
- சுவாமி சுகபோதானந்தா
எளிமையான விவசாயக் குடும்பப் பின்னணியைக் கொண்ட பெண் அவர். இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியாகவும் சிக்கனமாகவும் வாழும் வழி தெரிந்தவர். பரபரப்புகள் இல்லாத வாழ்க்கைதான் என்றாலும், அதிகாலை எழுந்து தயாராகி கோயிலுக்குப் போய் வந்து கைப்பட சமைத்து அதன்பின் தன் திருப்திக்காக வீட்டைச் சுத்தம் செய்து துப்புரவாக்கி... இதுதான் பல்லாண்டுகளாக அவரின் ஒருநாள் வாழ்க்கை. வெளிப்பார்வைக்கு எளிதாகத் தோன்றலாம். ஆனால் செய்பவர்களுக்கு மட்டுமே அதன் கஷ்டம் தெரியும். அதுவும் ஆண்டுக்கணக்கில் இதைச் செய்பவர்களுக்கு. ‘‘என் மனைவி கொஞ்ச நாளாவே ஒருவித அழுத்தத்துல இருக்காங்க. நீங்கதான் என்னன்னு பேசி பிரச்னைக்குத் தீர்வு சொல்லணும்’' என எனக்கு போன் செய்தார் அந்தப் பெண்மணியின் கணவர். ஆரம்பத்தில் அந்தப் பெண்மணியிடமிருந்து சன்னமான விசும்பல்கள் மட்டுமே கேட்டன. மெல்ல மெல்ல அவை வடிய, பேசத் தொடங்கினார்.


‘‘பையன் சென்னைல இருக்கான். ‘அடிப்படை வசதிகள்கூட முறையா இல்லாத கிராமத்துல இருந்து ஏன் கஷ்டப்படுறீங்க? பேசாம என்கூட வந்துடுங்க. படியேறினா கஷ்டப்படுவீங்களேன்னு, நல்லா டெவலப் ஆகிட்டிருக்குற ஏரியால கிரவுண்ட் ப்ளோர்லயே ஒரு வீடு வாடகைக்குப் பிடிச்சிருக்கேன். எல்லாரும் ஒண்ணா இருக்கலாம்'னு பையன் கூப்பிட்டான். பையன் முடிவு சரியாத்தான் இருக்கும்னு நாங்களும் எதையும் யோசிக்காமக் கிளம்பி சென்னைக்கு வந்துட்டோம். கொஞ்சம் கொஞ்சமா இந்தப் பரபரப்பான நகர வாழ்க்கைக்குப் பழகிட்டிருக்கும்போதே பருவமழைக்காலம் வந்துடுச்சு.
திடீர்னு பெய்த ஒரு நாள் மழைல எங்க வீட்டுல இடுப்புவரை தண்ணி. என் பையன் வாங்கிப் போட்டிருந்த ப்ரிட்ஜ், டிவின்னு எல்லாத்துக்குள்ளயும் தண்ணி ஏறிடுச்சு. அவன் சர்ட்டிபிகேட்கூட நனைஞ்சுடுச்சு. எல்லாத்துக்கும் மேல மழைநீரோட கழிவுநீரும் கலக்க, எங்களால வீட்டுக்குள்ள இருக்கவே முடியலை. அந்தத் தண்ணில நீந்தி வந்துதான் என் பையன் சாப்பாடு வாங்கிக் கொடுத்தான். கழிவுநீருக்கு மேல கட்டில், அதுக்கு மேல நாங்கன்னு நின்னுகிட்டே சாப்பிட்ட அந்தக் கொடுமையை நினைக்கிறப்போ மனசே உடைஞ்சுடுது. பாத்ரூம்கூடப் போக முடியலைங்க. மொத்தமா வாழ்க்கையே வெறுத்துப்போச்சு’' எனச் சொல்லும்போதே அவர் கண்களிலிருந்து நீர் கொட்டியிருக்கும் என்பதை இந்த முனையிலிருந்து என்னால் உணர முடிந்தது.


இப்படிச் சிரமப்படுவது இவர் மட்டுமல்ல, லட்சக்கணக்கான மக்கள் இந்தத் தொடர் மழைக்காலத்தில் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள். ‘அன்னன்னிக்கு உழைச்சாதான் சோறு' என உழைப்பவர்கள் தொடங்கி, சிறு, குறு வியாபாரிகள், ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்கள் என ஏராளம்பேர் படும் அவஸ்தைகள் கணக்கிலடங்காது.
2015-ம் ஆண்டு மழை வெள்ளம் சென்னையைத் துவைத்துத் தூக்கி எறிந்தபோது எட்டுத்திசைகளிலிருந்தும் நீண்டன ஆயிரமாயிரம் உதவிக்கரங்கள். உணவு, நீர், மருந்துகள், போர்வை எனத் தங்களால் முடிந்ததை இல்லாதவர்களுக்குக் கொடுக்கும் மனிதத்தை கடந்தவார மழையிலும் காண முடிந்தது.
அறிவுரைகள் சொல்ல நேரங்காலம் மிக முக்கியம். மக்கள் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும்போது நாம் சென்று அறிவுரை சொன்னால் அவர்கள் சங்கடத்துக்கு உள்ளாவார்கள். இதனால்தான் நான் பொதுவாக கதை வழியே நீதி சொல்ல முயல்கிறேன். இது இப்போதுவரையிலும் பலன் தருகிறது. கதை நிகழ்த்தும் உரையாடலைவிடச் சிறந்த உரையாடல் எது? ஒருவகையில் நாம் பங்கேற்ற முதன்முதல் மழலை உரையாடலும், அதுநாள் வரை நாம் கேட்ட கதைகளின் நீட்சிதானே.
மானுடவியல் தொடர்பான ஆய்வு ஒன்று நடத்த ஐரோப்பியர் ஒருவர் ஆப்பிரிக்காவிற்குச் சென்றிருந்தார். அங்கே ஜூலு என்கிற பழங்குடி மக்களோடு பழகி, பல தகவல்களைச் சேகரித்தார். அவர் அங்கேயே தங்கியிருந்ததால் சில நாள்களிலேயே அந்த மக்கள் அவரோடு நெருக்கமாகிவிட்டார்கள். முக்கியமாகக் குழந்தைகள். ஒருநாள் குழந்தைகளுக்கு விளையாட்டுப் போட்டி நடத்த முடிவு செய்த அவர், அவர்களை அழைத்தார். தூரத்தில் ஒரு மரத்தின் அடிக்கிளையில் கட்டப்பட்டிருந்த மிட்டாய்ப் பையைக் காட்டி, ‘அந்தப் பையை முதலில் யார் சென்று எடுக்கிறார்களோ அவர்களுக்கு அந்த மிட்டாய்கள் சொந்தம்' என்றார். அவர் விசில் ஊதவும் குழந்தைகள் ஓடத்தொடங்கினார்கள்.


ஆனால் ஆச்சரியம் என்னவெனில், அவர்கள் எல்லோரும் ஒன்றாகக் கைகோத்துக்கொண்டு ஓடினார்கள். அதைவிட ஆச்சரியம், பையை அடைந்ததும் அதை எடுத்து வட்டமாய் அமர்ந்துகொண்டு சரியாய்ப் பகிர்ந்துகொடுத்து உண்ணத் தொடங்கினார்கள். அந்த ஐரோப்பியர் வியப்பு மாறாமல் அவர்களருகே வந்து, ‘‘பந்தயம் என்பதே ஒரு வெற்றியாளரைத் தீர்மானிப்பதற்குத்தான். எப்படி இத்தனை வெற்றியாளர்கள் ஒரு போட்டியில் இருக்கமுடியும்?'’ எனக் கேட்டார். அந்தக் குழந்தைகளில் வயது மூத்த சிறுவன் ஒருவன் எழுந்து, ‘உபுன்டு' என்கிற ஒற்றை வார்த்தையை மட்டும் உதிர்த்துவிட்டு அமர்ந்துகொண்டான். அவர்கள் மொழியில் உபுன்டு என்றால் ‘எல்லாரும் சேர்ந்தால்தான் நான்' என்பது பொருள். ஜூலு இன மக்கள் அடிக்கடி பயன்படுத்தும் சொல் இது. மற்றொரு சிறுவன் எழுந்து, ‘‘நீங்கள் சொல்வதுபோல ஓடியிருந்தால் எங்களில் ஒருவர்தான் வெற்றிபெற்றிருக்கமுடியும். அந்த ஒற்றை ஆள் மட்டுமே மகிழ்ச்சியாய் இருந்திருக்க முடியும். மற்றவர்களெல்லாம் தோற்ற வேதனையில் இருக்கும்போது ஒரே ஒருவர் மட்டும் மகிழ்ச்சியாய் இருப்பது எப்படி நிஜமான மகிழ்ச்சியாகும்?'’ எனக் கேட்டான்.
சரிதானே... மற்றவர்கள் தவித்திருக்கும் போது நாம் மட்டும் மகிழ்ச்சியாய் இருப்பது எப்படி சாத்தியம்? அது நிஜத்தில் மகிழ்ச்சிதானா? வெள்ளத்தில் மற்றவர்கள் உழலும்போது நாம் மட்டும் பத்திரமாக இருக்கிறோம் என அதை நினைத்து மகிழ்ச்சிகொள்வது சரியா? அல்லது உதவிக்காகக் காத்து நிற்பவர்களுக்கு நம்மாலானதைச் செய்து அவர்களை நிம்மதிப் பெருமூச்சு விட வைப்பது சரியா? உண்மையில் தேவைப்படும்போது நீட்டப்படும் உதவிக்கரம்போல இன்றியமையாதது வேறெதுவுமில்லை. ‘காலத்தினால் செய்த உதவி இவ்வுலகத்தை விடவும் பெரியது?' எனச் சும்மாவா சொன்னார் தமிழின் மூத்தகவி.
- பழகுவோம்

தொலைக்காட்சியைத் திறந்தால் செய்திகளில், மொபைலைத் திறந்தால் மெசேஜ்களில் என எல்லாப் பக்கமும் பெருமழை குறித்த பயமுறுத்தும் தகவல்கள். பலர் பழைய பெருவெள்ள வீடியோக்களைப் பகிர்ந்து குரூர திருப்தி அடைகிறார்கள். ஆற்றுப்படுத்த எப்போதும் நான் சொல்வதையே இப்போதும் சொல்கிறேன். `இதுவும் கடந்து போகும்.'
உண்மையில் நாம் பயப்பட வேண்டியது மழையையோ வெள்ளத்தையோ பார்த்து அல்ல. அவை நம்மிடையே விதைக்கும் அவநம்பிக்கையைப் பார்த்துதான். இந்தத் தற்காலிகத் தடங்கல்கள் மனித இனம் தோன்றிய காலம்தொட்டே இருப்பவைதான். இதயம் எப்படி இயங்குகிறது என்பதைத் தெரிந்துகொள்ள நாம் எடுக்கும் ஈ.சி.ஜி ஏற்ற இறக்கமாகத்தான் இருக்கும். அது நேர்க்கோடாக இருந்தால் நம் ஆயுள் முடிந்துவிட்டதாக அர்த்தம். அதேதான் வாழ்க்கையிலும். ஏற்றமும் தாழ்வும் இரண்டறக் கலந்ததுதான் வாழ்க்கை. எனவே மாறிமாறி வரும் இன்பத்தையும் துன்பத்தையும் ஒரே மாதிரி பார்ப்பதற்குப் பழகிக்கொள்ளுங்கள். நாம் ஒவ்வொருமுறையும் கீழே விழுவது மீண்டெழுவதற்குத்தானே தவிர வீழ்ந்து கிடப்பதற்கல்ல.