
விகடன்ல எழுதலாம் வாங்க!
ஏதோ ஒரு ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. கதைகள், கட்டுரைகள், கவிதைகள், புகைப்படங்கள், எவரையும் காயப்படுத்தாத, சுவாரஸ்யமான மீம்ஸ்கள், போட்டூன்கள், ஓவியங்கள், நகைச்சுவைகள், லைஃப் ஸ்டைல் விஷயங்கள், மினிமலிச படைப்புகள், பயண சுவாரஸ்யங்கள், உலக, இந்திய மற்றும் தமிழ் சினிமாப் பார்வைகள், குறைந்த நிமிடத்தில் நிறைவான சேதி சொல்லும் வீடியோக்கள் என... எதையும் நீங்கள் அனுப்பலாம். ஆசிரியர் குழுவின் பரிசீலனைக்குப் பிறகு உங்கள் படைப்பு, ஆனந்த விகடன் முதல் சக்திவிகடன் வரையிலான விகடன் குழுமத்தின் பொருத்தமான இதழ்களிலோ, விகடன் டாட் காமிலோ வெளியிடப்படும்.

#MyVikatan பகுதியில் தொடர்ந்து எழுதி, வாசகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று சூப்பர் ஸ்டாரான 11 வாசகர்களை இங்கே அறிமுகப்படுத்துகிறோம். நீங்களும் இந்தப் பட்டியலில் இடம்பெறலாம். https://bit.ly/MyVikatan க்ளிக் செய்து உங்கள் கட்டுரைகளை நீங்கள் சமர்பிக்கலாம். அதே போல், 044-66808032 என்ற நம்பருக்கு மிஸ்டு கால் கொடுத்தால் உங்கள் மொபைலுக்கு ஒரு லிங்க் அனுப்பிவைக்கப்படும். அந்த லிங்கை கிளிக் செய்து உங்கள் படைப்புகளை சமர்ப்பிக்கலாம்.
இது வாசகர்களுக்காக விகடன் அமைத்திருக்கும் மேடை... கலக்குங்கள் வாசகர்களே!
இத்தாலியில் கொரோனாத் தொற்று அதிகரித்திருந்த நேரம், உலகின் பார்வை இத்தாலியின் பக்கம் திரும்பியது. அந்தச் சமயத்தில், அங்குள்ள மிலன் நகரில் வசிக்கும் தமிழர் மகேஸ்வரன் ஜோதி, இத்தாலியின் கள நிலவரத்தையும் தன் நேரடி அனுபவத்தையும் விவரித்து MyVikatan-ல் கட்டுரையாகப் பதிவிட்டார். கட்டுரை விகடன் தளத்தில் பதிவிட்டப்பட்ட சில மணி நேரத்திலேயே, `விழிப்புணர்வுப் பதிவு’, `Let all us pray for quick recovery for Italy’, `அவசியமான தகவல்’ என்றெல்லாம் கமென்டுகள் குவிந்தன.

கொரோனா வீடுகளுக்குள் முடக்கிவிட்டதாக பலர் புலம்பிக்கொண்டிருக்கும் சூழலில், ஆக்கபூர்வமாகப் பல விஷயங்களைச் செய்யலாம் என்று நிரூபித்திருக்கிறார் எழுத்தில் ஆர்வம் கொண்ட பள்ளி ஆசிரியர் அகன் சரவணன். லாக்டெளன் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தற்போதுவரை 100க்கும் மேற்பட்ட கட்டுரைகளை #MyVikatan-ல் பதிவிட்டு தன் எழுத்துகளைப் பட்டை தீட்டியிருக்கிறார் அகன். 10 செகண்ட் நானோ கதைகள், டெக்னாலஜி அப்டேட்ஸ், நீதிக் கதைகள், வெப் சீரிஸ் விமர்சனம் எனப் பல ஜானர்களில் கட்டுரைகள் எழுதியிருந்தாலும், `` `தலைக்குக் கொஞ்சம் சானிட்டைசர் போடுங்களேன்..!’ - சலூன் கடைப் பரிதாபங்கள்’’ என்ற அவரது கட்டுரை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து அதிகம் அப்ளாஸ் அள்ளியது.

கோவிட் 19 வைரஸுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படும் `ஹைட்ராக்ஸிகுளோரோகுயின்’ மருந்தை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யுமாறு அந்நாட்டு அதிபர் டிரம்ப் இந்தியாவிடம் வேண்டுகோள் விடுத்தார். பிறகு மிரட்டினார். சர்வதேச அரங்கில் வல்லரசு நாடாகத் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் அமெரிக்கா, இந்தியாவிடம் மருந்தைக் கேட்க காரணம் என்ன என்னும் மிகப்பெரிய கேள்விக்குத் தெளிவான விளக்கத்தை முதலில் அளித்தது விகடன்தான். #MyVikatan வாயிலாக அந்த விளக்கத்தைப் பதிவு செய்தவர் சி.எஸ்.ஐ.ஆர் ஆராய்ச்சியாளர் முனைவர் கோதண்டம் கிருஷ்ணமூர்த்தி. செய்தி சூப்பர் டூப்பர் ஹிட்.

கொரோனாப் பீதியிலும் லாக் டெளன் கொடுத்த அழுத்தத்திலும் தத்தளித்துக் கொண்டிருந்த நம் மனதுக்கு இதமளிக்கும் விதமாக தர்மபுரித் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இரா.செந்தில் தன் பயண அனுபவங்களைக் கட்டுரைகளாக #MyVikatan-ல் பதிவு செய்தார். தர்மபுரி டு இமயமலை... அதுவும் சாலை வழியாக என்றால் சொல்லவா வேண்டும். `ஆன்மாவை சர்வீஸ் செய்யும் பயணங்கள்!’ என்று வரிசையாக இவர் வெளியிட்ட கட்டுரைகள் ஒவ்வொன்றிலும் பிரமிப்பும், ஆச்சர்யங்களும் கொட்டிக் கிடந்தன.

சாத்தான்குளம் சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருந்த சமயம்… சி.ஆர் என்னும் வாசகர் #MyVikatan-ல் `சாத்தான்களின் குளம்!’ என்னும் தலைப்பில் வெளியிட்ட சிறுகதை வாசகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்தது. கதைக்கும் சாத்தான்குளம் சம்பவத்துக்கும் சம்பந்தமில்லை. ஆனாலும் இந்தப் புனைவு, நம் மனதை உலுக்கிய கர்ப்பிணி யானையின் மரணத்தைத் தழுவி எழுப்பட்டிருந்தது. சி.ஆர் தன் ஆழமான வரிகளின் வாயிலாக யானைகளின் வலியை வாசகர்களிடம் கடத்திவிட்டார்.

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் நகைச்சுவை என்றால் நாகேஷ், செந்தில்-கவுண்டமணி, வடிவேலு, சந்தானம், யோகிபாபு உள்ளிட்டோர்தான் நம் கண்முன் வருவர். இந்தப் பட்டியலில் சார்லியும் கவனிக்கத்தக்கவர் என்பதைச் சுட்டிக்காட்டி, ராசு என்னும் வாசகர் #MyVikatan-ல் வெளியிட்ட கட்டுரை நல்ல வரவேற்பைப் பெற்றது. சார்லி என்னும் கலைஞனை வெறும் காமெடியனாக மட்டுமல்லாமல் நடிகனாகவும் ஆய்வுக்குட்படுத்தியது இக்கட்டுரை!

கொரோனாவின் தாக்கத்தால் மக்கள் லேசாக இருமல் வந்தால்கூட கஷாயத்தைத் தேடி கிச்சனுக்கு ஓடுகின்றனர். இப்படியான சூழலில் 60 வயதைக் கடந்த ராதா செளந்திரராஜன், தன் சிறிய வயதிலிருந்து கற்றுக்கொண்டு, பின்பற்றி வரும் வீட்டு மருத்துவத்தைக் கட்டுரையாக #MyVikatan-ல் பதிவிட்டார். `கண்ணுக்குக் கொய்யா இலை; காதுக்குப் பூண்டு!- முத்தான 10 பாட்டி வைத்தியம் #MyVikatan’ என்ற அந்தக் கட்டுரை லைக்ஸ் அள்ளியது.

இந்த ஸ்மார்ட் போன் தலைமுறையால் அதிகம் கண்டு்கொள்ளப்படாத துறை அது தபால்துறைதான். ஆனால் லாக்டெளன் தொடங்கிய நாளிலிருந்து விடுப்பு இல்லாமல் மக்கள் பணிசெய்து வரும் தபால்துறை, மாஸ்க், சானிட்டைசர் உள்ளிட்ட மருத்துவப் பொருள்களை அதிகளவில் பரிமாற்றம் செய்து சத்தமில்லாமல் சாதனை படைத்திருப்பதை #MyVikatan வாயிலாக பள்ளி ஆசிரியர் மணிகண்ட பிரபு பதிவு செய்தார். அதன்பின்னர் பல்வேறு தமிழ் மீடியாக்களும் இந்தியத் தபால் துறையைக் கொண்டாடத் தொடங்கின.

‘`உங்களுக்கு என்னப்பா .. கதை கதையா எழுதுற அளவுக்கு Nostalgic memories வெச்சிருப்பீங்க..’’ என்று 2k கிட்ஸ் பொறாமைப்படும் அளவுக்கு 70s, 80s மற்றும் 90s கிட்ஸ் உற்சாகத்துடன் #MyVikatan-க்கு Nostalgic கட்டுரைகள் அனுப்பி வருகின்றனர். அவற்றில் ரேடியோ மீதான காதல் குறித்து ஆனந்தகுமார் முத்துசாமி பதிவிட்ட கட்டுரைக்கு பாசிட்டிவ் கமென்ட்ஸ் குவிந்தன. Evergreen நினைவுகளை மீட்டெடுத்த பெஸ்ட் கட்டுரை அது!

`லிவ் இன்...’ பொதுவெளியில் பேசத் தயங்கும் ஒரு டாபிக். தமிழ்ச் சமூகத்தில் மேற்கத்திய கலாசாரத்தின் தாக்கமாகப் பார்க்கப்படும் live-in-relationship குறித்து நிறைகுறைகளை அலசி ஆராய்ந்து #MyVikatan வாயிலாக தன் தீர்க்கமான பார்வையைக் கட்டுரையாக முன்வைத்தார் ஷங்கர் வெங்கட்ராமன். கட்டுரை செம ரீச். திருக்குறளையும், தொல்காப்பியத்தையும் மேற்கோள் காட்டி காதல், காமம் என்னும் இரு நிலைகளை விளக்கியதுதான் கட்டுரையின் ஹைலைட்!

கவிஞர் நா.முத்துக்குமாருக்கு கோலிவுட்டில் ரசிகர்கள் அதிகம். அவரின் தீவிர ரசிகையான ரம்யா, முத்துக்குமாரின் பாடல் வரிகளை ஓவியங்களாகத் தீட்டி #MyVikatan-ல் பதிவிட்டார். ரம்யாவின் அந்த க்யூட் ட்ரிப்யூட் சோசியல் மீடியாவில் லைக்ஸ், ஷேர்ஸ் என ஹிட் அடித்தது.
