' என்று ராஜசேகரன் அவர் தலைமேல் கைவைத்து சத்தியம் செய்த நொடி அப்பளம்போல நொறுங்கிப்போனது உடையார் மனது.

மௌனமாக சிலைபோலத் திரும்பி நடந்தவர் பிரம்மாண்ட பங்களாவின் பின்புறத்தில் இருக்கும் வில்வ மரத்தை நோக்கிச் சென்றார். அப்படியே சப்பணமிட்டு அமர்ந்தார். மணி வேலையும் சார்வாரையும் மற்றும் உள்ள வேலைக்காரர்களையும் பார்த்தவர்,

``மணி... தப்பு நடந்திடிச்சி... ஒரு தப்புக்குப் பல தப்பு நடந்திடிருச்சி. எனக்கு போகர் சாமி முகத்துல முழிக்கிற தகுதி கொஞ்சம்கூட இல்லை. என்னால என் மக்களையே நல்லபடி வளக்க முடியல... அப்புறம் என் வம்சம் எப்படித் தழைக்கும்...?''

என் வரையில் பிறந்ததும் தப்பாப்போச்சு. இணைஞ்சதும் தப்பாப்போச்சு. நான்லாம் உயிரோட இருக்கிறதும் தப்பு. என் தலைமேலே இப்போ ஒரு பொய் சத்தியம் ஏறிடுச்சு...'' என்று பொங்கியவர், அப்படியே கண்களை மூடி போகர் பிரானை முதலிலும் பின் பாஷாண லிங்கத்தை அடுத்தும் நினைத்துக்கொண்டு ``குருவே சரணம் - சிவாய நமக'' என்றார்.

அடுத்த நொடியே தலைத் தொங்கிப்போய் அவர் உயிர் போய்விட்டதை ஊர்ஜிதம் செய்தது.

பிரம்மாண்ட மாளிகையையும் இன்னபிற சொத்துகளையும் ஞானசேகரனுக்கு எழுதியிருந்தார். அந்த ஞானசேகரன்தான் முதலில் ஓடிவந்தான். அதன்பின் எல்லோரும் வந்தனர். அங்கேயே அடக்கம் செய்து, அதுவும் அவர் அமர்ந்து உயிர் விட்ட நிலையில் அப்படியே அடக்கம் செய்யப்பட்டு சமாதி உருவாயிற்று.

அன்றே மணிவேல் கனவில் உடையார் வந்து, ``என் வம்சம் முழுமையாகத் திருந்தும் வரை எனக்கு ஆத்ம சாந்தி இல்லை. அவர்கள் மூலமாக பெட்டி போகரை அடையும்வரை நான் சர்ப்ப வடிவில் இங்கேயே நடமாடியபடி இருப்பேன்'' என்று சொன்னதாகச் சொல்லி, ``அது இனி என்வரையில் சமாதி இல்லை, கோயில்'' என்றான்.

1968 - ம் வருட பௌர்ணமி கடந்துபோயிற்று. சில மாதங்களிலேயே சிட்டாளும் நடந்தவற்றை எண்ணி எண்ணியே செத்துப்போனாள். ராஜசேகரன் தன் மகன் திவ்யப்ரகாசருக்குப் பயிற்சி அளித்ததோடு வைத்தியருடன் சேர்ந்து ரசவாத மூலிகையைத் தேடிக் காட்டுப்பக்கம் போனதில் காணாமல்போனதே மிச்சம்.

திவ்யப்ரகாஷிற்கு தொடக்கத்தில் இந்தப் பின்புலமெல்லாம் தெரியாது. பின் அவர் பயிற்சி பெற்ற மதியூகரணியாலேயே நடந்ததைத் தெரிந்துகொள்ள முடிந்தது.

ஞானசேகரன் தன் பெயருக்குச் சொத்து வரவும், தனக்குப் பிறந்த பிள்ளைக்கு நன்றிக் கடனாக தாத்தாவின் பெயரான சாந்தப்ரகாச பிரம்மாண்ட உடையவன் என்கிற பெயரை வைத்தபோதிலும் சந்தப்ரகாஷ் என்று சுருக்கமாக அழைக்க... அதுவும் சுருங்கி சந்தா என்றானது. ஊட்டி, டேராடூன், அமெரிக்கா என்று படித்ததில் தாத்தா பற்றியோ, தன் பரம்பரை பற்றியோ எல்லாம் தெரிந்துகொள்ளத் தருணமே வாய்க்காமல் போய்விட்டது இவனுக்கு. அதிலும் ஒருகட்டத்தில் ஞானசேகரன் ஹார்ட் அட்டாக்கில் இறந்த பிறகு இந்தியத் தொடர்பும் இல்லாதுபோய்விட்டது.

தனக்கான சொத்தையும் வைத்துக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என்று விற்றுவிட்டு அமெரிக்காவில் செட்டில் ஆன நிலையில்தான் மகன் ஆகாஷ் வடிவில் பரம்பரைக் கோளாறு திவ்யப்ரகாஷை உலுக்க ஆரம்பித்தது.

இந்தியா நோக்கித் திரும்பச்செய்தது மட்டுமல்ல, அந்தச் சொத்து வெறும் கட்டடம் மட்டுமல்ல, தேவ விருட்சங்களும்தான் என்பதை உணரச்செய்ததோடு பெட்டியையும் காட்டிக் கொடுத்து அவர்களை சித்ரா பௌர்ணமி இரவில் சித்தர் பொட்டல் நோக்கியும் செல்ல வைத்துவிட்டது. இவர்களோடு திவ்யப்ரகாஷ்ஜி வந்து இணைந்ததும் தற்செயல் போன்ற ஒரு திருச்செயல் என்றால் மிகையில்லை.

- நிறைவடைந்தது

இறையுதிர் காடு - 87

பேராதரவு நல்கிய வாசகர்களாகிய உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இடைப்பட்ட கொரோனா காலத்திலும் எதிர் நீச்சலிட்டு விகடன் வாசகர்களை சந்தித்தது. ஆனால் மூன்று வாரங்கள் அச்சு இதழ்கள் வராமல் மின்னிதழ்களாக மட்டுமே 'ஆனந்த விகடன்' வெளியானதால் மூன்று அத்தியாயங்களைச் சில வாசகர்கள் தவறவிட்டிருக்கலாம். அந்த மனக்குறையைப் போக்கும்படி 'இறையுதிர்காடு' புத்தகமாக விரைவில் வெளியாகும் என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கிறேன். என்னோடு ஓவிய வடிவில் துணை நின்ற திரு ஷ்யாம் அவர்களுக்கும், இத்தொடர் உங்களை அடைய பெரும் காரணமாய் விளங்கிடும் ஆனந்த விகடன் ஆசிரியர் அவர்களுக்கும் என் இதயபூர்வமான நன்றிகள்

- இந்திரா செளந்தர்ராஜன்.