
வலங்கைமான் நூர்தீன்
ஒட்டகத்தின்
நிறத்தைப்போல மணலும்,
அதன் முதுகைப் போல
ஏற்ற இறக்கங்களுடனும் பாலைவனம்.
மெதுவாக ஏறி இறங்கி வரும்
வெயில்
கொண்டு வருகிறது
கானல் நீரையும்.
தூரத்தில் தெரியும்
பேரீச்சம் மரத்தை நெருங்கி
அதன் மட்டைகளின் நிழலால்
அரேபியனைக் கட்டிப்போட்டுவிட்டு
வெயிலை மேய நகர்கிறது ஒட்டகம்.
காய்ந்துபோன குப்புஸ் ரொட்டிகளையும்
உலர்ந்த ஈத்தம்பழங்களையும் உண்பவனுக்கு
விக்கல் எடுப்பதற்குள்...
அரபியே, கனரக வாகனத்தைப்
பாலைவனத்திற்குள் வேகமாகச் செலுத்து.
உன் ஒட்டகங்களுக்குக் கொண்டு போகும்
பல்லாயிரம் லிட்டர் தண்ணீரில்
ஒரு குவளை மட்டும் அவனுக்குக் கொடு
அது அவன் குடும்பத்தின் கண்ணீர்.

தண்ணீரைச் சுமந்து வருவதற்கு
ஆட்டுத்தோல்கள்
நிறைய இருக்கின்றன,
பாலைவனத்தில் கிணறு
எங்கேயாவதுதான் இருக்கும்.
நீ சுமந்து வரும்
முதுகுப் பையில் நிரம்பி வழியும் நீர்,
ஆட்டிறைச்சியைத் தின்றுவிட்டு
அதன் தோலை உனக்களித்தது
முதலாளியின் கருணையே என நினைக்கும்
உன் நெஞ்சில்தான் எவ்வளவு ஈரம்.
கடற்காகம்
தலைக்குமேல் பறக்கும்போதெல்லாம்
அவனுக்கு விமானத்தின் நினைவு வரும்,
கைகளைச் சிறகுகளாக்கிப் பறந்துபார்ப்பான்.
ஏனோ அவன் விமானம்
பாலைவனத்தை மட்டும் வட்டமடித்துவிட்டு
ஒட்டகக் கொட்டகையில்
தரையிறங்கிவிடுகிறது.