சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

வசந்த முல்லை மேலே மொய்த்த வண்டு!

மருதகாசி
பிரீமியம் ஸ்டோரி
News
மருதகாசி

கவிஞர் யுகபாரதி; ஓவியம்: மாசெ

ந்த ஆண்டு பாடலாசிரியர் மருதகாசியின் நூற்றாண்டு.

மருதகாசி, எழுத்துகளின் வழியே இன்றைக்கும் மக்கள் மத்தியில் தம் இருப்பைக் காட்டிக்கொண்டிருக்கிறார். அவர் மரபிலக்கியச் சாயல்களையும் தமிழ் மண்ணின் கலாசாரப் பெருமிதங்களையும் திரைப்பாடல்களில் கொண்டுவந்தவர். திருச்சியை அடுத்த மேலக்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர். பாபநாசம் சிவனின் சகோதரரும் பாடலாசிரியருமான ராஜகோபால அய்யரிடம் உதவியாளராக இருந்த அனுபவமும் அவருக்குண்டு. அருணாசலக் கவிராயரின் படைப்புகளில் உந்தப்பட்டு எழுதத்தொடங்கிய மருதகாசி, கல்லூரிக் காலத்திலேயே நாடகங்களுக்குப் பாட்டெழுதிப் பழகியிருக்கிறார்.

திருச்சி லோகநாதனின் இசையமைப்பில் வெளிவந்த அவருடைய நாடகப்பாடல்கள் அக்காலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. அரு. ராமநாதனின் வானவில் நாடகத்திற்கு மருதகாசி எழுதிய ஒரு பாடல், மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர். சுந்தரத்திற்குப் பிடித்துப்போக, திரைத்துறைக்குள் நுழையும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

`சிந்திக்கத் தெரிந்த மனிதகுலத்துக்கே சொந்தமானது சிரிப்பு’ எனத் தொடங்கும் `ராஜாராணி’ படப் பாடல் மருதகாசி எழுதியது. ஒருவாரகாலத்திற்கும் மேலாக உடுமலை நாராயணகவி எழுதியும் சரியாக வரவில்லை யென்று மருதகாசியிடம் அப்பாடலைக் கலைவாணர் ஒப்படைத்திருக்கிறார். ஒப்படைத்த மறுநாளே பாடல் முழுவதையும் எழுதிப் பாராட்டு பெற்ற கதையையெல்லாம், மருதகாசி தமது `திரைப்படப் பாடல்கள்’ நூலில் தெரிவித்திருக்கிறார்.

பாடலாசிரியர் மருதகாசி
பாடலாசிரியர் மருதகாசி

`இன்னொருவர் தயவெதற்கு / இந்நாட்டில் வாழ்வதற்கு / இல்லையென்ற குறையும் இங்கே / இனிமேல் ஏன் நமக்கு” என்று ‘தங்கரத்தினம்’ படத்தில் எஸ்.எஸ். ராஜேந்திரனுக்காக மருதகாசி எழுதிய வரிகளைப் புகழ்ந்து, ஐந்து பக்கங்களுக்கு அண்ணா ஒரு கட்டுரையே எழுதியிருக்கிறார். `திராவிட நாடு’ பத்திரிகையில் அக்கட்டுரை வெளிவந்த சமயத்தில் மருதகாசியைத் திராவிட இயக்கத் தோழர்கள் தங்களில் ஒருவராகவே கருதியிருக்கின்றனர்.

கருணாநிதியும் எம்.ஜி.ஆரும் திராவிட இயக்கக் கலைஞர்களாகத் தங்களை அடையாளப்படுத்தி, திரைத்துறையில் வேகமாக வளர்ந்த காலத்தில் அவர்கள்கூடவே கண்ணதாசனும் வளர்ந்திருக்கிறார். அல்லது அவர்கள் இருவராலும் வளர்க்கப்பட்டிருக்கிறார். எம்.ஜி.ஆரின் படங்களுக்குப் பாடல்கள் எழுதிவந்த மருதகாசி ஒருகட்டத்தில் திரைத்துறையை விட்டே இரண்டு மூன்று ஆண்டுகள் ஒதுங்கி இருந்திருக்கிறார்.

1963 முதல் 1967 வரை திரைத்துறைத் தொடர்பே இல்லாத நிலைக்குத் தம்மைத் தாமே துண்டித்துக்கொண்டிருக்கிறார். நண்பர்கள் சொன்னார்களென்று திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டு, கடனுக்கும் அளவில்லாத மன உளைச்சலுக்கும் ஆளான அவரை மீண்டும் திரைத்துறைக்கு அழைத்துவர பலரும் முயன்றிருக்கிறார்கள். நெருங்கிய நண்பர்களாலும் கைவிடப்பட்ட மருதகாசிக்கு அப்போது ஆறுதல் வழங்கி ஆற்றுப்படுத்தியவர் உடுமலை நாராயணகவி.

விட்ட இடத்தைப் பிடிக்கவேண்டுமென மருதகாசி நினைக்கவில்லை. தனக்கு இடமோ படமோ வேண்டாமென்றுதான் ஒதுங்கியிருக்கிறார். ஆற்றல்மிக்க ஒருவர் அப்படி இருப்பதை யார்தான் பொறுத்துக்கொள்வர். விடாப்பிடியாக அவரை அழைத்துவந்து, தேவர் தாம் தயாரித்த மறுபிறவியில் எழுத வைத்திருக்கிறார். 1967இல் எம். ஜி. ஆர். குண்டடிபட்டு குணமடைந்த சமயம் அது. `மறுபிறவி’ என்கிற தலைப்பே அதற்காக வைக்கப்பட்டதுதான். எம்.ஜி.ஆருக்கு மட்டுமல்ல, மருதகாசிக்கும் அது மறுபிறவியாக இருக்குமென்றே தேவர் நம்பியிருக்கிறார். ஆனாலும், ஒரே பாடலுடன் அந்தத் திரைப்படம் நிறுத்தப்பட்டிருக்கிறது.

அதன்பிறகு “தேர்த் திருவிழா, விவசாயி” முதலிய படங்களுக்கு மருதகாசி எழுதிய பாடல்கள், அவரை மீண்டும் பழைய இடத்திற்குக் கொண்டுவந்து சேர்த்திருக்கின்றன. “நினைத்ததை முடிப்பவன்” திரைப்படத்தில் இரண்டு பாடல்கள் முடிந்திருந்த நிலையில், அந்தப் பாடல்களில் முழுத்திருப்தியடையாத எம்.ஜி.ஆர்., மருதகாசியை அழைத்திருக்கிறார்.

`நான் பொறந்த சீமையிலே நாலுகோடி பேருங்க / அந்த நாலுகோடி பேரிலே நானும் ஒரு ஆளுங்க’ என எழுதியிருந்த கண்ணதாசனின் வரிகளில் அவருக்குப் பிடித்தமில்லை. “எனக்காக தனித்துவமாக அப்பாடல் எழுதப்படவில்லையே” என்றிருக்கிறார். மருதகாசியோ “வரிகள் இயல்பாகவும் அழகாகவும்தானே இருக்கிறது” என்று எம்.ஜி.ஆரிடம் கண்ணதாசனுக்காக வாதிட்டிருக்கிறார். அதற்கு

எம்.ஜி.ஆர்., “நாலுகோடி பேர் என்பதைவிட, ஆயிரத்தில் ஒருவன் என்பதுபோல் இருந்தால் நன்றாக இருக்கும்’’ எனச் சொல்லியிருக்கிறார். இரண்டுமே எண்ணிக்கைதான் என்றாலும், மக்களிடத்திலே தனக்குள்ள நெருக்கத்தை வெளிப்படுத்தும் வரிகளே தேவை என்று எம்.ஜி.ஆர் விரும்பியிருக்கிறார்.

மருதகாசிக்கும் எம்.ஜி.ஆர் எண்ணுவதிலுள்ள நியாயத்தைப் புரிந்துகொள்ள முடிந்திருக்கிறது. அதன்பின் அமைக்கப்பட்ட மெட்டிற்கேற்ப `கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்’ பாடலை எழுதிக்கொடுத்திருக்கிறார். அப்பாடலில் இரண்டாவது சரணத்தை `பொன் பொருளைக் கண்டவுடன் / வந்தவழி மறந்துவிட்டு / தன்வழியே போகட்டுமே’ என்று மருதகாசி எழுதியிருக்கிறார். எழுதப்பட்ட சரணத்தை வாசித்த எம்.ஜி.ஆர்., “பொன் பொருளைக் கண்டவுடன் வந்த வழி போவதில் தப்பில்லையே” எனக் கேட்டிருக்கிறார். தவிர, “தன்வழி, நல்வழி என்று நினைப்பவர்கள் அப்படித்தானே போவார்கள்” என்றும் கேட்டிருக்கிறார். அப்படியொரு கேள்வியை எம்.ஜி.ஆர் கேட்டதும் `பொன் பொருளைக் கண்டவுடன் / வந்தவழி மறந்துவிட்டு / கண்மூடிப் போகிறவர் போகட்டுமே’ எனத் திருத்தித் தந்திருக்கிறார்.

நன்றாகக் கவனித்தால் ஒருவிஷயம் தெளிவாகப் பிடிபடுகிறது. கண்ணதாசனைவிடவும் எம்.ஜி.ஆர் தனது ஏற்றமான பாடல்களுக்குப் பட்டுக்கோட்டையையும் மருதகாசியையுமே நாடியிருக்கிறார். ஒருவர் இடதுசாரியாகவும் மற்றொருவர் தமிழரசுக் கழகத்தவராகவும் இருந்தது கவனிக்கத்தக்கது. மாற்றுக் கருத்து டனும் மாற்றுக் கொள்கையுடனும் இயங்கிவந்த மருதகாசியையே அழைத்து, `விவசாயி’ திரைப்படத்தில் `கறுப்பென்றும் சிவப்பென்றும் வேற்றுமையாய் / கருதாமல் எல்லோரும் ஒற்றுமையாய் / பொறுப்புள்ள பெரியோர்கள் சொன்னபடி / உழைத்தால் பெருகாதோ சாகுபடி’ என்று எழுத வைத்திருக்கிறார். `கறுப்பென்றும் சிவப்பென்றும் வேற்றுமையாய்’ என்னும் வரிகள் போகிறபோக்கில் எழுதப்பட்ட வரி அல்ல.

மருதகாசியின் வரிகளை பட்டுக்கோட்டையின் வரிகளாகவும் கண்ணதாசனின் வரிகளாகவும் நம்மில் பலபேர் எண்ணியிருக்கிறோம். குறிப்பாக `மனுசன மனுசன் சாப்புடுறாண்டா தம்பிப் பயலே’ என்றதும் யோசிக்காமல் பட்டுக்கோட்டையாரே அப்பாடலை எழுதியதாகக் கருதுகிறோம். ஆனால், அப்பாடல் 1956இல் வெளிவந்த `தாய்க்குப் பின் தாரம்’ படத்திற்காக மருதகாசியினால் எழுதப்பட்டது. எம்.ஜி.ஆர் தன்னை ஒரு புரட்சிக்காரராகத் திரைப்படத்தில் நிறுவிக்கொண்ட முதல் பாடலாக அப்பாடலைக் கருதலாம். அதேபோல, `வசந்தமுல்லை போலே வந்து / அசைந்து ஆடும் பெண்புறாவே’ என்னும் பாடல் கண்ணதாசன் எழுதியதாகப் பல குறிப்புகள் தெரிவிக்கின்றன. உண்மையில், அப்பாடலை எழுதியவரும் மருதகாசிதான்.

1955இல் வெளிவந்த `மங்கையர் திலகம்’ திரைப்படத்தில் `நீலவண்ணக் கண்ணா வாடா’ என்றொரு பாடல். எப்போது அந்தப் பாடலைக் கேட்டாலும், என்னையுமறியாமல் ஒருவித மனத் தூண்டுதலுக்கு ஆளாவேன். வரிகளின் இடையே மருதகாசி செய்திருக்கும் கற்பனைகள் அப்படிப்பட்டவை. குழந்தைக்குத் தாலாட்டு பாடும் நாயகி, அக்குழந்தைக்காக இயற்கையிடம் உரையாடுவதுபோல மருதகாசி எழுதியிருப்பார். `நடுங்கச் செய்யும் வாடைக் காற்றே / நியாயமல்ல உந்தன் செய்கை / தடை செய்வேன் தாளைப் போட்டு / முடிந்தால் உன் திறமை காட்டு’ என்ற வரிகளை அவர் எங்கிருந்து பெற்றிருப்பார் என யோசித்துக்கொண்டே இருக்கிறேன். மரபிலக்கியச் செழுமையை அதைவிடவும் அழகாக ஒரு திரைப்பாடலில் கொண்டுவர முடியுமா என்பது சந்தேகமே.

மருதகாசி
மருதகாசி

மருதகாசியின் குறிப்பிடத்தக்க பாடல்களின் வரிசையைக் கவனித்தாலே அவர், எத்தகைய தமிழாய்ந்த பாடலாசிரியர் என்பதை உணர்ந்துவிடலாம். ‘சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா, முல்லை மலர் மேலே, சமரசம் உலாவும் இடமே, வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே, ஏர்முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லை, காவியமா நெஞ்சின் ஓவியமா, கோடி கோடி இன்பம் பெறவே, உலவும் தென்றல் காற்றினிலே, நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே, மணப்பாற மாடுகட்டி, மாட்டுக்கார வேலா, ஆடாத மனமும் உண்டோ’ என்பனபோல முதல் வரியிலேயே தன்னைக் கவனிக்க வைத்துவிடும் பேராற்றல் அவருக்கு இருந்திருக்கிறது. தனக்கு முன்னே இருந்த பாடலாசிரியர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்ட எத்தனையோ விதமாகச் சிந்தித்திருக்கிறார்.

அவருடைய பாதிப்பில் வெளிவந்த பாடல்களைப் பற்றித் தனிப்பட்டியலே என்னிடமிருக்கிறது. `தென்றல் உறங்கிய போதும் / திங்கள் உறங்கியபோதும் / கண்கள் உறங்கிடுமா / காதல் / கண்கள் உறங்கிடுமா?’ என்று அவர் எழுதிய வரிகள், எத்தனை பாடலாசிரியர்களின் வரிகளில் தென்படுகின்றன என்பதை நீங்களே யூகிக்கலாம். காதல்பாடல்களை எடுத்துக்கொண்டாலும், சமூகப்பாடல்களை எடுத்துக்கொண்டாலும் அவர் வரிகள் தனித்துத் தெரிகின்றன.

இன்றுவரை `சமரசம் உலாவும் இடமே’ பாடலுக்கு இணையான ஒரு பாடல் திரைப்படத்தில் வரவில்லை. சித்தர்களின் சொற்களை உள்வாங்கி, மரணத்தின் வலி நிறைந்த சூழலைக் கொண்டாடும்படி எழுதியிருக்கிறார். அவரே `மனமுள்ள மறுதாரம்’ என்ற திரைப்படத்தில் `தூங்கையிலே வாங்குற மூச்சு / இது, சுழி மாறிப் போனாலும் போச்சு’ என்றும் கூறியிருக்கிறார். அதையெல்லாம்விட, `ஏர்முனைக்கு நேர் இங்கே’ என்னும் பாடலில், விளைந்து நிற்கும் கதிருக்கு ஓர் உவமை சொல்லியிருக்கிறார். அதற்கு நிகரான ஒரு கற்பனையை இதுவரை யாருமே சிந்திக்கவில்லை. `வளர்ந்துவிட்ட பருவப் பெண்போல் உனக்கு வெட்கமா / தலை வளைஞ்சு சும்மா பாக்குறியே தரையின் பக்கமா?’ என்று ஒரு திரைப்பாடலைக் காவியப் பண்பு நிறைந்ததாக அவரால் மட்டுமே எழுத முடிந்திருக்கிறது. சொல்லாட்சிகளே திரைப்பாடல்களைப் புதிதாகக் காட்டுகின்றன. மருதகாசியை முந்தைய தலைமுறைப் பாடலாசிரியராக நான் கருதியதில்லை. ஏனெனில், அவர் பாடல்களை ஊன்றி வாசிக்கையில் இன்றைப் பிரதிபலிக்கின்றன. காலம் கடந்தும் நிற்கக்கூடியவை மட்டுமல்ல, காலத்தை ஒட்டியும் நிற்கக்கூடிய பாடல்களை எழுதியிருப்பவரே மருதகாசி. `விந்தைமிகு மகுடி முன்னாலே நாகத்தைப் போலே’ என்று அவரே ஒரு பாடலில் எழுதியிருக்கிறார். மகுடி இசைக்கு நாகமே மயங்குமெனில், மருதகாசியின் பாடல் மகுடிக்கு முன்னால் நாம் எம்மாத்திரம்?