எழுத்தாளர் இமையம் அவர்களின் இலக்கியத் தரம் குறித்து, எழுத்தாளர் வண்ணநிலவன் கடும் விமர்சனத்தை தனது முகநூல் பக்கத்தில் முன்வைத்தார். `கோவேறு கழுதைகள்', `பெத்தவன்', `செல்லாத பணம்' ஆகிய நூல்களை எழுதியவர் இமையம்.
கடல்புரத்தில், ரெயினீஸ் ஐயர் தெரு ஆகிய நூல்களை எழுதியவர் வண்ணநிலவன். மூத்த எழுத்தாளர்களான இவர்கள் மத்தியில் எழுந்திருக்கும் சர்ச்சை இலக்கிய வட்டத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

இதன் ஆரம்பப் புள்ளியாக முகநூலில் வண்ணநிலவன், வரட்டுத்தனமான இலக்கியமற்ற எழுத்துகளுக்கு விருதுகள் கொடுக்கிறார்கள் என்று இமையத்தின் எழுத்துகளை விமர்சனம் செய்திருந்தார். அதற்கு பதிலளித்த இமையம், `அவரது வாசிப்புத் திறனை அறிந்து கொண்டேன், எனது தரமற்ற நூல்களைப் படித்து நேரத்தை விரயம் செய்ய வேண்டாம்' என்று தனது முகநூல் பக்கத்தில் பதில் அளித்திருந்தார்.

இதற்கு மீண்டும் பதில் சொல்வது போல வண்ணநிலவன், `இமையத்தின் எழுத்துகளைப் பூமணி, டி.செல்வராஜ், பாமா ஆகியோரை தலித் எழுத்தாளர்கள் எனக் குறிப்பிட்டு அவர்களோடு இமையத்தின் எழுத்தை ஒப்பிட்டு மோசமான எழுத்து' எனக் குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து எழுத்தாளர் இமையம், `தலித் எழுத்தாளர்களோடு மட்டுமே என்னை ஒப்பிட்டு எழுதியது ஏன்? பிற இனத்து எழுத்தாளர்களோடு ஒப்பிட்டு எழுதாதது ஏன்? உங்களுடைய இலக்கிய மேதைமை பார்வையில் என் அளவுக்குத் தரம்கெட்ட எழுத்தாளர் பிற இனத்தில் ஒருவர்கூட இல்லை. அப்படித்தானே?' என்று அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார். இந்த விவகாரம் குறித்து இருவரிடமும் தொடர்பு கொண்டு பேசினேன். முதலாவதாக இமையம் கூறியது,

`நிகழ்காலச் சம்பவங்களைச் சிறுகதைகளாகவும் எழுதி, ஆஸ்பத்திரி நாவலுக்காக சாகித்ய அகாடமி விருதும் வாங்கிய ஒரு எழுத்தாளர், இன்னொரு ஆஸ்பத்திரி நாவலையும் தினசரிப் பத்திரிகைபோல் வறட்டு நடையில் எழுதிக் குவிக்கிறார்…’ என்று எழுதியதைப் படித்த பிறகும் அமைதியாகத்தான் இருந்தீர்களா?

``15, 16 நாள்கள் அமைதியாகத்தான் இருந்தேன். எதிர்வினையாற்றக்கூடாது என்றுதான் நினைத்தேன். வண்ணநிலவனுடைய தொலைபேசி எண்கள் என்னிடம் இல்லை. இருந்திருந்தால் அவரிடம் பேசியிருப்பேன். எண்கள் இல்லாததால், ‘தரமற்ற என்னுடைய எழுத்துகளைப் படித்து உங்களுடைய நேரத்தை வீணாக்க வேண்டாம்’ என்றுதான் எழுதியிருந்தேன். அவர் தன்னுடைய பதிவில், ‘என் எழுத்துகள் மீது அவ்வளவு காழ்ப்பைக் காட்டியும் – நான் ஒரு சொல்கூட அவர் மனம் புண்படும்படி எழுதவில்லை. பிறர் மனம் நோகும்படி எழுதுகிறவன் எழுத்தாளன் இல்லை.”
1994-ல் உங்களுடைய `கோவேறு கழுதைகள்’ நாவல் வெளிவந்தது. அதிலிருந்து உங்கள்மீதும், உங்களுடைய எழுத்துகளின் மீதும் கடுமையான விமர்சனங்கள் வந்திருக்கின்றன. அப்போதெல்லாம் எதிர்வினையாற்றாத நீங்கள், இப்போது எதிர்வினையாற்றியிருப்பது ஏன்?

” ‘கோவேறு கழுதைகள்’ நாவலுக்கு மட்டுமல்ல, ‘ஆறுமுகம்’ நாவலுக்கும் அப்படித்தான் வந்தன. ராஜ்கௌதமன்தான் அதிகமாகத் தாக்கி எழுதினார். தலித் விரோத எழுத்து என்றுகூடச் சாடினார். தலித் இலக்கியம் குறித்து அப்போது விரிவான உரையாடல்கள் நடந்துகொண்டிருந்தன. ஒரு புத்தகத்தை ஆயிரம் பேர் படிப்பார்கள், ஆயிரம் விதமாகக் கருத்து சொல்வார்கள். ஆயிரம் பேருக்கும் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியுமா என்ற எண்ணத்தில் அமைதியாகப் போய்விடுவேன். இப்போதும் அப்படிப் போய்விடத்தான் விரும்பினேன். இலக்கியச் சர்ச்சையில் ஈடுபடுவது, அதன் மூலமாக வெளிச்சம் பெறுவது என்பது எழுத்தாளனுக்கு ஏற்ற செயல் அல்ல. மார்ச் 23, 24 ஆகிய தேதிகளில் திரு. வண்ணநிலவன் தன்னுடைய முகநூலில் பதிவிட்ட கருத்திற்கு நான் ஏப்ரல் 9ஆம் தேதிதான் – ‘தரமற்ற புத்தகத்தைப் படித்து உங்களுடைய நேரத்தை வீணடிக்க வேண்டாம்’ என்ற அளவில் மிகவும் சாதாரணமாக எழுதியிருந்தேன். அதற்கு அவர் ஏப்ரல் 10இல் எழுதியிருந்த குறிப்புதான் என்னைச் சீண்டிவிட்டது. என் உயிர்நிலையில் ஒருவர் எட்டி உதைக்கும்போது என்னுடைய சகிப்புத் தன்மைக்கும் ஒரு அளவு இருக்கத்தானே செய்யும்? தேவையில்லாமல் பேசுவது, தேவைக்கு அதிகமாகப் பேசுவது என்னுடைய இயல்பில் இல்லை. அதே மாதிரி இலக்கியச் சர்ச்சையில் ஈடுபடுவதும் என்னுடைய இயல்பில் இல்லை.
‘தலித் எழுத்தாளர்களிலேயே மிகவும் கீழான எழுத்தாளர், நளினமான நடையில் எழுத முடியுமா? தகர டப்பாவில் கற்களைப் போட்டுக் குலுக்குவது போன்ற வறட்டு நடைக்குச் சொந்தக்காரர், தினசரி பேப்பர் தமிழில் எழுதுகிறவர்’ என்று வண்ணநிலவன் எழுதிய பிறகுதான் உங்களுக்குக் கோபம் வந்ததா?

”கோபம் வரவில்லை. கேள்விதான் வந்தது. 50-60 ஆண்டுகளாகப் படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டுமிருக்கிற ஒரு இலக்கியவாதியிடமிருந்து இப்படி ஒரு ஒப்பீடா என்ற கேள்வி. 50-60 ஆண்டுகளாகப் படித்துக்கொண்டும், எழுதிக்கொண்டுமிருந்த ஒரு எழுத்தாளருக்கு அவர் படித்த புத்தகங்களும் அவர் எழுதிய எழுத்துகளும் அவருக்கு எதையும் கற்றுத் தரவில்லையே என்ற வருத்தம்தான் ஏற்பட்டது. ‘ஆஸ்பத்திரி கதை’ என்ன வார்த்தை இது? மருத்துவமனை பற்றி எழுதக் கூடாதா? 1940-50களில் ஆட்டுரலில் இட்லிக்கும் தோசைக்கும் மாவாட்டியது பற்றி எழுதப்படுவது மட்டும்தான் கதைகளா? இலக்கியப் படைப்புகளா?”
அவர் ஒப்பிட்ட விதம்தான் உங்களைச் சீண்டியதா? அந்த ஒப்பீடு எதைக் காட்டுகிறது?
”என்னுடைய நாவல்கள் பற்றி, சிறுகதைகள் பற்றி அவர் எவ்வளவு காட்டமாக வேண்டுமானாலும் எழுதலாம். எழுத்தாளனே இல்லை என்றுகூட அவர் சொல்லலாம். அப்படிச் சொல்வதற்கு அவருக்கு உரிமை இல்லை என்று சொல்ல முடியாது. ஒரு சிறுகதை, நாவல் எப்போது அச்சிட்டு விற்பனைக்கு வருகிறதோ, அப்போதே அது கிட்டத்தட்ட பொதுச் சொத்தாகிவிடுகிறது. யார் வேண்டுமானாலும் எந்தக் கருத்தையும் சொல்லலாம். ஏன் என்று கேட்பது நாகரிகமற்ற செயல் என்பது என் கருத்து. சாதியப் பட்டியலைப் போட்டு, அதில் ஒப்பிட்டதுதான் அவர் யார் என்று காட்டியது. அவருடைய இலக்கிய ரசனை என்னவென்பது புரிந்தது. அவர் செய்திருந்த ஒப்பீடு, எந்த விதத்திலும் நியாயமானது அல்ல. 1985இலிருந்து அவருடைய நாவல்களை, சிறுகதைகளைப் படித்தவன். இன்றும் படிக்கிறவன், இன்றும் என் மதிப்பீட்டில் அவர் நல்ல எழுத்தாளர்தான்.”
வண்ணநிலவனின் ஒப்பீட்டையும் அதற்கான மனநிலையையும் எப்படிப் புரிந்துகொள்கிறீர்கள்?
”அவருடைய இந்த ஒப்பீடு, சாதிய மனநிலையைத்தான் காட்டுகிறது. ஒன்றிரண்டு எழுத்தாளர்களின் பெயர்களையாவது கருணையோடு அவர் சேர்த்திருக்கலாம். தலித் எழுத்தாளர்களின் பட்டியலில் பிற சமூகத்து எழுத்தாளர்களைப் பெயருக்குக்கூட எழுத, ஒப்பிட அவருக்கு மனமில்லை. இந்த ஒப்பீடு பிற சமூகத்து எழுத்தாளர்கள்தான் முதல் தரமான எழுத்தாளர்கள், அவர்களுக்கடுத்த நிலையில்தான் தலித் எழுத்தாளர்கள், தலித் எழுத்தாளர்களிலேயே நான்தான் தரமற்ற எழுத்தாளன். இதுதான் அவருடைய இலக்கிய மதிப்பீடு. படைப்பின் தரம் சார்ந்து ஒப்பீடு செய்வதா? சாதி சார்ந்து ஒப்பீடு செய்வதா? இந்த ஒப்பீடு சாதிய மனோபாவத்தைக் காட்டுகிறது. சாதிப் பார்ப்பவன், சாதிப் பெருமையை எழுதுகிறவன் எழுத்தாளனா, சாதியின் இழிவுகளை எழுதுகிறவன் எழுத்தாளனா? அவசரத்தில் வண்ணநிலவன் தன்னுடைய முகத்தைக் காட்டிவிட்டார். அவ்வளவுதான். தமிழ் எழுத்தாளர்கள் எல்லோருமே சாதிய மனோபாவம் அற்றவர் என்று சொல்ல முடியாது. இலக்கியக் கூட்டத்தில் என்னை அறிமுகப்படுத்தும்போது, ‘தலித் எழுத்தாளர்களில் இவர் முக்கியமானவர்’ என்று எப்போது சொல்கிறீர்களோ அப்போதே நீங்கள் யார் என்று காட்டிவிடுகிறதல்லவா. இதில் தனிமனிதர்களைக் குற்றம் சொல்வதைவிட, நம்முடைய சமூக மனோபாவத்தை, கட்டமைப்பைத்தான் குறைசெல்ல வேண்டும்.”
பூமணி, டி. செல்வராஜ், பாமா, சிவகாமியோடு ஒப்பிட்டது சரியில்லை என்று சொன்னதும், ‘ஜெயகாந்தன், தி. ஜானகிராமன், சுந்தர ராமசாமி போன்ற எழுத்தாளர்களைவிடவும் மிகமிக மிகச்சிறந்த எழுத்தாளர் இமையம்தான்’ என்று வண்ணநிலவன் எழுதியிருக்கிறாரே...

”தலித் எழுத்தாளர்களோடு மட்டும் ஒப்பிட்டு எழுதியிருந்தது அவருடைய மனதிலிருந்து எழுதியது. அதுதான் நிஜம். ஜெயகாந்தன், தி. ஜானகிராமன், சுந்தர ராமசாமி போன்றவர்களைவிடவும் மிகமிகச் சிறந்த எழுத்தாளர் என்று சொன்னது – என்னைப் பெருமைப்படுத்த அல்ல. சிறுமைப்படுத்த. தலித் எழுத்தாளர்களோடு ஒப்பிட்டதைவிடவும் கீழ்த்தரமான செயல். இரண்டு ஒப்பீட்டிலும் தெரிவது அவரது மனநிலைதான். வன்மம்தான். இந்த மனநிலை இன்று, நேற்று ஏற்பட்டதல்ல. திடீரென்று ஒருவருக்கு இந்த மனநிலை வந்துவிடாது.
ஜெயகாந்தனோடு, தி. ஜானகிராமனோடு, சுந்தர ராமசாமியோடு ஒப்பிட்டது – உனக்குப் பிச்சைபோடுகிறேன் என்ற தொனியில். அந்தத் தொனி மிகவும் கேவலமானது. இழிவானது. நான் யாருக்கும் மேலான எழுத்தாளனுமல்ல, யாருக்கும் கீழான எழுத்தாளனுமல்ல.
ஒரு படைப்பை மற்றொரு படைப்போடு ஒப்பிடலாம். அந்தந்தப் படைப்புகளை எழுதிய எழுத்தாளர்களை – சாதி சார்ந்த முறையில் ஒப்பிடக் கூடாது. அப்படி ஒப்பிடுவது அசிங்கம். அப்படி ஒப்பிடுகிற மனம் – எழுத்தாளருக்கான மனமல்ல. சிந்தனை அல்ல.”
உங்களை எப்படி அழைக்க வேண்டும்? உங்களுடைய படைப்புகளை எப்படி அடையாளப்படுத்த வேண்டும்?
”தமிழ் மொழியின் எழுத்தாளன். தமிழ் மொழியில் எழுதப்பட்ட படைப்புகள்.”
வண்ணநிலவன் மட்டும்தான் உங்களைத் தலித் எழுத்தாளர்களின் பட்டியலில் சேர்த்துள்ளாரா?
”அவர் மட்டும்தான் என்று சொல்ல முடியாது. ஜெயமோகன் எப்போதெல்லாம் எழுத்தாளர்களின் பட்டியலைச் சொல்கிறாரோ அப்போதெல்லாம் பிற சமூகத்து எழுத்தாளர்களை ஒரு பட்டியலாகவும், தலித் எழுத்தாளர்களை ஒரு பட்டியலாகவும் எழுதுவார், பேசுவார். தவறிக்கூடப் பிற சமூகத்து எழுத்தாளர்களின் எழுத்துகளோடு, தலித் எழுத்தாளர்களின் படைப்புகளை ஒப்பிட்டுப் பேச மாட்டார். இதுதான் அவருடைய இலக்கியக் கோட்பாடு. எனக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டபோது, ஆங்கில இந்து நாளிதழில் என்னைப் பற்றி எழுதியபோது, முதல் வரியே ‘தலித் எழுத்தாளர்களுக்குத் தொடர்ந்து சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றுதான் ஆ.இரா. வேங்கடாசலபதி எழுதியிருந்தார். ஆரம்பிக்கும்போதே இப்படி எழுத வேண்டும் என்று எப்படித் தோன்றுகிறது. வண்ணநிலவனோ, ஜெயமோகனோ, ஆ.இரா. வேங்கடாசலபதியோ திட்டமிட்டுச் சொல்கிறார்கள், திட்டமிட்டு எழுதுகிறார்கள் என்று சொல்வதைவிடவும், அவர்களுடைய மனம், வாழ்க்கை முறை அப்படித்தான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இதற்குத் தனிமனிதர்களைக் குற்றம் சொல்வதா, சமூகக் கட்டமைப்பைக் குற்றம் சொல்வதா?
இதில் வேதனையான விஷயம் என்னவென்றால், சாதிய அரசியல் கட்சித் தலைவர்கள், சாதியவாதி என்று அடையாளப்படுத்திக்கொண்டவர்கள், சாதியை முன்னிலைப்படுத்திப் பேசுவது இயல்பானது, மன்னிக்கத் தக்கது. புரட்சி செய்கிறேன், புரட்சியாக எழுதுகிறேன், அன்பை, கருணையை, மனித நேயத்தை எழுதுகிறேன், உன்னத இலக்கியத்தைப் படைக்கிறேன் என்று சொல்கிறவர்கள் சாதியைப் பற்றிப் பேசுவதுதான் விநோதமானது. இதுதான் நம்முடைய தமிழ் இலக்கியச் சூழலின் நிலைமை.”

இதற்கு என்னதான் தீர்வு என்று நினைக்கிறீர்கள்?
”சமூக மனமாற்றம்தான் தீர்வு. என்னுடைய சாதியைப் பற்றி பிறர் எப்படி இழிவாகப் பேசக் கூடாதோ, அதே மாதிரி வண்ணநிலவனின் சாதியைப் பற்றி இழிவுபடுத்திப் பேசுவதற்கும் யாருக்கும் உரிமையில்லை. நாம் இலக்கியவாதிகள் என்றால் நாம் இலக்கியத்தைப் பற்றி மட்டும்தான் பேச வேண்டும். சாதியவாதிகள் சாதியைப் பற்றிப் பேசட்டும். மதவாதிகள் மதத்தைப் பற்றிப் பேசட்டும். மனிதர்களுக்கு இருக்கவேண்டிய குணங்களில் முதன்மையானது சகிப்புத்தன்மைதான். சராசரி மனிதர்களுக்கு இருக்கவேண்டிய குணமே புனிதமான எழுத்தாளர்களிடமே இல்லை என்றால் என்ன செய்வது?”
வண்ணநிலவனின் இலக்கிய விமர்சனமா, தனிமனிதத் தாக்குதலா?
”தனிமனிதத் தாக்குதல்தான். பிறப்பால் தலித்தாக இருக்கிறவர்களுக்கு எழுதத் தெரியாது என்று மறைமுகமாகச் சொல்வதுதான். 1994இல் இருந்து கத்திக்கொண்டேயிருக்கிறேன், என்னைத் தலித் எழுத்தாளர்கள் என்று சொல்லாதீர்கள். தமிழ் மொழி எழுத்தாளன் என்று சொல்லுங்கள் என்று. யாரும் கேட்பதாக இல்லை. தமிழ்நாட்டில், இந்தியாவில் யாராலும் சாதியை விட்டு ஒரு கணம்கூட இருக்க முடியவில்லை என்பது திரும்பத்திரும்ப நிரூபணமாகிக்கொண்டே இருக்கிறது.
உலக இலக்கியத்தைப் படித்தேன் என்று பெருமை பேசுகிற எழுத்தாளர்கள், அந்த இலக்கியவாதிகள் எந்தச் சாதிக்காரன் எழுதினான், எந்த மதத்துக்காரன் எழுதினான் என்றா பார்க்கிறார்கள்? தமிழ்நாட்டு இலக்கியத்தைப் படிக்கும்போது மட்டும் ஏன் சாதி பார்க்கிறார்கள்? சாதியப் படைப்பாகப் பார்க்கிறார்கள்? இது விநோதமானது.
1995இல் தினமணியில் கோவேறு கழுதைகள் குறித்து இப்படித்தான் வன்மத்தைக் கக்கியிருந்தார். நான் நல்ல எழுத்தாளனாக இல்லாமலிருக்கலாம். நல்ல மனிதனாக இருக்க விரும்புகிறேன். யாரோடும் பகையில்லாமல் வன்மம் இல்லாமல். என்னளவில் அதுதான் சிறந்த இலக்கியம்.
”இலக்கிய உலகிற்குப் பாராட்டு, முதுகு ஷொட்டு, தட்டிக் கொடுத்தல் மட்டுமே தேவை. என்னை, என் எழுத்தை விமர்சிக்கிறாயா, உன்னை விட்டேனா பார் என்பதுதான் நிலைப்பாடாக இருக்கிறது. இலக்கியம் என்று எதையாவது கிறுக்கிவிட்டு ‘மாலை போடு’ என்று சகலரும் கழுத்தை நீட்டுகிறார்கள். சுயமோகிகளை என்ன செய்ய முடியும்” என்று வண்ணநிலவன் எழுதியிருக்கிறாரே ?
”அவர் எதையாவது எழுதிவிட்டுப் போகட்டும் விடுங்கள். எது இலக்கியம், எது இலக்கிய விமர்சனம், மாலை போடு என்று கேட்பது யார், சுயமோகி யார் என்பதா இப்போது கேள்வி? இலக்கிய விமர்சனம் என்ற போகிறபோக்கில் அருவருக்கத்தக்க வகையில் எழுதுவதை நாம் என்ன செய்ய முடியும்? கேட்கிற கேள்விக்குப் பதில் சொல்லாமல் வேறு எதைஎதையோ பற்றிப் பேசுவதற்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. அண்மையில்தான் அவர் விளக்கு விருது பெற்றதுபோது மாலை போட்டுக்கொண்டிருந்தார். தனிமனிதத் தாக்குதல் வேண்டாமே. ஒருவருக்கொருவர் தரம் தாழ்ந்து பேசுவதும், என்னுடைய உன்னுடைய படைப்பையும் ஒப்பிட்டுப் பார்க்கலாமா, எது சிறந்த படைப்பு என்று பார்க்கலாமா என்று சவால்விடுவதா எழுத்தாளர்களின் வேலை.
‘அறிவைத் தேடிப்போகையில் நாம் எவ்வளவு தூரம் ஞானத்தை இழந்திருக்கிறோம், தகவல்களைத் தேடிப்போனதில் நாம் எவ்வளவு தூரம் அறிவை இழந்திருக்கிறோம்’ என்ற டி.எஸ். எலியட்டின் வார்த்தைகளோடு நிறுத்திக்கொள்கிறேன்.”

இதே கேள்விகளை முன்வைத்து வண்ணநிலவனைத் தொடர்பு கொண்டு பேசினேன்.
”60 ஆண்டுக்கால வாசிப்பு அனுபவத்தில் எனக்குத் தோன்றியதைக் கூறினேன்” என்றார். தலித் என அடையாளப்படுத்தி எழுதியதைக் குறித்த கேள்விக்குப் பதிலளிக்க மறுத்துவிட்டார். தனது கருத்துகளை விரைவில் ஒரு கட்டுரையில் விவரிக்கவிருப்பதாகச் சொன்னதோடு முடித்துக்கொண்டார்.