
கரிகாலன்
பிழைத்திருப்பதன் வழி!
தேசங்களின் அதிபர்கள் காலையில் தோன்றி
நேற்று இறந்தவர்களின் எண்ணிக்கையைச் சொல்கிறார்கள்
காபி கோப்பையைப் பற்றியிருக்கும்
கரத்தில் சூடுபரவி நாம் இன்னும்
எண்ணாகவில்லையென்பது
ஆறுதலைத் தருகிறது
பிரியமானவர்களுக்கு அனுப்பிய குறுஞ்செய்திகளுக்கு
பதில் வரும் இடைவெளியில் தீ நுண்மம்
ஏளனமாகச் சிரிக்கிறது
முன்பெல்லாம் ஞாபகமென்பது
மலராக இருந்தது
இப்போது அது ஒரு சாவி
இறந்தகாலத்தின்
ஒரு கதவைத் திறக்கிறேன்
நீ பாடிக்கொண்டிருக்கிறாய்
பொழியும் மழையில்
காலம் சிறிது உறைகிறது
வேற்றுக்கிரக வாசிகளைத்
தொற்ற முடியாமல்
நம் கதவுகளுக்கு வெளியே
வைரஸ் நாணித் தலைகவிழ்கிறது
நிகழ்காலத்துள்
மீண்டும் நுழைகிறேன்
மரணத்தின் கணக்கில் மீள்பவனிடம் காதல்
ஒரு மலர்க் கொத்தை நீட்டுகிறது!

மகத்துவம்!
உனைத் தேடிவந்த
எல்லா பாதைகளிலும் போலீஸ்காரர்கள் நின்றனர்
எட்டுத் திசைகளையும்
144 மூடியிருந்தது
உனக்காகப் பாடி அனுப்பிய
குரலை நான்காவது அலைவரிசையின்
விளம்பரப் பாடல் அழித்தது
ஓர் உயிர்க்கொல்லிக்
கிருமிக்கு அஞ்சி
உலகம் தன் கதவடைத்தது
மொட்டை மாடியில்
உதடுகள் பிரிக்காமல்
வயலின் இசைத்து
துணி உலர்த்துகிறாய்
ஈரச்சேலையை உதறும்போது
உன் அம்சவர்த்தினியை
உரசிச் சிறகடிக்கிறதே
அது வண்ணத்தியில்லை
யாரும் அறிந்திராத
ஒன்பதாவது
திசையைத் திறந்த
உன் காதலன்!

மூன்றாம் உலக யுத்தத்துக்கு சிவிலியன்களின் பங்களிப்பு!
பாதங்களில் வேர்கள்
முளைத்துவிடக்கூடாதே என்ற
அச்சத்தில்
நேற்று 50 சதுர அடிகளுக்குள்
நடந்துகொண்டிருந்தேன்
25 வார்த்தைகளைப் பேசியிருப்பேன்
500 சொற்களை எழுதியிருப்பேன்
100 சொற்களைக் கேட்டிருப்பேன்
அவற்றில் 75 டிவி பேசியவை
அவையும் நோயாளிகள்,
இறந்தவர்கள் குறித்த
புள்ளிவிவரங்கள்
எனக்கு வெளியே
எனது சிறிய நகரம் இருந்தது
எனது பெரிய தேசம் இருந்தது
என் அம்மா இருந்தாள்
என்னை அன்பு செய்பவர்கள் இருந்தனர்
பசித்தவர்களுக்கும்
அவர்களது உணவுத்தட்டுகளுக்கும் இடையே 144 இருந்தது
நடு வீதியின் வெய்யிலில் நின்று எரிச்சலான போலீஸ்காரர்கள்
யாராவது சாலையில் நடந்தால் அவர்களது பின்பக்கத்தில்
ஆத்திரத்தைத் தணிக்க விரும்பிக் காத்திருந்தனர்
முகங்களே இல்லாமல்
ஒரு மாஸ்க் இன்னொரு மாஸ்க்கிடம்
பேசுவதைப் பார்க்கப் பிடிக்கவில்லை
இறந்துவிட்ட தைரியத்திலோ என்னவோ
எம்ஜியாரும் ஜெயலலிதாவும் மாஸ்க்கில்லாமல்
டிவியில் ஆடிப் பாடினார்கள்
அறிவிக்கப்படாத மூன்றாம் உலகப்போர்
நம் சன்னலுக்கு வெளியே தொடங்கிவிட்டது
துப்பாக்கிகளைச் சுத்தம் செய்த
ராணுவவீரர்கள்
உறங்கப்போய்விட்டார்கள்
மருத்துவர்களும் செவிலிகளும்
வெள்ளை உடைகளில் யுத்தம் செய்வார்களென
யாரும் கற்பனை
செய்திருக்க மாட்டார்கள்
புனைவைவிட யதார்த்தம்
நம்பகத்தன்மையற்றதாக இருக்கிறது
ஒரு டாக்டருக்கு மாஸ்க் இல்லை
கைகளை சுத்தம் செய்ய சானிட்டைசர் இல்லையென்றால்
வதந்தியைப் பரப்புவதாக
அரசாங்கம் எச்சரிக்கிறது
இன்றைய அதிகாலை
எனக்கான தேநீரைத் தயாரித்துக் கொண்டிருக்கிறேன்
சன்னலுக்கு வெளியே
தோட்டத்தில் ஒரு பலா
தன் காயை முதுவேனிலில்
பழுக்க வைத்திருக்கிறது
இம்மூன்றாம்
உலக யுத்தத்தில் பங்கேற்க
மருத்துவராகவோ செவிலியராகவோ
இருக்க வேண்டியது அவசியமில்லை
பாதங்கள் வேர்பிடிக்க
கைகள் கிளைகளாக
கனிகளைத் தரவேண்டி
இல்லத்தில் நாம்
ஒரு தருவாவோம்!