மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 7 - சுவாமி சுகபோதானந்தா

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்

நம்பிக்கைத் தொடர்

கோபம் என்பது நமக்குள் உருவாகி, முதலில் நம்மைக் காயப்படுத்திவிட்டு, அதன்பிறகே அடுத்த வர்களைத் தாக்குகிறது. அதன் வேகத்தை முதலில் சந்திக்கும் நாம்தான் அதிக பாதிப்பு அடைகிறோம். பலருக்கு இது புரிவதில்லை.

ஒரு முனிவர் தன் சீடர்களுடன் ஆற்றங்கரையில் குளித்துக் கொண்டி ருந்தார். சற்றுத் தொலைவில் நான்கைந்து பேர் கொண்ட குடும்பம் ஒன்றும் குளித்து முடித்து, துணியை உலர்த்திக் கொண்டிருந்தது. அந்தக் குடும்பத்தினருக்குள் எதைப் பற்றியோ சாதாரண உரையாடல் தொடங்கி, சிறிது நேரத்தில் அது வாய்ச்சண்டையாக மாறியது.

‘`குருவே, ஏன் இப்படி உரத்த குரலில் ஒருவரைப் பார்த்து ஒருவர் பேசிக் கொள்கிறார்கள்? இவ்வளவுக்கும் இவர்கள் அனைவருமே ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களைப் போலத்தான் தெரிகிறது’’ என்று சீடர் ஒருவர் கேட்டார்.

‘`ஒருவர் பேசுவது இன்னொரு வருக்குக் கேட்க வேண்டுமானால் சத்தமாகத்தானே பேசவேண்டும்’’ என்றார் முனிவர்.

‘`என்ன சுவாமி சொல்கிறீர்கள். அத்தனை பேருமே அருகருகில்தானே இருக்கிறார்கள். ஒருவர் பேசுவது இன்னொருவருக்குக் கேட்காதா?’’ என்று சீடர் வியப்புடன் மீண்டும் கேட்டார்.

‘`உண்மைதான். அவர்கள் அருகருகேதான் இருக்கிறார்கள். ஆனால், அவர்களின் இதயங்கள் ஒன்றை விட்டு ஒன்று வெகு தூரத்தில் இருக்கின்றன’’ என்றார் முனிவர்.

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 7 - சுவாமி சுகபோதானந்தா
மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 7 - சுவாமி சுகபோதானந்தா

கேள்வி கேட்ட சீடர் குழப்பதோடு பார்க்க, முனிவர் தொடர்ந்து பேசினார். ‘`காதல் வயப்பட்ட இருவர் பேசுவதைப் பார்த்திருக்கிறாயா? இருவரின் இதயங்களும் ஒன்றோடு ஒன்று நெருக்கமாக இருக்கும். அதனால் அவர்கள் உடலால், ஒருவரைவிட்டு ஒருவர் விலகி இருந்தாலும்கூட மென்மையான மொழியில்தான் பேசிக் கொள்வார்கள். இவர்களது அன்பு மேலும் கூடினால், வார்த்தைகள்கூட தேவையிருக்காது. கண் ஜாடையிலேயே ஒருவர் பேசுவது அடுத்தவரின் இதயத்துக்குக் கேட்கும். அன்பால் இணைந்தால், இதயங்கள் நெருங்கும். கோபத்தில் கொதித்தால், உள்ளங்கள் விலகிவிடும்’’ என்றார் முனிவர்.

கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் அது எந்த எல்லை வரை செல்லும் என்பதற்கு உதாரணங்களைச் செய்தித்தாள்களில் தினம் தினம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். நாட்டில் நடக்கும் பல குற்றங்களுக்குக் கச்சாப் பொருளாக இருப்பதே கோபம்தான்.

‘`நான் நினைத்தால் உன்னை நரகத்தில் தள்ளுவேன்’’ என ஒரு சலவைத் தொழிலாளியிடம் சவால் விட்டது சாத்தான். ‘`முடியாது’’ என்றான் அவன்.

அன்று இரவு அவன் தன் கழுதையை மரத்தில் கட்டிவைத்துவிட்டுத் தூங்கச் சென்றான். சாத்தான் அந்தக் கழுதையின் கயிற்றை அவிழ்த்துவிட்டது. பக்கத்து வீட்டுக் குயவன் வனைந்து வைத்திருந்த பானைகளையெல்லாம் அந்தக் கழுதை மிதித்து உடைத்தது. இதைப் பார்த்த குயவனின் மனைவி ஒரு விறகுக்கட்டையைக் கழுதையின் மீது வீச, அது கழுதையின் நெற்றிப் பொட்டில் தாக்கியது. அந்தக் கணமே கழுதை இறந்தது. தன் கழுதையைக் கொன்றுவிட்டாளே என்ற ஆத்திரத்தில் சலவைத் தொழிலாளி வந்து குயவனின் மனைவியைப் பிடித்துக் கீழே தள்ள, தரையில் கிடந்த ஒரு கல்லில் மோதி அவள் இறந்துவிட்டாள். ‘அடப்பாவி, என் மனைவியைக் கொன்று விட்டாயே!’ என்று கோபத்துடன் வந்த குயவன், சலவைத் தொழிலாளியின் வீட்டைக் கொளுத்தினான். இதனால் கோபம் தலைக்கேறிய சலவைத் தொழிலாளி குயவனை மட்டுமல்ல, அவனது மகனையும் சேர்த்துக் கொன்று விட்டான்.

சிறிது நேரத்தில் கோபம் தணிந்து அவனுக்குள் பயம் எழுந்தது. அப்போதுதான், முந்தைய நாள் அவனுக்கும் சாத்தானுக்கும் இடையே நடந்த உரையாடல் நினைவுக்கு வந்தது. நடந்த அத்தனை கொடூரங்களுக்கும் அந்த சாத்தானே காரணம் என்பது புரிய ஆரம்பித்தது. சாத்தான் வெற்றிக் களிப்போடு அவனிடம் சொன்னது, ‘`மரத்தில் கட்டப்பட்டிருந்த கழுதையின் கயிற்றை அவிழ்த்துவிட்டது மட்டும்தான் நான். உங்கள் கோபங்களை அவிழ்த்துவிட்டது நானல்ல, நீங்கள்தான்!’’

அன்பு, நம்பிக்கை ஆகியற்றின் முன்பு கோபம் தோற்றுவிடும். பொறுமையைக் கடைப்பிடிப்பது மட்டுமே நாம் செய்ய வேண்டிய விஷயம். பொறுமை என்றவுடன் எனக்கு நினைவுக்கு வருவது தத்தாத்ரேயர்தான். வேத காலத்தைச் சேர்ந்த இந்த முனிவரின் சிறப்பு என்னவென்றால், இவருக்கு ஒன்றல்ல, இரண்டல்ல, ஏகப்பட்ட குருக்கள். முனிவர்களையும் மனிதர்களையும் மட்டுமல்ல, பாம்பு, பறவை, காற்று, மழை என்று கண்ணில் காணும் அனைத்தையுமே அவர் குருவாகத்தான் பார்த்தார். அனைத்துமே அவருக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தன. எப்படி சாத்தியம் என்கிறீர்களா?

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 7 - சுவாமி சுகபோதானந்தா

புத்தருக்கு போதி மரத்தடியில் ஞானம் பிறந்தது என்று படித்திருக்கிறோம். நம் மொழியில் சொன்னால் போதி மரம் என்பது அரச மரம். நம்மூரிலும் அதேபோன்ற அரச மரங்கள் இருக்கின்றன. எத்தனையோ முறை நாம்கூட அரச மர நிழலில் அமர்ந்திருக்கிறோம். ஆனால், நமக்கெல்லாம் ஏன் ஞானம் பிறக்கவில்லை? புத்தர் எந்த போதி மரத்தின் அடியில் ஞானம் அடைந்தாரோ, அந்த மரம் இன்றும் பீகாரில் உள்ள புத்தகயாவில் இருக்கிறது. தினம் தினம் பல ஆயிரம் பக்தர்கள் போய் அதை வணங்குகிறார்கள். அவர்கள் யாருக்கும் அந்த போதி மரத்தடியில் ஞானம் பிறக்கவில்லை. காரணம் என்ன? The Teacher will appear, when the student is ready என்று ஜென் மரபில் ஒரு வாக்கியம் உண்டு. நம் மனம் கற்றுக்கொள்ள முடிவெடுத்துவிட்டால், கண்ணுக்குத் தென்படும் அனைத்துமே கல்வியை ஊட்ட ஆரம்பித்துவிடும். தத்தாத்ரேயர் மகானாக ஆனபிறகும்கூட மாணவராகவே இருந்தார்.

‘`நீங்கள் எப்படி இவ்வளவு பொறுமையாக இருக்கிறீர்கள்?’’ என சீடர் ஒருவர் அவரிடம் கேட்டபோது, ‘`மலைப் பாம்புகளிடமிருந்து நான் பொறுமையைக் கற்றுக் கொண்டேன்’’ என்றார். ‘`என்னதான் கொலைப் பசியில் இருந்தால்கூட அவை உணவைப் பார்த்ததும் பாய்ந்து சென்று தாக்காது. அசாத்தியமான பொறுமையோடு பல நாள்கள் காத்திருக்கும் இயல்பு கொண்டவை அவை. இந்தப் பொறுமைதான் மலைப்பாம்பின் பலம்’’ என்றார் தத்தாத்ரேயர்.

அவரளவுக்குப் பொறுமையாக இருக்க வேண்டியதில்லை. ஆனால், நமது கோபம் தூண்டப்படும் இடத்தில் பொறுமையைக் கடைப்பிடிக்கக் கற்றுக்கொண்டால் கோபத்தை வென்றுவிடலாம். அதனால்தான், ‘கோபமாக இருக்கும்போது பேசாதே. கோபமாக இருக்கும்போது எந்த முடிவுகளும் எடுக்காதே’ என்று பெரியவர்கள் சொல்கிறார்கள்.

‘மறப்போம், மன்னிப்போம்’ என்பது ஆண்டாண்டுக் காலமாக பெரியவர்கள் நமக்குச் சொல்லிவரும் போதனை. எதிரியை மன்னிப்பதால் என்ன நடக்கிறது என்று ஒரு கணம் யோசித்துப் பாருங்கள். இதனால் எதிரிக்கு என்ன நன்மை கிடைக்கிறதோ தெரியாது. ஆனால், எதிரியை மன்னிப்பது என்று நாம் முடிவெடுத்த கணமே, நம் வாழ்க்கை நமக்கு முழுமையாகத் திரும்பக் கிடைத்துவிட்ட நிறைவு வரும். ‘இனி நாளெல்லாம் எதிரியையும், அவர் செய்த துரோகத்தையும் நம் சிந்தனையில் சுமந்துகொண்டு திரியவேண்டியதில்லை’ என்பதால் மனம் லேசாகிவிடும்.

‘`எதிரி எனக்குச் செய்த கொடுமையை மன்னித்துவிடுவேன். ஆனால் மறக்க முடியாது’’ என்று பலர் சொல்வதைக் கேட்டிருக்கிறோம். ‘எதிரி செய்த கொடுமையை மறப்பது இயலாத காரியம்’ என்று சொன்ன மாணவனிடம், கையை நீட்டச் சொல்லி தண்ணீர் நிரம்பிய கண்ணாடி டம்ளரைக் கொடுத்து ஆசிரியர் எடுத்த பாடம் நினைவிருக்கிறதுதானே? ‘`அந்தக் கண்ணாடி டம்ளரைப் போலத்தான் எதிரி நமக்குச் செய்த அநியாயமும். வருடக்கணக்கில் அதைச் சுமந்து கொண்டிருப்பதால் நம் மனசு வலிக்கிறது. அதை தூர வீசினால் மனச்சுமை குறையும்’’ என்ற அந்த ஆசிரியரின் வார்த்தைகள்தான் எவ்வளவு அர்த்தம் நிறைந்தவை!

- பழகுவோம்...

*****

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 7 - சுவாமி சுகபோதானந்தா

கொரோனாவுக்குத் தலைக்கனம்!

கொரோனாவைவிடவும் மக்கள் மத்தியில் இப்போது இதுதான் வேகமாகப் பரவிவருகிறது. இந்தச் சூழ்நிலையில் பரவ வேண்டியது விழிப்புணர்வே தவிர பயமில்லை. அட்டைப்பூச்சியைப்போலக் கவ்வியிருக்கும் பயத்தை உதறிவிட வேண்டுமானால், பயத்துக்குக் காரணமான கொரோனா என்கிற எதிரியின் பலவீனம் தெரிய வேண்டும். கொரோனாவின் பலவீனம் என்ன தெரியுமா? அது மிகவும் தலைக்கனம் கொண்டது. ‘நாமாகச் சென்று அதை அழைத்தால் தவிர, அது நம் வீட்டுக்கு வராது. வரவே வராது.’ கொரோனா நம்மை நெருங்காமல் இருக்க வேண்டுமானால், நாம் `எதுவுமே செய்யாமல் இருக்க வேண்டும்’. ஆம், வள்ளலார் சொன்னதைப்போல ‘சிந்தையை அடக்கி சும்மா இருக்க’ முடியவில்லை என்றால்கூடப் பரவாயில்லை. வெறுமனே ‘சும்மா இருந்தால்’கூடப் போதும். கொரோனாவிடமிருந்து தப்பித்துவிடலாம். அதனால்தான் ஊரடங்கு. நாமும் வீட்டுக்குள் அடங்கியிருக்கிறோம்.

‘மகிழ்ச்சியைக் காட்சியாக மாற்ற முடியுமா?’ என்பது துருக்கி நாட்டின் பிரபலமான வாக்கியம். துருக்கிக் கவிஞனான நாஸிம் ஹிக்மத், தன் நண்பரான ஓவியர் அபிதின் தினோவைப் பார்த்து, ‘`எனக்காக மகிழ்ச்சியை ஓவியமாக வரைந்து தர முடியுமா?’’ என்று ஒரு முறை வேண்டுகோள் வைத்தான். அதற்காக அபிதின் வரைந்த ஓவியம்தான் இங்கே நீங்கள் பார்ப்பது. மாட்டுத்தொழுவம் போன்ற ஒரு வீட்டில் உடைந்துபோன ஒரே ஒரு கட்டில், பழுதடைந்த கூரையின் வழியாகக் கொட்டும் மழைநீரில் இருந்து காத்துக்கொள்ள தலைக்கு மேலே விரிக்கப்பட்டிருக்கும் குடை. ஆனாலும் அந்தக் கட்டிலில் கணவன், மனைவி, ஆறு பிள்ளைகள் என்று அனைவரும் சிரித்த முகத்துடன் ஒருவரை ஒருவர் அரவணைத்துப் படுத்திருக்கிறார்கள்.

நம் மனம் தெளிவாக இருந்தால், எந்தச் சூழலிலும் மகிழ்ச்சியை உணர முடியும். அதனால்தான் இந்த இக்கட்டான காலகட்டத்தில் இந்த ஓவியம் நிறைய பேசப்படுகிறது. நாம் குடும்பமாக இணைந்திருக்கிறோம் என நினைத்தாலும், உண்மையில் ஒவ்வொரு குடும்பத்திலும் எல்லோரும் சேர்ந்திருக்கும் காலம் என்பது குறைவே! கொரோனா இன்னும் சில மாதங்களில் நம்மைக் கடந்து வெகு தூரம் போயிருக்கும். இழப்பை ஈடுசெய்ய நீங்கள் முன்பைவிடவும் வேகமாக, நேரம் காலம் பார்க்காமல் இயங்க ஆரம்பித்துவிடுவீர்கள். பிள்ளைகள் படிப்பு, வேலை என பிஸியாவார்கள். ஒருகட்டத்தில் அவர்கள் தங்களுக்கான கூட்டைக் கட்டத் தொடங்கிவிடுவார்கள். அவர்களுக்கு என ஒரு குடும்பம் உருவாகிவிடும். அப்போது நீங்களே நினைத்தாலும் இப்போது இருப்பதைப் போல ஒன்றாக அமர்ந்து, இணைந்து நேரம் செலவிட்டுப் பேசிக்கொண்டிருக்க முடியுமா? இந்தக் கோணத்தில் யோசித்தால், இந்த லாக்டௌனை காலம் கொடுத்த கொடையாகக் கருதி வீட்டில் இருப்பவர்களை நேசத்தோடு பார்க்க ஆரம்பிப்பீர்கள்.