
ஓவியம்: சிவ பாலன்
மாலையை வழியனுப்புதல்
நீண்ட பயணத்துக்குப் பின்
தனிமைக்குத் திரும்பும் என்
அலைவுறு மனத்தின்
அர்த்தமற்ற பதற்றத்தின் சாயல் கொண்டு
கவிகிறது இம்மாலை.
குறைந்துவரும் பகலொளி தரும்
அச்சத்துக்கிணையான
வசீகரத்தில் மயங்கி
நீண்டு விழும் ஜன்னல் கம்பி நிழல்கள் தாண்டி
முற்றத்துக்குச் செல்கிறேன்.
ஒரு சில நாள்கள்
நீர்காணா சங்குப்புஷ்பம்
பூத்திருந்ததா இன்று காலை?
ஆலம்பூ ஒன்று நீலத்தில் பூத்திருக்கக் கண்டு
இம்மாலையை வழியனுப்பி வைக்கிறேன்
ஒரு குறையுமற்று.

தண்ணீர் பலூன்கள்
கோடி கோடி தண்ணீர் பலூன்கள் என் வாழ்வு.
சொற்கள் அவற்றுக்குப் பகை.
எத்தனை பலூன்கள் நனைத்துவிட்டன
என் ஆயுளின்
எத்தனை நாள்களை.
இருக்கட்டும்;
பலூன்கள் உள்ள இடத்தில்
மகிழ்வுக்கு ஏது குறை!
குணமடைதல்
கால்களைக் கீழிறக்க அஞ்சினேன்
மருத்துவமனைக் கட்டிலைச் சுற்றிலும் குப்பைகள்
சொற்களாய் சொற்களாய்.
தலையணையின் தோள்களில்
முகம் சாய்க்கத் திரும்புகிறேன்.
சூரியனோ நிலவொளியோ
பூத்திருக்கும் ஜன்னலில்
திரைகள் பையத் தளர்த்தி
நுழைகிறது தென்றல்.
என் காயங்கள் ஆறும்
என் வலிகள் தீரும்.
நான் உறங்குவேன்.