திருத்தலங்கள்
திருக்கதைகள்
தொடர்கள்
Published:Updated:

துறவி கற்றுக்கொண்ட பாடம்!

துறவி
பிரீமியம் ஸ்டோரி
News
துறவி

அடர்ந்த காட்டுக்குள் ஒரு மரத்தடியில் தியானத்தில் அமர்ந்திருந்தார் அந்தத் துறவி.

ப்போது கிராமத்து ஆசாமி ஒருவர் பரபரப்பாக, காட்டுக்குள் அந்த மரத்தை ஒட்டிய பாதையில், ‘‘மகனே... செல்வமே... எங்கேடா இருக்கே?’’ என்று உரக்கக் குரல் எழுப்பியபடி ஓடி வந்தார்.

அவரது கர்ணகடூரமான குரலும் துறவியின் தியானத்தைக் கலைத்தது. கோபத்துடன் எழுந்தார். அந்த ஆசாமி அதைக் கவனிக்கவில்லை. காட்டின் உள் பக்கமாக துறவியைத் தாண்டிப் போய்விட்டார். துறவியின் கோபம் பொங்கி வழிந்தது. ‘எப்படியும் இந்த வழியாகத்தானே வந்தாக வேண்டும்... பார்த்துக் கொள்ளலாம்!’ எனக் காத்திருந்தார் துறவி. சிறிது நேரம் கழித்து ஒரு சிறுவனைத் தன் தோளில் சுமந்தபடி அந்த ஆசாமி வந்தார். அவரை வழிமறித்த துறவி, ‘‘ஆ... ஊவென்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்து என் தியானத்தைக் கலைத்து விட்டீர்களே!’’ என்று கோபத்தோடு கேட்டார். கிராமத்து ஆசாமி பயந்து நடுங்கி ‘‘மன்னியுங்கள் சுவாமி. தாங்கள் அமர்ந்திருந்ததை நான் கவனிக்கவில்லை. என் மகன் மாலையில் தன் நண்பர்களோடு விளையாட காட்டுப் பக்கம் வந்தான். அவனுடன் வந்த எல்லோரும் திரும்பிவிட்டார்கள். அவன் மட்டும் வரவில்லை. ஏதாவது குளத்தில் விழுந்திருப்பானோ... கொடிய விலங்குகளிடம் மாட்டிக் கொண்டிருப்பானோ என்ற பயத்தில் அவனைத் தேடி ஓடினேன். என் நினைப்பெல்லாம் அவன் மீதே இருந்ததால், நான் உங்களைக் கவனிக்கவில்லை!’’ என்று சொல்லி மீண்டும் ஒரு முறை மன்னிப்புக் கேட்டார். ஆனாலும் துறவி விடுவதாக இல்லை.

துறவி
துறவி

அந்த கிராமத்து ஆசாமி இப்போது துறவியைப் பார்த்தார். பின், ஆரம்பித்தார்: ‘‘தியானத்தில் மூழ்கியிருந்த உங்களுக்கு நான் ஓடியது, கத்தியது எல்லாமே தெரிந்தது. அதனால் உங்கள் தியானம் கலைந்தது என்கிறீர்கள். ஆனால், மகனைத் தேடி ஓடிய நான் கண்முன்னே இருந்த உங்களைக் கவனிக்கவில்லை. எனக்கு என் மகன்மீது பற்று இருந்தது. அதனால் வேறு எதுவும் என் கண்களுக்குத் தெரியவில்லை. என் குழந்தையிடம் எனக்குள்ள பற்றுகூட உங்களுக்கு இறைவன்மீது இல்லையே... இது என்ன தியானம்! பொறுமையும் ஈடுபாடும் இல்லாத இந்த தியானத்தால் உங்களுக்கு என்ன பலன் கிடைக்கும்?’’ - அப்பாவியான அந்தக் கிராமத்து ஆசாமி கேட்ட விதம் துறவியை அசைத்துப் பார்த்தது.அவருக்குத் தனது தவறு உறைத்தது. தனக்கு ஞானத்தை அளித்த அந்தக் கிராமத்து ஆசாமியை வணங்கி அங்கிருந்து கிளம்பினார்.

மாதா அமிர்தானந்தமயிதேவி சொன்ன கதை இது.

- செண்பக பார்வதி, தூத்துக்குடி