Published:Updated:

மதுர மக்கள் 3: "கட்அவுட் ஆர்டிஸ்ட்ஸ் என்ன ஆனாங்க... எங்கே போனாங்க?!" - பரணி ராஜன்

மதுர மக்கள்

மதுரையின் அடையாளமே அதன் மக்கள்தான். மதுரையின் நலனுக்காகவே உழைக்கும் மக்களை அடையாளப்படுத்துவதும், அவர்களின் குரல்களை உலகிற்கு ஒலிக்கச்செய்வதுமே இந்தத் தொடரின் நோக்கம்.

Published:Updated:

மதுர மக்கள் 3: "கட்அவுட் ஆர்டிஸ்ட்ஸ் என்ன ஆனாங்க... எங்கே போனாங்க?!" - பரணி ராஜன்

மதுரையின் அடையாளமே அதன் மக்கள்தான். மதுரையின் நலனுக்காகவே உழைக்கும் மக்களை அடையாளப்படுத்துவதும், அவர்களின் குரல்களை உலகிற்கு ஒலிக்கச்செய்வதுமே இந்தத் தொடரின் நோக்கம்.

மதுர மக்கள்

”அப்போ எல்லாம் ஊருக்கு ஊரு பொழுதுபோக்க கடல் இருக்கும். நமக்கு மீனாட்சி அம்மன் கோயில், நாயக்கர் மஹால், இதை விட்டா எல்லோரும் போயி அடையிற இடம் தியேட்டராதான் இருக்கும். இப்போ இருக்க மாதிரி வினைல் ஃப்ளெக்ஸ் எல்லாம் அப்போ கிடையாது இல்லையா? எதுவா இருந்தாலும் ஆர்ட்டிஸ்ட் கைப்பட வரைஞ்சு இருக்குற கட் அவுட்தான் ரொம்ப ஃபேமஸ்! ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ்ஸ்டாண்டு, கோரிப்பாளையம் பெரியாஸ்பத்திரி காம்பவுண்ட்டுனு, மிரட்டலா அவ்வளவு தத்ரூபமா இருக்கும். சினிமா பார்க்குறத விட இந்த கட் அவுட்ட வேடிக்கைப் பார்க்குறப்போ கிடைக்கிற ஆச்சர்யம் இன்னும் அதிகமாவே இருக்கும். இந்த சினிமா கட் அவுட்கள்தான் எனக்குள்ள வரையணும்ன்கிற தாக்கத்தைச் சின்ன வயசுல ஏற்படுத்துச்சு." குதூகலமாக பேசுகிறார் பரணி ராஜன்!

பரணி ராஜன்
பரணி ராஜன்
பெங்களூருவில் ஆட்டோமொபைல் இன்ஜினியராகப் பணிபுரியும் மதுரைக்காரர். தற்போது இளையராஜா மீதான பிரியத்தில் 'tribute to ராஜா' என இளையராஜா இசையமைத்த நூறு பாடல்களில் இருந்து, அதன் மறக்க முடியாத ஃப்ரேம்களை ஓவியமாக மாற்றும் முயற்சியில் இருக்கிறார்.

ஓவியர் கனவு. ஆனால் ஆட்டோமொபைல் இன்ஜினியர் வேலை. எப்படி இந்த மாற்றம்?

ஹாஹா... வேற என்ன? வீட்டு சூழல்தான். சின்னவயசுல எனக்கும் சினிமா கட் அவுட் ஆர்ட்டிஸ்ட் ஆகணும்ங்குறதுதான் ஆசை. முப்பது நாப்பது அடி கட் அவுட். கீழே ஒரு மூலையில பரணி ஆர்ட்ஸ்னு செமயா யோசிச்சு பார்ப்பேன். ஆனா வீட்டுச்சூழல் அதுக்கு அப்படியே முழுசா வேற மாதிரி இருக்கும். படிக்கணும், படிச்சதுக்கு ஏற்றமாதிரி வேலைக்குப் போகணும்னு எல்லார் மேலயும் இருக்க அதே எதிர்பார்ப்பு எங்க வீட்டுல என் மேலயும் இருந்துச்சு. ஆனாலும் மனசுக்குள்ள இருக்க இந்த ஆசை மட்டும் விடாது. எங்கயாவது கடைக்குப் போனா கூட கண்ணு அங்க இருக்க, பென்சில், ஸ்கெட்ச்னு மனசு அலை பாய ஆரம்பிச்சுரும். சின்ன வயசுல வரைஞ்சுட்டு இருந்தேன். ஒரு கட்டத்துல எல்லாத்தையும் மொத்தமா நிறுத்திட்டு இன்ஜினியரிங் பக்கம் போயிட்டேன்.

பரணி ராஜன் ஓவியங்கள்
பரணி ராஜன் ஓவியங்கள்

திரும்பவும் எப்படி ஓவியம் பக்கம்..?

எல்லாமே சோஷியல் மீடியாதான் காரணம். ஆர்குட் முடிஞ்சு ஃபேஸ்புக் மெதுவா வளர ஆரம்பிச்ச காலகட்டம் அது. கூடப்படிச்ச, வேலைபார்த்த நண்பர்கள் எல்லாம் புதுசா கார் வாங்கிருக்கேன் பாரு, இதோ என் புது வீடு பாருன்னு போட்டோ எடுத்து ஸ்டேட்டஸ் போடுவாங்க. கார் வீடு வாங்குற அளவுக்கு நமக்கு வாய்ப்பு இல்லை. நாம என்ன பண்றது, நமக்கு என்ன தெரியும்னு யோசிச்சப்போதான், திரும்ப வரையலாம்னு பென்சில் எடுக்க ஆரம்பிச்சேன். பெங்களூரில் பென்சில் ஜாமர்ஸ்னு ஓர் அமைப்பு இருக்கு. அதுல தொடர்ந்து பயணிக்க ஆரம்பிச்சேன். அதன் மூலமா நிறைய நண்பர்கள் கிடைச்சாங்க. அவங்களோட அனுபவங்கள், ஐடியா ஷேரிங்க்ஸ்னு வரைவதில் என்னை இன்னும் மெருகேத்திக்கத் தொடங்கினேன்.

இளையராஜா மியூசிக்கல் சீரிஸ் ஐடியா பத்தி சொல்லுங்க?

ஏற்கனவே சொன்ன மாதிரிதான். சினிமா மேல இருந்த பிரம்மை... சினிமானா அதுல நம்ம கூட நேரடியாவே உரையாடுற உணர்வை கொடுக்க கூடியது இளையராஜா சாரோட பாடல்கள்... கூடவே அந்த கட் அவுட் ஆர்டிர்ஸ்ட் கனவு... இந்த மூன்றையும் ஒரே புள்ளில இணைக்கிற ஒரு வேலையா, வேலை நாட்கள் போக கிடைக்கிற நேரத்துல எதாச்சும் உருப்படியா வரைவோம்னு தோணுனப்போ தான், 'மூடுபனி'ல 'என் இனிய பொன் நிலாவே' பாடல் ஒளிபரப்பாச்சு. ஹீரோ பிரதாப் போத்தன் மடியில ஷோபா படுத்திருப்பாங்க. டன் டனடன்னு கிட்டாரோட ஸ்ட்ரிங் முடியும். அந்தப் பாட்டுக்கு அது ஒரு ஐகானிக்கல் ஃப்ரேம் அது! அந்த போட்டோவை மட்டும் நாம பார்த்தோம்னா, நம்மளோட உதடு அனிச்சையாவே என் இனிய பொன்நிலாவேனு பாட ஆரம்பிச்சிரும். இது எவ்ளோ பெரிய கிஃப்ட்! இதுதான் ராஜா சாரோட மேஜிக்னு நான் நம்பினேன். அப்போ தோணுன ஐடியாதான். இது மாதிரி ஒவ்வொரு ராஜா சார் பாடல்களில் வர்ற, எல்லோரும் ஈசியா கனெக்ட் ஆகக்கூடிய ஃப்ரேம்களைத் தொகுத்து நூறு ஃப்ரேம்களை வாட்டர் ஸ்கெட்ச் பண்ணலாம்னு ஆரம்பிச்சேன்.

பரணி ராஜன் ஓவியங்கள்
பரணி ராஜன் ஓவியங்கள்

வார நாட்களில் ஆபீஸ் வேலை, சனி ஞாயிறுல வாட்டர் ஸ்கெட்சுனு விளையாட்டு போக்கா ஆரம்பிச்சேன். ஆரம்ப நாட்களில் 'ராதிகாவுக்கு மூக்கு சரியா வரலை, கார்த்திக் தலைமுடி சரியா இல்லை'னு நண்பர்கள் கிட்டயிருந்து விமர்சனங்களும் வந்துச்சு. அந்தச் சின்ன சின்ன தவறுகளை சரி பண்ணிக்கிட்டு இப்போ 55 வரை முடிச்சுருக்கேன். மொத்தமா 100 முடிச்சுட்டு அதை இளையாராஜா சார்கிட்ட காட்டணுங்கிற பெரிய ஆசையும் இருக்கு!

மறக்க முடியாத அனுபவம்?

அந்தக் கால சினிமா கட்அவுட்தான் எல்லாத்துக்குமே முக்கிய காரணம்! காலப்போக்குல கட்அவுட் எல்லாம் ஃப்ளெக்ஸ் போர்டா மாறிடுச்சு. அந்த ஆர்ட்டிஸ்ட்கள் எல்லாம் என்ன ஆனாங்க... அதுதான் இன்னமும் என் மனசுக்குள்ள ஆழமா ஓடிட்டு இருக்கு!