சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி தற்போது திரைப்பட பின்னணி பாடகியாக இருப்பவர் பிரகதி. அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த வாரம் வித்தியாசமான ஹேர் ஸ்டைலுடன் தனது புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். இதற்கு கருத்து என்கிற பெயரில் பலரும் மிக மோசமாக எதிர்வினை ஆற்றியிருக்கின்றனர். ”ஏன் நீங்கள் உங்களை அசிங்கப்படுத்தி கொள்கிறீர்கள்?” என்பதில் தொடங்கி ‘’மனநலம் பாதித்து விட்டதா?’’ என்பதுவரை பல கமென்ட்கள்.
புறத்தோற்றம் மட்டுமல்ல, திரைப்பட பெண் பிரபலங்கள் அரசியல் பேசினால், எழுத்துத்துறையில் பெண்கள் முன்னேறும்போது, பெண்களுக்கு விருது போன்ற அங்கீகாரங்கள் கிடைக்கும் போதெல்லாம் அவர்கள் ‘நார்மலாக’ இல்லை என ஆண்கள் பதைபதைத்துப் போகிறார்கள்.
பெண்ணின் புற தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதாகத்தான் இச்சமூகம் இன்னமும் இருந்து கொண்டிருக்கிறது. உண்மையில் அது பெண்கள் மேல் திணிக்கப்படும் வன்முறை. ஒரு பெண் புறத்தோற்றத்தில் தன்னை நன்றாக ‘Present’ செய்பவராக இருக்க வேண்டும், ஆண்களுக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும், ஆணைவிட பெண்ணுக்கு அறிவு குறைவாக இருக்க வேண்டும், அவள் எவ்வளவு திறமை உடையவளாக இருந்தாலும் வீட்டுக்குள் இருக்கவேண்டும் என்பதெல்லாம் பெண்களின்மீது நேரடியாகவும், மறைமுகமாகவும் வைக்கப்படும் எதிர்பார்ப்புகள்.

சமூகத்தின் அத்தகைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டிய தேவை தங்களுக்கு இல்லை என்பதை உணர்ந்து வெளியேறும் பெண்களை கண்டு ஆண்கள் பதற்றமடைகிறார்கள். அதற்கு எதிர்வினையாக ஆண்கள் அவர்களின் அறிவை மட்டம் தட்ட முயற்சி செய்கிறார்கள்.
சமூக வலைதளங்களில் திடீர் பிரபலமாவதற்கு மக்கள் கையில் எடுக்கும் எளிய ஆயுதம் மனிதர்கள் பற்றிய உளவியல் கருத்துகள். அதிலும் ஆண்கள் சிக்மன்ட் ஃப்ராய்டாகவே தன்னை நினைத்துக் கொண்டு பெண்களை பற்றி விடாமல் ஃபேஸ்புக், ட்விட்டரில் எழுதித் தள்ளுகிறார்கள். அந்த வரிசையில் கடந்த வாரம் ஒருவர் ஆண்களை விட பெண்கள் சைக்கோத்தனமான காரியங்கள் செய்யக் கூடியவர்கள் என்று எழுதியிருக்கிறார். அதை வெறுமனே சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள் அல்லவா? அதற்காக அவர் என்னவெல்லமோ குட்டிக்கரணம் அடித்திருக்கிறார்கள்.
முதலில் ஆண்கள் எல்லோருமே சைக்கோக்கள் என்பதுபோல எழுதி அதன்பின் ஆணைவிட பெண் இன்னும் மோசமான சைக்கோபாத் என்பதில் வந்து முடித்திருக்கிறார். அடித்து துன்புறுத்தி, கொலைவரை செய்யும் ஆண்களைவிட, எதிராளியின் மீது வதந்தி பரப்பி அவர்கள் பிம்பத்தை உடைக்கும் பெண்கள்தான் ஆபத்தான சைக்கோக்கள் என்கிறார் அவர். அத்துடன் நில்லாமல் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் எல்லோருமே மன வியாதிக்காரர்கள் என்பதையும் அதில் குறிப்பிட்டிருக்கிறார்.
மனைவி, காதலி, அலுவலகத்தில் மேலதிகாரி என யாராவது ஒரு பெண்ணிடம் கருத்து வேறுபாடு அல்லது சண்டை இருப்பவர்கள் இதுபோன்ற பதிவுகளை அப்பெண்களுடன் பொருத்திப் பார்த்து மகிழ்ந்து ஆஹா, ஓஹோ என்று ஆதரவு தெரிவிக்கிறார்கள்.
யாரோ ஒருவரால் பாதிக்கப்படும்போது மொத்தமாக அவர்கள் சார்ந்த பாலினம், சாதி, இனம், மதம் ஏதாவது ஒன்றோடு தொடர்புபடுத்தி ‘’அவர்கள் எல்லோருமே அப்படித்தான்’’ என பொதுமைப்படுத்துதல் மனித இயல்பு. அதுபோல யாராவது ஒரு பெண்ணால் பாதிக்கப்பட்ட ஆண்கள் மொத்த பெண்ணினமே இப்படித்தான் என்பதுபோல் முடிவுரை எழுதுவது இலக்கியம், திரைப்படங்கள், பாடல்கள் என அந்தக் காலம் முதலே நடந்து வருகிறது.

தமிழர் பண்பாட்டில் Expiry ஆகாமல் எப்போதும் ரசிகர்களை தக்க வைத்துக் கொள்ளக்கூடிய இரண்டு நகைச்சுவை தலைப்புகள் உள்ளது. #WifeJokes மற்றும் உப்புமா ஜோக்ஸ். தன் மீது வீசப்படும் கேலிகளை சட்டை செய்யாமல் உப்புமா நாள்தோறும் பெரும்பாலான குடும்பங்களில் ஒருவேளை உணவாக தன் இருப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது. உப்புமாவின் நிலையைவிட மோசமானதாக இருக்கிறது தங்களைப் பற்றிய மோசமான கேலிகளில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியாமல், தங்கள் இருப்பையும் தக்க வைத்துக்கொள்ள முடியாமல் தவிக்கும் மனைவிகளின் நிலை.
ஆரம்பக் காலத்தில் பெண்களின் சமையல் பற்றி அதிக நகைச்சுவைகள் பத்திரிகைகளில் வந்துகொண்டிருந்தன. குறிப்பாக மனைவி செய்யும் மைசூர்பாகுவை உடைக்க சிரமப்படும் கணவன் கதாபாத்திரம் இல்லாத தீபாவளி சிறப்பிதழ்களே இல்லை எனச் சொல்லலாம்.
பிறகு பெண்கள் எந்த நேரமும் சண்டைக்கு தயாராக இருப்பவர்கள் போலவும், பெண்களுக்கு வாகனம் ஓட்டத் தெரியாது, பொதுவெளியில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அறிவு கிடையாது, திருமண வாழ்க்கை ஆணை அதிகம் சிரமத்திற்கு ஆளாக்குகிறது மற்றும் ஆண்கள் மனைவியிடம் அடி வாங்குவது போன்ற காட்சிகள் நகைச்சுவையாக திரைப்படங்களிலும், பத்திரிகைகளிலும் வரத் தொடங்கின. நிஜ வாழ்க்கையில் ஆண்கள் பெண்களை அடித்து துன்புறுத்தும் நிகழ்வுகளே அதிகம் என்றாலும் இத்தகைய போலி பிம்பம் சமூக வலைதளங்களில் இன்று நகைச்சுவையின் பேரில் தீவிரமாக கட்டமைக்கப்படுகிறது. மிக சாதாரணமாக நாம் சிரித்துக் கடக்கும் இத்தகைய நகைச்சுவைகள்தான் பெண்களை சைக்கோ என சொல்வதற்கும், பெண்களுக்கு அறிவில்லை என்று சொல்வதற்கும் அடிப்படை.
“ஆண் படைப்பாளிகளில் அனைவரும் சிறப்பாக எழுத கூடியவர்கள்தான். ஆனால் பெண்களில் பலர் சொல்லும்படி எதுவுமே எழுதாமல் பலவகை உத்திகள் மூலம் ஊடக பிம்பங்களாக ஆனவர்கள். ஆண்கள் எழுதித்தான் நிற்க வேண்டியிருக்கிறது. பெண்களுக்கு பெண்களாக தங்களை முன்வைத்தாலே இடம் கிடைத்துவிடுகிறது.” 2014-ல் ஒரு மூத்த எழுத்தாளர் வெளியிட்டிருந்த சிறந்த இளம் படைப்பாளிகளின் பட்டியல் பற்றி இப்படி விமர்சனம் எழுதியிருந்தவர் வேறு யாருமல்ல, தமிழின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவரான ஜெயமோகன்.

பெண்கள் மீது இருக்கும் எண்ணமும், பெண் படைப்பாளிகளுக்கு தமிழ் இலக்கிய சமூகம் அளிக்கும் ‘அளப்பரிய’ ஆதரவும் பற்றி தெரிந்து கொண்டது இந்த நிகழ்வில்தான். இது பெண்கள் எழுதுவதை, பெண் சிந்தனையை ஏற்றுக்கொள்ள முடியாத காழ்ப்புணர்ச்சி அன்றி வேறென்ன? பெண் என்ன எழுதினாலும் அவள் பெண்ணாக இருப்பதாலேயே பேஸ்புக்கில் லைக் கிடைக்கிறது என்று சாதாரணமாக ஆண்கள் சொல்லக் கேட்டிருக்கலாம். அந்த காழ்ப்புணர்ச்சிக்கு தீவிர இலக்கிய விமர்சன முலாம் பூசியதுதான் ஜெயமோகனின் இந்த கூற்று.
அறிவு தளத்தில் செயல்படும் பெண்களை முடக்க அவர்களின் மனநலத்தை கேள்விக்கு உள்ளாக்குகிறார்கள். மற்ற பெண்களைப் போல அவர்கள் ‘நார்மலாக’ இல்லை எனும் முடிவுக்கு உடனடியாக வருவது ஆண்களின் பதற்றத்தை சிறிது தணிப்பதாக இருக்கிறது போலும். தனிப்பட்ட வாழ்வு குறித்த அவதூறுகளை பரப்புவதன் மூலம் பெண்களின் சுதந்திரத்தின் மீது முதல் கல்லை எறிகிறார்கள்.
”பெண்களுக்கு பெண்களாக தங்களை முன்வைத்தாலே போதும்” எனும் ஜெயமோகனின் கூற்று அவரை தீவிரமாக ஆதரிக்கும் மற்றும் அவரால் அங்கீகரிக்கப்படும் பெண் படைப்பாளிகளுக்கும் பொருந்தும்தானே? அவர்கள் இதைப்பற்றி என்ன பேசியிருக்கிறார்கள் என தேடிப்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.
தன்னை இலக்கியவாதியாக, தீவிர கலை, இலக்கிய ஆர்வம் மிக்கவர்களாக, அறிவாளியாக காட்டிக் கொள்பவர்கள் இதுபோன்ற கருத்துகளைச் சொல்லும்போது அதை சமூகம் கவனிக்கிறது. அவற்றை படிப்பவர்கள் தங்களுக்கு யாராவது ஒரு பெண்ணினால் ஏற்பட்ட பாதிப்புடன் பொருத்திப் பார்த்து ஏற்றுக்கொள்ளும் விதமாக எழுத இவர்கள் கைவரப் பெற்றிருக்கிறார்கள். உண்மையில் அது தனித்திறமைதான்.
ஆரம்ப காலக் கட்டங்களில் எழுத்தாளர்கள் பெரும்பாலும் உயர் சாதி வகுப்பை சேர்ந்தவர்களாக கல்வி அறிவு பெறும் வாய்ப்பு உள்ளவர்களாக மட்டுமே இருந்தார்கள். இந்தியாவில் கம்யூனிசம் மற்றும் திராவிட சித்தாந்தத்தின் தாக்கத்தினால் வர்க்கம், சாதி, மத ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை பற்றி இலக்கியங்கள் படைக்கப்பட்டன. பகுத்தறிவு கருத்துகளுடன் மக்களுக்கான இலக்கியம், தெரு நாடகங்கள், பாடல்களை இவ்வியக்கங்கள் கொண்டு வந்தன.

சாமானியனின் கதைகள் கலைகள் ஆயின. பெண்கள் கலை செயல்பாடுகளில் அதிகம் ஈடுபட்டனர். பெண்ணடிமைத்தனத்தை போற்றும், மதத்தைக் கொண்டாடும் எழுத்தாளர்களுக்கு கலை சாமானியனுக்கானதாக மாறியதும், பெண்களின் அறிவு மற்றும் சிந்தனை வெளியுலகிற்கு வருவதும் எரிச்சலூட்டியது.
ஏற்கெனவே ஆண்கள் கட்டமைத்திருக்கும் பெண் அகவுலகம், உளவியல் பற்றிய பிம்பங்களை பெண்கள் தங்கள் எழுத்துகள் மூலம் உடைக்கத் தொடங்கினர். அவ்வாறு செய்யும் பெண்களின் எழுத்துகளை ஆண்கள் புறக்கணிப்பதற்காக அவர்களுக்கு வெளி அனுபவம், அறிவு போதவில்லை என்றார்கள். இத்தனை ஆண்டுகாலமாக ஆண்களே பெண்களின் காதல், காம உணர்வுகள் பற்றி எழுதிக் கொண்டிருந்தார்கள். அவற்றை மறுத்து தாங்கள் உணர்வதை பெண்கள் எழுதும்போது ஆண்கள் அதை ஆபாசம், இலக்கியத்தில் சேராது என்றார்கள்.
கடினமான வார்த்தைகள் கொண்டு எழுதப்படுபவையே தீவிர இலக்கியம் என்று சொல்லிக் கொள்கிறார்கள். சாதாரண வாசகர்கள் உள் நுழைய முடியாமல் இலக்கியத்தை சுற்றி சீனப்பெருஞ்சுவர் கட்டி வைத்திருக்கிறார்கள். சாமானியர்களிடம் இருந்து விலகி பீடத்தில் உட்கார்ந்து கொண்டு மக்களிடம் நேரடியாக உரையாடக் கூடிய கலைப்படைப்புகளை இலக்கியம் அல்ல என மறுக்கிறார்கள்.
கண்மூடித்தனமான குரு வழிபாட்டிலிருந்து சிறிது சிறிதாக வெளியேறி குருவின் கூற்றுகளில் இருக்கும் தவறுகளையும் கூட விமர்சனம் செய்யும் இடத்திற்கு நகர்ந்திருக்கிறோம். ஆனால், இது எதுவுமே தங்களுக்குப் பொருந்தாது என்பதை போல தமிழ் தீவிர இலக்கிய உலகம் இன்னமும் பீடங்களின் வழிப்பாட்டை தொடர்கிறது.
இணையத்தில் பெண்களின் அறிவை மறுத்து மட்டம் தட்டி எழுதுபவர்களை மூன்று விதமாக பிரிக்கலாம்.
தீவிர இலக்கியவாதிகளாக தங்களை முன்நிறுத்தும் பீடங்கள் மற்றும் அதன் பக்தர்கள். ஆன்மீகம், மதசார்பு, பிற்போக்குத்தனங்கள், பெண்களை பற்றிய உளவியல் கருத்துகள், பெண்ணடிமைத்தனம் எல்லாம் கலந்து அவற்றைவிட கூடுதலாக பெண்களின் அழகையும், தாய்மையையும் புனிதப்படுத்தும் விஷயங்களையும் சேர்த்து வாசிப்பவர்களை ‘Convince’ செய்யும் மொழிநடையில் தாங்கள் சொல்ல வருவதை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் புனைவுகள் /அபுனைவுகளில் எழுதுபவர்கள். ஒருபக்கம் தஸ்தாயெவ்ஸ்கி, தல்ஸ்தோய், காஃப்காவை ஆசானாக கொண்டிருப்பதாக சொல்லிக் கொள்வார்கள். மறுபக்கம் அவர்கள் எழுத்து முழுவதும் பெண் வெறுப்பும், பெண்கள் மீதான இழிவான கருத்துகளுமே நிரம்பி இருக்கும். இதில் எங்கிருந்து வாசகர்கள் தஸ்தாயெவ்ஸ்கியையும், தல்ஸ்தோயையும் பிரித்து எடுத்து புரிந்துகொள்வது?

இரண்டாவது வகை ஆண்கள் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சமகால எழுத்தாளர்கள் மற்றும் எழுத்தாளராகும் கனவில் இருக்கும் அதிதீவிர இலக்கிய வாசகர்கள். இவர்கள் ஃபாலோயர்ஸை சேர்ப்பதற்காக பெண்களை ஒரு பொருளாக (Objectifying) மட்டுமே நினைத்து எந்நேரமும் கிளுகிளுப்பு கதைகள் எழுதுபவர்கள். இவர்கள் அபுனைவுகளும், சமூக வலைதள பதிவுகளும் திராவிடம், கம்யூனிச சித்தாந்தங்களின் அடிப்படையில் முற்போக்காக இருக்கும். ஆனால், தங்களது சித்தாந்தத்திற்கு எதிர் முகாமில் இயங்கும் பெண்களை அறிவிலிகளாக சித்தரிப்பது, பெண் வெறும் அழகு பொம்மைதான் என்பதுபோல் அவர்களது புறத்தோற்றத்தை பற்றி மட்டுமே பேசி முட்டாள்கள் என்ற பிம்பத்தை கேலியாக, நகைச்சுவையாக(?!) உருவாக்குவது இவர்கள் வேலையாக இருக்கும்.
மூன்றாவதாக இருப்பவர்கள் முதல் இருவரை விடவும் ஆபத்தானவர்கள். பொதுவெளியில் பெண்களை மதிப்பவர்களாகவும், முற்போக்காகவும், கறாரான விமர்சகராகவும் தன்னை காட்டிக் கொள்ளும் தீவிர இலக்கியவாதிகள். இவர்களது முற்போக்கும், பெண் வழிபாடுகளும் ஒரு பெண் இலக்கியவாதி விருது வாங்கும் வரையில்தான். பெண்களுக்கு கிடைக்கும் அங்கீகாரங்களை பொறுத்துக்கொள்ள முடியாமல் அப்பெண்களின் படைப்புகளை எடுத்தவுடன் குப்பை என சொல்பவர்கள். அத்துடன் அப்பெண்ணின் புறத்தோற்றம், தனிப்பட்ட வாழ்வு குறித்து அசிங்கமாக மற்றவர்கள் பேச வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்து குரூரமாக ரசிப்பார்கள்.
ஆண்கள் இப்படி என்றால் பெண்களின் நிலை இன்னும் மோசம்.
இன்று அதிகமான பெண்கள் எழுத வந்திருக்கிறார்கள், பெண் உலகம் மற்றும் உளவியல் பற்றி உண்மையின் பக்கம் நின்று பேசும் படைப்புகள் இனி வெளிவரும் என்றெண்ணி மகிழ்வதற்குள் அப்பெண்கள் நேரே சென்று இலக்கிய பீடங்களில் பக்தைகள் ஆகிவிடுகின்றனர்.

தன்னுடைய கலைப்படைப்பை மற்றவர்கள் பாராட்டும் போது மகிழ்ச்சியடைவதும் அது அங்கீகரிக்கப்பட வேண்டும் என எதிர்பார்ப்பதும் படைப்பாளியின் இயல்பு. அதற்காக பெண்ணியம், சுயமரியாதை போன்ற அடிப்படைகளையே விட்டுவிட்டு இத்தகைய இடங்களில் தங்களுடைய சுயலாபத்துக்காக பெண்கள் சேர்ந்து கொள்வது மிகுந்த அதிர்ச்சியை தருகிறது.
இலக்கிய சிற்றிதழ்கள் சில இதுபோன்ற பிற்போக்குத்தனங்கள் மற்றும் பெண்ணடிமைத்தன படைப்புகளை தொடர்ந்து வெளியிடுகின்றன. அதற்கு அப்படைப்பில் இருக்கும் அழகியல், தீவிர கலைத்தன்மை காரணமாகச் சொல்லப்படுகிறது. தமிழில் எழுதுவது போதாதென்று வேற்றுமொழி படைப்புகளைகூட மொழிபெயர்த்து வெளியிடுகிறார்கள். அந்தப் படைப்புகளை பெண்களை வைத்தே எழுதவும் வைக்கிறார்கள் என்பது அவர்களின் வெளிப்படையான ஆணாதிக்கத்தையே காட்டுகிறது.
என்ன காரணத்திற்காக இருந்தாலும் சிந்திக்கக்கூடிய பெண்கள் இதுபோன்ற பிற்போக்கான அல்லது பெண்களை தூற்றும், அடிமையாக்கும் படைப்புகளை உருவாக்க நிச்சயம் மறுக்க வேண்டும். ஒருவர் மறுத்தாலும் இன்னொருவரால் அப்படைப்பு உருவாகலாம் என்றாலும் குறைந்தபட்சம் தாங்கள் அதை செய்யாமல் விலகுவதன்மூலம் தங்களின் அரசியல் நிலைப்பாட்டில் இருந்து விலகாமல் இருக்கலாம். இன்று சமூகத்தில் பெண்களுக்கான இடத்தை நாம் அடைவதற்கு பின்னால் பல பெண்களின் போராட்டங்கள் இருக்கிறது. இது ஒரு ரிலே ரேஸ். தீப்பந்தத்தை நமக்கு அடுத்த தலைமுறையிடம் சேர்க்கும் கடமை அனைத்து பெண் படைப்பாளிகளுக்கும் இருக்கிறது. சுயலாபத்திற்காக ஒருபக்கம் பெண்ணியம் பேசிக்கொண்டே மறுபுறம் ஆண்மைய சமூகத்திற்கு துணை போவதென்பது தீயை அணைப்பதுடன், நம் முன்னோடிகளுக்கு செய்யும் துரோகமும்கூட.

நண்பர்களுக்கு: ஒரு எழுத்தாளரின் சுயசிந்தனை, அரசியல் நிலைப்பாடு முதலியவை வெளிப்படுவது அபுனைவுகளில்தான். அப்படி சிலரின் அபுனைவுகள் முழுவதும் பெண் வெறுப்பு மண்டிக்கிடக்கிறது என்று சொன்னால், ‘அவரின்’ புனைவுகளை படி எனப் பரிந்துரைக்கிறார்கள். பிற்போக்குத்தனங்கள் மற்றும் பெண் வெறுப்பையே பிரதானமாக அபுனைவுகளில் எழுதும் ஒருவரின் புனைவுகள் மட்டும் பெண்ணியம் போற்றுமா?
எழுத்தாளர்களுக்கு: சர்ச்சை எழுத்துக்களை பார்க்கும்போதெல்லாம் தோன்றும் ஒரே கேள்வி, “வாசகர்களுக்கு சிந்தனை வெளிச்சம் தரக்கூடிய எழுத்தின் ஒளி ஒருநாளும் எழுதுபவர்களின் உள் நோக்கிப் பாயாதா?"