வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
நம் உடலுக்கு தேவையான ஊட்டசத்தில் மிகவும் முக்கியமானது இரும்புச் சக்தியாகும். உடலின் இயக்கத்திற்கு தேவையான பல்வேறு புரதங்கள் மற்றும் நொதியங்களுக்கு இரும்பு மிகவும் முக்கியமான மூலப்பொருளாகும். நம் உடலில், நுரையீரலில் இருந்து அனைத்து திசுக்களுக்கும் ஆக்ஸிஜனை எடுத்து செல்வது இரத்த அணுக்களிலுள்ள ஹீமோகுளோபினாகும். ஆக்ஸிஜனானது, ஹீமோகுளோபினிலுள்ள இரும்பின் மூலம் தான் கடத்தப்படுகிறது. எனவே இரும்புச் சத்து குறைபாடு ஏற்படும்போது இரத்தசோகை ஏற்படுகிறது. மேலும் தசைகளுக்கு ஆக்ஸிஜனை வழங்கும் மயோகுளோபின் புரதத்தின் முக்கிய மூலக்கூறு இரும்பாகும். உடலியக்கத்திற்கு இவ்வளவு இன்றியமையாததாக விளங்கும் இரும்புச் சத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கவும், இரும்புச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நவம்பர் 26 ‘இரும்புச்சத்து குறைபாடு தினமாக’ கொண்டாடப்படுகிறது.

குழந்தைகள் மற்றும் பெண்களை அதிகம் பாதிக்கும் இரத்தசோகை
இரும்புச்சத்தினால் ஏற்படும் இரத்தசோகை அதிகமாக குழந்தைகள் மற்றும் பெண்களை பெரிதாக தாக்குகிறது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையால் 2019-21இல் நடத்தப்பட்ட ஐந்தாவது தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் (National Family Health Survey - 5) முடிவின் வாயிலாக, ஐந்து வயதிற்கு கீழுள்ள குழந்தைகளில் (6-59 மாதங்கள்) 67% குழந்தைகளுக்கும், 15-49 வயதுள்ள பெண்களில் 57 சதவிகிதத்தினருக்கும், கர்ப்பிணி பெண்களில் 52 சதவிகிதத்தினருக்கும் இரத்தசோகை இருப்பது தெரியவந்துள்ளது. 2015-16இல் நடத்தப்பட்ட நான்காவது தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பில், இரத்தசோகையானது 58.6% குழந்தைகளுக்கும், 53% பெண்களுக்கும், 50% கர்ப்பிணி பெண்களுக்கும் இருந்துள்ளது. அதைவிட தற்போது இரத்தசோகையின் பாதிப்பு, குறிப்பாக குழந்தைகளில் அதிகரித்துள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரத்தசோகை தற்போது மிகவும் அதிகரிக்கதற்கான காரணங்கள்
‘இரத்தசோகை இல்லா பாரதம்’ (Anemia Mukt Bharat) மற்றும் ‘போஷன் அபியான்’ (Poshan Abhiyaan) போன்ற திட்டங்கள் வாயிலாக அரசானது குழந்தைகள், வளரிளம் பருவத்தினர், பெண்கள், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு இலவசமாக இரும்பு மற்றும் ஃபோலிக் அமில சிரப் மற்றும் மாத்திரைகளை அளிக்கிறது. எனினும் கொரோனா பெருந்தொற்றினால் தடைப்பட்ட அங்கன்வாடி மற்றும் மருத்துவ சேவைகள், இரத்தசோகை அதிகரிப்பதற்கான மிகப்பெரிய காரணிகளாக கருதப்படுகிறது. மேலும், கொரோனா பெருந்தொற்றினால் மக்களுக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளும் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிக்க மற்றுமொரு காரணமாகும். தற்போது, இரத்தசோகை மிகவும் அதிகரிப்பதை உணர்ந்தபிறகு, அதை கண்டறிந்து மருத்துவம் அளிப்பதற்கும், இரத்தசோகை வராமல் தடுப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை அரசு துரிதப்படுத்தவேண்டியது மிகவும் அவசியமாகிறது.

இரத்தசோகை வராமல் எவ்வாறு தடுக்கலாம்?
பல்வேறு உணவு பொருட்களில் இரும்புச்சத்து மிகுதியாக உள்ளது. அதை நீங்கள் உண்ணும் உணவில் தேவையான அளவு எடுத்துக் கொள்ளும்போது, இரத்தசோகை வராமல் காத்துக் கொள்ளலாம்.
ஆடு மற்றும் கோழி இறைச்சி (குறிப்பாக ஈரல்) மற்றும் மீனில் இரும்புச்சத்து மிகுதியாக உள்ளது. பால், முட்டை, கீரைவகைகள், பேரிச்சம்பழம், உலர் திராட்சை, வெல்லம், பாகற்காய், சுண்டக்காய், கொத்தவரை, கோதுமை, அரிசி, சோளம், கேழ்வரகு, கம்பு போன்ற தானியங்கள் மற்றும் பப்பாளி, மாதுளம், சப்போட்டா, தர்பூசணீ, அன்னாசி போன்ற பழங்களிலும் இரும்புச்சத்து உள்ளது.
இரும்புச்சத்து உடலில் உறிஞ்சப்பட வைட்டமின் சி சத்து தேவைப்படுகிறது. நெல்லிக்காய், எலுமிச்சை, முளைகட்டிய தானியங்கள், பச்சை காய்கறிகள் மற்றும் கீரைவகைகளில் வைட்டமின் சி சத்து மிகுதியாயுள்ளது.
இரத்தசோகையின் அறிகுறிகள் என்ன?
இரத்தசோகை ஏற்படும்போது, போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காததால், உடலின் அனைத்துப் பகுதிகளும் பாதிப்படைகின்றன. தளர்ச்சி, பலவீனம், உடல்சோர்வு, கவனக்குறைவு போன்ற அறிகுறிகள் ஆரம்ப நிலையில் ஏற்படும். தீவிர இரத்தசோகையில், தோல் வெளிறல், மார்புப் படபடப்பு, நெஞ்சு வலி, இதய திறனிழப்பிற்கான அறிகுறிகள், கால்களில் தசைப்பிடிப்பு, தலைமுடி, வாய், நாக்கு மற்றும் நகங்களில் பாதிப்புகள் போன்றவை ஏற்படும். கல்வியில் பின்தங்குதல், இயல்பற்ற உணவுப்பொருட்களில் விருப்பம் (pica) போன்ற அறிகுறிகள் குழந்தைகளில் காணப்படலாம்.
இரும்புச்சக்து குறைபாடு இரத்தசோகையிற்கான சிகிச்சை
மேற்கண்ட அறிகுறிகள் இருப்பின் மருத்துவரை அணுகவேண்டும். இரத்தசோகையில் 50% நோயாளிகளுக்கு இரும்புச்சத்து குறைபாடினாலும், மிச்சம் 50 சதவிகிதத்தினருக்கு வேறு காரணங்களாலும் இரத்தசோகை ஏற்படுகிறது. பரிசோதனைகள் மூலம் இரத்தசோகை ஏற்பட்டதற்கான காரணம் உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை தொடங்கப்படும். இரும்புச்சத்து குறைபாடால் ஏற்படும் இரத்தசோகை, 3-6 மாதங்கள் தொடர்ந்து இரும்புச்சத்து மாத்திரைகளை உட்கொள்வதன் மூலம் குணப்படுத்திவிடலாம். மீண்டும் இரத்தசோகை வராமல் தடுப்பதற்கு, தொடர்ந்து இரும்பு சத்து நிறைந்துள்ள உணவுகளை உட்கொள்வது அவசியமாகும்.
‘இரத்தசோகை இல்லா பாரதம்’ உருவாக இரும்புச்சத்து குறைபாட்டை கலைய உறுதியேற்போம்!
- குழந்தை நல மருத்துவர் மு. ஜெயராஜ் MD (PGIMER, Chandigarh) துணை பேராசிரியர், ஸ்ரீ லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி, புதுச்சேரி.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.