மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இறையுதிர் காடு - 40

இறையுதிர் காடு
பிரீமியம் ஸ்டோரி
News
இறையுதிர் காடு

அன்று பொதினி முழுக்கவே நல்ல மழைப்பொழிவு. கார்மேகங்கள் கரைந்து ஒழுகியதில் வெட்டவெளி முழுக்க நீராலான கோடுகள்!

புலி ஒன்று துரத்தும்போது திக்குதிசை தெரியாதபடி ஓடும் ஒரு மானைப்போல மின்னல் ஒன்று ஓடி மறைந்தது. ஊடே வெளிப்பட்ட இடிச்சப்தம் கொட்டாரத்தில் பலர் காதைப் பொத்திக்கொள்ள வைத்தது. மரத்துப் பறவைகள் தெறித்துவிழுந்தாற்போல் எழும்பிப் பறந்து பின் மரங்களில் அடங்கின.

இறையுதிர் காடு - 40

இதுவும் ஒரு தருணம் என்பதுபோல் தன் துவராடை நனைந்த நிலையில் பொதுனிக்குன்றின் உச்சிநோக்கி போகர்பிரான் நடந்தபடியிருந்தார். மாலைவேளை... அப்போது இருட்டிவிட்டதுபோல்தான் மேகம் கோட்டைகட்டி நீரைக் கரைத்துக் கொண்டிருந்தது. இதுபோன்ற வேளைகளில் யாரும் வெளியே நடமாடமாட்டார்கள். அதிலும் குன்றுப்பக்கமாய் மேலேறிச்செல்வது என்பது கூடாத செயல். இடியானது இறங்கினால் தனியே தகனக்ரியை செய்யத்தேவையில்லை. உடம்பு சாம்பலாகி ஒழுகும் மழைநீரில் கரைந்து ஓடி, அஸ்தி கரைப்புக்கும் இடம் இல்லாதுபோய்விடும்! பல கீதாரிகளுக்கு அப்படி ஆகியிருக்கிறது. அதையெல்லாம் எண்ணியபடி கலக்கத்தோடு பார்த்துக்கொண்டிருந்தான் அஞ்சுகன். பின்தொடர்ந்து செல்ல எண்ணிப் பின் தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டான். இதுபோன்ற தருணங்களில் எப்போதும் புலிப்பாணி துணையிருப்பான். இப்போது அவனும் இல்லை - கருமார்களோடு கன்னிவாடி மலைக்குகைக்குச் சென்றிருப்பவன் திரும்பவில்லை. கொட்டாரத்தில் வழக்கமான செயல்பாடுகள். அஞ்சுகன் அவற்றை ஒரு பார்வை பார்த்தான்.

தான் ஒரு கறுப்பி என்னும் தாழ்வு மனப்பான்மை கொண்டிருந்த பெண் அவள் தாயோடு கூடி உற்சாகமாகச் சில வேலைகளைச் செய்துகொண்டிருந்தாள். அவளது தோற்றத்திலும் சில மாற்றங்கள். அவள் கூந்தலைக் கட்டக்கூடாது, அது காற்றாடப் பறக்கவேண்டும் என்று கூறிவிட்டார் போகர். அதேபோல இளமஞ்சள் நிறத்தாலான ஆடையை வேளாண்குடிப் பெண்கள் கால் தண்டை தெரியக் கட்டுவதுபோலக் கட்டி, மார்பை அந்த ஆடையின் முந்தியாலேயே மூடிக்கொள்ளும் விதமாய் மூடி மீதமிருந்த ஈரடி நீளப் பகுதியை இடுப்பில் செருகியிருந்தாள்.

இதனால் அவளது தோற்றம் மிக எடுப்பாகத் தெரிந்தது. நெற்றியில் ஒரு மிளகளவுக்குக் குங்குமப்பொட்டு வைத்து, கரிசால் மையையும் கீழே அந்தப் பொட்டுக்கு பீடம்போல் தீட்டியிருந்தாள். மொத்தத்தில் அவள் கவர்ந்திழுப்பவளாக மாறிவிட்டிருந்தாள். அவள் நிறம் மட்டும் மாறினால் போதும்... அவளை ஒரு தேவதையாகத்தான் எல்லோரும் உணர்வார்கள். அவளிடமும் ஒரு தன்னம்பிக்கை ஏற்பட்டிருந்தது. அவளிடம் இப்போது கிட்டத்தட்ட எல்லோருமே மதிப்போடு பேசினார்கள்.

`ஏ பெட்டச்சி... வா இப்படி...’ என்று தொடக்கத்தில் அழைத்தவர்கள், `கண்ணு வா இப்படி’ என்கிற நல்ல மாற்றத்துக்கு ஆட்பட்டிருந்தனர். அதனால் அவளைவிட அவள் தாயே மிக மகிழ்ந்தாள்.

இறையுதிர் காடு - 40

தோற்றமும் மதிப்பு மரியாதைக்கு ஒரு காரணம் என்பது அந்தத் தாய்க்கு அப்போதுதான் புரிந்திருந்தது. வாழ்க்கை, சம்பவங்கள் மூலமாக தினமும் ஒரு பாடத்தையாவது நடத்திவிடுகிறது. பலருக்கு அது பாடம் எடுப்பதே தெரிவதில்லை. சிலருக்கு அது பாடமாய்த் தெரியவில்லையே ஒழிய பாடத்தை எப்படியோ கற்றுவிடுகிறார்கள். அந்தப் பெண்ணும் அவள் தாயும் அந்த ரகம்போலும்.

அஞ்சுகன் பார்த்தபடியே இருந்தான். மலையிலிருந்து கொண்டுவந்திருந்த உதகநீர் தரையில் பாஷாணத் தொட்டியில் சேமிக்கப்பட்டிருந்தது. அதோடு பெருகிவரும் மழைநீர் கலந்துவிடாதபடி பாஷாணத் தொட்டியின் வாய் விளிம்போரம் மண்ணைத் தோண்டிப் போட்டு ஒரு கரையைக் கட்டியிருந்தான் ஒருவன். தொட்டிவாயைப் புலித்தோலாலும் மூடி மழைநீர் உதகநீரோடு சேர்ந்துவிடாதபடியும் செய்திருந்தான்.

கொட்டாரச் சேவகர்கள் திபுதிபுவெனக் கூரையில் விழுந்து பின் பெருகிவிழும் மழைநீரில் பெரும் ஏனங்களைக் கழுவிக்கொண்டிருந்தனர். இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்பதுபோல் கொட்டாரத்தின் அடுமனையை ஒட்டிய கல்மேடையின்மேல் வாழைத்தார். பாகல், கருணைக்கிழங்கு, சர்க்கரைவல்லி, புடலை போன்ற காய்களைப் பரப்பி மழையில் நனையவிட்டான் அடுமனை கறித்தோடன் என்பவன்.

மண்படாத நீரில் கழுவி மண்படாத நீரில் சமைப்பது ஒரு கலை. மண்சத்துநீர் ஒருவித சுவையைத் தரும். அது இல்லாததன் சுவையோ வேறு. போகர் மழையை இப்படியெல்லாம் பயன்படுத்த எல்லோருக்கும் கற்றுத்தந்திருந்தார்.

மழைநீரில் நனைவது உடம்புக்கு மிக நல்லது. வீழும் மழைநீர் உடல்மேல் ஒரு குத்து விசையோடு வீழும். அது ஒருவகை வர்மத்தூண்டல் என்பார். மழையில் நனைந்தபடி யோகத்தில் அமர்வதும் விசேஷம் என்பார். ஆனால் நைந்த உடலமைப்பு கொண்டவர்களை இந்த மழைநீர் தோஷம் மிக்கவர்களாக ஆக்கிவிடும். அந்த தோஷம் ஜலத்தால் வந்ததால் ஜலதோஷம் என்றாகி அவர்களை சிலேத்தும உடல்கொண்டவர்களாய் நிலைநிறுத்திவிடும்.

இறையுதிர் காடு - 40

தாய் தந்தை சுரோணிதக்கலப்பால் உருவாகும் உடல், பித்த வாத சிலேத்துமம் எனும் மூன்றில் ஒன்றைக் கொண்டிருக்கும். நாடியைப் பிடித்துப் பார்த்தால் அது நன்கு தெரியவரும். இதில் சிலேத்துமர் மழையில் நனைவது கூடாது. இவர்களுக்குப் புகையும் ஆகாது. அதேசமயம் உச்சி வெயில் இவர்களை சுறுசுறுவென்று இயக்கும். மனிதர்களை அழைப்பதற்கு ஒரு பெயர் இருப்பதுபோலவே அவர்கள் உடம்புக்கு ஒரு குணவாகும் இருக்கிறது. அதை ஒரு வைத்தியனே அறிவான் என்னும் போகர், கொட்டாரத்தில் சிலரை அந்த குணவாகையே பெயராகச் சூட்டி அழைப்பார். ‘வாடா பித்தா... வாடா வாகா... வாடா சிலேத்துமா...’ என்று அவர் சொல்லும்போதே உடற்கூறு தெளிவாகிவிடும்.

இறையுதிர் காடு - 40

அஞ்சுகன் அந்த மழைப்பொழுதில் கொட்டாரத்தைக் காண்கையில் தான் கண்ட காட்சிக்கேற்ப போகர்பிரானை நினைத்துக்கொண்டான்.

போகரோ பொதினிக்குன்றின் உச்சியை அடைந்திருந்தார். அங்கு சென்று சேரவும் மழைப்பொழிவு நிற்கவும் சரியாக இருந்தது. மேலுள்ள மட்டமான சமதளத்தில் தென்பட்ட ஒரு பன்னீர்ப் புஷ்பமரம் மழையில் நனைந்து பூக்களையும் சொரிந்து அதன் வாசம் மெல்ல நிலவிக்கொண்டிருக்க, தண்டபாணிச் சிலையை நிறுவவேண்டிய இடத்தில் நட்டுவைத்திருந்த வேலைப் பார்த்தார். அவர் பார்க்கும்போது தானும் பார்க்க விரும்பினாற்போல, மேற்கு வானச் சூரியனும் சாம்பல் வண்ணத் திரைபோல் நிலவிக்கொண்டிருந்த மேகத்திரையை விலக்கி எட்டிப் பார்த்தான். கூம்புவடிவ வேல் அவன் ஒளியை வாங்கி அவனுக்கே திருப்பியளிக்க விரும்பினாற்போல் திருப்பியதில் பொன்னொளியால் நிரம்பி வழிந்தது அந்த வெளி! கதிரவனோடு கூடி வானவில்லும் தோகைவிரித்து நின்று ஏழு வண்ணங்களையும் சமதையான அளவில் அந்த வளைவில் காட்டிற்று.

அந்த வளையமும் அதன் உள்ளடக்கமும் அதனுள் ஒரு திட்டமிட்ட கணிதம் இருப்பதை உணர்த்தின. அவ்வேளை எங்கிருந்தோ ஒரு மயிலானது பறந்துவந்து அந்த வேலின் இடப்பக்கம் தோகைவிரித்து நின்றபடி இப்படியும் அப்படியும் ஆடவும் செய்தது. வலப்புறமாய் திடுமென்று கொக்கரக்கோ என்கிற ஒரு சேவலின் செருமல் கொக்கரிப்பு. காலம் தன் செயலுக்கு எல்லாவிதத்திலும் மகிழ்ச்சி தெரிவிப்பதை போகர்பிரான் புரிந்துகொண்டார். அப்போது சர்ப்பம் ஒன்றும் வந்து, நடப்பட்ட வேல்மேல் ஏறி, வேலின் கூரியமுனைக்கு மேல் தன் சிரப்படத்தைக் குடைபோல் விரித்துக்கொண்டு பார்த்தது.

சேவல் பணிவான ஆண்மையின் வடிவம், வேல் ஞானத்தின் வடிவம், சர்ப்பம் உயிரின் வடிவம், மயில் சக்தி வடிவம். நான்கும் ஒருசேரக் காட்சி கொடுத்ததோடு, இன்னமுமா நீ காரியத்தைத் தொடங்கவில்லை என்று கேட்பதுபோலவும் உணர்ந்தார் போகர். அப்படியே கைகூப்பி, சில நொடிகள் நின்றார். பின் அந்நான்கையும் சுற்றியும் வந்தார். அப்படியே இடப்புறமாய் மேல் தளத்தின் தென்மேற்குப்புறமான கன்னிமூலை எனப்படும் நைருதிக்குச் சென்று அங்குள்ள ஒரு பாறைமேல் அமர்ந்துகொண்டார். அண்ணாந்து வானைப் பார்த்தார். பின், ஒரு குளத்தில் கவிழ்ந்த நிலையில் மெல்ல மூழ்கிடும் குடம்போல் மேற்கில் மூழ்கிடும் கதிரவனையும் பார்த்தார்.

இறையுதிர் காடு - 40

‘இந்தக் கதிரவன் ஒருநாள்கூட உதிக்கவோ அஸ்தமிக்கவோ தவறுவதேயில்லை. இவனை வைத்தே இரவு பகலும் உண்டாகின்றன. இவன் இல்லையென்றால் நிலவும் இல்லை... விண்மீன்களும் இல்லாமல்போகலாம். அப்படியானால், காலம் நின்றுபோன ஓர் இரவுப்பொழுதாய்த்தான் பூமியிருக்கும். துளியும் வெளிச்சமே இல்லாத அந்த இரவில் ஒரு மனிதன் இருந்தாலென்ன, இல்லாமல்போனால்தான் என்ன?

அதன்பின் அவன் வாழ்வு என்பது எதை வைத்து? நெருப்பைக் கொண்டு இரவை அவன் பிரகாசப்படுத்தி நிலப்பரப்பில் அவன் நடமாடிட முடியுமா? கதிரவனே இல்லாத உலகில் நெருப்பு எனும் ஒன்று இருக்கமுடியுமா? நெருப்பு எரிய காற்று வேண்டும்... எதிர்வினையாற்ற நீரும் வேண்டும். மொத்தத்தில் பஞ்சபூதங்களே இல்லாமல்போகக்கூடும். இல்லாவிட்டால் பஞ்சபூதங்கள் ஒன்றுகலந்த ஒரு புதிய பூதம் உருவாகியிருக்கக்கூடும். அந்த பூதம் எப்படிப்பட்டதாய் இருக்கும்?

‘இந்தக் கதிரவன் ஒருநாள்கூட உதிக்கவோ அஸ்தமிக்கவோ தவறுவதேயில்லை. இவனை வைத்தே இரவு பகலும் உண்டாகின்றன. இவன் இல்லையென்றால் நிலவும் இல்லை... விண்மீன்களும் இல்லாமல் போகலாம்.

கற்பனைகூடச் செய்து பார்க்கமுடியவில்லையே...?

இந்தக் கதிரவன்தான் உண்மையில் எத்தனை பெரியவன்? பெரியவன் என்று ஒரு மானுட வடிவில் சிந்திப்பது சரியா? பெரியது என்று சொல்லலாமா?

எட்டமுடியாத தொலைவில் இருந்துகொண்டு தன் கிரகணங்களால் பூமியைத் தீண்டி, இதையும் சீரான கதியில் சுழலச்செய்து இரவென்றும் பகலென்றும் உருவாக்கி, அந்தப் பகலுக்குக் கிழமைகளாலும் தேதிகளாலும் அடையாளம் ஏற்படுத்தி அதனால் காலத்தைப் பிறக்கச்செய்து, அதில் பல்லாயிரம் ஆண்டுகளையும் கடத்தி, இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளைக் கடத்த மூலகாரணமான கதிரவன் அதோ அஸ்தமனமாகி பூமியின் மறுபக்கம் தன் உதயத்தைத் தொடங்கிவிட்டான். இந்தச் சூரியனைப் படைத்த அந்தப் பரம்பொருளும்தான் எவ்வளவு பெரியது?

சூரியனைத் தொட்டு நிலவு... ஒன்று வெப்ப ஒளி - இன்னொன்று குளிர் ஒளி... ஊடே வீசி எறிந்தாற்போல் நட்சத்திரங்கள். இவை அவ்வளவும் வானம் என்னும் ஒன்றில்தான் சுழன்றபடியே இருக்கின்றன என்றால் இந்த வானம்... இது இருக்கின்ற ஒன்றா - இல்லாத ஒன்றா?

இந்த எல்லாமேகூட நாம் இருந்தாலல்லவா... நாம் நினைக்கப் போயல்லவா இருக்கிறது? நாம் இல்லாத பட்சத்தில் இவை ஏதுமில்லை.

ஆக வெளியே உள்ள அவ்வளவும் உள்ளே நாம் நினைக்கையில் வந்து விடுகிறது என்றால் நினைக்கத் தெரிந்த மனமும் - அந்த மனம் இயங்கத் தேவைப்படும் இந்த உடலும் எவ்வளவு பெரியவை?

- போகர் தன் சித்த விசாரத்தில் தன்னை மறந்து மூழ்கிக்கிடந்த அவ்வேளையில் ஒரு பெண்குழந்தை சிரிப்பதுபோல் ஒரு ஒலிச்சப்தம். கலகலவென மணிகளை உருட்டினார் போல் என்பதா, இல்லை, சோழிகளைக் குலுக்கிப் போட்டாற்போல் என்பதா?

அந்தச் சிரிப்புச் சப்தத்தைத் தொடர்ந்து கால் சலங்கை ஒலியும் யாரோ நடந்து வருவதுபோலவும்கூடத் தோன்றியது. அமர்ந்திருந்த நிலையிலிருந்து எழுந்து பார்க்கவும் ஒரு ஆறுவயதுச் சிறுமி பச்சைப்பாவாடையும் சிவப்புச் சோளியும் தரித்து, கழுத்தில் முத்து வடங்கள் கிடக்க, காதில் ஜிமிக்கி, மூக்கில் புல்லாக்கு, நெற்றிவகிட்டில் சுட்டி, பின்னிய கூந்தலின் முடிவில் குஞ்சரங்கள், மணிக்கைகள் இரண்டிலும் வளையல்கள் சகிதம் பொன்னிற மணியோடு கால் சதங்கை சப்திக்க அந்த மலைத்தளத்தின் மேல் மெல்ல நடந்துவந்தபடி இருந்தாள். அவளைக்கண்ட நொடி

‘‘பாலா! தாயே!! நீயா?’’ என்று சிலிர்த்தது போகரின் பேருருவம்.

‘‘என்ன போகா... என்ன சிந்தனை... பிரபஞ்சம் குறித்தா?’’ - பாலா என்று அவர் விளித்த அந்தச் சிறுமி தன் மழலை மாறாக் குரலில் கேட்ட விதத்தில் நல்ல தாட்டியம்.

‘‘ஆமாம் தாயே... பீடதரிசனம் செய்யவந்தேன். என்னையுமறியாது கதிரவனைப் பார்த்தப்படியே பலப்பல எண்ணங்களுக்கு ஆட்பட்டுவிட்டேன்.’’

‘‘அதையெல்லாம் பாட்டாக்கு... பாட்டொன்றே காலத்தால் வாழும் - உன் பாடெல்லாம் இம்மண்ணில் திசுக்களாய்த்தான் போகும்.’’

‘‘அறிவேன் அம்மா... பாடல்கள் பதிவு செய்யப்பட்டுக்கொண்டுதானுள்ளன...’’

‘‘உடம்பின் ஆறு ஆதாரங்களை வைத்து நீ எழுதிவிட்டாய் அல்லவா?’’

‘‘அது பதிவாகிவிட்டது குழந்தைத் தாயே..!’’

‘பச்சை நிறவல்லபையைப் பணிந்து போற்று

பாங்கான ஆறுக்கும் பருவம் சொல்வாள்

மொச்சையாம் மூலமது சித்தி ஆனால்

மூவுலகும் சஞ்சரித்துத் திரியவாகும்

கச்சை நிறக் காயமுமே கனிந்து மின்னும்

கசடு அகன்றே ஆறுதலங் கண்ணில் தோன்றும்

துச்சை நிற வாதம் சொன்னபடி கேட்கும்

துரியத்தின் சூட்சுமம் எல்லாம் தோன்றும் பாரே...’

- என்று உன்னை நினைத்து உன்னைப்பணிந்து எழுதிய பாடல் வரிகள் இப்போதும் நினைவுக்கு வருகின்றன.”

இறையுதிர் காடு - 40

‘‘மகிழ்ந்தேன்... நான் இப்போது இந்தப் பாடலைக் கேட்க வரவில்லை. தண்டபாணிப் பாடு என்னாயிற்று என்று கேட்கவே வந்தேன்...’’

‘‘அம்மா... நீ அறியாததா! அச்சு உருவாகப்போகிறது. கருமார் வந்திட்டார். பாஷாணங்களையும் சேமித்து வருகிறேன்.’’

‘‘பாஷாணங்களைப் பரிசோதனை செய். ஒவ்வொன்றாய்ச் செய். பின் ஒன்றோடு ஒன்று, ஒன்றோடு இரண்டு, பின் மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது என்று சேர்த்து வேதி விளைவைக் கண்டறிந்து எதோடு எது எவ்வளவு சேர்ந்தால் அருளமுதம் சுரக்கும் என்பதைக் கணித்துக் காரியம் செய். இடையில் சோதனைகள் வரக்கூடும். எமன்கூட எதிரில் வந்து நிற்பான், கையைப்பிடித்துத் தடுப்பான், தளர்ந்துவிடாதே... வரட்டுமா?’’

- கேட்டமாத்திரத்தில் மறைந்தாள் பாலா. போகர்பிரான் வரையில் அந்த நொடி எல்லாம் கனவுபோலவும் தோன்றியது. ‘எது எப்படியோ? எல்லாம் சரியாக இருப்பதை சகுனங்கள் உணர்த்திவிட்டன. தாமதிக்கக்கூடாது என்று மனோன்மணித் தாயே பாலாவாய் வந்து கூறிவிட்டாள்.

எமன்கூட எதிரில் வந்து நிற்பான். கையைப்பிடித்துத் தடுப்பானாமே... இது எச்சரிக்கையா? அச்சமூட்டலா?’ கேள்வியைக் கேட்டபடியே அங்கிருந்து கீழிறங்கத் தொடங்கினார். மலைப்பாம்பொன்று குறுக்கீடாகக் கிடந்தது. உற்றுநோக்கியதில் வேதியன் ஒருவனின் முன்வினைப் பாவமே இப்பிறப்பு என்பதாய் ஒரு விழிப்பு அறிவைத் தூண்டியது.

‘‘கவலைப்படாதே பாம்பே... உனக்கினி முக்திதான்... நீ பிரண்டுகொண்டிருப்பது ஒரு ஞானக்குன்றில்...’’ என்று சொன்னபடியே அதைத் தாண்டாது சுற்றிக்கொண்டு இறங்கினார்.

இறையுதிர் காடு - 40

கொட்டாரத் தீப்பந்தங்கள் அவர் வரவை எதிர்நோக்கிக் காத்திருந்தன!

இன்று அரவிந்தன் முகத்தில் அசாதாரண மாற்றம். அதேவேகத்தில் அவனைக் கண்டும் காணாதவன் போல், அவனை நோக்கி நடந்தான். தங்களோடு பேசிக்கொண்டிருக்கையில் அரவிந்தன் மெல்ல விலகுவதை பாரதி பெரிதாய் உணரவில்லை. ஆனால் ஜெயராமன் உணர்ந்தார்.

அரவிந்தன் அதற்குள் அவனை நெருங்கிடவும் அவனும் அங்கிருந்து விலகத் தொடங்கினான். முதலில் மெல்ல நகர்ந்தான். பின் வேகமெடுத்து சற்று ஓடவும் செய்தான். அவன் ஓடவுமே அரவிந்தனும் அவனைப்பிடிக்க எண்ணி ‘ஏய் நில்லு ஓடாதே...’ என்று கத்திக்கொண்டே ஓடினான்.

ஆஸ்பத்திரியின் முதல் தளத்தில் இருந்து கீழே தரைத்தளத்திற்குப் படிகள் வழியாக ஓட்டமாய் இறங்கிய அவன், கீழுள்ள ரிசப்ஷனைக் கடந்து வெளியே ஓடி, கிழக்கு மேற்காய் நீண்டு கிடக்கும் சாலையில், மேற்குத்திசையில் வேகவேகமாக ஓடி மறைந்தும் போனான். துரத்தி வந்த அரவிந்தனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மூச்சிரைத்தது. கழுத்தில் வியர்வை பிலிற்ற ஆரம்பித்துவிட்டது.

சில நொடி இடைவெளியில் பாரதி, ஜெயராமன் என்று இருவரும் அவனருகில் அவனைப்போலவே ஓடிவந்து நின்றனர்.

‘‘யார் அரவிந்தன்?’’

‘‘முகத்தைப் பாக்கமுடியல சார்... ஆனா பாரதி சந்தேகப்பட்டது ரொம்ப சரி. இவந்தான் இங்க ஏதோ பண்ணியிருக்கான்...’’

‘‘அஃப்கோர்ஸ்... ஆனா பெருசா யாரும் அவனைப் பாத்து பயந்தமாதிரியே தெரியலையே?”

‘‘செத்துட்ட அந்தக் குமாரசாமியை நேர்ல பார்த்தவங்க இங்க இப்ப கணேசபாண்டி மட்டும்தான். மத்தவங்களுக்குக் குமாரசாமி யாருன்னே தெரியாதே... அப்படித் தெரிஞ்சிருந்தாதானே மத்தவங்களுக்கு பயம் வரும்?’’

‘‘யு ஆர் ரைட்...’’ என்ற ஜெயராமன் ரிசப்ஷனிஸ்ட் பின்புறம் இருந்த சி.சி. கேமராவை நினைத்துப்பார்த்தார்.

‘‘அரவிந்தன், இப்படித்தானே ஓடிப்போனான். அதுவும் இப்போ... அப்ப கேமராவுல முகம் பதிவாகியிருக்கும் இல்லையா?’’ - என்றும் கேட்டார்.

‘‘நிச்சயம் சார்... மேனேஜரைப் பார்த்து ரிவைண்ட் பண்ணிப்பாக்கலாமா சார்?’’

‘‘பாக்கலாமாவா? பாத்தே தீரணும்...’’

- மூவரும் பின் வந்து சேர்ந்த கணேசபாண்டியுமாய் நால்வரும் மேனேஜரைப் பார்த்து விவரத்தைக் கூறவுமே அடுத்த ஐந்தாவது நிமிடம் அவர் அறையில் இருந்த டி.வி ஸ்கிரீனில் அந்த ஓட்டக் காட்சி ஓட ஆரம்பித்து முகத்தைத் தெளிவாகப் பார்க்க முடிந்த நிலையில் ஃப்ரீஸ் ஆகி நிறுத்தப்பட்டது.

முகத்தைப் பார்த்த கணேச பாண்டியன் முகம் அதிகபட்ச அதிர்வுக்கு மாறி ‘‘ஐயோ, இது அந்தக் குமாரசாமியேதான். அடப்பாவி, இவன் நிஜத்துல சாகலையா?’’ என்று வாய்விட்டார். பாரதிக்கு குமாரசாமி முகம் அதிக பரிச்சயம் இல்லாததால் குழப்பமாகவே இருந்தது.

‘‘அண்ணே... இது குமாரசாமிதானா... நல்லா பார்த்துச் சொல்லுங்க...’’ என்றாள்.

‘‘என்னம்மா நீங்க. இடத்தைக் கேட்டு நான்தானே நம்ம ஐயாவுக்காக நடையா நடந்தவன். எனக்குத் தெரியாதுங்களா?’’

‘‘அப்ப செத்துப்போனது யார்?’’ - இது அரவிந்தன்.

‘‘அது குமாரசாமின்னு போஸ்டர்லாம் ஒட்டியிருந்தாங்களே, நானும்தானே பார்த்தேன். நீங்களும்தானே வந்தீங்க? ’’- இது பாரதி.

‘‘என்னடா இது புதுக் குழப்பம்... சினிமாவுல வர்றமாதிரி டபுள்ரோலா?’’ இது கணேசபாண்டி. - இடையில் ஜெயராமன் திரையில் தெரிந்த அந்த முகத்தை ஜூம் செய்து உற்றுப் பார்த்தார். பின் பலகோணங்களில் அந்த முகத்தை முன்னும் பின்னும் ஓடவிட்டுப் பார்த்தார்.

‘‘என்ன சார்... குமாரசாமி மாதிரியே ரப்பர்மாஸ்க் செய்து போட்ருக்கலாமோன்னு நினைக்கிறீங்களா?’’

‘‘அஃப்கோர்ஸ்... ஆனா முகத்துல வியர்வை தெளிவா தெரியுது. ரப்பர் மாஸ்குக்கெல்லாம் சான்ஸே இல்ல... நிஜத்துலயும் ஒரு பத்திரிகையாளனா எனக்குத் தெரிஞ்சு யாரும் மாஸ்க்போட்டு கிரிமினல் வேலை பார்த்ததா பதிவுகள் இல்லை. நான் சொல்றது தமிழாட்ல மட்டுமல்ல... இந்திய அளவுலயும்கூட... இந்த மாஸ்க் சமாசாரம் சினிமால மட்டும்தான்...’’

‘‘அப்ப இந்த நபர்?’’

‘‘குமாரசாமி மாதிரியே இருக்கிற ஒருத்தர் இவர். ஒருவேளை குமாரசாமி ஒரு ட்வின்ஸா இருக்கலாம். இது அவர் கூடப் பிறந்த அண்ணனோ இல்ல தம்பியாவோ இருக்கலாம். நான் சொல்ற இந்தக் கருத்துக்குத்தான் சான்ஸ் அதிகம்.’’

‘‘செத்துட்ட அந்தக் குமாரசாமியை நேர்ல பார்த்தவங்க இங்க இப்ப கணேசபாண்டி மட்டும்தான். மத்தவங்களுக்குக் குமாரசாமி யாருன்னே தெரியாதே... அப்படித் தெரிஞ்சிருந்தாதானே மத்தவங்களுக்கு பயம் வரும்?’’

- ஜெயராமன் சொல்லி முடிக்க, பாரதியின் செல்போன் சப்திக்க சரியாக இருந்தது. திரையில் Unknown Number எனும் ஆங்கில எழுத்துகள். அதைப் பார்த்த பாரதி, போகலாமா வேண்டாமா என்கிற தயக்கத்தோடு ஆன்செய்து காதைக் கொடுத்தாள் - ஒதுங்கியும் சென்றாள்.

‘‘பாரதிதானே?’’ - எடுத்த எடுப்பிலேயே கேள்வி.

‘‘ஆமாம் நீங்க யாரு?’’

‘‘கொஞ்சம் முந்தி என்னைத்தான் உன்னோடு வந்த ஒருத்தன் துரத்தினான். இப்ப தெரிஞ்சிருக்குமே நான் யாருன்னு...’’

‘‘ஏய் நீயா?’’

‘‘மரியாதையா பேசு பாரதி... எனக்கு உன்னைப்போல ரெண்டுமடங்கு வயசு.’’

‘‘ஆமா உண்மையில நீ யார்... எதுக்கு இப்படி ஆஸ்பத்திரில ஆவிமாதிரி நடந்து பயத்தை உண்டாக்கறே?’’

‘‘அதனால்தானே அந்த ரவுடிப்பய செத்தான்? அந்த சப் இன்ஸ்பெக்டரும் செத்தான்? மிச்சம் இருக்கிறது உன் அப்பன்தான் - ஆனா நீ அவனைத் தற்காலிகமா என்கிட்ட இருந்து இப்ப காப்பாத்திட்டே... ஆனாலும் சொல்றேன், நான் உன் அப்பனை அப்படியெல்லாம் விட்றமாட்டேன். அவனும் சாகணும். அப்பதான் என் தம்பியோட ஆத்மா சாந்தி அடையும்...’’

‘‘ஓ... நீ குமாரசாமி பிரதரா... ட்வின்ஸா? என் எடிட்டர் கரெக்டாதான் யோசிச்சிருக்காரு...’’

‘‘ஆமா... நான் செத்துப்போன குமாரசாமியோட அண்ணன். இருபது நிமிஷம்தான் இரண்டு பேருக்கும் வித்தியாசம். உருவத்துல ஒத்துமை இருந்தாலும் வாழ்க்கையில நான் தென்துருவம்னா அவன் வடதுருவம். நான் ஒரு பொதுவுடைமைக் கருத்தும் போக்கும் கொண்டவன். என் தம்பியோட சாவுக்குப் பிறகுதான் எனக்கு எல்லா விஷயங்களுமே தெரிய வந்தது. என் ரத்தம் கொதிச்சிச்சு. என் தம்பி மாதிரி வறட்டுத்தனமா மோத நான் தயாரில்லை. அதேசமயம் ஏழையா பொறந்துட்டோம், எல்லாமே என் தலையெழுத்துன்னு அடங்கிப்போகவும் நான் விரும்பலை. என்வரைல இப்ப இருக்கிற எந்த ஊழல்வாதியையும் திருத்தல்லாம் முடியாது. எல்லாரும் பணத்தை வாங்கிவாங்கி நல்லா சுகம் கண்டுட்டாங்க. இவங்களை ஈவு இரக்கம் பாக்காமக் கொன்னு ஒழிக்கிறதுதான் எனக்குத் தெரிஞ்ச ஒரே வழி.

ஆனா என்னை இப்ப நீ கண்டுபிடிச்சுட்டே! இந்த செல்போனும், சிசிடிவி கேமராவும் எவ்வளவுக்கெவ்வளவு அதிசயமோ அவ்வளவுக்கவ்வளவு அநாவசியமும்கூட...

நான் இப்ப இதுக்கு மேல எதையும் பேச விரும்பலை. ஒண்ணுமட்டும் நிச்சயம். உன் அப்பனை ஒருவேளை நீங்க வைத்தியம் பார்த்துக் காப்பாத்தினாலும் நான் வாழவிடமாட்டேன். எங்க எப்படி வந்து கொல்வேன்னு எனக்கே தெரியாது. ஆனா கொல்லுவேன்... எனக்கு இந்த சத்தியமெல்லாம்கூட நம்பிக்கை இல்லை. ஆனா அறம் கூற்றாகும்கிற வார்த்தை மேல நம்பிக்கை உண்டு. அந்த அறத்தின் மேல நின்னு நான் இதைச் சொல்றேன்.

நீயும் சும்மா இருக்கமாட்டே... பத்திரிகைக்காரி வேற நீ... பத்திரிகைல எழுதுவே... போலீஸுக்குப் போவே... எழுது... போ. அது உன் சுதந்திரம். நான் ஏற்கெனவே தேசாந்திரியா சுத்தித் திரியறவன்தான். குடும்பம் குட்டின்னு யாரும் எனக்குக் கிடையாது. எனக்கு என்ன நடந்தாலும் அதைப்பத்தி எனக்குக் கவலையும் கிடையாது. எப்படியோ இரண்டுபேரை பயமுறுத்தியே கொன்னுட்டேன். இப்போதைக்கு எனக்கு இந்தத் திருப்தி போதும். அப்புறம் இந்த செல்போன் நம்பரை வெச்சு என்னை டிரேஸ் பண்ற வேலையெல்லாம் வேண்டாம். இது ஒரு ஆட்டோ டிரைவரோட செல்போன். அவன் இப்ப போதைல இருக்கான். அதான் எடுத்துப் பயன்படுத்திக்கிட்டிருக்கேன். அவனுக்கு என்னை யாருன்னே தெரியாது... சந்தேகமா இருந்தா இவனைப் பிடிச்சு லாக்-அப்ல வெச்சு மொத்துங்க. இவன் ஒரு டாஸ்மாக் அடிமை. இவன தாராளமா அடிக்கலாம்.

பைதபை... இனி உன் அப்பன் உயிரோட இருந்தாலும் என்னை நினைச்சு பயந்துகிட்டேதான் இருக்கணும். எப்பவும் எங்கேயும் காவலோடதான் போகணும், வரணும். இப்போதைக்கு இதுகூட ஒரு தண்டனைதான்.

உன்னைப் பத்தியும் எனக்குத் தெரியும். நீ நல்ல பொண்ணு... அதுக்காக அப்பாவைக் கொல்ல நீ விடுவியா என்ன? விடமாட்டே... அதனால உன்னால ஆனத நீ செய்... என்னால் ஆனதை நான் செய்யறேன்.’’

- போன் மறுபுறம் கட் ஆனது. பாரதியிடம் ஸ்தம்பிப்பு!

ரிசப்ஷனை ஒட்டிய தனி அறை!

பாரதி போனில் கேட்ட சகலத்தையும் சொல்லிமுடித்தவளாக, ஜெயராமன், அரவிந்தன், கணேசபாண்டி என்று மூன்று பேரையும் பார்த்தாள்.

‘‘பரவால்ல பாரதி... நம்பள ரொம்ப கஷ்டப்படுத்தாம நேரா விஷயத்துக்கு வந்துட்டான். பல முடிச்சுகள் அவன் பேசினதுல தானா அவிழ்ந்துடிச்சி. அவனே போலீஸுக்குப் போ... பத்திரிகைலயும் எழுதிக்கோன்னு தைரியமா சொல்லிட்டான். இனி நாம என்ன செய்யப் போறோம்கறதுதான் கேள்வி...’’

கணேசபாண்டி முகமோ இறுகிப்போயிருந்தது. அப்போது அவசரமாக அங்கே வந்த ஒரு நர்ஸ், டாக்டர் அவர்களை உடனே அழைத்துவரச் சொன்னதாகச் சொன்னாள். அவள் சொன்னவிதமே எம்.பி ராஜா மகேந்திரனைக் காப்பாற்றுவது முடியாத விஷயம் என்பதுபோல்தான் இருந்தது.

- தொடரும்.