Published:Updated:

தூங்காநகர நினைவுகள் - 22: வெயிலைப் பருக வந்தவன்!

தூங்காநகர நினைவுகள் | ஜான் க்ளீசின் மதுரைத் தெருக்கள்

அலை அலையாய் உலகம் முழுவதும் இருந்து மதுரைக்கு வந்தவர்கள் நம் நிலத்தை ஆவணப்படுத்தினார்கள், ஒரு நிலவு குளத்தில் பிரதிபலிப்பதைப் போலவே இவர்களின் புகைப்படங்களில், ஓவியங்களில் மதுரை மிளிர்ந்து மிதக்கிறது.

Published:Updated:

தூங்காநகர நினைவுகள் - 22: வெயிலைப் பருக வந்தவன்!

அலை அலையாய் உலகம் முழுவதும் இருந்து மதுரைக்கு வந்தவர்கள் நம் நிலத்தை ஆவணப்படுத்தினார்கள், ஒரு நிலவு குளத்தில் பிரதிபலிப்பதைப் போலவே இவர்களின் புகைப்படங்களில், ஓவியங்களில் மதுரை மிளிர்ந்து மிதக்கிறது.

தூங்காநகர நினைவுகள் | ஜான் க்ளீசின் மதுரைத் தெருக்கள்
ஒளி ஒரு சிறிய துளை மூலம் ஓர் இருண்ட இடத்திற்குள் நுழைகிறது. துளையின் எதிர்ச்சுவரில் அல்லது திரையில் ஒரு தலைகீழ்ப் படம் உருவாகிறது. இதனை நாம் அனைவரும் நம் பள்ளியின் இயற்பியல் வகுப்பில் செய்திருப்போம். சீனப் பயணியும் தத்துவவாதியுமாக மோ சி (Mo Zi) 5-ம் நூற்றாண்டிலேயே உலகின் முதல் ஊசித்துளை (Pinhole) போன்ற ஒரு செயல்முறை பற்றித் துல்லியமாக விவரித்திருக்கிறார். இதன் அடிப்படையில் உருவான நுண்துளைக் கேமராவே இன்றைக்கு புகைப்படம் எடுக்கும் கேமராவாகப் பரிணாமவளர்ச்சி அடைந்தது. இந்தக் கேமராவைத்தான் இருள்படப் பெட்டி (Camera Obscura) என்று அழைக்கின்றோம்.

கி.மு. 3-ம் நூற்றாண்டில் வாழ்ந்த அரிஸ்டாட்டில் இந்த ஊசித்துளைக் கருவியைப் பற்றியும் அதன் பின் இயங்கும் அறிவியலையும் இன்னும் விரிவாக ஆய்வு செய்து எழுதினார். கி.மு.330-ம் ஆண்டில் நடந்த ஒரு சூரியக் கிரகணத்தின் போது ஒரு மரத்தின் இலையின் இடையே உள்ள துவாரத்தின் வழியாக தரையில் விழுந்த நிழல் அவரை ஈர்த்தது. இதன் வழியே அவர் தலைகீழ்க் கோட்பாட்டை இன்னும் நெருக்கமாக அறிந்தார். அரிஸ்டாட்டிலைத் தொடர்ந்து 10-ம் நூற்றாண்டில் வாழ்ந்த இபின் அல் ஹேதம் (Ibn al Haytham) ஓர் ஊசித் துளை மூலமாக சூரிய கிரகணத்தைக் கண்டார். அவர் குண்டூசித் துளையிட்ட ஒரு பெட்டியின் வழியாக சூரிய கிரகணத்தைக் கண்டு இன்னும் நுட்பமான கருவியை வழங்கினார்.

உலகின் முதல் கேமரா அப்ஸ்குரா கருவி
உலகின் முதல் கேமரா அப்ஸ்குரா கருவி

ரோஜர் பேகன் (Rogen Bacon), ஜோஹன்னஸ் கெப்ளர் (Johannes Kepler) எனப் பலரும் இந்தக் கருவியை இன்னும் செழுமைப்படுத்தினர். ஒரு அறை அளவிற்குப் பெரிதாக இருந்த கருவியை ஒரு சதுரப்பெட்டிக்குள் சுருக்கினார் கெப்ளர். இந்தக் கருவிகளின் வருகை ஓவியர்களை அச்சுறுத்தியது. ஓவியர்களில் ஒரு சாரார் மன்னர்களையும், வசதி படைத்த சீமான்கள்-சீமாட்டிகளையும் ஓவியங்களாக வரைந்துவந்தனர். ஓவியர்கள் சொல்வதைக் கேட்டு அவர்கள் அசையாமல் சில நாள்கள் வரை ஒரே இடத்தில் உட்கார்ந்திருந்தனர். அந்தக் காலத்தில் தத்ரூபமாக ஓவியம் தீட்டும் ஓவியர்களுக்கு அதிக கிராக்கியும் இருந்தது. ஆனால் ஒரே நொடி உட்கார்ந்தால் போதும், இன்னும் தத்ரூபமான ஒரு படத்தின் வருகை தங்களின் வாழ்க்கையை வாழ்வாதாரத்தைச் சிதைத்துவிடும் என்று அவர்கள் அஞ்சினார்கள்.

லியோனார்டோ டாவின்சி முதலில் கடும் எதிர் மனநிலையில்தான் இருந்தார். ஆனால் மெல்ல அவர், இந்தக் கருவியால் தான் கற்பனை செய்து வரையும் ஓவியத்தை ஒருபோதும் உருவாக்க முடியாது என்பதை உணர்ந்தார். இந்தக் கருவி நமக்குப் போட்டியானது அல்ல என்பதை அவர் உரக்க அறிவித்தார்.

ஓவியர்கள் மெல்ல கேமராவுடன் நட்பாகத் தொடங்கினார்கள். இந்தக் கருவியின் பயனை உணர்ந்தார்கள். படம் வரைதல் மற்றும் வண்ணம் தீட்டி ஓவியங்கள் வரைவதற்கு இந்த கேமரா 1600-ம் ஆண்டு முதல் 1800-ம் ஆண்டு வரை பயன்படுத்தப்பட்டது. 17-ம் நூற்றாண்டில் பயணத்தில் எடுத்துச் செல்லக்கூடிய அப்ஸ்குரா கேமராக்கள் புழக்கத்திற்கு வந்ததும் இந்தப் பெட்டி ஊர் சுற்றக் கிளம்பியது.

17ஆம் நூற்றாண்டின் கேமரா அப்ஸ்குரா கருவி
17ஆம் நூற்றாண்டின் கேமரா அப்ஸ்குரா கருவி

1780களில் மதுரையில் வசித்து வந்த ஆதம் பிளாக்காதர் (Adam Blackader) பிரிட்டனைச் சேர்ந்த ஓர் அறுவை சிகிச்சை நிபுணர். அவர் புதுமண்டபத்தால் வசீகரிக்கப்பட்டு அந்த மண்டபத்தின் தூண்களைக் கோட்டோவியங்களாக வரைகிறார். ஒவ்வொரு தூணின் நான்கு முகங்களையும் அதில் உள்ள சிற்பங்களையும் தீட்டுகிறார். மூன்று ஆண்டுகள் செலவிட்டு அங்குள்ள 143 தூண்களையும் வரைந்த அனுபவத்தைத் தன் நண்பர் ஜோசப் பேங்க்ஸ்க்கு (Joseph Banks) அவர் கடிதமாக எழுதியது இன்றைக்கும் ஒரு முக்கிய ஆவணமாகத் திகழ்கிறது. ஆதம் பிளாக்காதரின் ஒவ்வொரு படமும் ஒரு தாளில் வரையப்பட்டிருக்கும், அதில் தூணின் நான்கு முகங்களும் திசைகளும் குறிக்கப்பட்டிருக்கும், இன்னும் சில குறிப்புகள் ஆங்கிலத்திலும் தமிழிலும் ஒவ்வொரு படத்திலும் இடம்பெற்றிருக்கும். ஆதம் பிளாக்காதருக்குப் பிறகு இதுவரை இவரைப் போல் புதுமண்டபத்தை இத்தனை துல்லியமான விவரிப்புகள் விவரங்களுடன் யாரும் ஆவணப்படுத்தியதில்லை.

ஆதம் பிளாக்காதரின் புதுமண்டபக் கோட்டோவியம்
ஆதம் பிளாக்காதரின் புதுமண்டபக் கோட்டோவியம்

1792-ல் மதுரைக்கு வில்லியம் டானியல் - தாமஸ் டேனியல் வந்தபோது அவர்களின் கையில் கையடக்க அப்ஸ்குரா கேமரா கருவியும் ஒரு தொலை நோக்கியும் இருந்தன. அதனைக் கொண்டுதான் அவர்கள் இந்தியாவில் 200க்கும் மேற்பட்ட காட்சிகளைப் பதிவு செய்து தங்களுடன் எடுத்துச் சென்றார்கள். அந்தக் கருவி அன்றைய நாளில் அவர்கள் கண்ணில் பார்க்கும் ஒரு காட்சியை அதே விகிதப்பொருத்தத்துடன் பிரதிபலித்தது, அந்த பிம்பத்தை அவர்கள் அப்படியே நகலெடுத்தார்கள்.

அந்தக் காட்சிக்கான வண்ணங்களை அவர்கள் சில நேரம் இங்கேயே தீட்டினார்கள், ஆனால் பல நேரங்களில் அதனை விரிவாக தங்களின் மனக்கண்ணில் பதிவு செய்தும், அதனை நுட்பமான குறிப்புகளாகவும் எழுதினார்கள்.

ராணி மங்கம்மாள் கோடை அரண்மனை- கேப்டன் லினேஸ் த்ரீப் 1858
ராணி மங்கம்மாள் கோடை அரண்மனை- கேப்டன் லினேஸ் த்ரீப் 1858

கேப்டன் லினேஸ் த்ரீப் (Capt. Linnaeus Tripe) 1858-ல் மதுரைக்கு வந்து ராணி மங்கம்மாளின் கோடை அரண்மனையான இன்றைய காந்தி மியூசியத்தைப் படம் பிடித்தார், அவர் எடுத்தது தான் அந்தக் கட்டடத்தின் ஆகப்பழைய புகைப்படம். மதுரை எங்கும் அவர் சுற்றித்திரிந்து அதனை அவரது நாட்குறிப்பில் பதிவு செய்திருக்கிறார்.

மீனாட்சி அம்மன் கோயில் - எட்மண்ட் டேவி லயன் 1868
மீனாட்சி அம்மன் கோயில் - எட்மண்ட் டேவி லயன் 1868

1868-ல் எட்மண்ட் டேவி லயன் (Edmund David Lyon) மதுரைக்கு வருகிறார், அவர் மதுரையில் 40 புகைப்படங்களை எடுக்கிறார். திருப்பரங்குன்றம் மலை, திருப்பரங்குன்றம் தெப்பக்குளம், மீனாட்சி அம்மன் கோயில் தெற்குக் கோபுரம், மாரியம்மன் தெப்பக்குளம் என அவருடைய படங்கள் அனைத்தும் Ancient Architecture of Southern India' (Marion & Co., London, 1870) எனும் நூலாகத் தொகுக்கப்பட்டன. இந்த 40 படங்களுமே இன்றளவும் மதுரையின் முக்கிய ஆவணங்களாகத் திகழ்கின்றன.

திருப்பரங்குன்றம் தெப்பம் - எட்மண்ட் டேவி லயன் 1868
திருப்பரங்குன்றம் தெப்பம் - எட்மண்ட் டேவி லயன் 1868

முதன்முதலாக கேமராவில் பயன்படுத்தும் பிலிம் சுருளை ஜார்ஜ் ஈஸ்டமென் என்பவர் கண்டுபிடித்தார். இவர் 1871ஆம் ஆண்டில் செல்லுலாய்டு பிலிமைத் தயாரித்தார். 1888ஆம் ஆண்டில் ஜார்ஜ் ஈஸ்டமென் கோடாக் கேமராவைத் தயாரித்தார். இந்தக் கேமராவில்தான் பிலிம் சுருள்களை முதன்முதலில் பயன்படுத்தினார். இவர் தயாரித்த கேமராவில் 100 படங்களை எடுக்கக்கூடிய படச்சுருளை அடைத்து விற்பனை செய்தார். அதன் பிறகே கேமிராவைப் பலர் விலைக்கு வாங்கி உலகெங்கிலும் பயணப்பட்டனர். ஜார்ஜ் ஈஸ்டமெனின் இந்தக் கண்டுபிடிப்பு ஒட்டுமொத்த உலகையே ஆவணப்படுத்தும் பணியில் பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தியது.

ஜெர்மனைச் சேர்ந்த ஜான் க்ளீச் (John Gleich 1879- 1927) 1909-10 வருடங்கள் இந்தியா, இலங்கைப் பகுதிகளில் பயணம் மேற்கொண்டார். மதுரையின் தெருக்கள் சிலவற்றை அவர் மிகத்துல்லியமாகப் பலவண்ண ஓவியங்களாகத் தீட்டியிருக்கிறார்.

சார்லஸ் பார்ட்லெட் (Charles Bartlett 1860-1940) பிரிட்டனில் இருந்து பயணப்பட்டு 1913-ல் ஆசிய நாடுகளுக்கு வருகிறார். பாகிஸ்தான், இலங்கை, இந்தோனேசியா, சீனா, ஜப்பான் செல்கிறார். ஜப்பானில் அவர் சொசாபூரு வந்தனபாவை சந்திக்கிறார், அங்கு உருவாகி வரும் ஹேண்ட் பிளாக் பிரிண்ட் (HAND BLOCK PRINTING) எனும் துணியில் அச்சிடும் வழிமுறையைப் பார்த்து அதனை ஜப்பானில் இருந்து ஐரோப்பாவிற்கு ஒரு கலாச்சாரப் பரிமாற்றமாக எடுத்துச் செல்கிறார். இந்தியாவிற்கு வந்த அவர் மதுரைக்கு வருகிறார், மதுரையில் ஏராளமான புகைப்படங்களை எடுக்கிறார். மீனாட்சி அம்மன் கோயில், புது மண்டபம் எனப் பல முக்கியப் படங்களை எடுக்கிறார். அவர் முக்கியமாகக் கருதும் கட்டடங்களை, கோயில்களை, சிற்பங்களை ஓவியங்களாகத் தீட்டினார், படம் பிடித்தார். அதனைச் சுற்றிய மனிதர்களையும் இணைத்து ஆவணப்படுத்தினார். புதுமண்டபத்தில் விதவிதமான துணிகளை வியாபாரிகள் வாடிக்கையாளர்களுக்குக் காண்பிப்பது அவர் கண்களை வசீகரிக்கிறது.

W.G.P. Jenkins, William W. Whelpdale and Ravanat Naik - 1840
W.G.P. Jenkins, William W. Whelpdale and Ravanat Naik - 1840

1924-ல் வில்லியம் ஸ்பென்சர் பக்தாடோபோலூஸ் (William Spencer Bagdatopoulos 1888–1965) மதுரைக்கு வந்து சில காலம் தங்கியிருந்தார். அவர் மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருப்பரங்குன்றம் கோயில் உள்ளிட்ட மதுரையின் முக்கியச் சின்னங்கள் அனைத்தையும் புகைப்படமாகப் பதிவு செய்தார்.

யோசிதா ஹிரோஷி  Yashida Hiroshi 1931
யோசிதா ஹிரோஷி Yashida Hiroshi 1931

ஜப்பானைச் சேர்ந்த யோசிதா ஹிரோஷி (Yashida Hiroshi) 1931-ல் மதுரைக்கு வருகிறார். அவரைப் புதுமண்டபத்தின் யாழிகள் பெரிதும் ஈர்க்கின்றன, பகல் பொழுதில் புதுமண்டபத்தில் நிகழும் ஒளியின் விளையாட்டு அவரை பிரமிப்பூட்டுகிறது.

1828-ல் இத்தாலியின் ப்ளாரன்ஸைச் சேர்ந்த கியுலியோ ஃபெராரியோ (Giulio Ferrario Florence) மதுரைக்கு வந்து பல ஓவியங்களை ரசித்து வரைந்திருக்கிறார். 1840களில் W.G.P. Jenkins, William W. Whelpdale and Ravanat Naik ஆகிய மூவரும் மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையை மிகத் துல்லியமாகப் பலவண்ணத்தில் வரைந்திருக்கிறார்கள். மதுரையைச் சார்ந்து நம் கைவசம் இருக்கும் ஏராளமான ஓவியங்களை யார் வரைந்தார்கள், யார் இந்தப் புகைப்படங்களை எடுத்தார்கள் என்கிற குறிப்புகள் இல்லை, இன்னும் விரிவாக இந்தியாவிற்கு வந்தவர்களின் நாட்குறிப்புகளை ஆய்வு செய்தால் இந்தத் தொடர்புகள் கிடைக்கக் கூடும்.

Sciultry di Madhureh by Giulio Ferrario Florence 1828
Sciultry di Madhureh by Giulio Ferrario Florence 1828

பிரான்சில் பிறந்த ஜார்ஜ் கஸ்த் (Georges Gasté 1869–1910) பாரிசில் இருந்து கிளம்பி அல்ஜீரியா, எகிப்து எனப் பயணப்பட்டார். ஜார்ஜ் கஸ்த் நிலக்காட்சிகளை ஓவியங்களாகத் தீட்டினார், அவரை மனித முகங்கள் பெரிதும் ஈர்த்தன, வெவ்வேறு நிலத்தின் மனித முகங்களை அவர் வரைந்தபடி இருந்தார். பிரான்சில் 1906 ஆம் ஆண்டு அவரது மறுமலர்ச்சி ஓவியங்கள் இடம்பெற்ற ஒரு பெரும் கண்காட்சி நடைபெற்றது, அவரின் ஓவியங்கள் மேற்குலகை ஈர்த்தன. இந்த ஓவியங்களில் இருந்த புதிர்த் தன்மை மற்றும் அழகியல் மேற்குலகிற்கு நவீனத்தின் திசைவழியைக் காட்டின. பொதுவாகவே கிழக்கு என்பது மேற்குலகிற்கு ஒரு புதிராகவே இருந்தது. கிழக்கின் மீதான ஈர்ப்பு இன்றுவரை அடங்கவில்லை, கிழக்கை நோக்கிச் செல்வது என்பது ஒரு சாகசத்தில் ஈடுபடுவதாகவே இன்றுவரை கருதப்படுகிறது. ஜார்ஜஸ் கஸ்த் (Georges Gasté 1869–1910)

1908-ல் இந்தியாவிற்கு வந்த ஜார்ஜ் கஸ்த் அப்படியான ஒரு சாகச மனநிலையில்தான் வந்தார். ஆக்ரா, பெனாரஸ், மதுரா, உதய்பூர், காஷ்மீர், அம்ரிதசரஸ் என ஒரு சுற்றிச் சுற்றி அலைந்தார், நிறைய ஓவியங்களை வரைந்தார், புகைப்படங்களை எடுத்தார். ஆக்ராவில் அவர் யமுனை ஆற்றின் கரையில் இருந்து தாஜ்மகாலை எடுத்த படம் உலகப்புகழ்பெற்றது. அதனை அவர் சீதாவின் அரங்கம் என்று பெயரிட்டார், அதில் ஒரு கிராமத்துச் சிறுமி மேலாடையின்றி நின்றிருப்பாள். இப்படி ஏராளமான படங்களை அவர் இந்தியாவெங்கும் எடுத்தார், இந்த எல்லாப் படங்களிலும் சாமானியர்கள்தான் படத்தின் நாயகர்களாக அதனை அலங்கரித்தனர்.

தனது வட இந்தியப் பயணத்தை முடித்துவிட்டு அவர் மதுரைக்கு வந்தார். மதுரையின் மக்கள், மதுரையின் ஜனசந்தடி மிகுந்த தெருக்கள், மதுரையின் திருவிழாக்கள் என மதுரையைச் சுற்றிச் சுற்றி ஒரு மதுரைக்காரராகவே அவர் மாறுகிறார். மதுரை நகரமும் மக்களும் அவரை அப்படியே நீ எங்கள் வீட்டுப் பிள்ளைடா என்று வசீகரித்துக்கொண்டனர்.

தெப்பக்குளத்தின் கலைஞர்கள்- கஸ்த் 1909
தெப்பக்குளத்தின் கலைஞர்கள்- கஸ்த் 1909

மதுரையில் தனக்கான ஒரு ஸ்டூடியோவைத் திறக்கிறார் ஜார்ஜ் கஸ்த். அவர் தன் வசம் உள்ள கேமராவில் மதுரையை ஏராளமான புகைப்படங்கள் எடுக்கிறார். வண்டியூர் மாரியம்மன் தெப்பத்திருவிழாவிற்குச் சென்று ஏராளமான புகைப்படங்களை எடுக்கிறார். தெப்பத்தைச் சுற்றி வரும் யானை, கூட்டமாகக் குழுமியிருக்கும் மக்கள், மண்டகப்படிகளில் தங்கியிருக்கும் கிராம மக்கள், நடனமாடும் பெண் என அவரது ஒவ்வொரு படமும் விளிம்புநிலை மக்களின் ஆவணமாகத் திகழ்கிறது.

ஒரு மாலைப் பொழுதில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள பொற்றாமரைக் குளத்தில் ஏராளமான பெண்கள் குளித்துக் கொண்டிருக்கிறார்கள், சிறுமிகள் ஊஞ்சல் மண்டபத்திற்குக் கீழ் உள்ள தூண்களில் மறைந்து நிற்கிறார்கள். மரகத நிறத்து நீரில் அல்லி, தாமரை, மரிக்கொழுந்து எனப் பல வண்ணங்களில் பூக்கள் மிதக்கின்றன. அஸ்தமனத்தின் வெளிச்சத்தில் தெற்குக் கோபுரத்தின் சிலைகள் பொன் நிறத்தில் மிளிர்கிறது. ஒரு பெரும் அலங்கரிக்கப்பட்ட சட்டகமாக இந்த ஓவியம் திகழ்கிறது. இந்த ஓவியத்தை அவர் பிராமணர்களின் குளியல் (LE BAIN DES BRAHMINES) என்று பெயரிட்டார்.

பொதுவாகவே கஸ்தின் ஒவ்வொரு படைப்பிலும் வாழ்க்கை (life) ஒரு பிரவாகமாகப் பொங்கி வழியும், புதிர்த்தன்மையும் அழகியலும் நவீனமும் ஒன்றை ஒன்று திமிறி நிற்கும், கூர்ந்து நோக்கும் கண்களுக்கு மட்டுமே இந்த வாழ்வின் ததும்பல் புலப்படும்.

மதுரையில் ஏராளமான நண்பர்கள் அவருக்கு உருவாகிறார்கள், அவருக்கு உதவி செய்ய ஒரு இளம் பட்டாளம் அவரைச் சூழ்கிறது. கஸ்த் மதுரைத் தெப்பக்குளத்தை ஒரு அற்புதமான ஓவியமாக வரைகிறார், அந்த நேரம் அதற்கு உதவிய ஓர் இளைஞரை அந்த சட்டகத்திற்கு அருகில் நின்று அதைப் பார்த்துக்கொண்டிருப்பது போல் ஒரு புகைப்படம் எடுத்திருக்கிறார். தெப்பக்குளத்தின் அந்த ஓவியம் நீண்ட நாள் மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் இருந்துள்ளது என்று அறிந்தேன். ஓர் ஓவியத்தில் குளக்கரையில் ஐயனார் கோயிலும் அந்த இடம் மக்கள் சூழ உள்ளதையும் உயிரோட்டமாக வரைந்திருப்பார். ஒரு கோயிலில் சிற்பங்களின் ஊடே சிற்பமாகவே நிற்கும் தாசியின் ஓவியம் காவியத்தன்மையுடன் இருக்கும், அந்த தாசியின் கையில் இருக்கும் ஒரு விசிறியும் அவள் தலையில் இருக்கும் பூக்களும் என்னைப் பெரிதும் துன்புறுத்தின, அந்த ஓவியத்தில் அவர் பாவித்த வண்ணங்களின் கலவை அபாரமாக இருக்கும், வெளிச்சத்துடன் பெரும் விளையாட்டை அவர் அதில் நிகழ்த்தியிருப்பார்.

ஜார்ஜ் கஸ்தின் ஓவியம் மற்றும் அவரது உதவியாளர்
ஜார்ஜ் கஸ்தின் ஓவியம் மற்றும் அவரது உதவியாளர்

ஜார்ஜ் கஸ்த்தின் ஸ்டூடியோ எங்கிருந்தது என்பது இன்னும் ஒரு புதிராகவே உள்ளது, ஒரு மாடியில் இருக்கும் அவரது ஸ்டூடியோவில் இருந்து அவர் வெளியே நின்று பார்க்கும் ஒரு காட்சி புகைப்படமாக இருக்கிறது, முறுக்கு மீசையுடன் எனக்கு அவரது முகம் எப்பொழுதும் டாலியை நினைவூட்டும், ஆனால் இவரது மீசை கூடுதல் மதுரைத்தனத்துடன் தெனாவட்டுடன் இருக்கும்.

தனது மதுரை ஸ்டூடியோவில் இருந்து எட்டிப்பார்க்கும் கஸ்த்
தனது மதுரை ஸ்டூடியோவில் இருந்து எட்டிப்பார்க்கும் கஸ்த்

மதுரையில் சில மாணவர்களை கஸ்த் ஓவியத்திலும் காமிரா கையாளுதலிலும் பயிற்றுவிக்கிறார். 1910ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி கஸ்த் தனிமையில் தனது ஸ்டூடியோவில் இறந்து கிடந்த போது அவரது முற்றுப்பெறாத ஓவியம் ஒன்று அருகில் இருந்தது. அவரது அறை எங்கும் நூற்றுக்கணக்கான கடிதங்கள் மங்கிப்போன மையுடன் காட்சியளித்தன, அவரைப் பாராட்டி நாளிதழ்களில் வெளிவந்த பல கட்டுரைகள் இருந்தன, புகைப்பட நெகட்டிவ்கள் நிறைய சிதறிக்கிடந்தன, நான்கு மூலைகளிலும் வெட்டப்பட்ட நிறைய புகைப்படங்கள் இருந்தன. கஸ்த் இறக்கும் போது அவருக்கு 41 வயது.

இப்படி அலை அலையாய் உலகம் முழுவதும் இருந்து மதுரைக்கு வந்தவர்கள் நம் நிலத்தை ஆவணப்படுத்தினார்கள், ஒரு நிலவு குளத்தில் பிரதிபலிப்பதைப் போலவே இவர்களின் புகைப்படங்களில், ஓவியங்களில் மதுரை மிளிர்ந்து மிதக்கிறது.

மேற்கத்திய ஓவியர்கள் புகைப்படக் கலைஞர்கள் பலர் ஏன் இந்தியா நோக்கி ஈர்க்கப்பட்டார்கள் என்கிற ஒரு கேள்வி தொடர்ந்து மனதில் எழுந்தவண்ணம் இருந்தது. பொதுவாக பனியும், குறைந்த வெயிலும் வெளிச்சமும் உள்ள நாடுகளில் வாழ்ந்தவர்கள் முதல் முறையாக கடக ரேகையை ஒட்டிய நாடுகளுக்கு வருகிறார்கள். இவ்வளவு வெளிச்சத்தை வெயிலை அவர்கள் இதுகாறும் பார்த்ததில்லை. கஸ்த் இந்த வெயிலைப் பற்றி விரிவாகப் பேசியிருக்கிறார். கஸ்தை ஒரு வெளிச்சம் மதுரை நோக்கி அழைத்து வந்தது, அவர் மதுரைக்கு வெயிலைப் பருகவே வந்தார். இவர்கள் அனைவருமே வெயிலைப் பருக வந்தவர்களே.

நன்றி:

GEORGES GASTE Un Orient SansMirages - Gourcuff Gradenigo

கொலம்பியா பல்கலைக்கழகம் ஆவணக்காப்பகம், நியூ யார்க்

பிரிட்டிஷ் நூலகம், லண்டன்