சினிமா
ஆன்மிகம்
பேட்டி - கட்டுரைகள்
இலக்கியம்
Published:Updated:

‘தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!’- வாழ்ந்து காட்டும் ஊர்

இளங்காடு
பிரீமியம் ஸ்டோரி
News
இளங்காடு

மொழி

ஞ்சையிலிருந்து நடுக்காவிரி வழியாகப் பயணம் செய்து, `திருக்காட்டுப்பள்ளி’ எனும் பேரூரைக் கடந்தால், சாலைக்கு அந்தப் பக்கம் காவிரி பாய்கிறது. இடப்பக்கம் பிரியும் சாலையின் உட்புறமாகச் சிறிது தூரத்தைக் கடந்தால், ஊரெங்கும் தமிழ்க்கடல் பாய்கிறது.

900 குடும்பங்கள் வாழும் இளங்காடு எனும் சிற்றூரில் நாம் காணும் ஒவ்வொருவரும் தமிழ் பயின்ற, பயிலும், பயிற்றுவிக்கும் பெருமக்களாக இருக்கிறார்கள். இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழையும் போற்றும் ஊர் தஞ்சை என்றால், நேற்று, இன்று, நாளை என எக்காலமும் மொத்தத் தமிழையும் காக்கும் ஊராக விளங்குகிறது இளங்காடு.

கிட்டத்தட்ட நூறாண்டுகளுக்கும் மேலாகத் தமிழின் பெருமையைப் பறைசாற்றிக்கொண்டிருக்கும் புலவர் பெருமக்கள் வாழ்ந்த ஊர் இது. நான்காம் தமிழ்ச்சங்கம் தொடங்கப்படுவதற்கு இரு தசாப்தங்களுக்கு முன்னரே, ‘நற்றமிழ்ச் சங்கம்’ எனும் பெயரில் தமிழ் வளர்க்கச் சங்கம் தொடங்கப் பட்டிருக்கிறது இந்த ஊரில். ஊர்ப் பெரியவர் பம்பையா சேதுராயரின் முன்னெடுப்பில், 1881-ம் ஆண்டு தொடங்கப்பட்ட நற்றமிழ்ச் சங்கம்தான் இந்த ஊரில் இத்தனை பெரும் தமிழ் ஆளுமைகளை உருவாக்கியிருக்கிறது. 

‘நற்றமிழ்ச் சங்கம்’
‘நற்றமிழ்ச் சங்கம்’

‘`பாண்டித்துரைத் தேவர் வந்துதான் நற்றமிழ்ச் சங்கத்தைத் தொடங்கிவெச்சாரு. `நான்காம் தமிழ்ச் சங்கம்’ எனும் பெருமரம் எங்க நற்றமிழ்ச் சங்க விதையில முளைச்சதுதான்’’ எனத் தனது ஊரின் பெருமையையும், சங்கத்தின் பெருமையையும் விவரிக்கத் தொடங்குகிறார், 82 வயதான புலவர் ரத்தின மணவாளன்.

``எங்க பெரியப்பா புலவர் இளங்கோவன் இந்தத் தொகுதியில இரண்டு முறை தி.மு.க சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்காரு.''

பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, நான்காண்டு புலவர் படிப்பு. பிறகு முதுகலைத் தமிழும், ஆசிரியப் பணிக்காக முதுகலை ஆசிரியப் பயிற்சியையும் முடித்திருக்கும் புலவர் ரத்தின மணவாளன் தமிழாசிரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஊரில் தற்போது வசிக்கும் பெரும்புலவர்கள் இருவர். அவர்களில் ஒருவர் புலவர் ரத்தின மணவாளன். தனக்குத் தமிழ் ஈர்ப்பு ஏற்படக் காரணகர்த்தா யார் என்பதை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

``எங்க அப்பா விவசாயி. ஆனா, எங்க ஊருல பல பேரு தமிழ் படிச்ச புலவர்கள். படிச்சவங்க, படிக்காதவங்கங்கிற பாகுபாடெல்லாம் இல்லை. ஊர்ல எப்போதும் சிலப்பதிகாரம், கம்ப ராமாயணம்னு பெரும் உரையாடல்கள் நடக்கும்.

‘தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!’- வாழ்ந்து காட்டும் ஊர்

அதையெல்லாம் சிறு வயசுலேருந்து பார்த்து வளர்ந்த எனக்கும், தமிழ்மேல பெரிய ஈர்ப்பு வந்துடுச்சு. ஆனா, தமிழ் படிச்சுப் புலவராகணும்கிற எண்ணம் பெரும் புலவர் ராமசாமி ஐயாவைப் பார்த்த பிறகுதான் ஏற்பட்டுச்சு. படிப்பு மட்டும் இல்லை. தமிழுக்காகக் கல்லக்குடி ரயில் மறியல் போராட்டத்துலேயும் கலைஞர் கருணாநிதிகூட கலந்துக்கிட்டவன் நான். துப்பாக்கிச்சூட்டுல நூலிழையில உயிர் தப்பி, வீடு வந்து சேர்ந்தேன். கோவையில நடந்த செம்மொழி மாநாட்டுலேயும் கலந்துகிட்டு உரை நிகழ்த்தியிருக்கேன்’’ எனத் தன் கடந்தகால நினைவுகளை அசைபோட்டவர், தன் வீட்டின் வாசல்வரை வந்து தன் சக தமிழ் நண்பர்களின் வீடுகளுக்குச் செல்வதற்கான வழிகளையும் நமக்குச் சொன்னார்.

1980-களிலேயே இந்த ஊரைச் சேர்ந்த 60 பேர் பல்வேறு ஊர்களிலுள்ள பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தமிழாசிரியர்களாக, தமிழ்ப் பேராசிரியர்களாகப் பணியாற்றியிருக்கிறார்கள். அவர்கள் பலருக்கும் முன்னோடியாக இருந்தவர் பெரும் புலவர் ராமசாமி. ஆனால், அவருக்கும் முன்னர், கோவிந்தசாமி சேதுராயர், சிங்காரவேல் சேதுராயர், நற்றமிழ்ச் சங்கத்தின் தோற்றுநர் பம்பையா சேதுராயர் எனப் பல முன்னோடிகள் உண்டு. தி.மு.க-வின் முன்னோடித் தலைவர்களில் ஒருவராக இருந்த நாவலர் நெடுஞ்செழியன், சிங்காரவேல் சேதுராயரின் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நம்மாழ்வார், நல்ல சின்னையா
நம்மாழ்வார், நல்ல சின்னையா

தற்போது நற்றமிழ்ச் சங்கத்தின் தலைவராக இருப்பவர் பொன்னம்பலம். துணைத் தலைவரும், சங்கத்தின் முன்னோடிகளில் ஒருவருமான ராமசாமியின் மகனும் ஓய்வுபெற்ற தமிழாசிரியருமான இரா.முருகையன், சங்கத்தின் செயல்பாடுகள் குறித்த சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

``ஒவ்வொரு வருஷமும் சித்ரா பௌர்ணமியையொட்டி, மூணு நாள் நற்றமிழ்ச் சங்க விழா நடக்கும். பாரதிதாசன், மறைமலையடிகள், உ.வே.சாமிநாத ஐயர், சோமசுந்தர பாரதி, ஆறுமுக நாவலர், கி.ஆ.பெ. விசுவநாதம்னு எங்க ஊருக்கு வராத தமிழ்ச் சான்றோர்களே இல்லை. இசை மேதைகளுக்குத் திருவையாறு மாதிரி, தமிழ் மேதைகளுக்கு எங்க ஊரு. படிக்காதவங்ககூட பகல்ல விவசாயமும் இரவுல இலக்கியத்தையும் அறுவடை செய்வாங்க. அந்த அளவுக்குத் தமிழ்ப்பித்துப் பிடிச்ச பலர் வாழ்ந்த மண் இது’’ என்றவர் தலைவர்கள் கையொப்பமிட்ட பல ஆவணங்களை நம்மிடம் காண்பித்தார்.

இந்த ஊரைச் சேர்ந்த பலர், கவிஞர்களாக, மேடைப் பேச்சாளர்களாக, கட்டுரையாளர்களாக உலகெங்கும் தமிழ் பரப்பும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். தமிழ்ச் சபைகளை மட்டுமல்ல, தமிழ்நாட்டின் சட்டசபையையும் இந்த ஊரைச் சேர்ந்த புலவர்கள் இருவர் அலங்கரித்திருக்கிறார்கள்.

ரத்தினமணவாளன், ஆறுமுகம்
ரத்தினமணவாளன், ஆறுமுகம்

அறிஞர் அண்ணாவின் தலைமையில் 1967-ம் ஆண்டு அமைந்த சட்டப்பேரவையில், திருவையாற்றுத் தொகுதியிலிருந்து புலவர் முருகையன் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இவர், மேடைப்பேச்சில் வல்லவர். கம்ப ராமாயணம் குறித்து இவர் நிகழ்த்தும் உரைக்குத் தமிழ்நாடெங்கும் பெரும் ரசிகர் கூட்டம் இருந்தது. இவர் நற்றமிழ்ச் சங்கச் செயலாளராகவும் பண்புரிந்திருக்கிறார்.

அவரின் பேரனும் திருச்சி ஆண்டவர் கலைக்கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியரும் நற்றமிழ்ச் சங்கத்தின் தற்போதைய இணைச் செயலாளருமான சின்னதுரை நம்மிடம் பேசினார்.

‘`எங்க தாத்தா கையப் பிடிச்சு வளர்ந்ததால, சின்ன வயசுல இருந்தே தமிழ் படிக்கணும்னு ஆசை. கம்ப ராமாயணத்துல ஆராய்ச்சிப் படிப்பை முடிச்சிருக்கேன். கல்லூரியில வேலை பார்த்தாலும், கம்ப ராமாயணச் சொற்பொழிவுகளுக்கும் போயிட்டு இருக்கேன்’’ என்றவர், நற்றமிழ்ச் சங்கம் இயங்கிவரும் சன்மார்க்க சபைக் கட்டடத்துக்கு அழைத்துச் சென்றார்.

‘`இங்கேதான்  நற்றமிழ்ச் சங்கக் கூட்டம் நடக்கும். பெரியார், அண்ணா, கலைஞர், நெடுஞ்செழியன்னு இங்கே வந்து போன தலைவர்கள் எத்தனையோ பேர். கலைஞரோட தமிழ் ஆசிரியர் முத்துகிருஷ்ண நாட்டார் எங்க ஊர்க்காரர்தான். கலைஞர் ஒருமுறை இங்கே ஒரு கட்டடத் திறப்பு விழாவுக்கு வந்திருந்தார். அப்போ ‘என் கையால இந்தத் தமிழ்ச்சங்கக் கட்டடத்தைத் திறப்பதைவிட என் ஆசிரியர் கையால திறப்பதுதான் சரியா இருக்கும்’னு சொல்லி அவரையே திறக்கவெச்சார். அந்த அளவுக்கு, தலைவர்களுக்குப் பிடிச்ச ஊரா எங்க ஊர் இருந்திருக்கு. எங்க ஊர்ல மட்டும் பத்துக்கும் மேற்பட்ட புலவர் பெருமக்கள் வாழ்ந்திருக்காங்க’’ என்றவர், ஊரில் எதிர்ப்படும் அனைவரிடமும் மிக அன்பாகவும் கனிவாகவும் நலம் விசாரித்தபடியே ஒரு பாழடைந்த வீட்டுக்கு நம்மை அழைத்துச் சென்றார். அங்கு நமக்கு மற்றுமோர் ஆச்சர்யம் காத்திருந்தது.

இளங்காடு, தமிழ் வளர்த்த ஊர் மட்டுமல்ல; பசுமையைக் காக்கத் தன் வாழ்நாளெல்லாம் போராடிய `இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வாரின் சொந்த ஊரும்கூட. 

தற்போது அந்த வீட்டில், நம்மாழ்வாரின் அண்ணன் மகன் பூமிநாதன் வாழ்கிறார். அவரிடம் நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டோம்.

‘`எங்க அப்பா பொறியாளர் பாலகிருஷ்ணன், சித்தப்பா நம்மாழ்வார் ரெண்டு பேரும் இயற்கை ஆர்வலர்கள். எங்க அப்பாவும் ஊர்ல இயற்கை விவசாயம்தான் பார்த்தாரு. எங்க பெரியப்பா புலவர் இளங்கோவன் இந்தத் தொகுதியில இரண்டு முறை தி.மு.க சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்காரு. அவர் கணித ஆசிரியரா இருந்தாலும், தமிழ் மேல தீவிரப் பற்றுள்ளவர். சிலப்பதிகாரம், பாரதிதாசன் கவிதைகளில் எல்லாம் கைதேர்ந்தவர். நற்றமிழ்ச் சங்கப் பொறுப்பிலேயும் இருந்திருக்காரு. நான் எங்க அப்பா, சித்தப்பா வழியில விவசாயம் பார்த்துட்டிருக்கேன். நற்றமிழ்ச் சங்கச் செயல்பாடுகளிலும் கலந்துக்குவேன்’’ என்றார்.

அவரின் இல்லத்திலிருந்து வெளியேற, `பளிச்’ உடையில் நம்மிடையே அறிமுகமானார்கள் கவிஞர் நல்ல சின்னையாவும், பேராசிரியர் ஆறுமுகமும்.

அரசுப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றும் நல்ல சின்னையா, இதுவரைக்கும் நான்கு நூல்களையும் எழுதியிருக்கிறார். பள்ளியில் தமிழாசிரியர் விடுமுறை என்றால், மாணவர்கள் கொண்டாட்டமாக இருப்பார்களோ இல்லையோ, நல்ல சின்னையா கொண்டாட்டமாகிவிடுவார். தமிழ் வகுப்பெடுப்பதென்பது அமிழ்தைப் பருகுவது போன்றது. சின்னையா ஒரு பள்ளியிலிருந்து மற்றொரு பள்ளிக்கு மாற்றாலாகிச் செல்கிறார் என்றால் அவர் உடற்கல்வியில் மட்டுமல்ல, தமிழிலும் பட்டையைக் கிளப்புவார் என்கிற செய்தி அவருக்கு முன்பே அந்தப் பள்ளிக்குச் சென்றுவிடும். தான் மட்டுமல்லாமல், தன் மகன் வைரமுத்துவையும் கவிப்புலமையூட்டி வளர்த்துவருகிறார்.

இரா.முருகையன், சின்னதுரை
இரா.முருகையன், சின்னதுரை

பேராசிரியர் ஆறுமுகம், திருவெறும்பூர் அரசுக் கலைக் கல்லூரியில் தமிழ்த்துறையில் பணியாற்றுகிறார். நற்றமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும் இருக்கிறார். `கல்வெட்டியல் பாடக் குறிப்புகள்’, `இலக்கியக் கல்வியியல்’, `தொல்காப்பியமும் உளவியலும்’, `வேரும் விழுதும்’ என நான்கு புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

ஊரில் பெரும்பாலானவர்கள் ஒருவருக் கொருவர் உறவினர்கள் என்றாலும், பெரும்பாலும் அவர்களின் உரையாடல்கள் தமிழ் குறித்தே இருக்கின்றன.

25-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்து, பலமுறை `சிறந்த கட்டுரையாளர்’ விருதையும் பெற்றிருக்கிறார்.

`நாங்களும்  சளைத்தவர்கள் அல்லர்’, என ஆண்களுக்குச் சமமாக பேராசிரியைகளும், பள்ளித் தலைமை ஆசிரியைகளும், தமிழ் படித்து அரசு வேலைகளுக்குத் தேர்வெழுதும் பெண்களும் நிரவியிருக்கிறார்கள் இந்த ஊரில். 

இந்த ஊரில் பிறந்த பெண்கள் மட்டுமல்ல; இந்த ஊருக்குத் திருமணமாகி வந்து, பிறகு தமிழ் படித்து ஆசிரியர்களான பெண்களும் பலர் இங்கே இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரும், இளங்காட்டு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியருமான அமுதவல்லி நம்மிடம் பேசினார்.

``என் கணவர் முருகேசப்பிரபு, நற்றமிழ்ச் சங்கத்தின் பொருளாளரா இருக்கார். திருமணத்துக்கு முன்பே தமிழ்ப்பற்று இருந்தாலும், ஆசிரியர் பயிற்சி மட்டும்தான் முடிச்சிருந்தேன். திருமணத்துக்குப் பிறகு, என் கணவரோட உந்துதலாலதான் தமிழ் படிச்சேன். இந்த ஊருல அஞ்சு பேருல ஒருவர் தமிழ் படிச்சவங்களா இருப்பாங்க. ஆனா, அஞ்சு பேருமே தமிழைப் பற்றி அறிஞ்சவங்களா இருப்பாங்க. படிக்காதவங்ககூட கம்ப ராமாயண, சிலப்பதிகாரப் பாடல்களை, ஆழ்வார் பாசுரங்களையெல்லாம் சிறப்பாப் பாடுவாங்க. இந்த ஊரோட மகத்துவம் அப்படி...’’

இப்படி ஊரில் நாம் சந்தித்த பெரும்பாலானோர் ஏதோவொரு வகையில் தமிழ்த் தொண்டாற்றி வருகிறார்கள். பல அரிய வகைத் தமிழ் நூல்களையும் கடிதங்களையும் பத்திரமாகப் பாதுகாத்துவருகிறார்கள். டிஜிட்டல் யுகத்துக்கேற்ப நற்றமிழ்ச் சங்கத்தை அடுத்தகட்டத்தை நோக்கி நகர்த்துவதற்கான வேலைகளை எல்லோருமே செய்துவருகிறார்கள்.

தமிழ் படித்ததாலோ என்னவோ, ஊரில் அனைவரும் ஒருவருக்கொருவர் மிகுந்த மரியாதையோடு நடந்துகொள்கிறார்கள். யார், எங்கு, எந்தப் பதவியிலிருந்தாலும், ஊரில் அனைவரும் தமிழ்ப் பிள்ளைகளாக தமிழ்த்தாய்க்கு அருந்தொண்டாற்றி வருகின்றனர். ஊரில் பெரும்பாலானவர்கள் ஒருவருக்கொருவர் உறவினர்கள் என்றாலும், பெரும்பாலும் அவர்களின் உரையாடல்கள் தமிழ் குறித்தே இருக்கின்றன. அந்தளவுக்குத் தமிழ்க்காதலில் திளைத்து, தமிழை என்றும் இளமையோடு பார்த்துக் கொள்கிறது ‘இளங்காடு’ கிராமம்.

மாநிலங்களவை உறுப்பினரும் தி.மு.க-வின் கொள்கைபரப்புச் செயலாளருமான திருச்சி சிவாவின் பூர்வீக ஊரும் இளங்காடுதான். ஊர் குறித்த, தன் அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் அவர்.

trichy siva
trichy siva

``எங்களுக்குப் பூர்வீகம் இளங்காடுதான். எங்க தாத்தா காலத்துக்குப் பிறகு, நாங்க திருச்சிக்குக் குடிபெயர்ந்துட்டோம். ஆனா, எங்க குலதெய்வக் கோயிலுக்குக் குடும்பத்தோடு போவோம். எங்க ஊரோட சிறப்பு என்னன்னா, ஊர்ல இருக்கும் ஆண்கள், பெண்கள் எல்லாருமே சிறப்பாப் பாடுவாங்க. முன்னாள் எம்.எல்.ஏவா இருந்த முருகையன் எல்லா மேடைகளிலேயும் பாட்டு பாடிட்டேதான் பேசுவார். நானும்கூட நல்லாப் பாடுவேன். எங்க ஊரு மக்களுக்கு இயற்கையாகவே கிடைத்த ஞானம் அது.

அதேபோல எங்க ஊர்ல பிறந்த எல்லாருக்கும் தமிழார்வம் அதிகம். நற்றமிழ்ச் சங்கம்தான் அதற்குக் காரணம். பல்வேறு தலைவர்கள் அங்கே வந்திருக்காங்க. அவங்க கையெழுத்தையெல்லாம் நான் பார்த்திருக்கேன். அங்கே கலந்துகிட்டுக் கையெழுத்துப் போடும்போதுதான் வருஷத்தை எழுதும்போது, கடைசி இரண்டு எண்ணை மட்டும் எழுதாம மொத்தமா எழுதணும்னு கத்துக்கிட்டேன். உதாரணமா, 1919-ம் வருஷம் கையெழுத்திட்ட பிரதிகள் அங்கே இருக்கு. நூற்றாண்டுக்குப் பிறகு நான் அதைப் பார்க்கிறேன். வெறும் 19ன்னு எழுதியிருந்தா, அந்த உணர்வு எனக்குக் கடத்தப்பட்டிருக்காது. நான் எழுதும்போது ‘இன்னொரு நூறாண்டுக்குப் பிறகு என் கையெழுத்தை ஒரு தமிழன் பார்ப்பான்’னுதான் கையெழுத்திட்டேன். என்னுடைய தமிழார்வத்துக்கும் இசையார்வத்துக்கும் எங்க பூர்வீகம்தான் காரணமாக இருக்கு’’ எனச் சொல்லிச் சிலிர்க்கிறார் திருச்சி சிவா.