சினிமா
பேட்டிகள்
Published:Updated:

தாழ் திறவாய்! - கதவு 10 - ஜவுளிக்கடை

தாழ் திறவாய்
பிரீமியம் ஸ்டோரி
News
தாழ் திறவாய்

கபிலன், ஓவியம்: திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்

மண்ணில் புதைக்கப்பட்ட
மண்பானை உண்டியல்
அக்காவின் சேமிப்பு
அநியாயத்துக்குத் தள்ளி எடுத்த
அம்மாவின் சீட்டுப்பணம்
பிடிப்பு போக அப்பாவின் சம்பளம்
எல்லாத்தையும் கூட்டிக்கழிச்சாலும்
பண்டிகைக்குப் பத்தாது

தீபாவளி முன்னிரவு
பட்டாசுகள் அணிவகுக்க
வானில் வண்ணங்கள் சூழ
நகரமே வெளிச்சத்தின் வேடந்தாங்கலானது

அப்பா சாராயத்துக்குக் காசில்லாமல்
திண்ணையில் உட்கார்ந்திருந்தார்
அக்கா சிம்னி விளக்கைத்
துடைத்துக்கொண்டிருந்தாள்

தாழ் திறவாய்! - கதவு 10 - ஜவுளிக்கடை

நானும் அண்ணனும்
புத்தாடையின் வருகைக்காகக் காத்திருந்தோம்
பகலெல்லாம் திரிந்த கோழி
கூடைக்குள் கண்கள் மூடித்திறந்து
வாய் அசைய நின்றுகொண்டிருந்தது
எல்லோர் வீட்டுக்கதவும் சாத்தப்பட்டு
தெருவோரம் பாய்விரித்து
ஊரே தூங்கிவிட்டது

சிறுக சிறுக கட்டிய பண்டுத்தொகையில்
கால் சட்டை மேல் சட்டை பாவாடை தாவணி
வேட்டி துண்டு வாயில் பொடவ என
எல்லாத்தையும் வாங்கிக்கொண்டு
நடு இரவுக் கூட்ட நெரிசலில்
மீதத் தொகைக்காக
பட்டாளம் ஜவுளிக்கடை சேட்டுவிடம்
ஏக்கத்தோடு நின்றுகொண்டிருந்தது
அம்மாவின் உருவில் என் குடும்பம்.