வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
பள்ளி நாட்களில் ஏப்ரல், மே மாதத்திற்குப் பிறகு மிகவும் பிடித்த மாதம் என்றால் அது டிசம்பர் தான். டிசம்பர் மாதம், எல்லோருக்குமே பேரானந்தம் தரக்கூடிய மாதம். அரையாண்டு விடுமுறை, அதோடு சேர்ந்து கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு என ஒரே குதூகலமாக இருக்கும். எங்களுக்கே இப்படி என்றால் கிறிஸ்துவர்களுக்கு சொல்லவா வேண்டும். வருடத்தில் அவர்கள் விமர்சையாக கொண்டாடப்படும் ஒரே பண்டிகை கிறிஸ்துமஸ் தான்.
எங்கள் வகுப்பில் சிலர் மட்டுமே கிறிஸ்துவ மாணவர்களாக இருப்பார்கள்.டேனியல், மைக்கேல், ஜோசப், ஆண்டனி என்ற பெயர்கள் எப்போதும் ஒரு தனித்துவமாக இருப்பது போல எனக்குத் தோன்றும். ஹாலிவுட் பட கேரக்டர்கள் போல இவர்களின் பெயர்களின் உருவம் மனதிற்குள் வந்து போகும். அது என்னவோ தெரியாது வகுப்பில் கிறிஸ்டியன் பையன் நண்பனாக கிடைத்தால் ஒரு சந்தோஷம்..!

அரையாண்டு தேர்வின் இறுதி பரீட்சை பெரும்பாலும் டிசம்பர் 22, 23 போன்ற தேதிகளில் தான் வரும். ஜனவரி 2, 3 தேதிகளில் தான் மீண்டும் பள்ளி திறக்கும். தேர்வு முடித்து வீட்டிற்குச் செல்ல மனமில்லாமல் அடுத்த பத்து நாட்களுக்கும் சேர்த்து விளையாடித் தீர்ப்போம். அந்த நேரம் பார்த்து நடு நடுவே எங்களுக்குள், எங்கள் வகுப்பிற்குள் இருக்கும் "மதுரை முத்துக்கள்" அப்பப்போ வந்து எட்டிப் பார்த்துவிட்டு செல்வார்கள்.
``டேய்... நாம இன்னைக்கு போய்ட்டோம்னா மறுபடியும் அடுத்த வருஷம் தான்டா பார்த்துப்போம்... ஒரு வருஷம் நாம பார்த்துக்க முடியாதுடா... அடுத்த வருஷம் தான் டா ஸ்கூலுக்கு வருவோம்... என கொஞ்சமும் சளைக்காமல் மொக்கைப் போட்டுக்கொண்டிருப்போம்...!"

அந்த வார நாட்கள் முழுவதும் கடைகளில் விதவிதமான, வண்ண வண்ண ஸ்டார்கள் தொங்கவிடப்பட்டிருக்கும். சில வீடுகளில் பெரிய ஸ்டார் கட்டப்பட்டிருக்கும் அதை பார்க்கும் போது ஏதோ வானத்தில் இருந்து ஒரிஜினல் ஸ்டாரே வந்தது போல அவ்வளவு பிரம்மிப்பாக இருக்கும் அந்த பள்ளி நாட்களில்.
ஏற்கனவே சொன்னது போல எங்கள் வகுப்பில் ஒன்றிரண்டு மாணவர்கள் தான் கிறிஸ்துவ நண்பர்களாக இருப்பார்கள் அவர்களுக்கு நாங்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணம் ஓடிக்கொண்டே இருக்கும். அது ஏன்னென்றே தெரியாது.
பள்ளிக்கு வெளியே ஒரு அண்ணன் ஸ்டிக்கர் கடை போட்டிருப்பார். அழகழகான கிரீட்டிங் கார்டு, இயேசு படம் போட்ட பெரிய வால் போஸ்டர் என கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் ஐட்டங்கள் நிறைந்திருக்கும் கடையில்... எங்கள் வசதிக்கும், அறிவுக்கும் ஏற்றாற்போல கிரீட்டிங் கார்டும், போஸ்டர்களும் வாங்குவோம்.

வாங்கிய கிரீட்டிங் கார்டுகளில் "Merry Christmas and Advance Happy New Year" என எழுதி பலூன், ஸ்டார் எல்லாம் வரைந்து அதில் சாக்லேட் வைத்து நண்பன் கையில் வெட்க்கப்பட்டுக் கொண்டே கொடுப்போம். அதை நண்பன் புன்னகையோடு வாங்கிப் பார்க்கும் போது உள்ளூர ஒரு சந்தோஷம் வரும் பாருங்க..!
இன்றும் அந்த நாட்கள் கண்முன் வந்து நிற்கிறது. அந்த நண்பர்களின் வீட்டில் கமகமக்கும் கிறிஸ்துமஸ் பிரியாணி வாசனைகளுக்கிடையே ஆசை ஆசையாய் நாங்கள் எழுதிக் கொடுத்த வாழ்த்து அட்டையில் மீதமிருக்கும் பேனா மையின் வாசமும் நாங்கள் கட்டிப்பிடித்து விளையாடித் தீர்த்த வியர்வையின் வாசமும் காலத்தின் நினைவுகளில் இன்னமும் பத்திரமாக தான் இருக்கும்.
-கோ.ராஜசேகர், தருமபுரி.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.