மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 8

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G
பிரீமியம் ஸ்டோரி
News
மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G

நம்பிக்கைத் தொடர்

ஒன்றரை வருடங்களுக்கு முன்பு இருந்த உலகம் வேறு; இப்போது நாம் இருக்கும் உலகம் வேறு. ஒன்றரை வருடங்களுக்கு முன்பு நாம் ஆடிய விளையாட்டு வேறு; விளையாடிய மைதானமும் வேறு; விளையாட்டின் விதிகளும் வேறு. இப்போது எல்லாமே மாறியிருக்கின்றன. ஆனால், விளையாட்டு ஆரம்பிக்கப்பட்டுவிட்டது என்பதை அறிவிக்கும் விசில் ஊதப்பட்டுவிட்டது. இந்த விளையாட்டில் யாரெல்லாம் நம் அணியில் இருக்கிறார்கள் என்பதைக்கூடக் கணிக்க முடியவில்லை. நம் அணியைச் சேர்ந்தவர்கள் என்று நாம் நினைத்துக்கொண்டிருந்தவர்கள் எல்லாம் கண நேரத்தில் மாறி நம்மை எதிர்த்து ஆடிக்கொண்டிருக்கிறார்கள். கால்பந்து விளையாட்டு திடீர் என்று கைப்பந்தாட்டமாக மாறுகிறது.

‘இது என்ன விளையாட்டு என்பதே புரியவில்லையே...?’ என்று தலையில் கை வைத்து உட்கார்ந்துவிட வேண்டியதில்லை. உலகம் தோன்றிய நாளில் இருந்தே அது மாறிக்கொண்டேதான் இருக்கிறது. நீங்களும் நானும்கூட மாறிக்கொண்டேதான் இருக்கிறோம். கண்ணுக்கே தெரியாத ஒற்றைச் செல் உயிரியாக இருந்த நாம், கருவாக உருப்பெற்று வளர்ந்து தாயின் வயிற்றில் இருந்து வெளியே வந்த நாள் தொட்டு பச்சிளம் சிசு, குழந்தை, சிறுவன், பதின்பருவத்தவன், வாலிபன், நடுத்தர வயதினன், வயோதிகன் என்று நாமும் மாறிக்கொண்டே வருகிறோம். நம் உருவமும் மாறிக்கொண்டேதான் இருக்கிறது. பருவங்கள் மாறுவதை மட்டுமல்ல... ‘பருவநிலையே எப்படி மாறுகிறது’ என்பதைக்கூட நாம் கவலையுடன் பார்க்கிறோம்.

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 8

மாற்றங்களைக் கண்டு அஞ்சி நடுங்காமல், நம்பிக்கையோடு நடைபோட நாம் புரிந்து கொள்ள வேண்டிய முதல் ஆளே - நாம்தான். அதற்கு நாம் என்ன மனநிலையில் எல்லாவற்றையும் எதிர்கொள்கிறோம் என்பதை முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதில், ‘எனக்கு மட்டும் ஏன் எல்லாமே இப்படி நடக்கிறது’ என்ற சுயபச்சாதாப மனநிலை மிகவும் ஆபத்தானது. இந்த மனநிலையில் இருந்தால்... என்னதான் கோடி கோடியாகப் பணம் இருந்தால்கூட ஒருவரால் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. இந்த மனநிலையில் இருப்பவர்கள், ஒரு திருமண நிகழ்ச்சிக்குப் போகிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அங்கே எதிர்ப்படும் உறவினர்கள் அவர்களைப் பார்த்துப் புன்னகைக்காவிட்டால்... உடனே அப்செட் ஆகிவிடுவார்கள். சரி, புன்னகை செய்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். ‘என்னைப் பார்த்து ஏளனமாகச் சிரித்துவிட்டுப் போகிறார்கள் பார்’ என்று அந்தப் புன்னகைக்கு இவர்களாகவே ஒரு அர்த்தத்தைக் கொடுத்து அப்செட் ஆகிவிடுவார்கள்.

அடுத்து Stuck Mindset. ‘எனக்குக் கணக்கெல்லாம் சுட்டுப்போட்டாலும் வராது’, ‘இங்கிலீஷ் பேச முடியவே முடியாது’ இப்படிப்பட்ட ‘ஸ்டக் மைண்ட் செட்’டோடு சில விஷயங்களை நாம் முயற்சிகூடச் செய்துபார்க்க மாட்டோம். Four minute barrier பற்றிச் சிலருக்குத் தெரிந்திருக்கக்கூடும். என்னதான் அதிவேக ஒலிம்பிக் ஓட்டப்பந்தய வீரனாக இருந்தாலும் ஒரு மைல் தூரத்தை நான்கு நிமிடங்களுக்குள் ஓடித் தொட முடியாது என்று உலகம் பல ஆண்டுகளாக நம்பிக்கொண்டிருந்தது. ஏனென்றால், இந்தச் சாதனையைச் செய்ய ஒலிம்பிக் வீரர்களும், பயிற்சியாளர்களும் பல ஆண்டுகளாகப் பல முயற்சிகளைச் செய்தார்கள். பல ஆராய்ச்சிகளும் செய்யப்பட்டன. ‘கதகதப்பான வானிலையில், எதிர்க்காற்றே வீசாத நாளில், சரியான உளர்பதத்தில் அமைக்கப்பட்ட ஓடுபாதையில், உற்சாகமூட்டும் ஆயிரக்கணக்கான ரசிகர்களின் ஆரவாரத்துக்கு நடுவே, கடும் பயிற்சிகள் கொடுக்கப்பட்ட ஓர் ஒலிம்பிக் ஓட்டப்பந்தய வீரனை ஓடவிட்டால், அவனால் நிச்சயம் இதைச் சாதித்துவிட முடியும்’ என்றெல்லாம் ஏதேதோ கணக்குகள் போட்டு, அவை அத்தனையிலும் அவர்கள் தோற்றுப் போயிருந்தார்கள்.

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 8

இந்தக் காலகட்டத்தில், சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், 1954-ம் ஆண்டு, மே மாதம் 6-ம் தேதி இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ரோஜர் பேனிஸ்டர் என்ற ஒலிம்பிக் ஓட்டப் பந்தய வீரன், சொற்பமான பார்வையாளர்களே வந்திருந்த ஒரு போட்டியில், ஒரு குளிர்நாளில், ஈரப்பதம் நிறைந்த ஓடுபாதையில், இந்த ஒரு மைல் தூரத்தை 3 நிமிடம், 59.4 விநாடிகளில் கடந்தான். அதன் பிறகு ஒருவர், இருவர் அல்ல, ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் ரோஜர் பேனிஸ்ட்டரைப் போலவே ஒரு மைல் தூரத்தை நான்கு நிமிடங்களுக்குள்ளாக ஓடிக் கடந்திருக்கிறார்கள். ஏன், ஒரு பள்ளி மாணவன்கூட இந்தச் சாதனையை சர்வசாதாரணமாக அதன் பிறகு செய்துவிட்டான்.

ரோஜர் பேனிஸ்டரோ அல்லது அவருக்குப் பிறகு இந்தச் சாதனையைச் செய்கிறவர்களோ... ஜெனிட்டிக் இன்ஜினீயரிங் மூலமாகப் பிறந்த சூப்பர்மேன்கள் அல்லர். மற்றவர்களுக்கும் இவர்களுக்கும் இடையே இருந்த ஒரே ஒரு வித்தியாசம் ‘மைண்ட் செட்’ மட்டும்தான்.

இந்தக் கொரோனா காலகட்டத்துக்குப் பிறகு ஒருவர் வேலை செய்யும் நிறுவனம், இப்போது இருக்கும் அதே நிலையிலேயே இருக்குமா என்பதை யாராலும் கணிக்க முடியாது. அதேபோல, அந்த நிறுவனத்தில் இவருக்கான இடம் அப்படியே இருக்குமா என்பதையும் சொல்ல முடியாது. புதிய சூழ்நிலையில் வேலை செய்யப் புதுவிதமான திறமைகள் தேவைப்படும். அதனால்தான் சொல்கிறேன். இப்போது கிடைக்கும் ஓய்வு நேரத்தைப் புதுப்புதுத் திறமைகளை வளர்த்துக்கொள்ளக் கிடைத்திருக்கும் வாய்ப்பாக எல்லோரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மாதச் சம்பளத்துக்கு வேலை செய்கிறவர்களுக்கு மட்டுமல்ல, வியாபாரம் செய்கிறவர்களுக்கும் நான் சொல்வது பொருந்தும்.

‘‘பத்து வருடமாக நான் இந்த ஏரியாவில் சேல்ஸ் மேனேஜராக இருக்கிறேன். இந்த மார்க்கெட் பற்றி சகலமும் எனக்குத் தெரியும்’’ என்று சொன்னால், கொரோனாவுக்குப் பிறகான உலகில் அது போதாது. அவருக்குத் தன்னிடமுள்ள தரவுகளை (Data) எப்படி பிராசஸ் செய்வது என்றும் தெரிந்திருக்க வேண்டும். டேட்டா மைனிங் (Data Mining) கொண்டு தன்னிடமிருக்கும் தரவுகளை எப்படிப் பயன்படுத்துவது என்பதைக் கற்றாக வேண்டும். அதற்கு, ‘இந்த வயதில் இதையெல்லாம் என்னால் கற்றுக்கொள்ள முடியுமா?’ என்ற மைண்ட் செட்டிலிருந்து வெளியே வரவேண்டும்.

‘என்னுடைய பலம் என்னவோ அதில்தானே நான் பிரகாசிக்க முடியும்’ என்று அவர் வாதிடலாம். உண்மைதான். அவருக்கு அவர் வேலையில் இருப்பது Efficiency. பழக்கப்பட்ட வேலையில், எதிர்பார்க்கும் பிரச்னைகளை சமாளிக்கத் தேவைப்படும் செயல்திறன்தான் எஃபிஷியன்சி. ஆனால், புதிய உலகத்துக்குத் தேவைப்படுவது Proficiency. அதாவது எதிர்பாரா பிரச்னைகளை சமாளிக்கத் தேவைப்படும் செயல்திறன்தான் ப்ரோஃபிஷியன்சி.

இதில் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். ஒருவர் தனக்குத் தெரிந்த ஒரு வேலையைத் திரும்பத் திரும்பச் செய்யும்போது, ஒரு கட்டத்தில் அதில் சலிப்பு ஏற்பட்டுவிடும். அதுவே புதிய வேலையை, இதுவரை செய்யாத வேலையைச் செய்ய ஆரம்பித்தால்... கற்றல் அவருக்குப் புத்துணர்வைக் கொடுக்கும். காலமும் அவகாசமும் இப்போது நமக்கு வாய்த்திருக்கிறது. அதனால் நாம் விரும்புகிற புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வோம். கூடுதலாக ஒரு மொழியை நாம் இந்தச் சமயம் கற்றுக்கொண்டால்கூட அது நாளைக்குப் பேருதவியாக இருக்கும். நாம் விரும்பும் விஷயத்தை இப்போது கற்கவில்லை என்றால், கொரோனாவுக்குப் பிறகு வருகின்ற காலம் நமக்கு விருப்பமே இல்லாத விஷயங்களைக்கூடக் கட்டாயப்படுத்திக் கற்றுக் கொடுக்கக்கூடும்.

- பழகுவோம்...

******

இந்தப் பெருந்தொற்று காலத்திலும்கூட நுகர்வுக் கலாசாரம் என்பது சகித்துக்கொள்ள முடியாத அளவுக்குப் பெருகி வருவது கவலையளிக்கிறது. என்னதான் லாக்டௌன் போட்டாலும், கடைவீதிகளில் கூட்டம் அலைமோதுகிறது. ‘பொருள்களை வாங்கிக் குவிப்பதில்தான் சுகம் இருக்கிறது என்று பலரும் நம்ப ஆரம்பித்துவிட்டார்களோ’ என்ற அச்சம் பலமாக எழுகிறது. ‘ஒரு முறை கடைக்குப் போகும்போதே ஒரு வாரத்துக்குத் தேவையான மளிகைப் பொருள்களை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு வாரத்துக்குத் தேவைப்படும் காய்கறிகளை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்’ என்றால் பணம் இருப்பவர்களும் கேட்பதில்லை; படித்தவர்களும் கேட்பதில்லை.

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 8

‘புதிய பொருள்களை வாங்கிக் குவிப்பதில்தான் மகிழ்ச்சி இருக்கிறது’ என்று பலரும் கருதுகிறார்கள். அதனால்தான் பயன்படுத்துகிறோமோ இல்லையோ... பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார், படாடோபமான பைக், விலையுயர்ந்த மின்சாதனப் பொருள்கள் என்று பலரும் வீடு முழுதும் பொருள்களாக வாங்கி அடுக்கி வைத்திருக்கிறார்கள். என்னைக் கேட்டால், ஒரு பொருளை வாங்குவதில் மகிழ்ச்சி இல்லை. அது அதிக விலையுள்ளது என்பதிலும் மகிழ்ச்சி கிடைப்பதில்லை. அதைப் பயன்படுத்துவதில்தான் மகிழ்ச்சி கிடைக்கிறது. பணம் இருக்கிறது என்கிற காரணத்தால் பல லட்சங்கள் போட்டு ஒருவர் பியானோ வாங்க முடியும். ஆனால், மகிழ்ச்சி அந்த இசைக்கருவியை இசைக்கும்போதுதானே கிடைக்கும். ஆடுமேய்க்கும் சிறுவன் கையில் இருக்கும் புல்லாங்குழல் அவனுக்குக் கொடுக்கும் மகிழ்ச்சியில், ஒரு சிறிய அளவுகூட பியோனோவை வாங்கி சும்மா வைத்திருப்பவர்களுக்குக் கிடைக்குமா என்பது சந்தேகமே!

பியானோ, ஸ்போர்ட்ஸ் கார் எல்லாம் இருக்கட்டும். நமக்குக் கடவுள் கொடுத்திருக்கும் கண் காதுகளையே பலர் முழுமையாகப் பயன்படுத்துவதில்லை என்பதுதானே நிதர்சனம். கடல் குளித்து எழும் சூரிய ஒளிக்கதிர்களின் விளையாட்டையோ, பூத்துக் குலுங்கி நறுமணம் பரப்பும் மலர்களையோ எத்தனை பேர் ரசிக்கிறோம்? சில பணக்கார வீட்டுக் குழந்தைகள் கடையில் பார்க்கிற பொம்மைகளையெல்லாம் கேட்கும். வாங்கிக் கொடுத்துவிட்டால் அதன் பிறகு அவற்றை அது திரும்பிக்கூடப் பார்க்காது. வளர்ந்து பெரியவர்களாகிவிட்டாலும் இன்று, பலரும் அந்தக் குழந்தைகளைப் போலத்தான் இருக்கிறார்கள்.