Published:Updated:

தூங்காநகர நினைவுகள் - 18 | ஐரோப்பாவிற்குச் சென்ற மதுரையின் நிலக்காட்சிகள்!

தூங்காநகர நினைவுகள் - 18

மதுரையை முதல் முறையாக பல வண்ண ஓவியங்களாகத் தீட்டியவர்கள் பற்றி மதுரையில் யாரும் தெரிந்திருக்கவில்லை. அவர்களைப் பற்றிய விவரங்கள் வரலாற்றுப் பேராசிரியர்கள் முதல் பள்ளிப் பாட நூல்கள் வரை எங்கும் இல்லை.

Published:Updated:

தூங்காநகர நினைவுகள் - 18 | ஐரோப்பாவிற்குச் சென்ற மதுரையின் நிலக்காட்சிகள்!

மதுரையை முதல் முறையாக பல வண்ண ஓவியங்களாகத் தீட்டியவர்கள் பற்றி மதுரையில் யாரும் தெரிந்திருக்கவில்லை. அவர்களைப் பற்றிய விவரங்கள் வரலாற்றுப் பேராசிரியர்கள் முதல் பள்ளிப் பாட நூல்கள் வரை எங்கும் இல்லை.

தூங்காநகர நினைவுகள் - 18

கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் தனது வியாபாரத்தைத் தொடங்கியது. மெல்ல மெல்ல வியாபாரம் ஒருபுறம் இருக்க, இந்த நாட்டின் பகுதிகளைத் தனது ஆளுகையின் கீழ் அவர்கள் கொண்டு வந்தனர். இந்தியாவில் நடைபெற்ற அவர்களின் வர்த்தகம் பன்மடங்கு செழித்ததால் அந்த நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு லாபம் கூடிக்கொண்டே சென்றது. இங்கிலாந்தில் வெளியாகும் பத்திரிகைகளில் இந்தியாவைப் பற்றிய செய்திகளை அறிந்துகொள்வதில் முதலீட்டாளர்கள் பெரும் ஆர்வம் காட்டியதால், இன்றைய வர்த்தகச் செய்திகள் போல் இந்தியாவைப் பற்றிய செய்திகளுக்கு எனத் தனிப் பக்கங்கள் ஒதுக்கப்பட்டன.

பிரித்தானிய அதிகாரிகள் இந்தியா குறித்தான தகவல்களையும், புள்ளி விவரங்களையும் சேகரிக்கத் தொடங்கினார்கள். இந்தத் தகவல்கள், புள்ளிவிவரங்கள் எல்லாம் பிரித்தானிய செய்திப் பத்திரிகைகளில் பதிப்பிக்கப் பெற்றன. இந்தியாவில் எந்தெந்த நகரங்கள் வேகமாக வளர்ந்துவருகின்றன, எங்கே முதலீடு செய்யலாம், எந்தத் தொழிலில் முதலீடு செய்யலாம் எனத் தங்களின் அதிகாரத்தையும் வியாபாரத்தையும் பெருக்கும் பல்வேறு சூத்திரங்களை அவர்கள் இந்தப் புள்ளி விவரங்களில் இருந்தே பெற்றார்கள். அதே நேரம் இந்தியாவின் பல பழைமையான நகரங்கள் காலத்தின் மாற்றங்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் காணாமற்போயின, வர்த்தகத்தினால் சில நகரங்கள் படுவேகமாக வளர்ந்தன.

தொலைதூரத்தில் இருந்து மதுரை நகரம்
தொலைதூரத்தில் இருந்து மதுரை நகரம்

மலைகள், காடுகள், நதிகள், தாவரங்கள், நோய்கள், மரணங்கள் என அனைத்தையும் தங்கள் அட்டவணைகளில் கொண்டு வந்தார்கள். அவர்களுக்கு நம்பிக்கையளித்த நகரங்களுக்கு வரைபடங்களை உருவாக்கினார்கள். இது அவர்களுக்கு நகர விரிவாக்கம், வியாபாரம் முதல் போர்வரை அனைத்துத் திட்டமிடுதலுக்கும் அடிப்படையாகத் திகழ்ந்தது. மெல்ல இந்த நகரங்களையெல்லாம் நிர்வகிக்கும் பொறுப்பை அவர்களே ஏற்றார்கள். தண்ணீர் இணைப்பு, சாக்கடை வசதிகள், சாலைகள், பொது சுகாதாரம் என வசதிகள் செய்துகொடுத்து இவற்றுக்கெல்லாம் கட்டணம் வசூலிக்கத் தொடங்கினார்கள். தொடர்ச்சியாக இந்த நகரங்களின் மக்கள் தொகையைக் கணக்கெடுத்தார்கள். 1872-ல் முதல் சென்சஸ் நடத்தப்பட்டது பெயர், பாலினம், வயது, சாதி, தொழில் எனப் பல்வேறு விவரங்கள் முதல்முறை முழுமையாகத் தொகுக்கப்பட்டன. இதன் பின்னர் 1881 எனப் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை கணக்கெடுக்கும் பழக்கம் நடைமுறையாக மாறியது.

இந்திய நகரங்கள், இந்திய வர்த்தகம், இந்திய லாபம் இவை அனைத்துமே லண்டனில் இருக்கும் பத்திரிகைகளின் முதன்மைக் கச்சாப் பொருளாக மாறியதுமே இந்தியாவைக் காணும் ஆவல் பிரித்தானியர்கள் மத்தியில் மேலோங்கியது. இந்தியாவில் பணியாற்றி லண்டன் திரும்பிய அதிகாரிகளின் பயணக்குறிப்புகளின் வழியேதான் இந்திய நிலப்பரப்பை அவர்கள் தங்களின் மனங்களில் உருவகப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
தாமஸ் டேனியல் (1749-1840)
தாமஸ் டேனியல் (1749-1840)

இந்திய நிலப்பரப்பைத் தங்களின் முதலீட்டாளர்களுக்குக் காட்டும் ஆர்வத்தில் லண்டனிலிருந்து வெளியாகும் கல்கத்தா க்ரானிக்கல் என்கிற நாளிதழில் ஒப்பந்த விவரங்களை 17 ஜூலை 1786 மற்றும் 4 ஜனவரி 1787 ஆகிய இரு தேதிகளில் கிழக்கிந்திய கம்பெனி பிரசுரித்தது. பல ஓவியர்கள் இதற்கு விண்ணப்பித்தார்கள். கிழக்கிந்திய கம்பெனியின் சார்பாக ஒப்பந்தம் செய்யப்பட்டு தாமஸ் டேனியல் (1749-1840) மற்றும் அவரது மருமகன் வில்லியம் டேனியல் (1769-1837) ஆகிய இருவரும் 1786-ல் இந்தியாவிற்குப் பயணமானார்கள்.

இதற்கு முன்பும் இங்கிலாந்திலிருந்து ஓவியர்கள் இந்தியாவிற்குப் பிழைப்புத் தேடி வந்தார்கள். அவர்கள் மன்னர்களை, நவாபுகளை அவர்களின் அரண்மனையில் வைத்து வரைந்து பெருஞ்செல்வம் ஈட்டினார்கள். 1778-ல் வாரன் ஹாஸ்டிங்கின்சின் உதவியுடன் இந்தியாவிற்கு வந்த வில்லியம் ஹோட்ஜஸ் எனும் ஓவியர் ஆறு ஆண்டுகள் உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில் வசித்து சில ஓவியங்களைத் தீட்டியிருக்கிறார். அவரின் ஓவியங்கள்தான் இந்தச் சகோதரர்களுக்கு இந்தியா நோக்கிக் கிளம்பும் உந்துதலைக் கொடுத்தன. இந்தச் சகோதரர்கள் புறப்பட்ட போதே இவர்கள் அடியோடு வேறு தளத்தில் பயணமாகிறார்கள் என்கிற உணர்வுடன்தான் புறப்பட்டார்கள்.

1786 முதல் 1793 வரை ஏழு ஆண்டுகள் இந்தியாவில் தங்கி தங்கள் ஓவியப்பணியை மேற்கொண்டார்கள். கல்கத்தா நகரத்தை 12 பெரும் ஓவியங்களாகத் தீட்டுவதுதான் இவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்ட முதல் வேலை. கல்கத்தாவில் தங்களின் வேலைகளை முடித்ததும் அதன் பின்னர் கல்கத்தாவில் இருந்து காஷ்மீரின் ஸ்ரீநகர் வரை கங்கைக் கரையிலேயே பயணித்தனர். அதன் பிறகு கொஞ்ச காலம் கையில் கொஞ்சம் பணத்தைச் சேமித்துக்கொண்டு டேனியல்கள் இந்தியாவின் தெற்கு நோக்கி வந்தார்கள். இந்த இருவரும் முதன்முதலில் இந்தியாவின் பெரிதும் மெச்சத்தக்க நிலப்பரப்பை ஓவியங்களாகத் தீட்டினார்கள்.

வில்லியம் டேனியல் (1769-1837)
வில்லியம் டேனியல் (1769-1837)
1792-ல் மதுரைக்கு இவர்கள் இருவரும் வந்தார்கள், ஜூலை 3, 1792-ல் வில்லியம் டேனியல் தனது டைரி குறிப்பில் இவ்வாறாக எழுதுகிறார்:

‘Breakfasted at Tappacallum & went to the Old Palace near the Rampart inside the Fort, where we propose remaining during our stay at Madura. The Palace of Madura is said to be principally the work of Tremal Naig, rajah of Madura; at least it may be supposed to have been repaired and beautified by him, who was an Hindoo prince of considerable power and wealth, as appears by the many edifices attributed to him in this neighborhood. In this building appears a great mixture of the Hindoo and Mahommedan styles of architecture, a circumstance not so frequently occurring in this part of India, as on the banks of the Ganges.’

திருமலை நாயக்கர் மகாலின் சிதலமடைந்த பகுதிகள்
திருமலை நாயக்கர் மகாலின் சிதலமடைந்த பகுதிகள்

‘தெப்பக்குளத்தில் காலைச் சிற்றுண்டி. அதன் பிறகு மகாலின் சிதிலமடைந்த பகுதிகளுக்குச் சென்று கோட்டைக்குள்ளேயே எஞ்சிய மதுரை நாள்களைக் கழித்தோம். திருமலை நாயக்கர் எனும் மதுரையின் மன்னரால் இந்த அரண்மனை கட்டப்பட்டுள்ளது. அதை அவர் பல இடங்களில் புனரமைத்தும் அழகுபடுத்தியிருக்கிறார். அவர் ஒரு வசதி படைத்த இந்து மன்னர், அவரிடம் நிறைய சொத்துகளும் அதிகாரமும், பெருஞ்செயற் கட்டமைவும் இருக்கின்றன. அவரது இந்த அரண்மனை இந்து மற்றும் இஸ்லாமியக் கட்டடக்கலையின் கலவையாகவே காணப்படுகிறது. கங்கைக் கரையில் இருப்பது போல இந்தியாவின் இந்தப் பகுதியில் சுலபமாகப் பார்க்கமுடியாத ஒரு கூற்றாக இந்தக் கட்டடக்கலை இருக்கிறது’.

தாமஸ் டேனியல் மதுரை மகாலில் சிதிலமடைந்த பகுதிகளை ஓவியமாக வரைந்தார், அதில் அவர் சிதிலமடைந்த பகுதியையும் சீரமைத்துப் புதுப்பிக்கப்பட்ட பகுதிகளையும் இணைத்து வரைந்தார். இதே ஓவியத்தில் ஓர் ஐரோப்பியக் குழு அங்கு அரண்மனையின் புல்வெளியில் இருப்பதையும், அருகே இரண்டு எருமை மாடுகள் மேய்ந்துகொண்டிருப்பதையும் இந்த ஓவியத்தில் நீங்கள் காணலாம். இந்த ஓவியத்தில் பிரிட்டிஷார் எப்படி இந்திய நாட்டின் ஓர் அரண்மனையைப் புனரமைக்க உதவியிருக்கிறார்கள் என்கிற பெருமிதமும் உள்ளடக்கியிருந்தது.

கீழமாசி வீதியில் உள்ள கண்காணிப்பு கோபுரம்
கீழமாசி வீதியில் உள்ள கண்காணிப்பு கோபுரம்

திருவிழாக்களைக் காணவும், அரண்மனையை, கோயிலை தூரத்தில் இருந்து பார்ப்பதற்கான கண்காணிப்பு கோபுரத்தையும் அழகான ஓவியமாகத் தீட்டினார்கள். சிதிலமடைந்த திருமலை நாயக்கர் மகாலில் நாட்டியசாலை, இந்தக் கட்டடத்திற்கு உள்ளே உள்ளூர் வாசிகளுடன் மாடுகளும் இருப்பதை நீங்கள் காணலாம். மதுரை நகரத்தைத் தொலைதூரத்திலிருந்து இரு ஓவியங்களும் உருப்பொறித்தல் பாணியிலான ஓர் ஓவியத்தையும் தீட்டினார்கள்.

மதுரை தவிர்த்து இவர்கள் சென்னை, தாமிரபரணி ஆறு, திருச்சி மலைக்கோட்டை, தஞ்சைப் பெரியகோவில், மாமல்லபுரம், ராமேஸ்வரம், சிவகிரி, ஆத்தூர் எனப் பல ஓவியங்களையும் உருப்பொறித்தல் பாணியிலான ஓவியங்களாகத் தீட்டினார்கள்.

சென்னையில் அவர்கள் கறுப்பர் நகரத்தை ஓவியமாகத் தீட்டினார்கள், அடுத்து பாரிசீல் உள்ள ஆர்மீனியம் தேவாலயத்தை வரைந்தார்கள். ஏராளமான காளைமாடுகள் ஓய்வு எடுக்கும் ஒரு நிலக்காட்சிகளின் வழியே இந்தியாவில் அவர்கள் சந்தித்த பல இடர்களையும் பதிவு செய்தார்கள். 1788 முதல் 1791 வரை சென்னை, மதுரை என கன்னியாகுமரி வரை சென்று மைசூர் வழியே பம்பாய் வந்துடைந்தனர், அங்கிருந்து அவர்கள் இங்கிலாந்து திரும்பினார்கள்.

ஒவியங்களைத் தவிர்த்து அவர்களின் டைரிக் குறிப்புகளும் நமக்கு இந்தியாவைப் பற்றிய வேறு துல்லியமான சித்திரங்களைக் கொடுத்தது. துபாசுகளும் அவர்களது பணியாளர்களும் இவர்களின் துணிமணிகள், பணம் உள்ளிட்ட எல்லாவற்றையும் எப்படித் திருடிக்கொண்டு ஓடினார்கள் என்பதைப் பற்றியும் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் கொள்ளையர்களிடம் சிக்கிய நிகழ்வுகளையும், தொற்று நோய்களில் சிக்கி அவதியுற்றதையும், நல்ல உணவுக்காக அலைந்ததையும் விரிவாக எழுதியிருக்கிறார்கள்.

மதுரை மகாலின் நாட்டியச்சாலை
மதுரை மகாலின் நாட்டியச்சாலை

டேனியல் சகோதரர்கள் தங்களின் பயணக் காலம் முழுவதிலுமே சக இந்தியர்களையே அனைத்திற்கும் நம்பி இருக்க வேண்டிய சூழலில் இருந்தார்கள். அவர்களுக்கு உள்ளூர் மொழிகள் அறவே தெரியாது, ஒரு இடத்தின் பெயர், ஒரு கட்டடத்தின் வரலாறு, எதை வரைகிறார்கள் என்பதைப் பற்றிய விளக்கம் என அனைத்துமே உடன் இருந்தவர்கள் கூறியதுதான். அவர்களால் இந்த விவரங்களை ஒரு போதும் சரிபார்க்க முடிந்ததில்லை. அதனாலேயே இவர்கள் தங்களின் ஓவியங்களுக்கு எழுதிய விளக்கங்கள் பல நேரங்களில் பிழையாகவே இருந்தன என்பதைப் பின்னர் உணர்ந்தனர்.

தாமஸ் மற்றும் வில்லியன் டேனியல் ஆகிய இருவரும் ஓவியர்களாக மட்டுமல்ல, பெரும் சாகசக்காரர்களாகவும் கருதப்பட்டார்கள். இவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட ஓவியங்களை இந்தியா முழுமையிலும் அலைந்து திரிந்து வரைந்தார்கள். இந்திய வானத்தின் அரவணைப்பு வெதுவெதுப்பு, இங்கு ஓடிய ஓடை நீர், இந்தியக் கட்டடக்கலை, இஸ்லாமியக் கட்டடக் கலை, திராவிடக் கட்டடக்கலையில் உருவான சின்னங்கள், அருவிகள், மலைச்சிகரங்கள், மிருகங்கள், மரங்கள், இந்திய முகங்கள், உடைகள் என ஐரோப்பா இதுவரை கண்டிராத காட்சிகளை தங்களின் ஓவியங்களின் வழியே பதிவு செய்தார்கள். இவற்றையெல்லாம்விட ஐரோப்பியர்கள் முதல் முறையாக கிறித்துவத்தின் சாயலற்ற வெவ்வேறு கலாசாரங்களை, ஒரு புதிய நிலத்தை இந்த ஓவியங்களின் வழியே கண்கள் அகலப் பார்த்தார்கள்.

டேனியல் 1795-ல் தனது கைப்பட வரையப்பட்ட 144 ஓவியங்களின் தொகுப்பைப் பெரும் கண்காட்சியாக வைத்தார். இதுதான் இந்திய நிலப்பரப்பின் முதல் பலவண்ண ஆவணம். கீழைத்திய நிலக்காட்சிகள் என்கிற ஒரு தொடர் ஓவிய வரிசையை அவர் லண்டனில் தீட்டியபடி இருந்தார்.

1794 முதல் அவர் வரைந்த கோட்டோவியங்களை நீர் மற்றும் தைல ஓவியங்களாக முழுமைப்படுத்தினார்கள். 1795 முதல் 1801 வரை தங்களின் கீழைத்திய ஓவியங்கள் வரிசையை வெளியிட்டார்கள். இதில் மொத்த 144 ஓவியங்கள் இடம் பெற்றன. ஒரு செட் ஓவியங்களின் விலையை 210 ஸ்டெர்லிங் என நிர்ணயித்தார்கள். கிழக்கிந்திய கம்பெனி முதலில் 30 செட்டுகளையும் பின்னர் மீண்டும் ஒரு 18 செட்டுகளையும் வாங்கியது.

1798 மதுரைக் கோயிலின் உட்புறத் தோற்றம்
1798 மதுரைக் கோயிலின் உட்புறத் தோற்றம்

1795 முதல் 1810 வரை டேனியல் குடும்பத்தார் வெளியிட்ட ஓவியங்கள் அனைத்துமே லண்டனில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தின. இந்த ஓவியங்களை மக்கள் கொண்டாடினார்கள், இவற்றைப் பெருந்தொகை கொடுத்து ஓவிய சேகரிப்பாளர்கள் முதல் நூலகங்கள், அலுவலகங்கள், கிளப்புகள் வரை தங்களின் வளாகங்களை அலங்கரித்தனர்.

டேனியல்களின் கீழைத்திய நிலக்காட்சிகள் 1795-ல் வெளியிடப்பட்டன. 1808 வரை அந்த நூல் வரிசையின் ஆறு தொகுதிகள் வெளிவந்தன. இதன் அன்றைய விலை 60 பவுண்டுகள். இன்றும் அதே தொகுதிகள் விலைக்குக் கிடைக்கின்றன. அதன் விலை 16,000 பிரிட்டிஷ் பவுண்டுகள். இவர்களது 'Picturesque Voyage to India' என்கிற நூல் 1810-ல் வெளியானது. வில்லியம் டேனியல் எழுதிய இந்தியப் பயணக் குறிப்புகளின் ஒரிஜினல் இன்றும் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் உள்ளது. இதில் உள்ள மதுரை பற்றிய பகுதிகள் என்றாவது வாசிக்கக் கிடைத்தால் பெரும்பேராகக் கருதுவேன்.

புதுமண்டபம்
புதுமண்டபம்
தாமஸ் டேனியல் திருமணம் செய்துகொள்ளவில்லை. 1840-ல் அவர் மரணமடையும் வரை ஓவியங்களைத் தீட்டியபடி இருந்தார். 1837-ல் வில்லியம் டேனியல் இறக்கும்போதும் அவருடைய உடைகளும் விரல்களும் வண்ணங்களில் தோய்ந்தபடியே இருந்தன.

மதுரையை முதல் முறையாகப் பல வண்ண ஓவியங்களாகத் தீட்டியவர்கள் பற்றி மதுரையில் யாரும் தெரிந்திருக்கவில்லை. அவர்களைப் பற்றிய விவரங்கள் வரலாற்றுப் பேராசிரியர்கள் முதல் பள்ளிப் பாட நூல்கள் வரை எங்கும் இல்லை. புகைப்படக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டதற்கு முன்பாகவே என் நகரத்தை எனக்குப் பலவண்ணங்களில் இவ்வளவு துல்லியமாகப் பதிவு செய்து கொடுத்தவர்களுக்கு இந்தக் கட்டுரையின் வாயிலாக அவர்களை நினைவுகூர்வதைவிடவும் ஒரு எழுத்தாளனாக என்னால் என்ன கைம்மாறு செய்துவிட முடியும்!

நன்றி:

Picturesque Voyage to India - William Daniel / Thomas Daniel

Daniell's India: Views from the Eighteenth Century - Archives in India Hostorical Reprints

The View of Hindoostan. Vol. 2. London, 1798-1800. Eighteenth Century Collections. Pennant, Thomas.

“Picturesque Ruins, Decaying Empires, and British Imperial Character in Hodges’s Travels in India.” Colonizing Nature: The Tropics in British Arts and Letters, Tobin, Beth Fowkes