கட்டுரைகள்
Published:Updated:

கவிதை: தனிமைக்காலம்

கவிதை
பிரீமியம் ஸ்டோரி
News
கவிதை

கார்த்திகா முகுந்த்

இது

யுகமாடும் சூதாட்டம்; நோயன்று.

என் கடைசி முத்தம்

இதன் பணயமாகிறது.

நோய்

கிருமி

தனிமை

சாவும் அச்சமில்லை.

பகடை என் கையில் வரும்நாளில்

பன்னீர்ப்பூ வாசம் வீசும்

என் சிறுமகளின் விரல்கள் பற்றி

முத்தமிடக்கூட ஆகாமல் நான்

செத்துவிடக்கூடலாம் இவ்வாட்டத்தில்.

என் குழந்தைக்கான முத்தத்தைப்

பணயம் கேட்கவா

யுகாந்திரங்களாகக் காத்திருந்தாய்

பிரபஞ்சமே?

ஆட்டம் தொடர்கிறது.

என் கடைசி முத்தம்

நட்சத்திரங்களாக மாறி

நடுங்கிக்கொண்டு காத்திருக்கிறது.

கவிதை
கவிதை

நான் மட்டும் வசிக்கும் இந்த ஊரில் தனிமையில்லை;

நாலாபுறமும் கானல் கசிய

நச்சரவு போல் கூர்கற்கள் தாங்கி

நடுவில் ஊர்கிற இப்பாதை தனிமை.

நெடுஞ்சாலையில் எனக்கெனக்

காத்திருக்கிறதொரு ரொட்டிப் பொட்டலம்.

எதிரில் தடுமாறி வருகிறது

எங்கோ வழிதவறிய ஆட்டுக்குட்டி.

‘என்னை ஏந்திக்கொள்’ என்றது அருகில் வந்து மெதுவாக.

அள்ளிக்கொள்ளத் தூண்டும் அழகுதான்.

ஏதும் பேசாமல் பார்த்துக்கொண்டிருந்தேன்.

‘என்னை ஏந்திக்கொள்’ என்றது மீண்டும் மெதுவாக.

‘அம்மா எங்கே... நான் அழைத்துச் செல்லவா?’ என்றேன்

அதைத் தொடாமலேயே.

கைவிடப்பட்ட அதன் கண்கள் கொஞ்சம் மினுங்கின.

காற்றில் நடுங்கும் ஒரு ‘மேஏஏ...’யை எறிந்துவிட்டு ஓடியது.

‘என்னுடன் பேசு... என்னுடன் பேசு’

என்றதன் பின்னால் ஓடத் தொடங்கினேன்.

இத்திசைகளற்ற வெளியில்

ஓடிக்கொண்டிருக்கிறேன் இப்போது

என் தனிமையைத் துரத்திக்கொண்டு.

நெடுஞ்சாலையில் எனக்கெனக்

காத்திருக்கிறதொரு ரொட்டிப் பொட்டலம்.