
யவனிகா ஸ்ரீராம்; ஓவியங்கள்: ரவி
குளிர்ந்த காற்று
சாம்பல் பூனை ஒன்று
தலை மடக்கி
அரசு வேலிமதிலில் உறங்குகிறது
பழுப்பு இலைகள் நடைபாதையில் சுழலுகின்றன
ஆயிரம் அந்தரங்கங்களை மறைக்கும்
இந்த வணிகவீதி
கடலுக்கு அப்பாலும்
நீளும்போல
பயனாளிகள் செய்திகளுடன் நொதித்த மதுவருந்தி உணவுகளைத் தருவிக்கிறார்கள்
தொலைவில் தண்ணென அசையும் நீர்நிலைகளில் இருந்து
குளிர்ந்த காற்று வீசுகிறது
தானியக்கிடங்கின் வாசலில் சிதறிய மணிகளை
பொட் பொட்டென்று
கொத்தும் குருவிகள் பதறிப் பறக்கும்படி
அந்தப்பூனையை ஏனோ பாய்ந்து விரட்டினேன்
எதிர்மரத்தில் உந்தி முட்டுச்சந்திற்குள் அது தாவிக்கொண்டது
வேடிக்கை பார்க்காமல் நகருங்கள் என
யாரோ விரட்டுகிறார்கள்
பயணிகள் அமரும் நிழல் கட்டடத்தில் காலியாக இருந்த சிமென்ட் பெஞ்சில்
கால் மடக்கிப் படுத்துக்கொண்டேன்.

வருகைப்பதிவேடு
கோண்ட்வாரா மக்கள் ஆப்பிரிக்காவில் இருந்து மேற்கே வந்தார்கள்
மக்காச் சோளம் முற்றிவிட்டதெனில்
வசந்தகாலம் வந்துவிடுகிறது
காலிக்கட்டில் முதல் பாய்மரம் நங்கூரம்
இட்டபோது வழி தெரிந்துவிட்டது
வாழைப்பழங்களின் வருகைக்குப்பின்
குரங்குகள் தோன்றிவிட்டன
மாட்சிமை தாங்கிய விக்டோரியா ஹாலில் மெல்லிய சாயத்துணி பண்டல்கள்
ஒரு உலோகத் தொழிற்சாலைக்கு
அனுமதி கிடைத்திருக்கிறது
காதல் கடிதங்களைத்தவிர பலநூறு மனுக்கள் குவிந்துள்ளன
மாரிக்கால மேகங்கள் மற்றும் கடல் ஓதங்களின்
வருகை அறிவிக்கப்பட்டுள்ளது
அத்தி இன்னும் பூக்கவில்லை
கால்நடைகள் திரும்பிவிட்டன
நிலுவையில் இருந்து ஓரிரு நீதிமன்றத்தீர்ப்புகள் மேசையில் அடுக்கப்பட்டிருக்கின்றன
தெருக்களில் யாரும் இல்லை
கை கழுவியாகிவிட்டது
அதோ உங்கள் நீர்மூழ்கிக்கப்பல்களின் தொலைநோக்கு முனை
தெரிகிறது நல்லது வாருங்கள்