மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 30

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்

- சுவாமி சுகபோதானந்தா

“எனக்குள்ள ஏராளமான ஐடியாக்கள் கொட்டிக்கிடக்கு. ஆனா அதையெல்லாம் பகிர்ந்துக்கணும்னு நினைச்சா மேலதிகாரியா இருந்தாலும் சரி, உடன் வேலை பார்க்கிற ஊழியர்களா இருந்தாலும் சரி, காதுகொடுத்துக் கேட்பதில்லை. ‘அடேங்கப்பா, ஐடியா சிகாமணி சொல்றதைக் கேட்டா கம்பெனி எங்கேயோ போயிடும்ல’ என என்னை நக்கல் செய்ய அவர்கள் செலவிடும் ஆற்றலை ஒருமுறை நான் சொல்வதைக் கேட்கச் செலவிட்டாலே போதும். உருப்படியாக ஏதாவது நடக்கும். சரி, வீட்டில் இதையெல்லாம் சொல்லலாமென்றால் அவர்களோ, ‘வாங்குன சம்பளத்துக்கு வேலை பார்த்தா போதாதா? எதுக்கு தேவையில்லாத ஐடியா எல்லாம் சொல்லி எக்ஸ்ட்ரா வேலையை இழுத்துப் போட்டுக்குறீங்க?’ என புத்திமதி சொல்கிறார்கள்’’

- ‘எத்தனைக் காலமானாலும் ஏழை சொல் அம்பலம் ஏறாது’ என நினைப்பவர்களில் ஒருவர் சமீபத்தில் என்னைச் சந்தித்தார். அவர் சொன்னதுதான் இது.

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 30

‘‘சரி, கம்பெனி சீனியர்கள், குடும்பத்தின் முக்கிய உறுப்பினர்களை எல்லாம் விட்டுவிடுங்கள். உங்கள் பத்து வயதுப் பையனிடம் நீங்கள் இதுபோன்ற அறிவுரைகளை, யோசனைகளைச் சொன்னால் அவன் ஏற்றுக்கொள்கிறானா?’’ எனக் கேட்டேன். ‘‘நான் என்ன பேச ஆரம்பித்தாலும் சலிப்பாய், ‘போர் அடிக்காதப்பா’ என, கேட்க மறுத்து எழுந்துபோய்விடுகிறான். சிறுவர்களிடம் கவனச்சிதறல் இயல்புதானே?’’ என, நான் எதற்காகக் கேட்டேன் என்பதைப் போலப் பார்த்தார்.

‘‘சரி, உங்களிடம் ஒரு கோடி ரூபாய் பணம் இருந்தால் அதைத் தேவைப்படுபவர்களுக்குக் கொடுப்பீர்களா? இல்லை நீங்களே பயன்படுத்துவீர்களா?’’ என நான் அடுத்து கேட்ட கேள்வி அவர் பார்வையில் இன்னும் மாற்றங்களை ஏற்படுத்தியது.

‘‘உங்கள் மேலாளர் தனது வேலையை இன்னும் சிறப்பாகச் செய்ய முடியும் என உங்களுக்குத் தோன்றுகிறது. அதனால் அவருக்கு ஐடியாக்களை அள்ளித் தருகிறீர்கள். உங்கள் முதலாளி இன்னும் எந்த வகையிலெல்லாம் பணம் பெருக்கலாம் என உங்களுக்குத் தோன்றுவதை எல்லாம் சொல்கிறீர்கள். அதுவும் நியாயம்தான். அவர் லாபம் கூடினால்தான் உங்கள் வருமானமும் உயரும். புரிகிறது. என் கேள்வி இதுதான்: கடைசியாக ‘இதெல்லாம் செய்தால் நம் செல்வமும் பலமடங்கு பெருகும்’ என உங்களுக்கு நீங்களே எப்போது அறிவுரை சொல்லிக்கொண்டீர்கள்? அதை எவ்வளவு தூரம் கடைபிடித்தீர்கள்?’ என அவரிடம் கேட்டேன். அவருக்கு நான் சொல்ல வருவது புரிந்துவிட்டது என பாவனைகளில் தெரிந்தது.

‘‘நாம் வேலை செய்யும் நிறுவனத்துக்கு விசுவாசமாக இருக்கவேண்டும். நிறுவனம் முன்னேற உழைக்க வேண்டும் என்பதெல்லாம் சரிதான். ஆனால் அதற்காக நாம் குரல் கொடுக்கும்போது, அதற்குத் தகுதியுடையவராக இருக்கவேண்டும். நமக்குக் கொடுக்கப்பட்டதைத் திறம்பட சாதித்துக்காட்டினால்தான் நம்மீதான மதிப்பு உயரும். உங்களை நீங்கள் நிரூபித்தபின் உங்கள் ஐடியாக்களைப் பகிர்ந்தால் அதைக் கேட்பதைத் தவிர சபைக்கு வேறுவழியில்லை’’ என்றேன். புரிந்ததால் கிளம்பினார்.

‘அதெல்லாம் அவ்வளவு சுலபமில்ல. ஆபீஸ் பாலிட்டிக்ஸ் நிறைய இருக்கு, அப்படியெல்லாம் நம்மள வளரவிட்ரமாட்டாங்க’ என இதை மேலும் வளர்த்துச் செல்வார்கள் சிலர். அவர்களுக்குத்தான் இந்தக் கதை.

வெளியூரில் பெருநிறுவனத்தில் வேலைபார்க்கும் மகள் தன் பெற்றோரைப் பார்க்க விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்தாள். எல்லா வீடுகளையும்போல முதல் சில நாள்கள் ராஜபோக கவனிப்பு. அதன்பின் சின்னச் சின்ன வேலைகளைச் செய்யச் சொன்னார் தந்தை. அப்படி ஒருநாள் ஒரு கார் சாவியைக் கொடுத்தவர், “நம்ம ஷெட்ல ரொம்ப நாளா நிற்கும் தாத்தாவோட கார் சாவி இது. அதை இதுக்குமேல என்ன பண்றதுன்னு தெரியல. பராமரிக்கவும் கஷ்டமா இருக்கு. வெளியே யார்கிட்டயாவது தள்ளிவிட முடியுமா பாரு. இடம் அடைக்காமயாவது இருக்கும்” எனச் சொன்னார். மகளும் உடனே காரைக் கிளப்பி வீதிக்கு வந்தார். முதலில் தென்பட்டது பழைய இரும்புப் பொருள்களை வாங்கி உருக்கும் கடை. அங்கே காரைச் சுற்றிச்சுற்றிப் பார்த்தவர்கள் ‘பத்தாயிரம் ரூபாய்’ என விலை சொன்னார்கள். தன் அப்பாவிற்கு போன் செய்து சொன்னார் மகள். ‘ஒரே இடத்துல கேக்குறதை வச்சு முடிவு பண்ணாத. இன்னும் நிறைய இடங்கள்ல கேளு’ என்றார்.

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 30

அடுத்ததாக மகள் சென்றது ஒரு செகண்ட் ஹேண்ட் கார் ஷோ ரூமிற்கு. அங்கே காரை எக்ஸ்ரே எடுக்காத குறையாக அலசியவர்கள், ‘ஐம்பதாயிரம் கொடுக்கிறோம். சாவியைக் கொடுங்கள்’ என்றார்கள். இப்போதும் அவர் தன் தந்தைக்கு போன் செய்து கேட்க, ‘அப்போ இன்னும் நல்ல டீல் கிடைக்க வாய்ப்பிருக்கு. இன்னும் நாலைஞ்சு இடம் பாரு’ என்றார். அடுத்ததாக அந்தப் பெண் சென்றது ஒரு வின்டேஜ் கார் ஷோ ரூமிற்கு. அங்கே இருந்தவர்களுக்கு இந்தக் காரைப் பார்த்ததும் ஆச்சரியம் தாங்கவில்லை. காரை சோதித்தவர்கள், “உடனே பத்து லட்சம் தருகிறோம். இதை எங்களுக்குக் கொடுத்துவிடுங்கள். நன்றாகப் பார்த்துக்கொள்கிறோம்” என்றார்கள்.

மகள் வீடு திரும்பியபோது ஹாலில் அமர்ந்திருந்தார் தந்தை. ‘என்னாச்சு? அதுக்கப்புறம் போன் பண்ணவேயில்ல. எவ்வளவுக்குப் போச்சு கார்?’ எனக் கேட்டார். ‘விலையை எல்லாம் தாண்டி முக்கியமான வாழ்க்கைப் பாடத்தை இன்னிக்குக் கத்துக்கிட்டேன். ஒரு பொருளோட மதிப்பு அது எந்த இடத்துல இருக்குங்கிறதைப் பொறுத்துத்தான்’ என்றார் மகள்.

மனிதர்களின் அறிவுரையும் ஐடியாக்களும் அப்படித்தான். எந்த இடத்தில் சொல்லப்படுகிறது என்பதைப் பொறுத்துத்தான் அதன் மதிப்பு. எல்லாரும் ஒரேமாதிரி நம் அறிவுரையை எடைபோடுவார்கள் என எதிர்பார்ப்பது தர்க்கரீதியாக நியாயமில்லை. இந்தக் கதையை ஒரு பயிலரங்கத்தில் சொல்லி முடித்தபோது, எழுந்த பெரிய தொழிற்சாலையின் சீனியர் எக்ஸிக்யூட்டிவ் ஒருவர், ‘நான் ஒரு விஷயம் சொல்லலாமா?’ என்றார். ‘நிச்சயமாக’ என்றேன்.

‘வேலை பார்க்கும் ஊழியர்களை வெறுமனே சம்பளம் வாங்கும் தொழிலாளர்களாகப் பார்க்காமல், அவர்களிடம் ஐடியாக்களை, அறிவுரைகளைக் கேட்டு வாங்குங்கள். அது அவர்களுக்கு நிறுவனத்தின் மீது இன்னும் அக்கறையை அதிகப்படுத்தும். நிறுவனம் நம்முடைய சொல்லையும் கேட்கிறது என்கிற எண்ணமே அவர்களை மேலும் ஈடுபாட்டோடு வேலை பார்க்க வைக்கும்’ என எங்கள் நிறுவனத்தின் ஆலோசகர்கள் சொன்னார்கள். அதைக் கேட்டு நானும் எங்கள் நிறுவனத்தில் எல்லா மேலாளர்களையும் அவர்களின் டீம் உறுப்பினர்கள் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்கச் சொன்னேன். வந்த ஆயிரக்கணக்கான ஐடியாக்களில் 90 சதவிகிதம் வேலைக்காகாதது. இதென்ன வீண்வேலை எனக் கடைசியாகத் தோன்றிவிட்டது’ என்றார் அந்த சீனியர் எக்ஸிக்யூட்டிவ்.

இதற்கு நான் பதில் சொல்லும் முன்பே எழுந்த மற்றொரு நிறுவனத்தின் மேலதிகாரி, ‘ஆலோசகர்கள் உங்களிடம் சொன்னது அறிவுரைகளைக் கேளுங்கள் என்றுதான். நீங்கள் யாரிடம் அறிவுரை கேட்டாலும் அதில் ஏதாவது ஒன்றுதான் பின்பற்றக்கூடியதாய் இருக்கும். அதற்காக கேட்காமல் இருக்கக்கூடாது. உங்களுக்கு வேண்டுமானால் அது தேவையில்லாத ஒன்றாக இருக்கலாம். ஆனால் சொன்ன ஆயிரம் பேருக்கும் கம்பெனி நம்மளை மதிச்சுக் கேட்குதே என்கிற கெளரவம் உள்ளூரக் கிடைக்கும். அது வேலைத்திறனில் எதிரொலிக்கும்’ என்றார். முதலில் பேசியவருக்கு பதிலோடு தெளிவும் கிடைத்துவிடவே ஆமோதித்தபடி அமர்ந்தார்.

- பழகுவோம்...

******

ஃபெருச்சோ
ஃபெருச்சோ
ஃபெராரி
ஃபெராரி
லம்போர்கினி
லம்போர்கினி

`இத்தாலி நாட்டில் டிராக்டர் கம்பெனி ஒன்றை நடத்திவந்தவர் ஃபெருச்சோ. ‘உங்கள் காரில் இந்த இந்தக் குறைகளெல்லாம் இருக்கின்றன. அதை இப்படியெல்லாம் சரி செய்யலாம்’ என நிறைய யோசனைகளோடு அவர் ஒருமுரை ஃபெராரி கார் கம்பெனியின் மேலதிகாரிகளைச் சந்தித்தார். ‘டிராக்டர் கம்பெனி நடத்துபவருக்கு சூப்பர் கார் பற்றியெல்லாம் என்ன தெரியும்?’ என அவரை எள்ளி நகையாடித் திருப்பியனுப்பிவிட்டார்கள். அன்று அவமானப்படுத்தப்பட்ட ஃபெருச்சோ அதன்பின் ஒரு கார் கம்பெனியைத் தொடங்கினார். அதுதான் லம்போர்கினி. ஒருவேளை ஃபெருச்சோ சொன்னதை அன்று ஃபெராரி காதுகொடுத்துக் கேட்டிருந்தால்... யார் கண்டது, இன்று அந்நிறுவனத்திற்குப் போட்டி நிறுவனம் ஒன்று இல்லாமலே போயிருக்கலாம். ‘எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும்’ எனும் உலகப்பொதுமறையின் பொருள் புரிந்தவர்கள் ஃபெராரி நிறுவனத்தில் இல்லாமல்போனது அந்நிறுவனத்தின் சிக்கலே!