தமிழின் இலக்கியச் செழுமையை உலகறியச் செய்யும் வகையில் பொருநை இலக்கியத் திருவிழா தமிழக அரசு சார்பாக நெல்லையில் இன்று தொடங்கியது. இரண்டு நாள்கள் நடக்க உள்ள இந்தத் திருவிழாவில் நெல்லைக்குப் பெருமை சேர்க்கும் எழுத்தாளர்கள் பலரும் கலந்துகொள்ள இருக்கிறார்கள். இதன் தொடக்க விழாவில் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் எழுத்தாளர்கள் பங்கேற்றனர்.

இந்த விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வழியாகத் தொடங்கி வைத்துப் பேசுகையில், ”தமிழ்ச் சமூகம் இலக்கிய முதிர்ச்சியும், பண்பாட்டின் உச்சத்தையும் அடைந்த பெருமைக்குரிய சமூகம். கீழடியைத் தொடர்ந்து சிவகளை, கொற்கை என அகழ்வாய்வுகள் வழியாகவும் பல்வேறு முன்னெடுப்புகள் வழியாகவும் நமது தொன்மை அறிவியல் பூர்வமாக நிறுவப்படும். நம்முடைய பெருமையை அடுத்தத் தலைமுறைக்கு எடுத்துச் சென்று அறிவு சார் சமுகத்தை வார்த்தெடுக்கும் இலக்குடன் இலக்கியத் திருவிழாக்கள் நடைபெறவுள்ளன. தமிழின் இலக்கியச் செழுமைகளைப் போற்றும் விதமாக பொருநை, காவிரி, வைகை, சிறுவாணி, சென்னை என ஐந்து இலக்கியத் திருவிழாக்களை தமிழ்நாடு அரசு நடத்துகிறது” என்று பேசினார்.
விழாவில் பேசிய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், “நெல்லை என்றால் தியாக வரலாறு உள்ள பூமி, இந்த மண்ணில் பொருநை இலக்கியத் திருவிழா தொடங்கப்பட்டிருப்பது பெருமைக்குரியது. என்னுடைய 50 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் இது போன்ற விழாவை யாருமே நடத்தியதைப் பார்த்ததில்லை. அதனால் இந்த விழாவை நடத்தும் பள்ளிக் கல்வித்துறையைப் பாராட்டுகிறேன்” என்றார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், “இந்த இலக்கியத் திருவிழாவை நடத்துவதில் பெருமையாக இருக்கிறது. மொழியைக் காக்க மொழிப்போர் நடத்தவும் எங்களால் முடியும். மொழியைப் பெருமைபடுத்த இதுபோன்ற இலக்கிய நிகழ்வுகளையும் எங்களால் நடத்த முடியும். இந்தியாவுக்கே முன்னோடியான திட்டமாக இருக்கிறது இல்லம் தேடி கல்வித் திட்டம். மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் வசிக்கும் காணி மலைக் கிராமங்களிலும் இது செயல்படுத்தப்படுகிறது. அரசுப் பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல. அது பெருமையின் அடையாளம். அந்த அளவுக்கு கல்வியின் தரம் உயர்ந்திருக்கிறது” என்று பேசினார்.
விழாவில் கலந்துகொண்ட எழுத்தாளர் பவா செல்லத்துரை பேசுகையில், ”இலக்கிய விழா அரசு விழாவாக நடத்தப்படுவது மகிழ்ச்சியாக உள்ளது. அரசு விழாக்களுக்கும் இலக்கியவாதிகளும் இடையே நீண்ட இடைவெளி இருந்தது. அது இந்த பொருநை இலக்கியத் திருவிழா மூலம் குறைந்துள்ளது. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 5 நதிகளை அடிப்படையாக வைத்து இலக்கியத் திருவிழா நடத்தப்படுகிறது. இத்தகைய விழாக்களின் மூலம் இலக்கியவாதிகளின் படைப்புகள் உச்சத்தை அடையும்” என்றார்.

சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் வண்ணதாசன் பேசுகையில், ”பொருநை நதி, தான் செல்லும் இடங்களை விடுத்து ஒரு அரங்கில் வந்து இங்கே சங்கமமாகியிருக்கிறது. இந்த அரசு வந்த பிறகு எழுத்தாளர்களைக் கௌரவித்து வருகிறது. கி.ராஜநாராயணன் மறைவுக்கு அரசு மரியாதையை வழங்கி, அவருக்கு மணிமண்டபம் அமைத்துள்ளது. மாவட்டம் தோறும் புத்தகக் கண்காட்சி நடத்தி வருகிறது, இலக்கியவாதிகளுக்கு கனவு இல்லம் தந்துள்ளது” என்று பெருமையுடன் குறிப்பிட்டார்.
பொருநை இலக்கியத் திருவிழா அரங்கில் பேசிய கேரளா மாநிலத்தைச் சேர்ந்த எழுத்தாளர் கல்பட்டா நாராயணன், ”அனைத்துச் சிறப்புகளையும் கொண்ட தமிழகத்தில், தமிழ் சாகித்ய அகாடமி விருது இல்லை. அதனால் சுந்தர ராமசாமி போன்ற பெரிய எழுத்தாளர்களுக்குக் கூட விருது கிடைக்காத நிலைமை உள்ளது. அதனால் தமிழுக்கான சாகித்ய அகாடமி விருதை தமிழக அரசு உருவாக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
தொடர்ந்து இரு தினங்களுக்கு 169 எழுத்தாளர்கள் பங்கேற்கும் 36 அமர்வுகள் நடக்க இருக்கின்றன.