
தென்கச்சி சுவாமிநாதன், ஓவியம்: சேகர்
வெள்ளைத் தாளில் ஏதோ வரைந்துகொண்டி ருந்தாள் சிறுமி. அங்கு வந்த பெரியவர் ஒருவர், ‘`என்னம்மா வரைகிறாய்?’’ என்று கேட்டார்.
‘`கடவுளை வரைகிறேன்!’’ என்றாள் சிறுமி.
பெரியவருக்கு வியப்பு! ‘`அதெப்படி... கடவுளை, எவரும் பார்த்ததே இல்லையே?’’ என்றார்.
‘`அப்படியா... கொஞ்சம் பொறுங்கள். நான் வரைந்து முடித்ததும் பாருங்கள்!’’ என்றாள் அந்த சிறுமி. பெரியவருக்கு ஆச்சர்யம் அதிகரித்தது. அங்கேயே காத்திருந்தார். சிறிது நேரத்தில், சிறுமி வரைந்து முடித்ததும் ஓவியத்தை வாங்கிப் பார்த்த பெரியவர், ‘`யாரம்மா இது?’’ என்று கேட்டார்.
``என் அம்மா.’’
``உன் அம்மாதான் கடவுள் என்று யார் சொன்னது?’’
‘`நேற்று கோயிலில் பேசும்போது, ‘அன்புதான் கடவுள்’ என்று சொன்னீர்கள். அதனால்தான் அம்மாவை வரைந்தேன்’’ என்றாள்.

அன்று பெரியவரின் பேச்சு, அந்தச் சிறுமியின் மனத்தில் சரியான திசையையே காட்டியிருக்கிறது.
ஆனால் இன்றைக்குப் பலர், தண்டிக்கும் அதிகாரியா கவே ஆண்டவனைக் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். அதன் விளைவு... பிள்ளைகள் பயந்துபோகிறார்கள்.
பெரியவர் ஒருவர், பள்ளி மாணவர்களிடையே பேசும்போது விளையாட்டாகச் சொன்னார் ‘`மாணவர் களே, நீங்கள் ஏதாவது தப்பு பண்ணினால், கடவுள் காதைப் பிடித்துத் திருகுவார்!’’
அன்றிரவு, மாணவன் ஒருவன் வீட்டில் படுத்திருந் தான். அவனுடைய அம்மாவிடம், ``இதோ பாரு... நாளைக்குக் காலையில சீக்கிரம் எழுப்பிவிடு. நான் செங்கல்பட்டு வரைக்கும் போகணும்’’ என்றார் அப்பா.
இதைக் கேட்ட மாணவன், அப்பாவுக்குச் சிரமம் வேண்டாம் என்று நினைத்து, அவனே அதிகாலையில் எழுந்து புறப்பட்டு செங்கல்பட்டுக்குச் சென்றான். அம்மாவும் அப்பாவும் பிள்ளையைக் காணாமல் கலங்கித் தவித்தனர்.
மாலையில் வீடு திரும்பிய வனிடம், ‘`எங்கேடா போயிருந்தே’’ என்றார் அப்பா, கோபத்துடன்.
‘`நேத்து ராத்திரி... நீங்க அம்மாகிட்டே சொல்லிக்கிட்டிருந்ததைக் கேட்டேன்.
நீங்க வீணா அலைய வேணாமேன்னுதான் செங்கல்பட்டுக்குப் போயிட்டு வந்தேன்!’’

‘`இதை யாருடா காதுல வாங்கச் சொன்னது. எந்தக் காது அது...’’ என்றபடி, மகனின் காதைப் பிடித்துத் திருகினார். காது கையோடு வந்துவிட்டது.
பதறிப்போன அப்பா, மகனை அழைத்துக் கொண்டு காதையும் கையில் எடுத்துக்கொண்டு மருத்துவ மனைக்கு ஓடினார். அங்கு, பழையபடி காதை ஒட்டவைத்துவிட்டனர். இரண்டு நாள்கள் கழித்து வீட்டுக்குத் திரும்பினர். அப்போது, எதிரே ஒரு நாய் ஓடி வந்தது. அதற்கு இரண்டு காதுகளும் இல்லை!
‘`என்ன ஆச்சு இதுக்கு’’ என்றார் அப்பா.
உடனே மகன் சொன்னான், ‘`அது ரெண்டு தடவை செங்கல்பட்டுக்குப் போயிட்டு வந்திருக்கும்!’’
(28.10.2008 இதழிலிருந்து...)