கட்டுரைகள்
Published:Updated:

இருள் மனிதன் - சிறுகதை

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
சிறுகதை

- ப.கவின் கார்த்திக்

``லைட்ஸ் ஆப். பேக்கப்’’ என்ற குரல் கேட்டவுடன் அறுபத்தைந்து அடி உயரத்தில் அமைந்திருந்த பரண்மேல் லைட்டைப் பிடித்தபடி நின்றுகொண்டிருந்த புகழ் (எ) புகழேந்தி தன் பக்கத்தில் நின்றவரிடம், ``மணி என்ன ஆகுதுண்ணே?’’ என்று கேட்டான். ``பன்னெண்டரை ஆகுதுப்பா..’’ என்று அவர் சொன்னவுடன் இவனுக்குக் கவலையாகவே இருந்தது.

காலை 4.30 மணிக்குப் படப்பிடிப்புத் தளத்திற்கு எடுத்துச் சென்ற லைட்டுகளை மீண்டும் தன் தோளில் தூக்கி வண்டியினுள் ஏற்றி ஆபீஸில் இறக்கி வைத்துவிட்டு புகழ் வீட்டிற்குள் நுழைந்தபோது மணி இரவு 1.30. இது வழக்கத்தைவிட சற்றே அதிகம். எப்போதும் 11.45லிருந்து 12 மணிக்குள் வீடு திரும்பிவிடுவான். வியாசர்பாடியில் உள்ள ஹவுசிங் போர்டு குடியிருப்பில்தான் அவனின் வீடு.

வழக்கம்போல தூங்காமல் விழித்துக்கொண்டிருந்த தன் மனைவி கயலின் அருகில் சென்று அமர்ந்தான்.

``பிள்ளை தூங்கிட்டானா?’’

``ஏன், உனக்குத் தெரிலியா? அவனுக்கு என்ன தலவிதியா, இந்நேரத்துக்குக் கொட்ட கொட்ட முழுச்சிட்டுக் கிடக்கணும்னு?’’

``ஏன்டி கோச்சுக்குற, நா என்ன வேணும்னா லேட்டா வரேன்?’’

``பின்ன என்னயா... நீ அவன் மூஞ்சிய பாத்து முழுசா மூணு நாள் ஆகுது தெரியுமா? அவன் தூங்குனப்பறம் வர, எந்திருக்ககுள்ள போய்டுற...’’ என்ற கயல் கோபத்துடன் தன் பேச்சைத் தொடர்ந்தாள்.

``ஒரு வாரமா ஸ்கூல் பீஸ் கட்டணும்னு சொல்லிட்டிருக்கானே... அதுக்கு என்னயா பண்ணுன நீயி?’’

``நா எல்லாம் பேசிட்டேன்‌டி... நாளைக்கு ஒருநாள் ஷூட்டிங்தான் பாக்கி. நாலு நாள் பேட்டாவ மொத்தமா நாளைக்குத் தரேன்னு சொல்லியிருக்காங்க. அதோட, யூனியன் மேனேஜர்கிட்ட கொஞ்சம் கடனும் கேட்ருக்கேன். எப்படியும் நாளைக்கு வந்துரும்டி... என்ன நம்பு’’ என்று சொல்லியபடியே புகழ் தன் சட்டையைக் கழற்றி அருகிலிருந்த மேசைமேல் போட்டான்.

``சரிடி.. நா படுக்குறேன். காலையில திரும்ப 4.30 மணிக்கு எந்திருக்கணும்’’ என்று புகழ் சொன்னது கயலுக்கு மேலும் எரிச்சலை வரவழைத்தது.

``அப்படி என்னாயா படம் அது? இப்படி சக்கையா பிழிஞ்சு வேலை வாங்குறானுங்க...’’ என்று கயல் சற்று முகம் சுளித்தபடியே கேட்டாள்.

``பெரிய பேனர்டி. கம்பெனி, டைரக்டர் எல்லாம் பெரிய ஆளுங்க! ராகவன் சார் சொல்லிருக்கேன்ல... அவரு படம். சொன்னா நம்பமாட்ட... போன வாரம் ஒரு அஞ்சு நிமிஷப் பாட்டுக்காக ஈசிஆர்ல ஒரு அரண்மனை செட்டு போட்டு ஷூட்டிங் நடந்துச்சு. அதுவே பல கோடி செலவு ஆச்சுன்னு பேசிக்கிட்டாங்க!’’

``என்ன பெரிய படமோ! டெய்லி பேட்டா ஒழுங்கா கொடுக்க முடியாத ஒரு கம்பெனி...’’ என்று கயல் சலித்துக்கொண்டாள்.

பேசிக்கொண்டிருக்கும்போதே அவனின் இடது தோள்பட்டையில் இருந்த ரத்தக்கட்டைக் கயல் பார்த்துவிட்டாள்.

``யோவ், என்னாயா இது, இப்படிக் கட்டிப்போய் இருக்குது...’’ என்று அதிர்ச்சியுடன் கேட்டாள் கயல்.

``அது ஒண்ணும் இல்லடி, விடு’’ என்றான் புகழ் மழுப்பலாக.

``ஒண்ணும் இல்லயா... இப்படிக் கட்டிப்போய் இருக்குதேயா... ஒண்ணும் இல்லைன்ற..?’’

``அது ரெண்டு மூணு நாளா அவுட்டோர் ஷூட்டிங்ல... ஒவ்வொரு எடத்துலயும் லைட்ட தோளுல போட்டுத் தூக்குறதும் எறக்குறதுமா இருந்தேனா... அதுல கட்டியிருக்கும்னு நினைக்குறேன்.’’

``இந்த வீணாப்போன பொழப்பு நமக்கு எதுக்குயா... செய்யுற வேலைக்குக் கூலி ஒழுங்கா இல்ல... தினமும் அத்தன கிலோ வெய்ட்ட தோளுல தூக்கிப் போட்டுக்கினு... தேவையாயா இதெல்லாம்? இப்படித் தூக்கமில்லாம ராவும் பகலுமா ஓடி ஓடி நாம என்னத்தையா கண்டோம்... நம்ம வாழ்க்கையில ஒரு பொட்டு வெளிச்சம் வந்துச்சாயா?’’ என்று கயல் விரக்தியுடன் கேட்ட கேள்விகள் ஒன்றுக்குக்கூட புகழிடம் பதில் இல்லை.

``அதெல்லாம் வரும். நீ படு’’ என்று கயலை சமாதானம் செய்து தூங்கச் சொல்லியபின் கண்களை மூடியபடியே புகழ் தன் கடந்தகாலத்தைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தான்.

இருள் மனிதன் - சிறுகதை

புகழ் இந்த‌ லைட்மேன் வேலையில் சேர்ந்தபோது அவன் வயது 23. அப்போது வடசென்னைப் பகுதிகளில் அரசியல் கட்சிப் பொதுக்கூட்டங்களுக்கு லைட் மற்றும் மைக்செட் கட்டிக்கொண்டிருந்த `சிங்காரவேலன் ஆடியோ சர்வீஸ்' கடையில் வேலைபார்த்து வந்த புகழ் அங்கிருந்து வெளியேறி இந்த லைட்மேன் தொழிலைத் தேர்ந்தெடுக்க சினிமாமீதான மோகம் மட்டுமே காரணமாக இருந்தது. நாள் ஒன்றுக்கு 50 ரூபாய் பேட்டா என வேலைக்குச் சேர்ந்த புகழ் பதின்மூன்று வருடங்களுக்குப் பிறகு தற்போது ஒருநாளைக்கு வாங்கும் பேட்டா 650 ரூபாய். ``பேசாம அந்த ஆடியோ சர்வீஸ் கடையிலேயே வேலை பார்த்திருக்கலாம். இந்நேரம் நானும் சொந்தமா சின்னதா அப்படி ஒரு கடை வச்சு நிம்மதியா இருந்துருப்பேன்’’ என புகழ் அடிக்கடி தன்னுடன் பணிபுரியும் சக லைட்மேன்களிடம் சொல்லி வேதனைப் பட்டதுண்டு. அன்று இரவும் தூக்கம் தொலைத்தபடியே அவன் இவற்றையெல்லாம் யோசித்துக்கொண்டிருந்தான்.

இரண்டு மணி நேர தூக்கத்துக்குப் பின் எழுந்த புகழ் இன்று தன் நான்கு நாள் பேட்டா முழுவதுமாக வந்து சேரும் என்ற நம்பிக்கையோடு அறைத் தூக்கத்தில் இருந்து கயலிடம் மெதுவாகக் காதில் சொல்லிவிட்டு வேலைக்குப் புறப்பட்டான். சாமான்களை ஏற்றிவிட்டு வண்டியில் படப்பிடிப்புத் தளத்திற்குச் செல்லும்போது தன்னுடன் இருந்த அடைக்கலம் அண்ணனிடம் பேச்சுக்கொடுத்துக் கொண்டு வந்தான்‌.

``அண்ணே, எப்படிணே இந்தத் தொழில்ல இத்தன வருஷமா இருக்கீங்க? எனக்குலாம் இப்பவே வெறுத்துப்போச்சு. நீங்க எப்படித்தான் முப்பத்து மூணு வருஷம் தாக்குப்பிடிச்சீங்களோ!’’ என்று கேட்டான்.

``என்னடா, வீட்டில பொண்டாட்டிகூட சண்டையா?’’ என்று அவர் கேட்க,

``இல்லணே! நேத்தும் நேரத்துக்கு வீட்டுக்குப் போகமுடியல. பையன்கூட பேசியே மூணு நாள் ஆச்சுணே. அவ சொல்லுறதுலயும் நியாயம் இருக்குல...’’

``புரியுதுடா தம்பி, என்ன செய்ய? நம்ம பொழப்பு இதான்னு ஆகிப்போச்சு. நீ ஏதோ முப்பத்து மூணு வருஷம்னு அப்படி டபக்குனு சொல்லிட்ட. ஆனா அவ்வளவு லேசுல சொல்லிமாளாது நா பட்டபாடு. ஒரு பிரச்னையில ஊரவிட்டு ஓடிவந்தேன். இத்தன வருஷம் ஓடிப்போச்சு. சேந்தப்போ ஒருநாளைக்கு பத்து ரூபாதான் தம்பி பேட்டா. அதுவும் சிலநாள் கிடைக்காது. சாப்பாட்டுக்கே ரொம்ப கஷ்டப்பட்ட நேரம்ப்பா அது. வாங்குறது நம்ம வயித்துக்கே பத்தலையே. இதுல இன்னொருத்தி வந்து எதுக்கு கஷ்டப்படணும்னு கல்யாணமே பண்ணிக்காம விட்டுட்டேன்!’’ என்றார் சோகமாக.

புகழ் இதைக் கேட்டு அமைதியாக இருந்தான். அவர் மேலும் தன் சோகத்தைச் சொல்லத் தொடங்கினார்.

``அதவிட உயிர் பயம்தான் தினமும் அதிகமா இருக்கும்.. கோடா ஏறும்போது இப்போ இருக்கிற ஒண்ணு ரெண்டு சேப்டிகூட இருக்காதுப்பா... நம்ம கஷ்டத்த சொல்லக்கூட‌ ஒரு எடம் கிடையாது அப்போலாம். அப்பறம் எம்ஜிஆர்தான் நமக்குன்னு ஒரு யூனியன் ஆரம்பிச்சு வச்சாரு’’ எனத் தன்னையறியாமல் கைகளை இணைத்து ``அவருக்குப் புண்ணியமாப் போகணும்’’ என எம்ஜிஆருக்கு நன்றி சொன்னார்.

இருவரையும் ஒரு வித மௌனம் சூழ்ந்திருக்க, வண்டி படப்பிடிப்புத் தளத்திற்கு வந்துசேர்ந்தது. க்ளைமாக்ஸுக்கு முந்தைய காட்சியில் சில உதிரி ஷாட்ஸ் மற்றும் க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சி இரண்டும் அன்றைய ஷெட்யூலாக இருந்தது. கடற்கரை ஓரம் நூறு பைட்டர்ஸ் கொண்டு பிரமாண்டமாக எடுக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. அதனை முழுக்க முழுக்க இரவில் படமாக்க வேண்டும் என இயக்குநர் ராகவன் உறுதியாக இருந்தார். இவருடைய முந்தைய நான்கு படங்களுமே ஏ, பி, சி என எல்லா சென்டர்களிலும் சக்கைப்போடு போட்டவை. குறிப்பாக இவரின் கடைசிப் படமான ‘ஆக்டோபஸ்’ இண்டஸ்ட்ரியில் இவர்தான் `நம்பர் ஒன்' எனச் சொல்லும் அளவிற்கு இவரை எடுத்துச் சென்றிருந்தது. இவர் காட்சியை பைட் மாஸ்டர் மற்றும் ஒளிப்பதிவாளர் இருவரிடமும் எடுத்துச் சொல்ல அதற்கேற்ப புகழ், அடைக்கலம் அண்ணன் மற்றும் சக லைட்மேன்கள் லைட்டிங் அமைத்துக்கொண்டிருந்தனர். அப்போது மணி இரவு 7.30. முக்கியமான காட்சி என்பதால் செட்டே பரப்பரப்பாக இருந்தது. அப்போது கோடாவின் மேல் நின்றுகொண்டிருந்த புகழ் கீழே ஒரு அசிஸ்டன்ட் டைரக்டர் வேகமாக கேரவனை நோக்கி ஓடுவதைப் பார்த்தான்.

கேரவனுக்குள் சென்ற அவன்,

``சார், மாஸ்டர் ரிகர்சலுக்குக் கூப்பிடுறாரு’’ எனப் படத்தின் கதாநாயகனிடம் சொல்ல... ``பைவ் மினிட்ஸ்ல வரேன்’’ என பதில் வந்தது.

ஐந்து நிமிடத்துக்குப் பிறகு ஹீரோ செட்டுக்குள் நுழைய, அனைவரிடத்திலும் கூடுதல் பரப்பரப்பு தொற்றிக்கொண்டது. ஹீரோவின் முகத்தைத் தவிர அனைவருடைய முகமும் வேர்வையில் நனைந்திருந்தது. நேரமாகிவிட்டதால், இயக்குநர், பைட் மாஸ்டர் `ஸ்டன்ட்' ரவி இருவரும் ஹீரோவுக்கு அந்தக் காட்சியை வேகமாக விளக்க முற்பட்டனர்.

``சார்... இதான் ப்ராப்பர்ட்டி’’ எனச் சொல்லி ஹீரோவிடம் ஒரு சூலத்தைக் காண்பித்து, ``ஆனா லாஸ்ட்லதான் இது உங்க கைல வரும்.. பர்ஸ்ட்டு எல்லாரும் உங்கள சுத்தி வளைக்கிறாங்க... எடுத்தவுடனே பேக்ல ஒரு வெட்டு...’’ என ஆரம்பித்து‌ இறுதியில் ‌``ஒவ்வொரு அடிக்கும் காத்தோட போர்ஸ் அதிகமாகிட்டே போகுது... லாஸ்ட் ஷாட்ல அந்த சூலத்த வச்சு அப்படியே வில்லன மேல தூக்குறீங்க... காத்து சும்மா சொழட்டி அடிக்குது... அங்க கட்’’ என பைட் மாஸ்டர் சொல்லி முடித்தார். கோடாவில் மேலே நின்ற புகழ் இவையனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்தான்.

சிலபல ரிகர்சல்களுக்குப் பிறகு... ``ஓகேதானே சார்... எனி டவுட்ஸ்?’’ என மாஸ்டர் கேட்க, ``நோ டவுட்ஸ் மாஸ்டர், டேக் போகலாம்!’’ என ஹீரோவிடமிருந்து பதில் வந்தது.

``சீன் நம்பர் 83, ஷாட் 1, டேக் 1’’ என அசிஸ்டன்ட் டைரக்டர் கிளாப் அடிக்க, காட்சி ஆரம்பமானது.

கடற்கரையின் காற்றுடன் விண்ட் மெஷின் காற்றும் சேர்ந்து புழுதி பறந்தது. சுழற்றி அடிக்கும் காற்றுக்கு நடுவே ஹீரோ அடியாட்களைத் துவம்சம் செய்துகொண்டிருந்தார்.

காட்சி நடந்துகொண்டிருக்க, ``கட்! ஒன் மோர்!’’ என இயக்குநர் ராகவனிடமிருந்து குரல் வந்தது.

``சீன் 83, ஷாட் 1, டேக் 2’’ எனக் காட்சி மீண்டும் ஆரம்பமாகி நடந்துகொண்டிருக்க... கடற்கரைக் காற்றின் சீற்றம் அதிகமானதால், எதிர்பாராத விதமாக லைட்டிங்கிற்காக அமைக்கப்பட்டிருந்த 60 அடி உயர பரணலிருந்து புகழ் தவறிக் கீழே விழுந்தான். புகழின் வாழ்க்கையையே அந்த ஒரு `ரீ டேக்’ மாற்றியது.

இருள் மனிதன் - சிறுகதை

வலது கை தோள்பட்டை, கை மற்றும் கால்களில் எலும்பு முறிவு என, புகழ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். கயலுக்குத் தகவல் சொல்லியவுடன் தன் மகனை அழைத்துக்கொண்டு நின்றுபோன தன் இதயத்துடிப்புடனே மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தாள். அவளின் கண்ணீர்த் துளிகள் அவள் நடந்துவந்த சாலை, பயணம் செய்த ஆட்டோ, மருத்துவமனை வளாகம் என அனைத்து இடங்களிலும் படர்ந்திருந்தன. புகழின் மருத்துவமனைச் செலவு அனைத்தையும் படத்தின் தயாரிப்பாளர் ஏற்றுக்கொள்வார் என அவருடைய மேனேஜர் உறுதியளித்துவிட்டுச் சென்றார். ஹீரோ நேரடியாக வந்து கயல் மற்றும் அவர்களின் மகனுக்கு ஆறுதல் சொல்லிவிட்டுப் போனார்.

``எனக்குலாம் காலங்கடந்தே ரொம்ப நாளாச்சு... இது எனக்கு நடந்திருக்கக்கூடாதா?’’ என அடைக்கலம் அண்ணன் அழுதுகொண்டே தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்தார்.

மூன்று நாள்கள் கழித்து ஆபரேஷன் நடந்தது. தயாரிப்பாளரின் மேனேஜர் ஆபரேஷனுக்கான பணத்தைக் கயலிடம் கொடுத்துவிட்டுச் சென்றார். இடையில் உடனிருந்த சக லைட்மேன்கள் மற்றும் பைட்டர்கள் படப் பிடிப்புக்குச் சென்றுவிட்டனர். அடைக்கலம் அண்ணன் மட்டுமே அபரேஷனின்போது கயலுடன் உறுதுணையாக இருந்தார். புகழுக்குத் தோள்பட்டை, கை மற்றும் கால்களின் பகுதிகளில் பிளேட் பொருத்தப்பட்டது. டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு இனி நம் வாழ்க்கை என்னவாகும் என்ற கவலையோடு அவர்கள் வீட்டிற்குச் சென்றனர்.

இரண்டு வருடங்கள் ஓடின. இயக்குநர் ராகவனின் அடுத்த படத்தின் வேலைகள் நடந்துகொண்டிருந்தன. முதன்முதலாக பேய்ப்படம் ஒன்றை இயக்கிக்கொண்டிருந்தார். ஒருநாள் செட்டுக்கு வந்துகொண்டிருந்த ராகவனிடம் புரொடக்‌ஷன் மேனேஜர் போன் செய்து, ``சார்... நீங்க இன்னைக்கு செட்டுக்கு வரவேண்டாம்’’ என்றான்.

``ஏன்யா, என்னாச்சு?’’ என்று ராகவன் கேட்க, ``ஒண்ணுமில்ல சார்... யாரோ ஒரு லைட்மேன் கடன் தொல்லை தாங்க முடியாம குடும்பத்தோடு தற்கொலை பண்ணிக்கிட்டான்போல... அதனால ஷூட்டிங்லாம் கேன்சல் சார்’’ என்றான்.

``ஓ! யார்யா அது?’’ என்று கேட்ட ராகவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

``பேரு சரியா ஞாபகமில்லயே... ஏதோ புகழ்னு சொன்ன மாதிரி ஞாபகம்’’ என்றான்.

உடனே, இரண்டு வருடங்களுக்கு முன்பு தன்னுடைய படப்பிடிப்பில் ``புகழ்... புகழ்’’ என்று அலறிய உதடுகள் சட்டென ராகவனுக்கு ஞாபகம் வந்தன.

அன்று இரவு முழுவதும் ராகவனுக்குத் தூக்கம் வரவில்லை. மறுநாள் தூக்கம் தொலைத்து செட்டுக்குச் சென்ற ராகவனிடம் ``என்னாச்சு சார், ஒரு மாதிரி இருக்கீங்க?’’ என அனைவரும் கேட்டனர். ஒன்றுமில்லை எனச் சொல்லிவிட்டு அன்றைய நாள் காட்சியை எடுக்க ஆயத்தமானார். பேய்ப்படம் என்பதால் செட்டே இருள் சூழ்ந்திருந்தது.

``ஆக்‌ஷன்’’ எனச் சொல்லி, காட்சி ஆரம்பமானபோது... ராகவனின் கண்களுக்கு மட்டும் இருள் சூழ்ந்த அந்த இடமெங்கும் வெளிச்சம் பரவியிருப்பதுபோலத் தெரிந்தது. அன்றைய நாள் படப்பிடிப்பும் ரத்தானது.