சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

`பாயும் ஒளி நீயெனக்கு!' கோடுகளால் காலத்தை உயிர்ப்பித்த கலைஞர் - மனோகர் தேவதாஸ் நினைவுகள்!

மனோகர் தேவதாஸ்
News
மனோகர் தேவதாஸ்

பத்ம ஸ்ரீ விருது பெற்ற ஓவியர் மனோகர் தேவதாஸ் இன்று தன் 85வது வயதில் காலமானார். அவர் கடந்த 2020-ம் ஆண்டு பத்ம விருதை வென்றபோது ஆனந்த விகடன் இதழில் வெளியான அவரின் பேட்டி உங்களின் பார்வைக்கு...

மீபத்தில் தன் கலைத்துறைப் பங்களிப்புக்காக பத்ம விருது பெற்றிருக்கிறார் மனோகர் தேவதாஸ். மதுரை, சென்னையின் அழகியலைத் தன் ஓவியங்களில் பத்திரப்படுத்திய ஓவியர். ஓவியம் குறித்த இவரின் நூல்கள் மிகப்பிரபலம். பார்வை பறிபோனபின் இவர் வரைந்த நீர்வண்ண ஓவியங்கள் காலவெளியில் ரம்மியமாய் உறைந்துநிற்பவை. சென்னை, சாந்தோம், பாபநாசம் சிவன் சாலையில் நந்தவனம்போல அமைந்திருக்கிறது ஓவியர் மனோகர் தேவதாஸின் வீடு. சூரிய ஒளி வீட்டினுள் நுழையப் பிரயத்தனப்பட்ட காலைப்பொழுதில் அவரைச் சந்திக்கச் சென்றேன்.

மனோகர் தேவதாஸ்
மனோகர் தேவதாஸ்

நேர்த்தியான உடை, கச்சிதமாய்த் திருத்தப்பட்டிருந்த கேசம் என ராணுவ வீரர்போல மிடுக்காக வந்துநின்றார் இந்த 83 வயது இளைஞர். விழித்திறனற்ற அவரது விழிகள் கொண்டு கூர்மையாக உற்றுநோக்கியவர் பேசத் தொடங்கி னார். குறைவில்லாத செல்வமும், திறமையும் படைத்தவரின் வாழ்வைக் காலம் கலைத்துப் போட்டது. பார்வை எங்கோ குவிந்திருக்க, குரல்களில் எதிர்நோக்கிப் பேசத் தொடங் கினார்.

“மதுரையில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் கோரிப் பாளையத்தில், ஒரு பெரிய வீட்டில் நான் பிறந்தேன். என் அப்பா மருத்துவர். அவர் நண்பர்கள் பிரசவம் பார்க்க, பிறந்தவன் நான். எங்கள் வீடு கோரிப்பாளையத்தின் மேற்கு எல்லையில் அமைந்திருந்தது. கோரிப்பாளையத்தின் கிழக்குப் பகுதியில் சிறிய வீடுகளும், குறுகிய சாலைகளும் மட்டுமே இருந்தன. எங்கள் வீட்டின் பின்புறம் பெரிய தோட்டம் இருந்தது. வீட்டின் மேற்குப்புற ஜன்னலிலிருந்து பார்த்தால் சாலையின் முடிவில் ‘செல்லூர் கண்மாயின்’ உபரி நீர் செல்லும் வாய்க்கால் தெரியும். அதில் வாத்துகள் உலவும். வயல்வெளிகள், தென்னை மரங்கள், அலங்காநல்லூர் சாலை, ரயில் பாதை, பனிக்காலத்தில் சூரியன் மறையும் அந்தி நேரம் என ரம்மியமான காட்சிகளைப் பார்ப்போம். வடக்கு மாசி வீதியும், மேல மாசி வீதியும் சந்திக்கும் இடத்தில் நடக்கும் கச்சேரிகள், சித்திரைத் திருவிழா, மகாத்மா காந்தியைத் தொலைவிலிருந்து பார்த்தது எனப் பல நினைவுகள் மதுரை எனக்குள் பொதிந்து வைத்துள்ளது” - கண்கள் விரிய விரிய மனதில் பதிந்த சித்திரத்தை விவரிக்கிறார்.

சிறுவயதில் அவர் பார்த்த இந்தக் காட்சிகளைப் பின்னாள்களில் ஓவியங்களாகத் தீட்டினார். மதுரை சேதுபதி பள்ளியில் பள்ளிப் படிப்பு, அமெரிக்கன் கல்லூரியில் வேதியியல் படிப்பு அவ்வப்போது வரையும் ஓவியங்கள் என இளமைப்பருவம் நன்முறையில் வாய்க்கப் பெற்றார். அவரின் தந்தை இறந்தபின் பணி நிமித்தம் சென்னை வந்தார். பறவைகளின் சப்தம், மர நிழல், புராதனக் கட்டடங்கள் என மதுரையிலிருந்தவருக்கு, தொழிற்சாலைச் சூழல் உவப்பாக இல்லை. வேதியியல் வல்லுநர் பணியைச் செவ்வனே செய்தவருக்கு வாழ்வில் கலைச்சூழல் மீண்டும் அமையப்பெற்றது அவரின் மனைவி மஹிமாவால். தன் மனைவியைப் பற்றிப் பேசுகையில் வெட்கமும் உவகையும் ஒருசேர அவரது முகத்தில் வட்டமடிக்கிறது. மஹிமா என்ற பெயரைச் சேர்க்காமல் ஒரு வாக்கியத்தை அவரால் பேச முடியவில்லை. காதல் அவரது ஒவ்வொரு சொல்லிலும் நினைவுகளிலும் படிந்த வண்ணமிருந்தது.

மனோகர் தேவதாஸ்
மனோகர் தேவதாஸ்

“என் உறவினருக்கு நன்கு பரிச்சயமானவர் மஹிமா. அவர் மஹிமாவைப் பற்றி என்னிடம் அடிக்கடி பேசிக்கொண்டே இருப்பார். என்னைப் பற்றியும், என் கலை ஈடுபாடு குறித்தும் மஹிமாவிடம் பேசியுள்ளார். மஹிமாவிற்குக் கலைமேல் இருக்கும் ஈடுபாடு, அவரது புத்திக்கூர்மை, ஆளுமைத் திறன், உதவும் குணம் என மஹிமாவைப் பற்றிய பிம்பம் ஒரு பழங்கால குகை ஓவியம்போல என்னுள் ஆழமாகப் பதிந்தது. அவருக்காக நான் எழுதிய காதல் கடிதத்தில் படங்கள் வரைந்து அனுப்புவேன். அவருக்கு எழுதிய கடிதங்களை எல்லாம் தொகுத்து ‘Dreams Seasons & Promises’ நூலாக வெளியிட்டேன். திருமணம் செய்து கொண்டோம். பல நாடுகள் பயணித்தோம். மஹிமாவுடனே அமெரிக்காவுக்குச் சென்று முதுகலை வேதியியல் படித்தேன். இந்தியா வரத் திட்டமிட்டோம். எங்கள் இருவரையும் அந்தக் கல்லூரியில் அனைவரும் நேசித்தார்கள். வாழ்வில் அடுத்தகட்டத் திட்டங்களுக்கான பெரும் நம்பிக்கையுடன் இந்தியா திரும்பினோம்’’ என்றவர் குரலிலிருந்த உறுதி குறைந்தது.

இந்தியாவிற்குத் திரும்பியவர்கள் மதுரைக்குக் காரில் செல்லும்போது விபத்தில் சிக்கினார்கள். மஹிமா கழுத்துப் பகுதிக்குக் கீழ் உணர்வுகளற்று செயல்பட இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டார். ஆனால், தளர்ந்துபோகாமல் மனைவிக்கு ஏற்பட்ட துயரிலிருந்து அவரை மீட்க, பல மருத்துவ நூல்களைப் படித்து அவரை கவனித்துள்ளார். துயரத்தின் சுவடுகள் மறையும் முன்பே மற்றொரு ரணம் அந்தத் தம்பதிகளை நொடித்துள்ளது. மனோகர் தேவதாஸின் ஒரு கண் பார்வை பறிபோக மற்றொரு கண் பார்வை மெல்ல மெல்லப் பறிபோய்க்கொண்டிருந்தது. தன் காதல் மனைவியின் நிலை, ஓவியம், இயற்கை, பல நாடுகள் பயணம் எனப் பிரபஞ்சத்தைச் சிலாகித்தவரின் பார்வை பறிபோகும் நிலை என மனோகர் தேவதாஸைக் காலம் அவலத்தில் தள்ளியது. அப்போதும் மனோகர் தேவதாஸ் சோர்ந்துபோகவில்லை. மீதமிருந்த பார்வை பறிபோகும் முன் நிறைய வரையத் தொடங்கினார்.

தன் மனதில் பதிந்திருந்த மதுரை, சென்னை நகரங்களை வரையத் தொடங்கினார். கட்டடங்கள், இயற்கை வெளிகள், நீண்ட தெருக்களின் குறுக்குவெட்டுத் தோற்றம் பலவற்றை ஓவியங்களாக்கினார். பலரின் கவனத்தையும் பாராட்டுகளையும் பெற்றார். சில வருட இடைவெளிகளில் மெல்ல மெல்ல அவரின் பார்வை பறிபோகிறது. பார்வை முடங்கிப்போன மனோகர் தேவதாஸ் பார்வை மட்டுமே எஞ்சியிருந்த தன் மனைவியின் உதவியுடன் 14 வருட உழைப்பில் ‘Green Well Years’ என்ற முதல் நாவலை உருவாக்கினார். தன் பால்ய கால வாழ்வையும் மதுரையையும் பிணைத்து அவர் எழுதிய அந்த நாவலுக்கு அவரே ஓவியமும் வரைந்தார்.

2008ஆம் ஆண்டு மஹிமா இறந்துபோனார். அன்றிலிருந்து தன் மனைவியின் நினைவுகளிலேயே வாழத் தொடங்குகிறார் மனோகர் தேவதாஸ். மஹிமாவின் மறைவுக்குப் பின் ‘Mahema and the Butterfly’ என்ற நூலை அவரது நினைவாக வெளியிட்டுள்ளார். இதுவரை 7 நூல்களை எழுதியுள்ளார். மனோகர் தேவதாஸின் மகள் சுஜாதா மடகாஸ்கருக்கான அமெரிக்கத் தூதராகப் பதவி வகிக்கிறார்.

“பத்ம விருது கிடைத்துள்ளது. 5000 மணிநேரத்துக்கும் மேலாக வீல்சேரில் அமர்ந்தபடியே என் கலைப்பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கினார் மஹிமா. இப்போது அவர் இருந்திருந்தால் பெரும் மகிழ்ச்சியடைவார்” என்று சொல்லும்போதே வார்த்தைகளில் காதலும் சோகமும் ததும்புகின்றன.

நாம் விடைபெறும்போது காற்றில் கைகள் துளாவி நடந்தவர் சுவரில் மாட்டியிருந்த தன் மனைவியின் புகைப்படத்தை எங்களுக்குக் காண்பித்தார். அந்தக் கண்களிலும் அதே காதல்!