இந்தத் தாக்குதலிலிருந்து தங்களைத் தற்காக்க கன்னட நாட்டின் துவார சமுத்திரத்தில் ஆட்சிபுரிந்த ஹொய்சாளப் பேரரசை (Hoysala Empire) சோழர்கள் நாடினார்கள். முதலில் கி.பி.1219-ல் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் சோழ நாட்டின் மீது படையெடுத்து மூன்றாம் இராசராசசோழனை வென்று மீண்டும் அவர் கேட்டதற்கு இணங்க நாட்டை அவர் வசமே ஒப்படைத்துவிட்டு வந்தார். கி.பி. 1231-ல் மாறவர்மன் சுந்தரபாண்டியன் மீண்டும் சோழ நாட்டின் மீது போர் தொடுத்து மூன்றாம் இராசராசசோழனை வென்று அவரைச் சேந்தமங்கலம் கோட்டையில் சிறை வைத்து தனது ஆதிக்கத்தை நிலைநாட்டினார்.

இதனை அறிந்த ஹொய்சாள வேந்தர் வீர நரசிம்மன் தெற்கே வந்து பாண்டியர்களைத் தோற்கடித்து, சோழ வேந்தனை மீட்டெடுத்து சோழ நாட்டை மூன்றாம் இராசராசசோழன் வசம் ஒப்படைத்தார். கி.பி. 1232-ல் வீரசோமேஸ்வரன் பாண்டிய நாட்டின் மீது தனது ஆதிக்கத்தையும் நெருக்கத்தையும் இன்னும் விரிவாக்கினார். பாண்டியர்கள் ஹொய்சாளர்களுக்குத் திறை செலுத்தினார்கள். ஹொய்சாள வேந்தர் சோமேஸ்வரனின் மூன்றாம் நரசிம்மன், பாண்டியர் குலப்பெண்ணை மணந்தார். ஹொய்சாளர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இணக்கமான உறவுகள் மலர்ந்தன. கி.பி. 1249-ல் ஹொய்சாள வேந்தர் வீரசோமேஸ்வரன் பெயரில் சந்தி நிறுவப்பட்டது. மீண்டும் பாண்டிய வேந்தன் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் ஹொய்சாளர்கள் மீது போர் தொடுத்து கண்ணனூர் கொப்பத்தைக் கைப்பற்றினார். அவர் அங்கிருந்த ஹொய்சாளர்களின் யானைகள், குதிரைகள் மற்றும் தங்க நாணயங்களையும் எடுத்துச் சென்றார், இத்துடன் ஹொய்சாளர்கள் ஆட்சியைப் பாண்டிய மண்ணில் முடிவுக்குக் கொண்டு வந்தார்.
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனுக்கு இரண்டு புதல்வர்கள். இவர்களிடையே ஆள்வது யார் என்கிற வாரிசு மோதல் ஏற்பட்டது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண சுந்தர பாண்டியன் டில்லி அரசர் அலாவூதீன் கில்ஜியின் உதவியை நாடினார். அவர் உடன் தனது படைத்தலைவன் மாலிகாப்பூரை மதுரைக்கு அனுப்பினார். திருப்பத்தூர்க் கோயில் கல்வெட்டுகளும், கவிஞர் அமீர்குஸ்ருவின் குறிப்புகளும் இந்த நிகழ்வுகளைப் பற்றி விரிவாகச் சொல்கின்றன. மாலிகாப்பூர் மதுரைக்கு வந்து மீண்டும் டில்லிக்கு 612 யானைகளையும், 96,000 மணங்குப் பொன்னையும், 20,000 குதிரைகளையும் கொண்டு சென்றார். சகோதரச் சண்டை பாண்டிய நாட்டைச் சூழ்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் பறிகொடுத்தது. இதே சகோதரச் சண்டையை சாதகமாகப் பயன்படுத்தி, தென்திருவாங்கூர் மன்னன் இரவிவர்மன் குலசேகரன், பாண்டிய நாட்டின் மீது படையெடுக்கிறார்.
இப்பொழுது தென்திருவாங்கூர் மன்னன் இரவிவர்மனிடம் இருந்து தன் நாட்டை மீட்டுக் கொடுக்க காகதீய மன்னர் இரண்டாம் பிரதாபருத்திரனிடம் வேண்டுகோள் விடுத்தார் சுந்தர பாண்டியன். காகதீய படைத்தலைவன் முப்பிடி நாயக்கர் சுந்தர பாண்டியனுக்கு எல்லா உதவிகளையும் செய்து கொடுத்தார்.

டில்லி சுல்தான் கியாசுத்தீன் துக்ளக்ஷா தன் மகன் உலூக் கானை தென்னிந்தியாவிற்கு அனுப்பினார். உலூக் கான், பாண்டிய மன்னன் பராக்கிரம பாண்டியனைத் தோற்கடித்து மதுரையை டில்லி ஆட்சியின் கீழ் (1323-24) ஒரு மாநிலமாக மாற்றினார். 1333-ல் டில்லி சுல்தானின் மதுரை ஆளுநராக இருந்த ஜலாலுத்தீன் அசன்ஷா, டில்லி சுல்தானியத்திலிருந்து வெளியேறி தன்னை மதுரையின் சுல்தானாகப் பிரகடனப்படுத்திக்கொண்டார். 1340-ல் அவரது தளபதி அலாவுதீன் உதாஜி, அசன்ஷாவைக் கொன்றுவிட்டு தன்னை சுல்தானாக அறிவித்துக்கொண்டார். உதாஜி ஹொய்சாள மன்னர் மூன்றாம் வல்லாளனுடன் போரிட்ட நேரம் இறந்துபோகிறார். அதனை அடுத்து அவரது மருமகன் குத்புதீன் ஃபெரோஷா மதுரையின் சுல்தானாகிறார். 40 நாள்கள் மட்டுமே அவரது ஆட்சி நடக்க, 41-ம் நாள் அவர் கொலை செய்யப்படுகிறார். அவரை அடுத்து கியாசுதீன் தாமகனி கி.பி. 1341-ல் மதுரையின் சுல்தானாகப் பொறுப்பேற்கிறார்.
இந்த நேரம் மீண்டும் ஹொய்சாள மன்னன் மூன்றாம் வல்லாளன் மதுரையை முற்றுகையிட வருகிறார், கண்ணனூர் கொப்பம் என்கிற இன்றைய திருச்சியை அடுத்த சமயபுரத்தில் ஆறு மாதங்கள் போர் நடைபெறுகிறது, இறுதியாக மதுரை சுல்தான் கியாசுதீன் வெற்றிபெறுகிறார். கியாசுதீன் தாமகனியின் மனைவியின் உடன் பிறந்தவளை இபன் பதூதா மதுரையில் மணந்துகொள்கிறார், இபன் பதூதா மதுரை பற்றியும் இந்தப் போர் பற்றியும் தனது குறிப்புகளில் விரிவாக எழுதியிருக்கிறார்.
இந்த நேரம் மதுரையில் ஏற்பட்ட கடும் நோய்த்தொற்றில் கியாசுதீனின் மொத்தக் குடும்பமுமே இறந்துவிடுகிறது, அவரைத் தொடர்ந்து நசிருதீன் மதுரை சுல்தானாகப் பதவியேற்கிறார். நசிருதீனைத் தொடர்ந்து மதுரை சுல்தானாக அடில்ஷா பதவியேற்கிறார். அடில்ஷாவுக்கு அடுத்து பக்ருதீன் முபாரக்ஷா பதியேற்ற நேரம் விஜய நகரப் பேரரசின் குமார கம்பணர் மதுரை மீது படையெடுக்கிறார். இந்தப் போரில் மதுரை சுல்தான் முபாரக்ஷா கொல்லப்படுகிறார். இதன் பின்னரும் மதுரையின் சிறிய பகுதிகள் அலாவுதீன் சிக்கந்தரின் ஆட்சியின் கீழ் இருந்தது, அவர்தான் மதுரையின் கடைசி சுல்தானாக அறியப்படுகிறார்.
துங்கபத்திரை ஆற்றின் தெற்கில் உள்ள பெரும்பகுதியான நிலப்பரப்பைக் கைப்பற்றி, தன்னைக் கிழக்கு மேற்குக் கடல்களின் தலைவராக விஜயநகர வேந்தர்கள் அறிவித்துக் கொண்டனர், மதுரையை வென்ற குமார கம்பணர் தன்னைத் தெற்கின் பேரரசராக அறிவித்துக்கொள்கிறார். 1371 முதல் 1402 வரை மதுரைப் பகுதி விஜயநகரப் பேரரசு ஆட்சியின் கீழ் இருந்தது. இரண்டாம் ஹரிஹரர் ஆட்சிக் காலத்தில் அவரது மகன் விருபாட்சகர் தமிழகப் பகுதிகளில் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இரண்டாம் தேவராயர் ஆட்சிக் காலத்தில் மதுரைப் பகுதியின் பொறுப்புகள் இலக்கண தண்ட நாயக்கர் வசம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. மதுரைப் பகுதியின் நிர்வாகத்தை மேம்படுத்த பாண்டிய மன்னர்களின் கீழ் பணியாற்றிய வாணாதிராயர்களிடம் மதுரை நிர்வாகப் பொறுப்பு கொடுக்கப்பட்டது. இந்த நேரம் அழகர்கோயில்தான் இவர்களின் அரசியல் தலைநகரமாக விளங்கியது.

1509 முதல் 1529 வரை விஜயநகர வேந்தராக இருந்த கிருஷ்ணதேவராயர் மதுரைக்கு வந்துள்ளார், அவர் மூன்று நாள்கள் அழகர்கோயிலில் தங்கியிருந்ததாகவும் கல்வெட்டுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. அச்சுததேவராயரின் ஆட்சிக் காலத்தில் மதுரையில் பெருங்குழப்பங்கள் நிகழ்ந்துள்ளன. 1529-ல் இந்தக் குழப்பங்களின் இறுதியில் கிருஷ்ணதேவராயர் விசுவநாதனை மதுரையின் முதல் நாயக்க மன்னனாக அறிவிக்கிறார். 1564-ல் விசுவநாத நாயக்கர் உடல்நலம் குன்றி இறக்கிறார், அவரைத் தொடர்ந்து அவரது மகன் கிருஷ்ணப்ப நாயக்கர் ஆட்சிப் பொறுப்பை ஏற்கிறார். இவரது காலத்தில் பல போர்களை அவர் சந்திக்கிறார். 1572-ல் கிருஷ்ணப்ப நாயக்கர் இறந்தவுடன் அவரது மகன் வீரப்ப நாயக்கர் மன்னராக மூடிசூட்டப்படுகிறார். வீரப்ப நாயக்கர் இறந்தவுடன் அவரது வாரிசாக இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர் மன்னராகிறார்.
இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர் 1600-ல் மரணமடைகிறார். அவரைத் தொடர்ந்து கஸ்தூரி ரங்கப்பர் ஆட்சியைக் கைப்பற்றுகிறார். சகோதரர்களின் குழப்பத்தில் ஆட்சிக்குக் கடும் பிரச்னைகள் எழுகின்றன. அவரைத் தொடர்ந்து முத்துக்கிருஷ்ணப்ப நாயக்கர் மதுரையின் மன்னராகிறார். அவர் 1609-ல் மரணமடைய, அவரது புதல்வர் வீரப்ப நாயக்கர் முடிசூட்டிக்கொள்கிறார். வீரப்ப நாயக்கர், மதுரையை விஜயநகரப் பேரரசின் கட்டுப்பாட்டிலிருந்து வெளியேற்றி, முழு உரிமை பெற்ற சுதந்திர நாடாக அறிவிக்கும் முயற்சியில் தோல்வியுற்றார்.

இதனைத் தொடர்ந்து திருமலை நாயக்கர் 1623-ல் மதுரையின் மன்னராகிறார், திருச்சியில் இருந்த தலைநகரை 1634-ல் அவர் மதுரைக்கு மாற்றுகிறார். மதுரை நகரத்தில் அவரது அரண்மனை கட்டப்படுகிறது. விஜயநகரப் பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்து முற்றிலும் விடுபட்ட மதுரையை தனி உரிமை பெற்ற ஆட்சியாக அவர் அறிவிக்கிறார், மீண்டும் விஜயநகரப் பேரரசின் படையெடுப்புகள் தொடங்குகின்றன. தஞ்சை நாயக்கர்கள் மற்றும் கோல்கொண்டா சுல்தானின் உதவிகளுடன் விஜயநகரப் படைகள் மதுரையை நெருங்க முடியாது திண்டுக்கல்லுடன் திரும்பிச் செல்லச் செய்கிறார்கள். இதனை அடுத்து மைசூர் மன்னர் சாம்ராஜ் உடையார் மதுரைமீது போர் தொடுக்கிறார், இராமநாதபுரம் சேதுபதியின் பெரும் உதவியால் மைசூர் படைகள் மைசூருக்கே திருப்பி அனுப்பப்படுகின்றன.

திருமலை நாயக்கர் தனது 75வது வயதில் 1659-ல் இறந்துபோகிறார். அவரைத் தொடர்ந்து அவரது மகன் இரண்டாம் முத்துவீரப்பர் மன்னராகிறார். ஆனால் அதே ஆண்டில் அவரும் இறக்க, அவரது 16 வயது மகன் சொக்கநாத நாயக்கர் மன்னராகிறார். 23 ஆண்டுகள் சொக்கநாத நாயக்கரின் ஆட்சி நடைபெறுகிறது. மதுரையில் கடும் பஞ்சம் நிலவிய காலம் அது, கஞ்சித் தொட்டிகள் திறக்கப்படுகின்றன. டச்சு வணிகர்கள் மக்களை ஐரோப்பிய நாடுகளுக்கு அழைத்துச் சென்று அடிமைகளாக விற்ற நிகழ்வுகள் இந்தக் காலத்தில் அரங்கேறுகிறது.
சொக்கநாத நாயக்கர் தலைநகரத்தை மதுரையில் இருந்து திருச்சிக்கு மாற்றுகிறார். சொக்கநாத நாயக்கருக்கு பின்பு கிருஷ்ணமுத்து வீரப்பர் மதுரையின் மன்னராகிறார். 1689 அவர் இறந்துபோகிறார், அவரது மகன் விஜயரெங்க சொக்கநாதர் கைக்குழந்தையாக இருந்ததால், அந்தக் குழந்தைக்கு அரசுப்பட்டம் சூட்டிவிட்டு பெயரன் சார்பாக இராணி மங்கம்மாள் மதுரையின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கிறார். நிழல் தரும் மரங்களைச் சாலை நெடுகிலும் நடுதல், சத்திரங்கள்-சாவடிகளை அமைத்தல் எனப் பல பொதுப்பணிகளை அவர் செய்துள்ளார். 1706-ல் இராணி மங்கம்மாள் காலமாகிறார். அவரது பேரன் விஜயரெங்க சொக்கநாதர் தனது 17வயதில் ஆட்சிப் பொறுப்பேற்கிறார்.

இறைவழிபாட்டில் மிகுந்த ஈடுபாடு காட்டிய விஜயரெங்க சொக்கநாதர் ஆட்சிப் பொறுப்பில் கவனம் செலுத்தாதிருந்ததன் விளைவாகப் பல குழப்பங்கள் நிலவின. அந்த நேரம் அதிகமான வரி வசூலிக்கப்படுவதை எதிர்த்து 1710-ல் ஒரு கோயில் பணியாளர் மீனாட்சியம்மன் கோயில் கோபுரத்தில் ஏறி அங்கிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டு தனது எதிர்ப்பைத் தெரிவித்தார், மேலும் 1720-லும் இதே போல் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 1732-ல் விஜயரெங்க சொக்கநாதர் காலமாகிறார், அவரது பட்டத்தரசியான மீனாட்சி ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். மீனாட்சி அரசியின் மரணத்துடன் மதுரையில் நாயக்க ஆட்சி முடிவுக்கு வந்தது.

மதுரையின் வரலாறு நெடுகிலும் வாரிசுச் சண்டைகள், அதிகாரப் போட்டிகள், அண்மை மன்னர்கள்-வேந்தர்களுடனான யுத்தங்கள் எனத் தொடர்ந்து ஒரு நிச்சயமின்மை நிலவிவந்ததைக் காண்கிறோம், ஒவ்வொரு முறையும் இங்கிருந்த வேந்தர்கள் வெளியில் உதவியை நாடிச் செல்ல அவர்கள் உள்ளே வந்து ஆட்சியைக் கைப்பற்றும் சூழலே ஏற்பட்டுள்ளது. ஆனால் இதே காலத்தில் மதுரையின் பெரும் அடிப்படைக் கட்டமைப்புகள் உருவாக்கப்படுகின்றன, மதுரையின் மீதான உலகத்தின் பார்வையும் பிரியமும் கூடிக்கொண்டேயிருக்கிறது; மதுரை பற்றிய நூல்கள், தலவரலாறுகள், நடுகற்கள், கோயில் கல்வெட்டுகள், செப்பேடுகள் என வரலாற்றுச் சான்றுகள் அதிகப்படியாக உருவான காலமும் இதுவே.
இந்த ஆட்சி மாற்றங்களின்போதுதான் மதுரையின் நிலம் வண்ணமயமாக மாறியது, மதுரையில் யவனர்கள், அரேபியர்கள், டச்சுக்காரர்கள், சீனர்கள், போர்த்துக்கீசியர்களுடன் கன்னடர்கள், தெலுங்கர்கள், மராத்தியர்கள், உருது பேசும் இஸ்லாமியர்கள் என அலை அலையாய் இந்தியாவெங்கும் இருந்து வந்து மக்கள் குடியேறினார்கள். புதிய புதிய பழக்கங்கள் மதுரைக்குள் வருகின்றன, புதிய உணவுகளை மதுரை மக்கள் ருசிக்கத் தொடங்குகிறார்கள், புதிய உடைகள் உடுத்தத் தொடங்குகிறார்கள். பல இனங்கள், பல மொழிகள், பல கலாச்சாரங்கள் கொண்ட பன்மைத்துவமான நகரமாக மதுரை, லண்டனுக்கும் நியூயார்க்கிற்கும் மெல்பர்னுக்கும் முன்பே வரலாற்றுக் காலத்திலேயே உருவாகியிருந்தது.
நன்றி:
கங்கா தேவி- மதுரா விஜயம், நாராயணி விலாசம், கத்யகர்ணாமிர்தம், அமிர்குஸ்ரூ நாட்குறிப்புகள், சாயாவுத்தீன் பர்ணி குறிப்புகள், மதுரை ஸ்தானிகர் தலவரலாறு, மதுரை தலவரலாறு, அச்சுதராயாப்பபுதயம், கிருஷ்ண தேவராயரின் உதயம்பாக்கம் செப்பேடுகள்.